30 July 2012

கம்போடியா - விதியோடு சதிராடும் வீதிச் சமுதாயம்

உலகம் போற்றும் உன்னதமான மண் கம்போடியா. இந்தப் பச்சை மண்ணில் தான் இந்தியப் பேரரசர்கள் வரலாற்று இதிகாசங்களை எழுதினார்கள். புனிதமான அங்கோர் வாட் கோயில்களைக் கட்டினார்கள். சரித்திரம் படைத்தார்கள். அத்தனையும் ஆய கலைகளின் அபூர்வ ராகங்கள். அவை எல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட சின்ன பெரிய சாசனங்கள். அதே மண்ணில்தான் இப்போது ஒரு சின்ன அதிசயமும் நடந்து கொண்டு இருக்கிறது.


அங்கோர் வாட்டில் இருந்து ரொம்ப தூரத்தில் இல்லை. ஒரு 30 கி.மீ. தொலைவுதான். அங்கே மனித மனங்களைப் பிழிந்து எடுக்கும் ஒரு சமுதாயம் வாழ்கின்றது. ஊசிப் போன கக்கல் கழிசல்கள் வந்து குவியும் இடம். அவற்றை நம்பி அந்தச் சமுதாயம் வாழ்கின்றது. குப்பைக் கூளச் சமுதாயம் என்று சிலர் சொல்கிறார்கள். விதியோடு சதிராடும் வீதிச் சமுதாயம் என்று சிலர் சொல்கிறார்கள். எது எப்படியோ, மனதை இறுக்கிப் பிடித்துக் கொண்டு படியுங்கள்.ஓமார் ஹவானா எனும் ஸ்பானிஷ் புகைப்படக்காரர் 500 பேர் கொண்ட அந்தச் சமுதாயத்தைப் படம் பிடித்து உலக மக்களுக்கு அறிமுகம் செய்தார். நாம் வாழும் இந்த உலகத்திலேயே இன்னோர் உலகமும் இருக்கிறது என்று ஆதங்கப்படுகிறார். ஏழு மாதங்கள் அவர்களுடன் தங்கி அவர்கள் படும் அவலங்களைப் படம் பிடித்துக் காட்டினார்.அந்த உலகத்தில் வாழ்பவர்கள் அங்கேயே தங்கி, அங்கேயே சாப்பிட்டு, அங்கேயே ஒன்றுக்கும் இரண்டுக்கும் போகிறார்கள். அங்கேயே குடும்பம் நடத்தி, அங்கேயே குழந்தைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள். நல்ல ஒரு சாப்பாட்டிற்கே நாய் படாத பாடு படும் அவர்களின் பிள்ளைகள் பள்ளிக்கூடம் பக்கமே தலை வைத்து படுத்தது இல்லை.


இதில் ஓர் அதிசயம் என்னவென்றால் அவர்களுக்கு சீக்கு சிரங்கு என்று எதுவுமே வருவது இல்லை. மருத்துவர்களைத் தேடிப் போவதும் இல்லை. அந்த உலக மக்களின் வருமானம் ஒரு நாளைக்கு இரண்டே இரண்டு ரிங்கிட் தான். வயிறைக் கழுவிக் கொள்ள கொஞ்சம் உணவு கிடைக்கிறது. வெயிலுக்கும் மழைக்கும் ஒண்டிக் கொள்ள ஒரு சின்ன ஒட்டு இடமும் கிடைக்கிறது.

நாள் ஒன்றுக்கு 14 மணி நேரம் ’வேலை’ செய்கிறார்கள். ஒரு ரிங்கிட் அல்லது இரண்டு ரிங்கிட் வருமானம். அது போதும் என்று நினைக்கிறார்கள்.


மலேசியாவில் அப்படி இல்லை. குப்பை மேடுகளில் துளாவினாலே போதும். ஒரு நாளைக்கு ஐம்பது, நூறு ரிங்கிட் தேறிவிடும். அண்மையில், ஓர் ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தி. அண்மையில் படித்தது.

ஆக, கம்போடியாவில் ஒரு சமுதாயம் மறக்கப்பட்டச் சமுதாயமாக அல்லாடிக் கொண்டிருக்கிறது.  இந்தக் குப்பைக் கூள மக்கள் பெரும்பாலும் ஒரே இடத்தில் நிலையாகத் தங்குவது இல்லை. ஓர் இடத்தில் குப்பைகள் நிறைந்து விட்டால் வேறு ஓர் இடத்திற்கு மாறிச் சென்று விடுகிறார்கள்.இவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம் மாறுகிறார்கள். வர்களின் குழந்தைகள் 3 லிருந்து 15 வயதிற்குள் இருப்பவர்கள். எப்போதும் புன்னகை சிந்தியாவாறு இருக்கிறார்கள். அதுதான் அதிசயமாக இருக்கிறது என்று ஓமார் ஹவானா அங்கலாய்த்துப் கொள்கிறார்.

முதன்முதலில் போகிறவர்களுக்கு தொண்டைக் குழியை அறுத்து எடுக்கும் அமில நெடி. அழுகை முட்டி மோதுகிறது. மூச்சு திணறிப் போகிறது. நெஞ்சு அடைத்துக் கொள்கிறது. கண்ணீர் வழிந்து ஊற்றுகிறது. ஒரு சில நாட்களில் போகப் போக, அவை எல்லாம் சரியாகிப் போகிறது. இப்படிச் சொல்கிறார் ஓமார் ஹவானா.

ஒரு நாள் ஒரு சிறுவன் ஒரு பிளாஸ்டிக் பையில் இருந்து இரத்தத்தை எடுத்து வந்து ஏன் என் நாட்டில் உள்ளவர்கள் புன்னகை செய்வதில்லைஎன்று கேட்டான். அதற்கு தெரியாது என்று சொன்னேன்.

நான் எப்போதும் புன்னகை செய்வேன். அதனால் எனக்கு அதிர்ஷ்டம் வருகிறது. பாருங்கள், எனக்கு இந்த இரத்தப் பை கிடைத்து இருக்கிறது. இதை நான் இன்றைக்கும் நாளைக்கும் சாப்பிடுவேன். அதனால், நாளைக்கும் நான் சூரியனைப் பார்ப்பேன்என்றான்.

குப்பைக் குன்றுகளில் வாழும் இந்தச் சாமான்ய ஏழைகளுக்கு, நோய் தடுப்பாற்றல் சக்தி அதிகம். நோய்கள் வருவது அரிது.  ஆனால், வயிற்றுப் போக்கு என்பது சர்வ சாதாரணம். இங்கு வாழும் குழந்தைகள் எப்போதுமே காலணிகள் அணிவதில்லை. அதனால் வெட்டுக் காயங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. அதைப்பற்றி அவர்களும் கவலைப் படுவது இல்லை. கீழே கிடக்கும் துணியைக் கிழித்து அப்போதே கட்டுப் போட்டுக் கொள்கிறார்கள்.

மலேசியாவில் வாழும் நாம் பேரங்காடிகளுக்குச் சென்று நமக்கு வேண்டிய பொருட்களைத் தேடிப் பிடித்து வாங்கிக் கொள்கிறோம். ஆனால், இவர்களுக்கோ குப்பை மேடுகள் தான் ஒட்டுக்கடை, கடைத்தெருமளிகைக்கடை, பேரங்காடி எல்லாம். அவர்கள் உயிர் வாழ்வதற்கு, எல்லாமே குப்பை மேட்டில் இருந்து கிடைத்து விடுகின்றது. 

வாழைப்பழம் கிடைத்தால் இவர்களுக்கு புதையல் கிடைத்த மாதிரி. மிகவும் சந்தோஷப்படுகிறார்கள். ஏன் என்றால் வாழைப்பழத்திற்கு மேலே தோல் இருக்கிறது. அதனால் உள்ளே இருப்பதும் சுத்தமாக இருக்கிறது என்கிறார்கள். சியாம் ரியாப் நகரில் இருந்து குப்பைகள் வருகின்றன. அந்த நகரில் சாதாரண விடுதிகளில் இருந்து, ஆடம்பரமான ஐந்து நட்சத்திர தங்கும் விடுதிகள் வரை ஏராளம் உள்ளன.

உலகத் தரம் வாய்ந்த விடுதிகளில் ஒரு நாள் தங்குவதற்கு கட்டணம் 4,500 ரிங்கிட் வரை போகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நானும் என் மனைவியும் சியாம் ரியாப் போயிருந்தோம். நாங்கள் தங்கியது 150 ரிங்கிட் விடுதி. அதுவே பெரிய சொர்க்கமாக எங்களுக்குத் தெரிந்தது. காலையில் இலவசமாக பசியாறல். 24 மணி நேரத்திற்கும் குளிர்சாதன வசதி. தொலைக்காட்சி. இணைய வசதி. இன்னும் பல வசதிகள்.

இருந்தாலும் பணத்தில் புரள்பவர்களுக்கு இந்த இடம் வேறு மாதிரி. அவர்களுக்கு கண்ட கண்ட வகையறாக்களில் கரை பார்க்கும் இடம். ஆனால், தே சியாம் ரியாப்பில், அஞ்சு காசிற்கும் பத்து காசிற்கும் அல்லல்படும் அன்றாடம் காய்ச்சிகளும் இருக்கிறார்கள். அற்றைக் கூலிகளாகவும் வாழ்கிறார்கள்.  

அழுக்கும் அவலமும் குவிந்துக் கிடக்கும் அந்தச் சின்ன உலகில் பரம அவர்கள் பரம ஏழைகளாக வாழ்கிறார்கள். இருந்தாலும், அவர்கள் வாழும் உலகம் புன்னகைப் பூக்கள் நிறைந்த உலகம். அநியாயம், அக்கிரமம், அட்டூழியம், நம்பிக்கைத் துரோகம், பச்சைப் பசப்பு வார்த்தைகள் இல்லாத ஓர் அழகிய உலகம்.

நாளைக்கும் சூரியன் வரும் என்று நம்பிக்கையோடு வாழ்கிறார்கள். அவர்களிடம் தெய்வம் நின்று பேசுகிறது. 

ஆனால், இங்கே சிலர் மிச்சம் மீதி உணவுப் பொருட்களைச் சட்டியோடு வழித்து சாக்கடையில் கொட்டுகிறார்கள். எப்பொழுதும் சாப்பிட்டு விட்டு, முப்பொழுதும் காற்றடித்த பொம்மைகளாக வாழ்கிறார்கள்.   அடுத்தவன் பொருள் என்று தெரிந்தும் அதன் மேல் ஆசைப்படுகிறார்கள். என்ன செய்வது. இவர்களைப் பார்த்து ஆகாயக் கங்கையும் சிரிக்கிறது.

4 comments:

  1. Ayya, naan singaporil pani purugiren..ungal padhivugal arumai..pani thodaravum..

    anbudan,
    muthu

    ReplyDelete
  2. ஐயா இத படிக்கும்போது எனக்கு தோன்றுவது என்னவென்றால். இவர்கள் ஏன் மாறவில்லை? இவர்கள் வாழ்க்கையை மாற்றிக்கொல்வத்தர்க்கு என்ன கடினம்? இவர்களுக்கு மாளிகையோ அல்லது விதவிதமான சாப்படுகளோ தேவையில்லை? கிடைப்பதை உண்ணும் இவர்கள் ஏன் சிறு முயற்ச்சிகளை கூட செய்யவில்லை? நீங்கள் சொன்னதுபோல இவர்களுக்கு வாழைபழம் கிடைத்தால் புதையல் கிடைத்தமை என என்னும் இவர்கள் அந்த வாழைமரத்தை அந்த பூமியில் எங்குவேண்டுமென்றாலும் நடலாமே? கணிசமாக மழைபொழியும் நாடு? அதில் என்ன பிரச்சனை? இவர்களிடம் முயற்சி இன்மை! மனிதன் நாகரீகம் அடையும் பொது இதுபோன்ற நிலைகளில் இருந்துதான் மேன்பட்டு இருக்கிறான் ஏனென்றால் அவனிடம் முயற்சி இருத்தது! இவர்களிடம் அது இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள்? யாரை எதிர்பார்த்திருக்கார்கள்? இவர்கள் இதைவிட்டு வெளியே ஒருபோதும் வரமுடியாது ஏனென்றால் இந்த வாழ்க்கை இவர்களுக்கு பழகிவிட்டது! உங்களுடைய பதிப்பிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete