02 April 2013

நான் சஞ்சிக்கூலியின் மகன்

மலேசியாவில் வாழும் இந்தியர்களில் 95 விழுக்காட்டினரின் மூதாதையர்கள் சஞ்சிக்கூலிகளாகக் கப்பல் ஏறி வந்தவர்கள். அது எல்லாம் இல்லை. என் தாத்தா இங்கிலாந்தில் பிறந்தார். என் பாட்டி இமயமலையில் பட்டம் விட்டார் என்று யாராவது சொன்னால், தயவுசெய்து அவர்களைத் தவறாக நினைக்க வேண்டாம்.

1920களில் மலாயாவில் நம் மூதாதையர்கள்
வெள்ளைக்கார நினைப்பில் மிதப்பர்களுக்கு அனுதாபப்பட்டால் போதும். கதைக்கு வருகிறேன். என் தகப்பனாரின் பெயர் சுப்ராயன். தாயாரின் பெயர் வள்ளியம்மாள். நாகப்பட்டினத்தில் இருந்து எஸ்.எஸ்.ரஜுலா கப்பலில் மலாயாவுக்கு வந்தவர்கள். மூன்று வார கப்பல் பயணம். பினாங்கு புறமலையில் ஒரு வாரம். அப்புறம் மலாக்கா காடிங் தோட்டத்தில் சஞ்சிக்கூலிகளாக வேலை.

அங்கேதான் நான் பிறந்தேன். கோவில், பள்ளிக்கூடம், கல்லுக்கடை நாடு விட்டு நாடு கடந்து வந்ததால், சஞ்சிக்கூலிகளின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டன. அவர்களின் அடிப்படையானத் தேவைகளும் மறுக்கப்பட்டன.


சஞ்சிக்கூலிகளுக்கு கோவில், பள்ளிக்கூடம், கல்லுக்கடை எனும் இந்த மூன்றும்தான் தெரிந்த விசயம். அவர்கள் தோட்டத்தைவிட்டு வெளியே போகாதபடி உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளானார்கள். நூறு வெள்ளிக்கு மாதம் பத்து வெள்ளி வட்டி கட்டி எங்களைப் படிக்க வைத்தார்கள்.

அவர்களின் பேரப்பிள்ளைகள், அதாவது என்னுடைய பிள்ளைகள் பல்கலைக்கழகங்களுக்கு போய் ஆளாளுக்கு பட்டங்களை வாங்கி வந்ததைப் பார்த்து சந்தோஷப்படுவதற்கு, பாவம் அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. அந்தச் சஞ்சிக்கூலிகளுக்காக வேதனைப்படுகிறேன். சரி. சஞ்சிக்கூலிகள் என்றால் யார்?

அவர்களின் பின்னணிதான் என்ன? வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம்.

காசும் பணமும் கித்தா மரத்தில்

சஞ்சிக்கூலி என்பது 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில், தென்னிந்தியாவில் இருந்து மலாயாவுக்கு கூலி வேலைகள் செய்ய கொண்டு வரப்பட்ட இந்தியர்களைக் குறிக்கும் ஒரு வழக்குச்சொல். சஞ்சி எனும் மலாய்ச் சொல்லில் இருந்து உருவானது. தமிழில் ஒப்பந்தம் என்று பொருள்படும்.

ஆற்றோரத்தில் சுமைகளை ஏற்ற மாடுகளைப் பயன்படுத்தும் தொழிலாளர்கள்
மலாயாவில் இருந்த பிரித்தானியத் துரைமார்கள் தென்னிந்தியாவிற்கு கங்காணிகளை அனுப்பி வைத்தனர். தென்னிந்தியாவில் இருந்து ஆள் பிடித்து வருமாறு இந்தக் கங்காணிகள் பணிக்கப் பட்டனர். ’மலாயாவில் காசும் பணமும் கித்தா மரத்தில் காய்ச்சுத் தொங்குகிறது எனும் கங்காணிகளின் ஆசை வார்த்தைகளை நம்பிய தென்னிந்திய மக்கள், மலாயாவுக்குள் ஆயிரக்கணக்கில் அழைத்து வரப்பட்டனர்.

இப்படி அழைத்து வரப்படுவற்கு கங்காணி முறை என்று பெயர். தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் சஞ்சிக்கூலிகளாய் மலாயாவுக்கு வந்தார்கள். மலேசிய வரலாற்றில் சஞ்சிக்கூலிகள் ஒரு துயர அத்தியாயத்தின் முதல்பக்கம்.

கறுப்புக் கங்காணிகள்

கங்காணிகள் என்பவர்கள் ஏற்கனவே ஆங்கிலேயர்களுக்கு உரிமையான தோட்டங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள்தான். முரட்டுத்தனமும், வாக்குச் சாதுரியமும், பொருளாசையும் ஒரு சேரப் பெற்றவர்கள். வெள்ளைக்கார ஆங்கிலேயர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் விளங்கியவர்களே கங்காணிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


இந்தக் கங்காணிகள், தென்னிந்தியாவில் கொண்டு வரப்பட்ட கூலிகளை அடிமைப்படுத்தினர். முதலாளிமார்களின் கைப்பிள்ளையாகவும் சேவகம் செய்தனர். தன் சொந்த இன மக்களையே காசுக்காக அடித்து துவைத்துக் காயப்படுத்தினர். ஆங்கிலேயர்களின் கைப்பாவைகளாகப் பிழைத்து வந்த இவர்களைக் கறுப்புக் கங்காணிகள் என்று அழைப்பதும் உண்டு.

உலகளாவிய பின்னணி

1826-ஆம் ஆண்டு இந்திய மாக்கடலில் இருக்கும் ரியூனியன் தீவுக்கூட்டத்தில் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவைப்பட்டனர். ஆகவே, பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் இருந்து ஒப்பந்தக் கூலிகளைக் கொண்டு வருவதற்கு முதல் அஸ்திவாரத்தைப் போட்டனர். போக விரும்புகிறவர் நீதிபதியின் முன்னால் நின்று தான் சுய விருப்பப்படி அங்கு போக விரும்புவதாக அறிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாதத்திற்கும் சம்பளம் எட்டு ரூபாய்கள். ஐந்து ஆண்டு காலத்திற்கு ஒப்பந்தம். 1830க்குள் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இருந்து 3,012 இந்தியத் தொழிலாளர்கள் ரியூனியன் தீவுக்கூட்டத்திற்கு அனுப்பப்பட்டனர். இதே போல 1829-இல் மொரிசியஸ் தீவிற்கும் ஆட்களைக் கொண்டு செல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை தோல்வியில் முடிந்தன.

தென்னிந்தியா

1834-இல் பிரிட்டனின் ஆளுமையில் இருந்த நாடுகளில் பெரும்பான்மைப் பகுதிகளில் அடிமைத்தனம் ரத்து செய்யப்பட்டதும், இந்தியத் தொழிலாளர்களை மொரிசியஸ் தீவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். 1838க்குள் 25,000 இந்தியத் தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டனர்.

18ஆம் நூற்றாண்டில், பிரிட்டன் தென்னிந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. 1858-இல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் நேரடியான ஆட்சியின் கீழ் இந்தியா வந்தது. இந்த இரு ஆட்சிகளின் மூலமாகத் தமிழ்நாட்டின் கிராமப்புற வேளாண்மைத் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டன.

*      நீர்ப் பாசன வசதிகள் புறக்கணிக்கப்பட்டன.

* ரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய நிலக்கிழார்கள் உருவாயினர்.

* இயற்கை தட்பவெப்ப நிலையில் ஏற்பட்ட எதிர்பாரா மாற்றங்களின் காரணமாகத் தொடர்ச்சியானப் பஞ்சங்கள் ஏற்பட்டன. இதன் உச்சக்கட்டமாக 1878-இல் தாதுவருடப் பஞ்சம் என்ற ஒரு கொடிய பஞ்சம் ஏற்பட்டது.

* நிலக்கிழார்கள், லேவாதேவிக்காரர்களின் பிடியில் சிக்கிய சாதாரண விவசாயிகள், சிறுநிலக்காரர்கள் தம் நில உரிமைகளை இழந்தனர். அவர்கள் அற்றைக்கூலி விவசாயத் தொழிலாளர்களாக மாறினர். சிலர் சிறுநகரங்களுக்கும் பெருநகரங்களுக்கும் இடம் பெயர்ந்தனர்.

* ஏற்கனவே நில உரிமை இல்லாமல் இருந்த விவசாயத் தொழிலாளர்கள், தமிழ்ச் சமூகத்தில் கொத்தடிமைகளாகவும் மாறினர்.

* நில வரியைத் தானியமாகச் செலுத்தி வந்த நிலைமை மாறி பண வடிவில் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

* விளை பொருள்களின் விலையை நிர்ணயம் செய்யும் உரிமைகளை விவசாயிகள் இழந்தனர். இந்த உரிமைகள் இடைத் தரகர்களிடம் சென்று அடைந்தன.

* உற்பத்தியாளர்களைவிட இடைத்தரகர்களே அதிமான லாபத்தைப் பெற்றனர்.

நாடு கடத்தல்

இவற்றின் விளைவாகத் தமிழகக் கிராமப்புறங்களில் வாழ்ந்த குத்தகை விவசாயிகள், சிறு நில உரிமையாளர்கள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களில் குறிப்பாகத் தலித் மக்கள் அதிகமாகவே பாதிக்கப்பட்டனர். கிராமங்களை விட்டு வெளியேறி உயிர் பிழைக்கலாம் எனும் உணர்வுகள் அவர்களிடம் மேலோங்கி நின்றன.

தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்ப் பகுதிகளிலும், ஸ்ரீலங்காவின் மலையகப் பகுதிகளிலும், மலாயாவிலும் ரப்பர், தேயிலை, காபித் தோட்டங்களை உருவாக்கினர். 19-ஆம் நூற்றாண்டில் பர்மா எனும் மியன்மாரில் ரப்பர் தோட்டங்களும், மொரிசியஸ் நாட்டில் கரும்புத் தோட்டங்களும் உருவாக்கப்பட்டன.

அந்த வகையில், புதிதாக மலைத் தோட்டங்களை உருவாக்குவதற்கு, இயற்கைக் காடுகள் திருத்தி அமைக்கப்பட வேண்டி இருந்தன. அடுத்து அங்கு பயிரிடப்பட்ட காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்களைப் பராமரிக்கவும், அவற்றின் அறுவடைகளைச் சேகரிக்கவும் மிகுதியான அளவில் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.

இலங்கை மலையகம்

1815-இல் இலங்கையின் மலையகப் பகுதியின் தலைநகராக விளங்கிய கண்டியை ஆங்கிலேயர் கைப்பற்றினர். அதன் பின்னர் 1824-இல் இம் மலைப் பகுதியில் காபி பயிரிடத் தொடங்கினர். 1828-இல் ஜார்ஜ் பேர்ட் என்ற ஆங்கிலேயர் இப்பகுதியில் காபியும் கொக்கோவும் பயிரிடும் தோட்டங்களை உருவாக்கினார். இதை அடுத்து வேறு சில ஆங்கிலேயர்களும் மலைத் தோட்டங்களை உருவாக்கினர்.

1969 - 1880-ஆம் ஆண்டுகளில் காபிப் பயிர் ஒரு வகையான நோய்த் தாக்குதலினால் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் காபியைத் தவிர, தேயிலை, கொக்கோ, சிங்கோனா ஆகிய பயிர்களும் பயிரிடப்பட்டன. பின்னர் ரப்பரும் பயிரிடப்பட்டது. இருப்பினும் தேயிலைத் தோட்டங்கள்தான் பிரதான வருமானத்தைப் பெற்றுத் தந்தன.

சிங்களக் குடியிருப்புகள்

இத்தோட்டங்களை உருவாக்க, ஒரு கட்டத்தில் சில சிங்களக் குடியிருப்புகள் அழிக்கப்பட்டன. தங்கள் குடியிருப்பு உரிமையை அழித்தவர்கள் என்ற வெறுப்பு உணர்வுகளின் காரணமாக ஆங்கிலேயர்களின் தோட்டங்களில் வேலை செய்ய சிங்களவர்கள் விரும்பவில்லை. இதைத் தவிர, செங்குத்தான மலைச் சரிவுகளிலும் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் கடினமாக உழைக்க சிங்களவர்கள் முன்வரவில்லை.

இதனால் இலங்கைக்கு வெளியிலிருந்து தொழிலாளர்களை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது. இந்தச் சூழலில் ஆங்கிலேய அரசின் தவறான வேளாண்மைக் கொள்கையால் பாதிக்கப்பட்டத் தமிழகக் குடியானவர்கள் தம் வாழ்வுக்கான புதிய ஆதாரங்களைத் தேட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருந்தார்கள்.

ஒப்பந்தக் கூலி முறை

இத்தகைய சமூகச் சூழலில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மலைத் தோட்டங்கள், கிராமப்புற மக்களுக்கு பாலைவனச் சோலைகளாக அமைந்தன. கிராமப்புற மக்கள் மட்டும் அல்லாமல்; கடன்பட்டு, கடன்களைத் திருப்பிக் கொடுக்க முடியாதவர்கள்; சாதி சனங்களைப் புறக்கணித்து காதலித்தவர்கள்; ''கிரிமினல்'' குற்றங்களைச் செய்தவர்களின் புகலிடமாகவும் அந்தத் தேயிலை மலைத்தோட்டங்கள் அமைந்தன.

ஆங்கிலேய முதலாளிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் ஒப்பந்தக் கூலி முறை எனும் ஒரு புதிய முறை உருவாக்கப்பட்டது. இந்த முறை கங்காணி முறை என்று மலாயாவில் அழைக்கப்பட்டது. மலாயாவிற்குப் பின்னர்தான் இலங்கையில் அந்தக் கங்காணி முறை அமலுக்கு வந்தது. ஆனால், இலங்கையில் ஒப்பந்தக் கூலி முறை என்று அழைக்கப்பட்டது.

ஏழைக் குடியானவர்கள்

அதன்படி கிராமப்புற ஏழைக் குடியானவர்கள், தோட்ட முதலாளியிடம் ஒரு குறிப்பிட்ட கால அளவு அவருடைய தோட்டங்களில் பணிபுரிவதாக ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்து அல்லது கைநாட்டுப் போட்டு கொடுத்து விடுவார்கள். ஒப்பந்தக் காலம் முடியும் முன்னர் அவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் மலைத் தோட்டங்களை விட்டு வெளியேறக் கூடாது. மீறினால் முதலாளி விதிக்கும் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

இருப்பினும், சிலர் திருட்டுத் தனமாகத் தாயகத்திற்குத் திரும்பி விடுவதும் உண்டு. தோட்ட முதலாளிகள் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் அங்குள்ள காவல்துறை அவர்களைக் கைது செய்து, மீண்டும் அவர்கள் பணிபுரிந்து வந்த அந்தப் பழைய தோட்டத்திற்கே திருப்பி அனுப்பிவிடும்.

எஸ்.எஸ். ரஜுலா

ஒரு கட்டத்தில் இந்த ஒப்பந்தக் கூலி முறையால் தேவையான ஆட்களைத் திரட்ட முடியாத நிலையில், மலாயாவில் பயன்படுத்தப்பட்ட கங்காணி முறையை இலங்கையிலும் அறிமுகப்படுத்தினார்கள். கங்காணி என்பவர் ஏற்கனவே ஆங்கிலேயர்களுக்கு உரிமையான தோட்டங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்தான். முரட்டுத்தனமும், வாக்குச் சாதுரியமும், பொருளாசையும் ஒரு சேரப் பெற்றவர்களாகவும் வெள்ளை ஆங்கிலேயர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் விளங்கியவர்களே கங்காணிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தக் கங்காணிகள் டைம் டிக்கட் எனும் (Time Ticket) அடையாளத் தகடுகளுடன் மலாயா அல்லது இலங்கைத் தேயிலைத் தோட்டங்களிலிருந்து புறப்படுவார்கள். மலாயாவில் எஸ்.எஸ். ரஜுலா (S.S. Rajula), ஸ்டேட் ஆப் மெட்ராஸ் (State of Madras) போன்ற கப்பல்கள் சஞ்சிக்கூலிகளுக்கும் கங்காணிகளுக்கும் பயண மார்க்கங்களாக இருந்தன. எஸ்.எஸ். என்றால் Straits Service. தமிழில் நீரிணைச் சேவை என்று அழைக்கலாம்.

தோட்டம் ஒரு சொர்க்கலோகம்

கங்காணிகள்  கொண்டு வரும் அடையாளத் தகட்டில், தோட்டத்தின் பெயர், அந்தத் தோட்டம் இருக்கும் மாவட்டம், தகட்டின் வரிசை எண் போன்றவை குறிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் திருச்சி, தர்மபுரி, மதுரை, இராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, திருநெல்வேலி ஆகிய மாவட்டப் பகுதிகளுக்கே கங்காணிகள் புறப்பட்டு வந்தனர்.

தங்களுடைய பூர்வீகக் கிராமம், உறவுக்காரர்கள், தெரிந்தவர்கள் மற்றும் தம் சாதிக்காரர்கள் வாழும் ஊர் எனத் தமக்கு நன்கு அறிமுகமான பகுதிகளையே கங்காணிகள் தேர்ந்தெடுத்து வந்தனர். திக்கற்று நிற்கும் கிராம மக்களிடம், இலங்கையில் காணப்படும் தோட்டங்களைச் சொர்க்கலோகமாக வர்ணித்தனர். மலாயாவில் பணம் காசு கொட்டிக் கிடக்கின்றது என்று போற்றிப் புகழ்ந்தனர். 

தோட்டத் தொழிலாளர்களாகப் பணிபுரிய அவர்களை அழைத்தார்கள். அதை ஏற்றுக் கொண்ட மக்களிடம் தான் கொண்டு வந்த தகட்டை, ஒரு சில ரூபாய்களுக்கு விற்றுவிடுவார்கள். சிலர் குடும்பத்துடன் புறப்படுவார்கள். இவர்களது பயணச் செலவை முதலில் கங்காணியே ஏற்றுக் கொள்வார்.

நோய்களுக்கானத் தடுப்பூசிகள்

இலங்கைக்குப் போகிறவர்கள் தூத்துக்குடி இரயில் நிலையத்திற்கும் மணியாச்சி இரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள தட்டப்பாறை அல்லது இராமேஸ்வரம் அருகில் உள்ள[மண்டபம் என்ற ஊர் நகரங்களில் உள்ள தொழிலாளர் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அப்போது இந்த முகாம்கள் இலங்கை அரசின் தொழிலாளர் துறையினரால் நடத்தப்பட்டன.

தொழிலாளர் முகாம்களுக்குள் நுழையும் பொழுது கங்காணி கொடுத்தத் தகடைக் கயிற்றில் கோர்த்து, கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும். காலரா, அம்மை ஆகிய நோய்களுக்கானத் தடுப்பூசிகளை ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் போடுவார்கள். இவ்விரு நோய்களும் அவர்களிடம் இல்லை என்று உறுதி செய்த பின்னரே இவர்கள் இராமேஸ்வரத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கிருந்து கப்பல் வாயிலாக இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கு அல்லது கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

கூலித் தமிழன்

தலைமன்னாரிருந்து கால்நடையாக ஆடு, மாடுகளைப் போல கூட்டம் கூட்டமாக அழைத்துச் செல்வார்கள். வழிநடைக் களைப்பினாலும், போதுமான உணவு இல்லாமையாலும் நடைப்பயணத்தின் போதே சிலர் இறந்து போவதும் உண்டு. இந்தத் தொழிலாளர்களைக் ‘கூலி’ என்ற இழிவான சொல்லாலேயே குறித்தனர். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், கூலிச் சம்பளம் என்றே குறிப்பிடப்பட்டது.

இவர்களிடையே சமயப் பிரச்சாரம் செய்வதற்கு உருவாக்கப்பட்ட மிஷன்களும் ''கூலி மிஷன்கள்'' என்றே பெயர் பெற்றன. இவர்கள் தமிழர்களாக இருந்தமையால், கூலித் தமிழன் அல்லது ''தோட்டக் காட்டான்'' என்று குறிப்பிடப்பட்டனர். இவர்களைவிடத் தாங்கள் உயர்வானவர்கள் என்று யாழ்ப்பாணத் தமிழர்களும், இலங்கையில் வாணிபம் செய்து வந்த இந்தியத் தமிழர்களும் தம்மை வேறுபடுத்திக் காட்டிக் கொண்டனர்.

பிரட்டுக்களம்

கூலி லயன்கள் என்று அழைக்கப்படும் கூலிகளின் வீடுகள், குதிரை லாயங்களைப் போன்று வரிசையாகக் கட்டபட்டிருந்தன. வீடுகள் அனைத்தும் தகரக் குடிசைகள். அங்கே இவர்கள் குடியேற்றப்பட்டனர். காலையில் கொம்பு ஊதப்படும் அல்லது தப்பு அடிக்கப்படும். எல்லோரும் பிரட்டுக் களத்தில் கூடவேண்டும்.

ஆங்கிலத்தில் Parade Ground என்று ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டதையே பிரட்டுக் களம் என்று நம்மவர்கள் குறிப்பிட்டனர். இங்கிருந்து அவர்கள் தோட்டப்பயிர் உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். 
தேயிலைக் கொழுந்தெடுத்தல், காபிப் பழம் பறித்தல், செடிகளைக் கவாத்து செய்தல், களை எடுத்தல், புதிய தோட்டம் உருவாக்கக் காடுகளைத் திருத்துதல் போன்ற பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். குழுக்களாகப் பிரிந்து இவர்கள் வேலை செய்வார்கள். ஒவ்வொரு குழுவையும் கண்காணிக்க ஒரு கங்காணி இருப்பார். இவர்கள் சில்லறைக் கங்காணி என்று அழைக்கப்பட்டனர்.

தலைக்காசு

கடல் பயணத்திற்குச் செலவானத் தொகையை, கூலிகளின் ஊதியத்தில் இருந்து தவணை முறையில் பிடித்தம் செய்தார்கள். கூலிகளை ஈவு இரக்கமில்லாமல் வேலை வாங்குவதற்காகவும், முதலாளிகளுக்கு விசுவாசமாக இருப்பதற்காகவும் தலைக்காசு அல்லது கங்காணிக் காசு என்ற பெயரில் கூலியாட்களின் கூலியிலிருந்து ஒரு சிறு பகுதி பிடித்தம் செய்யப்படும். அந்தத் தொகையை கங்காணிக்கு முதலாளிகள் வழங்கி வந்தனர்.

ஒரு கங்காணி தன்னோடு அழைத்துச் செல்லும் அனைவரின் பெயர்களும், அந்தக் கங்காணியின் கணக்கில் பதிவு செய்யப்படும். அவ்வாறு பேர் பதியப்படும் ஒவ்வொரு தொழிலாளியின் சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு நாளைக்கும் மூன்று விழுக்காட்டுப் பணம் கங்காணிக்குக் கொடுக்கப்படும். இந்த வகையில் கங்காணியின் சம்பளத்தைவிட கங்காணிக் காசு என்ற பெயரால் கங்காணிக்கு அதிகமாக வருவாய் கிடைக்கும்.

அரைப்பேர் போடுதல்

தேயிலை அல்லது காபிப்பழம் சேகரித்து முடிந்த பின், சேகரித்தவை எடை போடப்படும். இது கணக்கர்களின் பணியாகும். நிர்ணயம் செய்யப்பட்ட அளவுக்கும் குறைவாக சேகரிப்பு இருந்தாலோ அல்லது இருப்பதாகக் கணக்கன் கூறினாலோ, ஒரு தொழிலாளியின் ஒரு நாள் ஊதியத்தில் இருந்து சரி பாதி சம்பளம் குறைக்கப்படும். இதற்கு அரைப்பேர் போடுதல் என்று பெயர்.

இவ்வாறு கூலியாளுக்குக் கிடைக்கும் கூலி குறைந்துவிட்டால், கங்காணிக்குக் கிடைக்கும் தலைக்காசும் கிடைக்காது.
ஆகவே கங்காணி மிகவும் கோபப்படுவார். அதனை தொழிலாளர்கள் கீழ்கண்டவாறு வேதனையுடன் பாடினார்கள்.

:அரைப் பேராலே - ஏலேலோ - கங்காணிக்கு - ஐலசா
:தலைக்காசு - ஏலேலோ தவறிப்போச்சு - ஐலசா
:கோபத்தோடே - ஏலேலோ கங்காணியும் - ஐலசா
:குதிக்கிறானே - ஏலேலோ கூச்சல் போட்டு - ஐலசா
:ஆண்கள் பெண்கள் - ஏலேலோ அடங்கலுமே - ஐலசா
:அவனைப் பார்த்து - ஏலேலோ அரளுமே - ஐலசா

கங்காணியின் அணிகலன்கள்

சரிகைத் தலைப்பாகை; கோட்டின் இடது புறத்து மேல்பைக்கு மேலே வெள்ளிச் சங்கிலி; அதில் தொங்கும் தட்டை; இவைதான் கங்காணியின் உருவ அமைப்புக்கான அலங்காரம். கங்காணி காதிலே போட்டு இருக்கும் கடுக்கனுக்கு குண்டலம் என்று பெயர். கழுத்திலே மாட்டி இருக்கும் தங்க வளையத்திற்கு கெவுடு என்று பெயர். கையிலே இருக்கும் பிரம்புக்கு கொண்டை என்று பெயர். இவை கங்காணியின் அத்தியாவசியமான அணிகலன்கள். தொழிலாளர்களை அடிப்பதற்காகப் பிரம்பு பயன்பட்டது.

இலங்கைத் தோட்டப் புறங்களில் தொழிற்சங்கங்கள் ஊடுருவும் வரை, கங்காணிமார்களின் அதிகாரம் இந்தியாவின் கிராமத்து ஜமீன்தாரின் நிலைமையை மிஞ்சிப் போய் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கங்காணிகள் ஈவு இரக்கமின்றி வேலை வாங்குவதை கீழ்க்காணும் மலையக நாட்டார் பாடல் வாயிலாக அறிய முடிகிறது.

:எண்ணிக் குழி வெட்டி
:இடுப்பொடிஞ்சி நிக்கையிலே
:வெட்டு வெட்டு எங்கிறானே
:வேலையைத்தக் கங்காணி

:அடியும் பட்டோம் மிதியும் பட்டோம்
:அவராலே மானங் கெட்டோம்
:முழி மிரட்டிச் சாமியாலே
:மூங்கிலாலே அடியும் பட்டோம்

கூலித் தமிழ்

தங்கள் மீது நிகழ்த்தப்படும் மனிதாபிமானம் இல்லாத கொடுமைகளுக்கு வெள்ளைத்துரைகளைக் காட்டிலும் கங்காணிகளே முக்கியக் காரணம் என்று மேற்கண்டவாறு பாடியுள்ளனர். பழக்கமில்லாத குளிரான மலைப் பகுதி, அட்டைக்கடி, கொசுக் கடியினால் ஏற்படும் மலேரியாக் காய்ச்சல்; காட்டு விலங்குகளின் தாக்குதல்கள் போன்றவற்றிற்கு தோட்டத் தொழிலாளர்கள் நாளும் ஆளாகி வந்தனர்.

பிழைக்கப் போன இந்தத் தமிழர்களிடம் உரையாடுவதற்காக, ஆங்கிலேய முதலாளிகள் தமிழ் படிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. அந்த ஆங்கிலேய முதலாளிகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ''கூலித் தமிழ்'' என்ற நூல் 1922-இல் வெளியானது. இந்த நூலில் தோட்டத் துரைக்கும் கூலி வேலையாள்களுக்கும் நிகழும் உரையாடல் பயிற்சிகள் இடம் பெற்றிருந்தன.

19-ஆம் நூற்றாண்டின் இந்திய ஒப்பந்தக் கூலிகள்

ஆப்ரிக்காவின் காலனி நாடுகளுக்கு அனுப்பப்பட்ட இந்தியத் தொழிலாளர்களின் விவரங்கள்

மவுரிசியஸ் - 453,063

பிரிட்டிஷ் குயானா - 238,909

டிரினிடாட் - 143,939

ஜமாய்க்கா - 36,412

கிரேனடா - 3,200

செயிண்ட் லூசியா - 4,350

நாட்டால் - 152,184

செயிண்ட் கிட்ஸ் - 337

செயிண்ட் வின்செண்ட் - 2,472

ரியூனியன் - 26,507

சுரிநாம் - 34,304

பீஜி - 60,965

தென்னாப்பிரிக்கா - 32,000

செய்சீல்ஸ் - 6,315

மொத்தம் - 1,194,957'''

மலாயா கங்காணிகள்

மலாயாவில் இருந்து ஆள்களைத் தேடிப் போன கங்காணிகள், பினாங்குத் தீவு அல்லது கோலக்கிள்ளான் துறைமுகத்தில் இருந்து கப்பல் ஏறினார்கள். பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்தியது எஸ்.எஸ். ரஜுலா, ஸ்டேட் ஆப் மெட்ராஸ் கப்பல்கள்தான். இந்தக் கப்பல்களின் பின்னால் ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. சஞ்சிக்கூலிகளுக்கும் கங்காணிகளுக்கும் அந்தக் கப்பல்கள் பயணப் பொக்கிஷங்களாக அமைந்தன.

சஞ்சிக்கூலிகளின் மனித உரிமைகள்

நாடு விட்டு நாடு கடந்து வந்ததால், சஞ்சிக்கூலிகளின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டன. அவர்களின் அடிப்படையானத் தேவைகளும் மறுக்கப்பட்டன. அப்படி வந்தவர்களில் பலர், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைக் கேட்டனர். அதனால் பிரித்தானியர்கள் மிரட்சி அடைந்தனர்.

உரிமைப் போராட்டவாதிகள் பலர் மியான்மார், தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேசியா நாடுகளுக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும் நாடு கடத்தப்பட்டனர். அவர்களில் சிலர் எங்கே அனுப்பப்பட்டார்கள் என்ற விவரம் தெரியாமல், இன்று வரையிலும் காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

உலகத்தில் பல்வேறு நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழர்கள், ஒரு காலக் கட்டத்தில் இரு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்தவர்கள் ஆவர். முதலாவதாக, போர்களின் காரணமாக இடம் தேடி, தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புலம் பெயர்ந்தவர்கள். அந்த வகையில் இலங்கையில் இருந்து அகதிகளாகப் புலம்பெயர்ந்தவர்களைச் சொல்லலாம்.

இரண்டாம் தர பிரஜைகள்


அவ்வாறு புலம் பெயர்ந்தவர்கள் இன்று பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். சிலர் அந்த நாடுகளில் இரண்டாம் தர பிரஜைகளாகவும் வாழ்கிறார்கள். இரண்டாவதாக, தங்களின் சொந்த நாட்டில் வாழ வழி இல்லாமல் பிழைப்புகளைத் தேடி புலம் பெயர்ந்தவர்கள். இவர்களில் இரு வகை உள்ளனர்.

முதல் வகை: 18ஆம் நூற்றாண்டில், சொந்த முயற்சியில் வியாபாரம் செய்ய வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள். அவ்வாறு 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வந்த தமிழர்கள் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் வாழ்ந்து அங்கேயே நிலைத்து இருக்கிறார்கள்.

சஞ்சிக் கூலிகளின் வாரிசுகள்

இரண்டாம் வகை:  போர் காலக்கட்டத்தில் வெள்ளையர்களின் தோட்டங்களிலும் காடுகளிலும் வேலை செய்வதற்காக அழைத்து வரப்பட்டவர்கள். அப்படி அழைத்து வரப்பட்டவர்களில் ஒரு பகுதியினர், மலேசியக் காடுகளில் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அவர்கள் காடுகளிலேயே குடிசைகள் அமைத்து தங்கிக் கொண்டனர்.

இன்னொரு பிரிவினர் மலேசியத் தோட்டப் புறங்களில் குடியமர்த்தப்பட்டனர். 1930களில் மலாயாவுக்கு வந்த தமிழர்களுக்கு தோட்டப் புறங்களிலேயே கோவில், பள்ளிக்கூடம், கல்லுக்கடை எனும் சலுகைகள் வழங்கப்பட்டன. அவர்கள் தோட்டத்தைவிட்டு வெளியே போகாதபடி உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளானார்கள்.

அதே போல இந்தியக் கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக மலாயா தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட இரக்கமற்ற வரலாறும் உள்ளது. ஒரு துயரவெளியில் பெரும் அவலக் குரல்கள். அந்தச் சஞ்சிக் கூலிகளின் வாரிசுகள் இன்றும் மலேசியாவில் தங்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர்.

பினாங்குத் தீவு


1786-இல் பினாங்குத் தீவு ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வந்த பின்னர், இந்தியாவில் இருந்து தமிழர்களைப் பெருமளவில் குடியேற்றும் வாய்ப்பு ஏற்பட்டது. பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல், டச்சு போன்ற நாடுகள் தங்களின் பேராதிக்கத்தை நிலை நாட்டுவதற்காகப் பல திட்டங்களைத் தீட்டின. கடல் கடந்து உலகின் பல நாடுகளைக் கைப்பற்றின. பல காலனித்துவ ஆட்சிகளைத் தோற்றுவித்தன.

இவ்வாறு கைப்பற்றிய நாடுகளின் இயற்கை வளங்களையும், கனிம வளங்களைத் தமது நாடுகளுக்கு கொண்டு செல்வதற்கு விவசாயப் பண்ணைகளையும் தோட்டங்களையும் சுரங்கங்களையும் அமைக்கத் தொடங்கினர். அதற்காக உழைக்கும் மக்கள் தேவைப்பட்டனர். அவர்களை உழைக்கும் மக்கள் என்றும் ஒத்து போகும் அடிமைகள் என்றும் அழைக்கிறார்கள்.

பெருந்தோட்டச் சமூகம்

காலனித்துவ ஆட்சியாளர்கள் ஆப்பிரிக்க கறுப்பர்களையும் இந்தியர்களையும் பல நாடுகளுக்கு குடியேற்றம் செய்தனர். காலனி நாடுகளில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டன. பெரும் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.

தென்னிந்தியாவில் இருந்து பெரும்பாலான தமிழர்கள் இலங்கை, மலாயா, மொரீசீயஸ், பர்மா, பீஜி, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றார்கள். அந்த நாடுகளில் ஆங்கிலேயேரின் ஆட்சி இருந்தது. இவ்வாறு குடியேற்றப்பட்ட மக்கள், தோட்டம் சார்ந்த பகுதிகளிலேயே தங்க வைக்கப்பட்டார்கள். இவர்கள்தான் பின்னர் பெருந்தோட்டச் சமூகம் Plantation Society என பெயர் பெற்றார்கள்.

ஓர் எல்லைக்குள் சிறை


தோட்டம் என்பது ஒரு தொழிலாளி வேலை செய்யும் இடத்தில் இருந்து, வேறு எங்கும் போக முடியாதபடி ஓர் எல்லைக்குள் சிறை வைத்திருக்கும் ஓர் அமைப்பு. அந்த அமைப்புக்குள்ளேயே அவர்களுக்குத் தேவையான கடை, மருந்தகம், வழிபாட்டுத்தலம் போன்றவை இருந்தன. கிடைத்தன.

அதனால் சஞ்சிக்கூலியாக வந்த மக்கள், அந்த நாட்டின் தேசிய இன மக்களுடன் தொடர்புகள் இல்லாமல் இருந்தார்கள். இத்தகைய நிலைதான் சஞ்சிக்கூலிகளின் துன்பமான வாழ்க்கையை வெளி உலகம் அறிய முடியாதவாறு அமைந்து விட்டது.

மலேசியத் தமிழர்களின் இருண்ட காலம்

1921ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பினாங்குத் தீவில் ஏறக்குறைய 387,509 தென்னிந்தியர்கள்  இருந்தனர். அதில் தமிழர் மட்டும் 39,986 பேர். இவர்கள் ரப்பர்த் தோட்டங்கள், தொடர்வண்டிச் சாலைகள் அமைத்தல் பணி, மின்சாரத் துறை, நீர் விநியோகத் துறைகளில் பெருமளவில் வேலை செய்தனர்.

இதில் ஆங்கில மொழி தெரிந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர்களும், மலையாளிகளும், படிப்புக் குறைவானத் தமிழர்களுக்கு அதிகாரிகளாகப் பணியாற்றும் நிலை உருவாகியது. தோட்டப்புறங்களில் தமிழர்கள் அதிகம் நிறைந்து வாழ்ந்தால், அங்கே தமிழ்ப் பள்ளிகள் மட்டுமே உருவாகின. தமிழர்களின் வாழ்வில் வேறு எந்தவிதமான புதிய மாற்றங்களும் ஏற்படவில்லை.

தங்களின் பூர்வீகத் தமிழ்நாட்டுக் கிராமங்களில் எப்படி வாழ்ந்தார்களோ, அதைப் போலவே சாதி சம்பிரதாய, சமய வேறுபாடுகளுடன் பிளவுபட்டு நின்றார்கள்.

சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை ஒரு தேகநிலை அடைந்து இருந்தது. அதைத் மலேசியத் தமிழர்களின்  ஓர் இருண்ட காலம் என்றும் அழைக்கலாம்.

தந்தை பெரியார் வருகை

1929-இல் தந்தை பெரியார் மலாயா நாட்டிற்கு வருகை புரிந்தார். அதன் பிறகு மலாயாத் தமிழர்களின் வாழ்வில் புதிய வேகமும் புதிய சிந்தனை மாற்றமும் உருவாகின. மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. புதிய இலக்கியப் போக்குகள் தோற்றம் கண்டன. நகர்ப்புற மக்களிடம் மட்டும் அல்லாமல் தோட்டப்புறங்களிலும் பெரியாரின் சிந்தனைகளும் பேச்சுகளும் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தின.

பல மொழிகள் பேசப்பட்ட இந்தியர்கள் மலாயாவில் பெரும்பான்மையினராக இருந்தாலும், அவர்கள் தமிழர்களாக இருந்த காரணத்தினால், இந்தியர்களின் பொது மொழியாக தமிழ்மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. பொரியாரின் வருகை மலேசியத் தமிழர்களின் வாழ்வில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.

மலேசியத் தமிழர்களின் போராட்டங்கள்

1940களில் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்கள் துளிர்விட்டன. பொருளாதார வீழ்ச்சியும், மந்தநிலையும் அந்தப் போராட்டங்களுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. இந்தக் கட்டத்தில் ரப்பர் விலையும் குறைந்து போனது. அதனால் வேலையில்லாமை நிலையும் ஏற்பட்டது.

சஞ்சிக்கூலிகளாகத் தமிழக மண்ணிலிருந்து மலாயாவுக்கு ஆங்கிலேயர்ளால் கொண்டுவரப்பட்ட தமிழர்கள் காட்டையும் மேட்டையும் திருத்தினார்கள். ரப்பரைப் பயிரிட்டு நாட்டுக்கு வளத்தைத் தேடித் தந்தார்கள். ஆனால், அவர்களின் வாழ்வில் உயர்வுகள் எதுவும் ஏற்படவில்லை. மாதச் சம்பளத்திற்கும் அடிப்படை வசதிகளுக்காகவுமே போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

உரிமைப் போராட்டங்கள்

மலேசியாவின் வளர்ச்சிக்கு ஆக்க சக்திகளாக விளங்கியவர்களின் பட்டியலில் முதன்மை இடத்தில் இருந்தவர்கள் சஞ்சிக்கூலிகளாய் வந்த இந்தியத் தொழிலாளர்கள்தான். ஆங்கிலேயர்களின் அடக்கு முறையில் சிக்குண்டு மிகச் சொற்பச் சம்பளத்தில் கொத்தடிமைகளாய் உழைத்து ஒடிந்து போனவர்கள். ஆங்கிலேய முதலாளிமார்களை வளப்படுத்திவிட்டு, அவர்கள் மட்டும் ஓட்டாண்டிகளாகவும் சாறு உறிஞ்சிய பின் துப்பப்பட்ட சக்கைகளாகவும் மாறி அழிந்து போயினர்.

அடக்குமுறை ஆணவங்கள்

தொடக்க காலத்தில் இருந்தே இவர்களின் வாழ்க்கையில் தோட்ட நிர்வாகத்தினரின் கெடுபிடிகள், அடக்குமுறை ஆணவங்கள், சம்பளப் பிரச்சனைகள், கங்காணிகளின் கொடுக்குப்பிடிகள் போன்றவை இவர்களின் வாழ்வைச் சிதறடித்து வந்தன. அதனால் அவர்களின் வாழ்கைத் தரம் மிகவும் பின் தங்கிய வறிய நிலையிலேயே இருந்தது. தோட்டங்களில் அடிப்படை வசதிகளற்ற சிறுவீடுகளில், விலங்குகள் போல் அடைத்து வைக்கப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.

மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்களின் ரப்பர் தோட்டங்களில் இரவு பகலாய், ஓய்வு ஒழிச்சலின்றி ஆடு மாடுகளைப் போல வேலைகள் செய்தனர். பொதுவாக, இவர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்பட்டனர் என்று வரலாற்று ஆவணங்கள் சான்று பகிர்கின்றன.

மலேசியாவில் அந்தச் சஞ்சிக்கூலிகளின் வாரிசுகள் இன்னமும் உரிமைப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இருப்பினும் அவர்களின் நான்காம் ஐந்தாம் தலைமுறையினர், மற்ற இனங்களுக்குச் சவால்விடும் அளவிற்கு, கல்வித் தரங்களில் வளர்ச்சி அடைந்து சாதனை படைத்து வருகின்றனர். ஒரு வீட்டிற்கு ஒரு பட்டதாரி எனும் நிலைமை பரவலாகி வருகிறது.

[இந்தக் கட்டுரையை தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதி இருக்கிறேன். அதன் முகவரி: http://ta.wikipedia.org/s/2pkv]


 கட்டுரையை எழுதுவதற்கான மேற்கோள் தமிழ் நூல்கள்
* அருணாசலம் கலாநிதி, க. 1994. இலங்கையின் மலையகத் தமிழர
 

* சாரல் நாடன், 1988. தேசபக்தன் கோ. நடேசய்யர

* சாரல் நாடன், 1990 மலையகத் தமிழர்
 

* சாரல் நாடன், 1993 மலையக வாய்மொழி இலக்கியம்
 

* சாரல் நாடன், 2000 மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்
 

* நவஜோதி, க. 1971 இலங்கை இந்தியத் தோட்டத் தொழிலாளரும் நாட்டுப் பாடல்களும்
 

* வேங்கடாசலபதி, ஆ.இரா. 2000. புதுமைப்பித்தன் கதைகள் முழுத் தொகுப்பு

மேற்கோள் ஆங்கில நூல்கள்

 
* Bertram Bastiampillai, 1968, Social Conditions of the Indian Immigrant Labourer in Ceylon in the 19th century.


* Langa Sundaram, Indian Overseas, Panchanam saha, 1970, Emigration of Indian labour (1834-1900).


* D. Wesumperuma. Indian immigrant plantation workers in Sri Lanka 1880-1910 p. 16-22


* H. Tinker, ''A New System of Slavery: The Export of Indian Labour Overseas 1820-1920'', Oxford University Press, London, 1974


* B.V. Lal, ''Girmitiyas: The Origins of the Fiji Indians'', Fiji Institute of Applied Studies, Lautoka, Fiji, 2004


* Khal Torabully with Marina Carter, ''Coolitude'' : An Anthology of the Indian Labour Diaspora,  Anthem Press 2002) ISBN 1-84331-003-1

 
மேல்விவரங்கள்

 
*http://www.nationalarchives.gov.uk/records/research-guides/indian-indentured-labour.htm Indian indentured labourers - The National Archives of the UK Government


*http://www.bbc.co.uk/bbcfour/documentaries/features/coolies.shtml  BBC documentary: Coolies: The Story of Indian Slavery


*http://www.india-seminar.com/2004/538/538%20vinay%20lal.htm  Labour and longing by Vinay Lal


* http://www.indiana.edu/~librcsd/etext/scoble  Hill Coolies


* http://www.hum-coolie.com  Site dedicated to modern Indian coolies


* http://www.indiatogether.org/2004/feb/eco-coolies.htm  India Together article


* http://www.ialhi.org/news/i0306_8.php  Review of Coolitude: An Anthology of the Indian Labor Diaspora
* http://keetru.com/visai/apr06/sivasubramanian.php

5 comments:

 1. ///மலேசியாவில் வாழும் இந்தியர்களில் 95 விழுக்காட்டினரின் மூதாதையர்கள் சஞ்சிக்கூலிகளாகக் கப்பல் ஏறி வந்தவர்கள ////// ஆனால் இன்று சிலர் இந்தியர்கள் வேலைக்கு அங்கு வரும்போது ஊர்க்காரன் என்று சொல்லுபோது வருத்தமாக உள்ளது .

  ReplyDelete
 2. மலேசியாவில் வாழும் இந்தியர்களில் 95 விழுக்காட்டினரின் மூதாதையர்கள் சஞ்சிக்கூலிகளாகக் கப்பல் ஏறி வந்தவர்கள ////// ஆனால் இன்று சிலர் இந்தியர்கள் வேலைக்கு அங்கு வரும்போது ஊர்க்காரன் என்று சொல்லுபோது வருத்தமாக உள்ளது .

  ReplyDelete
 3. tamil makkal printhu poratuvathal vitivu kaalam kitaipathu illai.suyanala thalaivarkalin nabikkai mosatiyal porattankal tholvi adaikirathu.

  ReplyDelete
 4. மலேசியாவில் வாழும் இந்தியர்களில் 95 விழுக்காட்டினரின் மூதாதையர்கள் சஞ்சிக்கூலிகளாகக் கப்பல் ஏறி வந்தவர்கள். அது எல்லாம் இல்லை. என் தாத்தா இங்கிலாந்தில் பிறந்தார். என் பாட்டி இமயமலையில் பட்டம் விட்டார் என்று யாராவது சொன்னால், தயவுசெய்து அவர்களைத் தவறாக நினைக்க வேண்டாம்.

  மற்றும் முக்கியமான பழைய செய்திகளை தரும் பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு கே.எஸ்.முத்துகிருஷ்ணன்.

  ReplyDelete