30 ஜூலை 2015

ஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 4

 [பாகம்: 4]

(மலேசியா தினக்குரல் நாளிதழில் 17.06.2015-இல் எழுதப்பட்டது.) 

தமிழீழ மக்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். செய்து வந்த உதவிகளைப் பற்றிய தகவல்கள் இந்தத் தொடரில் தெரியப் படுத்த படுகின்றன. இதில் இரகசியம் எதுவும் இல்லை. இந்தியத் தலைவர்கள் பெரும்பாலோருக்குத் தெரிந்த விஷயம்.



ஈழத் தமிழர்களுக்கு, ஒரு தனி நாடு அமைய வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கனவு கண்டவர். எம்.ஜி.ஆருக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையே இருந்த பிணைப்பு இருக்கிறதே அது ஒரு வகையான பாச உணர்வு. ஈழப் போராட்டத்துக்கு எம்.ஜி.ஆர். அளித்த வெளிப்படையான ஆதரவு இருக்கிறதே அது இன்னொரு வகையான வாய்மை உணர்வு.

எம்.ஜி.ஆர். உயிர் பிரியும் போதும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் வெற்றி பெற ஆயுதங்கள் தேவைப் பட்டன. அதற்கு எம்.ஜி.ஆர். தன் சொந்தப் பணத்தில் முதலில் பல கோடி ரூபாய் வழங்கினார். அதனால் மத்திய இந்திய அரசாங்கத்திடம் இருந்து தொல்லைகள் வரும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். தெரிந்தும் அதைப் பற்றி எம்.ஜி.ஆர். கொஞ்சமும் கவலைப் படவில்லை. தன்னுடைய ஆட்சி போனாலும் பரவாயில்லை. ஈழத் தமிழர்களுக்கு ஒரு தனி மாநிலம் கிடைக்க வேண்டும் என்று துணிந்து நின்றவர் எம்.ஜி.ஆர். அப்படியே சொல்லியும் வந்தார். செய்தும் காட்டினார்.



தமிழ் ஈழ மக்களின் நெஞ்சங்களில் இன்றும் நிலைத்து வாழ்பவர்களில் முதலிடத்தில் இருப்பவர் ஈழத்துத் தமிழ்த் தந்தை செல்வா. அடுத்தவர் தமிழகத்து மக்கள் மனிதர் எம்.ஜி.ஆர். அதற்கும் அடுத்து வருபவர் இரும்பு மனுஷி இந்திரா காந்தி.

அவருடைய உயிர் பிரிவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புகூட, 40 லட்சம் ரூபாய் பணத்தைப் புலிகளுக்கு வழங்கியதாகப் பிரபாகரனே கூறி இருக்கிறார். இத்தனைக்கும் அந்த நேரத்தில் இந்தியாவின் அமைதி காப்புப் படை வட இலங்கையில் முகாமிட்டு இருந்தது. அதைப் பற்றி எம்.ஜி.ஆர். கவலைப் படவே இல்லை. மத்திய அரசாங்கம் நினைத்து இருந்தால், எம்.ஜி.ஆர். செய்தது நடுவண் அரசாங்கத்திற்கு எதிரானச் செயல் என்று சொல்லி மாநில ஆட்சியையே கவிழ்த்து இருக்கலாம். ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வந்து இருக்கலாம்.

மறக்க முடியாத காலச் சுவடுகள்

எம்.ஜி.ஆர். கடைசி மூச்சை விடுவதற்கு முன் தன் சொந்தப் பணத்தில் 21 கோடி ரூபாய் கொடுக்கவும் எற்பாடு செய்து இருந்தார். தான் எப்போதும் பார்க்கும் அந்த நம்பிக்கையான மனிதர் வராததால் அதே ஆளைக் கொண்டு வரும்படி பணித்து இருக்கிறார். அந்த ஆள் போய் சேர்வதற்குள் எம்.ஜி.ஆரின் உயிரும் பிரிந்து விட்டது. இருந்தாலும் எம்.ஜி.ஆர். நினைத்தபடி சேர வேண்டிய இடத்தில் பணம் போய்ச் சேர்ந்து விட்டது.




விடுதலைப் புலிகளுடன் எம்.ஜி.ஆர். வைத்து இருந்த இடைவிடாத தொடர்பு; அவர்களுக்கு அவர் அளித்து வந்த மானசீகமான ஆதரவுகள் மறக்க முடியாத காலச் சுவடுகளாகப் பரிணமிக்கின்றன. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் புலிகள் செலுத்திய அஞ்சலி ஒன்றே அதற்குச் சான்றாகச் சொல்லலாம்.

எம்.ஜி.ஆர். மறைந்த போது

எம்.ஜி.ஆரின் மறைவு, உலகம் எங்கும் வாழ்ந்த தமிழர்களை உலுக்கியது. இதை எழுதிக் கொண்டு இருக்கும் அவரின் மறைவு என்னையும் பாதித்தது. நான் அவருடைய ரசிகன் என்பதற்காகச் சொல்ல வரவில்லை. எம்.ஜி.ஆர். மறைந்த போது என் சட்டையில் கறுப்புப் பட்டை அணிந்து ஒரு வாரம் அஞ்சலி செலுத்தி இருக்கிறேன். அப்போது மலாக்கா ஜாசின் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராக இருந்தேன். அது என்னவோ தெரியவில்லை. எம்.ஜி.ஆர். நம் நெஞ்சக் கலசங்களில் ரொம்பவும் ஆழமாய்ச் சம்மணம் போட்டு விட்டார். 




ஆக, எம்.ஜி.ஆரின் மறைவு, விடுதலைப் புலிகளையும் அதிகமாகவே உலுக்கிச் சிதைத்து விட்டது. பிரபாகரன் தனது ஆழ்ந்த இரங்கலை இப்படி வெளிப்படுத்தி இருக்கிறார்.

இரங்கல் செய்தியில் அழுத பிரபாகரன்

ஈழத்தில் தமிழினம் அநாதையாக ஆதரவு இல்லாமல் தவித்துக் கொண்டு நின்ற நேரம். அப்போது உதவிக் கரம் நீட்டி உறுதியாகத் துணை நின்ற புரட்சித் தலைவர். தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவும் ஊக்கமும் கொடுத்த செயல் வீரர். அவருடைய இழப்பை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்களின் மார்பில் தீ மூட்டுவது போல் உள்ளது.




என் மீது வைத்து இருந்த அன்பையும், ஈழத்தின் மீது கொண்டு இருந்த ஈடுபாட்டையும் எங்களால் காலம் பூராவும் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். மறைமுகமாகச் செய்த உதவிகள் மறக்க முடியாதவை. தமிழீழ மக்கள் மனதில் அவை என்றும் நிலைத்து வாழும்.

தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று விரும்பிய மறைந்த மாமனிதர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர் என்று பிரபாகரன் தன் இரங்கலில் தெரிவித்து இருந்தார்.

சென்னை பாண்டி பஜாரில் சின்ன ரத்தக் களறி

எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம். 1987 அக்டோபர் 31-ஆம் தேதி, எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமனையில் இருந்து சென்னை திரும்பிய நேரம். அரசுப் பணிகளுக்காகச் சில நாட்களை ஒதுக்கினார். 




நான்கு நாட்கள் கழித்து விடுதலைப் புலிகளைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கினார். கிட்டு, பேபி சுப்ரமணியம், ரகீம் ஆகிய புலித் தளபதிகளைச் சந்தித்தார். தமிழீழத்தில் நடப்பதைப் பற்றி அவர்கள் விளக்கினார்கள். அதன் பிறகு பிரபாகரனின் பிரதிநிதிகள் அடிக்கடி எம்.ஜி.ஆரைச் சந்தித்து நிலைமைகளை விளக்கி வந்தனர்.

1982-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதி. சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரனுக்கும், முகுந்தன் என்கிற உமா மகேஸ்வரனுக்கும் ஒரு கைகலப்பு. அவர்கள் மொழியில் வேண்டும் என்றால் அது கைகலப்பு. நம்முடைய மொழியில் துப்பாக்கிச் சண்டை. ஒரு சின்ன ரத்தக் களறி. 




ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்காக, உமா மகேஸ்வரன் ஏற்கனவே விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இருந்து நீக்கப் பட்டவர். விலகிச் சென்று புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தை உருவாக்கியவர். இருவரும் பரம எதிரிகள். எதேச்சையாகச் சந்தித்துக் கொண்டனர். மோதிக் கொண்டனர்.

கடல் கடந்து வந்து சென்னையில் தலைமறைவு

அந்தச் சமயத்தில் அவர்கள் இருவரையுமே சிங்களப் போலீசார் யாழ்ப்பாணத்தில் தேடிக் கொண்டு இருந்தனர். 1982-இல், அதிபர் ஜெயவர்த்தனா தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது, பொன்னாலைப் பகுதியில் கண்ணி வெடிகுண்டுகளை வைத்து அவர் மீது தாக்குதல் நடத்தியது ஒரு காரணம். 





1981-இல் யாழ்ப்பாண காங்கேசன் துறைமுகத்தில் ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தி, ராணுவத்தினரைக் கொன்றது இன்னொரு காரணம். அதற்காக அவர்கள் தேடப் பட்டு வந்தனர்.

அதனால், இருவரும் கடல் கடந்து வந்து சென்னையில் கொஞ்ச காலம் தலைமறைவாக வாழ்ந்தனர். ஆனால், வந்த இடத்தில் பழைய பகை சும்மா விடுமா. முட்டிக் கொண்டது. மோதிக் கொண்டனர்.



தமிழகப் போலீஸ்காரர்கள் இருவரையும் கைது செய்தனர். அதைக் கேள்வி பட்ட சிங்கள அரசு சும்மா இருக்குமா. சிங்களப் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக இறக்கை கட்டிச் சென்னைக்குப் பறந்து வந்தார்கள். கைது செய்யப் பட்ட போராளிகளைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார்கள். ஆனால், நடந்ததே வேறு.

எந்தக் காரணத்தைக் கொண்டும் போராளிகள் எவரையும் நாடு கடத்தக் கூடாது. அதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று எம்.ஜி.ஆர். பிடிவாதமாக இருந்தார். அந்தச் சமயத்தில், தன்னுடைய முதலமைச்சர் அதிகாரத்தை எம்.ஜி.ஆர். நிலை நிறுத்திக் காட்டினார். இது தான் கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்.

பரபரப்பை ஏற்படுத்திய தீர்மானம்

அடுத்து தமிழகச் சட்டசபையில் அவசரம் அவசரமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். தீர்மானத்தைக் கொண்டு வரச் சொன்னதும் எம்.ஜி.ஆர். தான். கைது செய்யப் பட்ட போராளிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களைச் சிங்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கக் கூடாது என்கிற தீர்மானம். அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது. தமிழகத்தில் உள்ள இருபது கட்சிகளும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றிய அந்தத் தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




தமிழகச் சட்டசபையில் நிறைவேற்றப் பட்ட அந்தத் தீர்மானத்தைக் காரணம் காட்டி இந்திய நடுவண் அரசுக்கு எம்.ஜி.ஆர் அவசரத் தந்தி அனுப்பினார். அந்தத் தந்திதான் பிரபாகரனையும் மற்றப் போராளிகளையும் காப்பாற்றியது. இல்லை என்றால் பிரபாகரனின் வரலாறு சிங்களச் சிறையிலேயே காலாவதியாகிப் போய் இருக்கும்.

உமா மகேஸ்வரனுடன் நடத்திய துப்பாக்கிச் சண்டை தொடர்பான வழக்கு, சென்னை நீதிமன்றத்தில் பதிவு செய்யப் பட்டது. அதனால் பிரபாகரன் சென்னையை விட்டு வெளியே போக முடியவில்லை. போலீஸ் பாதுகாப்பில் இருந்தார். பிரபாகரன் நீதிமன்றத்திற்கு வரும் போது தமிழகப் போலீஸ் அதிகாரிகளும் உடன் வருவார்கள். 




ஒரு நாள் போலீஸ்காரர்களின் கட்டுக் காவலையும் மீறி பிரபாகரன் மாயமாக மறைந்து போய் விட்டார். தமிழகப் பத்திரிகைகளைப் பற்றி சொல்லவா வேண்டும். பரபரப்பாகச் செய்திகளை வெளியிட்டன. பெங்களூர் அல்லது பாண்டிச்சேரியில் பிரபாகரன் மறைந்து இருக்கலாம் என்று ஆருடங்கள் வேறு. போலீஸ்காரர்கள் எப்படி நினைத்தார்களோ தெரியவில்லை. தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார்கள். ஆனால், பிரபாகரன் மட்டும் ஆள் அகப்படவே இல்லை.

எம்.ஜி.ஆருக்கே உரித்தான மோகனப் சிரிப்பு

பழ.நெடுமாறன் என்பவர் தமிழகத்தின் மூத்த தமிழறிஞர். பிரபாகரனுக்கு நெருங்கிய மூத்த நண்பர். நல்ல மதிவறிஞர். ஒரு நாள் பெரியவர் பழ.நெடுமாறனை எம்.ஜி.ஆர் பார்த்தார். 




அப்போது எம்.ஜி.ஆர் ஒரு புன்முறுவலுடன், ’என்ன. உங்கள் நண்பர் பிரபாகரனைப் பத்திரமாக அனுப்பி வைத்து விட்டீர்கள் போல இருக்கிறது’ என்று சொல்லி இருக்கிறார். அப்புறம் எம்.ஜி.ஆருக்கே உரித்தான மோகனப் சிரிப்பு. பழ.நெடுமாறனுக்குப் புரிந்து விட்டது. சிரித்துக் கொண்டே அவரும் தலையை அசைத்து இருக்கிறார்.

எம்.ஜி.ஆர் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள்

எம்.ஜி.ஆர் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள். பிரபாகரன் தப்பிச் செல்ல உதவியது யார் தெரியுமா. எம்.ஜி.ஆர். தான். தமிழகத்தில் எஞ்சியிருந்த விடுதலைப் புலிகள் மீது போலீஸ்காரர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த மர்மத்திற்கும் எம்.ஜி.ஆரின் அந்தச் சிரிப்பு ஒன்றே போதும். உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.

பிரபாகரனை நீதிமன்றத்திற்கு கொண்டு போகும் போது, அவர் தப்பிச் செல்ல திட்டம் வகுத்தவர் எம்.ஜி.ஆர். தான். இங்கே இதைக் கண்டிப்பாகப் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. போகிற மாதிரி போய், போகிற வழியில் பிரபாகரனை விட்டு விடுங்கள் என்று போலீஸ்காரர்களுக்கே உத்தரவு போட்டவர் எம்.ஜி.ஆர்.





1984-ஆம் ஆண்டு பிரபாகரன் மீண்டும் தமிழகம் திரும்பினார். ஆனால், இந்த முறை பல ஆயிரக் கணக்கான இளைஞர்களையும் இளம் பெண்களையும் கொண்டு வந்தார். அவர்களுக்கு தீவிரமான பயிற்சிகள் அளிக்கப் பட்டன. அதற்கான பயிற்சி முகாம்கள் தமிழகத்தின் காடுகளில் அமைக்கப்பட்டு இருந்தன.

கறுப்புச் சட்டை போட்ட எம்.ஜி.ஆர்.

தமிழகம் எங்கும் விடுதலைப் புலிகளின் கண்காட்சிகள் தங்கு தடையின்றி நடத்தப்பட்டன. பகிரங்கமாக நிதி திரட்டப் பட்டது. அவ்வளவுக்கும் முதல்வர் எம்.ஜி.ஆர் அனுமதி அளித்து இருந்தார்.

சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கிய போது, அதை துறைமுகத்தில் இருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்தன. அப்போது, முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் அதே எம்.ஜி.ஆர். தான்.

ஈழத் தமிழர்களுக்காகக் கறுப்புச் சட்டை அணிந்ததோடு, தன்னுடைய சக அமைச்சர்களையும் கறுப்புச் சட்டை அணியச் சொன்னவர் அதே அந்த எம்.ஜி.ஆர். தான். அவரைப் பற்றி இன்னும் நிறைய தகவல்கள் நாளைய கட்டுரையில் வருகின்றன. படிக்கத் தவறாதீர்கள். (தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக