29 June 2016

அங்கோர்வாட் அழுகின்றது

உன்னதமான மண் கம்போடியா என்று உலகமே போற்றுகிறது. அந்தப் பச்சை மண்ணில்தான் இந்தியப் பேரரசர்கள் நல்ல பெரிய வரலாற்று இதிகாசங்களை எழுதிச் சென்றார்கள். அழகு அழகான அங்கோர் வாட் கோயில்களைக் கட்டினார்கள். சரித்திரம் படைத்தார்கள். சாதனைகள் செய்தார்கள். அத்தனையும் ஆய கலைகள் எழுதிச் செல்லும் அபூர்வமான ராகங்கள். அவை எல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட சின்னப் பெரிய மனித சாசனங்கள். அதே அந்த மண்ணில்தான் இப்போது ஒரு சின்ன அதிசயமும் நடக்கிறது. படியுங்கள். உங்கள் மனசும் லேசாகக் கசிந்து கனத்துப் போகும்.அங்கோர் வாட்டில் இருந்து ரொம்ப தூரத்தில் இல்லை. ஒரு 30 கி.மீ. தூரம்தான். அங்கே மனித மனசுகளைப் பிழிந்து எடுக்கும் ஒரு சமுதாயம் வாழ்கின்றது. ஊசிப் போன கக்கல் கழிசல்கள். அங்கே வந்து குவியும் குப்பைக் கூளங்கள். அவற்றை நம்பி ஒரு சமுதாயம் வாழ்கின்றது.

இந்த உலகத்திலேயே இன்னோர் உலகம்

சமுதாயம் என்று சிலர் சொல்கிறார்கள். மற்றபடி விதியோடு சதிராடும் வீதிச் சமுதாயம் என்று பலர் சொல்கிறார்கள். எது எப்படியோ மனதை இறுக்கிப் பிடித்துக் கொண்டு படியுங்கள். 
ஓமார் ஹவானா என்பவர் ஒரு ஸ்பெயின் நாட்டுப் புகைப்படக்காரர். அந்தச் சமுதாயத்தைப் படம் பிடித்து உலக மக்களுக்கு அறிமுகம் செய்து இருக்கிறார். நாம் வாழும் இந்த உலகத்திலேயே இப்படி இன்னோர் உலகமும் இருக்கிறது என்று வேதனைப் படுகிறார். ஏழு மாதங்கள் அவர்களுடன் தங்கி இருக்கிறார். அவர்கள் படும் அவலங்களைப் படம் பிடித்தும் காட்டி இருக்கிறார்.

அந்த உலகத்தில் வாழ்பவர்கள் அங்கேயே தங்கி... அங்கேயே சாப்பிட்டு, அங்கேயே ஒன்றுக்கும் இரண்டுக்கும் போகிறார்கள். அங்கேயே குடும்பம் நடத்துகிறார்கள். அங்கேயே குழந்தைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள். நல்ல ஒரு சாப்பாட்டிற்கே நாய் படாத பாடு. அவர்களின் பிள்ளைகள் பள்ளிக்கூடம் பக்கமே தலை வைத்துப் படுத்தது இல்லை. 
இதில் ஓர் அதிசயம் என்ன தெரியுமா. அந்தப் பிள்ளைகளுக்குச் சீக்கு சிரங்கு என்று எதுவுமே வருவது இல்லை. மருத்துவர்களைத் தேடிப் போவதும் இல்லை. பாவம் அவர்கள் என்று சொல்ல வேண்டாம். ஆண்டவன் இருக்கிறார் என்று சொல்லுங்கள்.

அந்தத் தனி உலக மக்களின் வருமானம் ஒரு நாளைக்கு இரண்டே இரண்டு ரிங்கிட் தான். வயிற்றைக் கழுவிக் கொள்ள கொஞ்சம் உணவு கிடைக்கிறது. வெயிலுக்கும் மழைக்கும் ஒண்டிக் கொள்ள... அப்படியும் இப்படியும் ஒரு சின்ன ஒட்டுக் குடிசையும் கிடைத்து விடுகிறது. 
நாள் ஒன்றுக்கு 14 மணி நேரம் ’வேலை’ செய்கிறார்கள். ஒரு ரிங்கிட் அல்லது இரண்டு ரிங்கிட் வருமானம். அது போதும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அப்படியே வாழ்ந்தும் வருகிறார்கள்.

மறக்கப்பட்ட ஒரு சமுதாயம்

மலேசியாவில் அப்படி இல்லையே. குப்பை மேடுகளில் பொறுக்கிப் பார்த்தாலே போதும். ஒரு நாளைக்கு ஐம்பது... நூறு ரிங்கிட் என்று தேறிவிடும். அண்மையில், ஓர் ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தி. அண்மையில் படித்தது. 
இதற்காக ஈப்போவில் இருந்து இருபது கி.மீ. தொலைவில் இருக்கும் பெர்ச்சாம் கழிசல் அடக்கத்தையும் போய்ப் பார்த்து வந்தேன். அப்படியே ஒரு குடிசை போடலாம் என்று மனசிலும் பட்டது. கொஞ்சம் கஷ்டப் பட்டால் பணக்காரன் ஆகலாம். ஆனால் எவ்வளவு குப்பைகளைக் கிண்டிப் பார்க்கிறோம் என்பதைப் பொருத்த விஷயம்.

ஆக கம்போடியாவில் இப்படியும் ஒரு சமுதாயம் இருக்கிறது. அதே சமயத்தில் மறக்கப்பட்ட ஒரு சமுதாயமாக அல்லாடிக் கொண்டும் தடுமாறுகிறது.  இந்தக் குப்பைக் கூளத்தில் வாழும் மக்கள் எல்லாம் ஒரே இடத்தில் நிலையாகத் தங்குவது இல்லை. ஓர் இடத்தில் குப்பைகள் அளவுக்கு மீறி நிறைந்து விட்டால் வேறு ஓர் இடத்திற்கு மாறிப் போய் விடுகிறார்கள். பாலைவன நாடோடிகள் மாதிரி குப்பைவன நாடோடிகள்.

பொதுவாக இவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம் மாறுகிறார்கள். இவர்களின் குழந்தைகள் 3 லிருந்து 15 வயதிற்குள் இருக்கிறார்கள். எப்போதும் புன்னகை சிந்தியாவாறு சிரித்துக் கொண்டே போகிறார்கள். வருகிறார்கள். 
அதுதான் அதிசயமாக இருக்கிறது. ஓமார் ஹவானா அங்கலாய்த்துப் கொள்கிறார். என்னையும் சேர்த்துதான். அங்கோர்வாட் போய் இதைப் பார்க்காமல் வந்து இருக்கிறோமே என்று வேதனைப் படுகிறேன்.

குப்பைக் குன்றுகளில் வாழும் சாமான்ய ஏழைகள்

முதன்முதலில் அங்கே போகிறவர்களுக்கு அமில நெடி தொண்டைக் குழியை அறுத்துப் போடும். அப்புறம் அழுகை முட்டிக் கொள்கிறது. மூச்சு திணறிப் போகிறது. நெஞ்சு அடைத்துக் கொள்கிறது. கண்ணீர் வழிந்து ஊற்றுகிறது. போகப் போக ஒரு சில நாட்களில் அவை எல்லாம் சரியாகிப் போகிறதாம். இப்படிச் சொல்கிறார் ஓமார் ஹவானா.
அங்கே ஒரு சிறுவனைப் பார்த்தார். அவன் ஒரு பிளாஸ்டிக் பையில் இருந்து இரத்தத்தை எடுத்து வந்து அவரிடம் காட்டினான். ‘ஏன் கம்போடியா நாட்டில் உள்ளவர்கள் புன்னகை செய்வதில்லை தெரியுமா’ என்று கேட்டான். அதற்கு அவர் தெரியாது என்று சொன்னார்.

‘நான் மட்டும் எப்போதும் புன்னகை செய்வேன். அதனால் எனக்கு அதிர்ஷ்டம் வருகிறது. இங்கே பாருங்கள்... எனக்கு இந்த இரத்தப் பை கிடைத்து இருக்கிறது. இதை நான் இன்றைக்கும் நாளைக்கும் சாப்பிடுவேன். அதனால் நாளைக்கும் நான் சூரியனைப் பார்ப்பேன்’ என்றான். ஆஸ்பத்திரியில் இருந்து தூக்கிப் போட்ட இரத்தைப் பை. அது அந்தப் பையனுக்கு இரண்டு நாளைக்கு உணவு. எப்படிங்க... கேட்க மனசு கஷ்டமாய் இல்லை.

குப்பைக் குன்றுகளில் வாழும் இந்தச் சாமான்ய ஏழைகளுக்கு நோய்த் தடுப்பாற்றல் சக்தி அதிகம். நோய்கள் வருவது ரொம்பவும் அரிது.  ஆனால் வயிற்றுப் போக்கு என்பது சர்வ சாதாரணம். இங்கே வாழும் குழந்தைகள் எப்போதுமே காலணிகள் அணிவது இல்லை. 
அதனால் வெட்டுக் காயங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. அதைப் பற்றி அவர்களும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. கீழே கிடக்கும் துணியைக் கிழித்து அப்போதே கட்டுப் போட்டுக் கொள்கிறார்கள். அதுவும் சொல்லமல் கொள்ளாமல் ஆறிப் போகிறது.

மலேசியாவில் வாழும் நாம்... பேரங்காடிகளுக்குச் சென்று நமக்கு வேண்டிய பொருட்களைத் தேடிப் பிடித்து வாங்கிக் கொள்கிறோம். ஆனால் இவர்களுக்கோ குப்பை மேடுகள் தான் ஒட்டுக்கடை... கடைத்தெரு...  மளிகைக்கடை... பேரங்காடி எல்லாம். அவர்கள் உயிர் வாழ்வதற்கு எல்லாமே குப்பை மேட்டில் இருந்து கிடைத்து விடுகின்றன.

மலேசியாவில் பிறந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள்

இந்த நேரத்தில் என் உறவினரின் பேரன் நினைவுக்கு வருகிறான். அவனுடைய தாயார் பெரிய பெரிய இரால் மீன்களை நெய்யில் வதக்கிக் கொடுப்பார். சும்மா ஒரு கடி கடித்துவிட்டு ‘தாத்தா சாப்பிடுங்க’ என்று பக்கத்தில் இருக்கும் அவனுடைய தாத்தாவிடம் கொடுத்து விடுவான். ’சாப்பிடு ஐயா’ என்று தாயார் கெஞ்சுவாள்.

அதற்காக அந்தப் பேரனை ஏசவில்லை. தாயாரையும் ஏசவில்லை. மற்ற யாரையும் ஏசவில்லை. நாம் வாழ்கின்ற வாழ்க்கை அப்படி. ஆக நாம் கொடுத்து வைத்தவர்கள். மகிழ்ச்சி அடையுங்கள். மலேசியாவில் பிறந்தவர்கள் அத்தனைப் பேரும் புண்ணியம் செய்து இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் அங்கே பாருங்கள். குப்பையிலேயே பிறந்து... குப்பையிலேயே வளர்ந்து... குப்பையிலேயே இறந்து போகும் பிள்ளைகள். மனசிற்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. 
உண்மையிலேயே மலேசியா ஒரு சொர்க்க பூமி. இந்த மண்ணில் பிறந்ததற்காக நாம் உண்மையிலேயே கொடுத்து வைத்து இருக்க வேண்டும். மறுபடியும் சொல்கிறேன்.

அங்கு வாழும் அவர்களுக்கு வாழைப் பழம் கிடைத்தால் புதையல் கிடைத்த மாதிரி. மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஏன் என்றால் வாழைப் பழத்திற்கு மேலே தோல் இருக்கிறது. அதனால் உள்ளே இருப்பதும் சுத்தமாக இருக்கிறது என்கிறார்கள்.

சியாம் ரியாப் நகரில் இருந்து குப்பைகள் வருகின்றன. அந்த நகரில் சாதாரண விடுதிகளில் இருந்து ஆடம்பரமான ஐந்து நட்சத்திர தங்கும் விடுதிகள் வரை ஏராளம் உள்ளன.

உலகத் தரம் வாய்ந்த விடுதிகளில் ஒரு நாள் தங்குவதற்கு கட்டணம் 4,500 ரிங்கிட் வரை போகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சியாம் ரியாப்பிற்கு நான் போய் இருந்தேன். நான் தங்கியது 150 ரிங்கிட் விடுதி. அதுவே பெரிய சொர்க்கமாக எனக்குத் தெரிந்தது. காலையில் இலவசமாக பசியாறல். 24 மணி நேரத்திற்கும் குளிர்சாதன வசதி. தொலைக்காட்சி. இணைய வசதி. இன்னும் பல வசதிகள்.

அஞ்சு காசிற்கு அல்லல்படும் அன்றாடம் காய்ச்சிகள்

இருந்தாலும் மற்றவர்களுக்கு... அதாவது கையில் காசு இருப்பவர்களுக்கு இந்த இடம் வேறு மாதிரி. அவர்களைப் பொருத்த வரையில் கண்ட கண்ட வகையறாக்களுக்குச் சுகம் காணும் இடம். புரியும் என்று நினைக்கிறேன். எல்லாரையும் சொல்லவில்லை. ஆக அதே சியாம் ரியாப்பில் அஞ்சு காசிற்கும் பத்து காசிற்கும் அல்லல்படும் அன்றாடம் காய்ச்சிகளும் இருக்கிறார்கள். அற்றைக் கூலிகளாகவும் வாழ்கிறார்கள்.  

அழுக்கும் அவலமும் குவிந்துக் கிடக்கும் அந்தச் சின்ன உலகில் பரம ஏழைகளாக வாழ்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் வாழும் உலகம் புன்னகைப் பூக்கள் நிறைந்த உலகம். அநியாயம், அக்கிரமம், அட்டூழியம், நம்பிக்கைத் துரோகம், பச்சைப் பசப்பு வார்த்தைகள் இல்லாத நல்ல ஓர் அழகிய உலகம்.

நாளைக்கும் சூரியன் வரும் என்று நம்பிக்கையோடு வாழ்கிறார்கள். அவர்களிடம் தெய்வம் நின்று பேசுகிறது. 

இங்கே சிலர் மிச்சம் மீதி உணவுப் பொருட்களை அப்படியே சட்டியோடு வழித்துக் கொண்டு போய் சாக்கடையில் கொட்டுகிறார்கள். எப்பொழுதும் சாப்பிட்டு விட்டு, முப்பொழுதும் காற்றடித்த பொம்மைகளாக வாழ்கிறார்கள்.

சாப்பிடும் சோற்றைத் தெய்வமாக நினைக்க வேண்டும்

கல்யாணம் காட்சிக்குப் போனால் கிடைக்கிறதை எல்லாம் மங்கில் போட்டுக் கொட்டிக் கொள்வது. தின்றும் தீர்க்காமலும் அப்படியே கொண்டு போய் தொட்டியில் கொட்டுவது. அது பாவமாக அவர்களுக்குத் தெரியவில்லையா. இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கின்றனர் என்று நினைத்துக் கொள்வதும் உண்டு. அவர்களைப் பார்த்து மேலே இருக்கும் ஆகாயக் கங்கையும் சிரிக்கிறது. பக்கத்தில் இருக்கும் சப்தரிஷியும் சிரிக்கின்றது.

நாம் சாப்பிடும் சோற்றைத் தெய்வமாக நினைக்க வேண்டும். அநியாயமாக அதை வெளியே கொட்டினால், அந்தப் பாவம் நம்மைச் சும்மா விடாது. ஏழு எட்டு ஜென்மங்களுக்கு நரகத்திற்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து விடும். ரொம்ப பேருக்கு இது தெரியாதுங்க.

சாப்பிடும் சோற்றுக்குப் பயபக்தியுடன் மரியாதை கொடுங்கள். அதை மரியாதையாக நினையுங்கள். அப்புறம் தான் அன்னலட்சுமி வருவாள்! மகிழ்ச்சி அடைவாள். வீட்டில் என்றைக்கும் சோறு பொங்கும். தெய்வத்தைத் தேடி கோயிலுக்குப் போக வேண்டாம். சாப்பிடுவதற்கு முன்னால் நமக்கு முன்னே இருந்து நம்மைப் பார்த்துப் புன்னகை பூக்கிறதே சாதம்... அதுதாங்க முதல் தெய்வம். அதை முதலில் கும்பிடுங்கள். இது ஒரு சத்தியமான வார்த்தை!

2 comments:

  1. மனதைப் பிசையும் உண்மை நிலை. வலிக்கிறது. சோழர்கள் கோலோச்சிய பூமி. தங்கத்தால் கூரை வேயப்பட்டிருந்த அங்கோர்வாட் கோயில் இருந்த இடம். இப்ப கோயில் மட்டுமே. வளமான பூமியில் பிரெஞ்சு காலனியவாதிகள், வியட்நாம் மற்றும் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள், பின்னர் உள்நாட்டு போல் போட் சர்வாதிகார ஆட்சி. பாவம் மக்கள். நம் இந்திய தமிழக நிலையைவிட பின் தங்கிய நிலை. நல்லதொரு தலைவர் விரைவில் கிடைப்பார் என நம்புவோம். சோழர் பூமி செழிக்கட்டும். மிக பயனுள்ள கட்டுரை வாழ்த்துக்கள், தொடருங்கள்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு
    காலம் பதில் சொல்லும்

    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    ReplyDelete