08 ஜனவரி 2020

மஸ்லீ மாலிக் வந்தார் வென்றார் சென்றார்

தமிழ் மலர் - 07.01.2020

பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்று தான். வறுமை வரும் செழுமை வரும் வாழ்க்கை ஒன்று தான். இந்தத் தத்துவ வரிகளுக்கு இப்போதைக்கு மிகப் பொருத்தமான மனிதர் மஸ்லீ மாலிக். முன்னாள் மலேசிய கல்வியமைச்சர். மிகச் சின்ன வயதில் மிகப் பெரிய பொறுப்பை வகித்தவர். வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை.



சுனாமி பேரலைகள் சொல்லாமல் கொள்ளாமல் வரும். ஆனால் கொல்லாமல் கொள்ளாமல் விட்டுப் போவது இல்லை என்று சொல்வார்கள். பல்லாயிரம் உயிர்களைப் பலி கொண்டு விட்டு பல்லாயிரம் சுவடுகளை விட்டுச் செல்லும்.

அதே போலத் தான் மஸ்லீ மாலிக் என்பவர் வந்தார். பற்பல தாக்கங்களை விட்டுச் சென்று விட்டார். தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர். அன்பானவர் இனிமையானவர். நகைச்சுவை மிக்கவர். நல்ல சில திட்டங்களைக் கொண்டு வந்தவர்.

ஆசிரியர்களின் எழுத்துப் பணிச் சுமைகளைச் சற்றே குறைத்தவர். ஆசிரியர்கள் வட்டாரத்தில் நல்ல பெயர் எடுத்தவர். இருந்தாலும் கறுப்புக் காலணி அமைச்சர் என்று பட்டப் பெயருடன் விலகிச் செல்வது தான் வருத்தமான செய்தி. அவரைப் பற்றித் தான் இன்றைக்கும் பேசிக் கொண்டு இருக்கிறோம்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன். அந்த வகையில் மஸ்லீ மாலிக் என்பவரையும் அவருடைய அதிரடித் திட்டங்களையும் மலேசியர்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள்.

மஸ்லீ மாலிக் சொந்தமாகவே பதவி விலகிச் சென்றாரா? இல்லை பதவி விலகச் சொல்லி வற்புறுத்தப் பட்டாரா? அதைப் பற்றித் தான் இந்தக் கட்டுரை ஆராய்கின்றது.

மலேசிய அமைச்சரவையில் நிதியமைச்சு; கல்வியமைச்சு; உள்துறை அமைச்சு; வெளியுறவு அமைச்சு; தற்காப்பு அமைச்சு  போன்றவை மிக மிக முக்கியமான அமைச்சுகள். பொதுவாகவே கல்வியமைச்சராக இருந்தவர்களுக்கு பிரதமராகவும் வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கும்.

துன் ரசாக், துன் உசேன் ஓன், துன் மகாதீர், துன் அப்துல்லா படாவி, டத்தோ நஜீப் போன்றவர்கள் கல்வியமைச்சராக இருந்தவர்கள். பின்னர் பிரதமர் ஆனவர்கள். அதற்கு முன் மலேசியாவில் யார் யார் கல்வியமைச்சர்களாக இருந்தார்கள். அதையும் பார்ப்போம்.

1. துன் அப்துல் ரசாக் - Abdul Razak Hussein (1952 - 1957)

2. டான் ஸ்ரீ முகமட் கிர் ஜொஹாரி - Mohamed Khir Johari (1957 - 1960)

3. அப்துல் ரஹ்மான் தாலிப் - Abdul Rahman Talib (1960 - 1962)

4. அப்துல் அமீட் கான் - Abdul Hamid Khan (1962 - 1964)

5. அப்துல் ரஹ்மான் தாலிப் - Abdul Rahman Talib (1964 - 1965)

6. டான் ஸ்ரீ முகமட் கிர் ஜொஹாரி - Mohamed Khir Johari (1965 - 1969)

7. டான் ஸ்ரீ ரஹ்மான் யாக்கோப் - Abdul Rahman Ya'kub (1969 - 1970)

8. துன் உசேன் ஓன் - Hussein Onn (1970 - 1973)

9. டான் ஸ்ரீ முகமட் யாகோப் - Mohamed Yaacob (1973 - 1974)

10. துன் மகாதீர் முகமட் - Mahathir Mohamad (1974 - 1978)

11. துன் மூசா ஈத்தாம் - Musa Hitam (1978 - 1981)

12. டான் ஸ்ரீ சுலைமான் டாவூட் - Sulaiman Daud (1981 - 1984)

13. துன் அப்துல்லா படாவி - Abdullah Ahmad Badawi (1984 - 1986)

14. டான் ஸ்ரீ அன்வார் இப்ராகிம் - Anwar Ibrahim (1986 - 1991)

15. டான் ஸ்ரீ சுலைமான் டாவூட் - Sulaiman Daud (1991 - 1995)

16. டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் - Najib Razak (1995 - 1999)

17. டான் ஸ்ரீ மூசா முகமட் - Musa Mohamad (1999 - 2004)

18. டத்தோ ஸ்ரீ ஹிசாமுடின் உசேன் - Hishammuddin Hussein (2004 - 2009)

19. டான் ஸ்ரீ சாபி சாலே (உயர்க்கல்வி அமைச்சர்) - Shafie Salleh (2004 - 2005)

20. டத்தோ ஸ்ரீ முஸ்தபா முகமட் (உயர்க்கல்வி அமைச்சர்) - Mustapa Mohamed (2006 - 2008)

21. டத்தோ ஸ்ரீ காலிட் நோர்டின் (உயர்க்கல்வி அமைச்சர்) - Mohamed Khaled Nordin (2008 -2013)

22. டான் ஸ்ரீ முகாயிதீன் யாசின் (கல்வி அமைச்சர்) - Muhyiddin Yassin (2009 - 2015)

23. டத்தோ இட்ரிஸ் ஜுசோ (கல்வி அமைச்சர் 2) - Idris Jusoh (2003 - 2015)

24. டத்தோ ஸ்ரீ மாட்சிர் காலிட் - Mahdzir Khalid (2015 2018)

25. டத்தோ இட்ரிஸ் ஜுசோ (உயர்க்கல்வி அமைச்சர்) - Idris Jusoh (2015 - 2018)

26. மஸ்லீ மாலிக் - Maszlee Malik (2019 - 2020)

மேற்காணும் பட்டியலில் ஒரே ஒருவருக்கு மட்டும் எந்த விருதும் இல்லை. பட்டம் விருது எதுவும் இல்லாமல் வந்தார். அதே போல போகும் போதும் பட்டம் விருதுகள் எதுவும் இல்லாமல் வெளியேறி விட்டார். அவர் தான் மஸ்லீ மாலிக்.

பிரதமர் கேட்டுக் கொண்டதால் தான் கல்வி அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியதாக மஸ்லீ மாலிக் கூறுகிறார். அமைச்சரவை முடிவுகளுக்கு எதிராக நடந்து கொண்டதால் தான் அவரைப் பதவி விலகும்படி பிரதமர் உத்தரவு இட்டார் என மலேசியன் இன்சைட் எனும் இணைய ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

2019 டிசம்பர் 27-ஆம் தேதி பிரதமர் இலாகாவில் இருந்து ஒரு கடிதம் மஸ்லீ மாலிக்கிற்கு அனுப்பப் பட்டது. அப்போது அவர் அமெரிக்காவில் தன் குடும்பத்தினருடன் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டு இருந்து இருக்கிறார்.

பள்ளிகளுக்கான இலவச இணையச் சேவை; தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி மொழியைக் கற்பித்தல்; பள்ளி மாணவர்களுக்கான இலவசக் காலை உணவு போன்ற விசயங்களில் அமைச்சரவையின் முடிவுகளை மஸ்லீ முறையாகச் செயல்படுத்தத் தவறி விட்டார் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அந்தக் கடிதத்தின் இறுதிப் பகுதியில் “அமைச்சரவையில் இருந்து விலகிக் கொள்வதற்குப் பொருத்தமான நேரம்” என மகாதீர் தெரிவித்து இருக்கிறார்.

கடந்த 02.01.2020 மஸ்லீ மாலிக் தன் பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தார். அவர் 20 மாத காலம் அமைச்சுப் பொறுப்பில் இருந்தார். சில பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்து இருந்தார். இருந்தாலும் எதிர்மறையான ஊடக விமர்சனங்களால் பலிகடா ஆக்கப் பட்டார் என்பது தான் நிதர்சனமான உண்மை.

இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஜாவி வனப்பெழுத்து பிரச்சினையும் டோங் சோங் பிரச்சினையும் மலேசியாவில் உச்சக் கட்டத்தில் போய்க் கொண்டு இருக்கின்றன. அவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டியவர் அவர். ஓர் அமைச்சர்.

ஆனால் அவர் அமெரிக்காவில் விடுமுறையைக் கொண்டாடி இருக்கிறார். இங்கே அந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கண்டுவிட்டுப் போய் இருக்கலாம். சரி.

அவர் சொல்கிறார். பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது மீது தமக்கு எந்த வகையிலும் மன வருத்தம் இல்லை. பொறுப்பில் இருந்த காலத்தில் அஞ்சியதும் இல்லை. பதவி துறந்ததால் செத்துப் போகவும் இல்லை.

நான் ஓர் அரசியல்வாதி அல்லன். கல்வியமைச்சர் பதவிக்காக நான் யாரிடமும் பிரச்சாரம் செய்தது கிடையாது. பிரதமர் மகாதீரை ஒரு தகப்பன் நிலையில் வைத்துப் பார்த்தேன் என்று மஸ்லீ மாலிக் கூறி இருப்பதையும் நினைவு படுத்துகிறேன்.

கடந்த 20 மாதங்களில் மஸ்லீ மாலிக் பற்பல இடக்கு முடக்கான பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டார். அனைத்தும் கல்வித்துறை தொடர்பானவை.

2018-ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது கல்வியமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு பிரதமர் மகாதீர் முன் வந்தார். அவருடைய பெயர் தான் குறிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொது மக்களிடம் இருந்து அதிருப்திகள்.

பிரதமராக இருப்பவர் வேறு எந்த அமைச்சர் பதவியையும் வகிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பக்காத்தான் கட்சியின் தேர்தல் கொள்கை அறிவிப்பில் சொல்லப்பட்டு இருந்தது. அதன் பின்னர் கல்வியமைச்சர் பொறுப்பு மஸ்லீ மாலிக்கிடம் வழங்கப் பட்டது.

மஸ்லீ மாலிக் 1974 டிசம்பர் 19-ஆம் தேதி ஜொகூர் பாருவில் பிறந்தவர். இவருடைய் தாயார் சீனச் சமூகத்தின் ஹக்கா (Hakka Chinese) வம்சாவளியைச் சேர்ந்தவர். மஸ்லீ மாலிக், ஜொகூர் அபு பாக்கார் கல்லூரியில் படித்தார். ஜோர்டான் அல் பாயாட் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டவியல் துறையில் மாஸ்டர் பட்டம் பெற்றார். (Islamic Jurisprudence from University of Al-Bayt, Jordan)

இங்கிலாந்தில் உள்ள டர்காம் பல்கலைக்கழகத்தில் (Durham University) முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் (International Islamic University Malaysia) விரிவுரையாளராகப் பணி புரிந்தார்.

இவர் ஒரு பன்மொழிக் கலைஞர். மலாய், அரபு, ஆங்கில மொழிகள் அவரின் பிரதான மொழிகள். தவிர பிரெஞ்சு, ஜெர்மன், மாண்டரின் மொழிகளில் நன்றாகப் பேசக் கூடியவர்.

2018 மார்ச் மாதம் பெர்சத்து (BERSATU) கட்சியில் இணைந்தார். இந்தக் கட்சி பக்காத்தான் கூட்டணியில் ஓர் உறுப்புக் கட்சியாகும்.

2018 பொதுத் தேர்தலில் சுங்கை ரெங்கம் தொகுதியில் நின்றார். அந்தத் தொகுதி ஏற்கனவே லியாங் தெக் மெங் (Liang Teck Meng) எனும் கெராக்கான் கட்சிக்காரரின் கோட்டையாகும். 2018 தேர்தல் சுனாமியில் பல கோட்டைகள் சரிந்தன. அதில் சுங்கை ரெங்கம் (Simpang Renggam) கெராக்கான் கட்சியின் கோட்டையும் ஒன்றாகும்.

அதன் பின்னர் மஸ்லீ மாலிக் மலேசியாவில் கல்வியமைச்சர் ஆனார். அவர் பதவிக்கு வரும் போது அவருக்கு வயது 42. பெரிய பொறுப்பு சின்ன வயது.

மலேசியப் பள்ளிகளில் கறுப்புக் காலணிகளை அமல்படுத்தும் திட்டம் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. அதற்குப் பதிலாக வேறு சில முக்கியமான, அத்தியாவசியமான கல்வித் திட்டங்களில் கவனம் செலுத்தி இருக்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் “கறுப்புக் காலணி அமைச்சர்” (black shoes minster) எனும் சிலேடை பெயரைப் பெற்றுக் கொண்டது தான் மிச்சம்.

மெட்ரிகுலேசன் விசயத்திலும் அவர் பிடிவாதம் காட்டினார். பூமிபுத்ரா மாணவர்களுக்கு 90% என்பதில் விடாப்பிடியாக இருந்தார்.

மலேசியா பாரு (புதிய மலேசியா) அமலாக்கத்தில் மெட்ரிகுலேசன் ஒதுக்கீடு முறை தேவை இல்லை. பூமிபுத்ராக்களுக்கு மாண்டரின் தெரியாத காரணத்தினால் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது என்றும் கூறினார்.

இனம் சார்ந்த கொள்கைகளில் இருந்து பக்காத்தான் கூட்டணி விலகி இருக்க வேண்டும் எனும் நம்பிக்கையில் தான் மக்கள் அந்தக் கூட்டணிக்கு வாக்கு அளித்தார்கள். ஆனால் மஸ்லீ மாலிக்கின் இனவாதச் செய்திகள் பொதுமக்களின் பார்வையில் சந்தேகத்தை எழுப்பின. அதனால் அவர் பதவி விலக வேண்டும் என்று இணையம் வழியாக நெருக்குதல்களும் கொடுக்கப் பட்டன.

அடுத்து ஜாவி வனப்பெழுத்து. இது மஸ்லீயின் மற்றும் ஒரு சர்ச்சைக்குரிய முயற்சி. மலாய் மொழி பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக சீன, தமிழ்ப் பள்ளிகளில் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு ஜாவி கையெழுத்தைக் கற்பிக்கலாம் எனும் புதிய திட்டம்.

ஆறிப் போன பழைய திட்டம் தான். சிறுபான்மை இனங்களிடம் வரவேற்பு பெறாதத் திட்டம். மகாதீர் முன்னர் பிரதமராக இருந்த போது இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்த முடியாமல் போனது. பலருக்கும் தெரியும்.

அடுத்து பெர்லிஸ் பல்கலைக்கழகத்தின் (UniMAP) கேள்வித் தாள் சர்ச்சை. 2019 டிசம்பர் 19-ஆம் தேதி ஸக்கீர் நாயக் ஓர் உலக மேதை என்று கேள்வி தயாரித்து பிரச்சினைக்கு உள்ளானது. அப்புறம் இந்தியர்கள் கறுப்புத் தோல்காரர்கள் எனும் மற்றொரு கேள்வி. இந்த விசயங்களில் இருந்து கல்வியமைச்சு தெரிந்தும் தெரியாதது போல கை கழுவிக் கொண்ட விசயம் பெரும் கொந்தளைப்பை ஏற்படுத்தி விட்டது.

மலேசியப் பள்ளிகளில் இலவச இணையச் சேவை என்று பெஸ்தாரி நெட் நிறுவனத்தில் கைவைத்தது. இப்படியே நிறையவே சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டார். இவர் செய்த நல்ல காரியங்களைவிட சர்ர்ச்சைக்குரிய விசயங்கள் தான் அதிகம்.

அதனால் இந்திய சீன வம்சாவளியினரின் அதிருப்திகளைப் பரிசாகப் பெற்றுக் கொண்டார். அடுத்து யார் கல்வியமைச்சராக வருவார். இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. மன்னிக்கவும். பில்லியன் டாலர் கேள்வி.

இப்போது எல்லாம் மில்லியன் என்பதற்கு மவுசு இல்லாமல் போய் விட்டது. ரோசாப்பூ ரோசம்மாவின் பேச்சு வழக்கில் நாமும் பயணிக்க வேண்டிய பில்லியன் டிரில்லியன் காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான். உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான். மஸ்லீக்குப் பின்னர் கல்வியமைச்சராக யார் வந்தாலும் மலேசியக் கல்விக் கொள்கைகளில் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. மலேசிய இந்தியர்கள் காலா காலத்திற்கும் போராட வேண்டியது மலேசிய வரலாற்றில் எழுதப் படாத சாசனம். அவர்களின் உரிமைகளுக்காகப் போராட வேண்டியது அவர்களின் எழுதப்பட்ட தலையெழுத்து.

05 ஜனவரி 2020

ஈப்போ ஜி.சரோஜினி - மலேசியச் சாதனைப் பெண்மணி

தமிழ் மலர் - 05.01.2020

மலேசியத் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளில் வானுயர்ந்து நிற்கும் மாந்தர்கள் பலர். மேதினிக் கலசங்களாய் மெல்லிசை பாடும் சாதனைச் சேவகர்களாய்ப் பலர். சமூகச் செம்மல்களாய் வையகம் போற்றும் நிதர்சன மலர்களாய்ப் பலர். அவர்களில் செய்கழல் தாரகை ரஞ்சிதங்களாய்ச் சிலர். 



அவர்களிலும் சிலர் தழையும் கண்ணியும் தண்நறு மாலையுமாய் சத்துவ குணங்களைப் பார்க்கின்றனர். சமநிலைச் சிந்தனைகளை வாரி இறைத்து நல்வழி காண்கின்றனர். வாழ்க்கை வழிகாட்டல்களில் தன்னிறைவு அடைகின்றனர்.

அப்படியே நிறைமொழி மாந்தர்களாய்ச் சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் புனித எண்ணங்களின் புண்ணிய திருக்கோலங்கள். அந்தக் கோலங்களில் தான் சத்தியத்தின் நியாயம் சாணக்கியம் பேசுகின்றன.

அந்த வகையில் அன்னைத் தமிழுக்குத் தலைவாசல் அமைத்து, அதற்கு அழகுச் சாளரங்கள் கட்டி, சிந்து பைரவி பாடிய ஒரு தமிழ்ப் பெண்ணை  அறிமுகம் செய்கின்றோம். 



உயிரோட்டமான சமூகச் சேவைகள். ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு உணர்வுகள். தமிழ் அன்னைக்கு மதிப்பு மரியாதைகளை அள்ளி இறைத்தவர்.

அவர்தான் குருசேவா ரத்னா  சரோஜினி ராஜரத்தினம். மலேசியா கண்டெடுத்த ஒரு தங்கப் பெண். பேராக் மாநிலம் கண்டெடுத்த ஒரு வெள்ளிப் பேரிகை.

கண்ணியமான சேவைப் பண்பு நெறிமுறைகளைத் தக்க வைத்தவர். அரசியல், கல்வி, இனம், மொழி, சமயம் என பல்வகைச் சேவைக் கூறுகளிலும், தன்னிகரற்றத் தலைவராய்த் திகழ்ந்தவர்.

தமிழர்ச் சமூகச் சேவையின் வளர்ச்சியில் புதிய அணுகுமுறைகளை நகர்த்திக் காட்டியவர்.


பொதுவாகவே சரோஜினி ராஜரத்தினம் என்பவர் மலேசியச் சமூகச் சேவை பார்வையில், பல்லாயிரம் மனங்களில் நிறைந்து நிற்கின்றார். அங்கே  ஒரு கங்கையாகவும் ஒரு காவேரியாகவும் அனைவரையும் அணைத்து அழைத்துச் செல்கின்றார்.

சமூக சேவகி என்கிற குணநலன்களைத் தன்னகத்தே பதித்துக் கொண்ட ஓர் அன்னையின் மறுவடிவத்தை அங்கே காண்கின்றோம். அந்தச் சாரலின் தூறல்களில் அவரை மனதார வாழ்த்துகின்றோம்.

அவரின் அயராத சமூகச் சேவைகளையும் தளராத தன்முனைப்புத் தூண்டுதல்களையும் தமிழ்கூறும் நல்லுகம் என்றென்றும் நினைத்துப் பார்க்கும். 



அன்னாரின் சீரிய செயல் ஆற்றல்களைச் சிறப்பிக்கும் வகையில் அனைத்துலக ரீதியில் பற்பல விருதுகளைப் பெற்றவர்.

மலேசியத் தமிழர்ச் சரித்திரச் சாதனை பெண்மணி சரோஜினி

பேராக் மாநிலத்தின் சமூக சேவை, கலை, இலக்கியத் துறைகளின் பெண்மணிச் செம்மல்

மலேசிய இந்தியர்களின் மாதர்குல மாணிக்கம்

தென்கிழக்காசியச் சமூக மேம்பாட்டுச் சாதனைப் பெண்

ஆசிய நாடுகளின் முன்னோடி சாதனைப் பெண்மணி

அனைத்துலகச் சமூக சேவை ப்பெண்மணி

இப்படி பற்பல விருதுகள். பற்பல பரிசுகள். பற்பல புகழாரங்கள்.



1970-ஆம் ஆண்டுகளில் இருந்து இது வரையிலும் மலேசிய தெய்வீக வாழ்க்கை சங்கத்தில் அர்ப்பணித்துக் கொண்டவர். சமயம் சமூகம் தெய்வீகம் என தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை அறப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டவர்.

அவரைப் பாருங்கள். லேசாய் சுருக்கங்கள் விழுந்த முகம். அதில் லேசாய் தெரிகின்ற மலர்ச்சி. கண்களைச் சுருக்கி உற்று நோக்கும் இளமையின் பரவசம். வானில் திரண்ட மழை மேகங்கள், பூமிக்கு மெதுவாய்ப் பரிசளிக்கும் வெள்ளி மணித் தூறல்கள் போல சின்னதாய்ப் புன்னகை. அதுவே பெரும் பொன்னகை.

வறட்சியாய் இருக்கும் விளை நிலத்தில் உயிர் நீராய், ஜீவ அமுதமாய் விழுகின்ற மழைச் சாரல் போல அந்தப் புன்னகை அழுத்தமாய்ப் பரிணமிக்கின்றது. 



அப்புறம் அதற்கு மேலும் மகிழ்ச்சியும் பரவசமும் கலந்த புன்னகைத் தூரல்கள். இந்த நிமிடம் இதைவிட சந்தோஷம் எதுவுமே வேண்டாம் என்கிற நிறைவின் பிரதிபலிப்புகளில், மலர்ச்சியின் மனிதச் சாரல்கள். கண்களில் கசிகின்ற கருணை நேயங்கள். அத்தனையும் மனித நேயத்தின் மறுபக்கங்கள்.

அவருக்கு நிறையவே புகழ்மாலைகள். அந்தப் புகழ்ச்சியில் பந்தா இல்லை. பணம், படிப்பு, புகழ், அந்தஸ்து இவற்றை எதையும் பார்க்காத நல்ல ஒரு பெண்மணி.

மலேசிய இந்தியர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பெண்மணி. இவரை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

நிறையவே சமூகச் சேவைகள் செய்தவர். பலருக்கும் தெரியாமல் இருந்து இருக்கிறார். அவரை நான் சந்தித்தும் வியந்து போனேன். 



இப்படி பல அரிய சமூகச் சேவைகள் செய்தவர் எவருக்கும் தெரியாமல் இருந்து இருக்கிறாரே என்று மலைத்தும் போனேன். இவரை தமிழ் உலகத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டும்.

அவரின் சமூகச் சேவைகளைப் பற்றி எழுதினால் ஏடு கொள்ளாது. அவற்றில் சிலவற்றை நினைவு கொள்வோம். Universal Peace Federation எனும் அனைத்துலக அமைதி இயக்கம் இவரை 2007-ஆம் ஆண்டில் அமைதித் தூதராக நியமித்தது. அதன் வழி பல நாடுகளுக்குச் சென்று அமைதிப் பரப்புரைகள் செய்து இருக்கிறார்.

அதன் பின்னர் அதே ஆண்டு டத்தோ வீரசிங்கம் தலைமையில் அவருக்கு சிறப்பு விருது நிகழ்ச்சி ம.இ.கா.வின் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டது. அந்த நிகழ்ச்சியில் அவருக்கு பேராக் மாநில தோக்கோ பெண்மணி (Tokoh Wanita Negeri Perak) எனும் சிறப்பு விருது வழங்கப் பட்டது. 



இதற்கு முன்னர் பேராக் மாநில சுல்தான் அஷ்லான் ஷாவின் சகோதரி டத்தோ ஸ்ரீ யோங் சோபியா அவர்கள் 2005-ஆம் ஆண்டில் மிகச் சிறந்த அன்னையார் (Ibu Cemerlang) எனும் விருதை வழங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பேராக் இந்திய முஸ்லீம் சங்கத்தினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

2016-ஆம் ஆண்டில் மலேசிய மணிமன்றப் பேரவை இவருக்கு ‘தங்கப் பெண்’ எனும் விருதை வழங்கிச் சிறப்பித்து உள்ளது. இவருடைய சேவைகள் பற்றியும் இவரின் தன்னார்வ முனைவுகள் பற்றியும் நாளையும் தெரிந்து கொள்வோம்.

*மலாக்கா முத்துக்கிருஷ்ணன்*

(தொடரும்)




04 ஜனவரி 2020

காஷ்மீர் சர்ச்சையில் மலேசியாவின் பனை எண்ணெய் - 1

தமிழ் மலர் - 03.01.2020

இந்தியா வாழ் மக்களின் அன்றாட உணவுப் பொருட்களில் பாமாயில் எனும் சமையல் எண்ணெய் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தேங்காய் எண்ணெய்; கடலை எண்ணெய்; சூரியகாந்தி எண்ணெய்; ஆலிவ் எண்ணெய்; மரக்கறி எண்ணெய்; எள்ளெண்ணெய் (நல்லெண்ணெய்) வகைகளின் விலை சற்றே அதிகம். உற்பத்தியும் மிதமாகவே உள்ளது. 




அதற்குப் பதிலாக மலேசியாவின் பனை எண்ணெயை (Palm oil) அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். பாமாயில் எனும் சொல் இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப் படுவதால் இந்தக் கட்டுரையில் பாமாயில் எனும் சொல்லையே பயன்படுத்துகிறோம்.

உலகிலேயே அதிகமாகச் சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஆண்டுதோறும் சமையலுக்கும் மற்ற பயன்பாடுகளுக்கும் 9 மில்லியன் டன் பனை எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்தோனேசியா; மலேசியா ஆகிய இந்த இரு நாடுகளில் இருந்து தான் அதிமாகவே இறக்குமதி செய்கிறது.

2019 ஜனவரி - அக்டோபர் மாதங்களில், 4 மில்லியன் டன் மலேசிய பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்து இருக்கிறது. அந்த வகையில் மலேசியாவின் பாமாயிலை அதிகமாக வாங்கிய நாடு இந்தியாவாகும். 



மலேசியாவில் இந்தியா இறக்குமதி செய்த பாமாயில் புள்ளி விவரங்களைத் தருகிறேன். 2018-ஆம் ஆண்டைவிட 2019-ஆம் ஆண்டில் 100% கூடுதலாக மலேசியாவின் பாமாயிலை இந்தியா வாங்கி இருக்கிறது.

உலக நாடுகளுக்கு மலேசியா எண்ணெய் பனை ஏற்றுமதி (இந்தியா மட்டும்)

(மெட்ரிக் டன்கள்)

நாடு    ஜனவரி – நவம்பர் 2019   

இந்தியா    4,270,864

ஜனவரி – நவம்பர் 2018

இந்தியா    2,229,830



இந்தியாவின் சமையல் எண்ணெய் வகையில் அதிக அளவில் இறக்குமதி செய்யப் படுவது பாமாயில் ஆகும். மலேசியாவில் இருந்துதான் அதிக அளவில் பாமாயில் இறக்குமதி செய்யப் படுகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு, பாமாயில் சார்ந்த  பொருட்கள் மட்டும் மலேசியாவில் இருந்து 163 இலட்சம் கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் மலேசியாவின் எண்ணெய் வர்த்தக நாடுகளில் இந்தியா முதலிடம் வகித்து வந்தது. இப்போது இல்லை. அந்த இடத்தை வேறு ஒரு நாடு எடுத்துக் கொண்டு விட்டது. மன்னிக்கவும்.

இந்தியாவின் காஷ்மீர் விவகாரத்தில் மலேசியா தலையிட்டதால் இரு நாடுகளின் வாணிக உறவுகள் சற்றே பாதிப்பு அடைந்து உள்ளன. சரி செய்யக் கூடிய உறவுகள் தான். சமாதானமாகப் பயணிக்க வேண்டிய உறவுகள் தான். 




இந்தியாவும் மலேசியாவும் பல நூற்றாண்டுகளாக நட்பு நாடுகளாகப் பயணித்து இருக்கின்றன. பற்பல பின்னடைவுகளைச் சந்தித்து இருகின்றன. இருந்தாலும் நல்ல உறவுடன் தோழமை பாராட்டி வந்து உள்ளன. எதிர்காலத்தில் நல்லதே நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்.

கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது (விதி எண் 370). மேலும் காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப் பட்டன.   

இதனால் காஷ்மீரில் கட்டுக்கு அடங்கா கலவரங்கள். அவற்றைத் தடுக்க அங்கே கடுமையான கட்டுப்பாடுகள். இது பாகிஸ்தானுக்குப் பிடிக்கவில்லை. மனித உரிமைகள் மீறப் படுவதாக உலக நாடுகளிடம் புகார் செய்தது. பல நாடுகள் பலவிதமான கருத்துகளை முன் வைத்தன. மலேசியாவும் தன் கருத்தை முன் வைத்தது.




ஐ.நா. பொதுக் குழுவில் அதைப் ப்ற்றி பேசிய பிரதமர் மகாதீர், “இந்தியா காஷ்மீர் மீது படை எடுத்து இருக்கிறது. இராணுவத்தின் மூலமாகக் காஷ்மீரை ஆக்கிரமித்து இருக்கிறது“ என்றார். பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்து..  

மகாதீரின் அந்த ஐ.நா. பேச்சு இந்தியாவில் பெரிய ஓர் அதிருப்தி அலையை ஏற்படுத்தி விட்டது. ஏற்கனவே துருக்கி நாடு பாகிஸ்தானுக்கு இதே மாதிரி ஆதரவாக கருத்து தெரிவித்தது. அதனால் இந்தியா ஆத்திரம் அடைந்தது. அதைத் தொடர்ந்து துருக்கி நாட்டுடன் போர்க் கப்பல்கள் கட்டும் ஒப்பந்தத்தையும் உடனடியாக ரத்து செய்தது.

மகாதீரின் கருத்து இந்தியாவிற்கு எப்படி ஓர் அதிருப்தியை ஏற்படுத்தியதோ அதே போல மலேசியாவிற்கும் ஓர் அதிருப்தியான நிலைமை ஏற்பட்டது என்று சொல்லலாம்.

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவை குறைக்கும் வழிமுறைகளை இந்தியா ஆராய்ந்து வருவதாகவும் ஊடகத் தகவல்கள் கசிந்தன.




ஒரு வகையில் இந்தக் காஷ்மீர் விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான மறைமுக வர்த்தகப் போரின் தொடக்கப் புள்ளி என்றுகூட சொல்லலாம்.

அந்த வகையில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலைக் குறைக்க இந்தியா திட்டம் வகுத்தது. அதற்குப் பதிலாக இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யலாம் என முடிவும் செய்தது.

இந்திய அரசாங்கத்தின் அந்தத் திடீர் முடிவுக்கு இந்திய எண்ணெய் வர்த்தகர்கள் சங்கம் ஆதரவும் அளித்தது என்பதை நினைவில் கொள்வோம்.

அது இந்தியா கொடுக்கும் பதிலடி என்று ஒரு தரப்பு கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், 2019 அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் மலேசியாவில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய வர்த்தகர்கள் தயக்கம் காட்டினர்.




மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கான இறக்குமதி வரியை இந்தியா உயர்த்தலாம் என்று இந்திய வர்த்தகர்கள் அனுமானித்ததே அதற்குக் காரணம்.

அது மட்டும் அல்ல. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மற்ற மற்ற பொருட்களின் இறக்குமதி அளவையும் குறைப்பதற்கு இந்தியா திட்டம் வகுத்ததாகவும் சொல்லப் பட்டது.

இந்த நிலையில் மகாதீரும் விட்டுக் கொடுக்கவில்லை. காஷ்மீர் விவகாரம் குறித்த நிலைப்பாட்டில் இருந்து அவர் பின்வாங்கவும் இல்லை.

ஒரு கட்டத்தில் மகாதீர் சொன்னார்: இந்தியாவும் மலேசியாவுக்குப் பற்பல பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இது ஒரு வழி வர்த்தகம் அல்ல. இரு வழி வர்த்தகம்" என்றார்.




2019 அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி இந்திய எண்ணெய் வர்த்தகர்கள் சங்கம் ஓர் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படும் மலேசியாவில் இருந்து பாமாயில் வாங்கப் போவது இல்லை என அறிவித்தது.

சர்ச்சைக்குரிய காஷ்மீர் தொடர்பாக மலேசியாவின் பாமாயில் வர்த்தகம் ஓர் எதிர்பாராத விபத்தாக மாறியது என்றும் சொல்லலாம்.

அரசியல் என்றால் ஆயிரம் இருக்கும். காஷ்மீர் விவகாரத்தில் மகாதீர் தன்னுடைய நிலைப்பாட்டைக் கூறினார். அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை என மலேசிய ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

பாகிஸ்தான் ஒரு முஸ்லீம் நாடு. அந்த வகையில் மகாதீர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்ததில் தப்பு இல்லை என்றும் வாதிட்டார்கள்.




இதனால் இந்திய இணைய ஊடகவியலாளர்கள் கோபம் அடைந்தார்கள். மலேசியாவையும் மலேசிய நாட்டுப் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று இணையப் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவைப் புறக்கணிக்குமாறு மலேசிய இணைய ஊடகவியலாளர்களும் களம் இறங்கினார்கள். சமூக வலைத் தளங்களில் தங்களின் தாக்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

இப்படிப்பட்ட இணையப் பிரசாரங்களினால் மலேசியாவுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படப் போவது இல்லை. தவிர இந்தியத் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை என்றும் மகாதீர் கருத்து தெரிவித்தார்.




இந்தியா மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சமையல் எண்ணெயில் மூன்றில் இரண்டு பங்கு பாமாயில் எனும் பனை எண்ணெய். மலேசியாவில் மட்டும் மாதம் தோறும் 4 இலட்சத்து 33 ஆயிரம் டன் பாமாயிலை இந்தியா இறக்குமதி செய்து வந்து உள்ளது.

அதே சமயத்தில் இந்தியாவில் இருந்து பெட்ரோலியத் திரவப் பொருட்கள், இறைச்சி, உலோகம், மருத்துவ இரசாயனப் பொருட்களை மலேசியா இறக்குமதி செய்து வந்து உள்ளது. இந்த இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போரைப் பற்றி நாளையும் தெரிந்து கொள்வோம்.

(தொடரும்)

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
03.01.2020

1. http://mpoc.org.my/monthly-palm-oil-trade-statistics-2019/

2. https://www.bbc.com/tamil/global-50061544

3. https://www.patrikai.com/indian-oil-merchants-decided-to-boycott-purchase-of-palm-oil-from-malaysia/







02 ஜனவரி 2020

ஜாகிர் நாயக் மேதையா?

பல்கலைக்கழகக் கேள்வித் தாள் சர்ச்சை - 2

தமிழ் மலர் - 02.01.2019

மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகத்தின் இன உறவு பாடத் தேர்வுத் தாளில் (Universiti Malaysia Perlis; Ethnic Relations Course) ஜாகிர்  நாயக் பற்றிய கேள்வி.

அந்தக் கேள்வியில் ஜாகிர் நாயக் இஸ்லாமிய உலகின் ஒரு சின்னம் (உலகின் மேதை) எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. (Zakir Naik is one of the icons of the Islamic world) 



அத்துடன் அவர் உண்மையான இஸ்லாத்தைப் பரப்புவதிலும்; போதனைகளைப் பின்பற்றுவதிலும் மிகவும் சுறுசுறுப்பானவர். அவரிடம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் அவர் நியாயப் படுத்தவும் முடியும். பதில் அளிக்கவும் முடியும்.

இருப்பினும் மலேசியாவில் அவர் தன்னுடைய பிரசாரத்தை வழங்க அனுமதிக்கப் படுவது இல்லை. இது ஏன் நடக்கிறது என்பதில் ஒரு மலேசியராக இருக்கும் உங்கள் கருத்து என்ன என்று எனக் கேட்கப்பட்டு இருந்தது. (In your opinion, as a Malaysian, why does this happen).

தேர்வு பதில்களாகக் கீழ்க்காணும் பற்பல காரணங்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பல பதில்களைத் தேர்வு செய்யலாம். அனுமதி வழங்கப் படுகிறது. (Multiple choice question allows the student to choose several answers and more than one answer can be chosen)



தேர்வு பதில்கள்:

1. மலேசியர்கள் தகவல்களைப் பெறுவதில் அக்கறை படுவது இல்லை.

(Malaysians do not bother to receive information)

2. மலேசியர்கள் உணர்ச்சி படக் கூடியவர்கள் மற்றும் எந்தக் காரணமும் இல்லாமல் அச்சுறுத்தப் படுவதாக உணர்கிறார்கள்.

(Malaysians were sensitive and feel threatened for no reason)

3. மலேசியர்கள் எந்தத் தகவலையும் சரி பார்க்காமல், கூட்டத்தைப் பின் தொடர்கிறார்கள்

(Malaysians just follow the crowd without verifying any information)

4. மலேசியர்கள் தங்கள் சொந்த மதத்தைப் பற்றி அறியாதவர்கள்

(Malaysians are ignorant about their own religion)

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக் பற்றிய இந்தக் கேள்வி பல்கலைக்கழகக் கேள்வித் தாளில் இடம் பெற்று உள்ளது. மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கி விட்டது. 



இந்தக் கேள்வியைப் பற்றி ம.இ.கா. உதவித் தலைவர் சிவராஜ் சந்திரன் தன்னுடைய பேஸ்புக் ஊடகப் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.

”இன உணர்வுகளை மதிக்காத இது போன்ற ஒரு கேள்வி ஏன் ஒரு தேர்வில் சேர்க்கப்பட்டு உள்ளது. வெவ்வேறு இனங்கள்; மதங்களைப் பற்றிய புரிதலை வளர்க்க வேண்டியது அவசியம். அப்படி இருக்கும் போது ஏன் இந்த மாதிரியான கேள்வி கேட்கப் பட்டது என்று எனக்கு புரியவில்லை” என்றும் சிவராஜ் சந்திரன் ஒரு கேள்வியை முன் வைக்கிறார்.



பின்னர் இந்த விவகாரம் சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரவியது. பலர் பலவிதமான கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றார்கள்.

ஜாகிர் நாயக் என்பவர் இஸ்லாமிய உலகின் ஒரு சின்னமாக இருக்கலாம். மிகச் சிறந்த மத போதகராக இருக்கலாம். அதில் நமக்கு மாற்றுக் கருத்துகள் இல்லை. ஆனால் மலேசியாவில் அவரைப் பற்றிய சர்ச்சைகள் தொடர்கின்றன என்பதை மட்டும் மறந்துவிட வேண்டாம். 



மலேசிய இந்திய அரசியல்வாதிகள் மீது ஜாகிர் நாயக் வழக்குகள் போடுகிறார். ஒட்டு மொத்த மலேசிய இந்தியர்களும் வந்தேறிகள் என்கிறார். மலேசிய இந்தியர்கள் இந்தியாவிற்கே திரும்பிப் போக வேண்டும் என்கிறார்.

யாருங்க இந்த மனுசர். மலேசிய இந்தியர்களைத் திரும்பிப் போகச் சொல்வதற்கு யாருங்க இவர். அப்படிச் சொல்வதற்கு இவருக்கு என்னங்க தகுதி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் அந்தப் பல்கலைக்கழகக் கேள்வி ரொம்பவும் அவசியமா. ரொம்பவும் முக்கியமா என்று கேட்கவும் தோன்றுகிறது.

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதையும் நினைவிற்கு வருகிறது.



பலகலைக்கழகத் தேர்வுத் தாளின் பதில்களில் நான்கு காரணங்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. அவற்றில் முதல் காரணம்:

1. மலேசியர்கள் தகவல்களைப் பெறுவதில் அக்கறை படுவது இல்லை.

இதற்கான பதில். இந்த நாட்டில் உள்ள இந்தியர்களும் சீனர்களும் வந்தேறிகள். அவர்கள் எங்கு இருந்து வந்தார்களோ அந்த நாட்டிற்கே திரும்பிப் போக வேண்டும் என்று சொன்னவர் ஜாகிர் நாயக். சரிங்களா.

மலேசியாவில் அடைக்கலம் தேடி வந்த ஒருவர் மலேசியர்களைப் பற்றியே தவறாகச் சொல்வது மலேசியத் தகவலா அல்லது அனைத்துலகத் தகவலா? இந்தத் தகவல் மலேசியர்களுக்குத் தெரியாத தகவலா? அல்லது மலேசியர்கள் அக்கறைப் படாத தகவலா? அல்லது மலேசிய இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் புரியாத தகவலா?

தேர்வுத் தாளின் பதில்களில் இரண்டாவது காரணம்:



2. மலேசியர்கள் உணர்ச்சி படக் கூடியவர்கள் மற்றும் எந்தக் காரணமும் இல்லாமல் அச்சுறுத்தப் படுவதாக உணர்கிறார்கள்.

இதற்கான பதில்:

ஒரு வீட்டுக்கு விருந்தாளியாக வந்தவர், அடுத்த வீட்டுச் சுவரில் ஆணி அடித்தால் அவர் சும்மா இருப்பாரா. எதிர்வீட்டுச் சன்னலில் கல்லை விட்டு எறிந்தால் அவர் சும்மா இருப்பாரா? ஜாகிர் நாயக் என்பவர் மலேசியா நாட்டுக்கு விருந்தாளியாக வந்து நிரந்தரக் குடியுரிமை பெற்றவர். ஆனால் அவர் மலேசிய குடிமகன் அல்ல.

சில மாதங்களுக்கு முன்னர் கிளந்தான் மாநிலத்தில் பிரசாரம் செய்த போது மலேசிய இந்தியர்களைப் பற்றியும் மலேசியச் சீனர்களைப் பற்றியும் தேவை இல்லாமல் பேசி இருக்கிறார். அதுவே ஒரு சர்ச்சையாகிப் போனது.

மலேசியாவில் உள்ள இந்துக்களும் இந்தியர்களும் மலேசிய நாட்டுப் பிரதமர் துன் மகாதீரை ஆதரிக்காமல் இந்தியப் பிரதமர் மோடியை ஆதரிக்கின்றனர் என்று பேசி இருக்கிறார். 



அவர் என்ன பேசினார் என்று ஸ்டார் பத்திரிகையில் வந்த செய்தி.

The Hindus here in Malaysia 6.4%. The Hindus in Malaysia get 100 times more rights ... They are half the percentage even though the number is less ... Yet the rights they get here are 100 times more than what India gives rights to the minority. So much so that they support the Prime Minister of India but not the Prime Minister of Malaysia.

(சான்று: https://www.thestartv.com/v/what-did-dr-zakir-naik-say-in-kelantan)

இப்படி பேசினால் மலேசியர்கள் ஏன் உணர்ச்சி வசப் பட மாட்டார்கள். சொல்லுங்கள்.


தேர்வுத் தாளின் பதில்களில் மூன்றாவது காரணம்:

3. மலேசியர்கள் எந்தத் தகவலையும் சரி பார்க்காமல், கூட்டத்தைப் பின் தொடர்கிறார்கள்.

இதற்கான பதில்:

கடந்த 08.08.2019 வியாழக்கிழமை கிளந்தானில் பேசும் போது தான் (ஜாகிர்  நாயக்) இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால் இந்த நாட்டிற்குச் சொந்தம் இல்லாத சீனர்களும் வெளியேற வேண்டும் என்று கருத்து கூறி இருக்கிறார்.

தொடர்ந்து அவர் பேசியது... மலேசியா முழு முஸ்லீம் நாடாக மாறியது. பிறகு சீனர்கள் வந்தார்கள். இந்தியர்கள் வந்தார்கள். பிரிட்டிஷார் வந்தார்கள். அவர்கள் புதிய விருந்தினர்கள்.

யாரோ ஒருவர் என்னை விருந்தினர் என்று அழைத்ததை நீங்கள் அறிவீர்கள். எனவே எனக்கு முன் சீனர்கள் விருந்தினர்களாக வந்தவர்கள். ஆகவே புதிய விருந்தினர் முதலில் செல்ல விரும்பினால் பழைய விருந்தினரைத் திரும்பிப் போகச் சொல்லுங்கள் என்று அவர் சொல்லி இருக்கிறார்.

அதாவது பழைய விருந்தினர்களான சீனர்கள், இந்தியர்கள் திரும்பிப் போக வேண்டுமாம். அதன் பிறகு புதிய விருந்தினரான இவர் (ஸக்கீர் நாயக்) திரும்பிப் போகிறாராம்.



மலேசியர்கள் எந்தத் தகவலையும் சரி பார்க்காமல், கூட்டத்தைப் பின் தொடர்கிறார்கள் என்று தேர்வுத் தாளின் பதில்களில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இப்போது சொலுங்கள். இவரின் இந்த மாதிரியான பேச்சைச் சரி பார்க்காமலா கூட்டத்தைப் பின் தொடர்கிறார்கள்? சொல்லுங்கள்.

தேர்வுத் தாளின் பதில்களில் நான்காவது காரணம்:

4. மலேசியர்கள் தங்கள் சொந்த மதத்தைப் பற்றி அறியாதவர்கள்.

இது என்ன சின்னப் பிள்ளைத்தனமான காரணமாக இருக்கிறது. கிண்டர்கார்டன் பிள்ளைகளுக்குத் தெரிந்த விசயம். இந்த நாட்டில் பிரச்சினைகளை உண்டாவதற்கு ஒரு காரணமாக இருக்கும் ஒரு காரணத்தை ஒரு காரணமாக அறிய முடியாமல் இருக்க முடியுமா. இதற்கு விளக்கம் தேவை இல்லை என்பது பலரின் கருத்தாக அமையும். சரி.

யார் இந்த ஜாகிர் நாயக். என்னைக் கேட்டால் இவர் நல்ல ஓர் அறிஞர். உலக அளவில் பிரபலமான இஸ்லாமிய மதபோதகர். அனைத்துலகச் சொற்பொழிவாளர். சிறந்த எழுத்தாளர். நல்ல ஆங்கிலப் புலமை.

2010-ஆம் ஆண்டுகளில் இவரின் அறிவாற்றலைக் கண்டு வியந்து போய் இருக்கிறேன். இவரை ஓர் அறிவு ஜீவியாக உச்சம் பார்த்தேன்.



அது ஒரு காலம். இப்போது எல்லாமே தலைகீழாகிப் போனது. ஜாகிர் நாயக் இந்தியாவில் பிறந்த ஓர் இந்தியர். மதத்தால் வேறுபட்டு இருக்கலாம்.

ஆனால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய இந்தியர்களின் மனம் வேதனைப் பட்டு குமுறும் அளவிற்கு நிந்தனைச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார். அதைப் பற்றி முன்கூட்டியே சொல்லி விடுகிறேன்.

மலேசியாவில் அவர் தன்னுடைய பிரசாரத்தை வழங்க அனுமதிக்கப் படுவது இல்லை என்று அந்தப் பல்கலைக்கழகக் கேள்வித் தாளில் ஒரு சொல் தொடர் வருகிறது.

மலையக மலாயா நாட்டிற்காக உழைத்து உருக்குலைந்து அனாதையாகிப் போனவர்கள் மலேசிய இந்தியர்கள். அவர்களின் நாட்டுப் பற்றை நிந்திப்பதை ஒரு சமயப் பிரசாரம் எனும் பார்வையில் ஏற்றுக் கொள்ள முடியுமா? சொல்லுங்கள்.



அதனால் ஜாகிர் நாயக் என்றதுமே மலேசிய இந்தியர்களின் மனம் வலிக்கிறது. வலிக்கும் காயத்தை மேலும் கீறினால் மேலும் வலிக்கவே செய்யும்.

ஒரு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் பல இன கலாசாரப் பின்னணிகளைக் கொண்டவர்கள்.

ஆகவே ஒரு பல்கலைக்கழகத்தில் உள்ள விரிவுரையாளர்கள் இன மத ரீதியில் அதிகமான உணர்வுகளின் தாக்கத்தில் இருக்கக் கூடாது. அந்த உணர்வுகளின் தாக்கத்தில் கல்வி போதிக்கவும் கூடாது என்பதே பொதுவான கருத்து.

சான்றுகள்:

1. https://www.freemalaysiatoday.com/category/nation/2019/12/29/varsity-exam-question-calls-zakir-naik-an-icon/

2. https://says.com/my/news/controversy-erupts-after-zakir-naik-appeared-in-a-university-exam-question

3. http://ktemoc.blogspot.com/2019/12/unimap-exam-on-ethnic-relations-or.html











01 ஜனவரி 2020

மலாயா தமிழர்கள் கறுப்புத் தோல் சமூகமா?

பெர்லிஸ் பல்கலைக்கழகக் கேள்வித் தாள் சர்ச்சை - 1

தமிழ் மலர் - 01.01.2020

பல கலைகளைச் சொல்லித் தரும் கழகம் பல்கலைக்கழகம். பல இனங்களின் சுவடுகளை வடித்துத் தரும் கழகம் பல்கலைக்கழகம். பல மொழிகளை ஆய்வு செய்து தரும் கழகம் பல்கலைக்கழகம். பல இனங்களின் வரலாறுகளைத் தொகுத்துத் தரும் கழகம் பல்கலைக்கழகம். 



அந்த வகையில் பல்கலைக்கழகம் என்பது உன்னதமான ஒரு கல்விக் கலசம். உயர்வான ஒரு கல்விக் கோபுரம். உத்தமான கல்விப் பேரிகை.

அப்படிப்பட்ட கல்விக் கழகத்தில் ஆக்க பூர்வமான எண்ணங்களுக்கு முதலிடம் வழங்க வேண்டும். அறிவு சார்ந்த கேள்விகளுக்கு அடைக்கலம் வழங்க வேண்டும். அழிவிற்கும் அசிங்கத்திற்கும் அழைத்துச் செல்லும் கருத்துகளைத் தவிர்க்க வேண்டும்.

ஓர் இனத்தையும் ஒரு மொழியையும்; உள் நோக்கதோடு கொச்சைப் படுத்தும் பதிவுகளுக்கு மரியாதை செய்யக் கூடாது. ஆனால் செய்கிறார்கள்; செய்து கொண்டும் வருகிறார்கள். இந்த மாதிரி மனிதர்களை எதில் கொண்டு போய் சேர்ப்பதாம். சொல்லுங்கள்.  


தமிழ் மலர் - 01.01.2020

ஒரே வார்த்தையில் சொல்கிறேன். இவர்களைச் சனியிலும் சேர்க்க முடியாது. ராகு கேதுவிலும் சேர்க்க முடியாது. ஏன் என்றால் இந்த மாதிரி மனிதர்களைப் பார்த்ததும் சனி பகவானுக்கே உதறல் எடுத்துவிடும். என்னையும் மிஞ்சிய எண்ணங்களா... வேண்டாம் சாமி என்று துண்டைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓடியே போய் விடுவார்.

பெர்லிஸ் பல்கலைக்கழகத்தில் 29.12.2019-ஆம் தேதி மாணவர்களுக்கான சோதனை. அதில் ஒரு கேள்வித் தாள் UUW 235 - 12. அதில் ஒரு கேள்வி.

கறுப்புத் தோலைக் கொண்டவர்களை மலாயா, இந்தோனேசியா போன்ற ஆசிய வட்டாரங்களில் காணலாம். இவர்கள் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனும் கேள்வி. ஒரு பல்கலைkகழகத்தில் கேட்கப்படும் கேள்வி.

அதற்கு முன் மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.



மலேசியாவில் மொத்தம் 64 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 20 அரசாங்கப் பல்கலைக்கழகங்கள். 37 தனியார் பல்கலைக்கழகங்கள். 7 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள். 500-க்கும் மேற்பட்ட உயர்க்கல்விக் கழகங்கள். இவற்றில் 1,270,000 மாணவர்கள் உயர்க்கல்வி பெற்று வருகிறார்கள். இது 2018 - 2019 புள்ளிவிவரங்கள்.

(சான்று: https://www.easyuni.my/en/malaysia/)

அரசாங்கப் பல்கலைக்கழகங்களின் பட்டியல். அவை எங்கே எப்போது உருவாக்கப் பட்டன எனும் விவரங்கள்:

1. மலாயா பல்கலைக்கழகம் (Universiti Malaya (UM); 01-01-1962      - கோலாலம்பூர்.

2. மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் (Universiti Sains Malaysia (USM)     1969 – பினாங்கு.

3. மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் (Universiti Kebangsaan Malaysia (UKM); 18-05-1970 – சிலாங்கூர்.

4. மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் (Universiti Putra Malaysia (UPM); 04-10-1971- சிலாங்கூர்.

5. மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Universiti Teknologi Malaysia (UTM); 01-04-1975 – ஜொகூர்.

6. மாரா தொழிநுட்ப பல்கலைக்கழகம் (Universiti Teknologi MARA (UiTM);      26-08-1999 – சிலாங்கூர்.

7. மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் (Universiti Islam Antarabangsa Malaysia (UIAM); 10-05-1983 – சிலாங்கூர்.

8. மலேசியா உத்தாரா பல்கலைக்கழகம் (Universiti Utara Malaysia (UUM); 16-02-1984 – கெடா.

9. மலேசிய சரவாக் பல்கலைக்கழகம் (Universiti Malaysia Sarawak (UNIMAS); 24-12-1992 – சரவாக்.

10. மலேசிய சபா பல்கலைக்கழகம் (Universiti Malaysia Sabah (UMS); 24-11-1994 – சபா.

11. சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் (Universiti Pendidikan Sultan Idris (UPSI); 24-02-1997 – பேராக்.

12. மலேசியா இஸ்லாம் அறிவியல் பல்கலைக்கழகம் (Universiti Sains Islam Malaysia (USIM); 13-03-1998 - நெகிரி செம்பிலான்.

13. மலேசியா திரங்கானு பல்கலைக்கழகம் (Universiti Malaysia Terengganu (UMT); 15-07-1999 – திரங்கானு.

14. மலேசியா துன் உசேன் ஓன் பல்கலைக்கழகம் (Universiti Tun Hussein Onn Malaysia (UTHM); 30-09-2000 – ஜொகூர்.

15. மலேசியா மலாக்கா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Universiti Teknikal Malaysia Melaka (UTeM); 01-12-2000 – மலாக்கா.

16. மலேசியா பகாங் பல்கலைக்கழகம் (Universiti Malaysia Pahang (UMP); 16-02-2002 – பகாங்.

17. மலேசியா பெர்லிஸ் பல்கலைக்கழகம் (Universiti Malaysia Perlis (UniMAP); 02-05-2002 – பெர்லிஸ்.

18. சுல்தான் சைனல் அபிடின் பல்கலைக்கழகம் (Sultan Zainal Abidin (UniSZA); 01-01-2006 – திரங்கானு.

19. மலேசியா கிளாந்தான் பல்கலைக்கழகம் (Universiti Malaysia Kelantan (UMK); 14-06-2006 – கிளாந்தான்.

20. மலேசிய தேசியத் தற்காப்பு பல்கலைக்கழகம் (Universiti Pertahanan Nasional Malaysia (UPNM); 10-11-2006 – கோலாலம்பூர்.

இந்தப் பட்டியலில் 17-ஆவதாக ஒரு பல்கலைக்கழகம் வருகிறது. கவனித்தீர்களா. இந்தப் பல்கலைக்கழகத்தில் தான் அண்மைய காலங்களில் சற்றே சர்ச்சைகள்.


இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு சின்ன சர்ச்சை. ஸம்ரி விநோத் எனும் சமயப் பேச்சாளர் (Muhammad Zamri Vinoth Kalimuthu), பெர்லிஸ் மாநிலத்தில், மேடைப் பிரசாரங்களின் போது இந்து சமயத்தைப் பற்றி அவதூறாகப் பேசியதாகச் சர்ச்சை.

அதே சமயத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் இந்து சமய மாணவர்களிடையே இந்து சமயத்தைப் பற்றி தவறாகக் கருத்துச் சொன்னதாகவும் சர்ச்சை. அது ஒரு வகையாக அப்படியே அமைதியாகிப் போனது.

இப்போது மிக அண்மையில் மற்றும் ஒரு சர்ச்சை. பல்கலைக்கழகக் கேள்வித் தாள் (Ethnic Relations Course - UUW 235 - 12). அதில் ஒரு கேள்வி இப்படி வருகிறது.

கறுப்புத் தோலைக் கொண்டவர்கள். இவர்களை மலாயா, இந்தோனேசியா போன்ற ஆசிய வட்டாரங்களில் காணலாம். இவர்கள் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்?

A. நிக்ரோக்கள்
B. சிவப்பு இந்தியர்கள்
C. இந்தியர்கள்
D. புஷ்மென் (ஆஸ்திரேலியா)

கேள்வித் தாளின் படத்தில் மலேசியத் தமிழ்ப் பிள்ளைகளின் படத்தைப் போட்டு இருக்கிறார்கள். தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் உள் நோக்கதோடு அந்தப் படத்தைப் போட்டு இருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். 



இது எல்லாம் ஒரு கேள்விங்களா. அதுவும் இப்படி ஒரு கேள்வியைத் தயாரித்து பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சோதனை வைக்கிறார்களே. என்ன சொல்ல? எதைச் சொல்ல?

இந்த மாதிரி கேள்விகளைக் கேட்டால் பல்கலைக்கழக மாணவர்களின் அறிவு எப்படிங்க வளரப் போகுது. எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன. அதை எல்லாம் விட்டு விட்டு இப்படிப் போய் கேட்கிறார்களே. சே!

இந்தக் கேள்வியைத் தயாரித்தவர் எப்படிப்பட்ட அறிவாளியாக இருப்பார்? ஒரு வேளை இந்தக் கேள்வியைத் தயாரித்தவர் ஜம்ரி வினோத் என்பவராக இருக்குமோ எனும் கேள்வியும் சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

தமிழர்கள் கறுப்புத் தோல் கொண்டவர்கள் தான். இல்லை என்று சொல்லவில்லை. அதற்காகக் கறுப்புத் தோல் கொண்டவர்கள் எல்லோரும் தமிழர்கள் என்று சொல்ல முடியுமா அல்லது இந்தியர்கள் என்று சொல்ல முடியுமா. ஏன் மஞ்சள் தோள் சாக்லேட் தோல் தமிழர்கள் இல்லையா.

கேள்வி தயாரித்தவர்களுக்குப் புத்தி எங்கே ஐயா போனது. நல்லா கேட்கலாம் போல இருக்கிறது. இதுவும் ஒரு வகையில் இனவாதக் கேள்வி தானே. ஓர் இனத்தைச் சீண்டிப் பார்க்கும் கேள்வி தானே.



புதிதாக அரசாங்கம் வந்ததில் இருந்து நம் இனத்தின் மீது ஏதாவது ஒரு பிரச்சினையை உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மலேசிய இந்தியர்களை நிம்மதியாக விட மாட்டார்கள் போல இருக்கிறது.

கல்வி அமைச்சர் எங்கே போய் விட்டார். என்ன செய்து கொண்டு இருக்கிறார். என்ன மாதிரியான கேள்வி கேட்டு இருக்கிறார்கள். நடவடிக்கை எடுப்பாரா.

மதபோதகர் ஸக்கீர் நாயக் குறித்து அதே பெர்லிஸ் பல்கலைக்கழகக் கேள்வித் தாளில் இடம் பெற்றது. மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. ஸக்கீர் நாயக் ஓர் உச்ச உருவகம் (icon) என்று அந்தக் கேள்வியில் இடம் பெற்ற வாசகங்கள். 



இதைப் பற்றி கல்வியமைச்சு கண்டு கொள்ளாது என்றும் இது அந்தப் பல்கலைக்கழகத்தின் தனிப்பட்ட விசயம் என்றும் அறிக்கை விடுத்து அப்படியே  கழன்று கொண்டது. ஆக ஸக்கீர் நாயக் விசயத்தில் கண்டு கொள்ளாத காசுட் ஈத்தாம் புகழ் கல்வி அமைச்சர்; தமிழர்கள் கறுப்புத் தோல் கொண்டவர்கள் எனும் பிரச்சினையில் தலையிடுவார் எனும் நம்பிக்கை பலருக்கும் இல்லை.

நம் தமிழ்ப் பிள்ளைகளின் படத்தைப் போட்டு கறுப்புத் தோலைக் கொண்டவர்கள். எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேட்டு இருக்கிறார்கள்.

கறுப்பர்கள் என்பது முன்பு ஆப்பிரிக்க நீக்ரோ மக்களைக் குறிப்பிடும் சொல்லாக இருந்தது. இருந்தாலும் அந்தச் சொல்லை ஐக்கிய நாட்டுச் சபை தடை செய்துவிட்டது. தமிழர்களின் நிறம் தாமிரம் என்பதை மறந்துவிட்டு கேள்வி தயாரித்து இருக்கிறார்கள்.

சின்னபிள்ளைத் தனமான கேள்விகளைக் கேட்டு பல்கலைக்கழக மாணவர்களின் அறிவை மழுங்க அடிக்கிறார்கள். மாணவர்களின் உயர்க்கல்வி அறிவு எப்படிங்க வளரப் போகுது.

ஒரு செருகல். உள்ளூர் பல்கலைக்கழகத்தில் படித்து பி.எச்.டி. செய்த மண்ணின் மைந்தர் ஒருவரின் ஆங்கிலக் கட்டுரை ஒன்று அண்மையில் என் பார்வைக்கு வந்தது.

இடைநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள்கூட ஆங்கிலத்தில் ஓரளவிற்குப் பிழை இல்லாமல் எழுதும் காலத்தில் இப்படி ஒரு முனைவரின் கட்டுரையா என்று மிகவும் வேதனைப் பட்டேன்.

அந்த முனைவரின் கட்டுரையில் நிறையவே எழுத்துப் பிழைகள். இலக்கணப் பிழைகள். சொல் தொடர் பிழைகள். வரி அமைப்புப் பிழைகள். ஒரு டாக்டர் எழுதிய கட்டுரையா என்று விக்கித்துப் போனேன்.

திருத்திக் கொடுக்கலாம் எனும் எண்ணம் ஏற்பட்டது. ஆனால் எங்கே திருத்துவது; எப்படி திருத்துவது; எதைத் திருத்துவது. அதற்குப் பதிலாக புதிதாக ஒரு கட்டுரையே எழுதிக் கொடுத்து விடலாம் போல தோன்றியது.

அப்போது என் மனதில் தோன்றிய முதல் நெருடல். இவர் ஒரு விரிவுரையாளர். இவர் எப்படி ஒரு விரிவுரையாளராகப் பணியாற்ற முடியும். அல்லது இவரிடம் படிக்கும் மாணவர்கள் எப்படி கல்வியில் சிறந்து விளங்க முடியும் எனும் நெருடல் தான்.

இப்படி இருந்தால் எப்படி நம் மலேசியப் பல்கலைக்கழகங்களை உலகத் தரம் வாய்ந்த கல்விக் கூடமாக மாற்ற முடியும். இந்த நிலையில் ஆசிய ஐரோப்பிய தனியார் நிறுவனங்களில் எப்படி பேர் போட முடியும். எப்படி அவர்களின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துக் கொள்வார்கள்.

இந்த நாட்டின் கல்வித் தரம் மிகவும் மோசமாகப் போய்க் கொண்டு இருக்கிறது. இதுதான் நிதர்சனமான உண்மை. ஒன்று மட்டும் உறுதி. என்றைக்கு இனவாதத்தையும் மதவாதத்தையும் தவிர்க்கிறார்களோ அன்றைக்குத் தான் ஒரு நல்ல வழி காண முடியும்.

இல்லை என்றால் நம் நாட்டின் கல்வித் தரம் மிக மோசமாகி விடும். எதிர்காலத் தலைமுறையினர் வெளிநாடுகளில் பேர் போட முடியாத ஓர் அவல நிலையும் ஏற்படலாம்.

மலேசிய இந்தியர் இனம் எப்பேர்ப்பட்ட வேதனைகளையும்; எப்பேர்ப்பட்ட சோதனைகளையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டது.

ஒன்று மட்டும் சொல்வேன். மற்ற ஓர் இனத்தின் ஆதிக்கத்தை நிலநாட்டுவதற்காகத் தமிழர்கள் எனும் சிறுபான்மை இனத்தைப் பகடைக் காயாக மாற்றி வருகிறார்கள். அவ்வளவு தான்.

அடுக்கடுக்கான சோதனைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் அவர்கள் தூக்கி வீசி எறிந்து விட்டுப் போய்க் கொண்டே இருப்பார்கள்.