11 பிப்ரவரி 2020

பத்துமலை வரலாறு - 4


தமிழ் மலர் - 10.02.2020

மலேசிய வாழ் இந்து பெருமக்கள் அனைவருக்கும் தைப்பூச நல்வாழ்த்துகள். பத்துமலை வரலாற்றுக் கட்டுரைத் தொடரில் இன்று நான்காம் பகுதி.

வில்லியம் ஹோர்னடே (William Hornaday) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர். அவருக்கு நெருங்கிய ஒரு நண்பர். பெயர் எச்.சி. செயர்ஸ் (H. C. Syers). இவர் 1878-ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநிலத்தின் தலைமைப் போலீஸ் அதிகாரியாகப் பணி புரிந்தவர். 



இவர்கள் இருவரும் பத்துமலைப் பகுதிக்கு வேட்டையாடப் போய் இருக்கிறார்கள். அப்போது பத்து குவா (Goa Batu) கிராமத்தில் வாழ்ந்த கிராமத்து மக்கள் பத்துமலையைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள்.

1885-ஆம் ஆண்டில் வில்லியம் ஹோர்னடே தன்னுடைய நாட்குறிப்பில் எழுதியதை எளிய முறையில் தமிழாக்கம் செய்து தருகிறேன். லிஸ் பிரைஸ் (Liz Price) என்பவர் The History of The Caves at Batu Caves எனும் நூலை 1994-ஆம் ஆண்டு எழுதி இருக்கிறார். அதில் வில்லியம் ஹோர்னடேவின் நாட்குறிப்புகள் உள்ளன. அவர் எழுதி இருக்கிறார்…

1878 ஜுலை மாதம் பத்துமலையின் அடிவாரத்தில் இருந்த கிராமத்திற்குச் சென்றோம்.  அப்போது வயதான ஒரு மலாய்க்காரரையும் தெமுவான் பூர்வீகக் குடிமக்களில் சிலரையும் சந்தித்தோம். அவர்களும் எங்களுடைய குகைப் பயணத்தில் சேர்ந்து கொண்டார்கள். மலை அடிவாரத்திற்குச் சென்றோம். அடர்ந்த காட்டுக்குள் பத்துமலை இருந்தது. 



அடிவாரத்தில் 200 அடி உயரத்தில் ஒரு குகை இருந்தது. அங்கே இருந்து மூக்கைத் துளைக்கும் காரமான நெடி வந்து கொண்டு இருந்தது. சுற்றுப்புறக் காற்றுத் தன்மையும் அழுத்தமாக இருந்தது. 

வயதான மலாய்க்காரரிடம் இது என்ன இப்படி ஒரு நெடி வருகிறது. பயங்கரமாக இருக்கிறதே என்று கேட்டேன். அதற்கு அவர் வௌவால் சாணத்தின் நெடி என்றார். எங்கே இருந்து வருகிறது என்று கேட்டேன். மேலே உள்ள குகையில் இருந்து வருகிறது என்று சொன்னார்.

பின்னர் அடிவாரத்தில் இருந்து மலையின் உச்சிக்கு ஒரு காட்டுப் பாதையின் வழியாக ஏறினோம். மலையின் உச்சியில் ஒரு பெரிய வளைவு வடிவத்தில் ஒரு குகை இருந்தது. 



குகையின் உள்ளே போனோம். பிருமாண்டமான அகண்ட வெளி. மூங்கில் விளக்குகளைப் பற்ற வைத்து உள்ளே நுழைந்தோம். இந்தக் குகைக்குக் குவா பெலா (Gua Belah) என்று தெமுவான் மக்கள் பெயர் வைத்து இருந்தார்கள்.

குவா பெலா என்றால் இரட்டைக் குகை என்று பொருள். இந்தக் குகையின் அகண்ட வெளிதான் இப்போதைக்கு பத்துமலையின் அகன்ற ஆலயக் குகை.

குகையின் அகலம் ஏறக்குறைய 150 அடி இருக்கும். நீளம் எப்படியும் 250 - 350 அடி இருக்கும். உள்ளே வடக்குப் பக்கமாக 45 பாகையில் ஒரு பெரிய பாறை. குகையின் உட்பாகம் அழுத்தமான சாம்பல் நிறத்தில் இருந்தது. தரையில் காய்ந்து போன வௌவால் சாணக் குவியல். 



அந்தச் சாணக் குவியல் எத்தனை அடி உயரம் இருக்கும் என்று தெரியவில்லை. வெளியே எடுத்துக் கொட்டினால் ஒரு சின்ன மலையை உருவாக்கி விடலாம். அவ்வளவு வௌவால் சாணம்.

அதனால் தான் அந்தப் பயங்கரமான கார நெடி. அரை மைல் தொலைவில் இருக்கும் போதே அந்த கடும் நெடி மூக்கைத் துளைத்து எடுத்து விட்டது.

ஆனால் இந்தப் பூர்வீகக் குடிமக்கள் எப்படித் தான் அங்கே தங்கி இருக்கிறார்களோ தெரியவில்லை. அவர்களுக்கு எந்த நோயும் வரவில்லை. பெரிய அதிசயமாக இருக்கிறது.

அந்த மாதிரியான ஓர் அமில நெடிச் சூழலில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். அங்கேயே அந்தக் குழந்தைகளும் வளர்கிறார்கள். குழந்தைகளுக்கு ஆறு வயதானதும் அவர்களும் வௌவால் வேட்டைக்குப் போய் விடுகிறார்கள். 



வௌவால்களைச் சாப்பிட்டுச் சலித்துப் போய் சமயங்களில் கீழே இறங்கி வந்து மற்றவர்களின் ஆடு மாடு வளர்ப்புப் பிராணிகளையும் திருடிச் சென்று விடுகிறார்கள். இரவோடு இரவாக அந்த நாடகம் நடந்து விடுகிறது.

கேட்டால் புலி வந்து அடித்துத் தின்று விட்டதாகச் சொல்வார்கள். பத்துமலைக்கு கீழே இருக்கும் இந்தியர்களும் சீனர்களும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை.

பார்க்கப் போனால் தெமுவான் மக்களை இந்தியர்களும் சீனர்களும் பகைத்துக் கொள்ள விரும்புவது இல்லை என்றே தோன்றுகிறது. ஏன் என்றால் வௌவால் சாணம் எடுக்கச் சீனர்கள் குகைக்குள் போக வேண்டி இருக்கிறதே. அதனால் ஓர் எழுதப் படாத சாசனம் நிலவியது.

இந்தத் தெமுவான் பூர்வீக மக்கள், பத்துமலைக் காடுகளில் அழுங்குகள் (Manis Javanica); காட்டு ஆடுகள் (Capra Aegagrus); செலாடாங் மாடுகள் (Seledang); தப்பீர்கள் (Malayan tapir, Tapirus Indicus) போன்றவற்றை வேட்டையாடிக் கொண்டு வருவது வழக்கம். அப்போது பத்துமலைக் காடுகளில் காட்டு ஆடுகள் நிறைய இருந்தன.



அவற்றைக் கொண்டு வந்து இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் கொடுப்பார்கள். ஒரு பண்டமாற்று வியாபாரம் போல தங்களின் பொருட்களைக் கொடுத்து மாற்றம் செய்து கொள்வார்கள்.

பெரிய குகைக்குப் பக்கத்திலேயே இன்னொரு குகை இருந்தது. அந்தக் குகையின் உள்ளே ஆயிரக் கணக்கான வௌவால்கள் வட்டம் அடித்துக் கொண்டு இருந்தன.

இந்த வகை வௌவால்களுக்கு இயோனிக்தெரிஸ் ஸ்பில்லா (Eonycteris Spilla) வௌவால்கள் என்று பெயர். பூமத்திய ரேகை நாடுகளில் மட்டுமே இந்த வௌவால்களைக் காண முடியும். பொதுவாக இவற்றின் எடை 60 கிராம். நூறு வௌவால்களைச் சேர்த்தால் ஐந்து அல்லது ஆறு கிலோ வரும். சரி.

அருகாமையில் இன்னும் இரு சின்ன குகைகள் இருந்தன. இந்தச் சின்னக் குகைகளின் சுவர் மஞ்சள் நிறத்தில் இருந்தது. 



தெமுவான் வாசிகள் அந்தக் குகைகளுக்குள் நீண்ட குச்சிகளை எடுத்துக் கொண்டு போனார்கள். மேலே தொங்கிக் கொண்டு இருந்த வௌவால்கள்; சுவர் இடுக்குகளில் மறைந்து கொண்டு இருந்த வௌவால்களை விரட்டி அடித்தார்கள். நாங்களும் ஒரு சில வௌவால்களைகளை அடித்துப் பிடித்தோம்.

நாங்கள் போகும் போது இந்த வௌவால்கள் ஓரளவிற்குக் குறைந்து விட்டன. அப்படித் தான் தோன்றியது. ஆதிவாசிகள் ஒரு நாளைக்கு 150 - 200 வௌவால்களைப் பிடித்துச் சாப்பிடுவதாக அவர்களே சொன்னார்கள்.

அதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து விட்டது. எத்தனையோ நூறு ஆண்டுகளாக இந்தப் பூர்வீக மக்கள் அங்கே வாழ்கிறார்கள். எவ்வளவு வௌவால்களைச் சாப்பிட்டு இருப்பார்கள். கணக்குச் சொல்ல முடியாது.

பின்னர் கீழே இறங்கி வந்தோம். வரும் வழியில் இன்னும் ஒரு குகை இருந்தது. அதன் பெயர் லம்போங் குகை (Gua Lambong). 



இந்தக் குகைகள் எல்லாமே பத்து எனும் பெரிய கிராமத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் இருந்தன. கோலாம்பூர் நகரில் இருந்து ஒன்பது மைல்கள்.

பத்துமலைக் குகைகளில் வாழ்ந்த பூர்வீகக் குடியினர் எப்போதுமே நிரந்தரமாக அங்கே தங்குவது இல்லை. வெயில் காலம் வந்து விட்டால் பத்துமலைக் காட்டில் உள்ள யானைகளும், புலிகளும், சிறுத்தைகளும், கரடிகளும் குகைகளுக்குள் வந்து விடும்.

அதனால் ஆபத்து. ஒரு சில மாதங்களுக்கு அந்த விலங்குகள் அங்கேயே தங்கிவிடும். பூர்வீக மக்கள் கீழே இறங்கி வந்து விடுவார்கள். பத்து ஆற்று ஓரத்தில் குடிசைகள் கட்டித் தங்கி விடுவார்கள்.

அந்த விலங்குகள் குகைகளை விட்டுப் போனதும் தான் மறுபடியும் அவர்கள் குகைக்குள் போவார்கள். ஏற்கனவே அவர்கள் தங்கிய இடங்களைச் சுத்தம் செய்வார்கள்.

அப்புறம் மறுபடியும் வௌவால் வேட்டையைத் தொடங்குவார்கள். வௌவால்கள் தான் அப்போதைக்கு அவர்களின் முக்கிய உணவுப் பொருளாக விளங்கி இருக்கிறது.



இப்படித்தான் பத்துமலைக்குள் முதன்முதலில் சென்ற வில்லியம் ஹோர்னடே தன்னுடைய நாட்குறிப்பில் எழுதி இருக்கிறார்.

வில்லியம் ஹோர்னடேவின் பத்துமலை கண்டுபிடிப்பிற்குப் பின்னர் சில வாரங்கள் கழித்து மற்றும் ஓர் ஆய்வுக் குழுவினர் குகைக்குள் போய் இருக்கிறார்கள்.

அந்தக் குழுவில் கேப்டன் புளும்பீல்ட் (Captain Bloomfield Douglas), டொமினிக் டேலி (Dominic D. Daly), லெப்டினெண்ட் லிண்ட்ஸ்செல் (Lieutenant R. Lindsell), பூர்வீக வாசிகள் சிலர் இருந்தனர்.

அதைப் பற்றி 1879 ஏப்ரல் 7-ஆம் தேதி டொமினிக் டேலி, அரச ஆசியாட்டிக் கழகத்திற்கு (Straits Branch of the Royal Asiatic Society) ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். 



இந்தக் கடிதம் கிடைத்த பிறகு தான் பத்துமலையைக் கண்டுபிடித்தவர் டொமினிக் டேலி என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது.

அந்த வகையில் முதன் முதலில் பத்துமலைக்குச் சென்ற வில்லியம் ஹோர்னடே; எச்.சி. செயர்ஸ் இருவரின் பெயர்களும் பத்துமலை வரலாற்றில் இருந்து அடிபட்டுப் போயின. இவர்கள் இருவரும் தங்களின் பத்துமலைக் கண்டுபிடிப்பை ஆவணப் படுத்தவில்லை என்பது தான் அவர்கள் செய்த பெரிய தவறு.

முறைப்படி குறிப்புகள் எடுத்து, முறைப்படி தெரிவித்து இருந்தால் இவர்கள் இருவரின் பெயர்கள் தான் இப்போதைக்கு பத்துமலை வரலாற்றில் நிலைத்து நின்று இருக்கும்.

பத்துமலைக்கு இரண்டாவதாகப் போன டொமினிக் டேலியின் ஆய்வுகளைப் பார்த்தால் பத்துமலையில் மூன்று குகைகள் இருந்ததாகத் தெரிய வருகிறது. இது அவருடைய ஆவணத்தில் இருந்தது என்று சொல்ல வருகிறேன்.

முதாலவது குகை  - லம்போங் குகை (Gua Lambong), (இப்போதைய ஆலயக் குகை);

இரண்டாவது குகை - பெலா குகை (Gua Belah);

மூன்றாவது குகை - லாடா குகை (Gua Lada);

டொமினிக் டேலி தன் ஆய்வுகளில் இப்படி சொல்கிறார். பத்துமலைக் குகைகளில் தொல்லுயிர்ப் புதை படிவுகள் (Fossils) எதுவும் கிடைக்கவில்லை. அது ஒரு பெரிய ஆச்சரியமான விசயம். 



ஆனால் ஆயிரக் கணக்கான டன்கள் வௌவால் சாணங்களை மட்டும் தான் பார்க்க முடிந்தது. அதை வௌவால்களின் பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும்.

தொல்லுயிர்ப் புதைப் படிவுகளும்; கடல்வாழ் சிப்பிகளின் ஓடுகளும் கிடைக்காததால் கடல் நீர், பத்துமலைப் பகுதி வரையில் வரவில்லை என்று முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.

(From the absence of fossils and shells, it would appear that the sea never reached any part of the Batu Caves hill.)

ஒரு செருகல். 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தீபகற்ப மலேசியா கடலில் மூழ்கியும் மூழ்காமலும் இருந்த ஒரு நிலப் பகுதியாகும். ரொம்ப வேண்டாம். கோலாலம்பூர் நகரும் கடலுக்குள் இருந்து வெளியே வந்த நிலப் பகுதிதான்.

அதனால் தான் முன்பு காலத்தில் பத்துமலையின் சுண்ணாம்புக் குகைகள், கடல் கொண்ட பகுதிகளாக இருந்து இருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதினார்கள். சந்தேகப் பட்டார்கள். சரிங்களா.



பத்துமலைக்குச் செல்வதற்கு ஏழு பாதைகள் இருந்தன என்று டொமினிக் டேலி சொல்கிறார். ஆனால் வில்லியம் ஹோர்னடே அப்படிச் சொல்லவே இல்லை. இன்னும் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும்.

வில்லியம் ஹோர்னடே என்பவர் பத்துமலையில் ஆய்வு செய்தது 1878-ஆம் ஆண்டு. டொமினிக் டேலி என்பவர் ஆய்வு செய்தது 1879-ஆம் ஆண்டு. ஒரு வருட இடைவெளி.

டொமினிக் டேலி 1879 ஜுலை 15-ஆம் தேதி, கோலக்கிள்ளான் நகரில் மெம்பாக்குல் (Mempakul) எனும் கிராமப் பகுதியில் காய்ச்சல் கண்டு இறந்து போனார். இவர் தான் பத்துமலையைப் பற்றி அதிகமாக ஆய்வுகள் செய்தவர்.

அடுத்து வருபவர் வில்லியம் ஹோர்னடே. பத்துமலையைப் பற்றி முதன் முதலில் வெளியுலகத்திற்கு அறிவித்தவர். இவர் அமெரிக்காவில் 1937 மார்ச் மாதம் 3-ஆம் தேதி, தன் 82-ஆவது வயதில் காலமானார்.

மற்றும் ஓர் ஆய்வாளர் கேப்டன் எச்.சி. செயர்ஸ் (Captain H. C. Syers). கூட்டரசு மலாயாவில் முதல் போலீஸ் கமிஷனர் (Federated States Police Commissioner). சிலாங்கூர் மாநிலத்தின் முதல் போலீஸ் தலைவர். 



1897-ஆம் ஆண்டு வேட்டைக்குச் செல்லும் போது, காயம் பட்ட செலாடாங் காட்டு எருமையால் கொல்லப் பட்டார். அப்போது அவருக்கு வயது 45.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த மூன்று ஐரோப்பியர்கள் தான் பத்துமலையைப் பற்றி வெளி உலகத்திற்குச் சொன்ன அழகிய முருகதாசர்கள். அந்த வகையில் மலேசிய இந்தியர்கள் என்றென்றும் அவர்களுக்கு கடமைப்பட்டு உள்ளார்கள்.

இசபெல்லா பேர்ட் (Isabella Lucy Bird) எனும் பெண் ஆய்வாளரும் பத்துமலையைப் பற்றி எழுதி இருக்கிறார். 1879-ஆம் ஆண்டு அவர் பார்த்த இந்தியர்கள் பலர் தலைப்பாகை கட்டி இருந்ததாகவும்; அரைக்கால் சிலுவார்களுக்குப் பதிலாகச் சிலர் கோவணங்கள் கட்டி இருந்ததாகவும் சொல்கிறார். அதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)








08 பிப்ரவரி 2020

பத்துமலை வரலாறு - 3

தமிழ் மலர் - 08.02.2020

உலகிலேயே மிக நீளமான குகைகள்; மிக ஆழமான குகைகள்; மிக அதிசயமான குகைகள்; அத்தனையும் மலேசியாவில் தான் உள்ளன. அதே போல உலகிலேயே அதிகமான வௌவால் இனங்களும் மலேசியாவில் தான் உள்ளன. 


உலகில் ஏறக்குறைய 1200 வௌவால் இனங்கள் உள்ளன. அவற்றில் 12 விழுக்காட்டு இனங்கள் மலேசியக் குகைகளில் மட்டுமே வாழ்கின்றன. இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும்.

குகைகளில் ஸ்தலக்டிதைட் (Stalactites) என்று சொல்லப்படும் தொங்கு ஊசிப் பாறைகளும்; ஸ்தலக்மைட் (Stalagmites) என்று சொல்லப்படும் பொங்கு ஊசிப் பாறைகளும் இருப்பதை நீங்கள் பார்த்து இருக்கலாம்.

தொங்கு ஊசிப் பாறைகள் என்றால் குகைகளின் மேல் கூரையில் உருவாகி கீழ் நோக்கித் தொங்கும் கற்கள் ஆகும். நீர்த் துளிகளாகக் கசிந்து, பின்னர் இறுக்கம் அடைந்து தொங்கு ஊசிப் பாறைகளாக மாறுகின்றன.

பொங்கு ஊசிப் பாறைகள் என்றால் குகையின் தரையில் உருவாகி மேல் நோக்கி வளர்கின்ற சொட்டுக் கற்கள் ஆகும்.


Stalactites
தொங்கு ஊசிப் பாறைகள்

Stalagmites
பொங்கு ஊசிப் பாறைகள்

பத்துமலைக் குகைகளில் வௌவால்கள் (Eonycteris Spilla), மழைக் குருவிகள், குரங்குகள், பாம்புகள், முதுகெலும்பு இல்லா உயிர்கள் (invertebrates), பூச்சிகள், சிலந்திகள், கரப்பான் பூச்சிகள், பூரான்கள், மரவட்டைகள் (Diplopoda) என பல்வேறு உயிரினங்களும் பல இலட்சம் ஆண்டுகளாக வாழ்ந்து வாழ்கின்றன.

இதில் பத்துமலையில் மட்டுமே காணப்படும் சிலந்திகளுக்கு லிபிஸ்தியஸ் பத்துன்சிஸ் (Liphistius Batuensis) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். பத்துன்சிஸ் என்பதில் பத்து எனும் சொல் வருவதைக் கவனித்தீர்களா. இந்த வகைச் சிலந்திகள் உலகில் வேறு எங்கும் இல்லை.

Ridley, H.N. 1899. Caves in the Malay Peninsula: Appendix. Report of the British Association for the Advancement of Science 1898


ஆதிகால மனிதர்கள் வருவதற்கு முன்பு இருந்தே அவை அங்கே வாழ்ந்து வருகின்றன. ஏறக்குறைய 20 அல்லது 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் மனிதர்கள் பத்துமலைக் குகைகளில் குடியேறி இருக்கிறார்கள். ஆனால் இந்த உயிரினங்களோ பல இலட்சம் ஆண்டுகளாக அங்கே ராஜ தர்பார் நடத்தி இருக்கின்றன்.

பத்துமலையில் மொத்தம் ஐந்து குகைகள் உள்ளன. மூன்று பெரிய குகைகளும் இரு சிறு குகைகளும் உள்ளன. ஆகப் பெரியது ஆலயக் குகை (Cathedral Cave - Temple Cave). அதுதான் ஆக உச்சத்தில் இருக்கும் குகை.

பத்துமலையின் அடிவாரத்தில் மூன்று சிறிய குகைகள் உள்ளன. ஒன்று கலைக்கூடக் குகை அல்லது இராமாயணக் குகை (Ramayana Cave). இன்னொன்று அருங்காட்சியகக் குகை (Art Gallery Cave). 


மற்றும் ஒரு குகை. அதன் பெயர் கரும் குகை (Dark Cave). பிரதான ஆலயக் குகைக்குச் சற்று கீழே இடது புறத்தில் உள்ளது. இந்தக் குகையின் நீளம் 850 மீட்டர். குகைக்குள் செல்ல டிக்கெட்டின் விலை 35 ரிங்கிட். வழிகாட்டிகள் உள்ளனர். தற்சமயம் இந்தக் குகைக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப் படுவது இல்லை.

1860-ஆம் ஆண்டுகளில் பத்துமலைச் சுற்று வட்டாரத்தில் சீனர்கள் நிறையவே காய்கறிகள் பயிர் செய்து வந்தனர். காய்கறிகளுக்கு உரம் தேவைப் பட்டது. பத்துமலைக் குகைகளில் இருந்த வௌவால் சாணத்தை உரமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

பத்துமலைக் குகைகளில் மில்லியன் கணக்கில் வௌவால்கள். எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றன. அவற்றின் சாணங்கள் பல அடி உயரத்திற்கு உயர்ந்து போய் இருந்தன. அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கரைத்து எடுத்து விட்டார்கள்.


அப்படி சாணத்தைத் தோண்டிக் கரைத்து எடுக்கும் போது, அங்கே இருந்த ஆதிவாசிகளின் பழம் பொருட்கள் எல்லாம் உடைபட்டு நொறுங்கிச் சேதம் அடைந்து விட்டன. பத்துமலையின் வரலாற்றைச் சொல்ல எந்த ஒரு முக்கியமான அரும் பொருட்களும் கிடைக்காமல் போய் விட்டன.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெசிசி (Besisi) ஆதிவாசிகள் பயன்படுத்திய உலோகப் பொருட்கள், பண்டு பாத்திரங்கள், அணிகலன்கள் அனைத்துமே சிதைவுற்றுப் போயின. அப்படிச் சொல்வதை விட காணாமல் போய் விட்டன என்று தான் சொல்ல வேண்டும்.

மலேசியாவில் உள்ள குகைகளின் பட்டியல் வருகிறது பாருங்கள்.

சபா - 10
சரவாக் - 239
கெடா- 1
கிளந்தான் - 3
பகாங் - 4
பேராக் 4
பெரிலிஸ் - 2
சிலாங்கூர் - 1
திரங்கானு - 1

(https://en.wikipedia.org/wiki/List_of_caves_in_Malaysia)

மலேசியக் குகைகளின் இரகசியங்கள் பலருக்கும் தெரியாது. சரவாக்கில் புகழ்பெற்ற ஒரு தேசிய வனப் பூங்கா உள்ளது. அதன் பெயர் முலு வனப் பூங்கா (Mulu National Park). இந்தப் பூங்காவை உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவித்து இருக்கிறார்கள். 


2001-ஆம் ஆண்டே அந்த அங்கீகாரம் கிடைத்து விட்டது. உலகின் மிக நீளமான குகை எனும் சிறப்புத் தகுதியையும் சரவாக் முலு குகை பெற்று விட்டது. சரி.

பத்துமலைக் குகைகளில் வாழ்ந்த பெசிசி ஆதிவாசிகள் ஆலயக் குகையின் மேல் பகுதியை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் புலிகளுக்கும் கரடிகளுக்கும் பஞ்சம் இல்லை. அதனால் தான் பெசிசி ஆதிவாசிகள் குகையின் மேலே இருந்த பகுதிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இந்தப் பெசிசி ஆதிவாசிகளுக்குப் பின்னர் வந்தவர்கள் தான் தெமுவான் (Temuan) பூர்வீகக் குடிமக்கள். தெமுவான் மக்கள் வாழ்ந்த போது கீழே ஒரு கிராமம் இருந்து இருக்கிறது. அதன் பெயர் குவா பத்து.

அந்தக் கட்டத்தில் அங்கே ஈயம் விளையாடி இருக்கிறார்கள். நிறைய ஈயச் சுரங்கங்கள் இருந்து இருக்கின்றன. இது 1824-ஆம் ஆண்டு வரலாற்றுப் பதிவு.


அது மட்டும் அல்ல. மேலே பெரிய குகையில் அதாவது ஆலயக் குகையில் கிடைத்த வௌவால் சாணத்தைப் பதப்படுத்த ஒரு தொழிற்சாலையையே கட்டி இருக்கிறார்கள். அந்தத் தொழிற்சாலை அடிவாரத்தில் இயங்கி இருக்கிறது.

வௌவால் சாணத்தை எடுத்து வர சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சீனக் கொத்தடிமைகள் அல்லது ஒப்பந்தச் சீனக் கூலிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்.

ஏறிப் போவதற்குப் படிகள் இல்லை. இப்போது மாதிரி மேலே ஏறிப் போய் அழகு பார்க்கும் படங்களைச் செல்பிகளாக எடுத்து பேஸ்புக்; வாட்ஸ் அப்பில் போட்டு பெருமைபட்டுக் கொள்ளவும் சான்ஸ் இல்லை.

இப்போது சிலரின் செல்பி படங்களைப் பார்க்கும் போது என்னவோ இமயமலையில் ஏறி சாதனை செய்துவிட்டது போல போஸ் கொடுத்து இருப்பார்கள். விடுங்கள். வீண் பொல்லாப்பு வேண்டாமே.


ஆக அந்தக் காலத்துப் பத்துமலைச் சீனர்கள் காண்டா கம்பில் வாளிகளை மாட்டிக் கொண்டு ஏறி இறங்கி வந்து போய் இருக்கிறார்கள். காட்டுவழிப் பாதைகள். ஏறிப் போவதற்கு ஒரு பாதை. இறங்கி வருவதற்கு ஒரு பாதை.

இறங்கி வரும் பாதையில் மிதிப் பட்டைகளை வைத்து இருக்கிறார்கள். வௌவால் சாணம் ஈரப் பசை கொண்டது. ரொம்பவே கனமானது. நாற்பது ஐம்பது கிலோ என்றால் சாதாரண விசயமா.

அப்படி போய் வந்த சீனர்களில் பலர் புலிகளுக்கும், கரடிகளுக்கும், மலைப்பாம்புகளுக்கும் இரையாகிப் போய் இருக்கிறார்கள். இது எல்லாம் பத்துமலை வரலாற்றில் வரும் ஒவ்வொரு அத்தியாயங்கள். பலருக்கும் தெரியாத இரகசியங்கள்.

அந்தக் காலத்து ஆங்கிலேயர்கள் எழுதி வைத்த ஆவணங்கள். அவை இப்போது மலேசியாவில் அலைந்து தேடினாலும் கிடைக்கப் போவது இல்லை. எல்லாமே கேம்பிரிட்ஜ், லண்டன் பல்கலைக்கழகங்களில் ஆவணங்களாகப் படிவங்களாக டிஜிட்டல் முறையில் இருக்கின்றன. அவற்றை இணையத்தில் அலசிப் பிரித்து எடுப்பதே பெரிய வேலை. பல மணி நேரங்கள் பிடிக்கும். சரி.


1830-ஆம் ஆண்டுகளில் குவா பத்து (Goa Batu) கிராமத்தில் மலேரியா நோய் பரவி சில நூறு பேர் இறந்து விட்டார்கள். மலேரியா ஒரு தொற்று நோய்; அது கொசுவினால் பரவுகிறது என்று நாலும் தெரிந்த நல்லவர்கள் சிலர் சொல்லப் போய், குவா பத்து கிராமத்தில் ஒரு பெரிய அமளி துமளியே நடந்து இருக்கிறது.

கீழே இருந்தவர்கள் பெரும்பாலோர் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு பத்துமலைப் பெரிய குகைக்குப் படை எடுத்துப் போய் டேரா அடித்து விட்டார்கள். அந்தச் சமயத்தில் தெமுவான் பூர்வீக மக்கள் அங்கே வாழ்ந்த காலக் கட்டம். அப்படி போனவர்கள் பெரும்பாலோர் ஈயச் சுரங்கங்களில் வேலை செய்த சீனர்கள்.

தமிழர்களும் போய் இருக்கிறார்கள். அவர்கள் தான் முருகன் சிலையை வைத்து முதன் முதலில் சாமி கும்பிட்டு இருக்கிறார்கள். பின்னர் காலத்தில் பத்துமலைக்குச் சென்ற தம்புசாமிப் பிள்ளையிடம் சொல்லப் போய் அதுவே இப்போதைக்கு உலகளவில் பெயர் பெற்று விளங்குகிறது.


சீனர்களும் தமிழர்களும் ஐரோப்பியர்களும்  வருவதற்கு முன்னரே பத்துமலைக் குகைகளில் தெமுவான் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். அப்படிப் பார்க்கும் போது பத்துமலைக் குகையை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் தெமுவான் பழங்குடி மக்களே.

1878-ஆம் ஆண்டு பத்துமலைச் சுண்ணாம்புக் குன்றுகளை ஆய்வு செய்தவர் அமெரிக்க தாவரவியலாளர் வில்லியம் ஹோர்னடே (William Hornaday). அவர் தான் பத்துமலையைப் பற்றி வெளியுலகத்திற்குச் சொன்னவர்.

இவருக்கு ஒரு நண்பர் இருந்தார். அவருடைய பெயர் எச்.சி. செயர்ஸ் (H. C. Syers). 1890-ஆம் ஆண்டுகளில் சிலாங்கூர் மாநிலத்தின் தலைமைப் போலீஸ் அதிகாரியாக இருந்தவர்.

இவர்கள் இருவரும் பத்துமலைப் பகுதிக்கு வேட்டையாட போய் இருக்கிறார்கள். என்ன வேட்டை என்று கேட்கிறீர்களா. சும்மா ஒரு யானை வேட்டை தான். 


இந்தியாவில் தான் யானைகளைச் சுட்டு வீழ்த்தி, அந்தர்ப்புர அம்ச ராணிகளிடம் அழகு காட்டினார்கள் என்றால் இங்கேயும் பழக்க தோசம் விடவில்லை. இருந்தாலும் நல்லதே நடந்து இருக்கிறது.

அப்போது பத்து குவா கிராமத்தில் வாழ்ந்தவர்கள் பத்துமலையைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள்.

பத்துமலையின் ஆலயக் குகைக்கு குவா லாடா (Gua Lada) அல்லது மிளகாய்க் குகை என்று பெயர் வைத்ததும் வில்லியம் ஹோர்னடே தான். வௌவால்களின் துர்நாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அப்படி பெயர் வைத்து அழைத்து இருக்கிறார்.

ஒரு வௌவாலா இரண்டு வௌவாலா. மில்லியன் கணக்கில் வௌவால்கள். குகையில் நுழைந்த போது கணக்கு வழக்கு இல்லாத வௌவால்கள் கூட்டம். அவற்றின் பிழுக்கை நாற்றம். முகத்தில் துணியை வைத்துக் கட்டிக் கொண்டு சுற்றிப் பார்த்து பிரமித்துப் போய் விட்டார்கள். அங்கு வாழந்த பூர்வீக மக்களை சக்குன் என்று அழைத்து இருக்கிறார்கள். 


பத்துமலைக் குகையில் இருந்த வௌவால்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து போனதற்கு இந்தப் பூர்வீக மக்களும் ஒரு காரணம் என்றும் வில்லியம் ஹோர்னடே சொல்லி இருக்கிறார். பூர்வீக மக்களின் வாழ்வதாரப் பொருளாக வௌவால்கள் விளங்கி இருக்கின்றன.

சான்று: Liz Price, History of Batu Caves; http://spaj.ukm.my/jurnalarkeologi/index.php/jurnalarkeologi/article/view/36

(தொடரும்)





07 பிப்ரவரி 2020

பத்துமலை வரலாறு - 2

தமிழ் மலர் - 07.02.2020

1875-ஆம் ஆண்டு வாக்கில் கோலாலம்பூர் ஆற்றோரத்தில் தம்புசாமி பிள்ளை ஒரு மாரியம்மன் வழிபாட்டுத் தலத்தைக் கட்டினார். அது ஒரு சின்னக் கோயில். அந்தச் சமயத்தில், அந்த இடத்திலேயே மலாயன் இரயில்வே (Malayan Railway) நிறுவனத்திற்கும் நிலம் தேவைப்பட்டு இருக்கிறது. மதுரைக்கு வந்த சோதனையைப் பாருங்கள்.



ஏன் என்றால் அந்த இடம் ஒரு சரக்குக் கிடங்கு அமைக்கப் பொருத்தமாக இருந்து இருக்கிறது. அந்த இடத்திற்குப் பதிலாக வேறு ஓர் இடத்தில் ஒரு கோயிலைக் கட்டிக் கொள்ள நிலம் வழங்க மலாயன் இரயில்வே நிர்வாகம் வாக்குறுதி அளித்தது.

அந்த வகையில் 1875-ஆம் ஆண்டு, கோலாலம்பூர் ஜாலான் பண்டாரில் (Jalan Bandar) ஒரு குடிசைக் கோயில் கட்டப் பட்டது. அத்தாப்புக் கூரைகள் வேய்ந்த குடிசைக் கோயில் தான்.

அப்போது சிலாங்கூர் ஆட்சியாளராகச் சுல்தான் அப்துல் சமாட் ராஜா அப்துல்லா (Sultan Abdul Samad ibni Almarhum Raja Abdullah) என்பவர் இருந்தார். அவர் தான் குடிசைக் கோயில் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கினார். 



அந்தக் கோயில் குடிசைக்கு இந்தியச் சமூகத்தின் நிலம் (Land for the Indian Community) என்று சுல்தான் அப்துல் சமாட் அடிக்கல் நாட்டினார்.

அந்தக் கட்டத்தில், சிலாங்கூர் மாநிலத்தின் ஆங்கிலேய ஆளுநராக (British Resident) ஜேம்ஸ் கத்தரி டேவிட்சன் (James Guthrie Davidson) என்பவர் இருந்தார்.

குடிசைக் கோயில் கட்டப்பட்ட அந்த ஜாலான் பண்டார் தான் இப்போது ஜாலான் துன் எச்.எஸ்.லீ (Jalan Tun H.S. Lee).

தம்புசாமி பிள்ளை எப்போதுமே முன்னோக்குப் பார்வையும் வியூகத் தன்மையும்  கொண்டவர். 1888-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் இருந்த இந்தியச் சமூகத்தின் ஆதரவுடன் அந்த அத்தாப்புக் குடிசைக் கோயிலைச் செங்கல் கட்டிடமாக மாற்றினார். 



கோயில் கட்டிடம் கட்டப் படுவதற்கு கோலாலம்பூர் வாழ் மக்கள் தாராளமாக நன்கொடைகளை வழங்கினார்கள். கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் முதல் நிறுவனர் தம்புசாமி பிள்ளை ஆகும். மறந்துவிட வேண்டாம்.

அந்தச் சமயத்தில் மலாயன் இரயில்வே சேவையிலும்; மலாயா பொதுப்பணித் துறையிலும் வேலைகள் செய்ய ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் ஆட்களைக் கொண்டு வருவதற்கு தம்புசாமி பிள்ளை தமிழகத்திற்கு அனுப்பப் பட்டார்.

மலாயாவின் ஆங்கிலேய அரசாங்கம் தான் அவரைக் கப்பல் மூலமாக அனுப்பி வைத்தது. தம்புசாமி பிள்ளை தென்னிந்தியாவிற்குப் பலமுறைகள் சென்று வந்தார். பல ஆயிரம் தென்னிந்தியர்களை வேலையாட்களாகக் கொண்டு வந்து சேர்த்தார்.



அப்போது பத்துமலைப் பகுதியின் சுற்று வட்டாரத்தில் நிறையவே தமிழர்கள் வாழ்ந்து வந்தார்கள். பத்துமலையில் ஒரு முருகன் கோயிலை அமைக்கலாம் என்று அவர்கள் விரும்பினார்கள்.

அவர்களின் கோரிக்கைக்கு இணங்க குகைக்குக் கீழே பத்துமலை ஆலயம் கட்டப் பட்டது. தம்புசாமி பிள்ளை தான் தன் சொந்தச் செலவில் கோயிலைக் கட்டிக் கொடுத்தார்.

புதிதாகக் கட்டப்பட்ட பத்துமலைக் கோயில் முருகப் பெருமானுக்கு அர்ப்பணம் செய்யப் பட்டது. இந்தப் பத்துமலைக் கோயில் கட்டப் படுவற்கு முன்னரே 1890-ஆம் ஆண்டு கோலாலம்பூர் ஜாலான் பண்டாரில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இந்தக் கோயிலையும் தம்புசாமிப் பிள்ளை தான் கட்டிக் கொடுத்தார்.



1891-ஆம் ஆண்டு பத்துமலைக் குகைக் கோயிலில் முருகப் பெருமானின் சிலை நிலை நிறுத்தப் பட்டது. 1892-ஆம் ஆண்டில் இருந்து பத்துமலையில் தைப்பூசம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1920-ஆம் ஆண்டில் குகைக் கோயிலுக்குச் செல்ல மரக் கட்டைகளிலான 272 படிக்கட்டுகள் கட்டப் பட்டன.

மறுபடியும் பத்துமலையின் தொடக்கக் கால வரலாற்றிற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.

இப்போதைய பத்துமலை இருக்கிறதே அது ஒரே ஒரு சுண்ணாம்புப் பாறை தான். அதாவது ஒரே ஒரு கற்பாறை தான். 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவான சுண்ணாம்புப் பாறை. 385 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

பத்துமலையின் சுண்ணாம்புப் பாறைகளைத் தொல்லுயிர் காலப் பாறைகள் (Palaeozoic era) என்று அழைக்கிறார்கள். அதாவது முதல் ஊழிக் காலத்தில் தோன்றியவை. பூமியின் மேல்படிவம் உருவான காலத்தில் உருவான பாறைகள். 



உலகில் பலவிதமான சுண்ணாம்புப் பாறைகள் இருந்தாலும் பத்துமலையில் உள்ள சுண்ணாம்புப் பாறைகளைச் சிலுரியன் சுண்ணாம்புப் பாறை (Silurian limestone) இனத்தைச் சேர்ந்தவை என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

சான்று: Peter H. Stauffer, Journal of Paleontology, Vol. 53, No. 6 (Nov., 1979), pp. 1416-1421; A Fossilized Honeybee Comb from Late Cenozoic Cave Deposits at Batu Caves, Malay Peninsula.

பத்துமலை என்பது ஒரே ஒரு சுண்ணாம்புக் கற்பாறையால் உருவானது என்று சொல்லி இருக்கிறேன். அந்தக் கற்பாறையின் உயரம் 304 மீட்டர். தடிமன் 1950 மீட்டர். அந்தப் பாறையின் உள்ளே இருப்பது எல்லாம் கால்சைட் (Calcite) எனும் சுண்ணாம்புப் படிமங்கள்.

பத்துமலையின் அகழாய்வுகள் 1886-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டன. அதாவது தொல்பொருள் ஆராய்ச்சிகள். அந்தக் காலக் கட்டத்தில் மலாயாவின் அரும்பொருள் காட்சியகங்களின் பேராக் மாநில இயக்குநராக லியோனர்ட் விரேய் (Leonard Wray) என்பவர் இருந்தார். அவர் தான் பத்துமலையில் முதன் முதலாக அகழாய்வுப் பணிகளைத் தொடங்கியவர். 



பத்துமலையின் பாறைகளில் பத்து மீட்டர் ஆழத்திற்குத் துளைகள் போட்டு உள்ளே என்ன என்ன பாறைப் படிமங்கள் இருக்கின்றன என்று ஆராய்ந்து பார்த்தார்கள். எல்லாமே சுண்ணாம்புக் கற்படிமங்கள் தான். வேறு தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

உலகில் வேறு பல இடங்களில் வேறு பல மாதிரியான படிமங்கள் கிடைத்து இருக்கின்றன.

எடுத்துக் காட்டாக இமயமலையை எடுத்துக் கொள்வோம். இமயமலையின் அடிவாரத்தில் அகழாய்வுகள் செய்யும் போது இந்திய மாக்கடலில் நீந்தி விளையாடிய சுறா மீன்கள், டொல்பின் மீன்கள், நண்டுகள், சிங்க இறால்கள் போன்றவற்றின் எலும்புச் சிதைவுகளைக் கண்டு எடுத்தார்கள். எல்லோருக்கும் ஆச்சரியம்.

இமயமலை எங்கே இருக்கிறது. இந்திய மாக்கடல் எங்கே இருக்கிறது. இரண்டிற்கும் 2500 கிலோமீட்டர் இடைவெளி. அப்படி இருக்கும் போது  எப்படி இந்திய மாக்கடலில் ஓடி விளையாடிய உயிரினங்களின் எலும்புகள் இமயமலைக்கு வந்து சேர்ந்தன. 



உலகத்திலேயே மிக மிகப் பழமையான திமிங்கில எலும்புக் கூட்டையும் இமயமலை அடிவாரத்தில் 1998-ஆம் ஆண்டு கண்டு எடுத்து இருக்கிறார்கள். 53 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. அதற்கு Himalayacetus subathuensis என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

சான்று: https://www.independent.co.uk/news/worlds-oldest-whale-is-found-in-the-himalayas-1193848.html

ஆச்சரியமாக இருக்கிறதா. விளக்கம் கொடுக்கிறேன். உலகில் இப்போது இருக்கும் ஐந்து கண்டங்களும் 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒன்றாகப் பிணைந்து ஒன்றாகவே இணைந்து இருந்தன. ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா எல்லாமே ஒரே ஒரு சூப்பர் கண்டமாக இருந்து இருக்கின்றன. அதற்கு கொண்ட்வானா (Gondwana) என்று பெயர்.

பின்னர் பூமியின் மேல்தட்டுப் பாறை அடுக்குகள் கொஞ்சம் கொஞ்சமாய் விலகிச் சென்று இருக்கின்றன. பல மில்லியன் ஆண்டுகளகாக இந்த விலகிச் செல்லும் பரிணாமம் நடந்து இருக்கிறது. அப்புறம் பற்பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தச் சூப்பர் கண்டம் தனித் தனிக் கண்டங்களாகப் பிரிந்து போனது. 



அப்படி பிரியும் போது தான் வட துருவப் பகுதியுடன் இந்தியத் துணைக் கண்டம் போய் இணைந்து இருக்கிறது. இந்திய மாக்கடலில் இருந்த உயிரினங்களும் இமயமலையுடன் போய் இணைந்து இருக்கின்றன. அவற்றின் எலும்புக் கூடுகளைத் தான் இப்போது இமயமலையின் அடிவாரத்தில் கண்டு எடுத்து இருக்கிறார்கள். புரியுதுங்களா.

அந்த மாதிரிதான் பத்துமலையிலும் நடந்து இருக்கலாம் எனும் ஒரு வியூகம் இருந்தது. பத்துமலை வளாகத்தில் கடல் வாழ் உயிரினங்களின் எலும்புக்கூடுகள் கிடைக்கவில்லை. ஆனால் 500,000 ஆண்டுகள் பழமையான ஓராங் ஊத்தான் எலும்புக் கூடுகளைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

சான்று: Studies on cave paleontology had unearthed orang utan (now extinct in the peninsula) fossils in Batu Caves dating back between 33,000 and 500,000 years - ttps://www.nst.com.my/news/exclusive/2020/01/553666/experts-artefacts-fossils-may-be-lost



1886-இல் தொடங்கிய பத்துமலை அகழாய்வுகள் 1891-ஆம் ஆண்டு வரை நீடித்தன. அதன் பிறகு அப்படியே அமைதியாகிப் போயின. அதன் பின்னர் 1917-ஆம் ஆண்டு ஐ.எச்.என். இவான்ஸ் (I.H.N. Evans) என்பவர் மீண்டும் அகழாய்வுப் பணிகளைத் தொடர்ந்தார். 1931-ஆம் ஆண்டு வரை அகழாய்வுகள் தொடர்ந்தன.

சான்று: Peter Carey, 1986, "Maritime Southeast Asian Studies in the United Kingdom: A Survey of their Development, 1945–85

அவருக்கு உதவியாக டாக்டர் வான் கால்ன்பெல்ஸ் இருந்தார் (Dr. P.V. Van Stein Callenfels). இவருடைய ஆய்வுகள் 1926-ஆம் ஆண்டு வரை நீடித்தது. இவருக்குப் பின்னர் எச்.டி. நூன் (H.D. Noone); எம். கார்டன் (W.M. Gordon) போன்றவர்கள் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். அதன் பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு அமைதி.

1935-ஆம் ஆண்டில் மறுபடியும் ஆய்வுப் பணிகள் தொடங்கப் பட்டன. துவீடி (M.W.F. Tweedie); கொலிங்ஸ் (H.D. Collings) போன்ற அகழாய்வுத் துறை வல்லுநர்கள் அயராத சேவைகளை வழங்கி உள்ளனர்.

சான்று: Tweedie MWF (1953). "The Stone Age in Malaya". Journal of the Malayan Branch Royal Asiatic Society 26 (2)



ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன். பத்துமைலையைப் பற்றி நாம் எவ்வளவு தான் பெருமைப்பட்டுக் கொண்டாலும் ஆரம்ப காலங்களில் அதன் சிறப்புகளை; அதன் இரகசியங்களை வெளியுலகத்திற்குச் சொன்னவர்கள் ஆங்கிலேயர்கள் தான்.

பத்துமலையின் இரகசியங்களை வெளியுலக மக்களுக்குத் தெரியபடுத்தி அதே அந்தப் பத்துமலையைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டவர்களும் அதே அந்த ஆங்கிலேயர்கள் தான். அந்த வகையில் ஆங்கிலேயர்களுக்கு நாம் நன்றிக் கடன் பட்டு இருக்கிறோம்.

1942 - 1945-ஆம் ஆண்டுகளில் ஜப்பானியர் காலத்தில் பத்துமலை ஆய்வுப் பணிகள் முற்றாக நிறுத்தப் பட்டன.

பத்துமலையின் சுற்று வட்டாரங்களில் சீனர்கள் நிறைய காய்கறித் தோட்டங்களைப் போட்டு இருந்தார்கள். அந்தத் தோட்டங்களுக்கான உரத்தைப் பத்துமலைக் குகைகளின் உட்பாகங்களில் இருந்து எடுத்து வந்தார்கள்.

பத்துமலைக் குகைகளில் மில்லியன் கணக்கில் வௌவால்கள். அவற்றின் சாணம் தான் சீனர்களின் காய்கறித் தோட்டங்களுக்கு உரமாகப் பயன்படுத்தப் பட்டன.

பத்துமலையில் உள்ள வௌவால்கள் Eonycteris spelaea எனும் இனத்தைச் சேர்ந்தவை. இவை கொரோனா வைரஸ் (Coronavirus) கிருமிகளுடன் தொடர்பு உள்ளவை அல்ல. Chrysanthemum Bat எனும் வௌவால்கள் தான் கொரோனா கிருமிகளைப் பரப்பியவை. ஆக கவலை வேண்டாமே.



பத்துமலைக் குகைகளில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பூர்வீகக் குடிமக்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். முதன்முதலில் வாழ்ந்த ஆதிவாசிகள் ஆஸ்திரேலியாவின் பெசிசி (Besisi) பூர்வீக இனத்தைச் சேர்ந்தவர்கள். பெசிசி மக்களின் வாரிசுகள் ஆஸ்திரேலியாவில் இன்னும் வாழ்கிறார்கள்.

பெசிசி பூர்வீக மக்கள் முன்பு காலத்தில் பிலிப்பைன்ஸ் தீவுகளில் வாழ்ந்தவர்கள். அங்கே இருந்து தான் கட்டுமரங்களின் வழியாக மலாயா தீபகற்பகத்திற்குள் வந்து இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருத்து கூறுகின்றார்கள்.

இந்த பெசிசி பூர்வீக மக்கள் தான் முதன்முதலில் பத்துமலைக் குகைகளுக்குள் அடைக்கலம் அடைந்தவர்கள்.

பெசிசி மக்களின் குடியேற்றத்திற்குப் பின்னர் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து தான் மலாயாவின் இப்போதைய பூர்வீகக் குடிமக்களான தெமுவான் (Temuan) பூர்வீக இனத்தவர் பத்துமலைக்கு வந்து இருக்கிறார்கள்.

தெமுவான் பூர்வீக மக்கள் பர்மாவில் இருக்கும் யூனான் (Yunnan) காடுகளில் இருந்து குடி பெயர்ந்தவர்கள்.

சான்று: Steven L. Danver (2015). Native Peoples of the World: An Encyclopedia of Groups, Cultures and Contemporary Issues.

மனசில் ஒரு விசயம் பட்டது. சொல்கிறேன். அப்பேர்ப்பட்ட குமரிக் கண்டமே தங்களுக்குச் சொந்தம் என்று சம்பந்தமே இல்லாமல் சிலர் சொல்கிறார்கள். அப்படி இருக்கும் போது பத்துமலை என்பது அவர்களின் வாரிசு என்று சொல்லி சொந்தம் கொண்டாடுவதற்கு ரொம்ப நேரம் பிடிக்காது. சொல்ல முடியாதுங்க.

எதிர்காலத்தில் பத்துமலையில் என்ன நடந்தது என்று நம் பேரப் பிள்ளைகளுக்குத் தெரிய வேண்டும். அதே சமயத்தில் மலேசிய இந்தியர்களின் வரலாற்றுச் சுவடுகளும் காப்பாற்றப்பட வேண்டும்..

மேலும் சுவையான ஆனால் அதிசயமான பத்துமலை செய்திகளுடன் நாளை சந்திக்கிறேன்.

(தொடரும்)

06 பிப்ரவரி 2020

பத்துமலை வரலாறு - 1

தமிழ் மலர் - 06.02.2020

ஒரு காலத்தில் காட்டு விலங்குகள் புனிதம் பேசிய புண்ணிய மலை. காட்டுப் புலிகள் பாத யாத்திரை பார்த்த புனித மலை. குகை வாழ் கரடிகள் கபடி ஆட்டம் விளையாடிய தீர்த்த மலை. 




யானைக் களிறுகள் பிளிறிய வண்ணம் கதகளி நடனம் ஆடிய பங்குனி மலை. அதுதான் பல கோடி மக்களின் அகத்திய மலை. அதுவே இப்போதைக்கு பத்துமலை.

அங்கே அந்தி மந்தாரத்து வானரங்கள் வண்ணமய நாட்டியங்கள் ஆடி இருக்கின்றன. வலசை போகும் வௌவால் கூட்டங்கள் வான் முட்ட பறந்து இருக்கின்றன. சொல்லப் போனால் பத்துமலை என்பது பல கோடி ஜீவராசிகளின் கண்கவர் சொர்க்க பூமியாக விளங்கி இருக்கிறது.

இது எல்லாம் சில பல ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வந்த காட்டு ஜீவன்களின் கச்சேரி மேடையின் மலைவாசல். ஆனால் இப்போது அப்படி இல்லீங்க. வியாபாரத் தலமாகக் கைமாறிப் போன கலைவாசல். மன்னிக்கவும் வணிகத்தின் வலைவாசல்.



தமிழ் மலர் - 06.02.2020

கிரேக்க நாட்டு கிளேடியேட்டர்கள் போல ஒரு காலத்தில் யானைகளும் புலிகளும்; சிறுத்தைகளும் கரடிகளும்; ஆந்தைகளும் கோட்டான்களும் முட்டி மோதிக் கொண்ட ஒரு போர்க் களமாகவும் பத்துமலை புகழ் பெற்று விளங்கி இருக்கிறது. அப்படி நான் சொல்லவில்லை. வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன.

பத்துமலைக்கு அருகாமையில் ஓர் ஆறு. அதன் பெயர் பத்து ஆறு (Sungai Batu). அந்த ஆற்றின் பெயரே பத்துமலைக்கும் வைக்கப் பட்டதாக பலரும் இன்று வரை நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

பத்து என்றால் மலாய் மொழியில் கல் என்று பொருள். ஆக அந்த வகையில் பத்துமலையின் பெயர் கல் மலை எனும் பெயரில் இருந்து திரிந்து வந்து இருக்கலாம் என்று நினைப்பதில் தவறு உள்ளது. முதலில் அதைச் சொல்லி விடுகிறேன்.



தம்புசாமி பிள்ளையின் கொள்ளுப் பேத்தி
சாந்த குமாரி (Santa Kumarie)

பத்துமலைக்கு பத்துமலை எனும் பெயர் எப்படி வந்து இருக்கலாம் என்பதைப் பற்றி கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம்.

1890-ஆம் ஆண்டுகளில் தம்புசாமி பிள்ளை (Thamboosamy Pillay) அவர்களால் பத்துமலை தோற்றுவிக்கப்பட்டது. தெரிந்த விசயம்.

இந்தப் பத்துமலை உருவாக்கம் பெறுவதற்கு முன்பே முருகப் பெருமானுக்கு உலகம் முழுமைக்கும் ஒன்பது பெரும் கோயில்கள் இருந்து இருக்கின்றன.

அவற்றுள் ஆறு முருகன் கோயில்கள் இந்தியாவில் இருந்து இருக்கின்றன. மூன்று முருகன் கோயில்கள் மலாயாவில் இருந்து இருக்கின்றன.

மலாயாவில் முதன்முதலாகத் தோற்றுவிக்கப்பட்ட முருகன் கோயில் எது தெரியுங்களா? சொன்னால் ஆச்சரியப் படுவீர்கள். 




ஈப்போவில் உள்ள கல்லுமலைக் கோயில் தான். அதற்கு அந்தப் பெருமை சேர்கிறது. 1880-ஆம் ஆண்டுகளிலேயே தோற்றுவிக்கப்பட்டு விட்டது.

கங்கா நகரம் எனும் மாபெரும் பேரரசு, தைப்பிங் மஞ்சோங் பகுதியில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் உருவானது. இந்தப் பேரரசின் தலைநகரம் புருவாஸ். கெடாவைச் சேர்ந்த ராஜா சர்ஜுனா (Raja Sarjuna) என்பவர் உருவாக்கினார்.

அல்லது கம்போடியாவில் இருந்து வந்த கெமர் (Khemer) பரம்பரையினர் உருவாக்கி இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். ஆராய்ச்சி மேல் ஆராய்ச்சி செய்கிறார்கள்.

ஆனால் ஒரு திட்டவட்டமான முடிவு எடுக்க முடியவில்லை. உருப்படியாக ஒரு வரலாற்றுத் தீர்வையும் காண முடியவில்லை. 



ஆமாம் இருக்கிற இந்திய வரலாற்றுச் சான்றுகளை எல்லாம் மூடி மறைத்து அரக்குப் போட்டு சீல் வைத்துக் கொண்டு இருந்தால் எப்படிங்க உண்மையான வரலாறு வெளியே வந்து மூச்சு விடும்.

அதுதான் மலாயா இந்தியர்களின் வரலாற்று உண்மைகளை எல்லாம் கழுத்தைப் பிடித்து நெரிக்கிறார்களே. விடுங்கள். நெஞ்சு எரிச்சலில் சின்னதாய் ஒரு வயிற்றெரிச்சல். 

கங்கா நகரப் பேரரசின் (Gangga Negara) காலத்தில் கிந்தா ஆற்றின் வழியாக இந்திய வணிகர்கள் ஈப்போ கல்லுமலை கோயில் வரை வந்து இருக்கிறார்கள். ஈப்போவில் வணிகம் செய்து இருக்கிறார்கள்.

கிந்தா ஆற்றின் துறைமுகம் தெலுக் இந்தானில் இருக்கிறது. ஆக அப்படி புருவாஸ், பீடோர் பகுதிகளுக்கு வந்த இந்திய வணிகர்கள் தான் மலாயாவில் முதல் முருகன் கோயிலை ஈப்போவில் உருவாக்கி இருக்கிறார்கள். 




அடுத்து வருவது பினாங்கு தண்ணீர்மலைக் கோயில் (Tanneermalai Temple). இது மலாயாவில் இரண்டாவது பழமையான முருகன் கோயில்.

1818-ஆம் ஆண்டு நகரத்தார்கள், பினாங்கில் தொழில் புரியத் தொடங்கினார்கள். 1850-ஆம் ஆண்டு பினாங்கு ஸ்த்ரீட் (Penang Street) 138-ஆம் எண் கொண்ட ஒரு கடையில் கோயில் வீட்டை அமைத்தார்கள். கோயில் வீடு என்றால் ஒரு வீட்டிற்கு உள்ளேயே ஒரு கோயிலை அமைத்துக் கொள்வது.

அந்த கோயில் வீடு அதே முகவரியில் இன்றும் அழகுடன் காட்சி அளிக்கிறது. பினாங்குத் தைப்பூசத்தின் ரத ஊர்வலம் இங்கே இருந்து தான் இன்றும் தொடங்குகிறது. அதை நினைவில் கொள்வோம்.

1854-ஆம் ஆண்டு வாக்கில் தண்ணீர்மலைப் பகுதியில் கோயில் அமைப்பதற்காக ஐந்து ஏக்கர் நிலத்தை நகரத்தார்கள் வாங்கினார்கள். இந்த ஐந்து ஏக்கரில் ஒரு பகுதி இன்று வணிகக் கட்டடங்களுக்காக விற்கப்பட்டு விட்டது. 




இன்றைக்கு வாட்டபால் தங்கும் விடுதி (Hotel Waterfall) அமைந்த இடம் இருக்கிறதே அந்த இடம் முதன்முதலில் வாங்கப்பட்ட நிலத்திற்குள் உட்பட்டது தான்.

அந்த நிலம் விற்கப்பட்டு, பின்னர் தமிழ் நாட்டில் ஒரு கோயில் கட்டப்பட்டது எனும் ஒரு குறைபாடும் உள்ளது. என்ன நடந்தது என்று உறுதியாகத் தெரியாமல் நாம் கருத்து சொல்ல முடியாது. சரிங்களா.

தண்ணீர்மலைப் பகுதியில் 1857-ஆம் ஆண்டில் தண்டாயுதபாணி ஆலயம் நிறைவு பெற்றது. அதே அந்த ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி குடமுழுக்கு விழாவும் நடை பெற்றது. வருடத்தைக் கவனியுங்கள்.

தமிழகம் காரைக்குடியில் இருந்து கலைஞர்கள், சிற்பிகளைக் கொண்டு வந்தார்கள். செட்டிநாட்டு நகரத்தார்களின் கலைச் சாயலில் தண்டாயுதபாணி ஆலயத்தையும் கட்டி முடித்தார்கள். 




முருகப்பன், முத்தப்பன், குமரப்பன், தேனப்பன், பழனியப்பன், வேலாயுதம், சுப்பையா, சுப்பிரமணியன், சுவாமிநாதன், சிங்காரம், தண்ணீர்மலை என்று நகரத்தார்கள் தம் குழந்தைகளுக்கு முருகன் நினைவாகவே பெயர் சூட்டி பெருமை செய்தார்கள்.

ஆகவே தண்ணீர்மலை எனும் பெயர் முதன்முதலில் மலாயாவில் தோன்றிய பெயராகத்தான் இருக்க வேண்டும். அப்படித் தான் சொல்லத் தோன்றுகிறது.

முன்பு சுங்கை பட்டாணியில் தண்ணீர்மலை என்று ஒரு நண்பர் இருந்தார். அவரைப் பலரும் தண்ணிமலை தண்ணிமலை என்றே அழைப்பார்கள். உண்மையில் தண்ணீர்மலை என்றுதான் அழைக்க வேண்டும். இன்னும் ஒரு விசயம்.

தண்ணீர்மலை என்று பெயர் வைத்தாலோ என்னவோ தெரியவில்லை. அவருக்கு அடிக்கடி நெஞ்சில் நீர் கோர்த்துக் கொள்ளும். அண்மையில் அமரர் ஆனார். அற்புதமான தமிழ் ஆர்வலர். 




ஆக தண்ணீருக்கும் தண்ணீர்மலைக்கும் ரொம்பவே ஒட்டின உறவு இருப்பதை நன்றாகவே உணர முடிகிறது. சரி. பத்துமலை கதைக்கு வருவோம்.

அடுத்து மூன்றாவதாக வருவது மலாக்காவில் உள்ள சன்னியாசிமலைக் கோயில் (Sannasimalai Temple). இதுவும் நகரத்தார்கள் கட்டிய கோயில் தான்.

இந்தக் கோயிலின் வரலாறு மலாக்கா நீரிணையில் உள்ள புலாவ் பெசார் தீவில் இருந்து தொடங்குகிறது. அதுவும் ஒரு நீண்ட கதை. இந்தக் கோயிலைப் பற்றி பின்னர் ஒரு கட்டுரையில் பார்ப்போம்.

உலகத்தில் கட்டப்பட்ட முருகன் கோயில்களில் பத்துமலை கோயில் பத்தாவதாகக் கட்டப் பட்டதால் அதற்கு பத்தாம் கோயில் என்று பெயர் வைத்தார்கள். அது மட்டும் அல்ல.

இந்தப் பத்தாம் கோயில் கோலாலம்பூர் அம்பாங் சாலையில் இருந்து பத்தாம் கட்டையில் இருந்ததால் அந்த இடத்திற்கு பத்துமலை எனும் பெயர் வந்து சேர்ந்ததாகவும் சொல்லப் படுகிறது.

(Batu Caves also referred as 10th Caves or Hill for Lord Muruga as there are six important holy shrines in India and four more in Malaysia)




முன்பு காலத்தில் ஒரு மைல் தூரத்தைக் குறிக்கும் கல்தூணுக்கு கட்டை என்று பெயர். அன்றைய காலத்தில் அந்தத் தூண்கள் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட கட்டைகளாக இருந்தன.

அதனால் தான் மூனாம் கட்டை, அஞ்சாம் கட்டை, ஆறாம் கட்டை எனும் பெயர் வழக்கு நிலவி வந்தது. இன்னும் நிலவி வருகிறது.

மலாக்காவில் இருக்கும் டுரியான் துங்கல் நகரத்தை இன்றும் கூட பத்தாங்கட்டை என்றே அழைக்கிறார்கள். நான் பிறந்து வளர்ந்த காடிங் தோட்டத்தை பன்னிரண்டாம் கட்டை என்று இன்றும் அழைக்கிறார்கள்.

பத்துமலை மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு குகைக் கோயில். சுண்ணாம்புக் குன்றுகளில் இயற்கையாக அமைந்த குகைகளின் உட்பாகத்தில் அமைந்து உள்ள கோயில். கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே கோம்பாக் (Gombak) மாவட்டத்தில் உள்ளது.

இந்தக் குகைக் கோயிலின் உள்ளே பல குகைகள் உள்ளன. பத்துமலைச் சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.




1860-ஆம் ஆண்டுகளில் பத்துமலைப் பகுதிகளில் வாழ்ந்த சீனர்கள் அந்தப் பகுதியில் காய்கறிகள் பயிரிட்டு வந்தனர். அவர்களுடைய விவசாயத்திற்கு உரம் தேவைப் பட்டது.

ஆகவே அவர்கள் பத்துமலைக் குகைகளில் இருந்து வௌவால் சாணத்தைத் தோண்டி எடுத்து வந்து பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அதற்கு முன்னர் அதாவது சீனர்கள் வருவதற்கு முன்னரே இந்தக் குகைகளில் தெமுவான் (Temuan) எனும் மலேசியப் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

இவர்களும் பத்துமலையைத் தங்களின் புனிதத் தலமாகக் கருதி பயன்படுத்தியும் வந்து உள்ளனர். இதற்கும் சான்றுகள் உள்ளன.

1878-ஆம் ஆண்டு பத்துமலைப் பகுதிகளில் பரவி இருந்த சுண்ணாம்புக் குன்றுகளை ஆய்வு செய்த அமெரிக்க தாவரவியலாளர் வில்லியம் ஹோர்னடே (William Hornaday) என்பவர் பத்துமலையைப் பற்றி வெளியுலகத்திற்கு அறிவித்தார். 




(Batu Caves first came to public attention in 1878 when American naturalist William Hornaday)

பத்துமலையின் பெயர் புகழ் அடைந்தது. அதன் பின்னர் 14 ஆண்டுகள் கழித்து 1891-ஆம் ஆண்டு தான் தம்புசாமிப் பிள்ளை எனும் தொழிலதிபர் அங்கு ஒரு முருகன் கோயிலைக் கட்டினார்.

தம்புசாமிப் பிள்ளை ஒருமுறை பத்துமலைக் குகைக்குப் போய் இருக்கிறார். அந்தக் குகையின் நுழைவாயில் வேல் வடிவத்தில் அமைந்து இருந்ததைக் கண்டு பிரமித்துப் போனார். தம்புசாமிப் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி சாந்த குமாரி (Santa Kumarie) இதைச் சொல்லி இருக்கிறார்.

தம்புசாமிப் பிள்ளை கோலாலம்பூரில் வாழ்ந்த போது சுற்று வட்டாரங்களில் நிறைய இந்தியர்கள் குடியேறி இருந்தனர். இவர்களில் பெரும்பாலோர் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள். இந்து சமயத்தை வழிபடுபவர்கள். 




ஆகவே அவர்களுக்கு ஒரு வழிபாட்டு இல்லத்தை உருவாக்கித் தரலாம் என்று ஆசைப் பட்டார்.

1875-ஆம் ஆண்டு வாக்கில் கிள்ளான் ஆற்றோரத்தில் தம்புசாமி பிள்ளை ஒரு மாரியம்மன் வழிபாட்டுத் தளத்தைக் கட்டினார். அது ஒரு சின்னக் கோயில்.

கோலாலம்பூரில் முதன் முதலாகக் கட்டப்பட்ட அந்த மாரியம்மன் வழிபாட்டுத் தளத்தில்தான் இப்போது ’பாங்குனான் பெர்த்தானியான்’ (Bangunan Bank Pertanian) உள்ளது.

மேல் விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அந்தக் காலத்தில் அந்தக் கோயில் எப்படி இருந்து இருக்கும் என்பதைக் கற்பனையில் மட்டுமே நினைவு படுத்திக் கொள்ள முடியும். அவருடைய குடும்பத்தார் சுற்றத்தாரின் வழிபாட்டிற்காகத் தான் அந்த வழிபாட்டுத் தளம் முதலில் அமைக்கப் பட்டது.

அந்தத் தளத்திற்கு அருகாமையில் வாழ்ந்த இந்துப் பெருமக்களும் அந்தச் சிறுகோயிலைப் பயன்படுத்திக் கொண்டார்கள். பின்னாட்களில் அந்தச் சிறுகோயிலின் பின்னோடியாக மகா மாரியம்மன் ஆலயம் உருவானது. தம்புசாமி பிள்ளையாரின் குடும்ப வாரிசாகவும் மாறிப் போனது. அதுவும் நீண்ட நெடிய வரலாறு.

இருந்தாலும் 1929-ஆம் ஆண்டு வாக்கில் பொது மக்களில் இருவர் மகாமாரியம்மன் ஆலயத்தின் மீது வழக்குத் தொடர்ந்தார்கள். 




அதாவது அந்த ஆலயத்தை ஒரு குடும்பம் மட்டுமே நிர்வாகம் செய்கிறது. அதைப் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து நிர்வாகம் செய்ய வேண்டும் எனும் வழக்குப் பதிவு.

எழுபது ஆண்டுகளுக்கு முன்பே மகாமாரியம்மன் ஆலயத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டு விட்டது. அந்த வழக்குப் பரிமாணம் இன்றும் தொடர்கிறது.

அந்த வழக்குப் பதிவு தொடர்பாக 1930-ஆம் ஆண்டு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது.

ஒரு செருகல். அந்தக் காலக் கட்டத்தில் மலாயன் இரயில்வேயில் வேலை செய்தவர்கள்; கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தில் வேலை செய்தவர்கள்; பொது மராமத்துப் பணிகளில் ஈடுபட்டவர்கள் என 14 உபயக்காரர்கள், குழுக்களாக உபயங்கள் செய்து வந்தார்கள்.

இந்த உபயக்காரக் குழுக்களில் இருந்து ஒவ்வொரு குழுவிலும் மூன்று மூன்று பிரதிநிதிகளாகக் கோயிலை நிர்வாகம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு என்று சொல்வதைவிட ஆணை பிறப்பித்தது என்று சொன்னால் சரியாக அமையும்.

ஆக அப்போது 1930-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அந்த நீதிமன்றத்தின் ஆணை இன்றைய நிலையில் இப்போதைக்குப் பின்பற்றப் படுகிறதா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. மன்னிக்கவும். பில்லியன் டாலர் கேள்வி.

1 எம்.டி.பி. நிதி மோசடிக்குப் பின்னர் மில்லியன் கணக்கு எல்லாம் சூசூபி.. இப்போதைக்கு எல்லாமே பில்லியன் கணக்குத் தான். கிண்டர்கார்டன் பிள்ளைகள் கூட பில்லியன் என்பதற்கு எத்தனைச் சுழியங்கள் என்பதைச் சுழியம் போட்டுக் காட்டுகிறார்கள்.

ஆக அந்த மகா மாரியம்மன் ஆலயம் இந்த 2000-ஆம் ஆண்டுகளில் தனியார் சொத்தாக மாறிப் போய் கண்ணீர் வடிக்கிறது. அந்தக் கதை ஒரு சோகமான கதை என்று நான் சொல்லமாட்டேன்.

அதாவது புனிதம் பேசும் புண்ணியம் மலையின் கணக்கு வழக்குகளில் கண்ணியம் காக்கப்படவில்லை என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வருகிறேன்.

(தொடரும்)





19 ஜனவரி 2020

அல்தான்தூயா அமளி துமளிகள் - 1

தமிழ் மலர் - 17.01.2020

அல்தான்தூயா நல்ல ஓர் அழகிய பெண்மணி. அற்புதமாய் அழகு அழகாய் நடை பயின்ற பெண்ணோவியம். மங்கோலிய மண்ணின் மாதுளம் மடந்தை. மலேசிய வளாகத்தில் மாசு தூசு; அமளி துமளிகளை வாரி இறைத்த பெதும்பை. அரசியல்வாதிகள் சிலரைச் சொக்கட்டான் காய்களாக மாற்றிப் போட்ட பேரிளம்பெண். 




அதையும் தாண்டிய நிலையில் கோடிக் கோடியான பணத்திற்கு  ஆசைப் பட்டவர் என்றும் சொல்கிறார்கள். கத்தைகளுக்கு நடுவில் மெத்தையைத் தட்டிப் பார்த்தவர் என்றும் சொல்கிறார்கள். தலையணைக்கு மேலே  மர்மஜாலம் காட்டிய மாபெரும் மனிதப் பெண்ணகம் என்றும் சொல்கிறார்கள். நமக்குத் தெரியாது. சொல்பவர்கள் சொல்லட்டும்.

அல்தான்தூயா அற்ப வயதிலேயே ஆள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டார். பாவம். ஒரு பெரிய பெண் பாவம்.

அல்தான்தூயா பற்றி இணையத் தளங்களிலும், யூடியூப் சமூக ஊடகத்திலும் நூற்றுக் கணக்கான செய்திகள். நூற்றுக் கணக்கான படங்கள். நூற்றுக் கணக்கான காணொலிகள். எதைப் பார்ப்பது எதை விடுவது என்று தெரியவில்லை. எதைப் பற்றி விமர்சனம் செய்வது என்றும் தெரியவில்லை. 



எதையாவது இடக்கு முடக்காக எழுதப் போய் அப்புறம் பெரிய ஓர் இக்கட்டான நிலை ஏற்படலாம். நாடு போகிற போக்கில் நாளைக்கு என்ன நடக்குமோ எனும் புரியாத ஓர் அச்ச நிலை. ஆக ஒவ்வோர் எழுத்தையும் எடை போட்டு எடை நிறுத்தி எழுத வேண்டிய நிலை.

1 எம்.டி.பி. வழக்கு ஓடிக் கொண்டு இருக்கிறது. அந்தச் சாக்கில் இந்த அல்தான்தூயா பெயரும் அடிக்கடி தலை காட்டி விட்டுப் போகிறது. மக்களும் பேசுகிறார்கள். ஆக நாமும் கூட்டத்தோடு கூட்டமாய்க் கொஞ்சம் தூசு தட்டிப் பார்ப்போமே. சரிங்களா.




அல்தான்தூயா வாழ்க்கை வரலாறு வருகிறது. பாரபட்சம் இல்லாமல் எழுதி இருக்கிறேன். எந்த ஓர் அரசியல்வாதியையும் இதில் சம்பந்தப் படுத்திப் புண் படுத்துவது நம்முடைய நோக்கம் அல்ல. போதுமான சான்றுகளுடன் எழுதுகிறேன். இது ஒரு நடுநிலைமையான அலசல்.

அல்தான்தூயாவின் கொலை வழக்கு மறுவிசாரணை செய்யப்படும் என்று இப்போதைய பிரதமர் சொல்கின்றார்.

சிலாங்கூர் ஷா ஆலாம், புஞ்சாக் ஆலாம் காட்டுப் பகுதியில் ஒரு பெண்ணின் உயிர் விலை பேரம் பேசப்பட்டு உள்ளது. அந்தப் பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதுவே அனைத்து நெஞ்சங்களின் எதிர்பார்ப்புகள்.




அல்தான்தூயாவின் பிறப்புப் பெயர் அல்தான்தூயா சாரிபூ பாயாஸ் காலன் (Altantuyaa Shaariibuu Bayasgalan). மங்கோலியா உலான் பத்தூர் நகரில் (Ulaan Bataar) 1979 பிப்ரவரி 26-இல் பிறந்தவர்.

குடும்பத்தின் மூத்த மகள். தந்தையாரின் பெயர் சாரிபூ செத்தெவ் (Shaariibuu Setev). இவர் ஒரு மருத்துவர். மங்கோலியா தேசியப் பல்கலைக்கழகத்தில் தகவல் கல்வித் துறை இயக்குநராகவும் மனோவியல் பேராசிரியராகவும் பணி புரிந்தவர். இப்போது மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டு இருக்கிறார்.

தாயாரின் பெயர் எஸ்.அல்தான் செத்தெக் (Sh Altantsetseg). இவர் மங்கோலியாவில் ரஷ்ய மொழி பயிற்றுவிக்கும் ஓர் ஆசிரியை. பெற்றோர்கள் ரஷ்யாவில் (St Petersburg) பணி புரிந்தவர்கள். அதனால் அல்தான்தூயாவிற்கு 12 வயதாகும் வரை ரஷ்யாவில் தங்கி, தொடக்கக் கல்வியைப் படித்து வந்தார். 




மங்கோலிய, ரஷ்ய, சீன, ஆங்கில, பிரெஞ்சு மொழிகளில் அல்தான்தூயா சரளமாகப் பேசக் கூடியவர்.

தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் மங்கோலியாவிற்குத் திரும்பினார். 1966-ஆம் ஆண்டில் மாடாய் (Maadai) எனும் மங்கோலியப் பாடகரைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது அல்தான்தூயாவிற்கு வயது 18. மாடாய்க்கு வயது 22.

மங்கோலிய மொழியில் கார் சார்னாய் (Khar Sarnai) (தமிழில்: கறுப்பு ரோஜா) எனும் இசைக் குழுவில் அல்தான்தூயாவின் கணவர் மாடாய் ஒரு பிரபலமான பாடகர். இவர்களின் திருமண வாழ்க்கை இரு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 




மாடாய் அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்ததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள். அதனால் குடும்ப உறவில் சலசலப்புகள் கலந்த விரிசல்கள். ஜூன் 1998-இல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பு அல்தான்தூயாவிடம் வழங்கப் பட்டது.

விவாகரத்திற்குப் பின் அல்தான்தூயா தன்னுடைய மகனுடன் பெற்றோரின் இல்லத்தில் வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் அவர் நவநாகரிகச் சமுதாயத்தின் நவீனத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 

சில மாதங்களில் எஸ். குனிக்கூ (S.Khunikhu) எனும் மங்கோலிய வடிவமைப்பாளரின் மகனின் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணமும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளில் மறுபடியும் ஒரு விவாகரத்தில் போய் முடிந்தது. ஆனால் குழந்தைகள் எதுவும் இல்லை. 




அதன் பின்னர் வேறு ஒரு மங்கோலிய ஆடவருடன் நட்பு ஏற்பட்டது. அவர் மூலமாக திருமணத்திற்கு அப்பாற்பட்டு இரண்டாவது குழந்தை. இரு குழந்தைகளும் அல்தான்தூயாவின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தனர்.

முதல் திருமணத்திற்குப் பின்னர் 1996 நவம்பர் மாதம் உலான் பத்தூரில் இருக்கும் ஒத்கோண்டெஞ்சர் (Otgontenger University) எனும் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பிற்காகப் பதிந்து கொண்டார். அந்தப் படிப்பையும் தொடரவில்லை.

வகுப்பிற்கு முறையாக வருவது இல்லை. தேர்வுகளையும் சரியாக எழுதுவது இல்லை. அந்தச் சமயத்தில் அவர் தாய்மை அடைந்து இருந்தார். அதனால் 1997 ஜனவரி மாதம் பல்கலைக்கழகத்தில் இருந்து விலகிக் கொண்டார்.




இரண்டாவது விவாகரத்திற்குப் பின்னர் அல்தான்தூயா வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்து போனார். அதை மறப்பதற்கு 2000-ஆம் ஆண்டு பாரிஸ் நகரத்திற்குச் சென்றார்.

அங்கு ஒரு மாடலிங் பள்ளியில் பதிந்து கொண்டார். இந்த முறை அக்கறையுடன் பயிற்சிகளை மேற்கொண்டு மாடலிங் துறையில் சான்றிதழைப் பெற்றார்.

பாரிஸ் நகரில் இருந்து மங்கோலியா திரும்பியதும் மாடலிங் துறையில் அவர் ஈடுபடவில்லை. மாறாக நெசவுத் துணி வியாபரத்தில் ஈடுபட்டார். சீனாவில் இருந்து துணிமணிகளை வரவழைத்தார்.

ஷாங்காய், பெய்ஜிங், ஹாங்காங், தைவான் போன்ற இடங்களுக்கு அடிக்கடி பயணங்களை மேற்கொண்டார். வணிகப் பிரபலங்களின் தொடர்புகளும் கிடைத்தன. மாடலிங் துறையில் புகழ்பெற வேண்டும் என்று அல்தான்தூயா தொடக்கக் காலத்தில் ஆசைப் பட்டார். ஆனால் கடைசி வரை அது நடக்காமல் போய் விட்டது.




பிரபலங்களின் தொடர்புகளினால் சீனா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் சென்று வந்தார். இவர் மலேசியாவிற்கு முதல் முறையாக 1995-ஆம் ஆண்டிலும் இரண்டாவது முறையாக 2006-ஆம் ஆண்டிலும் இரு முறைகள் வந்து இருக்கிறார்.

2004-ஆம் ஆண்டு ஹாங்காங் நகரில் நடைபெற்ற ஓர் அனைத்துலக வைரக் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக அல்தான்தூயா அங்கு சென்று இருந்தார்.

அந்தக் கட்டத்தில் மலேசிய உத்திப்பூர்வ ஆய்வு மையத்தில் (Malaysian Strategic Research Centre), பாதுகாப்பு பகுத்தாய்வாளராக (Defense Analyst) இருந்த அப்துல் ரசாக் பாகிந்தா என்பவரின் அறிமுகம் கிடைத்தது.  அந்த அறிமுகம் நட்பாக மாறி கடைசியில் ஒரு நெருக்கமான உறவு முறைக்கும் வழிகோலியது.

மலேசியாவின் மூத்த அரசியல்வாதி ஒருவர், அல்தான்தூயாவை அப்துல் ரசாக் பாகிந்தாவிற்கு அறிமுகம் செய்து வைத்ததாகச் சொல்லப் படுகிறது. அதன் பின்னர் ரசாக் பாகிந்தாவுடன் அல்தான்தூயா பாரிஸ் நகரத்திற்குச் சென்றார். 




மலேசிய அரசாங்கம் பிரான்ஸ் நாட்டில் இருந்து இரு நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் காலக் கட்டம். அப்போது அங்கே நடந்த பேச்சு வார்த்தைகளில் அல்தான்தூயா ஒரு மொழிப் பெயர்ப்பாளராகவும் பணி புரிந்தார்.

பாரிஸில் இருக்கும் போது அல்தான்தூயாவிற்கும் அப்துல் ரசாக் பாகிந்தாவிற்கும் நெருக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள். பின்னர் அல்தான்தூயா, ரசாக் பாகிந்தாவின் வைப்பாட்டியாகவே வாழ்ந்தார்.

1961-இல் பிறந்த அப்துல் ரசாக் பாகிந்தாவிற்கு (Abdul Razak Baginda) வயது 52. அல்தான்தூயாவிற்கு வயது 25. ’ஐந்தும் இரண்டும்’ எனும் எண்கள் விளையாடிய விளையாட்டைப் பாருங்கள்.

மலேசியாவின் பிரபலமான வலத் தளங்களில் ஒன்றான மலேசியா டுடே தளத்தில் அதன் ஆசிரியர் ராஜா பெத்ரா கமாருடின் (Raja Petra Kamaruddin), அல்தான்தூயாவின் இறப்பில் நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்டு உள்ளார் என்பதை முதன்முதலில் தெரிவித்தார். 

அதை நஜீப் துன் ரசாக் வன்மையாக மறுத்தார். மறுத்தும் வருகிறார். நஜீப் மீதான குற்றச்சாட்டை ராஜா பெத்ரா கமாருடின் பின்னர் மீட்டுக் கொண்டார்.




தவறான அறிக்கையை வெளியிட்டதற்காக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டதும் ராஜா பெத்ரா கமாருடின் தன் மனைவி பிள்ளைகளை மலேசியாவிலேயே விட்டுவிட்டு இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்றார்.

மலேசிய அரசாங்கம் 2002-ஆம் ஆண்டில் இரு ஸ்கோர்ப்பின் (Scorpene) நீர்மூழ்கிக் கப்பல்களை 4.7 பில்லியன் ரிங்கிட் செலவில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கியது. ஒரு பில்லியன் என்றால் ஆயிரம் மில்லியன்கள். அதாவது நூறு கோடி. 

அதில் 114 மில்லியன் யூரோ அதாவது மலேசிய ரிங்கிட்: 464 மில்லியன். முகவர் சேவைக் கட்டணமாக அர்மாரிஸ் எனும் ஸ்பானிய நிறுவனம் வழங்கியது. அதாவது கமிஷன்.

அர்மாரிஸ் (Armaris) நிறுவனம் என்பது நீர்மூழ்கிக் கப்பல்களின் விற்பனைப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட நிறுவனம் ஆகும். அந்த முகவர் சேவைக் கட்டணம் ரசாக் பகிந்தாவின் கட்டுப்பாட்டில் இருந்த பெரிமேக்கர் (Perimekar) எனும் நிறுவனத்திடம் வழங்கப் பட்டது.

அதை அறிந்து கொண்ட அல்தான்தூயா தனக்கு 500,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்தால் இந்த முகவர் சேவைக் கட்டண விவகாரம் வெளியுலகிற்கு தெரிவிக்கப்பபட மாட்டாது என்று ரசாக் பகிந்தாவை மிரட்டிப் பணம் பறிக்க முயன்று இருக்கிறார்.

A letter written by Altantuyaa and found after her death shows that she had been blackmailing Mr. Baginda, seeking US$500,000 to remain silent about her knowledge of the deal.

சான்று: PI Bala’s lawyer to testify at Paris Scorpène tribunal,http://www.malaysia-today.net/mtcolumns/newscommentaries/58266-pi-balas-lawyer-to-testify-at-paris-scorpene-tribunal. Free Malaysia Today.

2006 அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி அல்தான்தூயா கடைசி முறையாக மலேசியாவிற்கு வந்தார். அவருடன் கூடவே இருவர் வந்தனர். ஒருவர் நமீரா கெரில்மா (Namiraa Gerelmaa) வயது 29 ; இன்னொருவர் உரிந்தூயா கால் ஒச்சிர் (Urintuya Gal-Ochir) வயது 29. இவர்களில் நமீரா என்பவர் அல்தான்தூயாவின் ஒன்றுவிட்ட சகோதரி ஆவார்.

ரசாக் பகிந்தாவைச் சந்தித்துப் பேசவே அல்தான்தூயா கோலாலம்பூருக்கு வருகை புரிந்ததின் முக்கிய நோக்கமாகும்.

கோலாலம்பூர், ஜாலான் ஹாங் லெக்கீர் சாலையில் இருக்கும் மலாயா ஓட்டலில் அவர்கள் தங்கினார்கள். ரசாக் பகிந்தா தங்கி இருக்கும் வீட்டைத் தேடிப் பிடிப்பதற்காக ஆங் சோங் பெங் எனும் தனியார் துப்பறிவாளரையும் சேவையில் அமர்த்திக் கொண்டார்கள்.

(தொடரும்)

சான்றுகள்:

1. Sirul ready to reveal all in Altantuya case - if he gets full pardon -  https://www.thestar.com.my/news/nation/2018/05/19/sirul-ready-to-reveal-all-in-altantuya-case---if-he-gets-full-pardon/

2. Altantuya married twice, had two kids - https://web.archive.org/web/20070912202145/http://thestar.com.my/news/story.asp?file=%2F2006%2F11%2F15%2Fnation%2F16020640&sec=nation

3. French court to consider Altantuya murder in Scorpene case - https://www.malaymail.com/news/malaysia/2013/08/13/lawyer-french-court-to-consider-altantuya-murder-in-scorpene-case/509049#sthash.aKDBgw6o.dpuf