20 மார்ச் 2020

கொரோனா கோவிட் 19 - மலேசியா: 1

மலேசிய இராணுவம் களம் இறங்குகிறது

கொரோனா கோவிட் -19 தொற்றைத் தடுக்கும் நோக்கத்தில் பொதுமக்கள் தங்களின் வீட்டிலேயே இருக்க வேண்டும்; வெளியே செல்லக் கூடாது என்று மலேசிய அரசாங்கம் பொது நடமாட்டக் கட்டுப்பாடு (Movement Control Order அல்லது Restriction of Movement Order) உத்தரவைப் பிறப்பித்தது. இருந்தும் பலர் அந்த உத்தரவைப் பொருட்படுத்துவது இல்லை.


குடும்பத்தோடு வெளியே சென்று கடைகளில் சாப்பிடுகின்றனர். குடும்ப உறுப்பினர்களைப் பொதுப் பூங்காக்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு என்பது தங்களுக்கு கிடைத்த விடுமுறையாக சிலர் நினைத்துக் கொள்கின்றனர்.

அரசாங்கத்தின் பொது உத்தரவைத் தொடர்ந்து கண்காணிக்க மலேசியப் போலீஸ் படைக்கு உதவியாக இராணுவம் அழைக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்து உள்ளார். எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (22.03.2020) தொடக்கம் இராணுவம் களம் இறங்குகிறது.


மக்கள் தங்கள் வீடுகளில் இருப்பதை உறுதிச் செய்வதற்கு இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. அரசாங்கம் பிறப்பித்த கட்டளைகளுக்கு மக்கள் தொடர்ந்து மதிப்பு அளிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

முதல் சில நாட்களுக்கு போலீசார் அறிவுரை வழங்குவார்கள். அதற்குப் பின்னர் சட்டத்திற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுப்பார்கள்.

உலகளாவிய செய்திகள்
பாதிக்கப்பட்ட நாடுகள் - 182
பாதிக்கப் பட்டவர்கள் - 253,933
மருத்துவமனையில் - 154,456
குணம் அடைந்தவர்கள் - 89,070
தீவிர சிகிச்சை - 7,465
இன்றைய இறப்புகள் - 379
மொத்த இறப்புகள் - 10,407

மலேசியச் செய்திகள்


பாதிக்கப் பட்டவர்கள் - 1,030
மருத்துவமனையில் - 940
குணம் அடைந்தவர்கள் - 87
தீவிர சிகிச்சை - 26
இறப்புகள் - 3

(20.03.2020 - 08.50 மலேசிய நேரம்)

கொரோனா வைரஸ் கோவிட் 19 - 4

தமிழ் மலர் - 18.02.2020

கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கி விட்டது. அதன் தாக்குதலினால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,890-ஆக அதிகரித்து உள்ளது.
(இந்தக் கட்டுரையைப் பதிவு செய்யும் போது பலியானவர்களின் எண்ணிக்கை 10,050). உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது. 



சீனாவின் ஹுபே (Hubei) மாநிலத்தின் தலைநகரம் வுகான் (Wuhan). அங்கு இருந்து தான் கடந்த டிசம்பர் மாத இறுதி வாக்கில் கொரோனா வைரஸ் (கோவிட் - 19) பரவியது.

தற்சமயம் சீனா நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. மற்ற மற்ற நாடுகளிலும் பரவிக் கொண்டு வருகிறது. சீனா மட்டும் அல்ல. உலகமே கதி கலங்கிப் போய் நிற்கிறது. அங்கே தானே நடக்கிறது… இங்கே இல்லையே என்று அசட்டையாக இருந்து விட வேண்டாம். நம் வீட்டுக் கதவைத் தட்டுவதற்கு ரொம்ப நேரம் பிடிக்காது.

நேற்று 17.02.2020 ஒரே நாளில் வுகான் நகரில்  மட்டும் 100 பேருக்கும் மேல் உயிர் இழந்து உள்ளனர். 2000 பேருக்கும் மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

வுகான் நகரத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் சீனர்கள் மட்டும் அல்ல ஏராளமான வெளிநாட்டு மக்களும் தங்கி இருக்கிறார்கள். அவர்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டுக்கு உள்ளேயே தனிமையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.




இன்னும் ஒரு வேதனையான செய்தி. வுகான் நகரில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த 1,700  மருத்துவ உதவியாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 6 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

ஆக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்கூட இந்த நோய்த் தொற்றில் இருந்து தப்ப முடியவில்லை. அப்பேர்ப்பட்ட கொடிய கிருமி. மருத்துவப் பணியாளர்கள் தங்கள் உடல் முழுவதையும் மூடும் வகையில் பாதுகாப்பு ஆடைகளை அணிந்தபடி தான் பணியாற்றுகிறார்கள். இருந்தாலும் பாதிக்கப் படுகின்றனர்.

உடலில் நுழையும் கிருமி மூன்று நான்கு நாட்கள் வரை அமைதியாக இருக்கும். அதனால் பாதிக்கப் பட்டவருக்கே தெரியாது. அதற்குள் பல கோடிகளாகப் பெருகி விடும். பாதிக்கப் பட்டவரின் உடலில் இருந்து பரவிக் கொண்டே இருக்கும்.

பொது மக்களில் 71,450  பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் மேலும், 2,048 பேருக்குப் புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 11,326 பேருக்கு மோசமான பாதிப்புகள் (Serious or Critical).




மலேசியாவில் 22 பேருக்குப் பாதிப்பு. அவர்களில் 9 பேர் குணம் அடைந்து விட்டனர். சரி.

உலகின் மருத்துவ வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ரோபர்ட் ரெட்பீல்ட் (Dr. Robert Redfield
Director, US Centers for Disease Control and Prevention):

"இந்தக் கொரோனா வைரஸ் அடுத்த ஆண்டு வரை நம்முடன் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இறுதியில் இது ஒரு பருவகால காய்ச்சலாக மாறலாம். சீனாவில் இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நிச்சயமாக இன்னும் கட்டுக்குள் அடங்கவில்லை."

ஹார்வார்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்க் லிப்சிட் (Prof. Marc Lipsitch
Head, Harvard Ctr. Communicable Disease Dynamics):

"இது உண்மையில் ஓர் உலகளாவிய பிரச்சினை. ஒரு வாரம் அல்லது ஒரு சில நாட்களில் போகப் போவது இல்லை. இதைக் கட்டுப்படுத்துவது ரொம்பவும் கடினமாக உள்ளது. ஏன் என்றால், ஒருவர் நோய்வாய்ப் படுவதற்கு முன்பாகவே அவரிடம் உள்ள கிருமிகள் மற்றவர்களிடம் பரவிச் சென்று விடுகின்றன."




"ஆகவே மிக மோசமான ஒரு நிலைமைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நவீன காலங்களில் இது ஒரு மிக மோசமான நோயாக இருக்கலாம்."

சார்ஸ் கிருமிகளைப் பற்றி 2003-ஆம் ஆண்டில் ஆய்வுகள் செய்து, முதன்முதலில் உலகத்திற்குச் சொன்ன பேராசிரியர் நான்சான் சோங் (Prof. Nanshan Zhong, Medical Professor of Guangzhou Medical College).

"2020 ஏப்ரல் மாதத்தில் இந்த நோய் ஒரு முடிவுக்கு வந்துவிடலாம் என்று நினைக்கிறேன். இந்த நோய் ஏன் இன்னும் இனம் காண முடியாத ஒரு தொற்று நோயாக இருக்கிறது. புரியவில்லை. இது உலகப் பிரச்சினை மட்டும் அல்ல. புரியாத உலகப் புதிராகவும் இருக்கிறது."

ஹாங்காங் பல்கலைக்கழகப் பேராசிரியர் பேபிரியல் லியோங் (Prof. Gabriel Leung, Chair of Public Health Medicine, Hong Kong University).

"முறைப்படி கவனிக்கா விட்டால் இந்த நோய் உலக மக்கள் தொகையில் 60% பேரைப் பாதிக்கும். கொரோனா நோய்க் கிருமிகளை வுகான் நகரில் இருந்து முழுமையாக அழிக்கவில்லை என்றால் சீனாவின் மற்ற மற்ற நகரங்களிலும் நோய் வெடிப்பு உண்டாகும். அதுவே உலகின் மற்ற நாடுகளிலும் பரவலாம்."




அமெரிக்கா கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் இயான் லிப்கின் (Prof. W. Ian Lipkin, Epidemiology Director, Columbia University).

"இது ஒரு புதிய வைரஸ். இதைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. இதற்கான மருந்து இல்லை. இது இன்னும் மோசமான ஒன்றாக உருவாகாது என்பதை உறுதிப் படுத்த வேண்டும். அதனால் அனைவரும் கவலைப் படுகிறோம்."

"நம்மிடம் தற்போது தடுப்பூசிகள் அல்லது மருந்துகள் எதுவும் இல்லை. நோய்வாய்ப் பட்டவர்களைத் தனிமைப் படுத்துவது மட்டுமே நமக்கு தெரிந்த ஒரே நிவாரணம்."

இலண்டன் இம்பிரியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் நியால் பெர்குசன் (Prof. Niall Ferguson, Director, Institute for Disease, Imperial College, London)

"சீனாவில் ஒரு நாளைக்கு சுமார் 50,000 புதிய நோய்த் தொற்றுகள் ஏற்படுவதாக நாங்கள் மதிப்பிடுகிறோம். இன்னும் ஒரு மாதத்தில் வுகான் நகரத்தில் இந்த நோய் மிக உச்சத்திற்குப் போகலாம். இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு சீனா முழுமைக்கும் பரவலாம். அதன்பிறகு பல நாடுகளிலும் இந்த நோயின் தாக்கங்களைப் பார்க்கலாம்." 




கொரோனா வைரஸ் அல்லது கோவிட் 19 என்பது மிக மிக நுண்ணியமான வைரஸ் கிருமி. ஆட்கொல்லி தொற்று நோய்க் கிருமி. இதுவரையில் நோய்த் தடுப்பு மருந்துகள்; தடுப்பு ஊசிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

உலகம் முழுவதும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் தடுப்பு மருந்துகள் உருவாக்குவதற்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் தற்காப்பு முயற்சியின் மூலமாகத் தான் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த வைரஸ் கிருமி மனிதனிடம் இருந்து மனிதனுக்குப் பரவுகின்ற கிருமி. மனித உடலில் பத்து பதினைந்து நாட்களுக்குப் பதுங்கி இருக்கும். மெதுவாகத் தன் சேட்டைகளைத் தொடங்கும். அதற்குள் பல கோடி கிருமிகள் வெளியே பரவிப் போய் இருக்கும். ஒரு செருகல்.

இந்தக் கொரோனாவினால் ஜப்பான் நாட்டு மன்னரின் பிறந்த நாள் விழாகூட ரத்து செய்யப்பட்டு உள்ளது.  ஜப்பானில் வழக்கமாக அந்த நாட்டின் மன்னர் பிறந்த நாள் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

ஜப்பானிய மக்கள் வீதிகளில் பெரும் அளவில் கூடி மன்னரின் பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு, மன்னர்  நருஹிட்டோ (Naruhito) பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து செய்யப் படுவதாக ஜப்பான் அரசு தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரசால் ஜப்பானில் ஒருவர் உயிர் இழந்து உள்ளார். 66 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சரி.

வைரஸ் என்றால் என்ன? அதைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம். பி.பி.சி. ஒளிபரப்புக் கழகம் வெளியிட்டுள்ள சில தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

வைரஸ் (Virus) என்பது மிகச் சிறிய புரதங்கள்; மரபணுப் பொருட்களைக் கொண்டது. உலகில் ஆயிரக் கணக்கான வைரஸ் இனங்கள் உள்ளன. வைரஸ் கிருமிகளால் காய்ச்சல், சளி போன்றவை ஏற்படுகின்றன.

தமிழில் தீநுண்மி அல்லது நச்சுயிரி அல்லது நச்சுநுண்மம். 20-300 நானோமீட்டர் (Nanometer) அளவு கொண்டது. நானோமீட்டர் என்றால் ஒரு மீட்டர் நீளத்தின் ஒரு பில்லியனில் ஒரு பங்கைக் குறிக்கும். அதாவது 0.000000001 மீட்டர்.

சில வகையான வைரஸ்கள் நேரடியாகவே ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்குப் பரவும். எயிட்ஸ் HIV போன்ற வைரஸ், பாலியல் உறவு மூலமாகப் பரவுகிறது.

1892-ஆம் ஆண்டு திமித்ரி இவனோவ்சுகி (Dmitri Ivanovsky) எனும் ரஷ்ய நாட்டுத் தாவவியலாளர், புகையிலையைப் பாக்டீரியா அல்லாத ஒரு கிருமி தாக்குகிறது என்று கண்டுபிடித்துச் சொன்னார். அவர் கண்டுபிடித்த கிருமி தான் வைரஸ்.

வைரஸ் கிருமிகள் பரவுதலை மூன்று வகையாகப் பிரிக்கலாம். எண்டமிக் (Endemic); எபிடமிக் (Epidemic); பாண்டமிக் (Pandemic).

எண்டமிக் (Endemic) என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எந்த நேரத்திலும் பரவக் கூடியது. எடுத்துக்காட்டாக அம்மை நோயைச் சொல்லலாம் (Chickenpox). பெரியம்மை அல்ல. பெரியம்மை (Smallpox) நோயை 1977-ஆம் ஆண்டிலேயே, உலகத்தில் இருந்து அழித்து விட்டார்கள்.

இருந்தாலும் கடந்த 100 ஆண்டுகளில் 50 கோடி பேரைப் பழி வாங்கி விட்டுத்தான் போனது. இதற்கு மருந்து கண்டு பிடித்த மனிதத் தெய்வம் எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner).

அதே போல மலேரியா காய்ச்சலையும் எண்டமிக் என்பதற்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம்.

எபிடமிக் (Epidemic) என்றால் ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் மட்டும் அதிகமாகப் பரவக் கூடிய நோயாக இருக்கும். மழைக் காலத்தில் பலருக்கும் காய்ச்சல் வரும். பார்த்து இருப்பீர்கள். அதன் பிறகு அந்த வைரஸ் காய்ச்சல் சன்னம் சன்னமாய்க் குறைந்துவிடும். இந்த மாதிரியான தொற்றலுக்கு எபிடமிக் என்று பெயர்.

பாண்டமிக் (Pandemic) என்றால் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக் கூடியது. ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டுக்கு பயணிக்கும் மனிதர்கள் மூலமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். சரி.

வைரஸ் கிருமி வகைகளைப் பற்றி பார்ப்போம். முதலில் இபோலா வைரஸ் (Ebola Virus). இதை இபோலா தீநுண்ம நோய் (Ebola virus disease, EVD) அல்லது இபோலா ரத்த இழப்பு சோகைக் காய்ச்சல் (Ebola hemorrhagic fever, EHF) என்றும் சொல்வார்கள்.

கிருமித் தொற்று ஏற்பட்ட இரண்டு நாட்களில் இருந்து மூன்று வாரங்களில் காய்ச்சல், கரகரப்பான தொண்டை, தசை வலிகள் (Myalgia–muscle pains), வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும்.




இபோலா வைரஸ், பழந்தின்னி வௌவால்கள், மனிதக் குரங்குகள் போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. பின்னர் அதே அந்த மனிதரிடம் இருந்து மற்றவர்களுக்கும் பரவக் கூடியது.

1976-ஆம் ஆண்டு முதன்முதலாகத் தென் சூடான்; காங்கோ; ஆகிய இரு நாடுகளில் இந்த இபோலா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

காங்கோ நாட்டில் இபோலா என்கிற நதி அருகே உள்ள ஒரு கிராமத்தை இந்த வைரஸ் முதன்முதலில் தாக்கியதால் அதற்கு இபோலா வைரஸ் என்று பெயர் வைத்தார்கள். இது வரையில் 11,300 பேர் பலியாகி உள்ளனர்.

அடுத்து வருவது சார்ஸ் (SARS). Severe Acute Respiratory Syndrome என்பதின் சுருக்கம். தீவிர சுவாசப் பிரச்சனைக்கான நோய்க்குறி என்று அர்த்தம். 21-ஆம் நூற்றாண்டில் மிக மோசமான நோய் என் பெயர் பெற்றது. இருந்தாலும் இப்போது கொரோனா முன்னுக்கு நிற்கிறது.

மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் சார்ஸ் வைரஸ், கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த தொற்றுக் கிருமி.

2000-ஆம் ஆண்டு தென் சீனா, குவாங்டாங்க் மாநிலத்தில் முதன்முதலில் இந்தத் தொற்றுக் கிருமி கண்டு அறியப் பட்டது.  சார்ஸ் வைரஸால் 916 பேர் உயிரிழந்து உள்ளனர். நோய் உண்டான சில வாரங்களிலேயே 37 நாடுகளுக்கு இந்த நோய் பரவியது. கொரோனா மாதிரி தான்.

2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த மனிதருக்கும் இந்த நோய் ஏற்படவில்லை. இருந்தாம், பெரியம்மை போல இந்த நோய் முற்றிலும் அழிக்கப் பட்டதாகக் கூற இயலாது. விலங்கு இனங்களில் இன்னும் இருப்பதால் எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் மனிதருக்குத் தொற்றலாம். வாய்ப்பு உண்டு.

நாளைய கட்டுரையில் மேலும் சில வைரஸ் நோய்களைப் பற்றி பார்ப்போம்.

(தொடரும்)

18 பிப்ரவரி 2020

கொரோனா வைரஸ் கோவிட் 19 - 3

கண்ணுக்கு மை அழகு; கவிதைக்கு பொய் அழகு; கன்னத்தில் குழி அழகு; கார் கூந்தல் பெண் அழகு எனும் பாடலைக் கேட்டு இருப்பீர்கள். எதற்கு எது அழகு என்று அழகு அழகான வரிகள். முத்து முத்தான வரிகள்.

அந்தக் கவிதை வரிகளின் பாவனையில் கொரோனாவைக் கொள்ளை அழகு என்று சொல்லலாம். கொள்ளை எனும் சொல்லில் இரண்டு அர்த்தங்கள் உள்ளன. அந்த வகையில் சீனாவில் இருந்து கசியும் புள்ளிவிவரங்களும் அழகாகத் தான் இருக்கின்றன. பொய்களுக்கும் அழகு உள்ளது என்பதை நினைவில் கொள்வோம்.



வுஹான் நகரில் என்னதான் நடந்து கொண்டு இருக்கிறது என்பது வெளி உலகத்திற்குச் சரியாகவே தெரியவில்லை. மூடி மறைக்கப் படுவதாக உலகச் சமூக ஊடகங்கள் குற்றப் பத்திரிகைகள் வாசிக்கின்றன. அப்படி மூடி மறைப்பதால் நிலைமை மேலும் மோசம் அடையலாம் என்பதே அந்த ஊடகங்களின் தலையாய ஆதங்கம்.

சீனாவில் வுகான் நகரம் (Wuhan) பெரிய நகரம். ஹுபே (Hubei) எனும் மாவட்டத்தில் உள்ளது. அங்கே ஓர் உயிரியல் சோதனைக் கூடம். அங்கே நடந்த தவறுதான் இவ்வளவிற்கும் காரணமாக இருக்கலாம் என்று உலகின் பல இடங்களில் இருந்தும் புகார்கள் வருகின்றன.

இருப்பினும் இந்த வைரஸ் தாக்குதல் பற்றி சீனா இதுவரைக்கும் தெளிவான விளக்கம் எதையும் கொடுக்கவில்லை. வௌவால், பாம்பு, பூனை, நாய் என்று சொல்லிக் கொண்டு இருந்தது. இப்போது மனிதர்களிடம் இருந்து பரவுவதாகச் சொல்கிறது.

கொரோனா வைரஸ் கிருமிகளை வைத்து அந்த நாடு உயிரியல் ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது. அங்கே இருந்து தான் கிருமிகள் தவறுதலாகக் வெளியே பரவி இருக்கலாம். சுருங்கச் சொன்னால் உயிர்கொல்லி வைரஸ்களை உருவாக்கும் சோதனைக் கூடங்களில் இருந்து தான் அந்தக் கிருமி வெளியாகி இருக்கலாம் என்பதே பல உலக நாடுகளின் சந்தேகம். 



இருப்பினும் இந்த வைரஸ் எங்கு இருந்து பரவியது என்று தெளிவாகச் சொல்லாமல் சீனா அமைதியாகவே இருந்து வருகிறது. அதுவே சில பல உலக நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

போதுமான சான்றுகள் இல்லாமல் அப்படிச் சொல்ல மாட்டார்கள். ஆகவே அந்தப் பொதுவான குற்றச்சாட்டு அப்படித் தான் பயணிகின்றது.

உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் உளவு நிறுவனங்கள் உள்ளன. பக்கத்து நாட்டில் அல்லது தன்னுடைய எதிரி நாட்டில் என்ன மாதிரியான தில்லாலங்கடி வேலைகள் நடக்கின்றன என்பதைப் பற்றி துப்பு துலக்குவது தான் அவற்றின் வேலை. சரி.

அப்படியே சோதனைக் கூடங்களில் இருந்து நோய்க் கிருமிகள் வெளியாகி இருந்தால்; அந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால் ஒரு பழமொழி நினைவிற்கு வருகிறது. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும். இன்னொரு பழமொழியும் வந்து போகிறது. தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை வித்தவன் வினை அறுப்பான். 



கொரோனா வைரஸ் பாதிப்பினால் வுகான் நகரம் இப்போது காணாமல் போன மழை போல முடங்கிப் போய்க் கிடக்கிறது. அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பொது இடங்கள், சந்தைகள் என எல்லாமே மூடப்பட்டு கிடக்கின்றன. சாலைகளில் மனித நடமாட்டமே இல்லை. ஆள் அரவமற்றுக் கிடக்கின்றன.

மக்கள் வீடுகளுக்குள் உள்ளேயே கலங்கிப் போய்க் கிடக்கிறார்கள். கொரோனா நோய் பல்லாயிரம் சீன மக்களை மருத்துவமனைகளிலும்; வீடுகளிலும் முடக்கிப் போட்டு வைத்து உள்ளது. வீதிகள் வெறிச்சோடிப் போய்க் கிடக்கின்றன. மக்களின் முகத்தில் ஒருவித பயம். ஒருவித சோகம்.

தவிர ஹுபே (Hubei) மாநிலத்தில் 15 நகரங்கள் முழுமையாகவும்; பகுதியாகவும் பூட்டப்பட்ட நிலையில் உள்ளன.

சீனா நாட்டின் பங்குச் சந்தையில் சரிவு என்று சொல்ல முடியாது. பங்குச் சந்தையைத் தற்காலிகமாக மூடி வைத்து இருக்கிறார்கள். கப்பல் பயணங்கள், விமானப் பயணங்கள் பெரும்பாலும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

சீனாவில் பல இடங்களில் நகர்ப்புறப் பொதுப் போக்குவரத்துகள்; தொடருந்துச் சேவைகள்; நீண்ட தூரப் பேருந்துப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

கண்காட்சிகள்; கொண்டாட்டக் கூட்டங்கள்; சீனப் புத்தாண்டு நிகழ்வுகள் தடை செய்யப்பட்டு உள்ளன. சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டு உள்ளன. ஆங்காங்கே தொற்று நோய்ப் பரவல் எச்சரிக்கைகளும் செய்யப்பட்டு வருகின்றன.



ஆனாலும் சீனா நாட்டு மக்கள் தன்னம்பிக்கையை விடவில்லை. "வுகான் வீழ்ந்து போகாது! மீண்டும் எழுந்து நிற்கும்" என்பதே இப்போது அவர்களின் தாரக மந்திரம். இப்போது இந்த வரிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

2003-ஆம் ஆண்டு உலகையே சார்ஸ் (Severe Acute Respiratory Syndrome - SARS) எனும் நோய்த் தொற்று உலுக்கிப் போட்டது. நினைவு இருக்கலாம். அந்த நோயைப் பரப்பிய கிருமிக்குச் சார்ஸ் கோவி (SARS-CoV) என்று பெயர்.

உலகம் முழுமைக்கும் 800 உயிர்களைப் பலி கொண்டது. இந்த நோய் சீனாவின் குவாங்டோங் (Guangdong) மாநிலத்தில் இருந்து பரவியது. ஓர் ஆண்டுக்குள் 26 நாடுகளுக்குப் பரவியது. பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. சார்ஸ் நோய் கடுமையான நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும் தொற்று நோய் ஆகும்.

(SARS virus has escaped from high-level containment facilities in Beijing multiple times, notes Richard Ebright, a molecular biologist at Rutgers University in Piscataway, New Jersey.)



இந்தச் சார்ஸ் நோயின் அறிகுறிகளும் இப்போதைய கொரோனா நோயின் அறிகுறிகளும் ஒரே மாதிரியாகத் தான் உள்ளன. சார்ஸ் நோய் போன்றே கொரோனா நோய், முதலில் மனிதர்களின் சுவாசப் பாதையின் மேற்பகுதியில் தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதைத் தொடர்ந்து கொரோனா கிருமிகள் நுரையீரல், குடல் பகுதிகளுக்குப் பரவுகின்றன.

சளி, இருமல், சுவாசக் கோளாறு, உயிர்பலி போன்ற அனைத்தும் சார்ஸ், கரோனா இரண்டிற்கும் ஒரே மாதிரியான, ஒரு பொதுவான அறிகுறிகளாகவே காணப் படுகின்றன.

ஆக சார்ஸ் நோய் சீனாவில் இருந்து பரவியது. அதே போல இப்போது கொரோனாவும் அங்கே இருந்து தான் பரவி உள்ளது. இரண்டுமே கொரோனா வைரஸ்கள் தான். பெயர்களில் தான் சற்றே மாற்றம்.

சார்ஸ் காய்ச்சலுக்கான மருந்தைக் கொரோனா காய்ச்சலுக்குக் கொடுத்துப் பார்த்தார்கள். உஹூம். வேலை செய்யவில்லை. இரண்டுமே அண்ணன் தம்பி கிருமிகளாக இருந்தும் மருந்து மாத்திரைகளில் ஒத்துப் போகவில்லை. 



அதனால் தான் புதிய கொரோனாவிற்குப் புதிய மருந்தை உருவாக்கப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். மிகச் சரியான மருந்தக் கண்டுபிடிக்க பல மாதங்கள் பிடிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

கொரோனா நோய் என்பது இப்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் ஒரு நிகழ்ச்சி. ஆகவே அதைப் பற்றி ஒரு சின்ன மீள்பார்வை. 

கொரோனா நோயின் புதிய பெயர் கோவிட்-19 (COVID-19). இதுவும் கொரோனா (Coronavirus) கிருமிகளைச் சார்ந்த ஒரு புதிய வகை. 2019-ஆம் ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வுகான் நகரத்தில் உள்ள சிலருக்குக் காரணம் இல்லாமல் நுரையீரல் அழற்சி ஏற்பட்டது. நுரையீரல் என்றால் சுவாசப்பை. அழற்சி என்றால் நோய்க் கிருமிகளுக்கு எதிரான உடலின் எதிர் வினைத் தன்மை (Inflammation).

நுரையீரல் அழற்சி (pneumonitis) அல்லது நிமோனியா (Pneumonia) என்பது நுரையீரலில் அழற்சி விளைவிக்கும் ஒரு நோய் ஆகும். இருமல், நெஞ்சுவலி, சளி, காய்ச்சல், மூச்சு இரைப்பு, மூச்சுவிடக் கடினமாக இருத்தல் போன்றவை இதற்கான அறிகுறிகள். 



நோய்த் தாக்கம் கடுமையாக இருந்தால் பாதிக்கப் பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவார். ஆக்ஸிஜன் எனும் உயிர்க் காற்றின் அளவு குறைவாக இருந்தால் செயற்கை முறையில் சுவாசச் சிகிச்சை அளிக்கப் படலாம்.

ஆனால் கோவிட்-19 அழற்சிக்கு கொடுக்கப்பட்ட தடுப்பு மருந்துகளும் சிகிச்சைகளும் பயன் அளிக்கவில்லை.

2020 பிப்ரவரி 17-ஆம் தேதி வரையில், உலகளாவிய நிலையில் 71,323 தொற்றுகள் உறுதிப் படுத்தப்பட்டன. இதில் 11,298 பேருக்கு மோசமான நிலைமை. இந்தப் புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு நாளும் மாற்றம் காண்கின்றன.

உலகம் முழுமைக்கும் 1,770 இறப்புகள். சீனா 1,765; ஜப்பான் 1; ஹாங்காங் 1; தைவான் 1; பிரான்ஸ் 1; பிலிப்பைன்ஸ் 1.



மலேசியாவில் 22 பேருக்குத் தொற்றியது. அவர்களில் 8 பேர் குணமடைந்து விட்டனர்.

(சான்று: https://www.worldometers.info/coronavirus/)

ஊடகங்களில் கிடைத்த செய்திகள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன். உண்மையாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். வதந்திச் செய்திகளைத் தவிர்ப்பதே சிறப்பு. வதந்திகள் பீதியை உண்டாக்கும்.

சமயங்களில் வுகான் தெருக்களில் பிணங்கள் கிடப்பது சாதாரணமாகி வருகிறது. விடியற்காலை நான்கு மணிக்கு எல்லாம் ஆம்புலன்ஸ் வண்டிகள் வருகின்றன. அப்படியே உடல்கள் அப்புறப் படுத்தப் படுகின்றன.  

வுகான் நகரில் கடைகள் எல்லாமே மூடப்பட்டு உள்ளன. அங்கு உள்ளவர்கள் அனைவரும் உடல் கவசம் அணிந்தே போகின்றனர் வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் ஒரு முதியவரின் சடலம் தெருவில் கிடந்தது. அறுபது வயதிற்கும் மேல் இருக்கலாம். அவர் முகத்திரை அணிந்து இருந்தார். இவர் கொரோனாவிற்குப் பலியானவராக இருக்கலாம் என்கிற சந்தேகம். முகத்திரை அணிந்தவரும் கொரோனா நோயில் இருந்து தப்ப முடியாது என்று சொல்கிறார்கள். 

வுகான் நகருக்கு 'சீல்' வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆம்புலன்ஸ்கள் போய் வந்த வண்ணம் உள்ளன. மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் இரண்டு நாட்கள் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை.



அமெரிக்கா, மேரிலாந்தில் உயிரி பாதுகாப்பு மையம் உள்ளது (University of Maryland Biosafety Research Safety). அதன் ஆலோசகர் டிம் ட்ரெவன் (Tim Trevan). 2017-ஆம் ஆண்டிலேயே சீனாவின் உயிரி ஆராய்ச்சி மையம் (Wuhan Institute of Virology) பற்றி ஓர் எச்சரிக்கையைச் செய்து உள்ளார்.

(Scientists warned in 2017 that a SARS-like world’s most dangerous virus could escape a lab in Wuhan, China)

'வுகானின் ஆய்வு மையத்தில் உலகத் தரத்திலான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. வைரஸ்கள் கசிய அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி வெளியேறினால் உலகம் முழுதும் பாதிக்கப்படும்' என்றார்.

அதை உறுதி செய்யும் வகையில் இஸ்ரேல் இராணுவப் புலனாய்வு (Israeli Military Intelligence) பிரிவு முன்னாள் அதிகாரி டேனி ஷோஹம் (Horsham) சொல்கிறார்.

'வுகான் உயிரியல் ஆய்வு மையத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்பது என் உறுதியான கருத்து' என்கிறார்.

சார்ஸ், எபோலா போன்ற கொடிய வைரஸ்கள் இந்த ஆய்வகத்தில் இருந்து வெளியேறியதை ஏற்கனவே உலக ஆய்வாளர்கள் உறுதிபடுத்தி உள்ளனர். எச்சரிக்கையும் செய்துள்ளனர்  

வுகானில் தொடங்கிய கொரோனா கிருமிகளின் பயணம் பெய்ஜிங், ஷாங்காய் நகரங்கள் வரை தொடர்ந்து போகிறது. இதனால் ஒட்டு மொத்த சீனா நாடே கதிகலங்கி உறைந்து போய் நிற்கிறது. 



அமெரிக்கா, தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர், தைவான், ஹாங்காங் போன்ற நாடுகளிலும் கொரோனா பரவி நிற்கிறது. இதில் நம் நாடு மலேசியாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அபாய நிலையில் இல்லை. இருந்தாலும் விழிப்புணர்வு, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கொரோனா தாக்குதலுக்கு எதிராக நம்மை நாமே தயார் படுத்திக் கொள்வதற்கு ஓர் எளிய முறை

மனித உடலில் கொரோனா வைரஸ் வளர்ச்சி பெற்றுத் தாக்குதல் நடத்துவதற்கு 1 முதல் 24 நாட்கள் வரை பிடிக்கும். அந்தக் காலக் கட்டத்தில் நோய்த் தொற்றியதற்கான அறிகுறி எதுவும் நமக்குத் தெரியவே தெரியாது. சாதாரணமாகவே இருக்கும்.

அதனால் கொரோனா நோயினால் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளாரா என்பது அவருக்கே தெரியாது.

அப்படியே ஒருவருக்கு வறட்டு இருமல் வந்து; கொரோனா காய்ச்சல் வந்து; அவர் மருத்துவமனைக்குச் செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவருடைய நுரையீரலில் இழைமத் தடிப்பு (Fibrosis) எனும் நார்ப் பெருக்கம் 50% ஏற்பட்டு இருக்கும்.

அதாவது அவரின் நுரையீரல் பாதிக்கப்பட்டு இருக்கும். 50% விழுக்காட்டுப் பாதிப்பு என்பது முதியவர்களுக்கு ஆபத்தான நிலைமை என்றுகூட சொல்லலாம். 



இதற்கு ஒரு முன் எச்சரிக்கையான சோதனை. இது ஒவ்வொரு நாளும் காலையில் நீங்கள் செய்யக் கூடிய ஓர் எளிமையான சுயப் பரிசோதனை. மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள்.

ஆழமாக ஒரு மூச்சு இழுத்துக் கொள்ளுங்கள். அப்படியே ஒரு 10 வினாடிகளுக்கு மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள். இருமல் இல்லாமல், மூச்சுத் திணறல் இல்லாமல்; இறுக்கம் இல்லாமல்; அழுத்தம் இல்லாமல்; இதை நீங்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்தால்... கவலை வேண்டாம்.

உங்கள் நுரையீரலில் Fibrosis எனும் இழைமத் தடிப்பு இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் அடிப்படையில் பார்த்தால் உங்களுக்குத் தொற்று இல்லை. அத்துடன் நிமோனியா உங்களைத் தாக்கவில்லை என்பதையும் அது குறிக்கிறது.

நீங்கள் செய்யும் பரிசோதனை முழுமையாக இருக்க வேண்டும். பத்து விநாடிகளுக்கு மூச்சை ‘தம்’ கட்ட வேண்டும். மறக்க வேண்டாம். மறுபடியும் சொல்கிறேன். பத்து விநாடிகளுக்கும் மேல்... மூச்சை இழுத்துப் பிடிக்க வேண்டும்.

சுத்தமான காற்று கிடைக்கும் இடத்தில் இந்தச் சோதனையைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும்  காலையில் இந்தச் சுய பரிசோதனையைச் செய்து பாருங்கள். மறுபடியும் சொல்கிறேன். ஒவ்வொரு நாளும் தொடர்ந்து சோதிக்க வேண்டும். சரி.

மனித வரலாற்றில் தன்னுடைய மனித இனத்தையே அழிக்கின்ற ஒரு கபட நாடகத்தைக் காலம் காலமாக மனிதன் கற்றுக் கொள்கிறான். அதனால் அவனுடைய அந்த மனித இனத்திற்குத்தான் பேரழிவு. 

கொரோனா வைரஸ் பற்றி எல்லா தகவல்களையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, உலகம் ஓர் அபாயக் கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது என்பது தெரிய வருகிறது. மேலும் சில புதிய தகவல்களுடன் நாளை சந்திக்கிறேன்.

(தொடரும்)

17 பிப்ரவரி 2020

கொரோனா வைரஸ் கோவிட் 19 - 2

தமிழ் மலர் - 17.02.2020

உலக மக்களைக் கொரோனா வைரஸ் நடுங்க வைத்துக் கொண்டு இருக்கிறது. ஆர்டிக் துருவத்தில் வாழும் எஸ்கிமோ மக்கள் பயப்படுகிறார்கள். ஆஸ்திரேலியாவிற்கு கீழே இருக்கும் அண்டார்டிக்கா மக்கள் பயப் படுகிறார்கள். ஆப்பிரிக்காவில் காட்டு வாழ்க்கை வாழும் கயானா நாட்டு மக்கள் பயப்படுகிறார்கள். அமெரிக்கா ஆண்டிஸ் மலையில் வாழும் இன்கா மக்களும் பயப்படுகிறார்கள். 



பயம். பயம். ஏகப்பட்ட பயங்கள். உலகத்தில் உள்ள எல்லோருமே பயந்து கொண்டுதான் போகிறார்கள். வருகிறார்கள். இதில் சீனா நாட்டைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். வல்லரசாகும் கனவில் சன்னமான செல்லரிப்புகள்.

உலகப் போலீஸ்காரர் அமெரிக்காவிற்குச் சட்டாம்பிள்ளை வேலை கிடைத்த மகிழ்ச்சியில் தலைகால் தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருப்பதாகக் கேள்வி. விடுங்கள். கொஞ்ச நாளைக்கு ரோத்தான் கையில் இருக்கட்டுமே. பொறுத்து இருந்து பார்ப்போம். 

கொரோனா நோய்க்கு இதுவரையிலும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உருப்படியாக ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க குறைந்த பட்சம் 18 மாதங்கள் பிடிக்குமாம். உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது. 



அதுவரையிலும் என்ன செய்வது. நோய் கண்டவர்களைத் தனிமைப் படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை. அதைத்தான் இப்போது செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நோய்த் தாக்குதலுக்கு மூலகாரணமாக இருந்தது பாம்புக் கறி என்று முதலில் சொன்னார்கள். பின்னர் வௌவால்கள் என்று சொன்னார்கள். ஆனால் அது தவறு என்று இப்போது சொல்கிறார்கள். கொரொனா வைரஸ் விலங்குகளில் இருந்து பரவுவது இல்லை. மனிதர்களிடம் இருந்து மனிதர்களிடம் தான் பரவுகிறது என்று இப்போது சொல்கிறார்கள்..

கொரோனா வைரஸ் தாக்குதலினால் ஆயிரக் கணக்காக மக்கள் இறந்து விட்டார்கள். அதிகாரப் பூர்வமான தகவல்கள் ஆயிரங்கள் என்று சொன்னாலும் உண்மையில் பல ஆயிரங்கள் இருக்கலாம் எனும் வதந்திகளும் கசிகின்றன. 


தமிழ் மலர் - 17.02.2020

பாதுகாப்பு முன்னிட்டு உண்மையான புள்ளி விவரங்கள் மறைக்கப் படலாம் என்பதும் வதந்திகளில் கசிந்து வரும் கசிவுகள். இது எந்த அளவுக்கு உண்மை என்பது எவருக்கும் தெரியப் போவதும் இல்லை. அதைப் பற்றித் தெரிந்து கொண்டு ஆகப் போவதும் ஒன்றும் இல்லை. உலக மக்களை எப்படி காப்பாற்றுவது என்பது தான் இப்போதைக்கு தலை போகிற விசயம்.

கடந்த சில பத்தாண்டுகளாக, உலகின் சில பல வல்லரசு நாடுகள் உயிரியல் போருக்கு (Biological Warfare) தயாராகி வருகின்றன. சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா போன்ற வல்லரசு நாடுகள் ரொம்ப இரகசியமாக உயிரியல் ஆயுதங்களைப் பற்றி ஆய்வுகள் செய்து வருகின்றன. சில நாடுகள் தயாரித்தும் விட்டன. இதில் இஸ்ரேல் நாட்டை மறந்துவிட வேண்டாம்.



அணுகுண்டுகளைப் போட்டு எல்லாவற்றையும் அழிப்பதினால் எதுவும் மிஞ்சப் போவது இல்லை. போட்ட முதலுக்கு மோசம் என்று சொல்லி உயிரியல் போருக்குத் தயார் நிலையில் நிற்கின்றன.

ஆக உயிரியல் போர் மூலமாக ஒரு மக்கள் கூட்டத்தை அழிக்கலாம். ஓர் இனத்தை அழிக்கலாம். ஒட்டு மொத்தமாக ஒரு நாட்டு மக்களையும் அழிக்கலாம்.

உயிரியல் போர் மூலமாக மனிதர்கள் அழிந்தாலும் தாவரங்கள் அழியாது. மற்ற மற்ற விலங்கினங்களும் அழியாது. 



ஆக மனிதர்களை மட்டும் அழிக்கும் உயிரியல் போர்க் கிருமிகளைப் பல நாடுகள் தயாரித்து வைத்து உள்ளன. அந்த வகையில் கொரோனா கொள்ளை நோய் பரவியதற்குச் சீனா ஒரு காரணமாக இருக்கலாம் என்று பலரும் சந்தேகப் படுகிறார்கள்.

உயிரியல் போர் என்றால் என்ன? முதலில் இதைத் தெரிந்து கொள்வோம். பேரழிவு ஆயுதங்கள் என்று நான்கு வகைகள் உள்ளன. அணு ஆயுதங்கள்; வேதியியல் ஆயுதங்கள்; உயிரியியல் ஆயுதங்கள்; கதிர்வீச்சு ஆயுதங்கள்.

இவற்றின் பின்னணியில் இருப்பவை அணுஆயுத போர் (Nuclear Warfare); வேதியியல் போர் (Chemical Warfare); உயிரியியல் போர் (Biological Warfare); கதிரியக்கப் போர் (Radiological Warfare). சரிங்களா. 



இவை அனைத்தும் பேரழிவு ஆயுதங்கள் (Weapon of Mass Destruction (WMD). உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள். பயன்படுத்தக் கூடாது என்பதற்குத் தான் தடை. தயாரிக்கக் கூடாது என்பதற்கு தடை இல்லையே. இதைத் தான் மாஸ்டர் கேட்ச் (Master Catch) என்று சொல்வார்கள்..

உயிரியல் போர்முறைக்கு வருவோம். இதைக் கிருமிப் போர்முறை (Germ Warfare) என்றும் சொல்லலாம். தொற்றும் கிருமிகளான (Infectious Agents) பாக்டீரியா, வைரஸ் அல்லது நச்சுப் பூஞ்சைகள் போன்றவற்றை உயிரியல் கொல்லிகள் (Biological Toxins) என்றும் சொல்வார்கள்.

அந்த உயிர்க் கொல்லிகளைப் பயன்படுத்தி  மனிதர்கள்; விலங்குகள்; அல்லது தாவரங்கள் போன்றவற்றை அழிப்பது அல்லது கொல்வது தான் உயிரியல் போர்.



மேலே சொன்ன அந்த உயிர்க் கொல்லிகள் மற்ற உயிர்களின் உடலுக்குள் சென்றதும் மள மள என்று வளர்ச்சி அடைகின்றன. ஒரு சில நிமிடங்களில் பல கோடிகளாக இனப்பெருக்கம் அடைந்து விடுகின்றன.

ஆதி காலத்தில் அதாவது கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அசீரியர்கள் (Assyrians) தங்களின் எதிரிகளுக்குப் பித்துப் பிடிக்க வைக்கும் பூஞ்சைகளின் மூலமாக உயிரியல் போர் செய்ததாக வரலாறு சொல்கிறது. அசீரியர்கள் என்பவர்கள் மத்திய கிழக்கில் பழங்காலத்து மெசபொத்தோமியா எனும் பேரரசைச் சேர்ந்தவர்கள்.

1760-ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் பெரியம்மை நோய்க் கிருமிகளை உயிரியல் ஆயுதமாக அமெரிக்கச் சிவப்பு இந்தியர்கள் (Native Americans) மீது பயன்படுத்தியதாகவும் கூறப் படுகிறது. இதற்குப் போதிய சான்றுகள் இல்லை.



இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்து ஓர் உயிரியல் ஆயுதத் திட்டத்தைத் தொடங்கியது. இதைப் பார்த்த ஜப்பான், பிரான்சு, சீனா போன்ற நாடுகள் ‘நாங்களும் செய்வோம் இல்ல’ என்று சொல்லி தங்களின் உயிரியல் ஆயுதத் திட்டங்களைத் தொடங்கின.

முதன்முதலில் பெரிய அளவில் உயிரியல் ஆயுத ஆராய்ச்சியைச் செய்தது ஜப்பான் நாடுதான். அதற்கு ஏகாதிபத்திய ஜப்பானின் இராணுவ பிரிவு 731 என்று பெயர் வைக்கப் பட்டது (Imperial Japanese Army Unit 731). மிகவும் இரகசியமான ஆராய்ச்சி. சீனா மஞ்சூரியாவில் உள்ள மக்கள் மீது  உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு ஜப்பான் திட்டம் போட்டது. செய்தும் காட்டியது.

1940-ஆம் ஆண்டில் சீனாவில் உள்ள நிங்போ (Ningbo) எனும் நகரத்தின் மீது உயிரியல் தாக்குதல். கொடூர பிளேக் நோய்க் கிருமிகளைக் கொண்ட செராமிக் குண்டுகளை (Ceramic Bombs) அந்த நகரின் மீது வீசியது. 4 லட்சம் பேர் உயிர் இழந்தார்கள். 



இங்கே ஒன்றை நன்றாகக் கவனியுங்கள். ஒரு காலத்தில் சீனா மீது ஜப்பான் உயிரியல் கொல்லி ஆயுதங்களைப் பயன்படுத்தியது. ஆடிப் போனது சீனா அப்போது. ஆனால் இப்போது அதே சீனா உலகத்தையே ஆட வைத்து விட்டது. உயிரியல் போரில் தடம் பதித்து தர்க்கம் பண்ணிக் கொண்டு இருக்கிறது.

இப்போது உலகத்தையே உறைய வைத்து இருப்பது கொரோனா வைரஸ். தெரிந்த விசயம். அந்த வைரஸ் உருவாக்கம் பெறுவதற்குச் சீனாவின் உயிரி ஆயுத ஆய்வகம் (Wuhan Institute of Virology) ஒரு காரணம் எனும் தகவல் கசிந்து வருகிறது.

சீனாவில் இருந்து அரசு அனுமதி இல்லாமல் எந்த ஒரு தகவலும் வெளியே வராது. ஏன் என்றால் சீனா ஓர் இரும்புத் திரை (Iron Curtain) போட்ட நாடு. மன்னிக்கவும். உண்மையைத் தான் எழுதுகிறேன். 



உலகில் சில நாடுகளை இரும்புத் திரை நாடுகள் என்று சொல்லலாம். 1991-ஆம் ஆண்டிற்கு முன்னர் போலந்து; கிழக்கு ஜெர்மனி; ஹங்கேரி; ரொமேனியா; பல்கேரியா; அல்பேனியா; ரஷ்யா போன்றவை இரும்புத் திரை நாடுகளாக இருந்தன. இருந்தாலும் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே அதை உடைத்துக் கொண்டு அந்த நாடுகள் வெளியாகி விட்டன.

இப்போது இந்த நவீன உலகில் இரு நாடுகள் மட்டுமே இரும்புத் திரையைப் போட்டுக் கொண்டு கண்ணாமூச்சி காட்டுகின்றன. இருட்டடிப்புகள் என்று சொல்லலாம். இப்போது இருக்கும் கொரோனா களேபரத்தில் சண்டைக்கு வர மாட்டார்கள். நம்பலாம்.

சீனா; வட கொரியா; இந்த இரு நாடுகள் தான் இப்போதைக்கு இரும்புத் திரை நாடுகள். அங்கே இருந்து உண்மையான தகவல்கள் கசிவதற்குச் சற்று சிரமமே. 



சீனாவைப் பொறுத்த வரையில் அங்கே இருந்து செய்தி வெளிவருவதைச் சுலபமாக தடுத்துவிட முடியும். தணிக்கை என்று சொல்வார்களே அதுதான். ஆனால் இப்போது கொரோனா வைரஸ் கிருமிகளைத் தடுக்க முடியாமல் தவிக்கிறதே. என்ன செய்வதாம்.

அது மட்டும் அல்ல. உலகின் பல நாடுகளில் சீனர்களைப் பார்த்ததும் மற்றவர்கள் பயந்து பயந்து விலகி ஓடும் நிலைக்கு நிலைமை மோசமாகி வருகிறது (Xenophobia). தெரியுங்களா.

சீனாவில் 23 மாநிலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஹுபே (Hubei) எனும் மாநிலம். இதன் தலைநகரம் வுஹான் (Wuhan). மத்திய சீனாவில் இருக்கிறது. மக்கள் தொகை 1 கோடி 10 இலட்சம். அதாவது கோலாலம்பூர் மக்கள் தொகையைப் போல ஆறு மடங்கு அதிகம். சீனாவின் சிக்காகோ நகரம் என்று பெருமையாக அழைக்கப்படும் நகரம் இந்த வுஹான் மாநகரம்.



பலரும் நினைப்பது போல வுஹான் ஒரு மாநிலம் அல்ல. அது ஒரு நரகம். மன்னிக்கவும் நகரம். இந்த நகரத்தில் தான் இப்போது கொரோனா வைரஸின் அமளி துமளிகள் அரங்கேற்றம் கண்டு வருகின்றன.

வுகான் மாநகரில் சியாங் சியா (Jiangxia) எனும் இடத்தில் உயிரி ஆயுத ஆய்வு மையம் (Wuhan Institute of Virology) ஒன்றைச் சீனா நடத்தி வருகிறது. 1956-ஆம் ஆண்டு 200 மில்லியன் ரிங்கிட் செலவில் தொடங்கப் பட்டது. இதன் உயிர் பாதுகாப்பு நிலை 4 (Bio Safety Level). மிகவும் எச்சரிக்கையான நிலை.

இந்த மையம் உயிரியல் கொல்லித் தாக்குதல் ஆராய்ச்சி மையம் என்று சொல்லப் படுகிறது. அந்த ஆய்வு மையத்தின் மீது உலக நாடுகளுக்கு ரொம்ப நாட்களாகவே சந்தேகம்.

இருந்தாலும் இவ்வளவு நாளும் சீனா  மறுத்து வந்தது. அது உயிரி ஆயுத ஆய்வகம் அல்ல. அது ஓர் உயிர்க் கொல்லி நோய் தடுப்பு மருந்து ஆய்வகம் என சீனா கூறி வந்தது.



(சான்று: In January 2020, the Institute was rumored as a source for the 2019–20 Wuhan coronavirus outbreak, The Washington Post)

(சான்று: In February 2020, the source of the outbreak through accidental leakage, BBC News China. 5 February 2020.)
ஏற்கனவே சார்ஸ் (SARS), எபோலா (Ebola) வைரஸ்கள் பரவிய போது, சீனா மீது சில பல நாடுகளுக்குச் சந்தேகம். ஆனால் அனைத்தையும் சீனா மறுத்து வந்தது. ஆனால் இப்போது நேரடியாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. தலை போகிற நேரம். அதனால் கொரோனா கிருமிகளைப் பற்றிய படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டது.

கொரோனா நோயினால் ஏறக்குறைய 25 ஆயிரம் பேர் இறந்து இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. அதே சமயத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இலட்சக் கணக்கில் இருக்கலாம் என்றும் சில நாடுகள் சொல்கின்றன. 



அது எல்லாம் இல்லை. 1669 பேர் தான் என்று சீனா அதிகாரப் பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதில் எது உண்மை. ஆக இதில் புரளியும் இருக்கலாம். வதந்தியும் இருக்கலாம்.

கடந்த ஜனவரி 25-ஆம் தேதி சீனப் புத்தாண்டு. உலகின் பல பகுதிகளில் வாழும் சீனர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வரும் காலக் கட்டம்.  அந்த நேரத்தில் தான் கொரோனா வெடித்துப் பரவியது.

ஆக சொந்த ஊர்களுக்குத் திரும்பியவர்களை மீண்டும் வெளியே விட்டால் அந்த நோய் உலகம் முழுதும் பரவி விடும் என்று சீனா அஞ்சியது. சீனாவுக்குக் கெட்ட பெயர். அதனால் வந்தவர்கள் எவரையும் வுகான் நகரில் இருந்து வெளியே போக அனுமதிக்கவில்லை.

ஜனவரி 27-ஆம் தேதியில், வுஹான் மாநகரைச் சீனா சீல் வைத்து மூடி விட்டது. வெளியே இருப்பவர்கள் உள்ளே போக முடியாது. உள்ளே இருப்பவர்கள் வெளியே வர முடியாது. ஒட்டுமொத்த அடைப்பு. அங்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல் உலகத்திற்கே திகைப்பு.

இந்தக் கட்டத்தில் இன்னும் ஒரு விசயம். கொரோனா கிருமிகள் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து தான் வெளியே வந்தன என்று பல நாடுகள் சொல்கின்றன. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உலகத்தின் கோபத்திற்கு ஆளாகலாம் அல்லவா. ஆக அதற்கும் சீனா தக்க பதில் கொடுத்தது.

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேரிடம் இருந்து எடுக்கப்பட்ட இரத்தத் திசுக்களை ஆய்வு செய்தோம். அவற்றில் வௌவால்களின் மரபணுக்கள் இருந்தன; SARS-CoV மரபணுக்களும் இருந்தன என்று சீனா கூறியது.

வுகான் மாநகரத்தில் இருந்த ஹூவனான் கடல் உணவு சந்தையில் (Huanan Seafood Wholesale Market) விற்கப்பட்ட வௌவாலில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியது என சீனா அறிக்கை வெளியிட்டது.

ஆனால் இங்கே தான் இடித்தது. என்ன தெரியுங்களா. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேரும் அந்த ஹூவனான் மார்க்கெட்டிற்குப் போகவே இல்லை. அப்படி இருக்கும் போது இவர்களுக்கு எப்படி கொரோனா வந்தது?

இது தெரிய வந்ததும் சீனாவிற்குத் தர்ம சங்கடமான நிலைமை. வேறு நபர்கள் மூலமாகக் கொரோனா பரவி இருக்கலாம் என்று மறு அறிக்கை வெளியிட்டது. சரி.

வேறு நபர்கள் என்றால் யார் அந்த நபர்கள். அதைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அதனால் தான் தகவல்கள் மறைக்கப் படுகின்றன எனும் சந்தேகம் வலுக்கத் தொடங்கியது.

(தொடரும்)









16 பிப்ரவரி 2020

கொரோனா வைரஸ் கோவிட் 19 - 1

தமிழ் மலர் - 16.02.2020

உலகத்தை ஆட்டிப் படைக்கும் உயிர்க்கொல்லி. மனிதத்தை மடக்கிப் போடும் ஆட்கொல்லி. நாடுகளை நடுங்க வைக்கும் தொற்றுக் கொல்லி. உங்களையும் என்னையும் உலுக்கிப் போடும் நுண்மக் கொல்லி. அதுவே கொரோனா வைரஸ் என்கிற நுண்ணுயிர்க் கொல்லி.



கொரோனா வைரஸ் அல்லது கோவிட் 19 என்பது மிக மிக நுண்ணியமான வைரஸ் கிருமி. தமிழில் வைரஸ் கிருமியைத் தீநுண்மி என்று அழைக்கலாம். அதையே நச்சுயிரி அல்லது நச்சுநுண்மம் என்றும் அழைக்கலாம். இரண்டும் ஒன்றுதான்.

ஒரே வார்த்தையில் சொன்னால் கொரோனா வைரஸ் ஓர் ஆட்கொல்லி தொற்று நோய்க் கிருமி. இதுவரையில் நோய்த் தடுப்பு மருந்துகள்; தடுப்பு ஊசிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. 



உலகம் முழுவதும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் தடுப்பு மருந்துகள் உருவாக்குவதற்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் அவசர இலக்கு.

இதுவரையிலும் பாதிக்கப் பட்டவர்கள் 64,474; இறப்புகள் 1,384. அதிகமாகப் பாதிக்கப் பட்டது சீனா. இரண்டாவதாக ஹாங்காங். மூன்றாவதாக சிங்கப்பூர். நம் மலேசியாவில் 19 பேருக்குப் பாதிப்பு.

அந்த பத்தொன்பது பேரில் ஆறு பேர்தான் மலேசியப் பிரஜைகள். இவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளார்கள். மலேசியாவில் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 



இந்த நோய்க்கு மருந்து இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் தற்காப்பு முயற்சியில் தான் நாம் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அசட்டையாக இருந்துவிடக் கூடாது.

முதலில் அதற்கு கொரோனா வுஹான் வைரஸ் என்று பெயர் வைத்தார்கள். ஆனால் அது ஓர் இடத்தையும் ஒரு நாட்டையும் குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தது.

அதனால் பற்பல பாதிப்புகள் அல்லது இனச் சமூக ஒதுக்கல்கள் ஏற்படலாம். ஆக அண்மையில் COronaVIrus Disease 2019 என்று பெயர் மாற்றம் செய்தார்கள். சுருக்கமாக COVID-19 Virus. யாரையும் பாதிக்காத பெயர். கோவிட்-19 என உலக சுகாதார நிறுவனம் அறிவித்து உள்ளது.



''கொரோனா'', ''வைரஸ்'' மற்றும் ''நோய்'' ஆகிய வார்த்தைகளில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புதிய பெயருடன் இணைந்து உள்ள 19 என்ற எண்; இந்த வைரஸ் பரவத் தொடங்கிய 2019 என்ற ஆண்டைக் குறிப்பதாகும்.

இந்த வைரஸ் கிருமி மனிதனிடம் இருந்து மனிதனுக்குப் பரவுகின்ற கிருமி. சத்தம் யுத்தம் இல்லாமல் பத்து நாட்களுக்கு மனித உடலில் பதுங்கி இருக்கும். ஒன்னும் தெரியாத பாப்பா என்று சொல்வார்களே. அந்த மாதிரி தான். மெதுவாகத் தான் தன் சேட்டையைத் தொடங்கும்.

மிக எளிதாகப் பரவும் கொரோனா வைரஸ் சீனாவைப் புரட்டிப் போட்டு வருகிறது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்கூட இந்த நோய்த் தொற்றில் இருந்து தப்ப முடியவில்லை.

மருத்துவப் பணியாளர்கள் தங்கள் உடல் முழுவதையும் மூடும் வகையில் பாதுகாப்பு ஆடைகளை அணிந்தபடியே பணியாற்றுகிறார்கள். நோய்த் தொற்றும் மரணமும் ஒருபுறம் என்றால் அது தொடர்பான அச்சம் பலரையும் ஆட்டிப் படைக்கிறது. 



இந்த வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த சீனா எடுத்த முயற்சிகளை உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது.

வழக்கமாக புதுவித வைரஸ் நோய் பரவினால் அதை உடனடியாகக் குணப்படுத்த முடியாது. அதை மேலும் பரவ விடாமல் தடுக்க மட்டுமே முடியும்.


கொரோனா நோய்க்கு மருந்துகள் என்பது இன்னும் முறையாக கண்டுபிடிக்கப் படாமலே உள்ளது. எனவே புதிய நபர்களுக்கு இந்த நோய் பரவாமல் தடுத்தால் மட்டுமே கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இந்தக் கிருமிகள் மனித உடலில் நுழைந்த மூன்று நாட்களுக்குப் பின்னர் தான் தம் வேலைகளைத் தொடங்குகின்றன. அதுவரையில் அமைதியாக இருக்கும்.



கொரோனா வைரஸ்கள் முதலில் சுவாசப் பாதையைத் தாக்குவதால் எளிதில் மனிதனிர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. மூச்சு விடும் போது கிருமிகள் வெளியாகின்றன. தும்மும் போது கிருமிகள் வெளியாகின்றன. ஆக முகத்திரைகள் போடுவதால் கிருமிகள் பரவுதைக் கட்டுப் படுத்தலாம்.

கொரோனா வைரஸ்கள் மிக மிக நுண்ணியமானவை. அதனால் அவற்றின் பரவுதலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. என்னதான் நாம் முகத்திரை அணிந்து இருந்தாலும் கிருமிகள் பரவுதல் நடக்கும்.

கொரனா வைரஸ் தாக்கிய நபருக்கு காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, வறட்டு இருமல் ஆகியவை ஏற்படும். இதனைத் தொடர்ந்து மூச்சுத் திணறல் ஏற்படும். 

அடுத்தக் கட்டமாக கடுமையான உடல் வலி ஏற்படும். அடுத்து நிமோனியா வரும். அடுத்து கல்லீரல் என்கிற கிட்னி செயல் இழக்கும். இறுதியில் மரணம். இது தான் கொரோனா வைரஸ் கிருமியின் செயல்பாடுகள். 



கொரோனோ வைரஸ் கொள்ளை நோயாகப் பரவி வரும் சீனாவின் வுஹான் மாநிலத்தில் இந்த நோய்க்கு ஒரே நாளில் 150 பேர் வரை பலியாகி உள்ளனர். இதுவரை சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,400-ஆக உயர்ந்து உள்ளது.

மிக எளிதாகப் பரவும் கொரோனா வைரஸ் சீனாவைப் புரட்டிப் போட்டு வருகிறது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்கூட இந்த நோய்த் தொற்றில் இருந்து தப்பக்க முடியவில்லை.

மருத்துவப் பணியாளர்கள் உடல் முழுவதையும் மூடும் வகையில் பாதுகாப்பு ஆடைகளை அணிந்த படியே பணியாற்றுகின்றனர். நோய்த் தொற்றுவதும் அதனால் மரணம் ஏற்படுவதும் ஒருபுறம் என்றால் அது தொடர்பான அச்சம் மறுபுறம் பலரையும் ஆட்டிப் படைக்கிறது.

இந்த வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த சீனா எடுத்து வரும் முயற்சிகளை உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது. உண்மையிலேயே பாராட்ட வேண்டும்.


கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாகச் சிங்கப்பூரில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப் பட்டது. அந்த வைரஸ் பரவாமல் தடுக்க அங்கே தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எந்தெந்த இடங்களுக்குச் சென்றார்கள்; எந்தக் கடைகளில் பொருள்கள் வாங்கினார்கள்; அவர்களின் அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்கள் யார் யார் என்கிற விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப் படுகிறார்கள்.

இந்த விசயத்தில் சீனா சுகாதார அமைச்சு தீவிர கண்காணிப்பு நிலையில் உள்ளது. அத்துடன் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு வருகிறது.

சிங்கப்பூரை எடுத்துக் கொண்டால், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் அனைத்தையும் தவிர்க்கத் தொடங்கி விட்டார்கள். வேதனையான செய்தி.



கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப் படுத்துவதில் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

கடந்த புதன்கிழமை (12.02.2020) சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றின் ஊழியருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது.

அதை தொடர்ந்து அந்த வங்கியில் பணியாற்றிய 300 ஊழியர்களும் அங்கு இருந்து வெளியேற்றப் பட்டனர்.

ஓர் ஊழியருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப் பட்டதற்காக ஒட்டுமொத்த அலுவலகத்திற்கே விடுமுறை. இந்த நிலையில் தான் சிங்கப்பூரில் கொரோனா குறித்த அச்சம் மேலோங்கி வருகிறது.

ஏனெனில் சீனாவுக்கு அடுத்த படியாக கொரோனா வைரசால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ள இடங்களில் சிங்கப்பூரும் ஒன்று.

அங்கு 80 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.



கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பல நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இருந்தாலும் சிங்கப்பூரில் இந்த்த தொற்று எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதற்கு இரு முக்கிய காரணங்கள் சொல்லப் படுகின்றன.

சீனாவுடன் சிங்கப்பூருக்கு இருக்கும் வர்த்தக உறவுகள் ஒரு காரணம். கடந்த 2019-ஆம் ஆண்டு மட்டும் சுமார் முப்பது இலட்சம் சீன மக்கள் சிங்கப்பூருக்கு வந்து போய் இருக்கிறார்கள். இதன் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை நாம் ஓரளவிற்குப் புரிந்து கொள்ளலாம்.

இரண்டாவதாக உலக நாடுகளை இணைக்கும் முக்கிய மையமாகச் சாங்கி விமான நிலையம் இயங்கி வருகிறது.

இந்த விமான நிலையத்தில் ஒவ்வொரு 80 விநாடிகளுக்கும், ஒரு விமானம் புறப்படுகிறது; ஒரு விமானம் தரை இறங்குகிறது. ஒன்றரை நிமிடத்திற்குள் ஒரு விமானம்.

அந்த அளவுக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் மிகவும் பரபரப்பான இடம். வெளிநாட்டு மக்களின் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதி.



இது மட்டும் அல்லாமல் தொழில் ரீதியான சந்திப்புகளுக்கும், கூட்டங்களுக்கும் சிங்கப்பூரைப் பலரும் தேர்ந்து எடுக்கிறார்கள். உலக நாடுகளைச் சேர்ந்த பலர் அடிக்கடி சிங்கப்பூருக்கு வருவதும் போவதும் வழக்கமானது.

அந்த வகையில் அப்படி நடைபெற்ற கூட்டம் ஒன்றில்தான், கொரோனா பரவுவதற்கு காரணமாக இருந்து இருக்கலாம் என்பது பலருக்கும் அதிர்ச்சியை அளிக்கும் செய்தி. சீனாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் முதலிடம் வகிப்பது சிங்கப்பூர்.

கடந்த ஜனவரி மாதத்தில், சிங்கப்பூரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 பேர் கலந்து கொண்ட ஒரு மாநாடு நடைபெற்றது.

சீனாவைச் சேர்ந்த சிலரும் இதில் கலந்து கொண்டார்கள். இதில் 41 வயதான மலேசியரும் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டம் நடைபெற்று முடிந்து ஒரு வாரம் கழித்து, அந்த மலேசியருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

அடுத்து அந்த நபர் மூலம் அவருடைய தாய் மற்றும் சகோதரிக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.



அதே கூட்டத்தில் கலந்து கொண்ட தென்கொரியாவைச் சேர்ந்த இருவருக்கும் சில நாட்களுக்குப் பின்னர் கொரோனா இருப்பது கண்டு அறியப் பட்டது.

மேலும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மூன்று சிங்கப்பூரியர்கள்; பிரிட்டனைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா இருப்பது அடுத்து அடுத்து கண்டு அறியப் பட்டது.

ஆனாலும் பாருங்கள் இவர்கள் தத்தம் நாடுகளுக்குச் சென்ற பின்னர் தான் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது.

கொரோனா வைரஸின் அறிகுறிகள் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டு 15 நாட்களுக்கு பின்னரே தெரியவரும். அதனால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சீனர்களுக்குத் தாங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியாமல் இருந்து இருக்கலாம்.

அதனால் தான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா வைரஸ் வெகு எளிதாகப் பரவி உள்ளது.



விமான நிலையங்களில் பயணம் செய்வதற்கு முன்னர் பயணிகள் தங்கள் கைகளைக் கழுவிவிட்டுச் சென்றாலே போதும். தொற்று நோய்கள் பரவுவதை ஓரளவிற்குக் குறைக்க முடியும்.

விமான நிலையங்களில் பயணிகள், தங்கள் கைகளைக் கழுவிச் செல்லும் வழக்கத்தில் பெரிய அளவில் மாற்றம் வேண்டும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்.

இந்த நோய்க்கான தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. மருத்துவ விஞ்ஞானிகள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்குள் பல்லாயிரம் உயிரிழப்புகள் ஏற்படலாம் எனும் அச்சமும் நிலவுகிறது.

பாதிக்கப் பட்டவர்கள் நலம் பெற வேண்டிக் கொள்வோம். பிரார்த்தனைகள் செய்வோம்.

(தொடரும்)