22 மார்ச் 2020

கொரோனா 2020 மலேசியா: 9

மலேசியாவில் 10-ஆவது இறப்பு

பினாங்கு மருத்துவமனையில் 74 வயது முதியவர் கொரோனா கோவிட் தாக்கத்தினால் இன்று காலமானார். இவர் கோலாலம்பூர் ஸ்ரீ பெட்டாலிங்கில் நடந்த ஒரு சமய ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்.

கடந்த மார்ச் 13-ஆம் தேதிக்கு அவருக்கு மூச்சுத் திணறல். பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இன்று மாலை 4.05-க்கு காலமானார்.



மலேசியாவில் இதுவரையில் 1,306 பேருக்கு கொரோனா பாதிப்பு. இவர்களில் 62 விழுக்காட்டினர் அதாவது 743 பேர் குறிப்பிட்ட அந்தச் சமய ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் தொடர்பு உடையவர்கள் என மலேசிய சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்துள்ளார் (Datuk Seri Dr Noor Hisham Abdullah).
மலேசியச் சுகாதார அமைச்சில் பணிபுரியும் 460 மருத்துவ அதிகாரிகள் கொரோனா தொடர்பாகப் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 270 பேருக்கு தொற்று இல்லை (negative) என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் 190 பேர் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்து இருக்கிறார்கள்.

அந்த மருத்துவ அதிகாரிகள் கோவிட் -19 நெருக்கடியால் உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் மனநல சேவைகள் மற்றும் உளவியல் உதவிகளை அமைச்சகம் வழங்கி வருகிறது என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.









கொரோனா 2020 மலேசியா: 8

மலேசிய மருத்துவர் காலமானார்

மலேசிய மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ்கள் (கோவிட் -19) காரணமாக இறந்து விட்டார். மலேசியாவில் இறப்பு எண்ணிக்கை ஒன்பது ஆக உயர்ந்து உள்ளது.
Hospital Tuanku Fauziah, Kangar. Perlis, Malaysia

இவருக்கு 48 வயது. இவர் துருக்கிக்குப் பயணம் செய்தவர். மார்ச் 8-ஆம் தேதி மலேசியாவுக்குத் திரும்பி இருக்கிறார். கடுமையான மூச்சுத் திணறல் (severe acute respiratory infection). மார்ச் 17-ஆம் தேதி கங்கார் துவாங்கு பவுசியா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது (He has been on respiratory support since March 19).

மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் முதன்மை மருத்துவர்களில் இவர் இல்லை.

இன்று காலை 10.30-க்கு காலமானார். இவரின் இறப்பு வெளிநாட்டுப் பயணத்துடன் தொடர்பு உடையது என்று சுகாதார அமைச்சின் தலைமைச் செய்லாளர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.





கொரோனா 2020 மலேசியா: 7

500 வென்டிலேட்டர் கருவிகள் தேவை

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். மேலும் 500 வென்டிலேட்டர் கருவிகள் தேவை என்கிறது மலேசிய சுகாதார அமைச்சு.

சுவாசக் கோளாறுகளை எதிர்கொள்வதற்குச் செயற்கை சுவாசம் அளிப்பவை வென்டிலேட்டர் கருவிகள்.


இவற்றை மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பது தான் தற்போது பெரும் சவாலாக உள்ளது. போதுமான நிதி இருந்தாலும், தருவிப்பதில் தான் பிரச்சினை உள்ளது.

மலேசியா முழுவதும் உள்ள 145 பொது மருத்துவமனைகளில் 26 மருத்துவமனைகளில் கோவிட்-19 நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தற்போது மலேசியச் சுகாதார அமைச்சிடம் 925 வென்டிலேட்டர்கள் உள்ளன. 26 மருத்துவமனைகளில் 3,400 படுக்கைகள் உள்ளன; அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு 300 படுக்கைகள் உள்ளன. மேலும் 500 வென்டிலேட்டர் கருவிகள் உடனடியாகத் தேவைப் படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றால் சிங்கப்பூரில் இருவர் பலி. மலேசியாவில் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர்.



கொரோனா: இந்தியாவில் மக்கள் ஊரடங்கு

14 மணி நேர ஊரடங்கு

இந்தியா முழுவதும் இன்று ஞாயிறு காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மக்கள் ஊரடங்கு நடப்பிற்கு வருகிறது.

இந்தியாவின் முக்கிய மாநகரங்கள், நகரங்கள் அனைத்தும் வெறிச்சோடி கிடக்கின்றன. மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து எதுவும் இல்லை. தெருக்கள், சாலைகள் துடைத்து வைத்ததைப் போல காட்சி அளிக்கின்றன.
 
Madras

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 341 ஆக உயர்ந்துள்ளது. 303 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இறந்தவர்கள் எண்ணிக்கை 5.
Nagpur, Maharashtra

தமிழகத்தில் மார்ச் 16-ஆம் தேதி கொரோனா கட்டுப்பாடுகள்

1. தமிழகம் முழுவதும் உள்ள மழலையர் பள்ளிகள்; மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை.
 
Assam

2. தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படுகின்றன.

3. சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு விமான நிலையங்களிலும் வெளிநாட்டிலிருந்து பயணிகள் வருகின்றனர். மத்திய அரசு சில வெளிநாட்டுப் பயணிகள் வருகையைத் தடை செய்து உள்ளது.





21 மார்ச் 2020

கொரோனா 2020 மலேசியா: பாதுகாப்பு முறைகள்

கொரோனா கோவிட் வைரஸ் (COVID-19 Coronavirus) தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் முறைகள். அதற்கு முன்னர் இப்போதைய நிலைமை:-

உலகளாவிய நிலை

பாதிக்கப்பட்ட நாடுகள் - 186
பாதிக்கப் பட்டவர்கள் - 284,805
மருத்துவமனையில் - 179,387
குணம் அடைந்தவர்கள் - 93,576
தீவிர சிகிச்சை - 8,109
இன்றைய இறப்புகள் - 462
மொத்த இறப்புகள் - 11,842

மலேசிய நிலை

பாதிக்கப் பட்டவர்கள் - 1,183
மருத்துவமனையில் - 1,065
குணம் அடைந்தவர்கள் - 114
தீவிர சிகிச்சை - 26
இறப்புகள் - 8

(21.03.2020 - 09.05 மலேசிய நேரம்)

கைகளைக் கழுவுதல்

கைகளின் அனைத்துப் பாகங்களையும் குறைந்த பட்சம் 20 விநாடிகள் கழுவ வேண்டும். சோப்பு நீரைக் கொண்டு நன்றாக கழுவ வேண்டும். நம்முடைய கண்கள், மூக்குகள், மற்றும் வாயைக் கைகளால் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏன் என்றால் அந்த வழியாகத் தான் வைரஸ் கிருமிகள் நம் உடம்பில் பரவுகின்றன. 
 

இருமல் தும்மல்

இருமினாலோ அல்லது தும்மினாலோ திசுயூ தாட்களைப் பயன்படுத்துங்கள். அதை மறக்காமல் குப்பைத் தொட்டியில் போட்டு மூடி விடுங்கள். பின்னர் கைகளைக் கழுவுங்கள். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் திசுயூ தாட்களைப் பயன்படுத்துங்கள்.

கைப்பிடிகள், லிப்ட் பொத்தான்கள் போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களைத் தொடுவதைத் தவிருங்கள்.

காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடம் இருந்து சற்று தள்ளியே இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள். மருத்துவரைத் தொலைபேசியில் அழைத்து உதவி கேளுங்கள்.