31 டிசம்பர் 2019

கேமரன் மலை இந்தியர்களின் வேதனைகள் - 2

தமிழ் மலர் - 31.12.2019

கேமரன் மலையில் பல நகரங்கள் உள்ளன. ரிங்லெட் (Ringlet), தானா ராத்தா (Tanah Rata), பிரிஞ்சாங் (Brinchang), திரிங்காப் (Tringkap), கோலா தெர்லா (Kuala Terla), கம்போங் ராஜா (Kampung Raja). அவற்றுள் கோலா தெர்லா என்பது ஒரு கிராமப்புற நகரம். 



அங்கு இருந்து இரண்டரை கி.மீ. உட்பாகத்தில் இச்சாட் எனும் ஆறு (Sungei Ichat) ஓடுகிறது. அந்த ஆற்றின் கரையில் 63 தமிழர்க் குடும்பங்களின் விவசாயப் பண்ணைகள். கடந்த ஐம்பது ஆண்டு காலமாக காய்கறிகள், பூந்தோட்டங்கள் அமைத்து தங்களின் வாழ்வாதாரத்தைப் பார்த்து வந்தார்கள். அதுவே அவர்களின் வாழ்வாதாரக் கலசம்.

இந்தத் தமிழர்க் குடும்பங்கள் அனைவரும் கேமரன் மலை மாவட்ட அலுவலகத்தில் இருந்து தற்காலிக நில உரிமத்தைப் பெற்று (Temporary Occupation Licence - TOL) விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களின் நில உரிமத்தை முறையாக, ஒரு சீரான அமைப்பில் ஒவ்வோர் ஆண்டும் புதுப்பித்து வந்து உள்ளனர். நில உரிமத்திற்கான கட்டணத்தையும் தவறாமல் கட்டி வந்து இருக்கின்றனர். 



விவசாயத்தில் காசு பார்க்கிறார்களோ இல்லையோ தங்களின் நில உரிமத்தில் மட்டும் மிகவும் கவனமாக இருந்து இருக்கின்றனர்.

இன்னும் ஒரு முக்கியமான விசயம். கடந்த 2018 ஆண்டு வரை அவர்களின் நிலத்திற்கான நிலவரியை முறையாகக் கட்டி வந்து இருக்கிறார்கள். நிலவரியைக் கட்டியதற்கான அதிகாரப்பூர்வ ரசீதுகளும் அவர்களிடம் உள்ளன.

இருந்தும் விவசாய நடவடிக்கையால் கோல தெர்லா ஆற்றுக்குப் பக்கத்தில் ஓடும் சுங்கை இச்சாட் எனும் ஆற்றில் தூய்மைக் கேடுகள் ஏற்படுகின்றன என்று சொல்லி அந்தத் தமிழர்களின் பண்ணைகளை இடித்துத் தள்ளி தரைமட்டம் ஆக்கி இருக்கிறார்கள். 



சில தினங்களுக்கு முன்னர் பகாங் மாநிலத்தின் நிலச் சுரங்க அமலாக்க அதிகாரிகள் அந்தத் தமிழர்களின் பண்ணைகளை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டுச் சென்று விட்டார்கள்.

சுருங்கச் சொன்னால், கன ரக இயந்திரங்களைக் கொண்டு வந்து பண்ணைக் கூடாரங்களையும் பண்ணைத் தளவாடப் பொருட்களையும் இடித்துத் தள்ளி, அட்டகாசம் செய்துவிட்டுப் போய் விட்டார்கள்.

அவர்களுடன் கூட்டரசு எப்.ஆர்.யூ. கலகத் தடுப்புப் போலீசாரும் இணைந்து கொண்டனர். இந்த விவகாரம் நாடு தழுவிய நிலையில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. 



சட்ட விரோதமாகப் பயிர் செய்தார்கள் என்பதே அமலாக்க அதிகாரிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.

மறியல் செய்த தமிழர்களில் ஏழு பேரைப் பிடித்துக் கொண்டு போய் காவலில் வைத்தனர். பின்னர் அன்றைய தினமே ஜாமீனில் விடுவித்தனர்.

ஒரு கேள்வி. கேமரன் மலையில் பெர்த்தாம், திரிங்காப், பிரிஞ்சாங், கம்போங் ராஜா போன்ற பகுதிகளில் நூற்றுக் கணக்கான பண்ணைகள் உள்ளன. அவற்றில் சில சட்ட விரோதமான பண்ணைகளும் உள்ளன. இல்லை என்று சொல்ல முடியாது. இந்திய வம்சாவளியினருக்குச் சொந்தம் இல்லாத சில பல பண்ணைகள்.



நேற்று வந்த நேபாள் வாசிகளும் வறுமையில் வந்த வங்காளதேசிகளும் கள்ளத் தனமாகப் பயிர் செய்து வருகின்றனர். வெளிநாட்டுக்காரர்களின் சின்னச் சின்னப் பண்ணைகள். இவர்களும் கார், பங்களா என்று வாங்கி அசத்திக் கொண்டு வருகின்றனர். அது அவர்களின் வாழ்வாதாரம். கேமரன் மலையில் பலருக்கும் தெரிந்த விசயம்.

எவரையும் எந்த விவசாயியையும் நாம் குறை சொல்லவில்லை. ஓர் ஓப்பீட்டிற்காகத் தான் அவர்களைப் பற்றி சொல்ல வருகிறேன். மறுபடியும் சொல்கிறேன். அது அவர்களின் வாழ்வாதாரம். எப்படியாவது வாழட்டும். பத்தில் பதினொன்றாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும். அதில் நமக்கு மாற்றுக் கருத்துகள் இல்லை.

வெளிநாட்டுக்காரர்களின் சின்னச் சின்னப் பண்ணைகள் என்பது கேமரன்மலை வாழ் இந்தியர்களுக்குச் சம்பந்தம் இல்லாத பண்ணைகள். இருந்தாலும் பாருங்கள். வெளிநாட்டுக்காரர்களின் பண்ணைகளை இடித்துத் தள்ளியதாக அண்மையச் செய்திகள் எதுவும் இல்லையே. 



அவ்வப்போது அந்த வெளிநாட்டுக்காரர்களைப் பிடித்துக் கொண்டு போவதும் விட்டு விடுவதும் ஒரு வழக்கமான நிகழ்ச்சி. சென்ற 2018 ஆண்டு வெளிநாட்டுக்காரர்கள் சிலரின் பண்ணைகள் உடைக்கப் பட்டன. உண்மை. ஆனாலும் சேதம் சில ஆயிரங்கள் மட்டுமே.

கோலா தெர்லாவில் தான் தமிழர்கள் கொஞ்சம் கூடுதலாகப் பண்ணைகள் வைத்து பயிர் செய்து வருகிறார்கள். இவர்கள் தான் சட்ட விரோதமான விவசாயிகளா? உண்மையிலேயே மற்ற சட்ட விரோதமான விவசாயிகளை எதில் கொண்டு போய்ச் சேர்ப்பதாம்.

கோலா தெர்லா இந்திய விவசாயிகள் மட்டும் ஏன் பழி வாங்கப் பட்டார்கள். அதற்குத் தான் நியாயம் கேட்கிறோம்.

தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினர் சியோங் யோக் காங் (Chiong Yoke Kong). அவர் சொல்கிறார். பாரிசான் தலைமையிலான பகாங் நிர்வாகம் வேண்டும் என்றே தேவையற்ற மறுப்பு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. உண்மையிலேயே கோலா தெர்லாவில் நடந்து வரும் மாற்றங்களை அந்த அறிக்கைகள் பிரதிபலிப்பதாக இல்லை என்று சொல்கிறார்.



கேமரன்மலை நாடாமன்ற உறுப்பினர் ராம்லி முகமட் நூர் (Ramli Mohd Noor); சிலிம் ரிவர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் குசைரி அப்துல் தாலிப் (Mohd Khusairi Abd Talib); ஆகிய இருவரும் பாதிக்கப்பட்ட இந்திய விவசாயிகளைச் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் (illegal encroachers) என்று முத்திரை குத்தி அவதூறு செய்து வருகிறார்கள் என்றும் சொல்கிறார்.

அத்தகைய அவதூறானப் பேச்சுகள் அந்த இருவரின் பொறுப்பற்ற தன்மையைத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றது.

நாடாமன்ற உறுப்பினர் ராம்லி முகமட் நூர்; சிலிம் ரிவர் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் குசைரி அப்துல் தாலிப்;  இருவரும் அந்தத் தொகுதியில் உள்ள விவசாயிகளைப் பற்றி குறைந்த அளவிலான அறிவையும் புரிதலையும் மட்டுமே கொண்டு இருக்கிறார்கள் என்பதை அது நிரூபிக்கிறது.

கோலா தெர்லா விவசாயிகளை அவதூறு செய்யும் மாநில அரசின் கண்மூடித்தனமான அறிக்கைகள் மட்டுமே அந்த இருவரின் பார்வையில் படுகின்றன. மற்றபடி உண்மையான நிலவரம் அவர்களுக்குத் தெரியவில்லை.



கோலா தெர்லா விவசாயிகளின் தற்காலிக நில உரிமம் (Temporary Occupation Licence - TOL) 2009-ஆம் ஆண்டிலேயே காலாவதியாகி விட்டதாக பகாங் மாநில அரசாங்கம் ஆரம்பத்தில் கூறியது.

அதே சமயத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் இருந்து வெளியேறும்படி கோலா தெர்லா விவசாயிகளுக்கு 2009-ஆம் ஆண்டிலேயே அறிவிப்பு வழங்கப்பட்டு விட்டது. எனவே அந்த விவசாயிகள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதற்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது என்றும் மாநில அரசாங்கம் கூறியது.

ஆனால் பரிசோதனை செய்து பார்த்ததில் கோலா தெர்லா விவசாயிகளின் தற்காலிக நில உரிமம் 2018-ஆம் ஆண்டு வரை புதுப்பிக்கப்பட்டு வந்து உள்ளது. அங்குள்ள விவசாயிகள் போதுமான ரசீதுகளையும் போதுமான சான்றுகளையும் தூக்கிப் போட்டு நம்மையே திணற வைக்கின்றனர். ஆக எங்கே கோளாறு நடந்து இருக்கிறது. புரியும் என்று நினைக்கிறேன். 



கோலா தெர்லா விவசாயிகள் கடந்த 50 ஆண்டு காலமாக அங்கே பயிர் செய்வதாகப் பத்திரிகையில் செய்திகள் வந்ததும் மாநில அரசாங்கம் திணறிப் போனது. மறுபடியும் வடிவேலு கணக்கில் ஒரு பல்டி. 1993-ஆம் ஆண்டு தான் முதன்முதலில் தற்காலிக நில உரிமம் வழங்கப் பட்டது என்று அட்டகாசமான அந்தர் பல்டி.

மறுபடியும் நன்றாக அலசிப் பார்த்ததில், கோலா தெர்லா, சுங்கை இச்சாட் விவசாயிகளுக்கு 1969-ஆம் ஆண்டிலேயே தற்காலிக நில உரிமம் வழங்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. பலரிடம் 1969-ஆம் ஆண்டு நில உரிமச் சான்றுகள் உள்ளன. சிலரிடம் 1970, 1971-ஆம் ஆண்டுகளுக்கான நில உரிம ரசீதுகளும் உள்ளன. என்னங்க சொல்லப் போகிறீர்கள்.

(In 1969-1971 or about 50 years ago, many farmers had received TOL. Pahang state government had mislead the public and defame the farmers based on lies)

ஆக கோலா தெர்லா, சுங்கை இச்சாட் விவசாயிகளின் மீது பகாங் மாநில அரசாங்கம் பொய்யான செய்திகளை அவிழ்த்துவிட்டு இருக்கிறது. அதே சமயத்தில் அவர்களை அவமானப் படுத்தி அவதூறு செய்து வருகிறது. வெள்ளிடைமலை.



கோலா தெர்லாவில் இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. ஒன்று கோலா தெர்லா ஆறு. இந்த ஆற்றின் நீரைத் தான் சுத்தம் செய்து (Kuala Terla Water Treatment Plant) கேமரன் மலை மக்களுக்கு விநியோகம் செய்கிறார்கள்.

மற்றொன்று இச்சாட் ஆறு (Sungai Ichat). சின்ன ஆறு. இந்த ஆறு கோலா தெர்லா ஆற்றில் கலக்கிறது. இந்த இச்சாட் ஆறு, கோலா தெர்லா ஆற்றில் கலப்பதற்கு முன்னதாகவே நீர்ப்பிடிப்பு இடம் உள்ளது. இச்சாட் ஆற்றுக்கும் நீர்ப்பிடிப்பு இடத்திற்கும் சம்பந்தமே இல்லை.

அதிகத் தூய்மைக் கேட்டைக் கொண்டு இருக்கும் கோலா தெர்லா ஆற்றைக் கவனிக்க வேண்டும். சுங்கை இச்சாட் ஆற்றை அல்ல.

நீர்ப்பிடிப்பு இடத்திற்கு சம்பந்தமே இல்லாத இடத்தில் கடந்த 50 ஆண்டு காலமாகப் தமிழர்கள் பயிர் செய்து வந்து இருக்கிறார்கள். இவர்கள் தூய்மைக் கேட்டை உருவாக்குகிறார்கள் என்று சொல்லி அவர்களின் பண்ணைகளை இப்போது அழித்து இருக்கிறார்கள். நியாயமே இல்லை. பாகுபாடு கொண்ட அமலாக்கம் போலவே பரிணமிக்கிறது.

பகாங் மாநில அரசாங்கத்தின் மீது தான் தப்பு. அவர்கள் தான் தப்பு செய்து இருக்க்கிறார்கள். விவசாயிகளின் தற்காலிக நில உரிமத்தை 2018-ஆம் ஆண்டு வரை புதுப்பித்து விட்டு மறு ஆண்டே (2019) அந்த நில உரிமத்தைத் தூக்கிப் போட்டு மிதிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது. சொல்லுங்கள்.

நம்மிடம் போதுமான சான்றுகள் உள்ளன. 1969, 1970, 1971-ஆம் ஆண்டுகளுக்கான நில உரிம ரசீதுகள் உள்ளன. கட்டுரையாளர் மீது வழக்குத் தொடரப் படலாம். கவலை இல்லை.

கோலா தெர்லா, சுங்கை இச்சாட் விவசாயிகளின் நில உரிமை ரசீதுகளை நீதிமன்றத்தில் சாட்சிப் பொருட்களாக ஆவணப் படுத்தத் தயாராக இருக்கின்றோம். தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினர் சியோங் யோக் காங் அவர்களும் தக்க சான்றுகளை வைத்து இருக்கிறார்.

ஒரு செருகல். இனவாத அரசியல்வாதிகள் சிலர் எப்படியாவது இனவாத அனலைக் கிளறிக் கொண்டு தான் இருப்பார்கள். தங்களின் சுயநலத்திற்காக அடுத்த இனத்தைக் குறை காண்பதிலேயே சுகம் காண்பார்கள். காலத்தையும் கழிப்பார்கள்.

மக்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் எவ்வளவோ உள்ளன. அதை எல்லாம் செய்ய மாட்டார்கள். சிறுபான்மை இனத்தவரை இளிச்சவாய இனத்தவர் என்று சொல்வார்கள். அப்படியே அவர்களின் வயிற்றை அடித்து; பாவம் அவர்களின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொள்வவார்கள்.

கோலா தெர்லா தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரையில் போராட்ட நகர்வுகள் தொடரும்.

30 டிசம்பர் 2019

கேமரன் மலை இந்தியர்களின் வேதனைகள் - 1

தமிழ் மலர் - 30.12.2019

தெரியாமல் செய்வது தவறு. தெரிந்தே செய்வது தப்பு. தவறுகள் செய்வது மனித இயல்பு. ஆனால் தெரிந்தே செய்வது மனிதத் தன்மை அல்ல. மன்னிக்க முடியாத விகாரத் தன்மை அல்ல. வக்கிரத் தன்மை. மன்னிக்கவும்.

கோலா தெர்லாவிலும் அது தான் நடந்து இருக்கிறது. தெரிந்தே தப்புகள் செய்து இருக்கிறார்கள். தவறு செய்வதற்கு முன்னால் யோசித்துப் பார்த்து இருக்க வேண்டும். 50-க்கு 50 என்கிற முறையில் அமலாக்க அதிகாரிகள் செயல்பட்டு இருக்க வேண்டும். 



எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பண்ணை அழிப்பு வேலைகளைச் செய்து இருக்கக் கூடாது. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை மறந்து இருக்கவும் கூடாது. பெருவாரியான மக்களின் வசை மாரிகளில் மாட்டிக் கொண்டு வாடி வதங்கவும் கூடாது.

சுமுகமாய்த் தீர்த்து இருக்க வேண்டிய விசயம். தூய்மைக் கேட்டுப் பண்ணைகள் எத்தனையோ ஆயிரம் ஆயிரம் இருக்கின்றன. அவற்றை எல்லாம் விட்டு விட்டு இந்த 60 பேருடைய நிலத்தில் கை வைத்தது நியாயமாகப் படவில்லை.

அதிகாரப் பலம் இருக்கிறது என்று ஒரு சிறுபான்மை இனத்தைப் பழி வாங்கி இருக்கக் கூடாது என்றும் சொல்லலாம். என்ன செய்வது. வெள்ளம் அணை கடந்து போய் விட்டது. பேசி பிரயோசனம் இல்லை. 



வேறு ஏதாவது ஒரு மாற்று வழியை உடனடியாகக் காண வேண்டும். பாதிக்கப் பட்டவர்களுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுக்க வேண்டும். அதுதான் இப்போதைக்கு சரியான தீர்வு.

பண்ணை அழிப்பு விசயத்தில் பெரிய தப்பு என்ன தெரியுங்களா. என்ன செய்ய முடியும் என்கிற ஓர் இறுமாப்புத் தனம். அந்த மாதிரி அவர்கள் செய்து இருக்கவே கூடாது. இரு தரப்பும் கலந்து ஆலோசித்து ஒரு தீர்க்கமான ஒரு நல்ல முடிவை எடுத்து இருக்க வேண்டும்.

சுருங்கச் சொன்னால் முடி இல்லாத தமிழர்களின் தலையில் மொட்டை அடிப்பது போல உள்ளது. இது ஒரு வகையில் இனவாதமே.



கோலா தெர்லாவில் நடந்த பண்ணை அழிப்பு விசயத்தில் இனவாதம் என்பது இச்சாட் ஆறு போல சிணுங்கிக் கொண்டு போவது நன்றாகவே தெரிகிறது. காரணங்களைப் பின்னர் சொல்கிறேன்.

கேமரன் மலையில் மொத்தம் 123 ஆறுகள் உள்ளன. எத்தனை ஆறுகள். 123 ஆறுகள். இவற்றில் 15 ஆறுகள் தான் ஆரோக்கிய நிலையில் உள்ளன. Regional Environment Awareness Cameron Highlands (REACH) எனும் கேமரன் மலை சுற்றுச் சூழல் விழிப்புணர்வு மையம் 2017-ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வில் இருந்து தெரிய வருகிறது.

(சான்று: https://www.nst.com.my/news/exclusive/2017/04/231620/three-camerons-rivers-declared-dead)

கேமரன் மலையில் உள்ள ஆறுகளை 5 வகைகளாகப் பிரித்து இருக்கிறார்கள்.



Class I (முதல் தகுதி); Class II (இரண்டாம் தகுதி); Class III (மூன்றாம் தகுதி); Class IV (நான்காம் தகுதி); Class V (ஐந்தாம் தகுதி).

கேமரன் மலையில் உள்ள ஆறுகளில் மூன்று ஆறுகளை ஐந்தாம் தகுதியில் சேர்த்து இருக்கிறார்கள். திரிங்காப் ஆறு (Sungai Tringkap), இச்சாட் ஆறு (Sungai Icat); பாராங் ஆறு (Sungai Parang). இதில் பாராங் ஆறு, தானா ராத்தா நகரத்திற்கும் ஹாபு சிறுநகரத்திற்கும் அருகில் ஓடுகிறது.

தூய்மைக் கேட்டால் மிக மிக மோசமாகப் பாதிக்கப் பட்டது திரிங்காப் ஆறு. அந்த ஆற்றுக்கு வாய் இருந்தால் என்னைக் கொல்ல வேண்டாம் என்று சத்தம் போட்டுக் கத்தி இருக்கும்.



அடுத்து பாதிக்கப்பட்டு வருவது பெர்த்தாம் ஆறு (Sungai Bertam). இது நான்காம் தகுதி பெற்ற ஆறு. கேமரன் மலையில் உள்ள முக்கியமான மூன்று ஆறுகளில் இதுவும் ஒன்று. செத்துக் கொண்டு வரும் ஆறுகளில் ஒன்று என வர்ணிக்கிறார்கள். இதைப் பற்றி யூடியூப்பில் ஒரு காணொலி உள்ளது.

அதன் முகவரி: https://www.youtube.com/watch?v=aJptrZoVdoA

போய்ப் பாருங்கள். இந்த ஆறு செத்துக் கொண்டு வருவதற்கு மூல காரணம் விவசாயம் அல்ல. கட்டடங்கள். நூற்றுக் கணக்கான கட்டடங்கள். அந்தக் கட்டடங்களில் இருந்து தூக்கி வீசப்படும் குப்பைகள்.

பெர்த்தாம் ஆறு 2031 மீட்டர் உயரத்தில் பிரிஞ்சாங் மலையில் உற்பத்தி ஆகிறது. அதற்கு முன்னர், மென்சுன் பள்ளத்தாக்கு (Mensun Valley); உலு பெர்த்தாம் வனக் காப்பகம் (Hulu Bertam Forest Reserve); ஆகிய மலைப் பகுதிகளில் இருந்து பல சிற்றோடைகள் வருகின்றன. அவை பெர்த்தாம் ஆற்றுடன் கலக்கின்றன. இந்தப் பெர்த்தாம் ஆறு, பூரோங் ஆற்றுடன் (Sungai Burung) கலக்கிறது.



பெர்த்தாம் ஆறு மக்கள் வாழும் பகுதிக்கு வந்த 2 கிலோ மீட்டரில் ஓர் அழுக்குச் சாக்கடையாக மாறுகிறது. அதற்குக் காரணம் மேம்பாட்டுத் திட்டங்கள்; விவசாய நடவடிக்கைகள் (Development Projects and Agricultural Activities).

கடும் மழை பெய்தால் வீடுகளில் உள்ள மலக்கூடக் கழிவுநீர் ஆற்றில் பாய்கிறது. அதே நேரத்தில் அங்கு வாழும் மக்களும் சும்மா இல்லை. திடமான, திரவமான கழிவுப் பொருட்களையும் மூட்டைக் கட்டி ஆற்றில் கொட்டுகின்றனர். எவன் எக்கேடு கெட்டால் என்ன; என் வீடு சுத்தமாக இருந்தால் போதும் என்கிற ஓர் அசட்டலான சுயநல நினைப்பு.

பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள் (Pesticide and Fertilisers) போன்றவற்றில் ஆக்ஸிஜன் (Oxygen) எனும் உயிர்க் காற்றைக் குறைக்கும் நைட்ரிக் அமில உப்பு (Nitrate) உள்ளது. 



இந்த நைட்ரிக் அமில உப்புப் பொருட்கள், விவசாயப் பண்ணை மண்ணில் இருந்து ஆறுக்குள் கலக்கிறது. ஏற்கனவே கடுமையான சூழ்நிலை. அதில் இந்த உப்பு மேலும் நிலைமையை மோசமாக்கி விடுகிறது.

இவற்றால் பெர்த்தாம் ஆறு மிக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கேமரன் மலை சுற்றுச் சூழல் விழிப்புணர்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே எச்சரிக்கை செய்து விட்டார்கள்.

(சான்று: https://www.nst.com.my/news/exclusive/2017/04/231620/three-camerons-rivers-declared-dead)

அது மட்டும் அல்ல. இந்த பெர்த்தாம் ஆற்றின் நீர் தான், பாரிட் (Parit Falls); ராபின்சன் (Robinson Falls) நீர்வீழ்ச்சிகளில் போய்ச் சேர்கிறது. இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். 



பார்ப்பதற்குத் தெளிந்த நீரோடை நீர் மாதிரி இருக்கும். ஆனால் அந்த நீரில் நச்சு கலந்து இருப்பது கண்களுக்குத் தெரிவது இல்லை. நீர்வீழ்ச்சிகளில் குளிப்பவர்களுக்கும் தெரிவது இல்லை. சந்தோஷமாகக் குளித்துவிட்டுப் போகிறார்கள். இந்தத் தகவலைப் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விசயத்தில் உள்ளூர் அமலாக்க அதிகாரிகள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்வது இல்லை என்று கேமரன் மலை விழிப்புணர்வு மையம் கவலை கொள்கிறது. புரியும் என்று நினைக்கிறேன். உள்ளங்கை புண்ணுக்குக் கண்ணாடி தேவை இல்லை.

2015-ஆம் ஆண்டில் ஆசிய பசிபிக் பூச்சிக்கொல்லி செயல்பாட்டு வலையமைப்பு

(Pesticide Action Network Asia and the Pacific - PANAP) ஓர் எச்சரிக்கை செய்தது. 



அதாவது கேமரன் மலை ஆறுகளில் தடை செய்யப்பட்ட எண்டோசல்பான் (Endosulfan), எட்ரின் கெத்தோன் (Edrine Ketone), அல்டிரின் (Aldrin); Dichloro Diphenyl Dichloro Ethylene (DDE) போன்ற நச்சுப் பொருட்கள் கலந்து இருப்பதாக எச்சரிக்கை விடுத்தது.

(http://pan-international.org/release/world-environment-day-2015-pan-groups-renew-call-to-protect-children-from-hazardous-pesticides/)

கோலா தெர்லாவில் இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. ஒன்று கோலா தெர்லா ஆறு (Sungai Kuala Terla). பெரிய ஆறு. முக்கியமான ஆறு. கேமரன் மலை வாழ் மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஆறு. இந்த ஆற்றின் நீரைத் தேக்கி, நீர்த் தேக்கம் செய்து, நீரைச் சுத்தம் செய்து விநியோகம் செய்கிறார்கள்.

மற்றொன்று இச்சாட் ஆறு (Sungai Ichat). சின்ன ஆறு. இந்த ஆறு கோலா தெர்லா ஆற்றில் கலக்கிறது. இந்த இச்சாட் ஆறு, கோலா தெர்லா ஆற்றில் கலப்பதற்கு முன்னதாகவே நீர்ப்பிடிப்பு இடம் உள்ளது. இச்சாட் ஆற்றுக்கும் நீர்ப்பிடிப்பு இடத்திற்கும் சம்பந்தமே இல்லை. 



நீர்ப்பிடிப்பு இடத்திற்கு சம்பந்தமே இல்லாத இடத்தில், ஓர் ஒதுக்குப் புறமான இடம். கடந்த 50 ஆண்டு காலமாகப் தமிழர்கள் பயிர் செய்து வந்து இருக்கிறார்கள். இவர்கள் தூய்மைக் கேட்டை உருவாக்குகிறார்கள் என்று சொல்லி அவர்களின் பண்ணைகளை இப்போது அழித்து இருக்கிறார்கள்.

அப்பாவுக்கு வயிற்று வலி. அதனால் அம்மாவின் பல்லைப் பிடுங்கினார்களாம். கதை எப்படி இருக்கு. அந்த மாதிரி தான் கோலா தெர்லாவிலும் நடந்து உள்ளது.

சட்டவிரோதமாகப் பயிர் செய்தார்கள் என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. 50 - 60 ஆண்டுகளுக்கு முன்னர் கோலா தெர்லாவில் இருந்து இரண்டரை கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள காடுகளை அழித்து விவசாயம் செய்து இருக்கிறார்கள். மறுபடியும் சொல்கிறேன். 1960- 1970-களில் நடந்த விசயம்.

அதற்காக கேமரன் மலை மாவட்ட அலுவலகத்தில் இருந்து தற்காலிக நில உரிமத்தைப் பெற்று (Temporary Occupation Licence - TOL) உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் உரிமத்தைப் புதுப்பித்து வந்து உள்ளனர். தற்காலிக நில உரிமத்திற்கான கட்டணத்தைத் தவணை தவறாமல் கட்டி வந்து இருக்கின்றனர்.

சென்ற 2018 ஆண்டு வரை நிலவரியை மாவட்ட இலாகாவில் முறையாகக் கட்டி இருக்கிறார்கள். அதற்கான அதிகாரப்பூர்வமான ரசீதுகளும் அவர்களிடம் உள்ளன.

இப்படி ஓர் அத்தாட்சி, ஆதாரம், சான்றுகள் அவர்களிடம் இருக்கும் போது எதை வைத்துக் கொண்டு பண்ணை அழிப்பு வக்கிரமத்தில் இறங்கினார்கள்.

அந்தத் கோலா தெர்லா தமிழர்கள் மட்டும் தான் மேலிடத்தின் பார்வைக்குத் தெரிந்ததா? செய்வதைச் செய்துவிட்டு பற்பல சால்சாப்புகள் சொல்வது சரியா? செய்த தவறுகளுக்கு பற்பல காரணங்களைச் சொல்லி மடைமாற்றம் செய்வது சரியா?

பகாங் மாநில அரசாங்கம் செய்தது சரியா? இதைப் பற்றி நாளைய கட்டுரையில் பார்போம்.

(தொடரும்)

29 டிசம்பர் 2019

வெங்காயம் சொல்லும் கண்ணீர் கதை

தமிழ் மலர் - 29.12.2019

முன்பு எல்லாம் வெங்காயத்தை வெட்டினால் தான் கண்களில் கண்ணீர் வரும். ஆனால் இப்போது எல்லாம் அப்படி இல்லீங்க. வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறது. வெங்காயத்திற்கு வந்த மவுசைப் பாருங்கள். 



ஓர் இந்தியக் குடும்பத்தில் சமையல் என்றால் அதற்கு அடிப்படையானவை வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு. இவை இல்லாமல் சமையல் செய்ய முடியாது. தெரிந்த விசயம்.

ஆக வெஙாயத்தின் விலை என்னதான் உயர்ந்தாலும் அவற்றைக் கண்டிப்பாக வாங்க வேண்டும். பயன்படுத்தியாக வேண்டும்.

வெங்காயத்தின் விலை கண்ணீர் சிந்தும் அளவிற்கு உயர்ந்து விட்டது. ஒரு காலத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தை ஒரு வெள்ளிக்குக் கூவிக் கூவி விற்றார்கள்.

இப்போது ஒரு கிலோ 15 ரிங்கிட்டிற்கு உயர்ந்து போய் விட்டது. சில கடைகளில் 20 ரிங்கிட் வரை விற்கிறார்கள். இஷ்டத்திற்கு விலையைப் போட்டு கல்லா கட்டுகிறார்கள்.



கூவிக் கூவி விற்பது எல்லாம் இப்போது கிடையாது. வாங்கினால் வாங்குங்கள்... வாங்காவிட்டால் போங்கள் என்று சொல்கிற மாதிரி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு விற்கிறார்கள்.

நமக்கும் வேறு வழி தெரியாமல் முப்பத்திரண்டு பல்லையும் காட்டி வாங்கிக் கொண்டு தான் போகிறோம். என்ன செய்வது. காலம் செய்யும் அலங்கோலம்.

அதுதான் ஒன்று சொல்வார்கள். யாரையும் எந்த நேரத்திலும் தரம் குறைவாகப் பார்க்கக் கூடாது.

யானைக்கு ஒரு காலம் என்றால் பூனைக்கு ஒரு காலம். அதுவே இப்போது தலைகீழாய் மாறி விட்டது. வெந்தயத்திற்கு ஒரு காலம் என்றால் வெங்காயத்திற்கு ஒரு காலம். 



ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை மலேசியாவில் இந்த வெங்காய விலை ஏற்றம் ஒரு தொடர் கதையாகி வருகிறது.

இந்த வெங்காயத்திற்கு ஏன் இப்படி ஒரு கிராக்கி. ஒரே ஒரு காரணம். உலகப் பருவநிலை மாற்றங்களே அதற்கு முக்கியக் காரணம். மழைக் காலத்தில் வெயில் அடிக்கிறது. வெயில் காலத்தில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

ஒரு கட்டத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர் பச்சைகள் வெயிலில் காய்ந்து கருகிப் போயின. பின்னர் அடைமழை அடித்துக் கொட்டியது. இப்போது அதே அந்தப் பயிர் பச்சைகள் அப்படியே அழுகிப் போகின்றன.



உலகத்திலேயே அதிகமாக வெங்காயம் பயிர் செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. அங்கே இருந்துதான் மலேசியாவிற்கு வெங்காயம் வந்து கொண்டு இருந்தது.

உலகத்திலேயே அதிகமாக வெங்காயம் உற்பத்தி செய்யும் நாடுகளின், 2018-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்.

சீனா: 22,300,000 டன்கள்

இந்தியா: 19,299,000 டன்கள்

அமெரிக்கா: 3,159,400 டன்கள்

ஈரான்: 2,381,551 டன்கள்

ரஷ்யா: 1,984,937 டன்கள்

துருக்கி: 1,904,846 டன்கள்

எகிப்து: 1,903,000 டன்கள்

பாகிஸ்தான்: 1,660,800 டன்கள்


இந்தியாவின் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவு உற்பத்தி செய்யப் படுகிறது. 



தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் சின்ன வெங்காயத்திற்குப் பேர் போனவை. தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய மூன்று இலட்சம் டன் சின்ன வெங்காயம்  உற்பத்தி செய்யப் படுகிறது.

தமிழகத்தின் இந்தப் பகுதிகளில் இருந்துதான் மலேசியாவிற்கு சின்ன வெங்காயம் வந்து கொண்டு இருந்தது. இனியும் வரும் என்று எதிர்பர்ப்போம்.

இந்தியாவில் ஏற்பட்ட பருவ நிலை மாற்றங்களினால் வெங்காய விளைச்சலில் அதிகமான பாதிப்பு. அதன் காரணமாக வெங்காய ஏற்றுமதியை இந்தியா கட்டுப் படுத்த வேண்டிய கட்டாய நிலைமை. அதனால் இந்திய வெங்காயம் குறைவான அளவில் மலேசியாவிற்கு வந்தது. 



அதைத் தொடர்ந்து வெங்காயத்தின் விலையேற்றம். ஒரு பொருளின் விலை ஒரு தடவை ஏறினால் மறுபடியும் பழைய விலைக்கு இறங்கி வராது. மலேசியாவைப் பொருத்த வரையில் நிதர்சனமான உண்மை.

ஊட்டி ஊட்டி வளர்த்தால் ஊதி ஊதிக் கெடுப்பார்கள் என்று சொல்வார்கள். அந்த மாதிரி ஒரு தடவை ஒரு பொருளின் விலை ஏறினால் அதை அப்படியே ஊதி ஊதியே உயர்த்திக் கொண்டு போய் விடுவார்கள். இது ஒன்றும் பழைய அலி பாபா கதை அல்ல.

அந்த மாதிரி தான் வெங்காயத்தின் வெங்காயக் கதையும் வருகிறது. வேதாளம் முருங்கை மரம் ஏறினால் அந்த வேதாளத்தை முருங்கை மரத்தோடு வெட்டிச் சாய்த்தால் தான் முடியும் என்கிறது விக்கிரமாதித்தன் கதை. ஆனால் அது வெங்காய விசயத்தில் நடக்கிற காரியமா.



இந்தியாவில் வெங்காயம் அதிகம் உற்பத்தி செய்யப்படும் மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. அங்கே பருவம் தவறிய மழை. அத்துடன் போதிய மழையும் இல்லை. அதனால் வெங்காய உற்பத்தியில் கடுமையாக பாதிப்பு.

மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், பஞ்சாப், ஆந்திர பிரதேசம், மேற்கு வங்காளம், ஹரியானா, உத்தர பிரதேசம், ஒடிசா, சட்டீஸ்கர், குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் பெல்லாரி எனும் பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப் படுகிறது.

பொதுவாக ஏப்ரல், மே, ஜூன், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வெங்காயம் பயிர் செய்யப்பட்டு அறுவடை செய்யப் படும்.

இருந்தாலும் இந்தியாவில் அண்மைய ஆண்டுகளில் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்கிறது. 



அதனால் தமிழகத்தில் வெங்காய உற்பத்தி பெரும் அளவு பாதிக்கப் பட்டது. இதைத் தவிர அதிகமான ஈரப் பதம். அதன் காரணமாக நோய் தாக்குதல்கள். அதனால் வெங்காய உற்பத்தியில் பாதிப்பு.

அதையும் தாண்டிய நிலையில் முக்கிய உற்பத்தி மையமான மகராஷ்டிராவில் போதிய விளைச்சல் இல்லை. அதனால் இந்தியா முழுமைக்கும் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதனால் வெங்காய விலையும் உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் அதிகமாகப் பாதிக்கப் படுவது சாமானியப் பொதுமக்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இந்தியாவில் இருந்துதான் மலேசியாவுக்கு 75 விழுக்காட்டு வெங்காயம் வருகிறது. அதனால் தான் இந்தியாவின் பருவநிலை மாற்றங்களைப் பற்றியும்; அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் சொல்கிறேன். 



வெங்காய விலை ஏற்றத்திற்கு பருவநிலை மாற்றம் ஒரு காரணமாக இருந்தாலும், சட்டவிரோதமாகப் பதுக்கி வைப்பதும் ஒரு காரணம் என்றும் சொல்ல வேண்டி உள்ளது.

பெரிய வெங்காயம் ஆறு மாத வரை நன்றாக இருக்கும். அதனால் தரகர்கள் பலர் பெரிய வெங்காயத்தைப் பதுக்கி வைக்கின்றனர்.

உற்பத்தி குறைச்சலான நேரங்களில் பெரிய வெங்காயத்தை அதிக விலைக்கு விற்று அதிக லாபம் சம்பாதிக்கின்றனர். உட்கார்ந்து கொண்டே கொழுத்த பணக்காரர் ஆகிறார்கள்.

வெங்காயத்தைக் கொண்டு ஏழைகளின் வயிற்றில் அடித்து பணக்காரர் ஆவது ஒரு கலையாக மாறி வருகிறது. பணம் சம்பாதிக்கலாம். அதற்கு இப்படியா. இந்த மாதிரியா ஏழைகளின் வயிற்றில் அடிப்பது.



இந்த மாதிரி மனிதர்கள் செத்துப் போனால் அழுகிப் போன வெங்காய மூட்டைகளில் கட்டி பத்து நாளைக்கு ஊறப் போட்டுத் தான் புதைக்க வேண்டும்.

நரகத்திற்குப் போனால் அவர்களுக்கு அங்கே கிடைக்கும் கொதிக்கும் கொப்பரைச் சட்டி அபிஷேகம் என்பது வேறு கதை. இது வயிற்றெரிச்சலில் ஒரு புலம்பல். சரி.

இந்திய வெங்காயத்திற்கு இந்தியாவிலேயே தட்டுப்பாடு. அதனால் மலேசியாவிலும் தட்டுப்பாடு. அதற்கு என்ன செய்து இருக்கலாம். சீனாவில் இருந்து கூடுதலாக இறக்குமதி செய்வதற்கு மலேசியா முயற்சி செய்து இருக்கலாம்.

அல்லது பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தான் அல்லது ஈரானில் இருந்து இறக்குமதி செய்து இருக்கலாம். அல்லது மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்து இருக்கலாம். 



அப்பேர்ப்பட்ட இந்தியாவே பக்கத்தில் இருக்கும் எகிப்தில் இருந்து 40 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்தது.

(https://www.vikatan.com/news/tamilnadu/people-did-not-like-imported-onions-from-egypt-says-traders)

ஆனால் மலேசியா அப்படி அல்ல. அதற்குப் பதிலாக 8000 கி.மீ. அப்பால் இருக்கும் துருக்கியில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்தார்கள்.

என்ன நடந்தது தெரியுமா. பாதி வெங்காயம் கப்பலிலேயே அழுகி விட்டதாம். இவர்களும் எதிர்பார்க்கவில்லை. துருக்கி நாட்டு பெரிய வெங்காயங்கள் ஆறு மாத காலம் வரை தாக்குப் பிடிக்கும்.

 

அப்புறம் என்ன செய்வது. எஞ்சிய வெங்காயத்தை மலேசியாவிற்குக் கொண்டு வந்து இருக்கிறார்கள். வாங்கிய விலையை விட சற்றுக் குறைவான விலையில் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்றுத் தீர்த்தார்கள்.

இப்படி ஏற்படும் என்று இங்கே உள்ள விவசாய அறிவாளிகளும் எதிர்பார்க்கவில்லை. ஒரு புதிய அனுபவம். இது அண்மைய காலத்து வெங்காயக் காப்பியக் கதை. 

வெங்காயத்தின் விலை உயர்ந்து போவதால் அதிகம் பாதிக்கப் படுகிறவர்கள் பாவம் விவசாயிகள் தான். வெயிலில் கருகிப் பொசுங்கிப் போன வெள்ளந்திகள். அடுத்து அதிகமாய்ப் பாதிக்கப் படுவது சாமானியப் பொதுமக்கள்.

இந்த இருவருக்கும் இடையில் தரகர் வேலை பார்க்கும் வியாபாரிகள் தான் அதிகமாகப் பணம் பார்க்கிறார்கள். மானவாரியாக விலையை உயர்த்தி விடுகிறார்கள். அப்படியே ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள். அடித்துக் கொள்ளை லாபத்தில் கல்லா கட்டுகிறார்கள். பெரிய பாவம்.

வெங்காயக் கதையைக் கேட்டு பலருக்கு கண்ணீர் வரலாம். எனக்கு அப்படி இல்லை. மலேசிய இந்தியர்களின் கண்ணீர்க் கதைகளைக் கேட்டுக் கேட்டு கண்ணீர் வற்றிப் போய் ரொம்ப நாளாகி விட்டது. 



அண்மைய காலமாகத் தமிழ்ப் பள்ளிகளுக்கும் தமிழ்க் கல்விக்கும் பலவித நேரடி தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. மூடி மறைக்க விரும்பவில்லை.

பொதுவாகச் சொன்னால் தமிழ் மொழிக்கும் இந்து சமயத்திற்கும் களங்கம் ஏற்படுத்தப் படுகின்றது. அடுத்து வரும் தலைமுறையினரைச் சீரழிக்கும் சக்திகள் ஆங்காங்கே நர்த்தனம் ஆடுகின்றன.

தன்மானத்துக்கும் உரிமைக்கும் களங்கம் ஏற்படுவதை அறிந்த பின்னரும் எதுவும் நடக்காதது போல் என்னால் வாளா இருக்க முடியவில்லை. வெங்காயத்தை நறுக்காமலேயே கண்ணீர் வருகிறது.

28 டிசம்பர் 2019

கேமரன் மலை இந்தியர்களின் நெருக்கடிகள்

தமிழ் மலர் - 28.12.2019

கேமரன் மலை இந்தியர்கள் ஒரு நெருக்கடியான காலக் கட்டத்தில் பயணிக்க வேண்டிய ஒரு காலக் கட்டம். நாளைக்கு என்ன நடக்கும்... என்ன நடக்கலாம் என்பதைக் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அங்கே ஒரு பதற்றமான நிலை. 



நெழிவு சுழிவுகள் நிறைந்த மலைக் காட்டு வழியில் அவர்களின் நகர்வுகள் நனைந்து நலிந்து போய்க் கொண்டு இருக்கின்றன. வேதனை.

மலேசியா முழுவதும் இந்தியர்கள் வாழலாம். ஆனால் கேமரன் மலையில் தான் நம் தமிழர்கள் சற்றே மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள்.

உழைப்பு விடாமுயற்சி வழியாகச் செல்வாக்குடன் வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள். கொஞ்சம் பணம் காசோடு மனநிறைவோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதுவும் சிலருக்குப் பிடிக்கவில்லை. அதிலும் கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள். 



எப்படியாவது தமிழர்களின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும்; அவர்களை ஒன்றும் இல்லாமல் செய்ய வேண்டும்; இருப்பதை எல்லாம் பிடுங்கிக் கொண்டு நடுத்தெருவில் அலையவிட வேண்டும் என்று கங்கணம் கட்டுகிறார்கள். அதில் முனைப்பும் காட்டுகிறார்கள்.

நம் நாட்டு அரசியல் பெரிசுகளைத் தான் சொல்கிறேன். அரசியல் மூலமாகத் தங்களின் குடும்பத்தையும் உற்றார் உறவினர்களையும் கோடீஸ்வரர்களாக உயர்த்த வேண்டும் என்பதற்காகவே இனவாதத்திற்கு ஆராதனை செய்கிறார்கள். மதவாதத்திற்கு ஆலாபனை செய்கிறார்கள்.

கடிவாளம் அவர்கள் கையில் இருக்கிறது. அதனால் பிடிமானம் அவர்களிடம் இருக்கிறது. கடிவாளம் இருக்கும் வரையில் பிடிமானம் இருக்கும். இதை நாம் என்றைக்கும் மறந்து விடக் கூடாது. 



ஆக கடிவாளம் கழன்று போகும் வரையில் காத்து இருக்க வேண்டிய நிலை. அட்டகாசமான அநியாயங்களை அமைதியாக ஏற்றுக் கொண்டு அமைதியாய் வாழ்ந்து காட்ட வேண்டிய இக்கட்டான நிலை.

கேமரன் மலையில் பல சிறு கிராம நகரங்கள். அவற்றில் ஒன்று கோலா தெர்லா. இந்த நகரம் கம்போங் ராஜா நகரில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் இருக்கிறது.

பெரும்பாலானவர்கள் பண்ணை விவசாயிகள். சீனர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால் அவர்களின் பண்ணைகளில் கொஞ்சமாய்ப் பாதிப்பு. நம் இந்தியர்களுக்கு ஏற்பட்டது போல பெரும் பாதிப்பு இல்லை. 



இந்தக் கோல தெர்லா பண்ணை அழிப்பில் பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் கே. பெரியசாமி. 70 வயதிற்கும் மேலாகிறது. பூ பண்ணை வைத்து இருந்தார். கடந்த நாற்பது ஆண்டுகளாக, நாடு முழுமைக்கும் பசும் பூக்களை (chrysanthemum flower) அனுப்பி வந்தார்.

இவருடைய பண்ணை கோலா தெர்லாவில் சுங்கை இச்சாட் (Sungei Ichat) ஆற்றுக்கு அருகில் இருந்தது. சாமந்தி, செவ்வந்தி பூக்களைப் பயிரிட்டு வந்தார்.

கடந்த திங்கட் கிழமை (23.12.2019) நிலச் சுரங்க அலுவலகத்தில் (Cameron Highlands Land and Mines Office) இருந்து கன ரக இயந்திரங்கள் வந்தன. இவரின் பூ பண்ணைக்குள் நுழைந்தன. 



அந்தப் பண்ணையை ஒட்டு மொத்தமாக அழித்து நாசம் செய்து விட்டுப் போய் விட்டன. இப்போது இவருடைய எதிர்காலம் கேள்விக் குறியாகத் தொக்கி நிற்கிறது.

அவருடைய பண்ணை அழிக்கப்படும் போது தொலைவில் இருந்து அந்த அவலத்தை அவரால் பார்க்கத் தான் முடிந்தது. பண்ணையைச் சுற்றி அமலாக்க அதிகாரிகள். அவரால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

கன ரக இயந்திரங்கள் அவருடைய பசுமைக் குடிலை (green house) இடித்து தரைமட்டம் ஆக்கின.

"இனிமேல் அந்தப் பச்சை மண்ணில் பயிர் செய்து கொஞ்சி விளையாட முடியாது. எங்களுடைய பண்ணை அழிக்கப்படும் என்று கனவிலும் நினைக்கவில்லை." 



"ஜனவரி முதல் தேதி புத்தாண்டு; அடுத்து வரும் பொங்கல் வரை ஆர்டர்கள் இருக்கின்றன. என்ன செய்யப் போகிறோம்."

"பண்ணையில் எங்களின் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துக் கொள்ளக்கூட எங்களுக்கு அனுமதி இல்லை. எங்களின் பச்சைக் குடிலை பெயர்த்து எடுக்கவும் அனுமதிக்கவில்லை. பயிர் பச்சைகளை அறுவடை செய்யவும் விடவில்லை. தடுத்து நிறுத்தப் பட்டோம்."

"வந்தார்கள்... மேய்ந்தார்கள்... போய்ச் சேர்ந்தார்கள்..."

"ரொம்பவும் கஷ்டப்பட்டு உழைத்தோம். நாற்பது ஆண்டுகளாக உழைத்த உழைப்பு ஒரே நாளில் பறி போனது."



"பகாங் மாநில அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையினால் பல இந்திய விவசாயிகள் ஓட்டாண்டியாகிப் போனார்கள். அவர்களால் இனி சம்பாதிக்க முடியாது. அவர்களின் கடன்களை அடைக்க முடியாது."

"பெரும்பாலான விவசாயிகள் பண்ணை மேம்பாட்டிற்காக ஆக்ரோ வங்கியில் கடன் வாங்கி இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்காக கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த ஆண்டு ஆரம்பத்தில் பிள்ளைகள் வேறு புதிய வகுப்புகளுக்குப் போகிறார்கள்."

"அந்தத் தோட்டம் தான் எங்களின் அன்னப் பாத்திரம். நாற்பது ஐம்பது ஆண்டு காலமாக எங்களுக்கு அன்னம் இட்ட பாத்திரம்." 



"எங்கள் பிள்ளைகள் மேல் படிப்பு படித்து இருந்தாலும் இந்தத் தோட்டங்களில் தான் வேலை செய்து வந்தார்கள். எங்களுடன் இரவும் பகலுமாய் உழைத்தார்கள்."

"விவசாயத் துறையை மேம்படுத்த வேண்டும் என்று நம் நாட்டுத் தலைவர்கள் வீரவசனம் பேசுகிறார்கள். ஆனால் இந்த மாதிரி விவசாய அழிப்புகளைச் செய்தால் எப்படிங்க விவசாயத் துறை முன்னுக்கு வரும். சொல்லுங்கள்"

மனம் கலங்கி வேதனைப் படுகிறார் கே.பெரியசாமி. இவர் இந்தப் பண்ணையில் தன் சகோதரிகளுடன் உழைத்து தன் வாழ்வாதாரத்தைத் தேடி வந்தார். தன் பிள்ளைகளைப் படிக்க வைத்தார்.

இருப்பதை மற்றவர்களுக்கு கொடுத்து மன நிறைவு அடைந்து வந்தார். இப்போது அவருடைய வாழ்வியல் சாசனத்தையே அழித்து ஒழித்துவிட்டுப் போய் விட்டார்கள்.



கோலா தெர்லாவில் விவசாயப் பண்ணைகள் இடிக்கப் படுவதைத் தவிர்ப்பதற்கு குவாந்தான் உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவை பெற்று இருந்தனர்.

ஆனால் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி அந்தத் தடை உத்தரவை அவர்கள் மீட்டுக் கொண்டனர். அதன் பிறகு தான் இடிப்பு அழிப்பு ருத்ர தாண்டவங்கள் அரங்கேற்றம் கண்டன.

மாநில அரசாங்கம் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் நடந்ததே வேறு. நீதிமன்றத் தடை உத்தரவை மீட்டுக் கொள்ளச் சொல்லி கழுத்து அறுக்கப்பட்டு விட்டார்கள்.

யார் மீட்கச் சொன்னார்கள் என்பது பாதிக்கப்பட்ட பண்ணை விவசாயிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். 



ஒருக்கால் மாநில அரசு ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி நீதிமன்றத் தடை உத்தரவை மீட்கச் சொல்லி இருக்கலாம். அதில் அவர்கள் ஏமாந்து போய் இருக்கலாம்.

அரசியல்வாதிகள் ஒருவர் மீது ஒருவர் பழி போடுவது இன்றைக்கு நேற்றைக்கு நடக்கிற விசயம் அல்ல. கம்ப ராமாயணத்துக் காலத்தில் இருந்தே கதை கதையாய் வருகிறது.

கோலா தெர்லா விவகாரத்தில் நம்பிக்கைக் கூட்டணி வாக்குத் தவறி விட்டதாக ம.சீ.ச. உதவித் தலைவர் டி லியான் கெர் கருத்து தெரிவித்து உள்ளார். 



மத்திய அரசு, பகாங் மாநில அரசுக்கு வழங்கிய அறிவுரையின் அடிப்படையில் பண்ணை அழிப்பு நடவடிக்கை எடுக்கப் பட்டதாக ம.சீ.ச. உதவித் தலைவர் சொல்கிறார்.

துணைப் பிரதமர் வான் அசிசா வான் இஸ்மாயில் மற்றும் பகாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் (Wan Rosdy Wan Ismail) இருவரும் சேர்ந்து அந்த முடிவை எடுத்ததாகவும் சொல்கிறார். என்ன நடந்தது என்கிற உண்மை நமக்கு தெரியாது.

ஜனநாயகச் செயல் கட்சி, ம.இ.கா. மீது பழி போடுவதும்; ம.சீ.ச. கட்சி அம்னோ மீது பழி போடுவதும்; பக்காத்தான் கூட்டணி பாரிசான் கூட்டணியின் மீது பழி போடுவதும் தொடரும் அனுபல்லவிகள். 



அதனால் பாதிக்கப் பட்ட இந்தியர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அவர்கள் ஏமாந்து போனது தான் மிச்சம்.

அரசாங்கத்தை எதிர்த்து எதையும் சாதிக்க முடியாது என்பதை நினைவில் கொள்வோம். பொறுமையாகவும் விவேகமாகவும் நடந்து கொண்டால் நஷ்டயீடு கேட்டுப் பெறலாம்.

இருந்தாலும் ஓர் அதிசயம் நடக்கலாம். அரசாங்க உயர்மட்டங்கள் ஏதாவது ஒரு வகையில் உதவிகள் செய்ய முன்வரலாம். ஆனால் என்ன உதவி என்பதை மட்டும் வரையறுத்துச் சொல்ல இயலவில்லை.

பல்லினச் சமுதாயத்தில் நல்ல எண்ணங்களையும் நல்ல உணர்வுகளையும் விதைக்கும் வழக்கம் மட்டுமே நலம் பயக்கும். அதுவே சிறுபான்மை இனத்தவரின் பிரச்சினைகளுக்குத் தற்காலிகத் தீர்வுகளைக் காண பெரிய உதவியாகவும் அமையும்.

அரசியலமைப்பு உரிமைகள்; அடிப்படை மனித உரிமைகள் எனும் இந்த இரண்டு உரிமைகளும் மீறப் படாமல்... ஒரு சமநிலையில் இருக்க வேண்டும்.

கேமரன் மலையில் சிறுபான்மை இனத்தவரின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு உள்ளன. ஆகவே இதில் அவர்களின் வாழ்வாதார உரிமைகள் பறிக்கப்பட்டு உள்ளன.

நீதிக் கொள்கைகள் என்பது இயற்கையாகவே அமைந்துவிட்ட மனிதக் கொள்கைகள். மனிதம் பேசும் மனசாட்சிக் கொள்கைகள்.

என்னதான் வந்தாலும் போனாலும், அந்த இயற்கையின் நீதி நியாயமானக் கொள்கைகள் நிலை நாட்டப்பட வேண்டும்.

அதே சமயத்தில் மனித உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். மனித உரிமைகள் என்றைக்கும் மீறப்படக் கூடாது. சரி.

கேமரன் மலையில் பல பத்து இந்தியர்க் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கின்றன. இதைத் தான் நாம் இப்போது பெரிதாகக் கருத வேண்டும். ஒருவரை ஒருவரைக் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கும் நேரம் இது அல்ல.

கோல தெர்லா இந்திய விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதுவே நம்முடைய தலையாய நோக்கம். அது வரையில் நம்முடைய இனப் பூர்வமான முன்னெடுப்புகளும் தொடரும்.

கடைசியாக ஒரு விசயம். மலேசிய இந்தியர்களிடம் இருப்பதை எல்லாம் பிடுங்காமல் விட மாட்டார்கள் என்று சிலர் விளையாட்டாகச் சொல்வார்கள். அந்த நக்கல் நையாண்டிகள் நடக்காமல் இருந்தால் அதுவே கோடி புண்ணியம்.




27 டிசம்பர் 2019

கேமரன் மலையில் கதகளி தாண்டவம்

மலேசிய இந்தியர்கள் வரலாற்றில் கறுப்புச் சுவடு

அரசியல் சாணக்கியம் என்பது வேறு. அரசியல் சந்தர்ப்ப வாதம் என்பது வேறு. இரண்டையும் சேர்த்தால் அரசியல் துரோகம் என்று சொல்லலாம். அல்லது அரசியல் கில்லாடித் தனம் என்றும் சொல்லலாம். இரண்டும் ஒரே குட்டையில் ஊறி பேரன் பேத்திகள் எடுத்த அட்டைகள். 



அத்தகைய அரசியல் துரோகங்களில் எத்தனை எத்தனையோ அநியாயங்கள். எத்தனை எத்தனையோ அக்கிரமங்கள். எத்தனை எத்தனையோ அசிங்கத் தனங்கள். எழுதினால் ஏடு கொள்ளாது.

அவற்றில் ஒன்று தான் கோலா தெர்லாவில் நடந்த விவசாயப் பண்ணைகள் அழிப்பு அநியாயம். கேமரன் மலை வரலாற்றில் அது ஒரு கறும் புள்ளி.  மலேசிய வரலாற்றில் மறக்க முடியாத கறுப்பு நாள்.

கேமரன் மலையில் பல்லாயிரக் கணக்கான பண்ணைகள் உள்ளன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒன்றரை இலட்சம் பண்ணைகள் இருக்கலாம். அந்தப் பண்ணைகள் எல்லாம் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யவில்லையா என்று கேட்கலாம். நல்ல கேள்வி. அதற்கு ஒரே பதில். தனக்கு வந்தால் இரத்தம். அடுத்தவனுக்கு வந்தால் தக்காளிச் சட்ணி.




அப்பேர்ப்பட்ட கேமரன் மலையில்; அவ்வளவு பெரிய கேமரன் மலையில் அந்த 60 இந்தியர்களின் பண்ணைகள் தான் கண்ணில் பட்ட பண்ணைகள். நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த பண்ணைகள். அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்ல.

அந்த 60 இந்தியர்களின் பண்ணைகள்தான் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளன. இந்த 60 இந்தியர்களின் பண்ணைகள்தான் கண்களை உறுத்தி இருக்கின்றன. இந்த 60 இந்தியர்களின் பண்ணைகள் தான் சட்டத்திற்குப் புறம்பான பண்ணைகள் என அதிகாரிகளின் கண்களுக்குத் தெரிந்து இருக்கின்றன. எங்கேயோ அடித்து எங்கேயோ பல் விழுந்த கதையாக உள்ளது.



தமிழ் மலர் - 27.12.2019

மலேசிய இந்தியர்கள் என்றால் இளிச்சவாயர்கள் என்று அவர்களின் நெற்றியில் முத்திரை குத்தி இருக்கும் போலும். மலேசிய இந்தியர்கள் என்றால் கிள்ளுக்கீரைகள் என்று சொல்லாமல் கொள்ளாமல் கதகளி தாண்டவம் ஆடி இருக்கிறார்கள். வேதனை.

அந்தப் பண்ணைகளில் உள்ள முட்டை கோஸ் கொத்துகளை பாராங் கத்திகளால் வெட்டுகிறார்கள். அந்த காட்சிகளைக் காணொலி வடிவங்களில் பார்க்க முடிந்தது. எவ்வளவு சந்தோஷமாக வெட்டித் தள்ளுகிறார்கள். மனிதம் வெட்டிச் சாய்ப்பது போல இருந்தது.

வெள்ளை பச்சை நிறத்திலான விதானக் கூடாரங்களை (canopy) கன ரக இயந்திரங்களால் இடித்துத் தள்ளி நசுக்கி நாசம் செய்கிறார்கள். மனசாட்சி இல்லாத மனிதாபிமானம் இல்லாத செயல்கள். மனிதம் மரித்துப் போகும் காட்சிகள். மனிதத்தை நசுக்கி நார் நாராய்க் கிழிப்பது போல இருந்தது. எப்படி  மனசு வருகிறதோ தெரியவில்லை. 




கேமரன் மலை, கோல தெர்லா (Kuala Terla) நீர் பிடிப்புக்கு அருகில் இருந்த விவசாயப் பண்ணைகளைப் பகாங் மாநிலத்தின் அமலாக்க அதிகாரிகள் அழித்த விவகாரத்தைத் தான் சொல்கிறேன். அவர்களுடன் கூட்டரசு எப்.ஆர்.யூ. சிறப்புப் போலீசார் இணைந்து ’ஓப்ஸ் லெஸ்தாரி’ நடவடிக்கையை மேற்கொண்டனர்.

1969-ஆம் ஆண்டு கேமரன் மலை, கோல தெர்லாவில் இருந்து கோப்பேங் செல்வதற்கு ஒரு சாலை அமைக்க முயற்சி செய்தார்கள். இருப்பினும் அந்தத் திட்டம் அப்படியே கைவிடப் பட்டது. அந்த இடத்தில் முன்பு போட்ட பழைய மண் சாலைகள்  உள்ளன. அங்கே இருந்து இரண்டு மூன்று கிலோ மீட்டர் உட்பாகத்தில் தான் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.

அந்த இடத்தில் தான் பாதிக்கப்பட்ட தமிழர்களின் தோட்டங்கள் இருந்தன. கடந்த ஐம்பது ஆண்டு காலமாக காய்கறிகள், பூந்தோட்டங்கள் அமைத்து தங்களின் வாழ்வாதாரத்தைப் பார்த்து வந்தார்கள். 63 பேரிடம் தற்காலிக உரிமங்கள் இருந்தன. 




விவசாய நடவடிக்கையால் கோல தெர்லா ஆற்றுக்குப் பக்கத்தில் ஓடும் சுங்கை இச்சாட் எனும் ஆற்றில் தூய்மைக் கேடுகள் ஏற்படுகின்றன என்று சொல்லி அவர்களின் பண்ணைகளை இடித்துத் தள்ளி தரைமட்டம் ஆக்கி இருக்கிறார்கள்.

(The reason that was given for the demolition of the farms was the issue of water pollution in Sungai Ichat where the farms were located.)

மலேசியா போன்ற ஒரு மக்களாட்சி நாட்டில் இது போன்ற செயல் ஓர் அநாகரிகச் செயலாகும்.

ஒன்றை இங்கே கவனிக்க வேண்டும். இவ்வளவு காலமாக அந்தப் பண்ணை விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கி இருக்கிறார்கள். தற்காலிக நில அனுமதி வழங்கி இருக்கிறார்கள். குடிநீர் வழங்கி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அவர்களின் பண்ணைகளைத் திடீரென்று தரைமட்டம் ஆக்கியது முறையற்றச் செயலாகும்.




அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு பெரிய அளவு. ஒரு குடும்பத்திற்குச் சராசரியாக பத்து இலட்சத்தில் இருந்து இருபது இலட்சம் ரிங்கிட் வரை ஏற்பட்டு உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் அவர்களின் வருமானத்தை மூலதனமாகக் கொண்டு முதலீடு செய்து இருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக கிட்டத்தட்ட நாற்பது ஐம்பது மில்லியன் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

ஒரு பிலாஸ்டிக் விதானக் கூடாரம் (பிலாஸ்டிக் வீடு) அமைப்பது என்றால் முன்பு 1980-களில் 50 ஆயிரம் ரிங்கிட் வரை பிடிக்கும். இப்போது 2010-களில் ஒரு இலட்சம் அல்லது இலட்சம் பிடிக்கும். பிலாஸ்டிக் வீடு கட்டினால் தான் பூந்தோட்டங்களை உருவாக்க முடியும். சொகுசாய் வாழும் தாவரங்களைப் பேணி வளர்க்க முடியும்.

இதில் மனிதாபிமானம் இல்லாமல் அந்தப் பூந்தோட்டங்களையும் காய்கறிக் பண்ணைகளையும் அழித்தது தான் மனிதாபிமானம் இல்லாத செயல். பெரும் பாதிப்பை ஏற்படுத்திய செயல்.




மனிதாபிமான அடிப்படையில் அவர்களின் பயிர்களை அறுவடை செய்வதற்கு முதலில் அனுமதி வழங்கி இருக்க வேண்டும். அது மட்டும் அல்ல. இது ஒரு பண்டிகை காலம். அவர்களின் குழந்தைகள் பள்ளி தவணையைத் தொடங்க இருக்கும் காலம்.

குழந்தைகளின் பள்ளிச் செலவுகளுக்காக அவர்களின் அறுவடைப் பயன்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் அல்லவா. அதை நினைத்துப் பார்த்தார்களா? அவர்களுக்குக் கொஞ்ச கால அவகாசம் கொடுத்து இருக்க வேண்டும். ஓராண்டு காலத்தில் நாங்கள் உடைத்து விடுவோம் என்று சொல்லி இருக்கலாம் அல்லவா. அறுவடை செய்வதற்குக் கொஞ்சம் கால அவகாசம் கொடுத்து இருக்கலாம் அல்லவா?

நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் அங்குள்ள விவசாயிகளை வேறு நிலங்களுக்கு மாற்றம் செய்து இருக்கலாம். அல்லது சட்டவிரோத நச்சுப் பொருட்களைப் பயன்படுத்துவது பற்றி விளக்கப் பயிற்சிகள் அளித்து இருக்கலாம்.




இந்த உலகத்தில் விவசாயம் தான் தலையாய ஆதாரம். கை எடுத்து கும்பிட வேண்டிய இயற்கையின் சாசனம். ஆனால் இங்கே அப்படியா நடந்தது. விவசாயத்தைக் காலில் போட்டு மிதித்தது ஏற்க முடியாத ஒன்றாகும். கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாத செயலாகும்.

பண்ணைகளை உடைத்த இடம் நீர்த்தேக்கம் கட்டப்பட்ட வேண்டிய இடம் என்று அமலாக்க அதிகாரிகள் சொல்கிறார்கள். இந்த இடத்தில் இரண்டு ஆறுகள். ஓர் ஆற்றின் பெயர் சுங்கை தெர்லா (Sungai Terla). இன்னோர் ஆற்றின் பெயர் சுங்கை இச்சாட் (Sungei Ichat).

இதில் சுங்கை தெர்லா ஆற்றின் நீரைச் சுத்தகரிப்பு செய்து தான் பொதுமக்களின் பயனீட்டிற்கு நீர் விநியோகம் செய்கிறார்கள். (Sungai Terla which supplies water to the residents in Cameron Highlands)




இந்தப் பண்ணை அழிப்பிற்குப் பின்னால் பெரிய ஒரு காரணம் இருப்பதாகவும் சொல்லப் படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை. இருந்தாலும் கேமரன் மலையில் பலருக்கும் தெரிந்த விசயம்.

ஈப்போ, சிம்பாங் பூலாயில் இருந்து கேமரன் மலைக்கு வரும் நெடுஞ்சாலையில் சுங்கை தெர்லா ஆறு ஓடுகிறது. சுங்கை தெர்லா ஆறு, நெடுஞ்சாலையைக் கடக்கும் இடம் சமதரையான அழகான இடம்.

மாட மாளிகைகள், சுகவாச இல்லங்கள் கட்டுவதற்கு மிகப் பொருத்தமான இடம். அரசியல்வாதிகள் சிலரின் கண்களை உறுத்திய இடம் என்றும் சொல்லப் படுகிறது. இந்த இடத்தில் பெரிய ஒரு நில மேம்பாட்டுத் திட்டத்தைக் கொண்டு வரலாம் என்பது ஒரு திட்டம். ஒரு கணிப்பு.

அதற்கான நீர் விநியோகம், நான்கு கி.மீ. கீழே இருக்கும் சுங்கை இச்சாட் ஆற்றுப் பகுதியில் இருந்துதான் செய்யப்பட வேண்டும். 




இங்கே தான், இந்தச் சுங்கை இச்சாட் ஆற்றுப் பகுதியில் தான், அந்த 60 பண்ணைகள் இருந்து இருக்கின்றன. இந்த இடத்தில் உள்ள தமிழர்களின் பண்ணைகளை எடுத்து விட்டு அங்கே ஒரு நீர்த் தேக்கம் கட்டலாம் எனும் ஒரு திட்டம் இருந்து இருக்கலாம்.

இதில் அந்த 60 தமிழர்களின் பண்ணைகள் சிக்கி இருக்கலாம் என்று ஒரு பரவலான கருத்து நிலவுகிறது. இந்தத் திட்டம் உண்மையாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். உறுதிப்படுத்தப் படவில்லை. ஆனால் அங்குள்ள மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இந்தப் பண்ணை அழிப்பில் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள். கோலா தெர்லா விவகாரத்தில் நம்பிக்கைக் கூட்டணி வாக்குத் தவறி விட்டதாக ம.சீ.ச. உதவித் தலைவர் டி லியான் கெர் கருத்து தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசு, மாநில அரசுக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக அவர் சொல்கிறார். துணைப் பிரதமர் வான் அசிசா வான் இஸ்மாயில் மற்றும் பகாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் (Wan Rosdy Wan Ismail) கூட்டு அமர்வில் இந்த முடிவு எடுக்கப் பட்டதாகவும் சொல்கிறார். 




நம்பிக்கைக் கூட்டணி; ஜ.செ.க. தரப்பினரால் மீறப் பட்ட மற்றொரு வாக்குறுதி என்கிறார்.

அடுத்து கேமரன் மலையில் பண்ணைகள் இடிக்கப் படுவதற்கு ம.இ.கா. செய்த துரோகம் என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி கூறிய கருத்துகளை ம.இ.கா.வின் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வன்மையாக மறுத்து உள்ளார்.

அத்துடன் அந்தக் குற்றச்சாட்டு ஆதாரம் இல்லாத அப்பட்டமான பொய் என்று ம.இ.கா. பொதுச் செயலாளர் எம்.அசோஜன் சாடியுள்ளார்.




கடந்த 2018 பொதுத் தேர்தலில் அந்தப் பகுதியில் இருந்து 300 க்கும் குறைவான வாக்குகளை மட்டுமே தேசிய முன்னணி பெற்றது. ஆனால் அதைக் காரணம் காட்டி அவர்களை ஒதுக்குவது தேசிய முன்னணியின் மாண்பு அல்ல. கட்சி பதவியை விட இனமான உணர்வு தான் மிக முக்கியம் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறி இருக்கிறார்.

60 இந்தியர்க் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கின்றன. இதைத் தான் நாம் இப்போது பெரிதாகக் கருத வேண்டும். ஒருவரை ஒருவரைக் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கும் நேரம் அல்ல.

என்னுடைய கேள்வி இதுதான். கோல தெர்லா இந்திய விவசாயிகளை அரசாங்கம் ஏன் குற்றவாளிகளைப் போல நடத்த வேண்டும்? இந்தியர்கள் என்றால் இளிச்சவாயர்களா?  இந்தியர்கள் என்றால் கிள்ளுக்கீரைகளா? கோல தெர்லா நிகழ்ச்சி மலேசிய இந்தியர்களுக்கு எதிரான அரசியல் நகர்வா?

அந்தக் குடும்பங்களுக்கு மாற்றுவழி காண வேண்டும். அவர்களின் இழப்புகளுக்கு நஷ்டயீடு கிடைக்க வழி காண வேண்டும். கிடைக்குமா கிடைக்காதா என்பது முக்கியம் அல்ல. அவர்களுக்கு நஷ்டயீடு கிடைக்க வேண்டும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு. கோல தெர்லா இந்திய விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அது வரையில் நம்முடைய முன்னெடுப்புகளும் தொடரும்.