18 ஜூலை 2010

கணினியும் நீங்களும் - பகுதி 65

அன்புள்ள வாசகர்களே, கடந்த சில நாட்களாக சளியும் காய்ச்சலும் கலந்து ரொம்பவும் தொல்லை கொடுத்து விட்டன. அதனால் இந்த அங்கத்தைச் சரியாகக் கவனிக்கவில்லை. தொடர்ந்து சரி செய்யப் படும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.) 31.07.2010

(இந்தக் கேள்வி பதில் அங்கம் 18.07.2010 மலேசிய நண்பன்  ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்களை Archive 2009, 2010 எனும் பிரிவுகளில் படிக்கலாம்.)

குமாரி. தர்ம ஜெகவர்த்தினி, சிம்பாங் லீமா, கிள்ளான்
கே: வர வர இந்தக் கைப்பேசியால் பெரிய தொல்லைகள் வரும் போல இருக்கிறது. அதிக நேரம் கைப்பேசியைப் பயன் படுத்தினால் மூளைப் புற்று நோய் வரும் என்று சொல்கிறார்கள். உண்மையா?

ப:
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. அதைப் போல அண்மைய கண்டுபிடிப்புகள் நமக்கு கவலையைக்  கொடுக்கின்றன. முதலாவது கண்டுபிடிப்பு. கைப்பேசியை வலது காது பக்கம் வைத்துப் பேசினால் மூளைப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இடது காது  பக்கம் வைத்துப் பேசினால் வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள்.

இரண்டாவது கண்டுபிடிப்பு. கைப்பேசியின் அழைப்பு மணி அடிக்கும் போது கைப்பேசியைக் காது பக்கம் கொண்டு போகக் கூடாது என்கிறார்கள். மூன்றாவது. நீங்கள் யாரையாவது அழைக்கும் போது கைப்பேசி இரண்டு வாட் சக்தியை வெளியிடுகிறது. அந்தக் கட்டத்திலும் கைப்பேசியைக் காது அருகே கொண்டு போகக்கூடாது என்கிறார்கள்.

இப்படி நிறைய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தொல்லையே வேண்டாம் என்று நினைத்தால் கைப்பேசியே வேண்டாம் என்கிற முடிவுக்கு வர வேண்டும். முடியுமா. முடியாது. அந்தக் காலத்தில் நரி முகத்தில் விழித்தார்கள். இந்தக் காலத்தில் இரண்டு கால் நரிகள் நிறைய இருப்பதால் நாலு கால் நரிக்கு எல்லாம் வேலை இல்லாமல் போய் விட்டது.

இன்றைய இளம் தலைமுறையினர் கைப்பேசியின் முகத்தில் விழிக்கிறார்கள். திருவள்ளுவர் இப்போது இருந்து இருந்தால் "தீயினால் சுட்ட புண் உள் ஆறும், ஆறாதே கைப்பேசி அற்ற வடு" என்று பாடி இருப்பார்.

இரா.பார்த்திபன், தாமான் செம்பாக்கா, பகாவ்
கே: ஆங்கிலத்தில் Pixel என்று சொல்வதைத் தமிழில் எப்படி அழைப்பது?

ப:
Pix என்றால் Picture. அடுத்து el என்றால் element. படங்களை இந்த 'பிக்சல்' குறி
கொண்டு தான் அவற்றின் அளவைச் சொல்கிறார்கள். இந்தத் துளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அடுக்கப் படும் போது ஒரு படம் கிடைக்கிறது. ஒரு சின்னப் படத்தில் பல ஆயிரம் ஆயிரம் படத் துளிகள் இருக்கும். Pixel என்பதைச் சிலர் தமிழில் படத் தனிமம் என்கிறார்கள். இது சரியான மொழிப் பெயர்ப்பாக இருக்குமா என்பது தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாமே.


அற்புதசாமி பாஸ்கர், பாண்டான் இண்டா, கோலாலம்பூர்
கே: நடிகை அசின் நடித்தப் படங்களைத் தமிழ் நாட்டில் வெளியீடு செய்யக் கூடாது என்று தடை செய்து இருக்கிறார்கள். அவருக்குச் சாதகமாக ஒரு தரப்பினர் இணையத்தில் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். நடிகர் சங்கம் செய்தது சரி என்று ஒரு தரப்பினர் போராட்டம் செய்கின்றனர். இணையத்தில் நடைபெற்று வரும் இந்த பனிப் போரில் உங்கள் நிலைப் பாடு என்ன?

ப:
அசின் என்பவர் ஒரு நடிகை. இருந்தாலும் நான் அவரை ஒரு தந்தையின் நிலையில் இருந்து பார்க்கிறேன். மற்றவர் கண்களுக்கு அவர் தப்பு செய்ததாகப் படலாம். ஆனால் என் கண்களுக்கு அவர் தப்பு செய்ததாகப் பட வில்லை. ஏன் என்று கேட்கிறீர்களா.

இந்தியாவில் உள்ள நடிகர் நடிகையர் யாரும் இலங்கைக்குப் போகக் கூடாது என்று தென் இந்திய நடிகர்கள் சங்கம் தடை போட்டு இருந்தது. அப்படி மீறிப் போனால் அவர்கள் நடித்த படங்கள் தமிழ் நாட்டில் தடை செய்யப்படும் என்றும் சொல்லி இருந்தது. சரி.

அசின் இலங்கைக்குப் போய் இருக்கிறார். ஓர் இந்திப் படப் பிடிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். நடிப்பு என்பது அவருடைய வயிற்றுப் பிழைப்பு. இதுதான் அவர் செய்த பாவம். சரி. இலங்கையில் சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி, இன்னும் என்ன என்ன டிவி எல்லாமோ ஒளிபரப்பு செய்கிறார்களே. அதற்கு போய்த் தடை விதிக்க வேண்டியது தானே. இன்னும் ஒன்று. மக்கள் தொலைக்காட்சிக்கு மட்டும் இலங்கையில் தடை விதித்து இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் இருக்கும் நூற்றுக் கணக்கான நிறுவனங்கள் இலங்கையில் போய் பிசினஸ் செய்து கொண்டு இருக்கின்றன. அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டியது தானே. அதை விடுங்கள். ஈழத்தில் ஆயிரக் கணக்கானோர் சாகடிக்கப் படும் போது தமிழ் நாட்டுத் தலைவர்கள் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்களே. அவர்களைப் போய் கண்டிக்க வேண்டியது தானே.

அசின் போன்ற இளிச்சவாயர் கிடைத்தால் போதும். அவரைச் சகட்டு மேனிக்கு துவைத்து எடுப்பது. சல்லடை போடுவது. அப்புறம் நொந்து நூலாகிப் போனதைத் தைத்துச் சாயம் பூசுவது. இது என்ன அய்யா வேலை. அசின் என்கிறவர் ஒரு சாதாரண பெண். அவரை இட்லர், இடி அமின் ரேஞ்சுக்கு நினைப்பது தப்பு. உலக மகா மெகா குற்றவாளியாகப் பட்டம் கட்டுவதும் தப்பு. ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து என் தனிப்பட்டக் கருத்தைச் சொன்னேன். ஆக, இதில் எந்த ஒரு நிலைப்பாடும் இல்லை. மன்னிக்கவும். எந்த ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. வயிற்று எரிச்சலைக் கொட்டித் தீர்த்து விட்டேன். சந்தோஷமாக இருக்கிறது.


ரிஷா பாசிர், தாசிக் குளுகோர், பினாங்கு
கே: கணினி நிறுவனங்களில் எந்த நிறுவனத்தின் சின்னம் அழகாகவும் அர்த்தம் உள்ளதாகவும் இருக்கிறது. உங்கள் தேர்வு என்ன?
ப:
உங்கள் கேள்வி சற்று வித்தியாசமாக இருக்கிறது. உலகக் கணினி நிறுவனங்களில் ஒரு சில நிறுவனங்களே தத்தம் பெயரைப் போடாமல் சின்னத்தைப் பயன் படுத்துகின்றன. அவற்றில் மிக மிக அழகானது ஆப்பிள் கணினி நிறுவனத்தின் சின்னம் ஆகும். ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப் 1970 ஆம் ஆண்டுகளில் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பழத் தோட்டங்களில் பழங்கள் பறிக்கும் வேலை செய்து கொண்டு இருந்தார். அந்தச் சமயத்திலேயே கணினி மீது ஆர்வம் ஏற்பட்டது. ஒரு நிறுவனத்தை உருவாக்கினார்.

என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது 'ஆப்பிள்' என்று வைக்கலாமே என்று தோன்றியது. அதையே வைத்தும் விட்டார். உலகில் முதன் முதலில் வெளிவந்த கணினிகளில் ஆப்பிள் கணினியும் ஒன்று.

1970 ஆம் ஆண்டு. 20 ரிங்கிட் சம்பளத்தில் ஒரு தோட்டத்தில் பழங்கள் பறிக்கும் வேலை செய்தார் ஓர் இளைஞர். இப்போது 2010ல் அந்த இளைஞரின் சொத்து மதிப்பு 200 கோடி ரிங்கிட்! கணினி உலகத்திற்கு வாருங்கள். கணினி தேவதை கண் சிமிட்டி மாய ஜாலம் காட்டுவாள்.


இரா.பெரியண்ணன், பூச்சோங்
கே: என்னுடைய கணினியில் You may be a victim of software counterfeiting எனும் எச்சரிக்கை வருகிறது. அதை எப்படி நீக்குவது?

ப:
நீங்கள் பயன் படுத்தும் விண்டோஸ் இயங்குதளம் போலியானதாக இருந்தால் அந்த மாதிரி எச்சரிக்கை வரும். விண்டோஸ் இயங்குதளம் என்றால் Windows Operating System. நீங்கள் இணையத்தில் இணைந்ததும் உங்களுடைய கணினி அமெரிக்காவில் உள்ள மைக்ராசாப்ட் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளும்.  கணினியின் உண்மை கண்டு பிடிக்கப் பட்டதும் அந்த எச்சரிக்கை வரும்.

சில சமயங்களில், நீங்கள் உண்மையான அசலான விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன் படுத்தினாலும் இந்த அறிவிப்பு வரக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பிரச்னையைச் சமாளிக்க ஒரே ஒரு வழி தான் இருக்கிறது.  

http://www.softpedia.com/progDownload/RemoveWGA-Download-42782.html எனும் இடத்திற்குப் போய் Remove WGA எனும் ஒரு சின்ன நிரலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த நிரலியை மைக்ராசாப்ட் நிறுவனம் தான் வழங்கி உள்ளது. அதை உங்கள் கணினியில் இருந்து இயக்க  வேண்டும். பிறகு கணினியை அடைத்து விட்டு மறுபடியும் திறக்கவும். மீண்டும் திறக்கும் போது அந்த எச்சரிக்கை வராது. ஒரு பணிவான வேண்டுகோள்.

உங்களுடைய விண்டோஸ் இயங்குதளம் Pirated Copy எனும் கள்ளத் தனமானதாக இருந்தால் தயவு செய்து அசல் விண்டோஸ் இயங்குதளத்தை வாங்கிப் பயன் படுத்த முயற்சி செய்யுங்கள்.

புதிதாக கணினி வாங்கும் போது அசல் விண்டோஸ் இயங்குதளத்தைப் பதிக்கச் சொல்லுங்கள். Windows XP Professional விலை 320 ரிங்கிட்டிற்குள் இருக்கும். கடைக்காரர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா. ஒரே ஒர் இயங்குதளத்தைப் பல கணினிகளில் பதித்து விடுவார்கள். அதனால் கனினியின் விலையும் குறைவாக இருக்கும். அவர்களுக்கும் வியாபாரம் நடக்கும்.

அவர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. ஏன் என்றால் கணினி வாங்குபவர்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. விலை குறைவாக இருக்க வேண்டும். ஆனால், உலகத்திலேயே மிக நவீனமான கணினி வேண்டும் என்பார்கள். பாவம் கடைக்காரர்கள். அவர்கள்தான் என்ன செய்வார்கள்.

கள்ள மென்பொருள்களைப் பயன் படுத்த வேண்டாம். அதனால் பல பிரச்னைகள் வரும். இன்னும் ஒரு விஷயம். கள்ளத் தனமான விண்டோஸ் இயங்குதளத்தை அசல் இயங்குதளமாக மாற்றிக் கொடுக்க ஓர் எளிய முறை இருக்கிறது.

வசதி இல்லாதவர்களுக்கு வழங்கப் படும் ஓர் உதவி. ஒரு சின்ன சேவைக் கட்டணத்தைக் கட்டி அசல் இயங்குதளமாக மாற்றிக் கொள்ளுங்கள். இந்தச் சலுகை விண்டோஸ் எக்ஸ்.பி பயன் படுத்துபவர்களுக்கு மட்டும் தான். மென்பொருள் காப்புறுதிச் சட்டத்தின் கீழ் இந்தச் சேவை செய்யப் படுகின்றது. ஜூலை மாதம் 28 ஆம் தேதி வரை சலுகை உண்டு.

உதவி தேவைப் படுபவர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். கைப்பேசியிலும் அழைக்கலாம். தயவு செய்து SMS குறும் செய்திகள் வழியாகக் கேள்விகள் கேட்க வேண்டாம். நிச்சயமாகப் பதில் கிடைக்காது. சேவைகள் மின்னஞ்சல் வழியாகத் தான் நடக்கும்.


காளியப்பன் ராமசாமி, பெங்காலான் இண்டா, ஈப்போ
கே: உலகச் சந்தையில் எந்த வகையான கைப்பேசிகள் அதிகமாக விறகப் படுகின்றன?

ப:
பட்டியல் வருகிறது. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.
1. நோக்கியா (பின்லாந்து)
2. மோட்டோரோலா (அமெரிக்கா)
3. சம்சுங் (தென் கொரியா)
4. žமன்ஸ் (ஜெர்மனி)
5. எல்ஜி (தென் கொரியா)
6. சோனி எரிக்ஸ்சன் (ஸ்வீடன்/ஜப்பான்)

குமரன் சுப்பிரமணியம்  manithan82@gmail.com

கே: கணினியின் முகப்புத் திரையில் காணப்படும் Recycle Bin சின்னத்தைத் தவறுதலாக அழித்து விட்டேன். மீண்டும் அதனைக் கொண்டு வர முயன்றால் Shortcut  எனும் குறுக்கு வழியை மட்டுமே செய்ய முடிகிறது. உதவி செய்யுங்கள்.

ப:
Recycle Bin என்பதற்கு தமிழில் மீளகம் எனும் சொல்லை உருவாக்கி இருக்கிறேன். மீள் + அகம் எனும் வேர்ச் சொற்களைக் கொண்டது. இந்தச் சொல் தமிழுக்குப் பொருந்தி வருமா என்பதைப் பற்றி கணினிப் பற்றாளர்கள் கருத்துச் சொன்னால் நன்றாக இருக்கும். சரி. உங்கள் பிரச்னைக்கு வருகிறேன். ஒரு முக்கியமான சின்னத்தை அழித்து விடும் அளவுக்கு அப்படி என்ன மறதி சார்.

இனிமேல் எந்தக் கோப்புகள், ஆவணங்கள், படங்களாக இருந்தாலும் சரி. அவற்றை அழிப்பதைப் பற்றி நினைத்த நேரத்திலேயே  செய்ய வேண்டாம். மூன்று விநாடிகள் பொறுத்து இருந்து அப்புறம் அழியுங்கள். அந்தச் நேரத்தில்  உங்கள் மனசு மாறலாம் இல்லையா. ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள்.

இந்த மாதிரியான தவறுகள் நடந்து விட்டால் அவற்றைச் சரி செய்ய மைக்ராசாப்ட் நிறுவனம் தனி ஒரு நிரலியைத் தயாரித்து வைத்து இருக்கிறது. அதன் பெயர் Fix it for me. அதைப் பயன் படுத்தி அந்தச் சின்னத்தை முகப்புத் திரையில் வரவழைத்துக் கொள்ளலாம். நிரலி கிடைக்கும் இடம் http://support.microsoft.com/kb/810869 

இந்த மாதிரியான இணையத் தொடர்புகளை நம்முடைய http://ksmuthukrishnan.blogspot.com வலைப் பூவில் இருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். இந்த முறை வாசகர்களுக்கும் சுலபமாக இருக்கும்.


ராஜன் ராஜேந்திரன், லங்காவித் தீவு
கே: கணினியில் நாம் வேலை செய்து கொண்டு இருக்கும் போது திடீரென்று கணினி நிலை குத்தி முடங்கிக் போய் விடுகிறது. ஏன் இவ்வாறு ஏற்படுகிறது?

ப:
இதை Blue Screen of Death என்று சொல்வார்கள். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. கணினிக்குள்ளே இருக்கும் சாதனங்களின் பிரச்னை. RAM எனும் தற்காலிக நினைவியின் பிரச்னை. வன் தட்டுப் பிரச்னை. வரைகலை அட்டைப் பிரச்னை. நச்சு அழிவிப் பிரச்னை. பிரிண்டர் எனும் அச்சு சாதனம் சரியாக வேலை செய்யாவிட்டால் ஏற்படும் பிரச்னை.

புதிதாகப் பதிப்பு செய்யப் பட்ட மென்பொருள் கொடுக்கும் பிரச்னை. கணினிக்குள் அதிகம் வெப்பம் உண்டாகி விட்டால் ஏற்படும் பிரச்னை. மின்கலப் பிரச்னை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த முறை கணினிக்குள்ளே இருக்கும் சாதனங்களின் பிரச்னையைப் பற்றி கொஞ்சம் விளக்குகிறேன்.

கணினிக்குள்ளே பல சாதனங்கள் ஒன்று சேர்ந்து செயல் படுகின்றன. சில சமயங்களில் இவற்றுக்குள் பிரச்னை ஏற்பட்டால் கணினி இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் தனக்கு என்று ஒரு வழியை எடுத்துக் கொண்டு அந்த வழியாக அதன் இயக்கத்தை மேற்கொள்ளும். இந்த மாதிரியாக கணினிக்குள் மொத்தம் 16 வழிகள் இருக்கும்.

இதில் ஏதாவது ஒரு வழியை இரண்டு சாதனங்கள் ஒரே சமயத்தில் எடுத்துக் கொண்டால் கணினி இயங்குவது நின்று போகும். இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது எப்படி? கணினியில் Start >> Settings >> Control Pannel >> System >> Device Manager எனும் இடத்திற்குப் போக வேண்டும்.

கணினியில் பிரச்னை கொடுக்கும் சாதனத்தின் பெயருக்கு முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி இருக்கும். Device Manager ல் Computer என்பதைச் சொடுக்கிப் பார்த்தால் அந்த 16 வழிகளுக்கான IRQ எண்கள் காட்டப்படும். அதில் ஒரே எண் இரண்டு இடங்களில் இருந்தால் பிரச்னை அங்குதான் இருக்கிறது என்று உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.

ஆக, பிரச்னைக்கு உரிய சாதனத்தை பதிப்பு நீக்கம் செய்யுங்கள். பதிப்பு நீக்கம் என்றால் Uninstall. பின்னர் மறுபடி பதிப்பு செய்யுங்கள். இப்படி செய்தால் வன்பொருள்களினால் ஏற்பட்ட பிரச்னை தீரும்.

12 ஜூலை 2010

கணினியும் நீங்களும் - பகுதி 64

(இந்தக் கேள்வி பதில் அங்கம் 11.07.2010 மலேசிய நண்பன்  ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்களை Archive 2009, 2010 எனும் பிரிவுகளில் படிக்கலாம்.)

ஜீவா கலிய பெருமாள்   jeevaria@yahoo.com

கே: சில சமயங்களில் என்னுடைய Firefox அல்லது Internet Explorer உலவிகள் வேலை செய்யாமல் போய் விடுகின்றன. அவை இல்லாமல் இணையத்திற்குள் நுழைய விண்டோஸ் இயங்குதளத்தில் வேறு வழி இருக்கிறதா?

ப:
உடனடி உதவிக்கு Calculator எனும் கணக்கியைப் பயன் படுத்தலாம். என்ன இது. இணையத்திற்குள் நுழைய கால்குலேட்டரா. இது என்ன புதுக் கதையா இருக்குது என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. Start >> All Programs >> Accessories >> Calculator எனும் இடத்தில் அந்தக் கணக்கி கிடைக்கும். அதில் மேலே வலது பக்கம் இருக்கும் Help >> Help Topics என்பதைச் சொடுக்குங்கள்.

திரையின் ஆக மேலே ஒரு கேள்விக் குறி இருக்கும். அதை வலது சொடுக்கு செய்யுங்கள். Jump to URL... என்பதைச் சொடுக்கியதும் ஒரு வசனப் பெட்டி வரும். அதில் http://ksmuthukrishnan.blospot.com என்று தட்டச்சு செய்யுங்கள். அல்லது உங்களுப் பிடித்தமான வேறு ஓர் இணையப் பக்க முகவரியைத் தட்டச்சு செய்யலாம். 'பளிச்' என்று வலைப் பக்கம் வரும். இப்படியும் முடியுமா என்று  நீங்களே மலைத்துப் போவீர்கள்.  முயற்சி செய்து பாருங்கள்.

கவிச் சூரியா kavisuriyasarvu@gmail.com

கே: ஆங்கிலம்-தமிழ் அகராதி மிகவும் அவசரமாகத் தேவைப் படுகிறது. இணையத்தில் எங்கே கிடைக்கும்?

ப:
பல ஆங்கில-தமிழ் அகர வரிசைகள் இணையத்தில் இருக்கின்றன. ஆனால், நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த ஒன்று இருக்கிறது. தமிழ் நாட்டைச் சேர்ந்த பழனியப்பா சகோதரர்கள் உலகத் தமிழர்களுக்கு இலவசமாகக் கொடுத்து இருக்கிறார்கள். அதன் பெயர் 'பால்ஸ் தமிழ் இ-அகராதி.
http://mayuonline.com/eblog/2009/02/14/download-free-pals-tamil-e-dictionary/எனும் இடத்தில் கிடைக்கிறது. பதிவிறக்கம் செய்யுங்கள். பிரச்னை என்றால் எனக்கு அழையுங்கள். என்னுடைய வலைத் தளத்திற்குப் போனால் சிரமம் இல்லாமல் பதிவிறக்கம் செய்யலாம்.


மேகநாதன் தனசாமி, கம்போங் கெப்பாயாங், பேராக்

கே: திருப்பதி கோயிலுக்கு போகலாம் என்பது நீண்ட நாள் ஆசை. ஆனால் எனக்கு அடுத்த வருஷம் பிப்ரவரி மாதம் கல்யாணம். மொட்டைப் போட்டு வந்தால் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று என்னவள் பிடிவாதம் பிடிக்கிறார். தயவு செய்து இணையத்தில் போய் திருப்பதியின் உன்னதமானச் சிறப்புகளைப் பார்த்துச் சொல்லுங்கள். என்னவள் மனதை மாற்றுங்கள். திருப்பதி ஆண்டவரின் திருப் பிரசாதம் உங்களை வந்து சேரும்.

ப:
நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும் என்பது காலம் காலமாக கரை ஏறி வந்த காவியத் தத்துவம். சொல் பலம் சூடு பலம் என்று ஒன்றைச் சொல்வார்கள். அதில் சொல் என்பது தமிழ்ச் சொல். சூடு என்பது கன்னடச் சொல். இந்த இரண்டும் கலந்தது தான் திருப்பதி என்கிற திருவேங்கடச் சாமியாரின் சன்மார்க்கச் சொல். அவரை நினைத்துப் போங்கள். மொட்டை போடுங்கள். நல்ல படியாக வாருங்கள். எல்லாம் நல்ல படியாக நடக்கும்.

நீங்கள் மொட்டை போடுவது பத்தாவது மாதம். கல்யாணம் பிப்ரவரி மாதம். இடையே ஐந்து மாதங்கள். அந்த ஐந்து மாதத்தில் சகாரா பாலைவனமாக இருந்த உங்களின் தலைக் கவசம்  அமேசான் காடாக மாறி இருக்கும். முடிந்தால் அதில் அனாகோண்டா மனாகோண்டா வேட்டை கூட ஆடலாம்.

இணையத்தில் திருப்பதி சாமியாரைப் பற்றி தேடிப் போனேன். இலட்சக் கணக்கான தகவல்கள். அதைப் பார்த்த பிறகு நானும் மொட்டை போட்டுக் கொள்ளலாம் என்ற ஆசையும் வந்து விட்டது. பின் குறிப்பு: நீங்கள் சொல்கிற அதே அக்டோபர் மாதம் நானும் என்னவர்களும் பெங்களூர் போகிறோம். முடிந்தால் அங்கே சந்தித்துக் கொள்வோம்.


தரணி பாகன்,   dharani.pagan@gmail.com

கே: விண்டோஸ் விஸ்த்தாவிற்கும் விண்டோஸ் 7க்கும் உள்ள நிறை குறைகள் என்ன? ஏன் எல்லோரும் விண்டோஸ் விஸ்த்தா வேண்டாம் என்று விண்டோஸ் எக்ஸ்.பிக்கு போகிறார்கள். விண்டோஸ் 7 நன்றாக வேலை செய்ய வில்லையா? இந்த இரண்டில் எது உங்களுக்குப் பிடித்தது?

ப:
விண்டோஸ் விஸ்த்தா என்பது ஒரு நல்ல திட்டம். அதில் ஒரு சின்ன குளறுபடி நடந்து விட்டது. விஸ்த்தாவின் பழைய பெயர் லோங் ஹார்ன். Longhorn.

மைக்ராசாப்ட் நிறுவனத்தில் வேலை செய்த இந்தியர்கள் தான் விண்டோஸ் விஸ்த்தாவை உருவாக்கினார்கள். அதற்கு விஸ்த்தாரா  என்றும் பெயரும்  வைத்தார்கள். அந்தப் பெயர் நன்றாக இல்லை. விண்டோஸ் விஸ்த்தா என்று வைத்தால் நன்றாக இருக்கும் என்று ஒருவர் சொல்லி இருக்கிறார். அவர்தான் ஜெனிபர் காதரின் கேட்ஸ். இவர் வேறு யாரும் இல்லை. பில் கேட்ஸ’டம் பாசமிகு மகள்.

மக்கள் குரலே மகேசன் குரல் என்பார்கள். ஆனால், பில் கேட்ஸ் அதை மகள் குரலே மகேசன் குரல் என்று மாற்றம் செய்து இருக்கிறார். எல்லாம் அந்த 'ரா' என்கிற ஒரே ஓர் எழுத்து பண்ணிய வேலை.

இந்தக் கட்டத்தில் ஏதோ கொஞ்சம் கெடுபிடி நடந்து இருக்கிறது. அதில் ஓர் ஆயிரம் பேர் இந்தியாவிற்குத் திரும்பி வந்து விட்டார்கள்.

அவர்களில் சிலர் இந்தியாவில் இருந்து கொண்டே கரையான் மாதிரி விஸ்த்தாவின் இயங்கு முறையைக் கடித்துக் கடித்துக் கரைத்தும் இருக்கிறார்கள். வேறு வழி இல்லாமல் அவசரம் அவசரமாக விண்டோஸ் 7ஐ உருவாக்கினார்கள். இது தான் நடந்தது. மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கு 375 கோடி டாலர்கள் நட்டம். நம்ப காசிற்கு பத்து பில்லியன் ரிங்கிட். மைக்ராசப்ட் நிறுவனத்தில் வேலை செய்த இந்தியர்களிடம் இருந்து கசிந்த உண்மைகள்.

என்றைக்கும் இந்தியர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் பில் கேட்ஸ் அடிக்கடி இப்போது இந்தியாவிற்கு வருகிறார் போகிறார்.  சந்தனம் குங்குமம் எல்லாம் வைத்துக் கொள்கிறார்.

அடுத்து 2012 ஆண்டு வாக்கில் விண்டோஸ் 8 விற்பனைக்கு வருகிறது. விண்டோஸ்களில் எனக்குப் பிடித்தது விண்டோஸ் எக்ஸ்.பி. இதைத் தான் இன்னமும் பயன் படுத்தி வருகிறேன்.

திருவாளர் எஸ்.கே, தாப்பா, பேராக்

கே: ஒரு சில தினங்களுக்கு முன்னால் என் கணினியில் கோளாறு ஏற்பட்டு விட்டது. நான் அழைத்துப் பேசிக் கொண்டு இருக்கும் போது உங்களுடைய கைப்பேசியைத் திடீரென அடைத்து விட்டீர்கள். அப்புறம் நீங்கள் அழைத்து 'பேட்டரி' முடிந்து விட்டது என்று சொன்னீர்கள். ஆனால் பேட்டரி முடிந்து விட்டதாகச் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கைப்பேசியின் மாடலைச் சொல்லுங்கள். ஒரு பேட்டரி வாங்கி அனுப்பி வைக்கிறேன். சேவை செய்தால் சுத்தமாகச் செய்ய வேண்டும். சோமாங்கித் தனமாகச் செய்து பேர் வாங்கிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ப:
நன்றி. குறைகளைச் சுட்டிக் காட்டும் போது அவற்றை ஏற்றுக் கொள்கிற பக்குவம் நமக்கு வேண்டும். பிடித்த முயலுக்கு மூன்றே முக்கால் கால் என்று நினைத்தால் ரொம்ப கஷ்டம்.

சில சமயங்களில் நம்முடைய நல்ல எண்ணங்கள் மற்றவர் பார்வையில் இருந்து மறைந்து நிற்கலாம். ஓட்டப் பந்தயத்தில் கால்கள் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் கடைசியில் கைகள் தான் பரிசுகளைப் போய் வாங்கிக் கொள்கின்றன.


ஜோசியர், ஸ்ரீ கோம்பாக், கோலாலம்பூர்

கே: என் கணினியில் விண்டோஸ் 7 Starter Edition எனும் விண்டோஸ் இயங்கு தளத்தைப் பயன் படுத்துகிறேன். அதில் ஸ்ரீ ஜாதகா நிரலியைப் பதிப்பு செய்தேன். Runtime Error என்று அறிவிப்பு வருகிறது. பதிப்பு செய்ய முடியவில்லை. அதே போல கோயம்புத்தூரில் இருந்து RM3120 ரிங்கிட் கொடுத்து வாங்கி வந்த ஜாதக நிரலியும் வேலை செய்யவில்லை. முன்பு விண்டோஸ் XP யைப் பயன் படுத்திய போது எல்லாமே நன்றாக வேலை செய்தது. ஏன் இந்தப் பிரச்னை. எப்படி தீர்ப்பது?

ப:
ஒன்றை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பயன் படுத்துவது விண்டோஸ் 7 Starter பதிப்பு. இதில் விண்டோஸ் இயங்குவதற்கான மிக மிக அடிப்படையான வசதிகள் மட்டுமே இருக்கும். விலை RM100 ரிங்கிட்டுக்குள் இருக்கும். இதைத் தான் பெரும் பாலான கடைகளில் பதித்துக் கொடுப்பார்கள். ஏன் என்றால் அதன் விலை மிகவும் குறைவு.

இதற்கு அடுத்து Windows 7 Basic. அடுத்து Windows 7 Home. அடுத்து Windows 7 Professional. அதற்கு அடுத்து Enterprise. அடுத்து Corporate. அப்புறம் கடைசியாக Ultimate. கடைசியாகச் சொன்னேனே விண்டோஸ் 'அல்டிமேட்'. இதன் விலை RM1500 வரை இருக்கும். அதாவது ஒரு மேசைக் கணினியின் விலையை விட இந்த மென்பொருளின் விலை அதிகம். சரியா.

ஆக, அந்த Starter பதிப்பை வைத்துக் கொண்டு அதில் நீங்கள் பல முக்கியமான நிரலிகளைப் பதிப்பு செய்ய முடியாது. கிண்டர்கார்டன் படிக்கும் பாலகனிடம் போய் யுனிவர்சிட்டி புத்தகங்களைக் கொடுத்து படிக்கச் சொன்னால் எப்படி. அந்த மாதிரிதான் சாதாரண Starter Editionல் பெரிய பெரிய நிரலிகளைப் பதிக்க முடியாது. குறைந்த பட்சம்  Windows 7 Homeக்குப் போய் விடுவது நல்லது.

ஆக, இந்த Starter Edition வைத்துக் கொண்டு நானும் விண்டோஸ் 7 பாவிக்கிறேன் என்று சொல்லலாம். அதனால் உங்களுக்குத் தான் பின்னாளில் கஷ்டம். உங்களின் கணினியும் மீது குறையை வைத்துக் கொண்டு நிரலிகளின் மீது பழியைப் போடாதீர்கள். இந்தப் பிரச்னையைத் தீர்க்க என்ன வழி முறைகள் என்பதைப் பிறகு சொல்கிறேன்.


மாதவன் முத்துக்குட்டி madhu57m@gmail.com

கே: இணையத்தின் வேகத்தை அதிகரிக்க ஏதாவது வழி முறை இருக்கிறதா? என் கணினி மெதுவாக வேலை செய்கிறது?

ப:
கணினியை ஒரு கோயிலாக நினைத்து நடத்த வேண்டும். அதுவும் நம் மேல் ஆசைப் பட்டு நமக்கு தீர்த்தம் திருப் பிரசாதம் எல்லாம் கொடுக்கும். நல்ல படியாகப் பார்த்துக் கொள்ளும். அதில் குப்பைக் கூளங்களைப் போட்டு நிரப்பி வைத்தால் கூவத்தின் நறுமண அலைகள்தான் முட்டி மோதும். கணினியின் உள்ளே இருக்கும் Duplicate Dll கோப்புகளை நீக்கி விட்டால் நம்முடைய கணினி வேகமாக வேலை செய்யும். PC Cleaner எனும் ஒரு நிரலி இருக்கிறது. அதை உங்கள் கணினியில் பதித்துக் கொள்ளுங்கள்.
http://www.softpedia.com/progDownload/Pc-Cleaner-Download-2024.html