25 ஜூன் 2016

படித்தேன் ரசித்தேன்

நதியில் விழுந்த இலை போல... திக்கு திசை தெரியாமல் தத்தளித்து... பலச் சோகங்களைக் கண்டு... பல வேதனைகளைக் கண்டு... பல பந்தங்களை எதிர்க் கொண்டு... விழித்துவரும் நிலையில்... அற்புதமான வரிகள். படித்தேன் ரசித்தேன்.

தமிழ்த் தாய் மடியில் வாழ்ந்த பிள்ளையடி...

தனிக் காற்றாடி போலறுந்து வீழ்வதில்லையடி...

அன்பான உறவுதனில் கூடு கட்டி ஆடிடுவேன்...

பண்பான மறுவாழ்க்கை தனைத் தேடிடுவேன்...

பாரதி வார்த்தைகள் தோற்றதில்லையடி...

தோல்வி என்பதும் எனக்கில்லையடி...

ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி...  In the confrontation between the stream and the rock... the stream always wins... not through strength but by perseverance என்று சொல்வார்கள். 

வாழ்க்கையும் அப்படித் தான். பற்பல மேடு பள்ளங்கள்... பற்பல வேதனைகள் பற்பல சோதனைகள்... போராட வேண்டும்... 

ஜெயித்துக் காட்ட வேண்டும். போராடத் தெரியாதவன் மனிதனாகப் பேர் போட முடியாது. எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தெரிய வேண்டும்.

தோம்... கருவில் இருந்தோம்

தோம்... கருவில் இருந்தோம்
கவலை இன்றி கண்மூடிக் கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம்
விழுந்தவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்
அப்போது அப்போது போன தூக்கம்
என் கண்களிலே
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோனலையே...
தண்ணீரில் வாழ்கின்றேன்
நான் கூட மச்சாவதாரம் தான்
(தோம் கருவில் இருந்தோம்...)

அலைகளை அலைகளை பிடித்துக் கொண்டு
கரைகளை அடைந்தவர் யாருமில்லை
தனிமையில் தனிமையில் தவித்துக் கொண்டு
சௌக்கியம் அடைவது நியாமில்லை
கவலைக்கு மருந்து இந்த ராஜ திரவம்
கண்ணீர் கூட போதையின் மறு வடிவம்
வலி எது வாழ்க்கை எது விளங்கவில்லை
வட்டத்துக்கு தொடக்கமும் முடிவும் இல்லை
கற்பனை வருவது நின்றுவிடும்
கனவுகள் மட்டும் இல்லை என்றால்
கவலைகள் நம் உயிரே தின்று விடும்

ஜனனம் என்பது ஒரு கரைதான்
மரணம் என்பது மறு கரைதான்
இரண்டுக்கும் நடுவே ஓடுவது
தலைவிதி என்னும் ஒரு நதி தான்
வாழ்கையில் பிடிமானம் வேறு இல்லை
இந்த கிண்ணம் தானே பிடிமானம் வேறு இல்லை
திராட்சை தின்பவன் புத்திசாலியா?
பழரசம் குடிப்பவன் குற்றவாளியா?
பெண்ணுக்குள் தொடங்கும் வாழ்க்கை இது
மண்ணுக்குள் முடிகிறது
விஷயம் தெரிந்தும் மனித இனம்
விண்ணுக்கும் மண்ணுக்கும் பறக்கிறதே

தோம்... கருவில் இருந்தோம்
கவலை இன்றி கண்மூடிக் கிடந்தோம்
தோம் தரையில் விழுந்தோம்
விழுந்தவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்
அப்போது அப்போது போன தூக்கம் என் கண்களிலே
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோனலையே...

23 ஜூன் 2016

காஜாங் கசையடிகள்

அப்பா அம்மாவிடம் சின்ன சின்ன அடிகள். தாத்தா பாட்டியிடம் செல்லமான அடிகள். நண்பர்களிடம் நாசுக்கான அடிகள். ஆசிரியரிடம் கொஞ்சம் சீரியசான அடிகள். அவை அடையாளம் தெரியாத அடிகள். அடுத்த விநாடியே மறந்து போகும் கொசுக்கடிகள். அவை மனதில் நிற்பதும் இல்லை. கனவில் வருவதும் இல்லை. மறைந்து போகின்ற சின்னச் சின்ன அனுபவங்கள். 



அந்த மாதிரியான அடிகளை எல்லாம் கபளீகரம் பண்ணும் அடிகளும் உள்ளன. அவைதான் சிறைச்சாலைகளில் கடும் தண்டனைகளுக்கு கொடுக்கப்படும் பிரம்படிகள். கசையடி என்பது சமயம் சார்ந்தது. பிரம்படி என்பது சட்டம் சார்ந்தது. இரண்டுமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள்தான்.

மலேசியாவில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு கொடுக்கப்படும் பிரம்படிகள் ஜென்மா ஜென்மத்திற்கும் சாகாவரம் பெற்றவை. காஜாங் சிறைச்சாலையில் எப்படி பிரம்படி கொடுக்கிறார்கள். அதைப் பற்றிய கட்டுரை வருகிறது. படியுங்கள். தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். தப்பு செய்கிறவர்களுக்கும் தப்பு செய்ய நினைக்கிறவர்களுக்கும் ஒரு பாடமாக அமையட்டும்.

தோலும் சதையும் காற்றில் பறக்கும்

முதல் அடியில் மேல் தோல் பிய்த்துக் கொள்ளும். இரண்டாவது அடியில் சதை பெயர்த்துக் கொண்டு வரும். மூன்றாவது அடியில் தோலும் சதையும் காற்றில் பஞ்சு மாதிரி பறக்கும்.  நான்காவது அடியில்  இரத்தம் பிய்த்துக் கொண்டு ஊற்றும். 




அவற்றின் வடுக்கள் செத்துச் சமாதிக்குள் போகும் போதுகூட சொந்த பந்தமாய் ஒட்டிக் கொண்டே வரும். அத்தனையும் ஆழமான வடுக்கள். ஆறாவது அடியில் ஒன்னுக்கும் இரண்டுக்கும் போய் ஆள் மயக்கம் போட்டு விழுவது உண்டு.

ஆயுதம் ஏந்தி கொள்ளை அடித்தல், வன்புணர்வு கொள்ளுதல், வன்முறைத் தாக்குதல் (Aggravated Assault), நம்பிக்கை மோசடி, வழிப்பறிக் கொள்ளை, மானபங்கம் செய்தல் (Outrage of Modesty), விலைமாதின் வருமானத்தில் வாழ்தல் போன்ற கடும் குற்றங்களுக்காகப் பிரம்படிகள் கொடுக்கப்படுகின்றன. 




2003-ஆம் ஆண்டில் இருந்து வட்டி முதலைகளுக்கும், திருட்டுத்தனமாய் வட்டிக்கு விடுபவர்களுக்கும் பிரம்படிகள் கொடுக்க, சட்டம் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. ஓர் இடைச் செருகல். பிரம்படிகள் ஆண்களுக்கு மட்டும்தானா. பெண்களுக்கு இல்லையா. பெண் இனத்திற்கு மட்டும் தனிச் சலுகையா என்று நீங்கள் கேட்கலாம். இருந்தாலும் அந்த அடிகளைப் பெண்கள் தாங்க மாட்டார்கள் என்று கண்களைக் கட்டி இருக்கும் நீதி தேவதையிடம் இருந்து பதில் வருகிறது.

ஒருவருக்கு 12 பிரம்படிகள் கொடுக்க நீதிமன்றம் ஆணையிட்டு இருந்தால், அத்தனைப் பிரம்படிகளையும் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் கொடுத்து முடித்து விடுவார்கள். தவணை முறையில் இந்த மாதம் இரண்டு அடுத்த மாதம் இரண்டு என்கிற கணக்கு எல்லாம் இல்லை. 




அப்படித்தான் வெளியில் எல்லோரும் நினைக்கிறார்கள். பேசிக் கொண்டும் இருக்கிறார்கள். அது உண்மை அல்ல. 24 பிரம்படிகள் என்றால் அந்த 24 பிரம்படிகளையும் ஒரே நாளில் ஒரே தடவையில் கொடுத்து முடித்து விடுவார்கள். மிச்சம் மீதி வைப்பது எல்லாம் இல்லை. நேற்று வைத்த மீன் குழம்பில் மிச்சம் இருந்தால் அதை இன்றைக்குச் சுட வைத்துச் சாப்பிடுகிறவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள். சுவையோ சுவை பட்டியலில் சேர்க்க வேண்டியது மீன்குழம்பு.

ஆனால், பிரம்படித் தண்டனைகளில் அந்த மாதிரி எல்லாம் கிடையாது. இன்றைக்கு சுட்ட வடையை இன்றைக்கே சாப்பிட்டு முடிக்க வேண்டும். மிச்சம் மீதி எல்லாம் கிடையாது. (சான்று: http://www.corpun.com/singfeat.htm#offences -  Judicial Caning in Singapore, Malaysia and Brunei) 

ஒரு கைதிக்கு அதிகபட்சமாக 24 பிரம்படிகள் கொடுக்க சட்டம் அனுமதி அளிக்கிறது. அப்படி 24 பிரம்படிகளையும் கொடுக்கும் போது பக்கத்தில் ஒரு மருத்துவர் எப்போதும் தயார் நிலையிலேயே இருப்பார். ஒரு கைதியால் அத்தனை அடிகளையும் தாங்கிக் கொள்ள முடியுமா என்பதை முதலில் பரிசோதனை செய்து உறுதிபடுத்திக் கொள்வார்கள். 




பெரும்பாலும் நான்காவது ஐந்தாவது அடிகளில் மயக்கம் வந்துவிடும். அருகில் இருக்கும் சிறைப் பாதுகாவலர்கள் மயக்கத்தைத் தெளிய வைப்பார்கள். மயக்கம் தெளிந்ததும், கொஞ்ச நேரம் சென்று மறுபடியும் பிரம்படிகள் தொடரும். மருத்துவர் சோதித்துப் பார்ப்பார். கைதியால் தாங்க முடியும் என்று அவர் சொன்னால் தண்டனை தொடரும். மருத்துவர் நிறுத்தச் சொல்லும் வரையில் தண்டனையை நிறுத்த மாட்டார்கள். அடி வாங்கும் போது கைதிகள் ஒன்னுக்குப் போவதும் இரண்டுக்குப் போவதும் சகஜம். அதற்கும் முறையான ஏற்பாடுகளைச் செய்து வைத்து இருப்பார்கள்.



ஒரு கைதிக்குப் பிரம்படி கொடுக்க முடியுமா முடியாதா என்பதைத் தண்டனைக் கொடுப்பதற்கு முன்னாலேயே மருத்துவ ரீதியில் முதலில் உறுதி செய்து கொள்வார்கள். ஒரு மருத்துவர் மட்டும்தான் எந்த நேரத்திலும் பிரம்படி கொடுப்பதை நிறுத்த முடியும். பிரம்படி கொடுக்கப்பட்டு முடிந்ததும் அந்தக் கைதி உடனடியாகச் சிறைச்சாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார். அங்கே அவரைக் குப்புறப் படுக்க வைத்து பிட்டத்தைச் சுத்தம் செய்து மருந்து போடுவார்கள்.

காயங்கள் ஆறுவதற்கு எப்படியும் மூன்று நான்கு வாரங்கள் பிடிக்கும். அந்தச் சமயத்தில் தண்டனை பெற்ற கைதியால் ஒழுங்காக உட்கார முடியாது. உட்கார்ந்து சாப்பிட முடியாது. நின்று கொண்டுதான் சாப்பிட வேண்டும். மல்லாந்து படுக்க முடியாது. குப்புற வாக்கில் அல்லது பக்க வாட்டில்தான் படுக்க வேண்டும். சிலுவார் போட்டு நடக்க முடியாது. கைலிதான் கட்ட வேண்டும். 




பிரம்படியின் வலி இருக்கிறதே, அந்த வலி பத்தாண்டுகள் வரை நீடித்து இருக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அதைப் பற்றி நினைத்தாலே வலி வருவதாகவும் பல கைதிகள் சொல்லி இருக்கின்றனர். (சான்று: "10 years on, and we still feel the pain", The New Paper, Singapore, 10 September 1991)

தவிர,  இரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. அவர்களுக்கு பிரம்படி கொடுக்க மாட்டார்கள். இதில் முக்கியமான ஒரு விஷயம். ஒரு கைதிக்கு எப்போது பிரம்படி கொடுக்கப்படும் என்பதை முன்கூட்டியே அவரிடம் சொல்லமாட்டார்கள். கடைசி நிமிடத்தில்தான் சொல்வார்கள்.  மலேசியாவைப் பொருத்த வரையில் சிறைச்சாலையின் ஒரு திறந்த வெளியில்தான் பிரம்படிகள் கொடுக்கப்படுகின்றன. 




பிரம்படி கொடுக்கப்படுவதை மற்ற கைதிகள் யாரும் பார்க்க முடியாது. அந்தச் சமயத்தில் சிறை அதிகாரிகளில் சிலர், ஒரு மருத்துவர், ஆண் நர்ஸ்கள், பிரம்படி கொடுப்பவர்கள் மட்டுமே இருப்பார்கள். பொதுவாக, பெண்கள் பார்ப்பதற்கும் உதவி செய்வதற்கும் அனுமதிக்கப்படுவது இல்லை. மருத்துவர்கள்கூட ஆண்களாகத்தான் இருப்பார்கள். பிரம்படி கொடுப்பவர்களைப் பிரம்படிக்காரர்கள் என்று அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் Caning Officers.

பிரம்படிக்காரர்கள் பெரும்பாலும் நல்ல உடல்கட்டுடன், தற்காப்புக் கலை தெரிந்தவர்களாகவும் இருப்பார்கள். இந்தப் பிரம்படி மன்னர்கள் அந்தத் துறையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். மணல் மூட்டைகள், வைக்கோல் பொம்மைகள், வாழைமரங்கள் போன்றவற்றில் பல மாதங்களுக்கு பிரம்படி பயிற்சி பெற்றவர்களாகவும் இருப்பார்கள். 2011-ஆம் ஆண்டு கணக்குப்படி மலேசியாவில் மொத்தம் 62 பிரம்படிக்காரர்கள் இருக்கிறார்கள். (சான்று: Amnesty International Briefing on Singapore, January 2011)




நல்ல வேளைங்க என் மனுசி நல்ல மனுஷிங்க. இல்லைனா என் உயிர் எப்போவோ போய் இருக்குங்க. இப்ப கூட பாருங்க. கல்யாணம் பண்ணி 45 வருசம் ஆகுதுங்க. இரண்டு முறை கை ஓங்கிட்டேங்க. என்ன செய்வது. அப்போது அத்தான். இப்போது  செத்தான். இதுதாங்க புருசன் பெண்சாதி அர்த்தம்.. வாங்கி வநதது.  விடுங்க.

நம்ப கதைக்கு வருவோம். பிரம்படியின் முக்கிய விளைவு: குறைவான உடல் சேதத்தில் மிகுதியான வேதனையை உருவாக்குவது. அதுதான் பிரம்படியின் தாரக மந்திரம். பிரம்படிக்காரர்களுக்கு அவர்களுடைய சம்பளம் போக, ஒவ்வொரு பிரம்படிக்கும் மிகை ஊதியமும் வழங்கப்படும். 2005-ஆம் ஆண்டு வரை, ஒரு பிரம்படிக்கு 3 ரிங்கிட்  மிகை ஊதியம் கொடுக்கப்பட்டது. இப்போது ஒரு பிரம்படிக்கு பத்து ரிங்கிட். காஜாங் சிறைச்சாலையில் ஒவ்வொரு புதன், வெள்ளிக் கிழமைகளில் பிரம்படிச் சடங்குகள் நடைபெறுகின்றன. 




ஒருவருக்கு பிரம்படிகள் அவருடைய பிட்டத்தில்தான் கொடுக்கப்படும். மற்றபடி உடம்பில் வேறு எங்கும் அடிபடக்கூடாது. தவிர, பிரம்படிக்காரர்களும் வேறு எங்கும் அடிபடாமலும் பார்த்துக் கொள்வார்கள்.

தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னால் கைதிகள் அனைவரையும் ஓர் அறைக்குள் பூட்டி வைப்பார்கள். முதலில் ஆறு கைதிகளைக் கொண்டு வருவார்கள். அப்புறம் ஆறு கைதிகள். அடுத்து ஆறு கைதிகள். தண்டனை பெறப் போகும் ஒரு கைதியின் சட்டைச் சிலுவார்கள் முதலில் அகற்றப்படும். அவரைப் பிரம்படி கொடுக்கப்படும் இடத்திற்கு நிர்வாணமாகவே அழைத்துச் செல்வார்கள்.




அங்கே A வடிவத்தில் ஒரு சாய்ந்த சட்டம் இருக்கும். அதை ஆங்கிலத்தில் Trestle A-frame என்று சொல்வார்கள். அந்தச் சட்டத்தில் கைதி சாய்ந்த நிலையில் நிற்க வைக்கப்படுவார். அவருடைய ஆண் பாகத்தில் ஒரு சின்ன பஞ்சு மெத்தை பாதுகாப்புக்காக வைக்கப்படும். 

கல்லீரல் பகுதியின் மேல்புறமும் ஒரு பஞ்சு மெத்தை வைக்கப்படும். முகம் மூடப்படுவது இல்லை. வாயில் துணி வைக்கப்படுவதும் இல்லை. அதன் பின்னர் கைகளும் கால்களும் வார்ப்பட்டைகளினால் இறுக்கமாகக் கட்டப்படும். பின்னர், பிரம்படிக்காரர் கைதி நிற்கும் இடத்தில் இருந்து ஐந்து அடிகள் பின்னால் போய் தள்ளி நிற்பார்.

முதல்நாள் நீரில் நன்றாக ஊறப் போட்ட பிரம்பு இளக்கமாகவும் பதமாகவும் இருக்கும். நீரில் ஊறப்போட்ட பிரம்பு சாமான்யத்தில் உடையாது, சிதறாது. இன்னோர் அதிகாரி ‘சத்து’ என்று சத்தமாகச் சொல்வார். அடுத்த ஐந்தாவது விநாடியில் கைதியின் பிட்டத்தில் முதல் அடி விழும். அடுத்து, முப்பது விநாடிகள் கழித்து ‘டுவா’ என்று உரக்கக் கத்துவார். இரண்டாவது அடி விழும். அடுத்து ‘தீகா’ என்று கத்துவார். மூன்றாவது அடி விழும். 



சமயங்களில் இரு பிரம்படிக்காரர்கள் மாறி மாறி அடிகளைக் கொடுப்பதும் உண்டு. பிட்டத்தில் அடி விழும் போது அந்தப் பிரம்பின் நுனியை, பிட்டத்தோடு சேர்த்து இழுப்பார்கள். அப்படி இழுப்பது என்பது கொடுமையிலும் கொடுமையான வலியைக் கொடுக்கும். அந்த நுணுக்கங்களைப் பிரம்படிக்காரர்கள் நன்கு தெரிந்து வைத்து இருப்பார்கள்.

அடிக்கும் போது எவ்வளவு பலத்தைக் கொண்டு அடிக்க முடியுமோ அவ்வளவு பலத்தையும் பயன்படுத்தி ஒரே இடத்தில் படுமாறு அடியைக் கொடுப்பார்கள். அடித்த வாக்கிலேயே பிரம்பையும் சேர்த்து இழுப்பார்கள். அப்படி இழுக்கும் போது சதை பிய்த்துக் கொண்டு வரும்.

ஒரு பிரம்பின் நீளம் 4 அடி. அதாவது ஒரு மீட்டர். அதன் தடிப்பு அரை அங்குலம். மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பிட்டத்தை நோக்கி வரும் பிரம்பு,  ஏறக்குறைய 100 கிலோகிராம் தாக்கத்தைப் பிட்டத்தில் கொடுக்கும். அந்தத் தாகத்தினால் தோல் பிய்ந்து, சதை பிய்ந்து, இரத்தம் கொட்டும். 

தொடக்கத்தில் ஒரே இடத்தில் இரண்டு அடிகள் அடுத்து அடுத்து விழுவது இல்லை. ஓர் அடி விழுந்த இடத்திற்கு கொஞ்சம் மேலே இன்னோர் அடி விழும். அடுத்த அடி கொஞ்சம் கீழே அல்லது கொஞ்சம் மேலே விழுந்தாலும் விழும். சொல்ல முடியாது. பொதுவாக, அடி விழுந்த இடத்திலேயே மறு அடியும் விழும். அந்த அளவுக்கு பிரம்படிக்காரர்கள் கெட்டிக்காரர்கள்.

முதலாவது அடி விழும்போது, வாழைப்பழத் தோலை எப்படி பிய்க்கிறோமோ அந்த மாதிரி, பிட்டத்தின் மேல் தோல் பிய்த்துக் கொள்ளும். இரண்டாவது அடியில் சதையும் சேர்ந்து கொண்டு பெயர்ந்து கொண்டு வரும். மூன்றாவது அடியில் தோலும் சதையும் சேர்ந்து, காற்றில் பஞ்சு மாதிரி பறக்கும். அதில் இரத்தமும் சேர்ந்து கொள்ளும்.  நான்காவது அடியில் பஞ்சுமிட்டாய் மாதிரி சதை பறக்க ஆரம்பித்துவிடும். அப்புறம் இரத்தம் பிய்த்துக் கொண்டு ஊற்றும். 

இரத்தம் ஊற்றுகிறதே என்று அடியை நிறுத்த மாட்டார்கள். மயக்கம் போட்டால்தான் அடியை நிறுத்துவார்கள். அதுவும் மருத்துவர் சொல்ல வேண்டும். இரத்தம் ஊற்றிக் கொண்டே இருந்தால், துணியை வைத்துத் துடைத்துவிட்டு தொடர்ந்து அடியைக் கொடுப்பார்கள்.

பத்தாவது அடியைத் தாண்டி பதினோறாவது அடிக்கும் மேலே போகும் போது, அடிபட்ட அந்த அதே இடத்திலேயே அடுத்த அடுத்த அடிகள் விழுவது சகஜம். அடிபட்ட இடத்திலேயே அடி விழுந்தால் வலி குறைவாக இருக்கும். ஏன் என்றால் அடிபட்டு இரத்தம் ஊற்றும் அந்த இடத்தில் இரத்தக்கட்டு ஏற்பட்டு வலியைக் குறைத்துவிடும்.  புதிய இடத்தில் அடி விழும் போதுதான் அதிகமான வேதனையைக் கொடுக்கும். அதையும் கண்டுபிடித்து வைத்து இருக்கிறார்கள்.

இவ்வளவு நடந்து கொண்டு இருக்கும் போது கைதியின் நிலைமை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள். அதைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோமா! பெரும்பாலான கைதிகள் முதல் மூன்று அடிகள் வரை தாக்குப் பிடிப்பார்கள். போராட்டம் நடத்துவார்கள். அதற்கு பின்னர் அவர்களுடைய போராட்டம் குறைந்துவிடும். ஏன் தெரியுமா. அந்தக் கட்டத்தில் அவர்களுடைய உடல் பலகீனமாகிப் போய் விடுகிறது.

பெரும்பாலானவர்கள் மூன்றாவது அடி வரை வீரமாக மல்லுக்கட்டித் தாக்குப் பிடிப்பார்கள். அதற்கு பின்னர், அடிகளின் அதிர்ச்சியில் உடல் சரிந்து போகும். மயக்கம் வரும். உடனே மருத்துவரும் அவருடைய உதவியாளர்களும் கைதியின் காயங்களுக்கு மருந்து போடுவார்கள். மயக்கம் அடைந்து விட்டது போல சிலர் நடிப்பதும் உண்டு. 

மருத்துவர் பரிசோதித்து மயக்கம் இல்லை என்று சொன்னதும் போதும், பிரம்படிச் சடங்குகள் மறுபடியும் தொடங்கும். அப்போது குடிப்பதற்கு தண்ணீர் எதையும் கொடுக்க மாட்டார்கள். மயக்கம் அடைந்து விட்டால் முகத்தில் தண்ணீர் தெளிப்பார்கள். சுயநினைவு வந்ததும் மறுபடியும் பூசைகள் தொடரும்.

நீதிமன்றம் விதித்த அத்தனைப் பிரம்படிகளையும் வழங்கிய பின்னர்தான் சடங்கு ஒரு முடிவிற்கு வரும். 16 பிரம்படிகள் என்றால் 16 பிரம்படிகளும் முடிந்தாக வேண்டும். மருத்துவர் நிறுத்துச் சொல்லும் வரையில் நிறுத்த மாட்டார்கள்.

அடி வாங்கும் போது கைதிகளில் சிலர் வலுக்கட்டாயமாக அமைதியாக நிற்பார்கள். அப்படிப்பட்டவர்கள் மூன்று அடிகள் வரை தாக்குப் பிடிப்பார்கள். அதற்கு பிறகு அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாது. அடி விழும் போது சிலர் சத்தம் போட்டு கடவுளைக் கூப்பிடுவார்கள்.  சிலர் கருணை காட்டும்படி கெஞ்சிக் கத்துவார்கள். கதறுவார்கள். சிலர் வெறித்தனமாக அலறுவார்கள். சிலர் ஒப்பாரி வைப்பார்கள். (சான்று: "The Caning of Michael Fay: The Inside Story by a Singaporean", by Gopal Baratham, KRP Publications, Singapore, 1994)

பிரம்படிகள் கொடுக்கப்படுவதில் முதல்வகைப் பிரம்படி என்றும் இரண்டாம் வகைப் பிரம்படி என்றும் இரு வகைகள் உள்ளன.  இதில் முதல் வகை மிக மோசமான வேதனையைக் கொடுக்கும். இரண்டாம் வகை சுமாரானது. மலேசியாவிற்குள் கள்ளத்தனமாக வந்து பிடிபடுபவர்களுக்கு இரண்டு பிரம்படிகள் கொடுக்கப்படுவதற்கு சட்டம் வகை செய்கிறது. அவர்களுக்குக் கொடுக்கப்படும் பிரம்படிகள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவை. வலி கொஞ்சம் குறைவானது.

வணிகக் குற்றங்கள் (White Collar Offences) தண்டனை பெற்றவர்களுக்கும் இரண்டாம் வகை பிரம்படிகளே! 2004, 2005-ஆம் ஆண்டுகளில் 18,607 கள்ளக்குடியேறிகளுக்கு பிரம்படிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களில் 15,214 பேருக்கு ஒரே ஒரு பிரம்படி கொடுக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் 11,473 இந்தோனேசியர்களும் பிரம்படி பெற்றார்கள். அண்மைய புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை.

இன்னும் ஒரு விஷயம். ஒருவருக்கு அதிகபட்சமாக 24 பிரம்படிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், அவர் இரண்டு குற்றங்களைச் செய்து, 48 பிரம்படிகள் என்றால், அவர் அந்த 48 பிரம்படிகளையும் வாங்கித்தான் ஆக வேண்டும். தயவு தாட்சண்யம் எதுவும் கிடையாது. இரண்டு தண்டனைகளையும் ஒரே சமயத்தில் கொடுக்க மாட்டார்கள். தனித்தனியாகப் பிரித்து, 24 அடிகள் கொடுத்து சில மாதங்கள் கழித்து மறுபடியும் 24 அடிகளைக் கொடுப்பார்கள்.

2004-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மலேசியாவில் ஒரு காம வெறியனுக்கு 50 பிரம்படிகள் கொடுக்கப்பட்டன என்பதையும் நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

மற்றபடி, மருத்துவர் அனுமதிக்காமல் அந்த 50 பிரம்படிகளையும் ஒரே சமயத்தில் கொடுத்திருக்க மாட்டார்கள். அது மட்டும் இல்லை. 50 அடிகளையும் ஒரே சமயத்தில் கொடுத்து விடுங்கள் என்று கைதி கேட்டுக் கொண்ட பிறகுதான் தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.

பிரம்படிக்காரர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆண்டவா என்னை மன்னித்துவிடு. வேண்டும் என்றே ஒருவரைத் துன்புறுத்தவில்லை. அரசாங்கத்திற்காகவும் நீதித்துறைக்காகவும் ஒருவரை அடிக்கிறேன் என்று வேண்டிக் கொண்டுதான் பிரம்படி கொடுக்கிறார்கள்.

தூக்குத் தண்டனை நிறைவேற்றும் அதிகாரிகள் இருக்கிறார்களே அவர்களில் சிலருக்கு தூக்குத் தண்டனை கொடுத்த பிறகு பல நாட்களுக்கு தூக்கமே வராதாம். சாப்பிடக்கூட முடியாதாம். வேலையை ராஜிநாமா செய்துவிட்டுப் போனவர்களும் இருக்கிறார்கள்.

மனிதனாய்ப் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும் என்று ஒரு கவிஞர் பாடினார். அதையே கொஞ்சம் மாற்றினால் மனிதாய்ப் பிறந்து பிரம்படி வாங்க மாபாவம் செய்திடல் வேண்டும் அம்மா என்று சொல்ல வருகிறது. 

சட்டத்தை மீறி எதையும் செய்ய வேண்டாம். பிரம்படி பற்றி நினைக்கவும் வேண்டாம். உப்பைத் தின்ன வேண்டாம். தண்ணீருக்கு அலையவும் வேண்டாம். தப்புகளைச் செய்ய வேண்டாம் பிரம்படிகளைப் பெறவும் வேண்டாம்.

14 ஜூன் 2016

மலாக்கா செட்டிகள் - பூமிபுத்ரா தகுதி


சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மலாயாவுக்கு வணிகம் செய்ய வந்து இருக்கிறார்கள். எண்ணிக்கையில் குறைவு. அப்படி வந்த வணிகர்களில் மலாக்கா செட்டிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். 1400-ஆம் ஆண்டுகளிலேயே... பரமேஸ்வரா காலத்திலேயே மலாக்காவில் வணிகம் செய்து இருக்கிறார்கள்.
 

மலாக்கா செட்டிகள் இப்போதைய மலாயாத் தமிழர்களின் தலைமுறைக் காலங்களுக்கு முந்தியவர்கள். பரமேஸ்வரா மலாக்காவை ஆட்சி செய்த போது அவருடைய அரண்மனையில் மலாக்கா செட்டிகள் நல்ல நல்ல பதவிகளில் இருந்து இருக்கின்றனர். தலைமை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் தளபதிகள், படைத் தளபதிகள் போன்ற பதவிகளில் இருந்து இருக்கிறார்கள். (சான்று: Shiv Shanker Tiwary & P.S. Choudhary (2009). Encyclopaedia Of Southeast Asia And Its Tribes (Set Of 3 Vols.)
 

மலாக்கா செட்டிகள் தங்களின் அடையாளத்தை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளனர். 1414 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே, மலாக்கா மாநிலத்தில் வாணிகம் செய்ய வந்தவர்கள் இங்குள்ள மலாய் இனத்தவரைத் திருமணம் செய்து கொண்டனர். தனி அடையாளத்துடன் வாழ்ந்தும் வருகின்றனர். பார்ப்பதற்கு மலாய் இனத்தவரைப் போன்று காட்சியளிக்கும் செட்டி மக்கள் இந்து மதத்தை பின்பற்றுகின்றனர்.



தங்களுக்கு என்று தனி அடையாளத்தைக் கொண்டுள்ள இவர்கள் அதே பாரம்பரியத்துடன் கலைகளை வளர்த்து வருகின்றனர். போர்த்துகீசியர், டச்சு, பிரிடிஷ், ஜப்பான் ஆகியவர்களால் இந்த நாடு ஆளப்பட்டாலும் இன்னும் தங்களின் அடையாளத்தை இழக்காமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
 

பரமேஸ்வரா காலத்தில் மலாக்கா செட்டிகள் தங்களுக்கு என்று ஒரு சிறிய கோயிலை மலாக்கா புறநகர்ப் பகுதியில் கட்டிக் கொண்டார்கள். அதற்கு கஜபதி அம்மான் கோயில் என்று பெயரும் வைத்தார்கள். கஜபதி என்பதை கஜபேரம் என்றும் அழைத்தார்கள். கஜம் என்றால் யானை. கஜம் எனும் சொல்லில் இருந்துதான் Gajah எனும் சொல்லே உருவானது.

கஜ புரம் எனும் சொற்கள் மருவி காஜா பூராங் ஆனது. பின்னர் மலாக்கா காஜா பேராங் ஆனது. இப்போது சொல்கிறார்களே காஜா பேராங் அது கஜபதி எனும் சொல் தொடரில் இருந்து உருவானது. புரியுதுங்களா. (சான்று: Peranakan Indians of Singapore and Melaka: Indian Babas and Nonyas—Chitty ... By Samuel S. Dhoraisingam)
 

வரலாற்றை எப்படித் திருப்பிப் போட்டு எழுதினாலும் இந்த உண்மையை மறைக்க முடியாது. நம்மிடம் சரியான வலுவான சான்றுகள் இருக்கின்றன. எந்தக் கோர்ட்டுக்குப் போனாலும் ஆதாரங்களைத் தூக்கிப் போட முடியும். லண்டன் வரலாற்றுப் பழஞ்சுவடிக் காப்பகத்திலும் சீனா பெய்ஜிங் பழஞ்சுவடிக் காப்பகத்திலும் அந்தச் சான்றுகள் பத்திரமாக இருக்கின்றன. அந்தக் காப்பங்களில் டிஜிட்டல் முறையில் அந்தச் சான்றுகளைப் பத்திரப் படுத்தி வைத்து இருக்கிறார்கள்.

எனக்குள் ஓர் ஆதங்கம். பரமேஸ்வரா காலத்திலேயே கடல்படை தளபதிகளாகவும், நிதி அமைச்சர்களாகவும் இருந்த மலாக்கா செட்டிகளுக்கு ஏன் பூமிபுத்ரா தகுதி இன்னும் வழங்கப்படவில்லை. மலாக்கா பண்டார் ஹிலிர் பகுதியில் உள்ள போர்த்துக்கிசியத் தலைமுறையினருக்கு பூமிபுத்ரா அந்தஸ்தை வழங்கி இருக்கிறார்கள். மலாக்கா செட்டிகளுக்கு கொடுக்கவில்லை.
 

மலாக்கா செட்டிகளுக்குப் பூமி புத்திரா தகுதி இல்லையா. இல்லை... கொடுக்கத் தான் மனசு இல்லையா. புரியவில்லை. மலேசியாவின் அரசியல் கட்சிகள் என்ன தான் செய்து கொண்டு இருக்கின்றன. நம் தலைவர்கள் ஏன் கேட்கவில்லை. பயமா இல்லை பதவி மேல் இருக்கிற பக்தியா? பாவம் அவர்கள். ஆயிரத்தெட்டு சமாசாரங்கள்.

மலாக்கா செட்டிகள் மாநில முதல் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சரியான பதில் இன்னும் கிடைக்கவில்லை. ஏன் என்பது மலாக்காவில் நடக்கும் மாபெரும் Who wants to be a Millionaire எனும் பெருவிழா.

12 ஜூன் 2016

மலாயாவுக்கு 1910-களில் வந்த தமிழர்கள்

காக்கையில்லா சீமையிலே...
கோட்டுப் பால் உரிக்கையிலே...
வெட்கமெல்லாம் போகுதய்யா...
வயிறெல்லாம் வேகுதய்யா...

வாக்கப்பட்ட சீமைக்கு வயிறு காஞ்சிப் போறேன் என்று சொல்லிக் கைநாட்டுப் போட்டு… சத்தியம் பண்ணி... கிராமத்தை விட்டுப் புறப்படும் போதே கடனாளிகளாகத் தான் புறப்படுகிறார்கள்.



யார்... நெல்லை முல்லைச் சீமைகளின் மண்வாசனைகள் ான். அதாவது உங்களுடைய தாத்தா பாட்டிகள். அதாவது உங்களின் மூதாதையர் வழிச் சொந்த பந்தங்கள். அாவு உங்கள் உடில் ஓடும் சிவப்புக் கர் இரத்த்ின் சந்தக்காரர்கள்.

என்ன... ந்த உண்மையை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையா... அல்லது கிரகித்துக் கொள்ளத் தான் முடியவில்லையா... பரவாயில்லை... உண்மை கசக்கத் தானே செய்யும். இருந்தாலும் எங்க தாத்தா ஒரு கைநாட்டு... ஆனால் அவர் சிங்கம்டா... என்று நெஞ்சைத் தட்டிக் கொள்ளுங்கள்.


கிராமத் தலைவரிடம் கைநீட்டி வாங்கியக் கடன்.
சொந்த பந்தங்களிடம் கைமாற்றுக் கடன்.
வயல்காட்டை அடகு வைத்ததில் வட்டிக் கடன்.
கிணறு வெட்ட பூதம் கிளம்பியதில் சமரசக் கடன்.
குடிசையின் மேல்தாரைக்கு ஒட்டுப் போட்டதில் கடன்.
காளைக்கு விதையடிக்கக் கொண்டு போனதில் கடன்.
ஐயனார் சாமிக்கு அரிவாள் கத்தி வாங்கியதில்
அஞ்சடிக் கடன்.

இப்படி எக்கச்சக்கமான கடன்கள். அந்தக் கடன்களின் வாரிசுகளாக வட்டிக் குட்டித்
தொல்லைகள். அந்தக் கடன்களுக்குக் கொஞ்சமாவது தண்ணீர் காட்ட வேண்டும். இல்லை என்றால் சொந்த பந்தங்கள் சும்மா இருக்காது. வெற்று வார்த்தைகளை அள்ளிக் கொட்டி மானத்தை வாங்கி விடுவார்கள்.

அடுத்து, கடல் கடந்து போகும் பிரயாணத்துக்கான தட்டு முட்டுச் செலவுகள். வேறுவழி இல்லாமல், வேலைக்கு ஆள் சேர்த்த கங்காணியிடமே கடன் வாங்க வேண்டி இருக்கும். இங்கேதான் ஆரம்பக் கடன்கள் அதிரடியாக ஆரம்பிக்கின்றன.

ஆக, தமிழகத்தை விட்டுப் புறப்படும் போதே ஒரு தொழிலாளி பெரிய கங்காணிக்குக் கடன்காரராகத் தான் புறப்படுகிறார். இந்த முதல் கடன் தான் பின்னர் காலத்தில் முதலைக் கடனாக விஸ்வரூபம் எடுக்கிறது. ஒரு சாமான்ய மனிதனை வெட்டி வீசப் போகும் ஒரு பயங்கரமான சதித் திட்டம். பெரிய கங்காணி பயன்படுத்தப் போகும் துருப்புச் சீட்டு. ஆக பிறந்த மண்ணிலேயே அந்தச் சாமன்ய மனிதன் கடனாளியாகப் புலம் பெயர்கிறான்.

இது அதோடு முடிந்து போவது இல்லை. மலாயாவில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அங்கேயும் பலப்பல சடங்குச் சம்பிராதயச் செலவுகள். கவுண்டமணிக்கு காதுகுத்து… தீத்தம்மாவுக்கு திருமணம்… ஈச்சப்பனுக்கு ஈமச்சடங்கு… நல்லம்மா வயசுக்கு வந்துட்டா என்று இப்படி வரிசையாக பலப்பல சடங்குச் சங்கதிகள். அதே கங்காணியிடம் மீண்டும் மீண்டும் கடன் வாங்க வேண்டிய கட்டாய நிலை. அதுவும் அதோடு நின்று போவது இல்லை. மலாயாவுக்கு 1910-களில் வந்த தமிழர்களின் அவலங்கள் தொடரும்.

சஞ்சிக் காலத்தில் எழுதப்படாத ஒரு சாசனங்கள்

தோட்டத்தில் கங்காணிக்குச் சொந்தமான மளிகைச் சாமான் கடை இருக்கும். அல்லது பெட்டிக் கடை இருக்கும். அல்லது இரண்டுமே இருக்கும். அந்தக் கடையில்தான் கங்காணி போட்ட விலையில் சாமான்களை வாங்க வேண்டும். அப்புறம் இந்தக் கடனும் ஏற்கனவே ஊரில் வாங்கிய பழைய கடனும் ஒன்று சேர்ந்து கைகுலுக்கி தொழிலாளியின் கழுத்தை நெரித்துவிடும்.

அடுத்து வருவது மகா பெரிய கைங்கரியம். தோட்டத்தின் துரையிடம் இருந்து தனக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களின் மொத்த சம்பளத்தையும் பெரிய கங்காணிதான் வாங்குவார். அது சஞ்சிக் காலத்தில் எழுதப்படாத ஒரு சாசனம். பொதுவாக படிப்பறிவு இல்லாதவர்களைத் தான் கூலி வேலைக்கு அழைத்துச் சென்று இருப்பார்கள்.

படித்தவன் ஏன் வருகிறான். கும்முனியில் மாடு மேய்க்கப் போய் இருப்பான். படிப்பு வாசனை இல்லாதர்களின் கல்வி அறிவின்மை கங்காணிகளுக்குச் சாதகமாய் அமைந்து போகிறது.

வேட்டிக்கு ஒட்டுப் போட்ட கணக்கு; முந்தானைக்கு முடிச்சுப் போட்டக் கணக்கு; கிழிஞ்ச கோவணத்தைப் பிழிஞ்சு போட்ட கணக்கு; இப்படி எக்கச்சக்கமாய் கணக்குகளை எழுதி அசலும் வட்டியுமாக வரவில் வைத்துக் கொள்ளுவார்.

எல்லாம் வேலைக்கு ஆள் சேர்த்த கங்காணியின் கைக்கணக்குதான். தொழிலாளியின் சம்பளப் பணம் முழுவதும் கங்காணியிடமே மாட்டிக் கொள்ளும். அதனால் சம்பளப் பணத்தைக் கண்ணால் பார்க்காமலேயே வேலை செய்ய வேண்டிய ஒரு கட்டாயம். சிலர் சம்பளப் பணத்தைப் பார்க்காமலேயே செத்துப் போனதும் உண்டு.

கொம்பு ஊதி தப்பு அடித்த ஒரு பிரட்டுக்களம்

கூலிகளின் வீடுகளைக் கூலி லயன்கள் என்று அழைத்தார்கள். Line எனும் ஆங்கிலச் சொல்லில் இருந்து தான் லயம் எனும் சொல் உருவானது. குதிரை லாயங்களைப் போன்று வரிசையாகக் கட்டப்பட்டு இருந்தன. வீடுகள் என்று சொல்ல முடியாது. தகரக் குடிசை எனும் காலனித்துவ அப்பார்ட்மெண்டுகள்.

விடியல் காலையில் கொம்பு ஊதப்படும் அல்லது தப்பு அடிக்கப்படும். எல்லோரும் பிரட்டுக் களத்தில் கூடவேண்டும். பேரட் கிரவுங் Parade Ground என்று ஆங்கிலேயர்கள் அழைத்தார்கள். அதையே பிரட்டுக் களம் என்று நம்மவர்கள் குறிப்பிட்டனர். பேரட் என்பது பிரட்டு என்று மாறியது.

அங்கிருந்து அவர்கள் வேலை செய்யும் இடங்களுக்கு அழைத்துச் செல்லப் படுவார்கள். இலங்கையில் இருந்த மலையகத்தில் வேறு மாதிரியான வேலைகள். தேயிலைக் கொழுந்து எடுத்தல், காபிப் பழம் பறித்தல், செடிகளைக் கவாத்து செய்தல், களை எடுத்தல், புதிய தோட்டம் உருவாக்கக் காடுகளைத் திருத்துதல் போன்ற பணிகளைச் செய்தனர்.

19-ஆம் நூற்றாண்டில், ஆப்ரிக்காவில் இருந்த ஆங்கிலேய காலனி நாடுகளுக்கு அனுப்பப்பட்ட இந்தியத் தொழிலாளர்களின் விவரங்கள்:

•    மவுரிசியஸ் - 453,063
•    பிரிட்டிஷ் குயானா - 238,909
•    டிரினிடாட் - 143,939
•    ஜமாய்க்கா - 36,412
•    கிரேனடா - 3,200
•    செயிண்ட் லூசியா - 4,350
•    நாட்டால் - 152,184
•    செயிண்ட் கீட்ஸ் - 337
•    செயிண்ட் வின்செண்ட் - 2,472
•    ரியூனியன் தீவுகள்- 26,507
•    சுரிநாம் - 34,304
•    பீஜி - 60,965
•    தென்னாப்பிரிக்கா - 32,000
•    செய்சீல்ஸ் - 6,315
•    மொத்தம் - 1,194,957

ஓர் இழிவான வாழ்க்கையில் இனம் தெரியாத ஜடப் பொருளாகிப் போன சஞ்சிக்கூலிகளின்  பரிதாப நிலையைப் பார்க்கும் போது மனம் பதைக்கிறது.

வேலைச் சுமை. வாழ்க்கைச் சுமை. மனசுச் சுமை. இவற்றை மறக்க மதுபானத்தில் ஐக்கியமாகிறார்கள். அந்த வேதனையில் மனதை நெகிழ வைக்கும் பாட்டுக் கச்சேரிகள். ஆக வேறுவழி இல்லாமல் முன்வினைப் பயன் என்று மனசைத் தேற்றிக் கொள்கிறார்கள்.

கொத்து கொத்தான வன்னுகர்வுகளைத் தாங்க முடியாமல்

இந்தத் துயரங்களில் இருந்து விடுபட்டு தப்பிக்க விரும்பினாலும் அது நடக்காத காரியம். இந்தியாவிற்குத் திரும்பிச் செல்ல நினைத்தாலும் அதுவும் நடக்காத காரியம். சட்டம் பேசினாலும் அது சரிபட்டு வராது. கங்காணியும் சரி துரையும் சரி... சிரித்துக் கொண்டே கழுத்தை நெரித்து விடுவார்கள். அறுக்க மாட்டார்கள்.

பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்வது என்பது அப்போதைக்குப் பெரிய இடத்து வாடிக்கை. அதில் துரைக்கும் முக்கிய பங்கு இருக்கும். புருசன்காரன் ஒன்றுமே செய்ய முடியாது. தன்னுடைய பொருளை அடுத்தவனுக்குத் தாரை வார்க்க வேண்டிய நிலை. இதை எல்லாம் பெண்களும் சகித்துக் கொள்ள வேண்டும். மறுத்தால் ஏதாவது காரணம் காட்டி அலைக்கழிப்பார்கள்.

வெள்ளைக்காரத் துரைக்கு இணங்கி ஒத்துப் போனால் சில பல சலுகைகள் கிடைக்கும். அதற்காகவே ஒரு சில பெண்கள் இணங்கிப் போவதும் உண்டு. என்ன செய்வது. இருக்கிற உடம்பைக் காட்டியாவது இல்லாததைத் தேடிக் கொள்வோம் என்று முடிவு எடுத்து இருக்கலாம். பாவப்பட்ட ஜீவன்கள்.

இதில் கணவன்மார்கள் சிலர் துணை போனதும் உண்டு. மேலிடத்துப் வன்முறைகளைத் தாங்க முடியாமல்… அவர்களின் கொத்து கொத்தான வன்னுகர்வுகளைத் தாங்க முடியாமல்… சில பெண்கள் தூக்குப் போட்டுச் செத்துப் போனார்கள். சொல்லுவது எல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறு எதுவும் இங்கே எழுதப்படவும் இல்லை.

கங்காணிக்கு தனியாக ஒரு செக்ரோல்

கராராக வேலை வாங்குவது; விசுவாசமாக இருப்பது.  இந்த இரண்டும்தான் வெள்ளைத் தோல்களுக்கு ரொம்பவும் பிடித்தமான விஷயம். அதற்காகக் கங்காணிக்குச் சன்மானம் வழங்க வேண்டும் இல்லையா. அதற்கும் ஒரு வழி இருந்தது. கூலியாட்களின் கூலியில் இருந்து ஒரு பகுதி பிடித்தம் செய்வார்கள். 

அதற்குப் பெயர் தலைக்காசு அல்லது கங்காணிக் காசு. பிடித்தம் செய்த அந்தத் தொகையை வெள்ளைக்காரத் துரையே கங்காணிக்குச் செக்ரோல் போட்டுக் கொடுப்பார். கடல் பயணத்திற்குச் செலவானத் தொகை இருக்கிறதே. அது வேறு கணக்கு. அது கூலிகளின் ஊதியத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிடித்தம் செய்யப்படும். அது கம்பெனிக்குப் போய்ச் சேரும்.

பதிவுகாசு என்று இன்னும் ஒரு வகை பிடித்தம் இருந்தது. ஒரு கங்காணி தன்னோடு அழைத்து வந்தவர்களின் பெயர்களைத் தன் கணக்கில் பதிவு செய்து இருப்பார். அவ்வாறு பேர் பதியப்படும் ஒவ்வொரு தொழிலாளியின் சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு நாளைக்கும் மூன்று விழுக்காட்டுப் பணம் கங்காணியின் கணக்கில் சேர்க்கப்படும். அந்த வகையில் ஒரு கங்காணி தன் சம்பளத்தைவிட அதிகமாகவே சம்பாதித்தார். பற்றாக்குறைக்கு கலிகுலா பெண் சகவாசம்.

பெரும்பாலான கங்காணிகளுக்கு இரண்டு மூன்று மனைவிகள் இருப்பார்கள். இருக்க வேண்டும். அது கங்காணியின் கௌரவப் பிரச்சினை. ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போய் ஆட்களைப் பிடித்துக் கொண்டு வரும் போது கூடவே ஒரு பெண்ணையும் கல்யாணம் பண்ணிக் கொண்டு வருவார். இந்த வயது இந்த வாக்கு என்று வித்தியாசம் எதுவும் இல்லை. இதில் வயசுக்கு வராத பிள்ளைகளுக்குத் தாலி கட்டி அவர்களைத் தோளில் தூக்கி வந்த கதைகளும் உள்ளன.

அடுத்து இலங்கை மலையகத்தில் நடக்கின்ற விஷயம். தேயிலை அல்லது காபிப் பழம் சேகரித்து முடிந்த பிறகு, சேகரித்தவை எடை போடப் படும். இது கணக்கர்களின் வேலை. நிர்ணயம் செய்யப்பட்ட அளவுக்கும் குறைவாக அன்றைய சேகரிப்பு இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் ஒரு தொழிலாளியின் ஒரு நாள் ஊதியத்தில் பாதி சம்பளம் வெட்டப்படும். இதற்கு அரைப்பேர் போடுதல் என்று பெயர்.

கூலியாளுக்குக் கிடைக்கும் கூலி குறைந்து விட்டால் கங்காணிக்குக் கிடைக்கும் தலைக் காசும் குறையும் இல்லையா. அதனால் கங்காணி கோபப்படுவார் இல்லையா. அதனைத் தொழிலாளர்கள் வேதனையுடன் பாடினார்கள்.

அரைப் பேராலே - ஏலேலோ - கங்காணிக்கு - ஐலசா
தலைக்காசு - ஏலேலோ தவறிப்போச்சு - ஐலசா
கோபத்தோடே - ஏலேலோ கங்காணியும் - ஐலசா
குதிக்கிறானே - ஏலேலோ கூச்சல் போட்டு - ஐலசா
ஆண்கள் பெண்கள் - ஏலேலோ அடங்கலுமே - ஐலசா
அவனைப் பார்த்து - ஏலேலோ அரளுமே – ஐலசா


இலங்கை மலையகத் தோட்டப் புறங்களில் கங்காணிமார்களின் அதிகாரம் அளவு கடந்து போனது. இந்தியாவின் கிராமத்து ஜமீன்தாரின் நிலைமையை மிஞ்சிப் போய் இருந்ததாகவும் சொல்லப் படுகிறது. கங்காணிகள் ஈவு இரக்கமின்றி வேலை வாங்குவதை மேற்காணும் மலையகப் பாடல் வழியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.