29 அக்டோபர் 2017

அச்சம் என்பது மடமையடா



அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது உடமையடா

கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை

திரைப்படம்= மன்னாதி மன்னன்
பாடலாசிரியர்= கண்ணதாசன்
இசை= எம். எஸ். விசுவநாதன்
பாடியவர்= டி. எம். சௌந்தரராஜன்
ஆண்டு= 1960

26 அக்டோபர் 2017

கெடா வரலாறு - 3

கெடாவை ஆட்சி செய்த தாம்பிரலிங்கா பேரரசு

இந்தோனேசியாவை ஸ்ரீ விஜய பேரரசு, மஜபாகித் பேரரசு, சைலேந்திரா பேரரசு, மத்தாரம் பேரசு, சிங்காசாரி பேரரசு போன்ற அரசுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து உள்ளன. 



இந்தப் பேரரசுகள் ஆட்சி செய்வதற்கு முன்னரே தீபகற்ப மலேசியாவை இன்னோர் இந்தியப் பேரரசும் ஆட்சி செய்து இருக்கிறது.

அந்தப் பேரரசின் பெயர் தான் தாம்பிரலிங்கா (Tambralinga) பேரரசு. கி.பி. 600-ஆம் ஆண்டுகளில் தீபகற்ப மலேசியாவின் வட பகுதிகளை தாம்பிரலிங்கா பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது.

தவிர தாய்லாந்தின் பற்பல பகுதிகளையும் ஆட்சி செய்து இருக்கிறது. அது மட்டும் அல்ல. ஆகக் கீழே தெமாசிக் வரை அதன் ஆட்சி பரந்து விரிந்து போய் இருந்து இருக்கிறது. சிங்கப்பூரின் பழைய பெயர் தான் தெமாசிக்.




சொல்லப் போனால் முக்கால்வாசி தென்கிழக்கு ஆசியாவையே அந்த தாமிபிரலிங்கா ஆட்சி செய்து இருக்கிறது. ஏறக்குறைய 600 ஆண்டுகளுக்கும் மேலாக தனிக்காட்டு ராஜா ஆட்சி.

தாம்பிரலிங்கா பேரரசிற்குப் பின்னர் வந்தவை தான் இந்தோனேசியாவின் ஸ்ரீ விஜய பேரரசு, மஜபாகித் பேரரசு போன்ற பேரரசுகள். ஆக தென்கிழக்கு ஆசியாவில் இந்திய ஆளுமைக்குப் பிள்ளையார் சுழி போட்ட ஓர் இந்திய அரசு இருந்தது என்றால் அது இந்தத் தாம்பிரலிங்கா பேரரசு தான்.

பூஜாங் சமவெளியை (Bujang Valley) இந்திய அரசர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். தெரிந்த விசயம். அங்கே இந்து சமயமும் புத்த சமயமும் சம காலத்தில் வளர்ச்சி கண்டு இருக்கின்றன. தெரிந்த விசயம்.

இந்தப் பூஜாங் சமவெளியை முதன்முதலில் ஆட்சி செய்தது தாம்பிரலிங்கா பேரரசாகத் தான் இருக்க முடியும். நான் சொல்லவில்லை. வரலாற்று ஆசிரியர்களின் ஒருமித்தக் கருத்தும் அப்படித் தான் இருக்கிறது. இதையே மலேசிய வரலாற்று ஆசிரியர் டத்தோ நடராஜாவும் உறுதி படுத்துகிறார்.




ஒரு காலக் கட்டத்தில் தாம்பிரலிங்கா பேரரசு வரலாற்றில் இருந்து காணாமல் போய் விட்டது. எப்படி என்று கேட்க வேண்டாம். வரலாற்றுப் பதிவுகளில் இருந்து அடிபட்டுப் போய் விட்டது.

தாம்பிரலிங்கா எனும் ஓர் அரசு இருந்ததாகப் பலருக்கும் தெரியாமல் போனது. ஆனால் அண்மைய காலத்தில் தான் தாம்பிரலிங்கா பேரரசைப் பற்றிய உண்மைகள் தெரிய வந்துள்ளன.

1368-ஆம் ஆண்டில் இருந்து 1644-ஆம் ஆண்டு வரை சீனாவை மிங் அரசர்கள் (Ming dynasty) ஆட்சி செய்தார்கள். இவர்களின் காலத்தில் தான் சீன வரலாறு ஓரளவிற்கு முழுமையாக எழுதப் பட்டது.

அப்படி எழுதப்பட்ட வரலாற்றில் தான் தென்கிழக்காசிய வரலாற்றுப் பதிவுகளும் உள்ளன. சூ கோசென் (Zhu Guozhen), ஹு இங்லின் (Hu Yinglin), இன் கிங் (Yǐn Qìng) போன்ற சீன வரலாற்று ஆசிரியர்களை இங்கு குறிப்பிடுகிறேன். 




அந்தப் பதிவுகளில் தாம்பிரலிங்காவைப் பற்றி அந்தச் சமயத்தில் அவர்கள் கேட்டதை அவர்கள் பார்த்ததை எல்லாம் பதிவு செய்து இருக்கிறார்கள்.

(சான்று: http://link.library.canton.ma.us/portal/Coswells-guide-to-Tambralinga--a-novel-by/3iTEgdh6Ves/ - Coswell's guide to Tambralinga : a novel, by Scott Landers; Landers, Scott, 1952; New York, Farrar, Straus and Giroux, 2004)

இந்தத் தாம்பிரலிங்கா வரலாற்றுப் பார்வையில் ஒரு சிக்கலான இடத்தில் வந்து நிற்கிறோம். எப்படி புரிய வைக்கிறது என்று சற்றே தடுமாறுகின்றேன். இருந்தாலும் சமாளித்து விடுவோம். சரி.

முன்பு காலத்தில் அதாவது 10-ஆம் நூற்றாண்டில் நாகர ஸ்ரீ தர்மராஜா (Nagara Sri Dharmaraja) அரசு எனும் ஓர் அரசு தாய்லாந்தை ஆட்சி செய்து வந்து இருக்கிறது. எந்த ஆண்டு? பத்தாம் நூற்றாண்டு. சரிங்களா.

இந்த நாகர ஸ்ரீ தர்மராஜா அரசின் அப்போதைய அசல் பெயர் அதே நாகர ஸ்ரீ தர்மராஜா தான். ஆனால் அந்த அரசின் இப்போதைய பெயர் நாக்கோன் சி தாமராட் (Nakhon Si Thammarat). புரிந்து கொண்டீர்களா. பழைய பெயர் நாகர ஸ்ரீ தர்மராஜா. புதிய பெயர் நாக்கோன் சி தாமராட். இது ஒரு தாய்லாந்து மொழிச் சொல்.




ஆக இப்போதைய தாய்லாந்து வரலாற்றில் நாகர ஸ்ரீ தர்மராஜா எனும் பழைய பெயர் இல்லை. நாக்கோன் சி தாமராட் எனும் புதுப் பெயர் தான் இருக்கிறது. அந்தப் பெயரில் தான் அழைக்கப் படுகிறது. தாய்லாந்து பள்ளிப் பாடப் புத்தகங்களிலும் சொல்லப் படுகிறது.

(சான்று: http://link.library.canton.ma.us/portal/Coswells-guide-to-Tambralinga--a-novel-by/3iTEgdh6Ves/ - Coswell's guide to Tambralinga : Landers, Scott, 1952; New York, Farrar, Straus and Giroux, 2004)

மறுபடியும் கவனமாகக் கேளுங்கள். இந்த நாக்கோன் சி தாமராட் எனும் நாகர ஸ்ரீ தர்மராஜா இருக்கிறதே இந்த அரசின் முன்னைய பெயர் தான் தாம்பிரலிங்கப் பேரரசு.

முதன்முதலாக தாம்பிரலிங்கா என்று அழைத்து இருக்கிறார்கள். அதன் பின்னர் நாகர ஸ்ரீ தர்மராஜா என்று அழைத்து இருக்கிறார்கள். அதன் பின்னர் நாக்கோன் சி தாமராட் என்று அழைத்து இருக்கிறார்கள். இப்போதும் அழைத்து வருகிறார்கள்.

ஆக இந்தத் தாம்பிரலிங்கப் பேரரசு எனும் பெயர் தான் வரலாற்றில் இருந்து மறக்கப்பட்டு மறைந்து போன ஒரு இந்தியப் பெயர். புரியுதுங்களா.

தாம்பிரலிங்கப் பேரரசை ஆட்சி செய்த அனைவருமே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.




தாம்பிரலிங்கப் பேரரசின் வரலாறு ஓர் உண்மையான வரலாறு. அந்த வரலாற்று உண்மையை தாய்லாந்து மக்களும் ஏற்றுக் கொள்ள்கிறார்கள். அந்த வகையில் தாய்லாந்து நாட்டு மக்கள் வரலாற்றை வரலாறாகப் பார்க்கின்றார்கள்.

இந்தப் பக்கம் இந்தோனேசியாவில் இந்திய வரலாற்றைத் தங்களின் வரலாறாகப் போற்றிப் புகழ்கிறார்களோ அதே போலத் தான் தாய்லாந்து மக்களும் தாம்பிரலிங்கப் பேரரசை வாயாரப் போற்றிப் புகழ்கின்றார்கள்.

ஆனால் என்ன. நாக்கோன் சி தாமராட் என்று பெயரை மாற்றிப் புகழ்கின்றார்கள். மற்ற இடங்களில் அப்படியா. வரலாற்றுச் சுவடுகளை அவிழ்த்துப் போட்டு அந்தச் சுவடுகள் வெட்கப்படும் அளவிற்குச் சிதைத்து விட்டார்கள். சரிங்களா.

பின்னர் காலத்தில் அதாவது 12-ஆம் நூற்றாண்டில் இந்தத் தாம்பிரலிங்கப் பேரரசு தான் ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமையின் கீழ் வந்தது. இந்தோனேசியாவை ஆட்சி செய்த ஸ்ரீ விஜய பேரரசைத் தான் சொல்கிறேன்.

அந்த வகையில் கூட்டிக் கழித்து வகுத்துப் பார்த்தால் பூஜாங் சமவெளியை இந்தத் தாம்பிரலிங்கப் பேரரசு தான் ஆட்சி செய்து இருக்க வேண்டும். இந்தத் தாம்பிரலிங்கப் பேரரசிற்குப் பின்னர் தான் பூஜாங் சமவெளியை ஸ்ரீ விஜய பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது. 




மாறன் மகாவம்சன் எனும் பாண்டிய இளவரசனை விட்டு விடுவோம். ஏன் என்றால் இந்த தாம்பிரலிங்கா அரசு வருவதற்கு முன்னாலேயே ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே கடாரத்தில் கால் வைத்து விட்டுப் போய் விட்டார்.

கி.பி. 1025-ஆம் ஆண்டு ராஜேந்திர சோழன் என்பவர் கடாரத்திற்கு வந்தார். அந்தப் பச்சை மண்ணை மிதித்துத் துவைத்துக் காயப் போட்டுப் போனானே அந்தச் சமயத்தில் பூஜாங் சமவெளியின் ஆட்சி  ஸ்ரீ விஜய பேரரசின் கீழ் இருந்தது. இந்தக் காலக் கட்டத்தைத் தான் இப்போது குறிப்பிடுகிறேன்.

அந்தப் பார்வையில் பார்க்கும் போது ஸ்ரீ விஜய பேரரசிற்கு முன்னர் தாம்பிரலிங்கப் பேரரசு தான் ஒரு கட்டத்தில் ஒட்டு மொத்த தீபகற்ப மலேசியாவையே ஆட்சி செய்து இருக்கிறது.

(சான்று Munoz, Paul Michel, Early kingdoms of the Indonesian archipelago and the Malay Peninsula. Singapore: Editions Didier Millet, 2006.)

சரி. இனி தாம்பிரலிங்கா வரலாற்றுச் சான்றுகளைப் பார்க்கப் போகிறோம்.

கி.பி.600-ஆம் ஆண்டுகளில் தாங் வம்சாவளியினர் (Tang dynasty) சீனாவை ஆட்சி செய்து வந்தார்கள். அவர்களின் ஆட்சிக் காலத்தில் அதாவது கி.பி.616-ஆம் ஆண்டு காவ்சூ (Emperor Gaozu) எனும் அரசர் சீனாவை ஆட்சி செய்து இருக்கிறார். இவர் ஆட்சி செய்யும் போது தாம்பிரலிங்கா அரசு சீனாவிற்குப் பாதுகாப்புக் காப்பீடு வழங்கி உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் கப்பம் கட்டி இருக்கிறது. 




தாம்பிரலிங்கா என்றால் என்ன என்றும் சீனக் காலச் சுவடுகள் விளக்கம் கொடுத்து இருக்கின்றன. அவை தாங் (Tang dynasty) வம்சாவளிக் காலச்சுவடுகள்; மிங் (Ming dynasty) வம்சாவளிக் காலச்சுவடுகள்.

கி.பி.640; கி.பி.648;  கி.பி.818; கி.பி.860; கி.பி.873-ஆம் ஆண்டுகளில் தாம்பிரலிங்கா அரசர்கள் சீனாவிடம் கப்பம் கட்டி இருக்கிறார்கள். அந்தச் சுவடுகளின்படி தாம்பிரலிங்கா என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்.

தாம்பிரம் என்றால் செம்பு. இது சிவப்பு நிறத்தையும் குறிக்கும். லிங்கா என்றால் இந்துக்களின் சின்னம். சிவபெருமானைக் குறிக்கும் ஒரு தெய்வீகத் தன்மை என்று அந்தச் சுவடுகள் சொல்கின்றன.   

(சான்று: Cœdès, George, The Indianized states of Southeast Asia. Canberra: Australian National University Press, 1975.)

(சான்று: http://www.ayutthaya-history.com/References.html - The late David K. Wyatt was the John Stambaugh Professor Emeritus of History at Cornell University until his retirement.)

தாம்பிரலிங்கா அரசு ஒரு காலக் கட்டத்தில் ஸ்ரீ விஜய பேரரசின் கீழ் இருந்து இருக்கிறது. ஸ்ரீ விஜய பேரரசைச் சீனர்கள் சான்போகி (Sanfoqi) என்று அழைத்து இருக்கிறார்கள்.

தாம்பிரலிங்கா அரசு தீபகற்ப மலாயாவின் மத்தியப் பகுதியை ஆட்சி செய்து வந்து இருக்கிறது. இந்தத் தீபகற்ப மலாயாவின் மத்தியப் பகுதி தான் இப்போதைய தென் தாய்லாந்து ஆகும்.

மலாயாவுக்கு வந்த இலங்கை வணிகர்கள் தாம்பிரலிங்காவைச் சாவகம் (Savaka) என்று அழைத்து இருக்கிறார்கள்.

அராபிய வணிகர்கள் சபாஜ் (Zabaj) என்றும் சபாக்கா (Zabaka) என்றும் அழைத்து இருக்கிறார்கள்.

தென்னிந்திய வணிகர்கள் தாம்பிரலிங்கம் (Tambralingam) என்றும் வட இந்திய வணிகர்கள் தாம்பிரலிங்கராத் (Tambralingarath) என்றும் அழைத்து இருக்கிறார்கள். பாரசீக மொழியில் ராத் என்றால் நாடு.




தாம்பிரலிங்காவின் தலைப்பட்டினம் எதுவாக இருந்து இருக்கும் என்பதைப் பற்றி இன்றும்கூட ஆய்வு செய்து வருகிறார்கள். கிரேக்க நாட்டு அறிஞர் குளோடியஸ் தாலமி (Claudius Ptolemy) பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இவர் ஒரு புவியியலாளர்; ஒரு வானியலாளர்; ஒரு சோதிடர்.

பல அறிவியல் நூல்களை எழுதியவர். அவர் எழுதிய நூல்களில் மிகவும் புகழ்பெற்றது வானியல் துறை சார்ந்த அல்மாகெஸ்ட் (Almagest) எனும் நூலாகும். அடுத்தது ஜியோகிரபியா (Geographia) எனும் புவியியல் தொடர்பான நூல்.

இந்த நூலில் தான் தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் படம் வரைந்து காட்டி இருக்கிறார். கி.பி.100-ஆம் ஆண்டுகளில் தென்கிழக்காசியாவில் தக்கோலா (Takola Emporium) எனும் துறைமுகம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி இருக்கிறது.

இந்தத் துறைமுகம் கிரா குறுநிலத்தின் (Isthmus of Kra) மேற்குக் கரையில் இருந்தது என்று எழுதி இருக்கிறார்.

ஒரு செருகல். மலாயாவையும் தாய்லாந்து நாட்டையும் இந்தக் கிரா குறுநிலம் தான் பிரிக்கிறது. சரி. 




தாம்பிரலிங்கா அரசின் தலைப்பட்டணமாகத் தக்கோலா துறைமுகம் இருந்து இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருத்து கூறுகின்றனர்.

தக்கோலா துறைமுகத்தில் தென்னிந்தியாவின் கலிங்கத்தைச் சேர்ந்த தமிழர்கள் அதிகமாகக் குடியேறியதாகவும் அகழாய்வுச் சான்றுகள் கூறுகின்றன.

(சான்று: http://www.globalsecurity.org/military/world/malaysia/history-takola.htm - Judging from the only ancient inscription fromTakopa district the settlers from India are Dravidians from East coast of India where Tamil was spoken.)

ஆனாலும் அந்தத் தமிழர்கள் அங்கே ஓர் அரசாங்கத்தை உருவாக்கி இருக்க முடியாது என்பதே வரலாற்று ஆசிரியர்கள் பலரின் பொதுவான கருத்து.

எது எப்படி இருந்தாலும் தாம்பிரலிங்கா எனும் ஓர் இந்திய அரசு மலாயா தீபகற்பத்திலும் தாய்லாந்து நாட்டிலும் கோலோச்சி இமயம் பார்த்து இருக்கிறது. பற்பல போர்க் கோலங்களில் உச்சம் பார்த்து இருக்கிறது. 




இந்தப் பேரரசைப் பற்றிய கல்வெட்டுகள் அல்லது அகழ்வாய்வுகள் எதுவும் அதிகமாகக் கிடைக்கவில்லை. சீன வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தான் அப்படி ஓர் அரசு இருந்ததாக வரலாறும் சொல்கிறது.

பூஜாங் சமவெளியில் மேலும் ஆழமான அகழாய்வுகள் செய்தால் தாம்பிரலிங்கா அரசைப் பற்றிய ரகசியங்கள் வெளியே வரலாம். மலாயா வரலாற்றையே மலைக்க வைக்கும் ரகசியங்கள் மீட்கப் படலாம். ஆனால் அகழாய்வுகள் செய்ய விடுவார்களா.

பூஜாங் சமவெளியைப் பற்றி அக்குவேர் ஆணிவேராகப் பிட்டு பிட்டு வைத்த டத்தோ நடராஜன் அவர்களையே ஓரம்கட்டி விட்டார்கள். அப்புறம் என்னங்க. அவருக்குத் துணையாக நிற்கும் என்னுடைய கோத்தா கெலாங்கி வரலாற்றுப் போராட்டங்களும் அடிபட்டுப் போகின்றன. வேதனையாக இருக்கிறது.

எவ்வளவு காலம் தான் சொந்தப் பணத்தில் ஆய்வுகள் செய்வதாம். சொல்லுங்கள். செடிக், தமிழ் அறவாரியம் போன்ற அமைப்புகள் இப்படிப்பட்ட வரலாற்று ஆய்வுகளுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும். உதவி செய்வார்களா? இதுவும் ஒரு மில்லியன் டாலர் கேள்வி.




கெடா வரலாறு  1
கெடா வரலாறு  2
கெடா வரலாறு  3




25 அக்டோபர் 2017

மலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் - 1

தென் தாய்லாந்தில் கோலோக் என்பது ஒரு சுற்றுலா சிறுநகர். அங்கே இருந்து 70 கி.மீ. தொலைவில் ஓர் அடர்ந்த காடு. அந்தக் காட்டுக்குள் ஒரு குட்டிக் கிராமம். பெயர் சுல்லாபோர்ன் காட்டுக் கிராமம் (Kampung Chulaborn). அங்கே 260 முன்னாள் மலாயா கம்யூனிஸ்டுகள் வாழ்ந்து வருகிறார்கள். 
 

அனைவரும் முன்னாள் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள். இவர்களுடன் அவர்களின் மனைவி பிள்ளைகள், உறவினர்கள் என மொத்தம் 460 பேர் இருக்கின்றனர்.

அந்தக் குடும்பங்களில் எஞ்சி இருப்பது ஒரே ஒரு தமிழர்க் குடும்பம். குடும்பத் தலைவரின் பெயர் ஆசிர்வாதம். (பாதுகாப்பு காரணங்களுக்காகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது). வயது 75.

இவர் பேராக் மாநிலத்தில் 1939-ஆம் ஆண்டு பிறந்தவர். ஒரு தாய்லாந்து பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, அங்கேயே இப்போது வாழ்ந்தும் வருகிறார்.

சொந்த பந்தங்கள் எல்லாம் சுங்கை சிப்புட், தைப்பிங், கோலாகங்சார் பகுதிகளில் இருக்கின்றன. முன்பு மலாயா கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராக இருந்த ஒருவரைத் தங்களின் சொந்தக்காரர் என்று சொல்லிக் கொள்ள அவருடைய சொந்தக்காரர்களுக்கே விருப்பம் இல்லையாம். அதைப் பற்றி ஆசிர்வாதமும் கவலைப் படவில்லை.

மலேசிய அரசாங்கம் இன்னும் ஆசிர்வாதத்திற்கு குடியுரிமை வழங்கவில்லை. அவரிடம் சிவப்பு அடையாளக் கார்டு இருக்கிறது. அதை நீல நிறமாக மாற்ற முயற்சி செய்து கொண்டு வருகிறார்.

அதற்காக வருடத்திற்கு ஒரு முறையாவது மலேசியாவிற்குள் வந்து போகிறார். மனைவி ராஜம்மா சுலாங்போர்ன். தாய்லாந்து பிரஜை. இன்றையக் கட்டுரை மலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் ஆசிர்வாதத்தைப் பற்றியது.
(சான்று: https://www.malaysiakini.com/news/111797 - The last of CPM's Indian communists)

படியுங்கள். மலேசியத் தமிழர்களும் சரி உலகத் தமிழர்களும் சரி அவரை நினைவில் கொள்ள வேண்டும்.

கோலோக் (Golok) என்பது ஒரு சிறுநகரம் தான். கேள்விப்பட்டு இருப்பீர்கள். அப்பா அம்மாவைத் தவிர மற்ற எல்லாமே அங்கே கிடைக்கும். புரிந்து கொள்ளுங்கள். நான் சொல்லவில்லை. போய் வந்தவர்கள் சொல்கிறார்கள்.

முன்பு எல்லாம் ஆண்கள் சிலர் அங்கே சென்று வருவது வழக்கம். நானும் என் நண்பர்களும் இருமுறை போய் வந்து இருக்கிறோம்.

அதில் எந்த இனத்து ஆண்கள் அதிகம் போய் வருகிறார்கள் என்று கேட்க வேண்டாம். சமரசம் உலாவும் இடத்தில் இன மொழி உணர்வுப் பண்புகள் எல்லாமே அடிபட்டுப் போய் விடுகின்றன.

அங்கே இருந்து சிபிலிஸ், கொனோரியா போன்ற பாலியல் நோய்களைக் காசு கொடுத்து வாங்கி வந்தவர்களும் இருக்கிறார்கள். இப்போது கோலோக் சமாசாரம் குறைந்து விட்டது.

அதுதான் அடிவாசலில் மேல்நாட்டு ரம்பைகளும் ஊர்வசிகளும் அணிவகுத்து நிற்கிறார்களே. அப்புறம் ஏன் அங்கே போக வேண்டும். ஆக கோலோக் இரவு யாத்திரை குறைந்து போனதில் நியாயம் இருப்பதில் நியாயம் தெரிகிறது.
ஒரு முக்கியமான விசயம். கோலோக் நகரத்திற்கும் நாடு கடந்து வாழும் முன்னாள் கம்யூனிஸ்டுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்கள் பாட்டுக்கு அவர்கள் வேறு ஒரு பக்கத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். சரி. நம்ப விசயத்திற்கு வருவோம்.

சுல்லாபோர்ன் காட்டுக் கிராமத்தை, பால் சுல்லாபோர்ன் பட்டனா (Ban Chulaborn Patana 12) என்றும் அழைப்பார்கள். கோலோக் நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் சுக்கிரின் எனும் ஒரு குறுநகரம் இருக்கிறது. அங்கு இருந்து 30 கி.மீ. தொலைவில் ஒரு பெரிய ஆழ்க் காடு. அந்தக் காட்டுக்குள் அந்தச் சுல்லாபோர்ன் காட்டுக் கிராமம் இருக்கிறது.

வெளியுலக மக்கள் அதிகம் போவது இல்லை. அப்படி ஒன்றும் அங்கே சுலபமாகப் போய் வந்துவிடவும் முடியாது. தெரியாதவர்கள் யாரையும் அந்தக் கிராமத்திற்குள் விடவும் மாட்டார்கள்.

தவிர கிராமத்திற்குப் போகும் மண் சடக்கில் மேடு பள்ளங்கள், குண்டு குழிகள், குட்டிக் குட்டி ஆறுகள், சின்னப் பெரிய மண்சரிவுகள். இடை இடையே காட்டு யானைகளின் உருட்டல் மிரட்டல்கள். இவற்றை எல்லாம் தாண்டிப் போக மூன்று நான்கு மணி நேரம் பிடிக்கும்.

மறுபடியும் சொல்கிறேன். இந்தக் கிராமத்தில் வாழ்கின்றவர்கள் அனைவரும், முன்னாள் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் 10-ஆவது ரெஜிமெண்டைச் (10th Regiment of the Communist Party of Malaya (CPM)) சேர்ந்தவர்களின் குடும்பங்கள். அவர்களின் உறவினர்கள்.

இவர்களுக்கு அப்துல்லா சி.டி. (Abdullah CD) என்பவர் தலைவராக இருக்கிறார். துணையாக அவருடைய மனைவி சுராய்னி அப்துல்லா (Suriani Abdullah) என்பவரும் உதவிகள் செய்து வருகிறார்.

முன்னாள் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்தான் அப்துல்லா சி.டி. மலேசிய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற மனிதர். ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தியவர். மலாயாக் காடுகளில் 45 ஆண்டுகால வாழ்க்கை.
இவரைத் தவிர சின் பெங் (Chin Peng), ரசீட் மைடின் (Abdul Rashid bin Maidin), சம்சியா பாக்கே (Shamsiah Fakeh), மூசா அமாட் போன்றவர்களும் அந்தக் கிராமத்தில் இருந்தார்கள். வாழ்ந்தார்கள்.

இவர்களில் சின் பெங்கைத் தவிர மற்றவர்களுக்கு மலேசியாவிற்குள் திரும்பி வர அனுமதி வழங்கப் பட்டது. ரசீட் மைடின் என்பவருக்கு தாய்லாந்து அரசாங்கம் குடியுரிமை வழங்கி இருக்கிறது.

மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான சின் பெங்கிற்கு தாய்லாந்து குடியுரிமையும் கிடைக்கவில்லை. மலேசியக் குடியுரிமையும் கிடைக்கவில்லை. பேராக், சித்தியவான் நகரில் பிறந்தவர். கடைசியில் அவர் நாடற்றவராக அண்மையில் இறந்து போனார்.

1989-ஆம் ஆண்டில், மலேசியா, தாய்லாந்து அரசாங்கங்களுடன் மலாயா கம்யூனிஸ்டு கட்சி ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதாவது இனிமேல் மலேசியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டோம் எனும் ஒப்பந்தம். 

அதன்படி இந்தக் கம்யூனிஸ்டுகள் தங்கி வாழ்வதற்கு தாய்லாந்து அரசாங்கம் ஒரு காட்டுப் பகுதியை ஒதுக்கிக் கொடுத்தது. அது இப்போது ஒரு கிராமமாக மாறிவிட்டது.
(சான்று: http://bersamajeli.blogspot.my/2012/11/lawatan-ke-ban-chulabhorn-patna-12.html - LAWATAN KE BAN CHULABHORN PATNA 12)

ஆரம்பத்தில் 260 பேராக இருந்த கிராமம் சென்ற ஆண்டு 460-ஆக பெருகி நிற்கிறது. அங்கே வாழ்பவர்களில் ஒருவர்தான் ஆசீர்வாதம்.

மலேசியாவிற்குள் திரும்பி வருவதற்கு ஆசீர்வாதம் பல முறை முயற்சிகள் மேற்கொண்டார். வெற்றி பெற முடியவில்லை. அவரிடம் மலேசிய சிவப்பு அடையாள அட்டை மட்டுமே இருக்கிறது. அதை நீல நிறமாக மாற்றுவதற்கு முயற்சிகள் செய்து வருகிறார்.

அதற்காக வருடத்திற்கு ஒரு முறை மலேசியாவிற்கு வந்து போகிறார். இதுவரையில் 10,000 ரிங்கிட்டிற்கு மேல் செலவு செய்து விட்டதாகவும் சொல்கிறார். இன்னும் நீலநிற அடையாள அட்டையும் கிடைக்கவில்லை. குடியுரிமையும் கிடைக்கவில்லை.

சரி. அதற்கு முன் மலாயா கம்யூனிஸ்டு கட்சியைப் பற்றி கொஞ்சம் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.

மலாயாவை ஜப்பானியர்கள் கைபற்றிய போது அவர்களை எதிர்ப்பதற்காக ஒரு விடுதலை முன்னணி உருவாக்கப் பட்டது. அந்த விடுதலை முன்னணிக்கு பிரிட்டிஷ்காரர்கள் ஆயுதங்களைக் கொடுத்து உதவினார்கள். நிதியுதவியும் செய்தார்கள். ஒரு சிலருக்கு விருதுகளைக் கொடுத்து விளம்பரமும் செய்து இருக்கிறார்கள்.

அந்த விடுதலை முன்னணிக்குப் பெயர் மலாயா விடுதலை முன்னணி. ஆங்கிலத்தில் Malayan People's Anti-Japanese Army என்று சொல்வார்கள். அந்த விடுதலை முன்னணியில், மலாயாவின் மூன்று இனங்களும் சரி சமமாகப் பங்கெடுத்துக் கொண்டன.

மலாயாவை ஜப்பானியர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்று நிறைய கனவுகளுடன் இந்தியர்களும் போர்க் கொடி தூக்கி இருக்கிறார்கள். அந்தப் போராட்ட வீரர்களில் முதலில் வருபவர் ஜப்பானிய எதிர்ப்பாளர் சிபில் கார்த்திகேசு.

இவர் ஆயிரக் கணக்கான சீனர்களுக்கு உதவிகள் செய்தவர். கடைசியில் மனிதச் சித்ரவதைகளின் சிகரத்தில் அனாதையாகிச் செத்தும் போனார். அவரைப் போல இந்தியர்கள் பலர் மலாயா மக்களுக்காகப் போராடி இருக்கிறார்கள். வரலாற்றுச் சுவடுகளில் இருந்து காணாமல் போனது தான் மிச்சம்.

அவர்களில் ஒருவர் மலாயா கணபதி. இந்தியத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். கடைசியில் ஆங்கிலேயர்கள் அவரைத் தூக்கில் தொங்கப் போட்டு தொடை தட்டிக் கொண்டார்கள். 
அகில மலாயாத் தொழிற்சங்கச் சம்மேளனத் தலைவர் பி. வீரசேனன். சின்ன வயதில் பெரிய இலட்சியவாதி. பகாங் காராக் பகுதியில் இவரை சுட்டே கொன்றார்கள்.

மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் துணைத் தலைவர் கம்பார் ஆர்.ஜி.பாலன். அந்தக் கட்சியில் ஆக உயர்ந்த பதவி வகித்த ஒரே தமிழர். இவர் வந்தார் என்றால் கம்பார் நகரமே நடுங்கும் என்றும் சொல்வார்கள். 

இவருக்கு ஆங்கிலேயர்கள் தங்கப் பதக்கம் கொடுத்து உச்சி முகர்ந்தார்கள். தங்கப் பதக்கம் பெற்ற இவர் என்ன ஆனார் என்பது இன்று வரை ஒரு பெரிய ரகசியம். தங்கமலை ரகசியம் தோற்றது போங்கள்.

இன்னும் ஒருவர் இருக்கிறார். 1940-களில் கிள்ளான் தொழிற்சங்கப் போராட்டவாதியாக இருந்த ஆர். எச். நாதன். இவரை இந்தியாவிற்கு நாடு கடத்தினார்கள். மனைவி மக்களை விட்டு கண்ணீர் வடித்துக் கொண்டு போனவர்.

கடைசி வரை அவர் மலாயாவுக்குள் திரும்பி வரவே முடியவில்லை. கடைசி வரை வெள்ளைக்காரர்கள் அவரை மலாயாவுக்குள் விடவே இல்லை. இவர் இந்தியாவிலேயே இறந்து போனார். இவருடைய வாரிசுகள் இப்போது கிள்ளானில் இருக்கிறார்கள்.

மலாயா மக்களின் நலன்களுக்காகப் போராடிய இவர்களை மலேசிய இந்தியர்களும் மறந்து விட்டார்கள். மலேசிய வரலாறும் மறந்து விட்டது. அதே போலத்தான் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஆசீர்வாதம். இவரையும் மறந்து விட்டார்கள். காலத்தால் மறக்கப்பட்ட மனிதர்களில் ஆசீர்வாதம் என்பவரும் ஒருவர்.

மலாயா விடுதலை முன்னணி கதைக்கு மறுபடியும் வருவோம். ஜப்பானியர்கள் சரண் அடைந்ததும் வெள்ளைக்காரர்கள் வரும் வரையில் அந்த மலாயா விடுதலை முன்னணி தான் மலாயாவை 18 நாட்களுக்கு தன் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. ஆட்சியும் செய்தது.

இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். அதாவது நாம் வாழும் இந்த மலேசியாவை கம்யூனிஸ்டுகள் 18 நாட்களுக்கு ஆட்சி செய்து இருக்கிறார்கள். இது ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை. மலாயா வரலாற்றைப் படித்துப் பாருங்கள். இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. ரொம்ப வேண்டாம்.

சிலாங்கூரில் இருக்கும் ரவாங் நகரத்தை இந்தியர்கள் சில நாட்கள் ஆட்சி செய்தார்கள். இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும்.

22 அக்டோபர் 2017

கெடா மாநிலத்தின் இந்திய அரசர்கள்

மாறன் மகாவம்சனுக்குப் பின்னர் கெடா மாநிலத்தை ஆட்சி செய்த இந்திய அரசர்களின் பட்டியல். போதுமான சான்றுகளுடன் முன் வைக்கிறேன். 
 

மாறன் மகாவம்சன் (Maaran Mahavamsan) எனும் மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa) என்பவர் தான் கெடா சாம்ராஜ்யத்தை (Kedah kingdom - Kadaram) உருவாக்கியவர்.

(சான்று:https://www.revolvy.com/main/index.php?s=Kedah%20Sultanate&item_type=topic&sr=100 - Around 170 CE a group of native refugees of Hindu faith arrived at Kedah,

மாறன் மகாவம்சன் என்பவர் ஈரானின் தென்பகுதி துறைமுகப் பட்டினமான கொம்ரூன் (Gombroon) பகுதியில் இருந்து தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்தார். அந்தக் காலக் கட்டத்தில் தென் இந்தியாவில் பாண்டியர்களின் ஆதிக்கம் வலுவாக இருந்தது.


மாறன் மகாவம்சன் பாண்டியர்கள் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். கெடா பேரரசு தோற்றுவிக்கப் படுவதற்கு முன்னர் கெடா நிலப் பகுதி லங்காசுகம் (Langkasuka) என்று அழைக்கப் பட்டது.

பாண்டிய மன்னர்கள் தமிழகத்தை ஆட்சி செய்த போது இந்த மாறன் மகாவம்சன் லங்காவித் தீவிற்கு வந்து இருக்கிறார். பின்னர் கெடாவில் குடியேறி இருக்கிறார். அப்படியே கெடா பேரரசையும் உருவாக்கி இருக்கிறார். வணிகம் செய்வதே அவரின் பிரதான நோக்கம். ஆட்சி செய்வது அல்லது நிலத்தை ஆட்கொள்வது அவரின் நோக்கம் அல்ல.

அந்த வகையில் கெடா பேரரசு என்பது தொடக்க காலத்தில் ஓர் இந்து பேரரசு. சில காலம் புத்த மதமும் இந்தப் பேரரசுடன் இணைந்து இருந்தது.



 மறுபடியும் சொல்கிறேன். லங்காசுகம் இருந்த காலக் கட்டத்தில் தான் கெடா பேரரசு (Kedah kingdom (Kadaram)  தோற்றுவிக்கப் பட்டது. இந்த இரு அரசுகளுமே ஒரே காலக் கட்டத்தில் கோலோச்சிய பேரரசுகள்.

கெடா பேரரசின் கடைசி இந்து அரசரின் பெயர் தர்பார் ராஜா II (Durbar Raja II). இவர் தான் மதமாற்றம் செய்து கொண்டார். மதமாற்றம் நடந்ததும் 800 ஆண்டுகால கெடா மாநிலத்தின் இந்து ஆளுமை ஒரு முடிவிற்கு வந்தது.

கெடா பேரரசு கெடா சுல்தானகமாக மாறியது. தர்பார் ராஜா II அரசரை சயாமியர்கள் பரா ஓங் மகாவங்சா (Phra Ong Mahawangsa) என்று அழைத்து இருக்கிறார்கள்.

(சான்று: https://www.revolvy.com/main/index.php?s=Kedah%20Sultanate&item_type=topic&sr=100  The Hindu dynasty ended when the ninth king Durbaraja II, styled "Phra Ong Mahawangsa" by the Siamese, converted to Islam in 1136)

(சான்று: https://en.wikipedia.org/wiki/Kedah_Sultanate#Hindu_era)

எப்படி மதமாற்றம் நடந்தது என்பதையும் கவனியுங்கள்.

கி.பி.1136-ஆம் ஆண்டு ஏமன் நாட்டைச் சேர்ந்த சமய போதகர் Sheikh Abdullah bin Ja'afar Quamiri என்பவர் கெடாவிற்கு வந்தார். கெடா சாம்ராஜ்யத்தின் கடைசி ராஜாவான தர்பார் ராஜா II என்பவரை மதம் மாற்றம் செய்தார். அந்த அரசருக்கு Mudzaffar Shah I என்று பெயர் மாற்றம் கண்டது.

இப்போது கெடாவின் சுல்தானாக இருக்கும் Abdul Halim Mu'adzam Shah அவர்களும் இதே இந்த அரச பரம்பரையைச் சேர்ந்தவர்.
(சான்று: https://web.archive.org/web/20060511194957/http://uqconnect.net/~zzhsoszy/states/malaysia/kedah.html )

கெடா மாநில ஆட்சியாளர்கள்
(மாறன் மகாவம்சனுக்குப் பின்னர் வந்த இந்து அரசர்கள்)

தர்பார் ராஜா I - Durbar Raja I (கி.பி. 0330 - 0390)

ராஜா புத்ரா - Raja Putra (கி.பி. 0390 - 0440)

மகா தேவா I - Maha Dewa I (கி.பி. 0440 - 0465)

கர்ண ராஜா - Karna Diraja (கி.பி. 0465 - 0512)

கர்மா - Karma (கி.பி. 0512 - 0580)

மகா தேவா II - Maha Dewa II (கி.பி. 0580 - 0620)

மகா தேவா III- Maha Dewa III (கி.பி. 0620 - 0660)

ராஜா புத்ரா II - Raja Putra II (கி.பி. 0660 - 0712)

தர்ம ராஜா - Darma Raja (கி.பி. 0712 - 0788)

மகா ஜீவா - Maha Jiwa (கி.பி. 0788 - 0832)

கர்மா II - Karma II (கி.பி. 0832 - 0880)

தர்ம ராஜா II- Darma Raja II (கி.பி. 0880 - 0956)

தர்பார் ராஜா II- Durbar Raja II (கி.பி. 0956 - 1136)

(சான்று: https://en.wikipedia.org/wiki/Kedah_Sultanate#Hindu_era)

கெடா பேரரசில் எப்போது மதமாற்றம் நடைபெற்றது என்பதற்கான சான்றுகள் கீழ்க்காணும் இணையத் தளத்தில் உள்ளன.

(https://www.revolvy.com/main/index.php?s=Kedah%20Sultanate&item_type=topic&sr=100 - Dubar Raja II, renounced Hinduism and converted to Islam, which was introduced by Muslims from neighbouring Aceh, he also changed his name to Sultan Mudzafar Shah.)

*மதமாற்றம்*
(https://www.revolvy.com/main/index.php?s=Mudzaffar%20Shah%20I%20of%20Kedah&uid=1575 - Sultan Mudzaffar Shah I, or Phra Ong Mahawangsa (died 1179) was the first Sultan of Kedah. His reign was from 1136 to 1179. He was the last Hindu king of Kedah. After his conversion to Islam, he later became the founder of the Kedah Sultanate, which still exists to this day.)

முஷபர் ஷா I - Mudzaffar Shah I (கி.பி. 1136–1179)

முவட்ஷாம் ஷா - Mu'adzam Shah (கி.பி. 1179–1201

முகமட் ஷா - Muhammad Shah (கி.பி. 1201–1236)

முஷபர் ஷா II - Mudzaffar Shah II (கி.பி. 1236–1280)

முகமட் ஷா II - Mahmud Shah I (கி.பி. 1280– 1321)

இப்ராகிம் ஷா - Ibrahim Shah (கி.பி. 1321– 1373)

சுலைமான் ஷா I - Sulaiman Shah I (கி.பி. 1373–1422)

அதுல்லா முகமட் ஷா I - Ataullah Muhammad Shah I (கி.பி. 1422–1472)

முகமட் ஜீவா ஜைனல் ஷா I - Muhammad Jiwa Shah I (கி.பி. 1472–1506)

முகமட் ஷா II - Mahmud Shah II (கி.பி. 1506–1546)

முஷபர் ஷா II - Mudzaffar Shah III (கி.பி. 1546–1602)

சுலைமான் ஷா II - Sulaiman Shah II (கி.பி. 1602–1625)

ரிஜாலிடின் ஷா - Rijaluddin Muhammad Shah (கி.பி. 1625–1651)

முகயிடின் மன்சூர் ஷா - Muhyiddin Mansur Shah (கி.பி. 1651–1661)

ஜியாடின் முகாராம் ஷா I - Dziaddin Mukarram Shah I (கி.பி. 1661–1687)

அதுல்லா முகமட் ஷா II - Ataullah Muhammad Shah II (கி.பி. 1687–1698)

அப்துல்லா முவட்ஷாம் ஷா - Abdullah Mu'adzam Shah (கி.பி. 1698–1706)

அகம்ட் தாஜுடின் ஹாலிம் ஷா I - Ahmad Tajuddin Halim Shah I (கி.பி. 1706–1709)

முகமட் ஜீவா ஜைனல் ஷா II - Muhammad Jiwa Zainal Shah II (கி.பி. 1710–1778)

அப்துல்லா முகாராம் ஷா - Abdullah Mukarram Shah (கி.பி. 1778–1797)

ஜியாடின் முகாராம் ஷா II - Dziaddin Mukarram Shah II (கி.பி. 1797–1803)

அகமட் தாஜுடின் ஹாலிம் ஷா II - Ahmad Tajuddin Halim Shah II (கி.பி. 1803–1843)

ஜைனல் ரசீட் அல்முவட்ஷாம் ஷா I - Zainal Rashid Al-Mu'adzam Shah I (கி.பி. 1843–1854)

அகம்ட் தாஜுடின் முகாராம் ஷா - Ahmad Tajuddin Mukarram Shah (கி.பி. 1854–1879)

ஜைனல் ரசீட் முவட்ஷாம் ஷா II - Zainal Rashid Mu'adzam Shah II (கி.பி. 1879–1881)

அப்துல் ஹமீட் ஹாலிம் ஷா - Abdul Hamid Halim Shah (கி.பி. 1881–1943)

பட்லிஷா - Badlishah (கி.பி. 1943–1958)

அப்துல் ஹாலிம் முவட்ஷாம் ஷா - Abdul Halim Mu'adzam Shah (கி.பி. 1958 - 2017)

(சான்று: http://go2travelmalaysia.com/tour_malaysia/kdh_bckgnd.htm - The Kedah Sultanate began when the 9th Kedah Maharaja Derbar Raja (1136 -1179 AD) converted to Islam and changed his name to Sultan Muzaffar Shah. Since then there have been 27 Sultans who ruled Kedah)

(சான்று: https://en.wikipedia.org/wiki/Kedah_Sultanate#Islamic_era)
(எழுத்து: மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

போதுமான வரலாற்றுச் சான்றுகளுடன் இந்தக் கட்டுரை எழுதப்பட்டு உள்ளது.