18 ஜூன் 2019

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 13

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட தொடக்க காலத்தில் நிதி பற்றாக்குறை. நியாயமான முறையில் நீதியான வழியில் நிதி உதவி பெறுவதையே தமிழீழ விடுதலைப் புலிகள் குறிக்கோளாகக் கொண்டு இருந்தார்கள். ஆனால் உதவி செய்ய ஆள் இல்லாத நிலையில் நிறையவே  தடுமாற்றங்கள்.


ஒரு குடும்பத்தை நடத்துவதே பெரிய பாடு. இதில் ஓர் இயக்கத்தை நடத்துவது என்றால் என்ன சாதாரண விசயமா. அதுவும் அனுதினமும் புதுப் புது ஆதரவாளர்கள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டு இருந்தார்கள். நூறாக இருந்த இயக்கம் ஆயிரம் ஆயிரமாகிப் போனது.

எப்படியாவது இயக்கத்தை நடத்த வேண்டும். முன் வைத்த காலைப் பின் வைக்கக் கூடாது.

வெளியே போய் யாரிடமும் பணம் கேட்க முடியாது. கேட்டாலும் பெரிய அளவில் கிடைக்காது. ஆயிரம் நூறு என்றால் திரட்டி விடலாம். இது இலட்சக் கணக்கு விவகாரம். ஆகப் பெரிய அளவில் நிதி தேவை. என்ன செய்யலாம் என ரொம்பவும் யோசிக்க வேண்டிய கட்டம்.

சரி. இருக்கிறதே இருக்கிறது பணப் பட்டுவாடா கருவூலம். அதுதான் வங்கிகள். பணம் தான் அங்கே கொட்டி கிடக்கிறதே. அப்புறம் என்ன. போய் பொறுக்கிக் கொண்டு வர வேண்டிய வேலை தானே. சிரிக்க வேண்டாம். 



இல்லாத ஊரில் இருப்பது எல்லாம் இலுப்பை பூக்கள். கேள்விப்பட்டு இருக்கிறீர்களா. அந்த மாதிரி தான் பிரபாகரனின் நிலைமையும். தொடர்ந்து படியுங்கள்.

ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்லி விடுகிறேன். தமிழீழ விடுதலைப் புலிகள் என்பது உலக வரலாற்றில் ஒரு காலப் பதிவு. ஆக அந்த வரலாற்றை ஒரு வரலாறாகத் தான் பார்க்க வேண்டும். வேறு மாதிரியாக ஓர் இனத்தின் புரட்சித் தனமான பார்வையில் பார்க்க வேண்டாமே.

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியின் போது யூதப் படுகொலை (Holocaust) என்பது ஒரு வரலாற்றுக் காலச் சுவடு. அதை வைத்து பத்துப் பதினைந்து படங்கள் எடுத்து விட்டார்கள். அதை உலகம் எப்படி பார்க்கிறது.

உகாண்டாவில் இடி அமின் என்கிற மனித மிருகம் இடி மின்னலாய் இறங்கி வந்து அந்த நாட்டின் சரித்திரத்தையே மாற்றிப் போட்டது. அதை எப்படி பார்க்கிறார்கள்.

கம்போடியாவில் போல் போட் எனும் சர்வாதிகாரி அங்கே இலட்சக் கணக்கான அப்பாவி ஜீவன்களின் கால் கைகளை வெட்டி வீசியதை மறக்க முடியுமா. அது வரலாறு இல்லையா.



சைபீரியா காடுகளில் ஸ்டாலின் சுட்டுப் பொசுக்கிய வாயில்லா மனித உயிர்களை மறக்க முடியுமா. அது வரலாறு இல்லையா.

1914-இல் ஐந்து இலட்சம் கிரேக்கர்களை ஒட்டோமான் துருக்கிய சர்வாதிகாரி கொன்று போட்டானே... அது வரலாறு இல்லையா.

1994-இல் ஆப்பிரிக்கா ருவாண்டா நாட்டில் பத்து இலட்சம் துட்சி மக்கள் அநியாயமாகச் சாகடிக்கப் பட்டார்களே... அது வரலாறு இல்லையா. இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மட்டும் என்னவோ சிலர் வீட்டுக்கு அழைக்காத விருந்தாளியாகப் பார்க்கிறார்கள். அந்தக் கோணல் பார்வையை விட்டு விட்டு தமிழனத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட விந்துகளாகப் பார்ப்போம். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு. மரியாதை.

விடுதலைப் போராட்டம் என்றால் அப்படி இப்படி என்று கொஞ்சம் முன்னுக்குப் பின் இருக்கவே செய்யும். இஸ்ரேலியர்களுக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் இந்தா எடுத்துக்கோ என்று உதவி செய்தது போல விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ய அப்போது எந்த நாடும் முன்வரவில்லை. 



பாலஸ்தீனத்திற்கு வாடா தம்பி வாடா என்று லெபனான் உதவி செய்தது போல விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. பக்கத்தில் ஒரு துணைக் கண்டம் இருந்தது. ஆனால் அதுவா? எப்படா கொத்தித் திங்கலாம் என்று காத்துக் கொண்டு இருந்த வல்லாறு. அங்கே அந்தக் கதை அப்படி. பாவம் இந்த நிலையில் விடுதலைத் தமிழர்கள் என்னதான் செய்வார்கள் சொல்லுங்கள்.

1978-ஆம் ஆண்டு இறுதி வாக்கில் யாழ்ப்பாணத்துக் கிழக்குப் பகுதியில் இயற்கையும் கோரத் தாண்டவம் ஆடியது. சூறாவளி சுழன்று சுழன்று அடித்த அகோரம். திரிகோணமலையில் இருந்து அருகம் விரிகுடா வரை அட்டகாசமான புயல்காற்று.

ஆயிரம் பேர் உயிர் இழந்தார்கள். பத்து இலட்சம் பேர் பாதிக்கப் பட்டார்கள். இரண்டரை இலட்சம் வீடுகள் பாதிப்பு. 240 பள்ளிக்கூடங்கள் பாதிப்பு. 28 ஆயிரம் தென்னந் தோப்புகள் பதிப்பு. 600 மில்லியன் இலங்கை ரூபாய் சொத்துகள் அழிந்து போயின. அனைத்தும் தமிழர்களின் உடமைகள்.

ஆனால் அரச உதவிகள் எதிர்பார்த்த அளவிற்குப் போய்ச் சேரவில்லை. இது தமிழ் மக்களின் கோபத்தையும் வெறுப்பையும் மேலும் அதிகப் படுத்தியது.

இந்தக் கட்டத்தில் ஒரு வங்கிக் கொள்ளைக்குத் திட்டம் வகுக்கப் படுகிறது. அந்த வகையில் திருநெல்வேலி பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் உள்ள மக்கள் வங்கி கண்ணில் படுகிறது.

வெளியே இருந்து பணம் வங்கிக்கு எடுத்துச் செல்லப்படும் தகவல்கள் வந்து சேர்கின்றன. 



எதிர்பார்த்தபடி பணத்தை ஏற்றிக் கொண்டு போலீஸ் காவலுடன் ஒரு ஜீப் வண்டி வங்கியை நோக்கி வருகிறது. வழக்கம் போல ஜீப் வண்டி வங்கியின் முன்னால் நிறுத்தப் படுகிறது. அதில் இருந்து போலீஸ்காரர் இறங்குகிறார்.

அவர் இறங்கியதும் செல்லக்கிளியின் துப்பாகியில் இருந்து தோட்டாக்கள் பாய்கின்றன. எல்லாமே திட்டமிட்டபடி மின்னல் வேகத்தில் நடந்து முடிகிறது.

போலீஸாரிடம் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இன்னோர் இயந்திரத் துப்பாக்கி வந்து சேர்கிறது. பஸ்தியாம் பிள்ளை குழுவினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட முதலாவது துப்பாக்கியோடு இப்போது இரண்டு இயந்திரத் துப்பாக்கிகள். பணப் பெட்டியை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டவர்கள் சிட்டாகப் பறக்கிறார்கள்.

12 இலட்சத்துக்கும் அதிகமான தொகை. 1978-ஆம் ஆண்டில் பெரிய தொகை.

போராட்டம் சூடு பிடிக்கிறது. கிட்டு என்கிற கிருஷ்ணகுமார்; மாத்தையா என்கிற மகேந்திர ராஜா; மற்றும் பலரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தனர்.

இங்கேயும் கொஞ்சம் பிரச்சினை. இயக்கத்தின் முக்கியமானர்களைக் கேட்காமல் இவர்களைப் பிரபாகரன் கொண்டு வந்ததாகக் கொஞ்சம் கசப்புகள்.

கிட்டு வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவர். பிரபாகரனின் உறவினர். மாத்தையா என்பவர் பருத்தித் துறைக்காரர். இதில் ரகு என்பவர் போலீஸ் துறையில் சேர முயற்சி செய்தவர். தமிழர் என்ற காரணத்தில் இடம் கிடைக்கவில்லை. அதனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். 



ஈழமே போராட்ட பூமியாக மாறிக் கொண்டு இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள்தான் தமிழர்களின் பிரதிநிதிகள்; அவர்கள் தான் தமிழருக்கான உரிமைப் போராளிகள் என ஈழத் தமிழர்கள் உணரத் தொடங்கினார்கள். அப்போது தான் புலிகளின் அமைப்பில் முதல் பிரிவினை ஏற்பட்டது.

போராட்டத்தில் பெரும் பங்கு வகித்தவர் உமாமகேஸ்வரன். இவரைப் பற்றிய ஒரு இடக்கு முடக்கான செய்தி. பிரபாகரனுக்குத் தெரிய வருகிறது. என்ன செய்தி?

கணவனை விவாகரத்து செய்த ஊர்மிளா தேவி எனும் பெண்ணும் உமா மகேஸ்வரனும் காதலிக்கிறார்கள்; கல்யாணம் செய்யாமல் கணவன் - மனைவியாக வாழ்கிறார்கள் எனும் செய்தி. உமா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கியமான புள்ளி.

இந்தச் சமயத்தில் விடுதலைப் புலிகளில் பலர் சென்னை தண்டையார் பேட்டையில் இருந்தார்கள். பிரபாகரனும் சென்னையில் தான் இருந்தார்.

பலருக்கும் உமா மகேஸ்வரன் – ஊர்மிளா மீது சந்தேகங்கள். அதைப் பற்றி பிரபாகரனிடம் சொல்லி இருக்கிறார்கள்.

உமா மகேஸ்வரன் பாலஸ்தீன இராணுவப் பயிற்சிக்குச் செல்கின்ற சமயத்தில் விமான நிலையத்தில் அவர்கள் இருவரும் காதலர்கள் போல நடந்து கொண்டார்கள். அப்போது விமான நிலையத்தில் இருந்த நாகராஜா என்பவர் பிரபாகரனிடம் கூறி இருக்கிறார். அதைப் பிரபாகரன் நம்பவில்லை. 



அப்பேர்ப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இந்த அற்பக் கொசுக்கடி காதல் பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையா என்று கேட்கலாம்.

ஆமாங்க பெரிய பிரச்சினை தான். இந்தப் பிரச்சினை தான் பின்னர் காலத்தில் விஸ்வரூபம் எடுத்தது. பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் சென்னை நடு ரோட்டில் சுட்டுக் கொண்டதற்கும் மூல காரணம். புரியுதுங்களா. அதனால் தான் கொஞ்சம் விரிவாக எழுத வேண்டி வருகிறது.

ஒரு பெண் நினைத்தால் ஓர் ஆணை அணைக்கவும் முடியும். அவனை அப்படியே அழிக்கவும் முடியும். தெரியும் தானே.

உமா மகேஸ்வரனைப் பிரபாகரன் அழைத்து கேட்டு இருக்கிறார். உமா மகேஸ்வரன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதைத் தவிர நான் வேறு ஏதாவது தவறு செய்து இருந்தால் சொல்லுங்கோ என பிரபாகரனையே கேட்டு இருக்கிறார்.

உமா மகேஸ்வரனின் காதல் நடவடிக்கைகளும் அதற்கு அவர் பிரபாகரனிடம் கூறிய பதிலும் சக போராளிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நல்ல ஒரு தலைமைப் பொறுப்பில் இருந்த உமா மகேஸ்வரனின் பதில் அவரின் காதல் உறவை உறுதிப் படுத்துவதாக இருந்தது.




ஒழுக்கமான ஓர் இராணுவ அமைப்பில் இந்த மாதிரியான பாலியல் குற்றச் சாட்டுக்கள் என்பது அனுமதிக்கப்பட முடியாத குற்றமாகக் கருதினார்கள்.

ஒரு சில மணி நேரம் கழித்து ஊர்மிளாவுடன் பேசிவிட்டுத் திரும்பி வருகிறார் உமா மகேஸ்வரன். அனைத்தையும் மறுக்கிறார். தன்மீது திட்டமிட்டுச் சுமத்தப்படும் பழி என்று சொல்கிறார்.

ஒரு சம்பவம். நேரில் பார்த்த  சாட்சிகள் இருக்கிறார்கள். அதையே உமா மகேஸ்வரன்  மறுக்கிறார். அதுவே அவர் மீதான வெறுப்பிற்கு மேலும் தூபம் போட்டது. அந்தக் கட்டத்தில்  அங்கே சென்னையில் இருந்த அனைத்துத் தமிழீழப் போராளிகளும் உமா மகேஸ்வரனுக்குப் பிடிக்காதவர்களாக மாறுகிறார்கள்.

பிரபாகரனுக்கு அதிர்ச்சி கலந்த கோபம். உமா மகேஸ்வரனை நேரில் அழைத்து விசாரிக்கலாம் என முடிவு எடுக்கிறார். விசாரணை முடிந்தது. உமா மகேஸ்வரன் செய்தது தப்பு என்று தெரிய வருகிறது. 



அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் காதலித்தது தப்பு இல்லை. ஆனால் கல்யாணம் செய்து கொள். விட்டு விடுகிறோம் என்றார்கள். உமா மகேஸ்வரன் மறுத்து விட்டார். அதனால் தான் பிரபாகரனுக்குக் கோபம்.

இல்லை என்றால் பிரபாகரன் இந்தப் பிரச்சினையைப் பெரிதாக எடுத்து இருக்க மாட்டார். காதலித்தவளைக் கல்யாணம் செய்ய முடியாது என்று சொன்ன போது தான் பிரபாகரன் கோபமாகிப் போனார்.

பிரபாகரனும் ஏனைய உறுப்பினர்களும் உமா மகேஸ்வரனைப் பதவியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு சொல்கின்றனர். கசப்பான முடிவு. அதன் பின்னர் தான் உமா மகேஸ்வரன் தன் பழி வாங்கும் படலத்தைத் தொடங்குகிறார்.

(தொடரும்)

17 ஜூன் 2019

ஆர்த்தி நிதி

மாறி வரும் உலகில் மாற்றங்கள் மட்டுமே மாறாதவை. ஆனால் அந்த மாறாத மாற்றங்களையே மாற்றி அமைத்து மாற்றங்களைச் செய்து வருகிறார்கள் பெண்கள். என்ன சொல்லப் போகிறீர்கள். ஆண்களுக்கே  சவால் விடும் ஜாம்பவான்களாக மாறி வருகிறார்கள். மறைந்து இருந்து மர்ம ஜாலங்களையும் காட்டி வருகிறார்கள். 


பெண்களைப் பார்த்து ஆண்கள் சலாம் போடுகிற காலம் நெருங்கி விட்டது. அதனால் எதற்கும் இப்போதே நான் முதல் சலாம் போட்டு விடுகிறேன். அனைத்துப் பெண்களுக்கும் சவால்களே சமாளியுங்கள்.

ஆண்களுக்கு இணையாக அனைத்து இடங்களிலும் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னணி வகிக்கின்றார்கள். இப்போது அவர்கள் இல்லாத இடங்களே இல்லை என்று சொல்லலாம். ஆண்களுக்குச் சரிநிகர் சமமாகச் சவால் விட்டுச் சாதனைகளைப் படைத்து வருகிறார்கள்.

சமையல் அறையே கதி என்று கிடந்த காலம் எல்லாம் இப்போது  இல்லை. மலை ஏறி ரொம்ப நாளாகி விட்டது. ஆண்களால் மட்டும் தான் எதையும் செய்ய முடியும் என்கிற ஒரு காலம் அப்போது இருந்தது. பெண்களால் முடியாது என்கிற காலம் இப்போது அமேசான் காட்டிற்குள் ஓடியே போய் ஒளிந்து கொண்டதாம். 



இப்போது பாருங்கள். எந்த இடத்தில் தான் பெண்கள் இல்லை. எல்லா இடங்களிலும் அவர்களின் அல்லி தர்பார்கள். தப்பாக நினைக்க வேண்டாம். அந்த அளவிற்கு உயர்ந்து போய் உச்சம் பார்க்கின்றார்கள். அதே நிலையில் ஆண்களே அசந்து போகும் அளவிற்கு ஒரு கதை வருகிறது. படியுங்கள்.

பாரம் தூக்குதல், பளுதூக்குதல், இரும்பை வளைத்தல்; இப்படி இரும்பு சம்பந்தமான விசயங்கள் எல்லாம் அப்போதைக்கு ஆணாதிக்கத்தின் எழுதப் படாத சாசனங்கள். அவற்றில் பெண்கள் என்பவர்கள் கைதட்டித் தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மைகள். 

பெண்களுக்கும் பளு தூக்குதலுக்கும் சம்பந்தம் இல்லை என்று நக்கல் அடித்தவர்களுக்கு விக்கல் வரச் செய்து இருக்கிறார் ஆர்த்தி நிதி. அழகிய அமெரிக்கத் தமிழ்ப் பெண்மணி. 



பளுதூக்குதல் போட்டியில் பெண்களும் பங்கேற்கலாம். அதில் பதக்கத்தையும் வெல்லலாம் என்பதை உணர்த்திய காட்டி இருக்கிறார் ஆர்த்தி நிதி.

உலக அளவிலான பவர் லிப்ட்டிங் (Power Lifting) எனும் பளுதூக்குதல் திறன் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி (வயது 23). வெள்ளிப் பதக்கம் பெற்று உலகச் சாதனை செய்து இருக்கிறார்.

சுவீடன் நாட்டில் இந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி. அங்கே அந்தச் சாதனை செய்யப்பட்டு உள்ளது.

’பவர் லிப்ட்டிங் பளுதூக்குதல்’ என்றால் பளு தூக்குத் திறன் போட்டி. மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமான விளையாட்டு. இந்தப் போட்டி குந்துகை, இருக்கை, நெம்புத் தூக்கல் (Squat, Bench, Deadlift) ஆகிய மூன்று கட்டங்களைக் கொண்டது. 



இந்தப் பளுதூக்குதல் போட்டியில் ஒட்டு மொத்தமாக அதிக எடையைத் தூக்குபவர் வெற்றியாளராக அறிவிக்கப் படுகிறார்.

ஐ.பி.எப். (IPF) எனப்படும் (International Powerlifting Federation) எனும்  கழகம்  உலகப் பளுதூக்குதல் திறன் கழகம் (IPF Classic Bench Press World Championship) எனும் பெயரில் ஒவ்வோர் ஆண்டும் போட்டிகளை நடத்தி வருகிறது.

இந்தப் போட்டி 1971-ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடான லக்சம்பர்க் நாட்டில் தோற்றுவிக்கப் பட்டது. விரைவில் ஒலிம்பிக் போட்டியில் இணைக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு அந்தப் போட்டி சுவீடன் நாட்டில் நடைபெற்று வருகிறது. 20-22 வயதிற்கும் உட்பட்ட 63 கிலோ எடை உள்ள பெண்களுக்கான பிரிவில், அமெரிக்காவின் சார்பில் ஆர்த்தி நிதி போட்டியிட்டார். ஒட்டு மொத்தமாக 425 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்று இருக்கிறார்.



இவர் மற்றொரு சாதனையையும் செய்து உள்ளார். இந்தத் தூக்குத் திறன் போட்டியில் குந்துகைப் பிரிவில் உலகச் சாதனை செய்து மேலும் ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்று இருக்கிறார்.

ஆர்த்தியின் தந்தை கருணாநிதி தமிழகத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர்  1987-ஆம் ஆண்டு முனைவர் பட்ட ஆய்வுக்காக அமெரிக்காவிற்குச் சென்றார். அங்கே 1990-ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த சாந்தி என்பவரைத் திருமணம் செய்தார்.

இவர்களுக்கு 1996-ஆம் ஆண்டில் ஆர்த்தி நிதி பிறந்தார். அமெரிக்காவில் தான். இவருக்கு இரண்டு வயது மூத்த அண்ணன் ஒருவர் இருக்கிறார். குடும்பத்தில் இரண்டே இரண்டு பிள்ளைகள்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பளு தூக்குத் திறன் போட்டிகளுக்காகப் பயிற்சி செய்து வந்தார். இவ்வளவு சீக்கிரத்தில் அமெரிக்காவுக்கு ஒரு பதக்கத்தை வெல்வேன் என்று நினைக்கவில்லை என்று சொல்கிறார் ஆர்த்தி. 



கடுமையான ஆனால் விடாப்பிடியான பயிற்சிகள். அவைதான் அவரின் கனவை; அவரின் இலட்சயத்தை நிறைவேற்றி உள்ளன.

அவர் பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இப்படிச் சொல்கிறார்.

அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்த இந்தியர்களின் குழந்தைகள் பெரும்பாலோர் கல்வியில் சாதனை புரிவது சாதாரண விசயமாக இருக்கிறது. விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பது குறைவு.

இந்தியர்கள் என்றாலே கல்விக்கு முதலிடம் கொடுத்து அதன் மூலம் பட்டறிவிற்கு முக்கியத்துவம் வழங்குபவர்கள். அப்படிப்பட்ட ஒரு நிலைக்குப் புலம்பெயர்ந்த பெற்றோர்கள் தான் முக்கியக் காரணம். படிக்கணும் படிக்கணும். படித்தால் தான் முன்னுக்கு வர முடியும் என்று படிப்பிலேயே அதீதக் கவனம் செலுத்துகிறார்கள். 



ஆனால் கல்வியைப் போன்று விளையாட்டுத் துறையிலும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் சாதிக்க முடியும் என்பதை மறந்து விடுகிறார்கள். புலம் பெயர்ந்த தமிழர்களால் சாதித்துக் காட்ட முடியும் என்பதை உணரத் தவறி விடுகிறார்கள்.

விளையாட்டுத் துறையிலும் புகழ்பெற முடியும் எனும் எண்ணத்தை வளர்க்க வேண்டியது அவசியம். கல்வியை விட்டால் நடனம். இந்த எண்ணத்தில் இருந்து அமெரிக்க இந்தியர்கள் வெளியே வர வேண்டும் என்று கூறுகிறார் ஆர்த்தி நிதி.

இந்த மாதிரி பளு தூக்கும் போட்டிகளில் தமிழ்ப் பெண்கள் பங்கு பெறுவதைத் தமிழர்களும் சரி; பொதுவாக இந்தியர்களும் சரி; விரும்புவது இல்லை.

இருப்பினும் ஆர்த்தியின் பெற்றோர்கள் சமூக அழுத்தங்களைத் தாண்டி வேறு கோணத்தில் பயணித்து இருக்கிறார்கள். சொல்லப் போனால் மனரீதியான தடைகளை மீறி உள்ளனர். இப்படிப்பட்ட பெற்றோர் தான் இப்போதைக்கு நம் தமிழ்ச் சமூகத்திற்குத் தேவை.



ஆர்த்தியின் பெற்றோர் அளித்த ஊக்கமே அவரின் வெற்றிக்குத் தலையாய காரணம். இவர் அனைத்துலகப் போட்டிக்குத் தயாரான போது தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் கிடைத்து விட்டார்கள். அதுவே பிளஸ் பாயிண்ட்.

அவர்கள் மூலம் நல்ல தரம் வாய்ந்த பயிற்சிகள் கிடைத்து உள்ளன. அவையே அவரின் வெற்றிக்கு ஒரு காரணம்.

ஆர்த்தியின் தாயார் சாந்தி இப்படிச் சொல்கிறார். பள்ளிக் காலத்தில் பரத நாட்டியத்தில் ஆர்த்திக்கு மிகுந்த ஈடுபாடு. கல்லூரியில் சேர்ந்ததும் பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபடப் போவதாக கூறினாள். அதை மனரீதியாக எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

என்றாலும் மகளின் ஆர்வத்திற்கு தடைபோடக் கூடாது என்கிற ஒரே காரணத்துக்காக நானும் என் கணவரும் அமைதியாகிப் போனோம். தொடக்கத்தில் இருந்தே ஆர்த்திக்கு முழு ஆதரவு அளித்து வருகிறோம்.

இந்த நிலையில் அனைத்துலக அளவில் அமெரிக்காவின் தேசிய அணிக்காகப் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று ஆர்த்தியின் தாயார் கூறினார்.

அமெரிக்காவிலேயே பரத நாட்டியம் கற்றுக் கொண்டு அங்கேயே அரங்கேற்றம் செய்தவர் ஆர்த்தி. அப்படிப் பட்டவர்  எப்படி பரதநாட்டியத்தில் இருந்து பவர் லிப்ட்டிங் இரும்பு விசயத்திற்குள் நுழைந்தார்.

அதற்கு ஆர்த்தி சொல்கிறார்: மேல்நிலை பள்ளிக்கல்வி வரை பரதநாட்டியம் பயின்றேன்.  இடையில் ஓராண்டிற்கு அதை நிறுத்தினேன். உடல் எடை அதிகமானது. அதைத் தொடர்ந்து, உடல் எடையைக் குறைப்பதற்காக உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்றேன். 



உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றி அமைத்தேன். உடற்கட்டில் அதிகக் கவனம் செலுத்தினேன். அதைத் தொடர்ந்து பயிற்சியாளர்கள், நண்பர்கள் வழங்கிய அறிவுரையின்படி பவர்லிப்ட்டிங்கில் ஈடுபடத் தொடங்கினேன் என்றார்.

அமெரிக்கா முழுவதும் நிறவெறி இருக்கிறது என்று சொல்ல முடியாது. அதே சமயத்தில் நிறத்தின் அடிப்படையில் ஒருவரை தனிமைப் படுத்தும், வசைபாடும் மற்றும் தாக்குதல் தொடுக்கும் சம்பவங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், நான் இதுவரை நேரடியாக இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டது இல்லை. எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் தாண்டி சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் என்னை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது என்கிறார் ஆர்த்தி.

ஆர்த்தி பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்கா. என்றாலும் தமிழ்நாட்டை நான் மறக்கவில்லை. நான் தமிழராக வாழ்வதில் பெருமை கொள்கிறேன் என்று ஆர்த்தி பெருமைப் படுகிறார்.

நான் பள்ளியில் படித்த போது தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளை எடுத்து செல்வேன். அப்போது என் நண்பர்கள் கேலி செய்தது உண்டு. ஆனால் நான் ஒரு போதும் அது குறித்து கவலைப்பட்டது இல்லை. இப்போதுகூட எனது உடற்கட்டைப் பராமரிக்கும் உணவு வகைகளில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் தொடர்கின்றன என்று கூறுகிறார்.

புலம்பெயர்ந்து அமெரிக்கா போனாலும் வீட்டில் தமிழில் தான் பேசிக் கொள்கிறார்கள்.

ஆர்த்தி சொல்கிறார். இந்தச் சமூகம் நினைப்பதைப் போன்று பெண்கள் வலுவற்றவர்கள் அல்ல. வாய்ப்பு கிடைத்தால் எந்தப் பெண்ணாலும் சாதிக்க முடியும்.

தனக்கு மிகவும் பிடித்த விசயத்தைச் செய்ய பெண்களுக்குக் குடும்பத்தினர் ஆதரவு அளிக்க வேண்டும். நினைத்ததை செய்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று கூறும் ஆர்த்தி பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணிபுரிகிறார். 



ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கப் பதக்கம் வெல்வதே தன்னுடைய நீண்டகால இலட்சியம் என்று ஆர்த்தி கூறுகிறார். வாழ்த்துகிறோம் மகளே.

பெண்கள் முன்னால் ஆண்கள் புன்னகைத்து நிற்க வேண்டிய கட்டத்தில் உலக மாறுதல்கள் மாறிக் கொண்டே போகின்றன. அந்த மாறுதல்களில் ஆண்களும் பெண்களும் சமம் என்கிற ஓர் அணி சாரா மந்திரம் எல்லோருடைய வீட்டு வாசல் கதவுகளையும் தட்டிக் கொண்டே போகின்றது. ஜன்னலைத் திறந்து பாருங்கள். உங்களுக்கும் தெரியும்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

ஆர்த்தியின் யூடியூப் காணொளி:

https://www.youtube.com/watch?v=XkhSab5_Zwk

16 ஜூன் 2019

தந்தையர் தின வரலாறு

தாயும் தந்தையும் கண்கண்ட தெய்வங்கள். குழந்தையைக் கருவில் சுமந்து பெற்று எடுப்பவர் தாயார். ஆனால் அதே அந்தக் குழந்தையை நெஞ்சில் சுமந்து வாழ்ந்து கொண்டு இருப்பவர் ஒரு தந்தையார். ஒரு தாயின் அன்பிற்கு நிகரானது ஒரு தந்தையின் பாசம்.  


தந்தையர்க்கு மரியாதையும் நன்றியும் சொல்லும் வகையில் தந்தையர் தினம் ஆண்டு தோறும் ஜூன் 3-வது ஞாயிற்றுக்கிழமை உலக தந்தையர் தினமாகப் கொண்டாடப் படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைச் செய்யவும்; அதே சமயத்தில் தந்தையர்களுக்குத் தகுந்த மரியாதை செய்யவும் தந்தையர் தினம் தொடக்கி வைக்கப் பட்டது.

தந்தையர்களுக்கு மட்டும் அல்ல முன்னோர்களின் நினைவு விழாவாகவும் அந்த நாளைக் கொண்டாடலாம் எனும் முன்னெடுப்பும் முன் வைக்கப்பட்டது.



அதற்கு முன்னர்... மனதில் பட்டது. குழந்தையின் ஆரோக்கியம் மீது தாய் கவனம் செலுத்துகிறார். அதே போல அந்தக் குழந்தையின் முன்னேற்றத்துக்காக ஆயுள் முழுவதும் உழைக்கிறார் தந்தை.

அன்னையிடம் அன்பை  வாங்கலாம்; தந்தையிடம் அறிவை வாங்கலாம் எனும் பாடல் வரிகள் போதும். அந்த வரிகள் தாய் தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.

ஒளவையார் சொல்லாத விசயம் இல்லை. அவர் ஆத்திச்சுவடியில் சொன்னவை  அனைத்தும் முத்து முத்தானவை. அனைத்தும் மண்ணில் பொதிந்த வைர மணிகள். 



அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

தாயின் சிறந்தது ஒரு கோயிலும் இல்லை.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

தந்தையர் தினம் என்பது 1910-ஆம் ஆண்டில் இருந்து கொண்டாடப் படுகிறது. அதற்குக் காரணமாக இருந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டோட் (Sonora Louise Smart Dodd) என்கிற பெண்மணி.

இந்தத் தந்தையர் தினம் அப்படி ஒன்றும் சுலபத்தில் கிடைக்கவில்லை. பற்பல போராட்டங்கள். 33 ஆண்டுகள் போராட்டங்கள் செய்து இருக்கிறார்கள்.

1882-ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவ வீரரான வில்லியன் ஜாக்சன் ஸ்மார்ட் டோட் (William Jackson Smart) என்பவருக்கு மகளாக பிறந்தவர் சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டோட். ஒரே மகள். ஐந்து ஆண் பிள்ளைகள்.



இவர் 16 வயதை அடையும் போது அவரின் தாயார் எல்லன் என்பவர் தன் ஆறாவது பிரசவத்தின் போது மரணம் அடைந்தார். அவருடைய தந்தையார் மறுமணம் செய்து கொள்ளவில்லை. தன் ஆறு பிள்ளைகளையும் தாயாகவும் தகப்பனாகவும் நின்று வளர்த்து எடுத்தார்.

தன் தந்தையின் அந்த அர்ப்பணிப்பு உணர்வுகளை மகள் சொனாரா மறக்கவில்லை. விழிப்பு அடையச் செய்தன. தன் தந்தைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப் பட்டார்.

இந்த நிலையில் 1909-ஆம் ஆண்டு அனைத்துல அன்னையர் தினக் கொண்டாட்டங்களுக்கு அமெரிக்காவில் அங்கீகாரம் அளிக்கப் பட்டது.

அதை அறிந்த சொனாரா தன் தந்தையின் தியாக உணர்வுகள் என்பது அன்னையர்களின் தியாகத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. அவருக்கும் மரியாதை செய்ய வேண்டும் என வாதிட்டார். 



தன் தந்தையின் பிறந்த நாளை தந்தையர் தினமாகக் கொண்டாட வேண்டும் என தேவாலயத்தில் (Knox Presbyterian Church) முதன் முதலாக முன் மொழிந்தார்.

அனைத்துத் தந்தையர்களையும் கெளரவப் படுத்த வேண்டும் என்பது அவரின் விடாப்பிடியான இலட்சியம். தலியாய ஆசை.

1910  ஜூன் 19-ஆம் தேதி அதே அந்தத் தேவாலயத்தில் தன் தந்தைக்காக ஒரு புகழுரைக்கும் ஏற்பாடு செய்தார்.

பாதிரியார்கள் மறுத்து விட்டார்கள். ஏன் என்றால் அந்தக் கட்டத்தில் பாதிரியார்கள் தினம் எனும் புனிதநாள் புகழ்பெற்று விளங்கியது. விட்டால் பாதிரியார்கள் தினம் பாதிக்கப்படும் என்று நினைத்தார்கள். 



பல ஆண்டுகள் போராட்டம். சொனாராவும் விடவில்லை. Father's Day Council எனும் ஓர் அமைப்பை உருவாக்கி ஆதரவு திரட்டினார்.

தந்தையர் தினம் அதிகார்வப்பூர்வ நாளாக அறிவிக்கப் படுவதற்குப் பல ஆண்டுகள் பிடித்தது. இருந்த போதும் YWCA-இன் ஆதரவினால் சிறிய அளவில் கொண்டாடப்பட்டது.

ஒரு பக்கம் நாடு தழுவிய நிலையில் அன்னையர் தினக் கொண்டாட்டம். இன்னொரு பக்கம் கிராமப்புற அளவில் தந்தையர் தினத்தின் குதூகலக் கொண்டாடட்டம். சரியான போட்டி.

இதில் இளம் பெண்கள் தான் அதிகமாக ஆர்வம் காட்டினார்கள். வயது முதிர்ந்த பெண்கள் எட்டிப் பார்க்கவில்லை. பழசு பெரிசுகளைக் கிழவர்கள் என்று நினைத்து ஒதுக்கி வைத்து இருக்கலாம். சொல்ல முடியாது.

இப்போது மட்டும் என்னவாம். அன்னைமார்கள் பாட்டிமார்களின் இன ஒதுக்கல் இருக்கத் தானே செய்கிறது.  இருந்தாலும் சின்னப் பெண்களுக்கு உற்சாகம். அப்பாமார்களை விடுவார்களா.



அம்மாவுக்கு நிகரனாவர் அப்பா தான் என போர்க் கொடி தூக்கினார்கள். பொதுவாகவே பெண்பிள்ளைகளுக்கு அப்பா என்றால் உயிர். தெரிந்த விசயம். ஆக பெண்பிள்ளைகள் விடுவார்களா.

உள்ளூர் செய்தித் தாட்களில் தந்தையர் தினத்திற்கு எதிர்ப்புகள். அதோடு விட்டால் பரவாயில்லை. நகைச்சுவை, பழிப்பு, பகடி, ஏளனம் கொண்ட கார்டூன்கள் வெளிவந்தன.

1913-ஆம் ஆண்டில் தந்தைய தின மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் கால்வின் கூலிட்ஜ். இவர் 1924-ஆம் ஆண்டில் இந்த மசோதாவிற்கு ஆதரவு அளித்தார்.

மேலும் இதன் விடுமுறையை சட்டமாக்குவதற்காக ஒரு தேசியச் செயற்குழு 1930-ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது. அது அப்படியே கிடப்பில் கிடந்தது.

அந்தச் சமயத்தில் சொனாரா படிக்கப் போய் விட்டார். அதனால் தந்தையர் தின முன்னெடுப்பு மங்கிப் போனது. அவர் படித்து வந்ததும் மறுபடியும் தந்தையர் தினப் போராட்டத்தில் களம் இறங்கினார்.

1966-ஆம் ஆண்டில் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் தந்தையர் தினப் பொது விடுமுறைக்கான ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டார். இருந்தாலும் தூங்கி வழிந்தது.

பின்னர் 1972-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான நிக்சன் தான் முழுமையாகக் களம் இறங்கினார். தந்தையர் தினத்தைப் பொது விடுமுறையாக அங்கீகரித்தார். 33 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் தந்தையர் தினம் அதிகாரப் பூர்வமானது.

தந்தையர் தினத்தன்று அமெரிக்க கொடிகள் முழுக் கம்பத்தில் பறக்கவிடவும் கட்டளை போடப் பட்டது.

1909-ஆம் ஆண்டு சொனாரா எடுத்த முயற்சி  இன்று நம் தந்தைகளை நினைவு கூர வழி செய்து உள்ளது. அன்றில் இருந்து அனைத்துலகத் தந்தையர் தினம் பீடுநடை போடுகிறது, ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப் படுகிறது.

1974-ஆம் ஆண்டு சொனாரா அமெரிக்க உலக வணிக மையத்தினால் (Expo ’74, the World’s Fair) சிறப்பு செய்யப் பட்டார். நான்கு ஆண்டுகள் கழித்து தன்னுடைய 96-ஆவது வயதில் சொனாரா காலமானார். உலகத் தந்தையார்களைக் கௌரவிக்கப் போராடிய அவரை வாழ்த்துவோம். நினைவு கூர்வோம்.

இன்றைய பரபரப்பான உலகில், குடும்பத்தின் வளர்ச்சிக்காக உழைக்க ஓடிக் கொண்டு இருக்கும் தந்தைமார்களில் எத்தனையோ பேர், குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் உழைத்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்களையும் மறக்க வேண்டாம்.

அப்பா என்பவர் ஒரு பெண்ணின் முதல் காதலர். கடைசி வரையில் அவரே தான் முதல் காவலர்.
 உலகில் உள்ள அனைத்துத் தந்தையர்களுக்கும் இந்தக் கட்டுரை என்னுடைய காணிக்கை.

-மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/Sonora_Smart_Dodd -

Sonora Smart Dodd (February 18, 1882 – March 22, 1978) was the daughter of American Civil War veteran William Jackson Smart and was responsible for the founding of Father's Day.

2. https://www.freemalaysiatoday.com/category/leisure/2019/06/16/fathers-day-more-than-60-years-in-the-making/

Mothers are where fathers come from, but where does Father’s Day come from?

3. Emily, Jan (June 20, 2015). "For Father's Day. National Geographic.

15 ஜூன் 2019

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 12

கனகரத்தினம் இலங்கைத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரபலமான அரசியல்வாதி. தமிழர்களின் துரோகி என யாழ்ப்பாணத்துத் தமிழர்களால் பட்டயம் கட்டப் பட்டவர். அவரே புலிகளின் அடுத்த இலக்கு. 


அந்த வகையில் கொள்ளுப்பிட்டியா எனும் இடத்தில் கனகரத்தினம் சுடப் படுகிறார். மூன்று குண்டுகள் பாய்கின்றன. அவருக்கு நல்ல நேரம். காலன் கதவைத் தட்டவில்லை. மயங்கிய நிலையில் சாலையில் சரிந்து போகிறார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள்.

அவசர சிகிச்சை மூலமாகக் துப்பாக்கி ரவைகள் அகற்றப் பட்டன. கனகரத்தினம் உயிர் பிழைத்துக் கொண்டார்.

தன்னைச் சுட்டது ஒரு கட்டைப் பையன். பக்கத்தில் ஒரு நெட்டைப் பையன் இருந்தான் என போலீஸ் வாக்குமூலத்தில் கனகரத்தினம் சொல்கிறார். யார் இந்தக் கட்டைப் பையன். யார் இந்த நெட்டைப் பையன். சிங்களத்து மேலிடம் கொழும்பு மருத்துவமனைச் சுவர்களில் மண்டையைப் போட்டு முட்டி மோதிக் கொள்கிறது.

இங்கே கட்டைப் பையன் என்றால் பிரபாகரன். நெட்டைப் பையன் என்றால் உமா மகேஸ்வரன். புரியுதுங்களா.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கனகரத்தினம் அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்தார். பழைய தெம்பு இல்லை. அவரால் அதிக காலம் உயிர் வாழ முடியவில்லை. மூன்று மாதங்கள் கழித்து இறந்து போனார். அப்புறம் என்ன. தமிழர்களுக்குச் செஞ்ச துரோகம் சும்மா விடுமா.

இந்த நிகழ்ச்சி சிங்கள அரசைக் கொதிப்பு அடையச் செய்தது. கோபம் கண்களை மறைத்தது.  இதற்கு முன்னர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப் பட்டார். இப்போது கனகரத்தினம்.

இந்த இருவருமே சிங்களவர்களின் ஆத்ம நண்பர்கள். ஆதரவான யாழ்ப்பாணத்துத் தோழர்கள். இந்த இரு இறப்புகளும் சிங்கள அரசை சற்றே ஆட்டம் காணச் செய்தது.



கனகரத்தினத்தைக் கொலை செய்ய முயற்சி செய்தவர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். முடிந்தால் சுட்டுக் கொல்லுங்கள் என சிங்கள அரசு அதிரடியான கட்டளை போட்டது.

அதற்காக ஒரு தனிப்படையே யாழ்ப்பாணத்தில் உருவாக்கப் பட்டது. கட்டைப் பையனையும் நெட்டைப் பையனையும் விட்டு வைக்கக் கூடாது. ஆபத்து என்று தண்டோரா போட்டது.

அந்தத் தனிப்படைக்குத் தலைமை அதிகாரி பாஸ்தியம் பிள்ளை. ஏற்கனவே கொலை செய்யப்பட்ட அல்பிரட் துரையப்பா வழக்கில் பிரபாகரனை மோப்பம் பிடித்து அலைந்த அதே பாஸ்தியம் பிள்ளை தான்.

இவர் தமிழர்களுக்கு எதிராக வேலை செய்கிறார் என்று விடுதலைப் புலிகள் அவர் மீது  ஏற்கனவே கொலை வெறியில் இருந்தார்கள். மாட்டினாய் மவனே மாறு கை மாறு கால் தான் என்று சீறிக் கொண்டு இருந்தார்கள்.

மீண்டும் அவரா... என்ன செய்வது. எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதியே செல்லும். கட்டைப் பையனும் நெட்டைப் பையனும் மன்னார் காட்டில் இருப்பதாகப் பாஸ்தியம் பிள்ளைக்குச் செய்தி வருகிறது. உடனடியாகக் களம் இறங்குகிறார்.

1978 ஏப்ரல் 7-ஆம் திகதி. தேதியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். யாழ்ப்பாணத்துப் போலீஸ் அதிகாரிகள் பாஸ்தியம் பிள்ளை; பாலசிங்கம்; பேரம்பலம். இவர்களுடன் ஜீப் வண்டி ஓட்டுநர். நால்வரும் மன்னார் நோக்கிப் பயணிக்கிறார்கள்.

மன்னார் காட்டை அடைந்ததும் ஜீப் வண்டியை வெளியில் நிறுத்தி விட்டு காட்டுக்குள் போகிறார்கள்.

அந்தச் சமயத்தில் செல்லக்கிளி, உமா மகேஸ்வரன், நாகராஜா ஆகிய மூவரும் அந்த மன்னார் காட்டுக்குள் தான் இருந்தார்கள். அப்போது பிரபாகரன்  அங்கு இல்லை. வவுனியா காட்டில் இருந்தார்.



விடுதலைப் புள்ளிகள் பெரும்பாலும் காட்டுக்குள் ஓர் உயரமான மரத்தில் ஒரு சிறிய கண்காணிப்புக் கோபுரத்தைக் கட்டி இருப்பார்கள். அன்றைக்கும் அப்படித்தான். ஒரு மரத்தின் மீது சிறியதாகக் கட்டப்பட்டு இருந்த கண்கானிப்புக் கோபுரத்தில் உமா மகேஸ்வரனும் நாகராஜாவும் இருந்தனர்.

இவர்கள் பாஸ்தியம் பிள்ளையையும் இதர போலீஸ்காரர்களையும் பார்த்து விட்டார்கள். உடனே காட்டு முகாமில் இருந்த செல்லக்கிளிக்குச் செய்தி போகிறது.

செய்தி கேட்டுச் செல்லக்கிளி பதற்றம் அடையவில்லை. சரி வருகிறவர்கள் வரட்டும் என பேசாமல் காத்து நிற்கிறார்.

போலீஸ்காரர்கள் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் வந்து கொண்டு இருக்கிறார்கள். அதைப் பார்த்ததும் செல்லக்கிளியும் தயாராகி விட்டார். அப்போது தன்னோடு இருந்த இரு மெய்க்காவலர்களை அழைத்தார்.

’இந்தா பாருங்க... போலீஸ்காரர்கள் வருகிறார்கள். நீங்கள் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவர்கள் வரும் பாதையிலேயே போங்கள். நிச்சயம் அவர்கள் உங்களை மறித்து ஏதாவது கேட்பார்கள். பயப்பட வேண்டாம். நான் இருக்கும் இடத்திற்கே கூட்டி வாருங்கள்’ என்று செல்லக்கிளி சொல்கிறார்.

செல்லக்கிளி சொன்னது மாதிரியே மெய்க்காவலர்கள் இருவரும் நடந்து போகிறார்கள். அவர்களை வழி மறிக்கிறார் பாஸ்தியம் பிள்ளை. இரண்டு மூன்று கேள்விகள் கேட்கிறார். தூரத்தில் ஒரு குடிசை. அந்தக் குடிசையைப் போய்ப் பார்க்கலாம் என அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு வருகிறார்.

அங்கே செல்லக்கிளி அமைதியின் வடிவமாய் நின்று கொண்டு இருந்தார். குடிசையைச் சல்லடை போட்டுச் சோதிக்கிறார்கள். அப்போது அங்கே ஆறு இளைஞர்கள் இருந்தார்கள். அவர்களைப் பார்த்து உங்களில் யார் பிரபாகரன் என்று உருட்டி மிரட்டிக் கேட்கிறார். சரியான பதில் கிடைக்கவில்லை.

பின்னர் கொஞ்ச நேரம் கழித்து “சரி சரி பிரச்சினை ஒன்னும் இல்ல. சும்மா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கையெழுத்து வச்சிட்டு போங்க” என சொல்கிறார்.

போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனால் எப்படிப்பட்ட விருந்தோம்பல் கிடைக்கும்; எப்படிப்பட்ட ராஜ மரியாதை நடக்கும் என்பது எல்லாம் செல்லக்கிளிக்கு நன்றாகவே தெரியும்.



சற்று சுதாகரித்துக் கொண்ட செல்லக்கிளி, அதற்கு என்னங்க தலைவரே. நல்லா போகலாமே... போறதுக்கு முன்னாடி சூடா ஒரு காபி குடிச்சிட்டு போகலாம் தலைவரே என்கிறார்.

பாஸ்தியம் பிள்ளையும் சரி சரி கொண்டு வாங்கோ... குடிச்சிட்டே கிளம்பலாம் என சொல்லி காபி வரும் வரை காத்து இருக்கிறார்,

ஐந்து நிமிடத்தில் காப்பி தயார். மிகுந்த மரியாதையுடன் பாஸ்தியம் பிள்ளைக்கு ஒரு கோப்பையில் காப்பியை வழங்குகிறார் செல்லக்கிளி. பாஸ்தியம் பிள்ளையும் கையில் இருந்த இயந்திரத் துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு காப்பியை வாங்குகிறார். அம்புட்டுத் தான்.

கண் இமைக்கும் நேரம் தான். பாஸ்தியம் பிள்ளை காப்பியை வாங்கி வாயில் வைக்கவில்லை. அதற்குள் கீழே வைக்கப்பட்ட இயந்திரத் துப்பாக்கியைப் பாய்ந்து எடுக்கிறார் செல்லக்கிளி.

அடுத்த சில விநாடிகளில் இரண்டு குண்டுகள் பாஸ்தியம் பிள்ளையின் மார்பில் பாய்கின்றன. மற்ற போலீஸ்காரர்கள் தடுக்க வருகிறார்கள். அவர்களையும் போட்டுத் தள்ளுகிறார் செல்லக்கிளி.

பாஸ்தியம் பிள்ளை, பாலசிங்கம், பேரம்பலம், ஜீப் டிரைவர் நால்வரும் அதே இடத்தில் உயிரை விடுகிறார்கள். சுட்டுக் கொல்லப்பட்ட நால்வரையும் அருகில் இருந்த கிணற்றில் வீசி விடுகிறார்கள்.

அதன் பின்னர் போராளிகள் அனைவரும் போலீஸ்காரர்கள் கொண்டு வந்த ஜீப் வண்டியிலேயே ஏறி கிளிநொச்சி நோக்கிச் செல்கிறார்கள். கிளிநொச்சியை அடைந்ததும் போலீஸ்காரர்களின் ஜீப் வண்டியை பெட்ரோல் ஊற்றி எரித்து விடுகிறார்கள். அப்புறம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையாகப் பிரிந்து போய் விடுகிறார்கள்.

அதன் பின்னர் இலங்கை முழுவதும் போலீஸ்காரர்கள் கொலைகளைப் பற்றிய பேச்சு தான்.

ல நாட்களில் உமா மகேஸ்வரன்; செல்லக்கிளி இருவரும் பிரபாகரனை வவுனியா காட்டுக்குள் சந்திக்கிறார்கள். செல்லக்கிளியைப் பார்த்ததும் பிரபாகரன் ஓடோடி வந்து கட்டி அணைத்துக் கொள்கிறார்.

“தமிழர்களின் வரலாற்றில் காலா காலத்திற்கும் நினைவில் நிற்கும் ஒரு வேலையை செய்து இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். இத்தனைக் காலமும் நாட்டுத் துப்பாக்கியை வைத்துக் கொண்டு பயிற்சிகள் எடுத்த புலிகளுக்குப் புதிய இயந்திரத் துப்பாக்கிகள் கிடைத்ததில் பெரும்  மகிழ்ச்சி.

அப்போது உமா மகேஸ்வரன் ஒரு கருத்தை முன்வைக்கிறார்.

“இறந்து போன துரோகிகளைப் பற்றி மக்களுக்குச் சொல்ல வேண்டும்” என்று சொல்கிறார். 



பிரபாகரனுக்கும் சரி என படுகிறது. இதன் படியே துரோகிகளின் பெயர்களைப் பட்டியலாகத் தயாரித்து கொழும்புவிற்குக் கொண்டு செல்கிறார் உமா மகேஸ்வரன். அப்போது தான் ஒரு பெண்ணைச் சந்திக்கிறார் உமா மகேஸ்வரன். திருமணமாகி விவாகரத்தான ஊர்மிளா எனும் பெண். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தியது இந்தப் பெண்மணிதான். பின்னர் தெரிந்து கொள்வோம்.

தாங்கள் வஞ்சம் தீர்த்த பதினொரு பேரின் பெயர்களையும் தட்டச்சு செய்து அதன் கீழே புலிகள் என பெரிய எழுத்தில் எழுதுமாறு கேட்டார். அதன் படியே துரோகிகள் என ஒரு கடிதம் உருவானது. அந்த கடிதம் பின்வருமாறு இருந்தது.

“யாழ் நகர் மேயர் ஆல்பிரட் துரையப்பா தொடங்கி பாஸ்தியம் பிள்ளை வரை மொத்தம் 11 பேரை விடுதலைப் புலிகளாகிய நாங்கள் தான் கொன்றோம். புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயரில் இயங்கி வந்த நாங்கள், இப்போது தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் இயங்கி வருகிறோம்.

இந்தக் கொலைகளுக்கு எந்த ஒரு தனி நபரோ வேறு எந்த ஓர் இயக்கமோ பொறுப்பு ஏற்க முடியாது. அவ்வாறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்படி ஓர் அதிகாரப் பூர்வமான கடிதம் அச்சிடப்பட்டு இலங்கை அதிபர்; இலங்கைப் பிரதமர்; அனைத்து இலங்கைப் பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி வைக்கப் பட்டது.

இலங்கை அரசாங்கத்திற்கும் சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் இடி விழுந்தது போல கிறுகிறுப்பு. அதைத் தொடர்ந்து இலங்கையின் தெற்கு பகுதிகள் முழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. இலங்கை அரசுக்குப் பல இடங்களில் இருந்தும் அழுத்தங்கள்.

விழித்துக் கொண்ட இலங்கை அரசாங்கம் தேடப் படுவோர் பட்டியலை வெளியிட்டது. அதில் 38 பெயர்கள். தலைவர் பிரபாகரன் பெயரும் இடம் பெற்று இருந்தது.

அதில் பெரும்பாலானோர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள். தமிழர்கள் சிலர் அவர்களாகவே முன் வந்து சரண் அடைந்தார்கள். இருந்தாலும் மிக முக்கியமான விடுதலைப் புலிகள் அகப்படவில்லை.

இது இப்படி ஒரு புறம் இருக்க அடுத்து ஓர் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க பிரபாகரன் முடிவு செய்கிறார். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நடந்த கலவரத்தை முன் வைத்து அரசாங்கத்தை கதி கலங்கச் செய்ய வேண்டும் என்கிற முடிவு. என்ன செய்யலாம். யோசிக்கிறார் பிரபாகரன்.

ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் காரியமாக இருக்க வேண்டும். ஆனால் பொது மக்களுக்கு எந்த வித சேதமும் இருக்கக் கூடாது. அந்த வகையில் இலங்கை விமானம் ஒன்றை வெடிக்கச் செய்வது என முடிவு செய்கிறார்கள்.

அதன் படி 1978 செப்டம்பர் 7-ஆம் தேதி பலாலி (Palaly) விமான நிலையத்தில் இருந்து ரத்மலானா (Ratmalana Airport) விமான நிலையத்திற்குச் செல்லும் விமானம் தேர்ந்து எடுக்கப் படுகிறது. காரியத்தையும் கச்சிதமாகச் செய்து முடித்து விட்டார்கள்.

Sri Lanka Air Force Avro 748 CR835 was shot down on 28 April 1995 by a SA-7 missile fired by the LTTE. The plane, an Avro 748-334 Srs. 2A airliner, was en route to Ratmalana Airport and was shot down soon after take-off from SLAF Palaly. All 51 crew and passengers were killed.

இலங்கை அரசு அதை எதிர்பார்க்கவே இல்லை. உலகமே திகைத்துப் போனது. யார் செய்தார்கள் என்பதை கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே இந்தத் தாக்குதலைச் செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் கடிதம் வெளியாகிறது.

தங்களுக்கு எதிராக ஒரு பெரிய அமைப்பு உருவாகி விட்டதை இலங்கை அரசு முழுமையாக பரிபூரணமாக உணர்ந்தது. இனிமேலும் இதை இப்படியே விட்டு வைத்தால் அது ஒட்டு மொத்த நாட்டுக்கே ஆபத்து என்பதையும் உணர்கிறது. அதன் விளைவாக இலங்கை முழுக்கச் சல்லடை போட்டுத் தேடி தமிழீழ இளைஞர்களை கைது செய்கிறது.

(தொடரும்)

14 ஜூன் 2019

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 11

மனிதர்கள் அனைவரையும் வரலாறு படைக்கின்றது. ஆனால் அந்த வரலாற்றில் ஒரு சிலர் தான் வரலாறு படைக்கின்றார்கள். படைத்துச் சாதனையும் செய்கின்றார்கள். அப்படிப் பட்ட அபூர்வமான மனிதப் பிறவிகளில் ஒருவர் தான் பிரபாகரன் வேலுப்பிள்ளை. 



அந்தப் பாவனையில் பிரபாகரன் யுகம் எனும் ஒரு புது யுகம் விரைவில் தோன்றும். வாய்ப்புகள் உள்ளன.

யுகம் என்பது இந்துக்களின் காலக் கணிப்பு முறை. காலத்தை அளக்கும் அலகுகளில் கிருத யுகம்; திரேதா யுகம்; துவாபர யுகம்; கலியுகம் என நான்கு யுகங்கள். அந்த யுகங்களில் பிரபாகர யுகத்தைச் சேர்க்கவில்லை. அந்த யுகங்கள் வேறு. இந்த யுகம் வேறு. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாமே. யுகங்கள் தோன்றும். மறையும். அவை காலக் கணிப்பு முறைகள்.

பிரபாகரன் யுகம் என்பது தனி ஒரு காலச்சுவடு. அப்படி ஒரு தனி யுகம் தோன்றலாம். இது ஒரு கணிப்பு.

 

இன்னும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உலகம் நினைத்துப் பார்க்காத உயரத்திற்குத் தமிழினத்தை அந்தப் பிரபாகர யுகம் தூக்கிச் சென்று நிறுத்தி வைத்துச் சிகரம் பார்க்கலாம். அதை அப்போதுதான் அப்போதைய தமிழினம் உணர்ந்து பார்க்கலாம். 

இன்றைய நிலையில் பார்த்தால் தமிழன் யார் என்பதை உலகமே திரும்பிப் பார்க்க வைத்தவர் பிரபாகரன். வேறு யாரும் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு நாட்டின் வரலாற்றை மட்டும் அல்ல. உலகின் பல பகுதிகளின் வரலாற்றையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது ஈழப் போராட்டம். அந்தப் போராட்டத்தின் நாயகன் தான் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

உலகத் தமிழினத்தின் எண்ணம்; அந்த இனத்தின் சொல்; அந்த இனத்தின் செயல் அனைத்தும் மாற்றம் அடைவதற்குத் தூண்டுகோலாக அமைந்தவர் பிரபாகரன்.




உலகத் தமிழர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டியவர். சோம்பிச் சுருங்கிக் கிடந்த ஓர் இனத்தைத் தட்டி எழுப்பியவர். அதோடு அதை நிறுத்திவிட முடியாது.

புலம் பெயர்ந்து சென்ற இடங்களில் மறைந்து மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து பேச வைத்தவர் இதே இந்தப் பிரபாகரன் தான். இவரை மறக்க முடியுமா. சொல்லுங்கள்.

பாலஸ்தீனம், லெபனான், பர்மா, தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பைன்ஸ், குர்டிஸ்தான் போன்ற நாடுகளின் தலைமறைவு இயக்கங்களிடம் இருந்து இராணுவ ஆயுதத் தளவாடங்களைப் பிரபாகரன் பெற்றார் என்று சென்ற கட்டுரையில் சொல்லி இருந்தேன்.




சீனா, பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஈரான், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் மட்டும் இலங்கைக்கு ஆயுத உதவி, பண உதவி செய்யவில்லை என்றால் தமிழீழம் எப்போதோ உருவாகி இருக்கும். இலட்சக் கணக்கான தமிழர்கள் மறைந்து போய் இருக்க மாட்டார்கள் என்றும் சொல்லி இருந்தேன். அதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

உலகின் இதர போராளிக் குழுக்களுடன் தமிழ் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்புகள் இருந்தன. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அல் காயிடா போன்ற இதர கும்பல்களுடனும் தமிழ் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்புகள் இல்லவே இல்லை.

பர்மா, தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளின் தலைமறைவு இயக்கங்களுடன் தமிழ் விடுதலைப் புலிகளின் இரகசியப் பரிமாற்றங்கள் இருந்தன. உண்மை. ஆனால் அதைத் தப்பு தப்பாகச் சொல்லி அமெரிக்காவும் அதன் பிஸ்தா பிஸ்கட்டுகளும் பட்டயம் கட்டின. உலகப் பயங்கரவாதப் பட்டியலில் புலிகளைச் சேர்த்தும் வைத்தன. 




இந்தியாவும் பாகிஸ்தானும் அதே நீலாம்பரி ராகத்தைத் தான் வாசித்தன. அவர்கள் பாடினால் ஆனந்த பைரவிகள். புலிகள் பாடினால் காம்போதிகள். என்னங்க இது. அர்த்தம் இல்லாத ராக மாளிகைகள்.

ரஷ்யாவுக்கு எதிராக தலிபான்களை வளர்த்து விட்டதே அமெரிக்கா. அது தெரியுமா உங்களுக்கு. ஆளை விடுங்கோ சாமி என்று ரஷ்யா ஓடியதும் ஆப்கானிஸ்தானில் மஞ்சள் குளிக்கலாம் என்று ஆசைப் பட்டது அமெரிக்கா. இந்தப் பக்கம் பாகிஸ்தானை உசுப்பி விட்டதும் அமெரிக்கா தான்.

ஏன் என்றால் ரஷ்யாவும் இந்தியாவும் காலா காலத்துக் கூட்டாளிகள். அது அமெரிக்காவுக்குக் காலா காலத்துக்கும் பிடிக்காது. வேட்டு வைத்து வேடிக்கை பார்ப்பதில் அமெரிக்கா ஓர் அசத்தல் மன்மதக் குஞ்சு.

பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடுவது என்பது ஆயக் கலையில் அமெரிக்கா உருவாக்கிய அறுபத்து நான்காவது ஆயம்மா கலை. விடுங்க. வயிற்றெரிச்சலை இப்படியாவது கொட்டித் தீர்த்துக் கொள்கிறேன். சரி. நம்ப கதைக்கு வருவோம். 




இலங்கையில் வாழ்ந்த தமிழர்களை நல்லபடியாக நடத்தி இருந்தால் தமிழர்கள் ஏங்க துப்பாக்கியைத் தூக்க வேண்டும். சிங்களங்கள் ஏங்க சட்டையைக் காணோம் சிலுவாரைக் காணோம் என்று ஓட வேண்டும். புனிதமான புத்தரைக் கும்பிடுபவர்களுக்குப் புத்தி சரியாக இருந்து இருக்க வேண்டுமே. மன்னிக்கவும்.

இப்ப மட்டும் என்னவாம். சகோதர முஸ்லீம்கள் அங்கே பழி வாங்கப்பட வில்லையா. என்ன செய்வது. சிங்களப் புத்தி சிங்களாத் தான் போகுமாம்.

1970-ஆம் ஆண்டுகளில் தென் லெபனான் நாட்டில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் இணைந்து தமிழீழப் புலிகள் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டனர். அதைக் காரணம் காட்டி தமிழீழப் புலிகளைச் சிவப்புப் பட்டியலில் சேர்த்தார்கள். அதில் இருந்து புலிகளுக்கு ஆயுதப் பரிமாற்றத்தில் இடைஞ்சல்கள் ஏற்பட்டன. சரி.




வவுனியா காடுகளில் விடுதலைப் புலிகளின் முதல் பயிற்சி முகாம் அமைக்கப் பட்டது என்று சொன்னேன். அதைப் பற்றி மேலும் சில தகவல்கள்.

புதிதாக உருவாக்கப்பட்ட அந்த அமைப்பில் பின்வரும் செயல்கள் தடைசெய்யப் பட்டன

1. மது அருந்தல்
2. புகைப்பிடித்தல்
3. பெண்களுடன் தொடர்பு
4. இயக்க இரகசியங்களை வெளிவிடுதல்.

இவை அனைத்தும் தடை செய்யப்பட்ட குற்றங்கள்.

அமைப்பில் சேரும் ஒருவர் சேர்ந்ததும் அவருடைய குடும்பத்துடன் உள்ள உறவை முறித்துக் கொள்ள வேண்டும். அதை விட முக்கியமானது. அமைப்பை விட்டு வெளியேறுபவர் புதிய இயக்கத்தைத் தோற்றுவிக்கக் கூடாது. 




அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளையும் வரையறை செய்தார்கள். அதாவது

1. காட்டிக் கொடுக்கும் தமிழர்களை அகற்றுதல்
2. மத்திய அரசின் நிர்வாகத்தை முடக்குதல்
3. இலங்கைத் தமிழர்ப் பகுதிகளில் உள்ள இராணுவத்தை அகற்றுதல்

மறைந்து இருந்து தாக்கிவிட்டு ஓடி மறையும் கொரில்லா தாக்குதல் படையாக இருந்து படிப்படியாக ஓர் இராணுவமாக உருவாக வேண்டும். அதற்கு திட்டமிடல்கள் அவசியம் என முடிவு செய்தார்கள்.

இதற்கிடையில் தியாகி சிவக்குமரனைக் காட்டிக் கொடுத்தது நடராஜன் எனும் தமிழர்தான் எனத் தெரிய வருகிறது.

காட்டிக் கொடுப்பது குற்றம். அதுவும் தன் சொந்த இனத்தையே காட்டிக் கொடுப்பது மிகப் பெரியக் குற்றம். துரோகிகள் வாழத் தகுதியற்றவர்கள். அதுவே அவர்களின் தலையாய வெறுப்பு. 




பிரபாகரனின் கட்டளைக்கு இணங்க நடராஜன் அவரின் வீட்டிலேயே சுட்டுக் கொல்லப் பட்டார். அப்போதுதான் சிங்கள அரசு உச்சக் கட்டப் பயத்தை உணர்கின்றது. ஆழமான புலனாய்வுத் தகவல்களைத் திரட்டும் ஓர் அமைப்பு தங்களுக்கு எதிராக உருவாகி விட்டதை உணரத் தொடங்கியது.

இந்தச் சமயத்தில் உருவான ஈரோஸ் இயக்கம் எனும் தமிழர் இயக்கம் சற்று பிரபலம் அடைந்து வந்தது. அதன் தலைவர் இரத்தினசபாபதி. அப்போது அவர் லண்டனில் இருந்தார்.

அந்த ஈரோஸ் இயக்கம் விடுதலைப் புலிகள் அமைப்பைப் போலவே வவுனியா காடுகளில் ஆயுதப் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தது. இந்த இயக்கமும் சற்று பிரபலமாகி வந்தது. அதற்குக் காரணம் அதன் தோற்றுநரான இரத்தினசபாபதி. இவருக்குப் பாலஸ்தீன விடுதலை அமைப்போடு நெருக்கமான தொடர்புகள் இருந்தன.

அப்போதைய பாலஸ்தீனத்தின் லண்டன் தூதுவராக சைய்ட் முகம்மது என்பவர் இருந்தார். இவர் இரத்தினசபாபதியின் நெருங்கிய நண்பர். 




அந்த வகையில் ஈரோஸ் அமைப்பில் இருந்த சிலர் லெபனானுக்கு ஈரோஸ் அமைப்பின் மூலமாக நவீன போர்ப் பயிற்சிகளைப் பெற்றார்கள்.

அவர்களின் ஒருவர் அருளர். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் வவுனியா பயிற்சி முகாமுக்குச் சென்று மாறுபட்ட பயிற்சிகளை வழங்கினார். அதோடு விடுதலைப்புலிகளில் சிலரை லெபனான் நாட்டுக்கும் அழைத்துச் சென்றார். பயிற்சி வழங்கினார்.

இந்தக் கட்டத்தில் உமா மகேஷ்வரன் என்னும் இளைஞர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்.

பிரபாகரனை விட உமா மகேஷ்வரன் பத்து வயது மூத்தவர். நன்றாக ஆங்கிலம், சிங்களம், தமிழ் மொழிகள் பேசத் தெரிந்தவர், அதனால் அவருக்குச் சற்று உயர்வான இடத்தைப் பிரபாகரன் வழங்கினார்.

இந்தச் சமயத்தில் யாழ்ப்பாணத்தின் குரலாக ஒலித்த அண்டன் பாலசிங்கத்தின் தொடர்பும் புலிகளுக்கு கிடைக்கிறது. அண்டன் பாலசிங்கம் ஒரு பத்திரிக்கையாளர். விடுதலைப் போரில் இறுதி வரை பணியாற்றியவர்,

யாழ்ப்பாணத்து மேயர் அல்பிரட் துரையப்பா கொலை செய்யப்பட்ட காலக் கட்டத்திற்கு வருகிறோம். அல்பிரட் துரையப்பா கொலைக்குப் பின்னர் பிரபாகரனைப் போலீசார் வலைபோட்டுத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு நாள் யாழ்ப்பாணத்துப் போலீஸ் அதிகாரி பாஸ்தியம் பிள்ளைக்கு ஒரு தகவல் கிடைக்கிறது. மன்னார் காட்டுப் பகுதிக்குள் விடுதலைப் புலிகள் இருப்பதாகவும் அந்த குழுவில் பிரபாகரனும் மற்றும் அவருடைய நண்பர்கள் உமா மகேஸ்வரன், செல்லக்கிளி ஆகியோர் இருப்பதாகவும் தகவல் கிடைக்கிறது. 




இந்தப் பாஸ்தியம் பிள்ளை தான் யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு எதிராகக் கீழறுப்பு வேலைகள் செய்து வந்தவர்.

இந்தச் சமயத்தில்
கனகரத்தினம் எனும் அரசியல்வாதியும் சிங்களர் பக்கம் சாய்ந்து விட்டார். இவரை எப்படியோ அவர்கள் விலைக்கு வாங்கி விட்டார்கள். இவர் யாழ்ப்பாணத்தில் பொத்து எனும் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தமிழர்கள் தான் ஓட்டுப் போட்டு வெற்றி பெறச் செய்தார்கள்.

இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் வெற்றி பெற்றாலும் சிங்களவர்களின் ஆசை வார்த்தைகளால் தடம் மாறிப் போனார். ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். சிங்களவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தார்.

இவருக்கு துரோகி எனும் முத்திரை குத்தப் பட்டது. இவரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்கள். திட்டம் தீட்டப் படுகிறது.

உமா மகேஸ்வரன் கொழும்புக்குச் செல்கிறார். அங்கே கனகரத்தினத்தின் நடவடிக்கைகளை இரு வாரங்களுக்குக் கவனிக்கிறார்.

உமா மகேஸ்வரன் முழுமையாகத் தகவல்களைத் திரட்டியம் பிரபாகரனுக்கு அறிவிக்கிறார். பிரபாகரனும் கொழும்புக்குப் போகிறார்.

1978 ஜனவரி 26-ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் இரயில் ஏறி மறுநாள் கொழும்புக் கோட்டையை வந்து அடைகிறார். இரயில் நிலையத்தில் உமா மகேஸ்வரன் பிரபாகரனுக்காகக் காத்து நிற்கிறார். பின்னர் கொழும்பு நகரில் உள்ள கொள்ளுப்பிட்டியா எனும் இடத்திற்கு இருவரும் செல்கிறார்கள். அங்கே தான் கனகரத்தினத்தின் வீடு இருந்தது.

காலை 9 மணிக்கு கனகரத்தினம் வெளியே வருவார் என்பது அவர்களின் கணிப்பு.. அதே போல கனகரத்தினமும் வெளியே வந்து காரை நோக்கி நடக்கிறார். அவருக்காக காத்திருந்த பிரபாகரன் சட்டென கனகரத்தினத்தை நோக்கி ஓடி சுடுகிறார்.

மூன்று குண்டுகள் கனகரத்தினத்தின் உடலைத் துளைக்கின்றன. கனகரத்தினம் தரையோடு சாய்கிறார். பிரபாகரன் ஒரு பக்கமாகத் தப்பிக்கிறார். உமாமகேஸ்வரன் வேறு ஒரு பக்கமாகத் தப்பிக்கிறார். அவர்களால் தப்பிக்க முடிந்ததா. நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(தொடரும்)