04 ஜனவரி 2021

பரமேஸ்வரா மகன் ஸ்ரீ ராம விக்ரமா சீனா பயணம் 1414

Parameswara's son Sri Rama Vikrama Journey to China 1414

சீனாவின் காலக் குறிப்புகளின் படி (Ming Chronicles) பரமேஸ்வராவின் மகன் ஸ்ரீ ராம விக்ரமா; 1414-ஆம் ஆண்டில் சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். சரியான தேதி விவரங்களும் நம்மிடம் உள்ளன. அவர் பயணம் செய்தது 5-ஆம் தேதி அக்டோபர் 1414.

தன்னுடைய தந்தையாரைப் பரமேஸ்வரா என்று ஸ்ரீ ராம விக்ரமா அறிமுகப் படுத்தி இருக்கிறார். அவர் இறந்து விட்டதாகவும் சொல்லி இருக்கிறார். ஆக பரமேஸ்வரா இறந்த அதே ஆண்டு இறுதி வாக்கில் அவருடைய மகன் ஸ்ரீ ராம விக்ரமா சீனாவிற்குப் பயணம் செய்து இருக்கிறார். உறுதி படுத்துகிறேன்.

சான்று: National University of Singapore, http://epress.nus.edu.sg/msl/entry/1781


மேலே சொல்லப் பட்டது சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பழஞ்சுவடிக் காப்பகத்தில் இருந்து மீட்கப் பட்டச் சான்றுகள். அந்த இணைய முகவரியில் மேலும் தகவல்கள் உள்ளன. நீங்களும் போய்ப் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

மலாக்காவைக் கண்டுபிடித்தது பரமேஸ்வரன் என்பவரா? இல்லை ஸ்ரீ இஸ்கந்தார் ஷா என்பவரா? இல்லை சுல்கார்னாயின் ஷா எனும் மகா அலெக்ஸாண்டரா? உள்நாட்டு வரலாறுகளில் இது ஒரு மெகா சீரியல்.

பரமேஸ்வரா என்பவர் வாழும் காலத்தில் பரமேஸ்வரா எனும் பெயரில் தான் வாழ்ந்து இருக்கிறார். இறக்கும் போதுகூட பரமேஸ்வரா எனும் பெயரில் தான் இறந்தும் போய் இருக்கிறார்.

அப்படி இருக்கும் போது இஸ்கந்தார் ஷா என்பவர் எப்படி வந்தார். எங்கே இருந்து சுல்கார்னாயின் என்பவர் வந்தார்.

பரமேஸ்வராவுக்கு சீனா வழங்கிய அரச முத்திரை

எப்படி பரமேஸ்வராவின் பெயர் வசதிக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப் பட்டது. உங்களுக்கே குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம். ஆக வரலாற்றுச் சித்தர்கள் எப்படி எல்லாம் வரலாற்றுச் சித்துகளைக் காட்டி வருகிறார்கள் பாருங்கள். போதுங்களா. எங்கே வருகிறேன். அதையும் புரிந்து கொள்ளுங்கள்.

மலேசியாவில் வாழும் தமிழர்கள் இப்போது இருந்தே பரமேஸ்வரா என்பவரின் வாழ்க்கை வரலாற்றை முன் எடுத்து வைக்க வேண்டும். இல்லை என்றால் ஒரு காலக்கட்டத்தில் பரமேஸ்வரா எனும் பெயர் வரலாற்றில் இருந்து காணாமல் போய் விடும்.

பரமேஸ்வரா சீனாவிற்குச் சென்றது குறித்த மிங் காலக் குறிப்புகள்

மலாக்கா மன்னர்களின் ஆட்சி காலம்:

•    பரமேஸ்வரா 1400 –1414

•    ஸ்ரீ ராம விக்ரமா 1414 –1424

•    சுல்தான் முகமது ஷா 1424 –1444

•    சுல்தான் அபு ஷாகித் 1444 –1446

•    சுல்தான் முஷபர் ஷா 1446 –1459

•    சுல்தான் மன்சூர் ஷா 1459 –1477

•    சுல்தான் அலாவுடின் ரியாட் ஷா 1477 –1488

•    சுல்தான் முகமது ஷா 1488 –1528

சீனாவின் மன்னர் யோங்லே - அவரின் மனைவி

சீனாவின் மிங் வம்சாவளியினரின் வரலாற்றுச் சுவடுகளில் பரமேஸ்வராவின் சீனப் பயணத்தைப் பற்றிய குறிப்புகளின் ஒரு பகுதி உள்ளது. அத்தியாயம்: 325-இல் அந்தப் பதிவு உள்ளது.

(Part of original copy of Ming Dynasty history 1368-1644 - chapter 325. Parameswara visits emperor Yongle)

https://en.wikipedia.org/wiki/File:MingHistory_325.GIF

ஆங்கிலத்தில் உள்ளதை தமிழ் மொழியாக்கம் செய்து இருக்கிறேன். நீண்ட மொழிபெயர்ப்பு. பரமேஸ்வரா நூலில் உள்ளது.

பரமேஸ்வரா சீனாவிற்குப் போய் சேர்ந்ததும் அவருக்கு மாபெரும் வரவேற்பு வழங்கப் பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சந்திப்பைப் பற்றிய குறிப்புகள் மிங் பேரரசின் வரலாற்றுப் பதிவுகளில் காணப் பெறலாம்.
பரமேஸ்வரா சீனாவிற்குப் பயணம் செய்த செங் ஹோ கப்பல்

(சான்று: http://www.epress.nus.edu.sg/msl/ - Wade, Geoff (2005), Southeast Asia in the Ming Shi-lu: an open access resource, Asia Research Institute and the Singapore E-Press, National University of Singapore - பக்கம்: 786)

மலாக்காவைப் பரமேஸ்வரா என்பவர் தான் தோற்றுவித்தார். இருப்பினும் அண்மைய காலங்களில் அவருடைய பெயர் வரலாற்றில் இருந்து இரட்டடிப்புச் செய்யப் படுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாட நூல்களில் இருந்தும் பரமேஸ்வரா காணாமல் போய் வருகிறார். உண்மை மறைக்கப்படக் கூடாது என்பதே நம்முடைய ஆதங்கம்.

மலாக்கா என்றால் பரமேஸ்வரா. பரமேஸ்வரா என்றால் மலாக்கா. ஆக ஒரு வரலாற்றுச் சிதைவை நியாயப் படுத்த நினைப்பவர்கள் எந்தப் பல்கலைக்கழகக் கல்வி மேடையிலும் என்னை அழைக்கலாம். சான்றுகளை முன் வைக்கத் தயாராக இருக்கின்றேன்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.01.2021




03 ஜனவரி 2021

மஜபாகித் மகாராணியார் திரிபுவனா துங்காதேவியின் கொள்ளுப் பேரன் பரமேஸ்வரா

Parameswara, the great-grandson of Empress Tribhuvana Tungadevi
(Scroll down to read the English version)

(பரமேஸ்வரா வரலாற்று ஆய்வு நூலில் இருந்து மீக்கப் பட்ட ஒரு பகுதி)

*தமியா ராஜா ராணா மங்களா* மஜபாகித் வம்சாவழியைச் சேர்ந்தவர். தமியா ராஜா - *சரவர்தானி* தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் பரமேஸ்வரா. மஜபாகித் வம்சாவழியினர் பல்லவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே பரமேஸ்வராவும் பல்லவ இனத்தைச் சேர்ந்தவர் என்று உறுதியாகச் சொல்லலாம்.

மஜபாகித் பேரரசை ஆட்சி செய்த மகாராணியார் *திரிபுவனா துங்காதேவி* கொள்ளுப் பேரன் தான் பரமேஸ்வரா. இந்த மகாராணியார் மஜபாகித் அரசின் மூன்றாவது ஆட்சியாளர்.

மஜபாகித் அரசு ஜாவாவை ஆட்சி செய்த அரசு. கடைசி இந்து மத அரசு. மஜபாகித் அரசு தோன்றுவதற்கு முன்னர் சிங்காசரி (Singhasari Kingdom) எனும் அரசு இருந்தது. இந்தப் அரசும் கிழக்கு ஜாவாவை ஆட்சி செய்தது. இது இந்து மயமான அரசு. இந்து மதமும் பௌத்த மதமும் கலந்த அரசு.

*சிங்காசரி பேரரசை ஆட்சி செய்த மன்னர்கள்*

1. கென் அரோக் - ராஜசா (Ken Arok 1222 – 1227)

2. அனுசபதி - அனுசநாதா (Anusapati 1227 – 1248)

3. பஞ்சி தோஜெயா (Panji Tohjaya 1248)

4. விஷ்ணுவரதனா நரசிம்ம மூர்த்தி (Vishnuvardhana - Narasimhamurti 1248 – 1268)

5. ஸ்ரீ கீர்த்தநகரா (Kertanegara 1268 – 1292)

மன்னர் *ஸ்ரீ கீர்த்தநகரா* காலத்தில் சிங்காசரி அரசு உச்சத்தில் கோலோச்சியது. இருப்பினும் உள்நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களில் ஸ்ரீ கீர்த்தநகரா கொல்லப் பட்டார். அவருடைய மருமகன் ராடன் விஜயா, மதுரா தீவுகளுக்குத் தப்பிச் சென்றார். அங்கு இருந்த *ஆரியா வீரராஜா* (Arya Viraraja) என்பவர் ராடன் விஜயாவுக்கு உதவி செய்தார்.

பின்நாட்களில் கிழக்கு ஜாவா பிரந்தாஸ் சமவெளியில் ராடன் விஜயா ஒரு புதிய அரசைத் தோற்றுவித்தார். அந்த அரசின் பெயர் தான் மஜபாகித். இதை இதோடு நிறுத்திக் கொள்கிறேன். மீண்டும் சிங்காசரி அரசிற்கு வருகிறேன்

சிங்காசரி பேரரசின் கடைசி மன்னர் ஸ்ரீ கீர்த்தநகரா. இவருடைய மகளின் பெயர் *ஸ்ரீ காயத்ரி ராஜ பத்தினி* (Sri Gayatri Rajapatni). இவரைத் தான் ராடன் விஜயா திருமணம் செய்தார். அந்த வகையில் ராடன் விஜயா, ஸ்ரீ கீர்த்தநகராவின் மருமகன். ராடன் விஜயாவின் மற்றொரு பெயர் *நாராரியா சங்கரமவிஜயா* (Nararya Sangramawijaya)

இவர்களுக்குத் **திரிபுவனா துங்காதேவி (Tribuana Tunggadewi) எனும் மகள் பிறந்தார். இந்தத் திரிபுவனா துங்காதேவி தான் மஜபாகித் பேரரசின் மூன்றாவது ஆட்சியாளர் (1326-1350).

இவரின் மற்றொரு பெயர் *திரிபுவனா துங்காதேவி ஜெயவிஷ்ணு வரதனி* (Tribhuwanno Tunggadewi Jayawishnu Wardhani). இன்னொரு பெயரும் உள்ளது. *கீதா ராஜா* (Dyah Gitarja).

மஜபாகித் பேரரசை மாபெரும் பேரரரசாக மாற்றி அமைத்தவர் மகாராணியார் திரிபுவனா துங்காதேவி. மஜபாகித் பேரரசை இவர் தனி ஒருவராக ஆட்சி செய்ததால் தான் இவரை மகாராணியார் என்று அழைக்கிறோம்.

Raden Wijaya, the first king (1293-1309) of Majapahit, was married to Sri Gayatri Rajapatni, a daughter of Sri Kertanegara, the last king (1268-1292) of Singhasari Kingdom, and had a daughter, Tribuana Tunggadewi, the third ruler (1326-1350) of Majapahit.

மகாராணியார் திரிபுவனா துங்காதேவி, மஜபாகித்தை பேரரசைச் சேர்ந்த இளவரசர் *கீர்த்தவரதனா* (Kertawardana) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

திரிபுவனா துங்காதேவி - கீர்த்தவரதனா தம்பதிகளுக்கு ஒரு மகள் பிறந்தார். அவருடைய பெயர் *ஈஸ்வரி* (Iswari). இந்த ஈஸ்வரி மற்றோர் மஜபாகித் இளவரசரைத் திருமணம் செய்து கொண்டார். அந்த இளவரசரின் பெயர் *சிங்கவரதனா* (Singawardana).

ஈஸ்வரி - சிங்கவரதனா தம்பதியினருக்கு ஒரு மகள் பிறந்தார். அவருடைய பெயர் சரவர்தானி (Sarawardani). இவர் *ராணா மங்களா* (Rana Menggala) எனும் மஜபாகித் இளவரசரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அவருடைய பெயர் *பரமேஸ்வரா*. இந்தப் பரமேஸ்வராதான் மலாக்காவைத் தோற்றுவித்த கதாநாயகர்.

அதாவது மஜபாகித் பேரரசை ஆட்சி செய்த மகாராணியார் திரிபுவனா துங்காதேவியின் கொள்ளுப் பேரன் தான் பரமேஸ்வரா (great-grandson of Empress Tribhuwana Wijaya Tunggadewi)

ஆக பரமேஸ்வராவின் தந்தையார் பெயர் ராணா மங்களா (Rana Menggala). அசல் பெயர் தமியா ராஜா (Damia Raja). மற்றொரு பெயர் ஸ்ரீ மகாராஜா (Sri Maharaja). ராணா மங்களா தான் சிங்கப்பூரை ஆட்சி செய்த நான்காவது ராஜா. பரமேஸ்வராவின் தாயார் பெயர் சரவர்தானி (Sarawardani).

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
03.01.2021

Parameswara, the great-grandson of Empress Tribhuvana Tungadevi

Tamiya Raja Rana Mangala was of Majapahit descent. Parameswara was born as the son of
Tamiya Raja Rana Mangala - Saravardhani. The Majapahits are of Pallava descent. So Parameswara also belonged to the Pallava race.

Parameswara was the great-grandson of the empress Tribhuvana Tungadevi who ruled the Majapahit Empire. This empress was the third ruler of the Majapahit kingdom.

The Majapahit kingdom was the last Hindu state in Java. Before the emergence of the Majapahit kingdom, there was a government called Singhasari Kingdom. This kingdom also ruled East Java. This is a Hindu state mixed with Hinduism and Buddhism.

* Kings who ruled the Singasari Empire *

1. Ken Arok - Rajasa (Ken Arok 1222 - 1227)

2. Anusapati - Anusanatha (Anusapati 1227 - 1248)

3. Panji Tohjaya (Panji Tohjaya 1248)

4. Vishnuvardhana Narasimha Murthy (Vishnuvardhana - Narasimhamurti 1248 - 1268)

5. Sri Kirtanegara (Kertanegara 1268 - 1292)

During the reign of King Sri Kirtanagara the kingdom of Singasari was colossal at its peak. However Sri Kirtanagara was killed in the political turmoil at home. His son-in-law, Raden Vijaya, fled to the islands of Mathura. Arya Viraraja, who was there, helped Raden Vijaya.

Raden Vijaya later formed a new state in the East Java Brantas Plain. The name of that state was Majapahit.

Sri Kirtanagara was the last king of the Singasari Empire. His daughter's name was Sri Gayatri Rajapatni. She was married to Raden Vijaya. In that sense Raden Vijaya was the nephew of Sri Kirtanagara. Another name for Raden Vijaya was Nararya Sangramawijaya.

They had a daughter, Tribuana Tunggadewi. This Tribhuvana Tungadevi was the third ruler of the Majapahit Empire (1326-1350).

Her other name was Tribhuwanno Tunggadewi Jayawishnu Wardhani. There was also another name. Geeta Raja (Dyah Gitarja).

It was Empress Tribhuvana Tungadevi who transformed the Majapahit Empire into a great empire. We call her Maharaniyar because she ruled the Majapahit Empire as a sole emperor.

Raden Wijaya, the first king (1293-1309) of Majapahit, was married to Sri Gayatri Rajapatni, a daughter of Sri Kertanegara, the last king (1268-1292) of Singhasari Kingdom, and had a daughter, Tribuana Tunggadewi, the third ruler (1326-1350) of Majapahit.

Empress Tribhuvana Tungadevi married Prince Kertawardana of the Majapahit Empire.

A daughter was born to the Tribhuvana Tungadevi - Kertawardana couple. Her name was Iswari. This Eswari married another Majapahit prince. The prince's name was Singawardana.

Eswari - Singavarathana couple gave birth to a daughter. Hr name was Sarawardani. She was married to a Majapahit prince named Rana Mangala. A son was born to them. His name wass Parameswara. This Parameswara was the protagonist who created Malacca.

Parameswara was the great-grandson of Empress Tribhuwana Wijaya Tunggadewi, the great-grandson of Empress Tribhuvana Tungadevi, who ruled the Majapahit Empire.

Parameswara's father's name was Rana Mangala. Original name was Tamiya Raja. Another name was Sri Maharaja. Rana Mangala was the fourth king to rule Singapore. Parameswara's mother's name was Sarawardani.







31 டிசம்பர் 2020

1எம்.டி.பி. 40 பில்லியன் எப்படி செலவு செய்து இருக்கலாம்

தமிழ் மலர் - 31.12.2020

மலேசிய மக்கள் நித்தம் நித்தம் வியர்வையில் நசிந்து நலிந்து; விலைவாசி ஏற்றத்தில் துண்டு துண்டாய்ச் சிதறிச் சிதைந்து; அன்றாட வேதனைகளில் அல்லல்பட்டு அலைமோதி சம்பாதித்த பணம். அது மலேசிய மக்களின் வியர்வைத் துளிகள்; இரத்தத் துளிகள். கொஞ்சம்கூட மனித  மனம் இல்லாமல் செலவு செய்து இருக்கிறார்கள்.

கையில் இருக்கிற பணம் நாம் உழைத்துச் சம்பாதித்த பணம் அல்ல என்கிற நினைப்பு தான் ஒருவரின் மனத்தை மாசுபடுத்தி விடுகிறது. அந்த வகையில் ஒரு சொட்டு குற்ற உணர்வும் இல்லாமல் மலேசிய மக்களின் பணம் வாரி வாரி இறைக்கப்பட்டு இருக்கிறது.

மனசாட்சி இல்லாமல் எப்படித் தான் பயணித்தார்கள். ஒருநாள் பிடிபடுவோம் என்கிற அச்சம் கொஞ்சம்கூட இல்லாமல் எப்படித் தான் நகர்ந்தார்கள்; எப்படித் தான் வாழ்ந்தார்கள். அது தான் பெரிய அதிசயமாக இருக்கிறது.

திருடும் கூட்டம் திருடிக் கொண்டே இருக்கும்

1எம்.டி.பி. பற்றி ஒரு சின்ன விளக்கம். இது அரசு சார்ந்த நிறுவனம். 2009-ஆம் ஆண்டு உருவாக்கப் பட்டது. மலேசியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது; மலேசிய மக்களின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்திக் காட்டுவது; இவைதான் 1எம்.டி.பி. நிறுவனத்தின் தலையாய நோக்கங்கள். தலையாய இலக்குகள்.

1எம்.டி.பி. நிறுவனம் ஈடுபட்ட எல்லா நடவடிக்கைகளுக்கும் மலேசிய மக்களே பொறுப்பு. அந்த நிறுவனத்தின் இலாப நட்டங்களுக்கும் மலேசிய மக்களே பொறுப்பு.

இப்போது அந்த நிறுவனத்திற்கு 4200 கோடி ரிங்கிட் நட்டம். அந்த வகையில் மலேசிய மக்களின் பேரைச் சொல்லி 1MDB வாங்கிய கடன்களுக்கு மலேசிய மக்களே பொறுப்பு. சரி. 1எம்.டி.பி. RM40 பில்லியன் எப்படி செலவு செய்து இருக்கலாம்.

1. மலேசியாவில் வாழும் 32.7 மில்லியன் மக்களுக்கும் ஆளாளுக்கு 1300 ரி.ம. கொடுத்து இருக்கலாம். இதில் ஒவ்வொரு தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களையும் சேர்த்து ஒவ்வொரு குழந்தைக்கும் 1300 ரி.ம. கொடுத்து இருக்கலாம்.

2. மலேசிய மாணவர்கள் 1.33 மில்லியன் பேருக்கு உள்நாட்டின் அரசு பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெறுவதற்கான கல்விச் செலவுகள்; உணவுச் செலவுகள்; மருத்துவச் செலவுகள்; விடுதிச் செலவுகள் என்று ஆண்டுக்கு ஒரு மாணவருக்கு RM10,000 என மூன்று ஆண்டுகளுக்கு வழங்கி இருக்கலாம்.

அந்த வகையில் 1,330,000 மாணவர்களைப் பட்டதாரிகளாக மாற்றி இருக்கலாம். அதாவது 13 இல்ட்சம் மணவர்களைப் பட்டதாரிகளாக மாற்றி இருக்கலாம்.

3. ஓர் ஆண்டுக்குச் சராசரியாக ரி.ம. 50,000 சம்பளத்தின் அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு 80,000 ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கி இருக்கலாம். மலேசியாவில் 33 இலட்சம் ஆசிரியர் உள்ளார்கள்.

மலேசிய மக்களின் பணம் எப்படி செலவாகி இருக்கிறது

(In the 2017–18 school year, there were 3.3 million full-time and part-time traditional public school teachers, 205,600 public charter school teachers, and 509,200 private school teachers.)

4. ஒரு படுக்கைக்கு RM800,000 எனும் அடிப்படையில் 333 படுக்கைகள் கொண்ட 150 மருத்துவமனைகளை உருவாக்கி இருக்கலாம். அதாவது 500,000 படுக்கைகளை உருவாக்கி இருக்கலாம்.

மலேசியாவில் இப்போது அரசாங்கம் நடத்தும் பொது மருத்துவமனைகளில் 42,300 படுக்கைகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 16 ஆயிரம் படுக்கைகள் உள்ளன.  

5. ஏறக்குறைய 1,000 மாணவர்கள் அல்லது 800,000 மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு RM50 மில்லியன் செலவில் 800 பள்ளிகளை உருவாக்கி இருக்கலாம். மலேசியாவில் இப்போது 103 தங்கி பயிலும் பள்ளிகள் அல்லது கல்லூரிகள் உள்ளன.

மலேசிய மக்களின் பணம் இவள்களுக்கு கோடிக் கணக்கில் விரயம்

6. தலா RM1 பில்லியன் செலவில் 40 நவீனமான பல்கலைக்கழகங்களை உருவாக்கி இருக்கலாம். மலேசியாவில் 2019-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 111 பல்கலைக்கழகங்கள் உள்ளன.

(There are 20 public universities and 47 private universities in Malaysia. There are 34 university colleges and 10 foreign university branch campuses too (September 2019)

7. மலேசியாவில் 22 வருடங்களுக்கு 100,000 குடும்பங்களுக்கு; ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நாளைக்கு RM50 அல்லது ஒரு மில்லியன் குடும்பங்களுக்கு இரண்டு ஆண்டுகள் இரண்டு மாதங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி இருக்கலாம்.

குடி கும்மாளத்தில் கோடிக் கணக்கில் செலவு

8. பத்து மில்லியன் மோடனாஸ் கிரிஸ் எம்.ஆர். 2 ரக மோட்டார் சைக்கிள்களை வாங்கி நாட்டில் உள்ள ஆறு மில்லியன் வீடுகளுக்குக் கொடுத்து இருக்கலாம். மேலும் நான்கு மில்லியன் மோட்டார் சைக்கிள்கள் மீதம் இருக்கும்.

9. ஒரு மில்லியன் புரோட்டான் சாகா கார்கள் வாங்கி இருக்கலாம்.

10. மலேசியாவில் உள்ள ஒவ்வொரு ஆறு வீடுகளுக்கும் ஒரு புரோட்டான் சாகாவைக் கொடுத்து இருக்கலாம்.

11. ஆடம்பரக் கப்பல் ‘தி ஈக்குவானிமிட்டி’ போல 40 கப்பல்கள் வாங்கி இருக்கலாம்.

12. ரோசாப்பூ ரோசம்மா வாங்கிய இளஞ்சிவப்பு வைர நெக்லஸ் விலை 100 மில்லியன். அதைப் போல 400 நெக்லஸ்கள் வாங்கி இருக்கலாம்.

ஜொல்லுவாய் ஜோலோ

10. சுமார் 10 கோலாலம்பூர் நகர மையங்கள் (Kuala Lumpur City Centres) உருவாக்கி இருக்கலாம்.

11. நான்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையங்கள் (Kuala Lumpur International Airports) கட்டி இருக்கலாம்;

12. இரண்டு புத்ராஜெயாக்கள் (Putrajayas) உருவாக்கி இருக்கலாம்;

13. ஏழு வடக்கு - தெற்கு  நெடுஞ்சாலைகள் (North-South Expressways) உருவாக்கி இருக்கலாம்.

14. பினாங்கு பாலம் (1985-இல் கட்டப்பட்ட முதல் பாலம் - 800 மில்லியன் ரிங்கிட்) போல 50 பாலங்களைக் கட்டி இருக்கலாம்.


Equanimity - 250 million USD

ஆக அவ்வளவு பணத்தையும் என்ன செய்வது என்று தெரியாமல்; அந்தப் பணத்தைச் செலவு செய்ய வேண்டுமே என்று எதை எதையோ வாங்கி எப்படி எப்படியோ செலவு செய்து இருக்கிறார்கள்.

1எம்.டி.பி. நிறுவனம் மலேசிய நிதியமைச்சிற்குச் சொந்தமானது. மலேசிய நிதியமைச்சரின் நேரடிப் பார்வையின் கீழ் இருந்தது. (Minister of Finance (Incorporated). இந்த நிறுவனத்தின் பண முதலீடுகள்; வருமானம்; இலாப நட்டம் அனைத்திற்கும் மலேசிய நிதியமைச்சு தான் பொறுப்பு.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் 1எம்.டி.பி. நிறுவனம் ஈடுபட்ட எல்லா நடவடிக்கைகளுக்கும் மலேசிய நிதி அமைச்சுதான் பொறுப்பு. அந்த மலேசிய நிதி அமைச்சிற்கு மலேசிய அரசாங்கம் தான் பொறுப்பு. அந்த மலேசிய அரசாங்கத்திற்கு மலேசிய மக்களாகிய நீங்களும் நானும் தான் பொறுப்பு.

Miranda Kerr

அதாவது அந்த 1எம்.டி.பி. நிறுவனத்தின் இலாப நட்டங்களுக்கு மலேசிய மக்களே பொறுப்பு. இப்போது அந்த நிறுவனம் 4200 கோடி ரிங்கிட் நட்டத்தில் தத்தளித்துக் கொண்டு நிற்கிறது. அந்த வகையில் மலேசிய மக்களின் பேரைச் சொல்லி வாங்கப் பட்ட கடன்களுக்கு நீங்களும் நானும் தான் பொறுப்பு.

இன்னும் தெளிவாகச் சொல்லலாம். மலேசியாவில் இன்று பிறந்த குழந்தையில் இருந்து; நேற்று இறந்து போனவர் வரை ஒவ்வொருவரும் இந்த 1எம்.டி.பி. நிறுவனத்தின் கடனுக்கு மட்டும் ஆளுக்கு 1400 ரிங்கிட் கடன் கொடுக்க வேண்டும்.

அந்த ஒரே ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே நீங்களும் நானும் ஆளுக்கு 1400 ரிங்கிட் கடன் பட்டு இருக்கிறோம். என்ன இருந்தாலும் அது பழைய அரசாங்கம் வாங்கிய கடன். அந்தக் கடனை இப்போதைய முகைதீன் பெரிக்கத்தான் அரசாங்கம் கட்ட வேண்டும்.

இதற்கு முன்னர் முந்தைய மகாதீர் - அன்வார் பக்காத்தான் அரசாங்கம் கட்டி வந்தது. கட்டித் தான் ஆக வேண்டும். வேறு வழி இல்லை. கடன் கொடுத்தவர்கள் சும்மா விட மாட்டார்கள். அனைத்துலக நீதிமன்றம் வரை இழுத்துச் சென்று விடுவார்கள்.

ஜோலோ - குடி கூத்தி கும்மாளம்

மலேசியர்களை அடகு வைத்து வாங்கப்பட்ட கடன் அல்லவா. ஆக அந்தக் கடனை இப்போதைய புதிய அரசாங்கங்கள் கட்ட வேண்டிய நிலையில் உள்ளன.

இவ்வளவு பெரிய தொகையைச் செலவு செய்கிறோமே; வெளியே தெரிய வருமே என்கிற குற்ற உணர்வு ஒரு துளியும் இல்லாமல் எப்படித் தான் மகிழ்ச்சியாக இருந்தார்கள். வேடிக்கை அல்ல. வேதனையாக இருக்கிறது.

அவர்களுக்குப் அச்சம் இல்லாமல் போனதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. கையில் இருக்கிற பணம் நாம் உழைத்துச் சம்பாதித்த பணம் அல்ல என்கிற அந்த நினைப்புத் தான். அதனால் தான் 1 எம்.டி,பி. பணம் கோடிக் கோடியாய் வாரி இறைக்கப்பட்டு இருக்கிறது.

அவர்களுக்குப் பயம் இல்லாமல் போனதற்கு இன்னும் ஒரு காரணம் இருக்கிறது. 2018 பொதுத் தேர்தலில் எப்படியும் நஜீப் வெற்றி பெற்று விடுவார்; தங்களை எப்படியாவது காப்பாற்றி விடுவார் எனும் நம்பிக்கை.

அதனால் தான் அந்த அளவிற்கு அவர்கள் துணிந்து மக்களின் பணத்தை விளையாடி இருக்கிறார்கள். இப்போதைய நிலையைப் பாருங்கள். முன்னாள் பிரதமர் தன்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் தடுமாறிக் கொண்டு இருக்கிறார்.

Source: https://www.thestar.com.my/business/business-news/2018/09/15/money-is-cheap-when-its-not-yours/

முன்னாள் பிரதமர் நஜீப், மலேசியாவின் பிரதமராக இருந்த காலத்தில் நாட்டின் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். அதனால் நிதியமைச்சு அவரின் நேரடிப் பார்வையின் கீழ் இருந்தது.

இவளுக்கு ஒரு கோடி வெள்ளியில் வைர மோதிரம்

அந்த வகையில் 1எம்.டி.பி. நிறுவனத்தின் தலைமை ஆலோசனை மன்றத்தின் தலைவராகவும் முன்னாள் பிரதமர் நஜீப் பொறுப்பு ஏற்று இருந்தார். அவருடைய அனுமதியின் பேரில் தான் 1எம்.டி.பி. நிறுவனம் இயங்கி வந்தது. அதாவது அவரின் கண் அசைவில் தான் அந்த நிறுவனமே இயங்கியது.

2015-ஆம் ஆண்டு 1எம்.டி.பி. நிறுவனத்திற்குச் சொந்தமான 267 கோடி ரிங்கிட் பணம் முன்னாள் பிரதமர் நஜீப்பின் வங்கிக் கணக்கில் சேர்க்கப் பட்டது. நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

ஒரு நாட்டுத் தலைவரின் வங்கிக் கணக்கில் கோடிக் கோடியாகப் பணம். அதுதான் விஸ்வரூபமாகத் தலை எடுத்து மைக்கல் ஜாக்சன் கணக்கில் பிரேக் டான்ஸ் ஆடியது.  

’பணம் எப்படி வங்கிக் கணக்கில் போடப் பட்டது எனக்கு தெரியாது’

பணத்தைப் பார்த்தீர்களா. ஒரு கோடி இரண்டு கோடி இல்லீங்க. அம்மாடியோவ் என்று சொல்லும் அளவிற்கு 267 கோடிகள். முன்னாள் நஜீப்பின் தனி வங்கிக் கணக்கில் மட்டும் 2,672,000,000 மலேசிய ரிங்கிட் இருந்தது.

அதாவது USD 700 million (அமெரிக்க டாலர்கள்). இரண்டே இரண்டு வங்கிக் கணக்குகளில் மட்டும் அவ்வளவு பணம்.

ஆனாலும் அந்தப் பணத்தை சவூதி அரேபியா அரசக் குடும்பம் அன்பளிப்பு செய்தது என்று சொல்லி நஜீப் மறுத்து வந்தார்.

ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 6355 ரிங்கிட் என்று செலவு செய்தால் 267 கோடி ரிங்கிட் பணத்தையும் செலவு செய்து முடிக்க 2739 ஆண்டுகள் பிடிக்கும். அது மட்டும் அல்ல.

267 கோடி ரிங்கிட் பணத்தை 100 ரிங்கிட் நோட்டுகளாக மாற்றினால் அவ்வளவு பணத்தையும் ஏற்றிச் செல்ல 12 இராட்சச லாரிகள் தேவைப்படும். (24 டயர் லாரிகள்). அப்படி என்றால் எவ்வளவு பணம் என்று நீங்களே கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்று மாறாமல் போய் இருந்தால் இன்னும் எவ்வளவோ மோசடிகள் நடந்து இருக்கலாம்; இன்னும் எவ்வளவோ திருடர்களின் கைகளுக்குப் போய் இருக்கலாம். சொல்ல முடியாது.

இது வெறும் 40 பில்லியன் 1MDB கணக்கு. ஆனால் நம் நாடு மலேசியா 1000 பில்லியன் ரிங்கிட்டை வெளிநாடுகளில் கடன் பட்டு இருக்கிறதே...

(Malaysia's total debt rose to RM1 trillion or 69.7% of gross domestic product (GDP) as at end-June 2020)

இதற்கு என்ன கணக்கு? இந்தப் பணத்தை மலேசிய மக்கள்தான் கட்டி அழவேண்டும் என்பது அவர்களின் தலையெழுத்து.

ஒரு நாட்டில் குறிப்பிட்ட ஓர் இனத்தவர் எது செய்தாலும் அது பிரச்சினை இல்லை. மற்ற இனத்தவர் ஒரு சின்னக் குற்றம் செய்தாலும் அதைப் பெரிதாக்கி அந்த இனத்தையே கேவலப் படுத்தி விடுகிறார்கள்.

உலகின் 179 நாடுகளில் எதில் அதிகமான லஞ்ச ஊழல் என்று கணக்கெடுப்பு செய்தார்கள். அந்தப் பட்டியலில் மலேசியா 51-ஆவது இடத்தில் உள்ளது. 80-ஆவது இடத்தில் இந்தியா சீனா; 100-ஆவது இடத்தில் வியட்நாம். 80-ஆவது இடத்தில் நைஜீரியா. ஆகக் கடைசியக 179-ஆவது இடத்தில் சோமாலியா.

தொட்டதற்கு எல்லாம் கடன்களை வாங்கி இந்த நாட்டை ஒரு வழிபண்ணி விட்டார்கள். இந்தப் போக்கில் போய்க் கொண்டு இருந்தால் அடுத்து நம் சந்ததிகள் எப்படி வாழப் போகிறார்கள்? நினைத்துப் பாருங்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
31.12.2020



 

30 டிசம்பர் 2020

பத்துமலை தைப்பூசம் 2021 ஆரம்பிக்கலாமா?

தமிழ் மலர் - 30.12.2020

தை மாதம் தமிழர்களுக்குப் புனிதமான மாதம். அந்த மாதத்தில் தமிழர்களின் மாட்டுப் பொங்கல்; காணும் பொங்கல்; தை பௌர்ணமி; வாஸ்து நாள்; தை அமாவாசை; ரத சப்தமி; போன்ற திருநாள்கள் வருகின்றன.

அந்த மாதத்தில் தான் முருகப் பெருமானுக்கு உகந்த தைப் பூச திருநாளும் வருகிறது. தமிழர்களின் முன்னோர்களையும் மூதாதையர்களையும் நினைவுகூரும் தை அமாவாசையும் வருகிறது.

இப்படி சில முக்கியமான தினங்கள் தை மாதத்தில் வருகின்றன. தமிழர்களின் பாரம்பரிய உணர்வுகளுக்குப் பெருமை சேர்க்கின்றன.

அடுத்து தமிழர்களின் சோதிட நம்பிக்கைகளில் 27 நட்சத்திரங்கள். அந்த நட்சத்திரங்களின் வரிசையில் பூசம் எனும் நட்சத்திரம் எட்டாவது நட்சத்திரம்.

தை மாதத்தில் பூச நட்சத்திரமும் முழு நிலவும் ஒன்று கூடி வரும் காலத்தைப் புனிதமாகத் தமிழர்கள் கருதுகிறார்கள். முருகனுக்கு உகந்த நாள் என்பதும் தமிழர்களின் நம்பிக்கை. அந்த நன்னாளில் தைப்பூசம் கொண்டாடப் படுகிறது.

தைப்பூச நாளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட வேண்டும். முருகன் அருளால் முக்திப் பேறு கிட்டும் என்பது தமிழர்களின் ஐதீகம். ஆனால் அந்தத் தைப்பூச நாளில் எத்தனை பேர் விரதம் இருக்கிறார்கள். தெரியவில்லை.

அதில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தைப்பூச தினத்தில் அடியேன் விரதம் இருந்ததாகச் சரித்திரமே இல்லை. கணக்கு வழக்கு இல்லாமல் பலகாரங்களைச் சாப்பிட்டது தான் பெரிய சரித்திரம். சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சரி.

நம்ப 2021 பத்துமலை தைப்பூசப் பிரச்சினையை ஆரம்பிக்கலாமா. இந்த ஆண்டு பத்துமலைத் தைப்பூசம் பெரிய ஒரு பிரச்சினையாகவே பரிணமிக்கத் தொடங்கி விட்டது.

தைப்பூசத் திருவிழாவிற்கு இன்னும் சரியாக ஒரு மாதமே எஞ்சி இருக்கிறது. இந்தச் சமயத்தில் தைப்பூச விழா நடைபெறுமா நடைபெறாதா என்ற ஐயம் எழுந்து உள்ளது.

ஒரு பக்கம் கொண்டாடலாம் என்கிறார்கள். இன்னொரு பக்கம் வேண்டாம் என்கிறார்கள். என் முடிவு முக்கியம் அல்ல. முதலில் பொது மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

இதற்கிடையில் தேசியப் பாதுகாப்பு மன்றம் ஆலோசனையின்படி 2021 தைப்பூச திருவிழா நடத்தப்படும் என்று ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

ஒற்றுமை துறை அமைச்சின் ஏற்பாட்டில் காணொலி வழியாக டிசம்பர் 21-ஆம் தேதி பேச்சு வார்த்தை நடத்தப் பட்டதாக ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான செயலாளர் சேதுபதி குமாரசாமி தெரிவித்து உள்ளார். இதற்கு அரசாங்கத்திடம் இருந்து நல்ல ஒரு பதில் கிடைக்கும் என்கிறார்.

இந்தக் கட்டத்தில் நேற்றைய தினம், தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ நடராஜா ஒரு செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தை நடத்தினார். அதில் தைப்பூச இரத ஊர்வலத்தைத் தடை செய்ய வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார். நல்லது. அரசாங்கம் அனுமதி தரும் என்பது அவரின் எதிர்பார்ப்பு. சரி.

கொரோனா எனும் கொடும் தொற்றின் கொலைவெறி ஆட்டத்தினால் உலகம் இப்போது என்ன நிலையில் போய்க் கொண்டு இருக்கிறது. இந்த நாடு எந்த நிலையில் அலைமோதிக் கொண்டு இருக்கிறது. அதைக் கொஞ்சம் பார்ப்போம்.

தைப்பூசம் கொண்டாடுவதை யாரும் எதிர்க்கவில்லை. எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை. அது இந்த நாட்டில் வாழும் தமிழர்களின் பாரம்பரிய உரிமைத் தளம். தைப்பூசத் திருவிழாவை நடத்தக் கூடாது என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை. ஆனால் நாடு இருக்கும் நிலைமையில் நாமும் நல்ல ஒரு முடிவை எடுக்க வேண்டும்.  

இந்த 2020-ஆம் ஆண்டு ஒட்டு மொத்தமாக உலக மக்கள் மறக்க முடியாத ஓர் ஆண்டாக மாறி விட்டது. இந்த உலகத்தையே கோவிட் – 19 வைரஸ் தொற்று ஓர் உலுக்கு உலுக்கி விட்டது. 8 கோடி மக்களுக்கும் மேல் பாதிப்பு. 1.75 கோடி மக்கள் இறந்து விட்டார்கள். மலேசியாவில் இறந்தவர்கள் 454 பேர். பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்தையும் எட்டி விட்டது.

மலேசிய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் நாட்டின் பொருளாதாரம் மிக மிக மோசமாகப் பாதிப்பு அடைந்து உள்ளது. ஏழு இலட்சம் பேர் வேலை இழந்து பரிதவிக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பணப் புழக்கம் மிகவும் குறைந்து விட்டது.

அதே சமயத்தில் பொருள்களை வாங்கும் ஆற்றலும் குறைந்து விட்டது. பொருள்களின் விலை எல்லாம் கிடு கிடு என்று உயர்ந்து விட்டது. ஒரு காலத்தில் ஒரு கிலோ கத்தரிக்காய் ஒரு ரிங்கிடிற்கு கூவி கூவி விற்றார்கள். இப்போது புந்தோங் மார்க்கெட்டில் ஒரு கிலோ 13 ரிங்கிட்டிற்கு போட்டு விற்கிறார்கள். நிலைமை ரொம்ப மோசமாகி விட்டது..

பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அதனால் மாணவர்களின் கல்வி பாதிப்பு. கோயில்களில் திருமணங்களை நடத்த முடியவில்லை. திருவிழாக்களும் இல்லை. வழிபாடுகளும் இல்லை. ஒட்டுமொத்த மக்களின் அன்றாட வாழ்வியல் பாதிக்கப்பட்டு விட்டது.

இதில் சிலாங்கூர்; கோலாலம்பூர்; புத்ரா ஜெயா பகுதிகளில் நிலைமை ரொம்பவும் மோசமாகி விட்டது. ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்குப் போவதற்கும் வருவதற்கும் மக்கள் அஞ்சுகின்றார்கள்.

இந்த நிலையில் சிலாங்கூர்; கோலாலம்பூர்; புத்ரா ஜெயா பகுதிளைச் சிவப்பு மண்டலமாக அறிவித்து இருக்கிறார்கள்.

இப்படி ஓர் இக்கட்டான நிலையில் நமக்கு ஒரு திருநாள் மிக அவசியமா எனும் கேள்வியும் எழுகிறது. வாட்ஸ் அப் புலனங்களில் இதைப் பற்றி நிறையவே பேசப் படுகின்றன. மலேசியம் புலனத்தைச் சேர்ந்த அன்பர் கோலாலம்பூர் பெருமாள் இவ்வாறு கருத்து கூறுகிறார்.

இந்த ஆண்டு 2020 தீபாவளிக்குப் பொது நலன் கருதிக் கோவிலுக்குச் செல்வதைத் தவிர்த்தோம். இந்த ஆண்டு தைப்பூசத்தை அவ்வாறு தவிர்ப்பதே சிறப்பு.

நாம் நலமாக இருந்தால் நாடும் நலமா இருக்கும். இறைவனை எங்கு இருந்தும் எப்போதும் வணங்கலாம். இந்த வருடத் தைப்பூசம் எந்த நட்டத்தையோ அல்லது எந்த லாபத்தையோ அல்லது எந்தப் புதுமையையோ கொண்டு வரப் போவது இல்லை என்பது மட்டும் உறுதி் என்று சொல்கிறார்.

சுங்கை பூலோ கரு. ராஜா என்பவரின் கருத்து. நம் நாட்டில் 2021 தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாடலாமா வேண்டாமா என்பதற்கு என்னுடைய நிலைப்பாடு... வேண்டாம். மனிதன் உயிரோடு இருந்தால்தான் 2022 தைப்பூசம் கொண்டாட முடியும்.

தைப்பூசம் ஓடிவிடாது. ஜனவரி மாதம் வந்ததும் தைப்பூசம் யாரையும் கேட்காமல் தானாக வந்து போகும். மனிதனின் உயிர் தான் முக்கியம்.

வீடு பற்றிக் கொண்டு எரிகிறது... புகைபிடிக்க தீப்பெட்டி கேட்பது முட்டாள்தனம். 2022-ஆம் ஆண்டில் மீண்டும் தைப்பூசம் வரும். 2021-ஆம் ஆண்டில் விட்டதை எல்லாம் சேர்த்து டாம் டூம் என்று கொண்டாடி விடுவோம்.

இன்றைய பத்திரிக்கையைப் பாருங்கள்... சிலாங்கூர், புத்ரா ஜெயா, விலாயா கோலாலம்பூர் மூன்றையும் சிவப்பு மண்டலமாக அறிவித்து இருக்கிறார்கள்... அதையும் மீறி பத்துமலைக்கு போகணுமா என்று கேட்கிறார்.

ஜொகூர் லார்கின் பகுதியைச் சேர்ந்த அன்பர் சந்திரன் சொல்கிறார். 2021 தைபூசத்திற்கு ஒன்று கூடுவதைத் தள்ளி வைப்போம். மலேசிய இந்துக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒரு வருடம் தள்ளி வைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

வீட்டில் இருந்தவாறு முருகனைப் பிரார்த்திப்போம். இந்தக் கோவிட் காலத்தில்  முருகப் பெருமான் அதை ஏற்றுக் கொள்வார். இந்த நாட்டில் கோவிட் தொற்றினால் இந்துக்கள் பலர் உயிர் இழந்தார்கள் என்று வரலாற்றில் எழுதப்பட நாம் வழிவகுக்கக் கூடாது. சற்று ஆழமாக யோசித்து செயல் படுவோம் என்று சொல்கிறார்.

நாடு இருக்கிற நிலையில் தைப்பூசம் ரொம்ப அவசியமா... கொண்டாடவில்லை என்றால் அப்படியா குடி மூழ்கிவிடப் போகிறது என்று கெடாவைச் சேர்ந்த தேவி என்பவர் கேட்கிறார்.

மற்றும் ஓர் அன்பர் சற்றுக் கடுமையாகவே கருத்தை முன்வைக்கிறார். கொஞ்சம் பணம் சம்பாதிக்கணும்; கடை போடணும்; எவர்சில்வர் சாமான் விக்கணும்; பலகாரக் கடைகள் போடணும் என்று ஆசை கொண்டவர்கள் தான் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். மக்களின் பொதுநலனைக் கருத்தில் கொள்ளவில்லை.

அடுத்தவன் குடும்பம் கொரோனா வந்து அழிஞ்சால் என்ன; குலை சரிஞ்சால் என்ன. நம்ப நல்லா இருந்தா சரி என்று நினைக்கக் கூடாது. ரொம்பவும் தப்பு. எந்தத் திருவிழாவாக இருந்தாலும், அதனால் பொதுமக்கள் பாதிப்பு அடையக் கூடாது.

இது ஒருவரின் தனிப்பட்ட கருத்து. மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று தான் பார்க்கிறோம்.

ஈப்போவைச் சேர்ந்த அன்பர் குமார் இப்படி கருத்துகளை முன் வைக்கிறார்.

கொரோனாவை அழிக்க நமது அறிவியல் ஆன்மீகம் துணை நிற்கவில்லையா என்பதைச் சிந்திக்க வேண்டும். பாம்பின் விசத்தில் இருந்து தம்மைக் காக்கத் தெரிந்த கீரிப் பிள்ளைக்குத் தெரிந்த அறிவு மனிதனுக்கு இல்லையா.

நாத்திகம் வளர்க்கிறோமா? கொரோனாவில் இருந்து காக்க வேண்டும். ஆலயங்களை மூடவேண்டும்; பிரார்த்தனைகள் கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இறைத் தத்துவங்களை மறுக்கக் கூடாது. ஆலயங்களை மூடக் கூடாது. பிரார்த்தனைகளுக்குத் தடை செய்யக் கூடாது. ஆலயங்களைக் கட்டியதன் நோக்கம் தான் என்ன.

இறைவனை நம்புவது தீது; மனுக் குலத்திற்கு எதிரானவர்களை நம்புவது புத்திசாலித் தனமானது எனும் நிலைக்கு தள்ளப் படுகிறோம். நான் சொல்வது பொது வாழ்க்கையில் பொதுவாக நினைத்துப் பார்க்கப்பட வேண்டியது.

எந்தக் காலத்திலும் ஆலயங்களை மூடக் கூடாது. கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப் படலாம். வழிபாடுகள் நடைபெற வேண்டும். தேவாலயங்களில் வழிபாடுகள் நடைபெறுவதாக அறிகிறேன் என்று சொல்கிறார் குமார்.

இதற்கு ஓர் அன்பர் இப்படி பதில் சொல்கிறார். கோயிலைத் திறந்து வையுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. கொரோனாவிற்கு மாலை மரியாதை செய்யுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நூறு ஆயிரம் என்று கூடினால் பழையபடி உறுமி மேளம் வரும்.

எப்படித்தான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் யாராவது எங்கேயாவது எப்படியாவது குத்தாட்டத்தைத் தொடக்கி விடுவார். மறுபடி விசில்; மேளச் சத்தம்; கோஷ்டி பூசல்; அப்புறம் வழக்கம் போல வெட்டுக்குத்து; ஆஸ்பத்திரி. இந்தக் களேபரத்தை நடராஜா ஐயா எப்படி கையாளப் போகிறார்.

கொரோனா பெரும் தொற்றுக் காரணமாக சுங்கை பூலோ மருத்துவமனை நிரம்பி விட்டதாகத் தகவல். நோயாளிகளை வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பிக் கொண்டு இருக்கிறார்களாம். அந்த அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது.

ஆக கூட்டம் என்று வந்து விட்டால் ஒரு மீட்டர் இடை வெளி என்பதை எல்லாம் கடைப்பிடிக்க முடியாது! தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தெலுக் இந்தான் நகரைச் சேர்ந்த அன்பர் சரவணன் தன் கருத்தை இப்படி முன்வைக்கிறார். ஐயா நடராஜா... ஒரு சந்தேகம். காவடி ஆடுபவர்கள் கூட முகக்கவசம் அனிந்து இருக்க வேண்டும் என்பது கட்டாயமா?

இரத ஊர்வலத்தைத் தூரத்தில் இருந்து பார்க்க வேண்டும். கோயில் வளாகத்தில் கடைகள் எதுவும் அமைக்கக் கூடாது. இரண்டு பேர்கள் மட்டும் பால் குடம் எடுக்க அனுமதி. காவடி எடுப்பவர்கள் கூட இரண்டு பேர்கள் மட்டும் அனுமதி. கோவில் நிர்வாகம் கெடுபிடியாக இருக்கும். இதில் இன்னொரு சந்தேகம் சார்...

இந்த நிலைமையில் அடிதடி வெட்டு குத்து வருமே... எப்படி சார் சமாளிக்கப் போறீங்க. பால் குடம் இரண்டும் பேர்கள் மட்டும் அனுமதி என்றால் கணக்கு எங்கேயோ போயிடுமே சார்...

ஒருவேளை... ஒரு வேளை... நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்வோம். தைப்பூச திரள் ஏற்படுமானால் அதற்கு நீங்களும் உங்கள் கோவில் நிர்வாகமும் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். முடியுங்களா சார். செலவுகளை எல்லாம் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். முடியுங்களா சார். இந்த அலசல் நாளையும் வரும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
30.12.2020
 


29 டிசம்பர் 2020

பூஜாங் சமவெளியில் கண்ணீர் வடிக்கும் கலைத்தளம்

தமிழ் மலர்  - 29.12.2020

வந்தார்கள் வென்றார்கள் சென்றார்கள். இது வரலாற்றுச் சுவடுகளில் வந்து போகும் நல்ல ஒரு வசனம். அதே வசனத்தை இந்தப் பக்கம் கடாரத்தில் திருப்பிப் போட்டுப் பாருங்கள். வந்தார்கள் பார்த்தார்கள் உடைத்தார்கள். விக்கல் வந்து மூச்சு அடைக்கும் வசனம்.

They came, they won, they went. This is a good verse that comes in the footsteps of history. Turn the same verse over on this side. They came and saw and they demolished. A 1,200-year-old Candi called Candi Sungai Batu in Lembah Bujang, Kedah was destroyed by a developer on 02 Dec 2013. Malaysians, NGOs and netizens are angered over the demolition of the candi that is known as site number 11.

கிரேக்க நாட்டு அலெக்சாண்டர் கிழக்கு ஆசியா பக்கம் வந்தார். இந்தியாவின் சிந்துவெளி மாம்பழங்களில் மயங்கிப் போனார். கூடைக் கூடையாகக் கொண்டு போனார். சாப்பிட்டுச் சாப்பிட்டு பாரசீகத்தில் காய்ச்சல் வந்து இறந்து போனார். ரோமாபுரி ஜுலியஸ் சீசர் எகிப்திற்குச் சென்றார். கிளிமூக்கு கிளியோபாட்ராவைப் பார்த்தார். கொத்திக் கொண்டு போனார்.

விஜயத் துங்க வர்மரின் மூதாதையர்கள் கடாரத்திற்கு வந்தார்கள். அழகு அழகான கலைக் கோயில்களைக் கட்டிப் போட்டார்கள். அற்புதமான கலைத் தலங்களைத் தட்டி எழுப்பினார்கள். இதற்குப் பெயர் வந்தார்கள் வென்றார்கள் சென்றார்கள்.

Bujang Valley in the Merbok district of Kedah, (Lembah Bujang) is the richest archaeological site in Malaysia. It covers hundreds of square miles in the state of Kedah and houses temple remains dating back about 2,000 years, with more than 50 ancient candi at the site.

அதே இடத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சிலர் வந்தார்கள். அவர்களிடம் மனிதம் மறுக்கும் மதவாதம். இனங்கள் வெறுக்கும் இனவாதம். இரண்டும் கலந்த பொல்லாத வாதம்.

கொரோனா கொலைவெறி ஆட்டம் போல தலைக்கு மேல் ஏறி ஜிங்கு ஜிக்கான் ஆடியது. என்ன செய்வது என்று தெரியவில்லை. பாவம். இருப்பதை எல்லாம் இல்லாமல் செய்வது என்று பித்துப் பிடித்துப் போனது. இதற்குப் பெயர் வந்தார்கள் பார்த்தார்கள் உடைத்தார்கள்.

தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்தே செய்வது. வீட்டில் குடிக்கத் தண்ணீர் எடுத்து வரும் போது கிளாஸ் கீழே தவறி விழுந்து விட்டால் அது தவறு. அது தெரியாமல் செய்த தவறு.

ஆனால் ஒரு பெரிய கடப்பாறையைத் தூக்கி வந்து சாமி மேடையை அடித்து உடைத்து நொறுக்கிப் போடுவதைத் தவறு என்று சொல்ல முடியுமா.

உடைத்த பிறகு ’தெரியாமல் உடைச்சிட்டேன்... மன்னிச்சிடுங்க... மீண்டும் ஒட்டி வச்சு தர்றேன்’ என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா. என்னங்க இது. நாலு வயசு பிள்ளை விளையாடுகிற பிலாஸ்டிக் பொம்மையா?

இது தான் கடாரம் என்கிற கெடாவில் 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமும் நடந்தது. 2013 டிசம்பர் 02-ஆம் தேதி. கெடா, பூஜாங் சமவெளியில் சுங்கை பத்து புராதனத் தளம் ரகசியமாக உடைக்கப்பட்டது.

The matter was brought to public attention when one Nadarajah, a researcher on Bujang Valley history, discovered the disappearance of this Candi. Prof. P. Ramasamy, Deputy Chief Minister ll of the Penang State government, who had earlier researched on the Chola presence in Bujang Valley, confirmed the destruction of the temple.

இந்தத் தளத்திற்கு 11-ஆவது தளம் என்று பெயர். (Candi Sungai Batu in Lembah Bujang, Kedah). யுனெஸ்கோ அங்கீகரித்த உலகப் பாரம்பரியத் தளம். அதுவே பூஜாங் வெளியில் உடைக்கப்பட்ட 1200 ஆண்டுகள் பழைமையான உலகப் பாரம்பரியத் தளம் ஆகும்.

Social media users were furious, with responses ranging from disbelief that the site was not protected to accusations of an attempt by the state to erase Malaysia's pre-Islamic history.

கெடாவில் புக்கிட் சோராஸ் எனும் சமவெளி. அங்கே தொடங்கி மத்திய செபராங் பிறை; செரோக் தோக் குன் வரை பூஜாங் வெளி பரந்து விரிந்து போகிறது. அந்தப் பக்கம் பார்த்தால் குனோங் ஜெராய் மலை அடிவாரம். இந்தப் பக்கம் பார்த்தால் புக்கிட் மெர்தாஜாம். பரப்பளவு ஏறக்குறைய 224 சதுர கிலோ மீட்டர்கள். அவ்வளவு பெரிய இடம்.

கெடா மாநிலத்தில் குருண் நகருக்கு அருகில் இருப்பது மெர்போக் சிறுநகரம். அதன் அருகாமையில் பூஜாங் சமவெளி.

அந்தத் தளம் இருந்த பகுதியைக் கெடா மாநில அரசாங்கம் ஒரு நில மேம்பாட்டாளரிடம் விற்று விட்டது. அவரும் இரகசியமாக உடைத்து விட்டார். 2013-ஆம் ஆண்டு முக்ரீஸ் மகாதீர் கெடா முதல்வராக இருந்த போது நடந்த துர்நிகழ்ச்சி.

Kedah State authorities, said the site was on private land and had not been registered as historically significant. This profession of ignorance prompted further public scorn and a pledge from the state government to work with archaeologists to record the remaining ruins in the area.

Bujang Valley is home to the oldest man-made structure recorded in Southeast Asia — a clay brick monument nearly two millennia old. Excavations on the site have also uncovered jetty remains, iron smelting sites and relics with Hindu and Buddhist influences that point towards a Hindu-Buddhist kingdom that traces as far back as 110 CE.

மலேசியா முழுமைக்கும் எதிர்ப்பு அலைகள். உலக வரலாற்று அமைப்புகளின் ஆவேசங்கள். உடைப்பதை நிறுத்தி விட்டார்கள். புதிதாக அதே மாதிரி ஒரு தளத்தைக் கட்டித் தர நில மேம்பாட்டாளர் முன் வந்தார். என்னே அறிவுஜீவிகள். ஓர் உலகப் பாரம்பரியச் சின்னத்தை உடைத்துவிட்டு அதே மாதிரி அதே இடத்தில் கட்டித் தருகிறார்களாம். சிரிப்பதா அழுவதா. தெரியவில்லை.

அப்பா அம்மாவைச் சாகடித்து விட்டு மறுபடியும் புதிதாக அதே மாதிரி அப்பா அம்மாவை உருவாக்கித் தருகிறார்களாம். என்னத்தைச் சொல்ல? எங்கேயாவது போய் இடித்துக் கொள்ளலாம் என்று பார்த்தால் பக்கத்தில் ஒரு பெரிய சுவர் இல்லை. சரி.

பூஜாங் பள்ளத்தாக்கு ஆய்வு வட்டத்தின் தலைவர் டத்தோ வி. நடராஜா. இவரைப் பலருக்கும் தெரியும். மலாயா வரலாற்று ஆசிரியர். நல்ல ஒரு வரலாற்று வழிகாட்டி. ’சோழன் வென்ற கடாரம்’ எனும் நூலின் ஆசிரியர்.

விசயத்தைக் கேள்விப்பட்டு அவரும் அங்கு போய் இருக்கிறார். அந்தத் தளம் தரை மட்டமாக்கப்பட்டு வெறிச்சோடிக் கிடந்தது. உடனே டத்தோ நடராஜன் போலீஸில் ஒரு புகார் செய்தார்.

The site has been at the centre of research by various historians, archaeologists and university students in the past two decades. Most of the candi are in ruins, and some have been reconstructed and moved to a site near the Bujang Valley Archaeological Museum. Others, including candi number 11, were rebuilt at their original sites.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி அந்த இடத்தைப் பார்வையிட்டார். ஒரு தளம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் பொட்டல் காடாக வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. தலையில் அடித்துக் கொண்டார்.

இடிபாட்டு நாடகம் வெளிச்சத்திற்கு வந்தது. மலேசிய மக்கள் அதிர்ந்து போனார்கள். மலேசியர்கள்; உள்ளூர் வரலாற்று ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் கொந்தளித்துப் போனார்கள்.

I learnt that the Merbok land office had given the developer the go-ahead to clear the land because ‘there were no historical sites’, so the land office should also be held accountable for this. — Dr P. Ramasamy

இது போன்ற அரிய வரலாற்றுக் கலசங்களைப் பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் மேலும் இது போன்ற வரலாற்று தளங்கள் உடைக்கப்படுவது தொடரும் என்று நடராஜன் எச்சரித்தார்.

மீண்டும் சொல்கிறேன். உடைக்கப்பட்டது பூஜாங் பாரம்பரியத் தளம். அந்தத் தளத்தின் எண் 11. இந்தத் தளத்தைப் போல அங்கே அப்போது அந்த இடத்தில் மட்டும் 13 தளங்கள் இருந்து உள்ளன. எல்லாமே இந்து சமயத் தாக்கங்களைக் கொண்ட தளங்கள்.

அவற்றில் ஒன்றுதான் எண் 11 கொண்ட தளம். அது புனரமைக்கப்பட்ட ஒரு கோயில் தளம். ஏற்கனவே அது இடிந்த நிலையில் இருந்தது. 2000 ஆண்டு இடைவெளியில் என்றால் சாதாரண விசயமா? அந்தத் தளத்தின் அகலம் 150 அடி; நீளம் 250 அடி. சுங்கை பத்து பகுதியில் அமைந்து இருந்தது. ஒரு செருகல்.

இந்தத் தளத்தைப் போல ஒட்டு மொத்த பூஜாங் சமவெளியிலும் நூற்றுக் கணக்கான தளங்கள் உள்ளன. 224 கி.மீ. பரப்பளவில் படர்ந்து கிடக்கின்றன.

1936 - 1937-ஆம் ஆண்டுகளில் எச்.ஜி குவாரிச் வேல்ஸ் (HG Quaritch Wales) என்பவரும் அவருடைய மனைவி டோரதி வேல்ஸ் (Dorothy Wales) என்பவரும் அந்தத் தளத்தை அகழ்வாராய்ச்சி மூலமாகக் கண்டுபிடித்தர்கள். பின்னர் தோண்டி எடுக்கும் பணிகளையும் செய்தார்கள். 1974-ஆம் ஆண்டில் மீண்டும் புனரமைப்புகள் செய்யப்பட்டன.

லெம்பா பூஜாங் என்பது தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பழைமையான தொல்பொருள் தளம் ஆகும். மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பின் தாயகமாகும். கி.பி.110-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஒரு நினைவுச் சின்னம் ஆகும். அதாவது 1900 ஆண்டுகளுக்கு முந்தைய தளம். அதைப் போய் உடைத்து இருக்கிறார்கள்.

உலகப் புகழ் டைம் சஞ்சிகை. பலருக்கும் தெரியும். அந்தச் சஞ்சிகை 2000-ஆம் ஆண்டில் ஒரு கட்டுரைத் தொடரை வெளியிட்டது. அதன் பெயர் ’சப்போரோவில் இருந்து சுராபாயா வரையிலான சாலை’ (On the Road from Sapporo to Surabaya).

அதில் மலேசியாவைப் பற்றிய ஒரு பிரிவு. அதில் ‘பாரம்பரியம் மறுக்கப் பட்டது’ என்ற தலைப்பில் கடாரத்தைப் பற்றிய கட்டுரை. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப் பட்டது. ‘கடாரத்தைக் காப்பாற்றுங்கள்’ என்று அந்த சஞ்சிகை ஒரு வேண்டுகோளை முன்வைத்தது.

ஆனால் என்ன நடந்தது. இந்தியர்ப் பாரம்பரியம் சார்ந்தது எனும் ஒரே குறுகிய மனப்பான்மைதான் மேலோங்கியது. இருப்பதை எப்படியாவது இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்று காய்கள் நகர்த்தப் பட்டன.

என்னங்க… அது அப்பேர்ப்பட்ட ஒரு பெரிய இடம். உலகப் பாரம்பரிய இடம். யுனெஸ்கோ அங்கீகரித்த இடம். அது தெரியாதா. அதைப் போய் எப்படிங்க வீடு கட்டும் சீன முதலாளியிடம் விற்க வேண்டும். அந்தச் சீனரும் நல்ல நாள் பார்த்து புல்டோசர்களை வைத்து இடிக்க வேண்டும்.

நல்லவேளை. தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது. ஒரே ஒரு தளம் தான் தரைமட்டமாக்கப் பட்டது. அதற்குள் செய்தி வெளியாகி உலக வரலாற்று ஆசிரியர்கள் பலரும் கொப்பளித்து விட்டார்கள். உடைப்பதை நிறுத்திக் கொண்டார்கள். அப்போது முக்ரீஸ் மகாதீர் மாநில முதல்வராக இருந்தார்.

பத்திரிகைக்காரர்கள் சும்மா இருப்பார்களா. பிடித்துப் பேன் பார்த்து விட்டார்கள். அத்தைக்கு மீசை வைத்த கதையைச் சொல்லி முதல்வர் நழுவிக் கொண்டார்.

கலைக் கோயில் இருந்த இடத்தைத் தான் நில மேம்பாட்டுக்காகக் கொடுத்தோம். அவர் கலைக் கோயிலை உடைப்பார் என்று எங்களுக்குத் தெரியாது. இருந்தாலும் இனிமேல் அங்கே எந்த மேம்பாட்டு வேலைகள் எதையும் செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டோம். நில மேம்பாட்டாளரும் அதே இடத்தில் புதிய கோயிலைக் கட்டித் தருவதாகவும் சொல்லி விட்டார் என்று சமாதானம் சொன்னார்.

என்னங்க இது. கிண்டர்கார்டன் பிள்ளைகள் பஞ்சு மிட்டாய் வாங்கி ஊதி வெடிக்கிற கதை மாதிரி இருக்கிறது. கீழே விழுந்த ஊசி தெரியவில்லை என்றால் நியாயம். ஆனால் வீட்டு வாசலில் நிற்கிற எருமை மாடு தெரியவில்லை என்றால் என்னங்க நியாயம்.

என்னைக் கேட்டால் பகலில் பசு மாடு தெரியாதவர்களுக்கு இரவில் எருமை மாடு தெரியாது என்று தான் சொல்வேன்.

அந்தப் பூஜாங் சமவெளி சுங்கை பத்து புராதனக் கலைக் கோயிலை எவ்வளவு கஷ்டப்பட்டுக் கட்டி இருப்பார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கலைத் தளம். அந்தக் காலத்தில் சிமெண்டு, பிலாஸ்டர், பிசின், செங்கல் எதுவும் இல்லை. சுமைதூக்கி, சுமைதாங்கி, ஓங்கி தாங்கி, கிரேன் புல்டோசர் என்று எதுவுமே இல்லாத காலம்.

இருந்தாலும் பத்து இருபது மைல் தூரத்தில் இருந்து சுண்ணாம்பு மலை அடிவாரத்தில் இருந்து கல்பாறைகளை வெட்டி எடுத்து வந்து கட்டி இருக்கிறார்கள். அவற்றை ரொம்ப சுலபமாக ஒரே நாளில் இடித்துத் தரைமட்டமாக்கி இருக்கிறார்கள். கொஞ்சஞ்சம்கூட மனிதத் தன்மை இல்லாதவர்கள். எப்படிங்க மனசு வருது.

இந்தக் கட்டத்தில் கம்போடியாவில் இருக்கும் அங்கோர் வாட்; தாய்லாந்தில் இருக்கும் ஸ்ரீ சந்தனா மலை; பிரம்பனான் சிவன் கோயில்; போரோபுதூர் ஆலயம் ஆகியவை என் நினைவுக்கு வருகின்றன. இவற்றுக்கு எல்லாம் முந்தியது பூஜாங் பள்ளத்தாக்கில் உடைக்கப்பட்ட 11-எண் கொண்ட கலைக் கோயில் ஆகும்.

பூஜாங் பள்ளத்தாக்கைப் பற்றி 1970 - 1980 களின் வரலாற்றுப் பாட நூல்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது மலாக்கா வரலாறுக்கும் 1,000 ஆண்டுகளுக்கு முந்தியது. ஆனாலும் 1400-ஆம் ஆண்டில் மலாக்காவைப் பரமேஸ்வரா நிறுவிய காலத்தில் இருந்துதான் மலாயாவின் வரலாற்றை அங்கீகரித்து வருகிறார்கள். அதனால் பூஜாங் வரலாறு அடிபட்டுப் போகிறது.

ஒன்று சொல்வேன். இனவாதம் மதவாதம் இரண்டும் வன்முறைத் தீவிரவாதங்கள். மனித இனத்திற்குள் வரம்பு மீறும் உச்சவாதங்கள். மலைநாட்டு அரசியலுக்குள் பக்கவாதங்கள். அவையே மலேசியர் ஒற்றுமைக்கு பகைவாதங்கள்.

என்ன தான் வரலாற்றுப் படிவங்களைச் சிதைத்துப் போட்டாலும்; எப்படித்தான் வரலாற்றுப் படிமங்களை மறைத்துப் போட்டாலும்; மலாயாத் தமிழர்களின் வரலாற்று உண்மைகள் காலா காலத்திற்கும் உயிரோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

ஆயிரம் ஆயிரம் வேதனைச் சோதனைகளைக் கடந்து வந்த மலாயாத் தமிழர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்கும் மறக்காது. மறப்பதற்கு மனசும் வராது.

மலாயா தமிழர்கள் இந்த மண்ணில் சில பல நூறாண்டுகளுக்கு முன்னரே தடம் பதித்து விட்டார்கள். இது எவராலும் மறுக்க முடியாத ஒரு வரலாற்று உண்மை. உலக வரலாற்றில் தவிர்க்க முடியாத உண்மை.

அந்த உண்மைகள் காலா காலத்திற்கும் நிரந்தரமாகிப் போன உண்மைகள். அவையே வரலாறு சொல்லும் சத்தியமான உண்மைகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
29.12.2020