04 ஜூலை 2020

இந்தியப் பிரதமரும் இனிய குறளும்



மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு


(அதிகாரம்: படைமாட்சி குறள் எண்: 766)

இராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி மேற்கோள் காட்டிய திருக்குறள்.

*மு வரதராசன் உரை*
வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும்.

*மணக்குடவர் உரை*
மறமும், மானமும், நல்லவழிச் சேறலும், தெளிவுடைமையுமென இந்நான்குமே படைக்கு அரணாம்.

நல்லவழிச் சேறலாவது மறஞ்செய்யுங் காலத்துக் கலக்க மின்மை.

*பரிமேலழகர் உரை*
மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே- தறுகண்மையும், மானமும், முன் வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறலும், அரசனால் தேறப்படுதலும் என இந்நான்கு குணமுமே; படைக்கு ஏமம் - படைக்கு அரணாவது.

*சி இலக்குவனார் உரை*
வீரமும், மானமும், மாட்சிமைப்பட்ட நடைப்போக்கும், தெளிவும் என்று சொல்லப்பட்ட நான்கே படைக்குக் காவல் ஆகும். (படை அழியாமல் காக்கக் கூடியன.)

*பதவுரை* மறம் - வீரம்; மானம் - தாழ்வின்மை; மாண்ட - மாட்சிமைப்பட்ட; வழி - நன்னெறி; செலவு - செல்லுதல்; தேற்றம் - தெளியப்படுதல், தெளிவு, நம்பிக்கை; என - என்பது பற்றி; நான்கே - நான்குதாம்; ஏமம் - அரண்; படைக்கு - படைக்கு.

*நிறையுரை* வீரம் மானம் சிறந்த போர் நெறியில் செல்லுதல், போர் நோக்கத்தில் தெளிவு என்ற நான்கும்தாம் படைக்குக் காவலாகும். 



ஜப்பானில் சரஸ்வதி வழிபாடு

உலகின் பல நாடுகளில் சரஸ்வதி வழிபாடுகள் உள்ளன. அவற்றில் மிகப் பழமையான வழிபாட்டு முறை ஜப்பான் நாட்டில் உள்ளது. இன்றும் சரஸ்வதிக்காகக் கோயில்கள் கட்டி வழிபட்டு வருகிறார்கள். அந்தக் கோயில்களில் ஒன்றை ஜப்பான் நாட்டின் தேசிய வரலாற்றுத் தளமாகப் பிரகடனம் செய்து இருக்கிறார்கள். 



ஜப்பானில் சரஸ்வதி தேவியை பெந்தேன் (Benten) என்றும் பெண்சாய்தேன் (Benzaiten) என்றும் அழைக்கிறார்கள். இந்து தெய்வமான சரஸ்வதியில் இருந்து தோன்றிய ஜப்பானிய புத்த தெய்வம்.

பெண்சாய்தேன் சரஸ்வதி வழிபாடு 6-ஆம் நூற்றாண்டு; 8-ஆம் நூற்றாண்டுகளில் ஜப்பானுக்கு வந்தது. ஏறக்குறைய 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சரஸ்வதி வழிபாடுகள் அங்கே தொடங்கி விட்டன.

சீனாவின் தங்க ஒளி காப்பியத்தின் (Sutra of Golden Light) சீன மொழிபெயர்ப்புகள் வழியாக ஜப்பானுக்கு வந்தது. அந்தக் காப்பியத்தில் சரஸ்வதி தேவிக்காக ஓர் அத்தியாயத்தையே ஒதுக்கி இருக்கிறார்கள்.




ஜப்பானில் தாமரை சூத்திரம் எனும் சமய நூல் (Lotus Sutra). அந்த நூலில் ஜப்பானிய வீணையைக் கொண்டு சித்தரிக்கப் படுகிறார். ஜப்பானிய வீணையை பிவா (Biwa) என்று அழைக்கிறார்கள்.

ஜப்பானிய பௌத்த மதத்தில் இசையின் மூலமாக சொற்பொழிவுகள்; இசைக் கவிதைகள் படைக்க பிவா கருவியைப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கருவி முதலில் சீனாவில் தான் பிரபலமாக இருந்தது. பின்னர் கிழக்கு ஆசியா முழுவதும் பரவியது.

உலகின் பல நாடுகளில் சரஸ்வதி வழிபாடுகள் உள்ளன. கிரீஸ், இத்தாலி, ஆப்பிரிக்க நாடுகள்; மத்திய கிழக்கு நாடுகள்; கொரியா; ஜப்பான்; இந்தோனேசியா; மலேசியா நாடுகள். 




இந்து தெய்வ வழிபாட்டில் சரஸ்வதி தேவி வீணையைப் பயன்படுத்துகிறார்.

இருந்தாலும் பெண்சாய்தேன் வழிபாடு ஜப்பானின் ஷிந்தோ (Shinto) பயன்பாட்டுடன் ஒத்துப் போகிறது.

ஜப்பானிய சமூக நம்பிக்கைகளில் அதிர்ஷ்டத்திற்கு ஏழு தெய்வங்கள் உள்ளனர். அவர்களில் ஒருவராக சரஸ்வதி தேவி இடம் பிடித்து இருக்கிறார். அந்த அதிர்ஷ்ட தேவதைக்கு புகுஜின் (fukujin) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

இந்த புகுஜின் தேவதையை திரிமூர்த்தி தேவதை என்றும் சொல்கிறார்கள். திரிமூர்த்தி தேவதை என்றால் சரஸ்வதி; லெட்சுமி; பார்வதி. 




இந்து சமயத்தின் சரஸ்வதி; லெட்சுமி; பார்வதி தெய்வங்களுக்கு புகுஜின் தெய்வங்கள் என்று பெயர் சூட்டி சிறப்பு செய்கிறார்கள். மனசுக்குள் ஒரு தடுமாற்றம்.

பெண்சாய்தேன் தெய்வத்தை நீர், நேரம், வார்த்தைகள், பேச்சு, சொற்பொழிவு, இசை, அறிவு போன்ற எல்லாவற்றையும் பிரதிபலிக்கும் தெய்வமாக ஜப்பானியர்கள் பார்க்கிறார்கள். சரஸ்வதியின் சீன மொழிப் பெயர் பியான்கைட்டியன் (Biancaitian).

(Benzaiten is the goddess of everything that flows: water, time, words, speech, eloquence, music and by extension, knowledge)

ஜப்பானில் ஏராளமான இடங்களில் அவருக்குச் சின்னச் சின்ன கோயில்கள் உள்ளன. இருப்பினும் பெரிய ஆலயங்களும் உள்ளன.




சாகாமி விரிகுடாவில் (Sagami Bay) உள்ள எனோஷிமா தீவு (Enoshima Island); பிவா (Lake Biwa) ஏரியிலுள்ள சிகுபு தீவு (Chikubu Island); செட்டோ கடலில் (Seto Inland Sea) உள்ள இட்சுகுஷிமா தீவு (Itsukushima Island); ஆகிய தீவுகளில் சரஸ்வதிக்கு பெரிய பெரிய ஆலயங்களைக் கட்டி இருக்கிறார்கள்.

சிகுபு தீவில் உள்ள சரஸ்வதி ஆலயத்தை ஜப்பான் நாட்டின் இயற்கை அழகு; தேசிய வரலாற்றுத் தளமாகப் பிரகடனம் செய்து இருக்கிறார்கள். (It is a nationally designated Place of Scenic Beauty and Historic Site).

ஜப்பான் நாட்டில் இந்து சமயம் சார்ந்த சரஸ்வதி தெய்வத்தைப் போற்றிப் புகழ்கிறார்கள். உலகத்தில் வாழும் இந்துக்களை எல்லாம் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.07.2020

சான்றுகள்:

1. Ludvik, Catherine. “Uga-Benzaiten: The Goddess and the Snake.” Impressions, no. 33, 2012, pp. 94–109. JSTOR, JSTOR, www.jstor.org/stable/42597966.

2. Saraswati meets Buddha, SHAILAJA TRIPATHI, The Hindu, March 21, 2016

3. Pye, Michael (2013). Strategies in the study of religions. Volume two, Exploring religions in motion. Boston: De Gruyter. p. 279.

4. https://en.wikipedia.org/wiki/Hinduism_in_Japan






03 ஜூலை 2020

இந்தோனேசிய தூதரகத்தில் சரஸ்வதி சிலை

தமிழ் மலர் - 03.07.2020

அமெரிக்காவில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தின் சரஸ்வதி தேவி சிலை சரித்திரம் படைக்கின்றது. மத நல்லிணக்கத்தில் மகிமை பேசும் நினைவுச் சின்னமாய்ப் பார்க்கப் படுகின்றது. சிறுபான்மை இனத்தோருக்குச் சிறப்பு செய்யும் சீர்மிகுச் சின்னமாய்ப் போற்றப் படுகின்றது. வருவோர் போவோர் அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்து மலைக்கச் செய்கின்றது. இதில் இன்னோர் ஆச்சரியம்!



சரஸ்வதி தேவியாரின் காலடியில் அமர்ந்து இருக்கும் மூன்று மாணவர்களில் ஒருவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா. அவர் அமெரிக்காவின் அதிபராக இருந்த போது அவருக்கு மரியாதை செய்யும் வகையில் அந்தச் சிலை செய்யப்பட்டது. இடது கோடியில் அமர்ந்து இருக்கிறார்.

அவருடன் அமர்ந்து இருக்கும் மற்ற இருவரும் அவரின் வகுப்புத் தோழர்கள். இந்தோனேசியாவில் பாராக் ஒபாமா முதலாம் வகுப்பு படித்ததை நினைவு கூரும் வகையில் அந்தச் சித்தரிப்பு சிற்பம் அமைக்கப் பட்டது.

அமெரிக்காவுடன் தன்னுடைய உறவை மிகவும் தனித்துவமான முறையில் இந்தோனேசியா வெளிப்படுத்தி உள்ளது. இந்து பாரம்பரியத்தில் கல்வியின் சின்னமாக விளங்குபவர் சரஸ்வதி தேவி. இதன் மூலமாக அந்த நாட்டின் தனித்துவம் தனித்து நிற்கின்றது.



சரஸ்வதி தேவி என்பவர் ஞானம், இசை, வெண்மை ஆகியவற்றின் சின்னமாகும். மேலும் ஞானம், இசை, வெண்மை எனும் சின்னங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களாகும்.

இந்தச் சிலை அதன் வெண்மை நிறத்தின் காரணமாக மிக அர்த்தம் பொதிந்தாக மிளிர்கிறது. வெள்ளை நிறத்தில் வெள்ளை தாமரை; வெள்ளை நிறத்தில் அன்னம்; வெள்ளை நிறத்தில் சரஸ்வதி தேவி. அனைத்தும் வெண்மைத் தூய்மையின் பிரதிபலிப்புகளாய் பரிணமிக்கின்றன.

வாஷிங்டன் மாநகரில் மாசசூசெட்ஸ் அவென்யூ (Massachusetts Avenue) என்பதைத் தூதரக சாலை (Embassy Row) என்று அழைப்பார்கள். அந்தச் சாலை முழுவதும் பலரையும் ஈர்க்கக் கூடிய தூதரகக் கட்டிடங்கள். அவற்றின் முன்னால் ஒவ்வொரு நாட்டின் கொடிகளும் அழகு அழகாய்ப் பறந்து கொண்டு இருக்கும். 



தூதரகங்களுக்கு முன்னால் பெரும்பாலும் அவர்கள் நாட்டு வீரர்கள் அல்லது வீராங்கனைகளின் சிலைகளை நிறுத்தி வைத்து இருப்பார்கள். பிரிட்டிஷ் தூதரகத்தின் வளாகத்தில் வின்ஸ்டன் சர்ச்சில் சிலை. இந்தியத் தூதரகத்தின் வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலை.

அவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் அண்மைய காலத்தில் ஓர் இந்து தெய்வம் சரஸ்வதி தேவி அந்தச் சாலையில் அலங்கரிக்கத் தொடங்கி விட்டார். இந்தோனேசியத் தூதரகத்தின் முன்னால் ஒரு பூந்தோட்டத்தில் சரஸ்வதி தேவி நிற்கிறார். வெள்ளை பளிங்குக் கற்களில் தங்கம் ஒளிர்கின்ற சிலை வடிவத்தில் ஒயில் படிமம்.

மற்ற தூதரகங்களில் இருந்து தனித்து நிற்பதே எங்களின் குறிக்கோள் என்று அமெரிக்காவிற்கான இந்தோனேசியத் தூதர் டினோ பட்டி ஜலால் (Indonesian Ambassador Dino Patti Djalal) கூறுகிறார்.



நாங்கள் எதைச் செய்ய விரும்பினோமோ அதைச் செய்து முடித்தோம். சரஸ்வதி கற்றல் ஞானத்தின் தெய்வம் என்று ஜலால் கூறுகிறார். அவள் காலடியில் மூன்று குழந்தைகள் படிக்கிறார்கள். இது ஐந்து மாதங்களில் ஐந்து பாலி தீவு சிற்பிகளால் செய்யப் பட்டது.

சரஸ்வதி தேவியின் வெளிப்பாடு அழகானது. "பாலி முழுவதும் நீங்கள் காணும் இந்து தெய்வங்களில் அந்த வெளிப்பாடு இருக்கும்" என்று ஜலால் கூறுகிறார். "அமைதியான முகம்... அவரைப் பார்ப்பவர்களுக்கு ஆசீர்வாதம்" என்கிறார்.

உலகிலேயே மிகப் பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடு இந்தோனேசியா. இருந்தாலும் வாஷிங்டனில் உள்ள இந்தோனேசியத் தூதரகத்திற்கு இந்து மதத்தின் அடையாளத்தைத் தேர்வு செய்து இருக்கிறார்கள்.



தூதர் டினோ பட்டி ஜலால் சொல்கிறார்: "முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட இந்தோனேசியாவில் பாலி தீவு என்பது சின்ன ஓர் இந்து வளாகம். ஆனாலும் மத சுதந்திரத்திற்கான எங்கள் மரியாதை எப்போதும் உண்டு. அதைப் பற்றி இந்தச் சிலை நிறையவே சொல்கிறது. மிகப் பெரிய முஸ்லீம் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டின் தூதரகத்தின் முன் ஒரு சிலை. ஓர் இந்து சிலை" என்று சொல்கிறார்.

(Bali is a Hindu enclave in Muslim-majority Indonesia. And I think it says a lot about our respect for religious freedom that the statue in front of the country with the largest Muslim population is a Hindu statue. - Indonesian Ambassador Dino Patti Djalal)

சான்று: https://www.npr.org/2013/06/30/197146433/hindu-goddess-blesses-embassy-row

தூதர் டினோ பட்டி ஜலால் அமெரிக்காவில் உள்ள குஞ்ச் சமூக செய்தி நிறுவனத்திற்கு ஒரு பேட்டி கொடுத்து இருந்தார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் சொல்கிறார்:



சரஸ்வதி என்பவர் கற்றல் மற்றும் ஞானத்தின் தெய்வம். அவருக்கு நான்கு கரங்கள். ஒரு கரத்தில் கலை மற்றும் கலாச்சாரத்தை குறிக்கும் ஓர் இசைக் கருவி.

மறுபுறம் அட்சயமாலை எனும் பிரார்த்தனை மணிகள். இவை என்றைக்கும் அழிவு இல்லாத கல்வியைக் குறிக்கின்றன. இன்னொரு கையில் கையெழுத்துப் பிரதியை வைத்து இருக்கிறார். இது அறிவின் அடிப்படை மூலத்தைக் குறிக்கின்றது.

சரஸ்வதி தேவி ஓர் அன்னப் பறவையில் அமர்ந்து அமெரிக்காவுக்கு வருகை புரிந்து இருக்கிறார். அன்னப் பறவை என்பது ஞானத்தையும் அழகையும் குறிக்கும். அது உங்களுக்கும் தெரியும்.



நிருபர்: முஸ்லிம் மக்களின் மிகப் பெரிய தாயகமாக இந்தோனேசியா உள்ளது. இந்து தெய்வத்தைக் காட்சிப் படுத்த ஏன் முடிவு செய்தீர்கள்?

தூதர்: அது மில்லியன் டாலர் கேள்வி. இந்தோனேசியாவின் மிகவும் பிரபலமான ஒன்று பாலி. ஆனாலும் மிக மிகப் பிரபலமானது அல்ல. மத சுதந்திரத்திற்கான எங்கள் மரியாதை பற்றி அந்தச் சிலை நிறைய சொல்கிறது என்று நான் நினைக்கிறேன்.

நிருபர்: மாசசூசெட்ஸ் அவென்யூ சாலையில் உள்ள அனைத்துத் தூதரக வளாகங்களிலும் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. அந்தச் சிலைகளில் பெரும்பாலும் தாடி வைத்து இருக்கும் வயதான மனிதர்களாகவே உள்ளனர். சரஸ்வதி தெய்வத்தைப் போன்று ஓர் அழகான சிலை இந்தச் சாலையில் எதுவும் இல்லையே?



தூதர்: ஆம். நீங்கள் சொல்வது மிகவும் சரி. அதைத்தான் நாங்கள் செய்ய விரும்பினோம். அதுதான் சரி என்று நானும் நினைக்கிறேன். அது ஒரு தனித்துவமான நோக்கம். தனித்துவமான பார்வை.

இதனால் மதப் பன்மைத்துவத்தை பார்க்க முடிகின்றது. மாறுபட்ட பன்முகத் தன்மையை மறப்பதற்கு வாய்ப்பு கிடைக்கின்றது. சிறுபான்மையினரை மதித்துப் பழகும் உணர்வு ஏற்படுகின்றது.

தூதர் டினோ பட்டி ஜலால் அருமையான ராஜதந்தரி. அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக 2013 செப்டம்பர் மாதம், தன் தூதர் பதவியை ராஜினாமா செய்தார். இவருக்குப் பின்னர் புடி போவலெக்ஸோனோ (Budi Bowoleksono) என்பவர் அமெரிக்காவின் இந்தோனேசியத் தூதர் பதவியை ஏற்றார்.

இந்திய தூதரகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இந்தோனேசிய தூதரகம் உள்ளது. வெள்ளை மாளிகையில் இருந்து ஒரு மைல் தொலைவு. 



ஒவ்வொரு நாளும் வாஷிங்டன் நகரத்திற்கு வருகை தரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பாகவும் இந்தச் சரஸ்வதி சிலை மாறிவிட்டது.

இந்தச் சிலை நியோமன் சுதர்வா (Nyoman Sudarwa) எனும் சிற்பியின் தலைமையில் மேலும் நான்கு சிற்பிகளால் உருவாக்கப் பட்டது. 2013 ஜூன் 18-ஆம் தேதி தூதரகத்தின் முன் வளாகத்தில் நிறுவப்பட்டது. இதன் உயரம் 16 அடி (4.9 மீ). தங்க முலாம் வேயப்பட்ட வெள்ளை பளிங்குச் சிலை.

ஒரு வருடம் கழித்து, 2014 செப்டம்பர் 25-ஆம் தேதி, இந்தோனேசிய அதிபர் சுசிலோ பாம்பாங் யுடோயோனோ (Susilo Bambang Yudhoyono) அமெரிக்காவுக்கு வந்து திறப்பு விழா செய்தார். இந்தியத் தூதரகத்தில் நிறுவப்பட்டு இருக்கும் மகாத்மா காந்தி சிலையை விட சரஸ்வதி சிலை சற்று உயரமாக உள்ளது.

’இந்தச் சிலையின் அமைப்பு நம் இதயங்களைத் திறந்து வைக்கும். நமக்குள் இருக்கும் வெறுப்புகளையும் தவறான புரிதல்களையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் என் எதிர்பார்க்கிறேன்’ என்று அதிபர் சுசிலோ பாம்பாங் கூறினார்.



அமெரிக்காவிற்கான இந்தோனேசிய தூதர் டாக்டர் டினோ பட்டி ஜலால்; தேசிய பொருளாதாரக் குழுவின் தலைவர்; மற்றும் பாலியில் உள்ள பாண்டுங் மாவட்ட மக்களின் ஆதரவில் அந்தச் சிலை உருவாக்கப்பட்டது. திறப்பு விழாவின் போது சிற்பிகள் அனைவரும் பாலியில் இருந்து வாஷிங்டனுக்கு அழைத்து வரப் பட்டனர்.

சிலையை வடிவம் அமைப்பதற்கு ஐந்து மாதங்கள் பிடித்தன. இந்தச் சிலை போவோர் வருவோரை எல்லாம் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

30 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த சிலையின் முன் ஒரு கல்வெட்டு உள்ளது. அதில் "அன்பும் அறிவும் அழியாத சக்திகள். அந்தச் சக்திகள் கடவுளின் அனைத்துக் குழந்தைகளின் இதயங்களையும் ஈர்க்கட்டும். பூமியில் என்றும் அமைதி நிலவட்டும்" - பாண்டுங் (பாலி) மேயர் அனாக் அகோங் கதே அகோங் (Anak Agung Gde Agung). என்னே ஒரு வாசகம்.

மதத்தின் பெயரால் சில பல நாடுகளில் சொல்ல முடியா அவலங்கள். சிறுபான்மை இனத்தவரின் வரலாறுகளைச் சிதைப்பது எப்படி; அவர்களின் மொழியை ஒழிப்பது எப்படி; அவர்களின் இனத்தை அழிப்பது எப்படி; அவர்களைச் சிறுச் சிறுகச் சாகடிப்பது எப்படி என்று இரவு பகலாய் ரூம் போட்டு டிஸ்கஷன் பண்ணுகிறவர்கள் எங்கே? சமய நல்லிணக்கத்தின் ஜீவநாடிகளாய் வாழும் மனிதத்தின் உயிர்நாடிகள் எங்கே?

இந்தோனேசியர்கள் சமய நல்லிணக்கத்தின் தலைவாசலாய் அமைகின்றார்கள். வாழ்த்தப்பட வேண்டிய நன்மக்களாய் வாழ்கின்றார்கள். அவர்கள் வழங்கி இருக்கும் பெருமையில் கண்கள் குளமாகின்றன. சிரம் தாழ்த்துகிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
03.07.2020

சான்றுகள்:

1. https://www.huffpost.com/entry/goddess-saraswati-statue-_b_3460615

2.https://www.indiawest.com/news/global_indian/statue-of-goddess-saraswati-installed-in-dc/article_0229a289-a5c0-536a-8a68-16e774e5dca8.html

3. Routledge Handbook of Contemporary India



02 ஜூலை 2020

சிங்கப்பூர் மலையில் பரமேஸ்வரா தங்க ஆபரணங்கள்

சிங்கப்பூர் கென்னிங் மலை (Fort Canning Hill) உச்சியில் ஒரு கோட்டை. அந்தக் கோட்டையின் வளாகத்தில் ஒரு வரலாற்றுக் கண்டுபிடிப்பு. 1926-ஆம் ஆண்டில் மலையின் உச்சியில் ஒரு நீர் தேக்கம் கட்டுவதற்காக நிலத்தைத் தோண்டிய போது அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

சுமார் 3 மீட்டர் ஆழத்தில் அதிசயமான சில பல தங்க ஆபரணங்கள். கட்டுமானத் தொழிலாளர்கள் கண்டு எடுத்தார்கள். கிடைத்த தங்க நகைகள்; தங்க ஆபரணங்கள் எல்லாம் சாதாரணமானவை அல்ல.

அனைத்துமே 14-ஆம் நூற்றாண்டின் கலைநய எழில் வடிவங்கள். இந்திய ஜாவானிய பாணியிலான தங்க ஆபரணங்கள். அந்த நகைகள் 700 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப் பட்டது.

தங்க நகைகளில் ஒளி வீசும் மோதிரங்கள்; பளிச்சிடும் காதணிகள். உடைகள் மீது பயன்படுத்தப்படும் தங்கச் சங்கிலிகள். சிறிய இரத்தினங்களைக் கொண்ட வளையல்கள். வைரம் பதிக்கப்பட்ட கால் கொலுசுகள்.

மிக மிக அழகான நகைகள். அவற்றில் ஒரு நகை, காளி துர்கா தேவியின் தலை வடிவத்தைக் கொண்ட ஆயுதச் சங்கிலி. பொதுவாக அத்தகைய சிற்பக் கலை ஆபரணங்களைச் சுமத்திரா; ஜாவா தீவுகளில் தோண்டி எடுத்து இருக்கிறார்கள்.

1984-ஆம் ஆண்டில், ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்குப் பிறகு, சிங்கப்பூர் கென்னிங் மலையின் ரகசியங்களைக் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கென்னிங் மலையின் உச்சியிலும் அதன் சரிவுப் பகுதிகளிலும் சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகம் ஆய்வுகள் செய்தது.

ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் பெரிய பெரிய ஆச்சரியத்தை அளித்தன. அந்த ஆய்வுகள் சிங்கப்பூர் கென்னிங் மலை உச்சியில் ஓர் அரண்மனை இருந்ததைச் சுட்டிக் காட்டுகின்றன.

ஓர் அரசப் பரம்பரையினர் வாழ்ந்ததற்கான தடயங்களையும் உறுதி செய்தன. ஐந்து சந்ததிகளைச் சார்ந்த அரசர்கள் ஆட்சி செய்ததற்கான சான்றுகளையும் முன் வைத்தன. வேறு என்னங்க சொல்ல முடியும்.

இந்தக் கென்னிங் மலையை மகா மேரு மலை என்று முன்பு அழைத்தார்கள். அங்கேதான் இப்போதைய சிங்கப்பூரின் கென்னிங் மலை கோட்டை உள்ளது. மலாய் மொழியில் புக்கிட் லாராங்கான் (Bukit Larangan). சிங்கப்பூரைத் தோற்றுவித்த நீல உத்தமன் வைத்த பெயர்.

மேரு மலை என்பது பண்டைய தென்கிழக்கு ஆசிய கலாச்சாரத்தில் தெய்வீகத் தன்மையுடன் தொடர்பு கொண்டது. மேரு மலை எனும் பெயரில் ஜாவா, சுமத்திரா, கலிமந்தான், போர்னியோ தீவுகளில் சில பல மேரு மலைகள் உள்ளன. கெடாவில் உள்ள குனோங் ஜெராய் மலையின் பெயரும் மேரு மலை தான்.

இந்தியா, தாய்லாந்து, கம்போடியா, மியன்மார், வியட்நாம் ஆகிய நாடுகளிலும் மேரு மலை எனும் பெயரில் மலைகள் உள்ளன.

கம்போடியாவில் இருக்கும் அங்கோர்வாட் ஆலயத்திற்கு மேருமலைக் கோட்டை என்று சூரியவர்மன் பெயர் வைத்து இருக்கிறார்.

அந்த வகையில் சிங்கப்பூர் மலைக்கு மேரு மலை என பெயர் வைக்கப் பட்டது. அங்கே தான் நீல உத்தமன் தன் அரண்மனையை முதன்முதலில் கட்டி இருக்கிறார். அங்கே இருந்து தான் சிங்கப்பூரை ஆட்சி செய்து இருக்கிறார். இருந்தாலும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இடத்தை மாற்றி விட்டார்.

அதன் பிறகு அந்த இடம் அரசப் பரம்பரையினரின் கல்லறைகள் இடமாக மாறி இருக்கிறது.

சிங்கப்பூர் மேரு மலை 14-ஆம் நூற்றாண்டில் செழித்து வளர்ந்த பண்டைய சிங்கப்பூராவின் மையமாக இருந்து உள்ளது. அரசியல், மதம், வணிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைக் கொண்டதாகவும் இருந்து உள்ளது.

1330-ஆம் ஆண்டில், சீனப் பயணி வாங் தயான் (Wang Dayuan) சிங்கப்பூர் தீவுக்கு பயணம் செய்தார். சிங்கப்பூருக்கு தான்மாக்ஸி (Danmaxi) என்று பெயர் சூட்டி இருக்கிறார்.

அந்தச் சீனப் பயணி டாயோய் ஷிலீ (Daoyi Zhilüe) எனும் வரலாற்று நூல் எழுதி இருக்கிறார். அதில் சிங்கப்பூரின் இரண்டு தனித்துவமான குடியேற்றங்களை விவரித்து இருக்கிறார்.

முதலாவது லாங் யா மென் (Long Ya Men) குடியேற்றம். இரண்டாவது பான் ஜூ (Ban Zu) குடியேற்றம். இந்தக் குடியேற்றங்கள் சிங்கப்பூர் மேரு மலையில் இருந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

14-ஆம் நூற்றாண்டின் இறுதியில், சிங்கப்பூரைப் பரமேஸ்வரா ஆட்சி செய்த போது மஜபாகித் அரசு தாக்கியது. அதனால் பரமேஸ்வரா மலாக்காவிற்கு இடம் பெயர்ந்தார்.

அந்த நேரத்தில் தான், சிங்கப்பூர் மேரு மலையில் மனிதர்களின் குடியேற்றம் கைவிடப்பட்டு இருக்கலாம் என தொல்பொருள் சான்றுகள் உறுதி படுத்துகின்றன.

அந்தப் புலம்பெயர்வு காலத்தில் தான் அந்த நகைகளையும் அங்கேயே விட்டுச் சென்று இருக்கிறார்கள். இந்த நகைகள் தான் பரமேஸ்வரா சிங்கப்பூரை ஆட்சி செய்த வரலாற்றை உறுதி படுத்துகின்றன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.07.2020

1.https://www.roots.sg/Content/Places/surveyed-sites/Archaeological-Excavation-Site-at-Fort-Canning-Park

2. https://eresources.nlb.gov.sg/history/events/2ebfebad-a4d5-4bbb-bf43-c7db6e30eb7d

3.https://www.researchgate.net/publication/273034313_Archaeological_Research_on_the_Forbidden_Hill_of_Singapore_Excavations_at_Fort_Canning_1984_By_John_N_Miksic_Singapore_National_Museum_1985_Pp_xii_141_Illustrations_Appendix_Records_and_Notices_of_Ear

4. https://en.wikipedia.org/wiki/Mount_Meru













பரமேஸ்வரா தாயார் சரவர்தானி

தமிழ் மலர் - 02.07.2020

பரமேஸ்வரா என்பவர் யார்? எங்கே பிறந்தார்? எங்கே வளர்ந்தார்? எங்கே வாழ்ந்தார்? எங்கே இறந்தார்? அவருடைய கல்லறை எங்கே இருக்கிறது? 

ஏன் மலாயாவுக்கு வந்தார்? பரமேஸ்வரா மதம் மாறினாரா? பரமேஸ்வராவின் வரலாற்றுப் படிவங்கள் காணாமல் போவது உண்மையா? இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதில்கள் கிடைக்காத வரையில் பரமேஸ்வராவின் வரலாறு முழுமை அடையாது. அவரைப் பற்றிய வரலாற்றுச் சான்றுகளைத் தேடி எடுத்து அவரைப் பற்றிய உண்மைகளை உலகத்திற்குச் சொல்ல வேண்டும். அதுவே மலாயா தமிழர்களின் கடமையாகும்.



இந்தக் கட்டத்தில் பரமேஸ்வராவின் தாயாரைப் பற்றிய தகவல்களும்; தந்தையாரைப் பற்றிய தகவல்களும் நமக்கு கிடைத்து உள்ளன. அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

பரமேஸ்வராவின் தந்தையார் பெயர் ராணா மங்களா (Rana Menggala). அசல் பெயர் தமியா ராஜா (Damia Raja). மற்றொரு பெயர் ஸ்ரீ மகாராஜா (Sri Maharaja). இந்த ராணா மங்களா தான் சிங்கப்பூரை ஆட்சி செய்த நான்காவது ராஜா.

பரமேஸ்வராவின் தாயார் பெயர் சரவர்தானி (Sarawardani). 



தமியா ராஜா - சரவர்தானி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் பரமேஸ்வரா. மூத்த மகன். பிறந்த ஆண்டு 1344. பிறந்த இடம் சிங்கப்பூர் மேரு மலை. இதைக் கென்னிங் குன்று (Fort Canning Hill) என அழைக்கிறார்கள். மலாய் மொழியில் புக்கிட் லாராங்கான் (Bukit Larangan). சிங்கப்பூரைத் தோற்றுவித்த நீல உத்தமன் வைத்த பெயர்.

மேரு என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். இந்து தொன்மவியல் புராணங்கள்; காப்பிங்களில் குறிப்பிடப்படும் ஒரு மலை ஆகும். மகா மேரு, மந்திர மலை என்றும் இந்த மலை அழைக்கப் படுகிறது.

கடைச் சங்கக் காலத்தில் குமரி ஆறு; பற்றுளி ஆறு ஆகியவை மேரு மலையில் உற்பத்தியான ஆறுகள் என சீனப் பழங்கதைகளில் சொல்லப் படுகின்றன.



இந்தோனேசியாவில் அரசுகளை உருவாக்கிய பல்லவ மன்னர்கள் மேரு எனும் சொல்லை அதிகமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதே போல சிங்கப்பூருக்கு வந்த நீல உத்தமன் அவர் பார்த்த முதல் மலைக்கு மேரு மலை என்று பெயர் வைத்து இருக்கிறார். ரொம்ப வேண்டாம்.

கம்போடியாவில் இருக்கும் அங்கோர்வாட் உலக அதிசயம் இருக்கிறதே, அதற்கு மேருமலைக் கோட்டை என்று சூரியவர்மன் பெயர் வைத்து இருக்கிறார். அவரும் பல்லவர் இனத்தைச் சேர்ந்தவர் தானே.

அந்த வகையில் சிங்கப்பூர் மலைக்கு மேரு மலை என பெயர் வைக்கப் பட்டது. அங்கே தான் நீல உத்தமன் தன் அரண்மனையை முதன்முதலில் கட்டி இருக்கிறார். அங்கே இருந்து தான் சிங்கப்பூரை ஆட்சி செய்து இருக்கிறார். இருந்தாலும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இடத்தை மாற்றி விட்டார்.



அதன் பிறகு அந்த இடம் அரசப் பரம்பரையினரின் கல்லறைகள் இடமாக மாறி இருக்கிறது.

சிங்கப்பூர் மேரு மலை 14-ஆம் நூற்றாண்டில் செழித்து வளர்ந்த பண்டைய சிங்கப்பூராவின் மையமாக இருந்து உள்ளது. அரசியல், மதம், வணிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களைக் கொண்டதாகவும் இருந்து உள்ளது.

1330-ஆம் ஆண்டில், சீனப் பயணி வாங் தயான் (Wang Dayuan) சிங்கப்பூர் தீவுக்கு பயணம் செய்தார். சிங்கப்பூருக்கு தான்மாக்ஸி (Danmaxi) என்று பெயர் சூட்டி இருக்கிறார்.

அந்தச் சீனப் பயணி டாயோய் ஷிலீ (Daoyi Zhilüe) எனும் வரலாற்று நூல் எழுதி இருக்கிறார். அதில் சிங்கப்பூரின் இரண்டு தனித்துவமான குடியேற்றங்களை விவரித்து இருக்கிறார்.



முதலாவது லாங் யா மென் (Long Ya Men) குடியேற்றம். இரண்டாவது பான் ஜூ (Ban Zu) குடியேற்றம். இந்தக் குடியேற்றங்கள் சிங்கப்பூர் மேரு மலையில் இருந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சிங்கப்பூர் மேரு மலையின் முக்கியத்துவத்திற்கு சான்றுகள் உள்ளன. 1928-ஆம் ஆண்டில் ஒரு கண்டுபிடிப்பு. அதாவது 14-ஆம் நூற்றாண்டின் ஜாவானிய பாணியிலான தங்க ஆபரணங்களின் ஒரு தற்காலிக சேமிப்புக் கிடங்கைக்  கண்டுபிடித்தார்கள்.

14-ஆம் நூற்றாண்டின் இறுதியில், சிங்கப்பூரைப் பரமேஸ்வரா ஆட்சி செய்த போது மஜபாகித் அரசு தாக்கியது. அதனால் பரமேஸ்வரா மலாக்காவிற்கு இடம் பெயர்ந்தார். அந்த நேரத்தில் தான், சிங்கப்பூர் மேரு மலையில் மனிதர்களின் குடியேற்றம் கைவிடப்பட்டு இருக்கலாம் என தொல்பொருள் சான்றுகள் உறுதிபடுத்துகின்றன. சரி. தமியா ராஜா ராணா மங்களா வரலாற்றுக்கு வருகிறோம்.



தமியா ராஜா ராணா மங்களா மஜபாகித் வம்சாவழியைச் சேர்ந்தவர். தமியா ராஜா - சரவர்தானி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் பரமேஸ்வரா. மஜபாகித் வம்சாவழியினர் பல்லவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே பரமேஸ்வராவும் பல்லவ இனத்தைச் சேர்ந்தவர் என்று உறுதியாகச் சொல்லலாம்.

மஜபாகித் பேரரசை ஆட்சி செய்த மகாராணியார் திரிபுவனா துங்காதேவியின் கொள்ளுப் பேரன் தான் பரமேஸ்வரா. இந்த மகாராணியார் மஜபாகித் அரசின் மூன்றாவது ஆட்சியாளர்.

பரமேஸ்வராவின் வழித்தோன்றலைப் பார்க்க வேண்டும் என்றால் சிங்காசரி; மஜபாகித் அரசுகளின் வரலாற்றுப் பின்னணியைப் பார்க்க வேண்டும். அப்போது தான் உண்மையான விவரங்கள் தெரிய வரும்.

மஜபாகித் அரசு ஜாவாவை ஆட்சி செய்த அரசு. கடைசி இந்து மத அரசு. மஜபாகித் அரசு தோன்றுவதற்கு முன்னர் சிங்காசரி (Singhasari Kingdom) எனும் அரசு இருந்தது. இந்தப் அரசும் கிழக்கு ஜாவாவை ஆட்சி செய்தது. இது இந்து மயமான அரசு. இந்து மதமும் பௌத்த மதமும் கலந்த அரசு. 



சிங்காசரி பேரரசை ஆட்சி செய்த மன்னர்கள்:

1. கென் அரோக் - ராஜசா (Ken Arok 1222 – 1227)

2. அனுசபதி - அனுசநாதா (Anusapati 1227 – 1248)

3. பஞ்சி தோஜெயா (Panji Tohjaya 1248)

4. விஷ்ணுவரதனா நரசிம்ம மூர்த்தி (Vishnuvardhana - Narasimhamurti 1248 – 1268)

5. ஸ்ரீ கீர்த்தநகரா (Kertanegara 1268 – 1292)

மன்னர் ஸ்ரீ கீர்த்தநகரா காலத்தில் சிங்காசரி அரசு உச்சத்தில் கோலோச்சியது. இருப்பினும் உள்நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களில் ஸ்ரீ கீர்த்தநகரா கொல்லப் பட்டார். அவருடைய மருமகன் ராடன் விஜயா, மதுரா தீவுகளுக்குத் தப்பிச் சென்றார். அங்கு இருந்த ஆரியா வீரராஜா (Arya Viraraja) என்பவர் ராடன் விஜயாவுக்கு உதவி செய்தார். 



பின்நாட்களில் கிழக்கு ஜாவா பிரந்தாஸ் சமவெளியில் ராடன் விஜயா ஒரு புதிய அரசைத் தோற்றுவித்தார். அந்த அரசின் பெயர் தான் மஜபாகித். இதை இதோடு நிறுத்திக் கொள்கிறேன். மீண்டும் சிங்காசரி அரசிற்கு வருகிறேன் 

சிங்காசரி பேரரசின் கடைசி மன்னர் ஸ்ரீ கீர்த்தநகரா. இவருடைய மகளின் பெயர் ஸ்ரீ காயத்ரி ராஜ பத்தினி (Sri Gayatri Rajapatni). இவரைத் தான் ராடன் விஜயா திருமணம் செய்தார். அந்த வகையில் ராடன் விஜயா, ஸ்ரீ கீர்த்தநகராவின் மருமகன். ராடன் விஜயாவின் மற்றொரு பெயர் நாராரியா சங்கரமவிஜயா (Nararya Sangramawijaya)

இவர்களுக்குத் திரிபுவனா துங்காதேவி (Tribuana Tunggadewi) எனும் மகள் பிறந்தார். இந்தத் திரிபுவனா துங்காதேவி தான் மஜபாகித் பேரரசின் மூன்றாவது ஆட்சியாளர் (1326-1350).

இவரின் மற்றொரு பெயர் திரிபுவனா துங்காதேவி ஜெயவிஷ்ணு வரதனி (Tribhuwanno Tunggadewi Jayawishnu Wardhani). இன்னொரு பெயரும் உள்ளது. கீதா ராஜா (Dyah Gitarja).



மஜபாகித் பேரரசை மாபெரும் பேரரரசாக மாற்றி அமைத்தவர் மகாராணியார் திரிபுவனா துங்காதேவி. மஜபாகித் பேரரசை இவர் தனி ஒருவராக ஆட்சி செய்ததால் தான் இவரை மகாராணியார் என்று அழைக்கிறோம்.

Raden Wijaya, the first king (1293-1309) of Majapahit, was married to Sri Gayatri Rajapatni, a daughter of Sri Kertanegara, the last king (1268-1292) of Singhasari Kingdom, and had a daughter, Tribuana Tunggadewi, the third ruler (1326-1350) of Majapahit.

மகாராணியார் திரிபுவனா துங்காதேவி, மஜபாகித்தை பேரரசைச் சேர்ந்த இளவரசர் கீர்த்தவரதனா (Kertawardana) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

திரிபுவனா துங்காதேவி - கீர்த்தவரதனா தம்பதிகளுக்கு ஒரு மகள் பிறந்தார். அவருடைய பெயர் ஈஸ்வரி (Iswari). இந்த ஈஸ்வரி மற்றோர் மஜபாகித் இளவரசரைத் திருமணம் செய்து கொண்டார். அந்த இளவரசரின் பெயர் சிங்கவரதனா (Singawardana).



ஈஸ்வரி - சிங்கவரதனா தம்பதியினருக்கு ஒரு மகள் பிறந்தார். அவருடைய பெயர் சரவர்தானி (Sarawardani). இவர் ராணா மங்களா (Rana Menggala) எனும் மஜபாகித் இளவரசரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அவருடைய பெயர் பரமேஸ்வரா. இந்தப் பரமேஸ்வராதான் மலாக்காவைத் தோற்றுவித்த கதாநாயகர்.

அதாவது மஜபாகித் பேரரசை ஆட்சி செய்த மகாராணியார் திரிபுவனா துங்காதேவியின் கொள்ளுப் பேரன் தான் பரமேஸ்வரா (great-grandson of Empress Tribhuwana Wijaya Tunggadewi)

பரமேஸ்வராவின் கொள்ளுத் தாத்தா தான் நீல உத்தமன். சிங்கப்பூரை உருவாக்கியவர். சிங்கப்பூருக்குச் சிங்கம் ஊர் என்று பெயர் வைத்தவர். சரி.



ஆக பரமேஸ்வராவின் தந்தையார் பெயர் ராணா மங்களா (Rana Menggala). அசல் பெயர் தமியா ராஜா (Damia Raja). மற்றொரு பெயர் ஸ்ரீ மகாராஜா (Sri Maharaja). ராணா மங்களா தான் சிங்கப்பூரை ஆட்சி செய்த நான்காவது ராஜா. பரமேஸ்வராவின் தாயார் பெயர் சரவர்தானி (Sarawardani).

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு...
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன...
பதினாறும் பாட சுகமானது...

என்று கண்ணதாசன் எழுதிச் சென்றார்.

அவருக்கு முன்னாலேயே பரமேஸ்வர ராகம் எனும் ஒரு ராகம் மலாக்காவில் பூபாளம் பாடி இருக்கிறது. அந்த ராகம் தான் மலாக்காவின் வரலாற்றில் பதினேழாவது ராகமாக ஆனந்த பைரவிகளையும் பாடிக் கொண்டு இருக்கிறது.

ஏழு சுவரங்களில் அழகிய ராகம் சம்பூர்ண ராகம்.
ஆறு சுவரங்களில் அதிசய ராகம் சாடவ ராகம்.
ஐந்து சுவரங்களில் அற்புத ராகம் ஔடவ ராகம்.
நான்கு சுவரங்களில் அபூர்வ ராகம் வக்ர ராகம்.
மூன்று சுவரங்களில் ஆனந்த ராகம் நவநீத ராகம்.

அத்தனை ராகங்களிலும் அப்போதும் இப்போதும் எப்போதும் ஓர் அம்சவர்த்தினி ராகம் உள்ளது. அந்த ராகம் தான் பரமேஸ்வரா ராகம்.

சான்றுகள்:

1. Sarawardani. married Ranamenggala, and had a son, Parameswara who was born in 1344,
(https://www.newworldencyclopedia.org/entry/Malacca_Sultanate)

2. Parameswara merupakan cicit (turunan keempat) dari Ratu Tribhuwana Wijayatunggadewi, penguasa Majapahit yang ke 3.
(https://tirto.id/takhta-majapahit-dan-bakti-tribhuwana-tunggadewi-kepada-ibu-cB9k)

3. Urutan silsilahnya adalah sebagai berikut: Pertama, Ratu Tribhuwana Wijayatunggadewi menikah dengan Kertawardhana (anak tertua dari Mahesa Anabrang / Adwayabrahma), memiliki anak perempuan: Iswari.
(https://id.wikipedia.org/wiki/Tribhuwana_Wijayatunggadewi)

4. Kedua, Iswari menikah dengan Singawardana, memiliki anak perempuan: Sarawardani. Ketiga, Sarawardani menikah dengan Ranamenggala (yang kemudian bergelar Shri Rana Wira Kerma), memiliki anak laki laki: Parameswara
(https://ms.wikipedia.org/wiki/Perbincangan:Parameswara)