15 அக்டோபர் 2022

ஜேம்சு புரூக்

(மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்; தமிழாசிரியர்களின் பயன்பாட்டிற்காக சரவாக் மாநிலத்தைப் பற்றி 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தயாரித்துத் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்துள்ளேன். அங்கிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தக் கட்டுரை 22.05.2022-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.)

(ஜேம்சு புரூக் கட்டுரையின்
முகவரி: https://ta.wikipedia.org/s/b667 )

சர் ஜேம்சு புரூக் (ஆங்கிலம்: Sir James Brooke; மலாய்: Raja Putih Sarawak) (பிறப்பு: 29 ஏப்ரல் 1803 – இறப்பு: 11 சூன் 1868), என்பவர் போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியில் சரவாக் சுல்தானகம் எனும் சரவாக் இராச்சியத்தை (Raj of Sarawak) உருவாக்கியவர்.


சரவாக் மாநிலத்தில், வெள்ளை இராஜா (Rajah of Sarawak) எனும் புரூக் பரம்பரையைத் தோற்றுவித்தவர்; அதன் முதல் ராஜாவாக சரவாக் இராச்சியத்தில் கோலோச்சியவர்; 1841-ஆம் ஆண்டில் இருந்து 1868-ஆம் ஆண்டு, அவர் இறக்கும் வரையில் சரவாக் இராச்சியத்தை ஆட்சி செய்தவர்.

இந்தியாவில் கம்பெனி ஆட்சி (Company Raj) நடைபெற்ற போது மேற்கு வங்காளம், ஹூக்லி மாவட்டத்தில் ஜேம்சு புரூக் பிறந்தார்.[1]

இங்கிலாந்தில் சில வருடங்கள் கல்வி கற்ற பிறகு, 1819-ஆம் ஆண்டில், வங்காள இராணுவத்தில் (Bengal Army) பணியாற்றினார். 1825-ஆம் ஆண்டில் முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரில் மிக மோசமாகக் காயமடைந்தார்.

முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்

இந்தப் போர் பிரித்தானியப் பேரரசுக்கும், கோன்பவுங் வம்சத்தின் பர்மியப் பேரரசுக்கும் இடையே நடைபெற்ற போராகும். ஜேம்ஸ் புரூக் உடனடியாக இங்கிலாந்திற்குத் திருப்பி அனுப்பப் பட்டார்.

1830-ஆம் ஆண்டில், ஜேம்ஸ் புரூக் மீண்டும் சென்னைக்கு வந்தார். ஆனால் பழைய இராணுவப் பிரிவில் மீண்டும் சேர மிகவும் தாமதமாகி விட்டது. பின்னர் தன் இராணுவ வேலையை ராஜினாமா செய்தார். மீண்டும் இங்கிலாந்து நாட்டிற்கே திரும்பினார்.


கூச்சிங்கில் ஜேம்சு புரூக் மாளிகை - 1848

புரூணை அரண்மனையில் 18 டிசம்பர் 1846-ஆம் தேதி; ஜேம்சு புரூக் - புரூணை சுல்தான் பேச்சுவார்த்தை.

இடையில், தான் ஒரு வணிகராக வேண்டும் என விருப்பப் பட்டார். தூரக்கிழக்கு நாடுகளில் வணிகம் செய்ய முயற்சிகள் செய்தார். பலன் அளிக்கவில்லை.

1835-ஆம் ஆண்டில் அவருடைய தந்தையார் இறந்ததும் வாரிசு சொத்து என £30,000 பெற்றார். அந்தப் பணத்தைக் கொண்டு அவர் 142-டன் எடை கொண்ட ஒரு கப்பலை வாங்கினார். அந்தக் கப்பலின் பெயர் ராயலிஸ்ட் (Royalist).[2]

புரூணை சுல்தான் உமர் அலி சைபுதீன்

1838-ஆம் ஆண்டில் போர்னியோ தீவில் கூச்சிங்க் நகரை வந்தடைந்தார். அப்போது புரூணை சுல்தானுக்கு எதிரான கிளர்ச்சிகள் போர்னியோவில் பரவலாக இருந்தன. அந்த எதிர்ப்புகளை சமாதான முறையில் தீர்த்து வைக்கலாம் என ஜேம்ஸ் புரூக் விரும்பினார்.


புரூணை சுல்தானின் மாமா பெங்கிரான் மூடா அசீமை (Pangeran Muda Hashim) கூச்சிங்கில் சந்தித்தார். கிளர்ச்சியை நசுக்க உதவினார். இதன் மூலம் புரூணை சுல்தான் உமர் அலி சைபுதீன் II (Omar Ali Saifuddin II) அவர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

சுல்தான் உமர் அலி சைபுதீன் II; புருணையின் 23-ஆவது சுல்தான் ஆவார். இவர் 1841-இல் புரூக் செய்த உதவிக்கு ஈடாக சரவாக்கின் கவர்னர் பதவியை புரூக்கிற்கு வழங்கினார்.

புரூணை மலாய் பிரபுக்கள்

அந்தக் காலக் கட்டத்தில் சரவாக் கல பகுதிகளில் கடற்கொள்ளைகள் பரவலாக இருந்தன. அந்த கடற்கொள்ளைகளை அடக்குவதில் ஜேம்சு புரூக் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.

இருப்பினும், அப்போது புரூணையில் இருந்த மலாய் பிரபுக்கள் சிலர், திருட்டுக்கு எதிரான புரூக்கின் தீவிரமான நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சி அடையவில்லை. அவை அவர்களுக்குப் பாதகமாக இருந்தன.


புரூணை சுல்தானின் மாமா பெங்கிரான் மூடா அசீமையும் (Pangeran Muda Hashim) மற்றும் அவரின் ஆதரவாளர்களையும் கொலை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள்.

பிரித்தானிய இராணுவத்தைக் கொண்டு, ஜேம்சு புரூக் அந்த முயற்சியை அடக்கினார். புரூணை ஆட்சியைச் சுல்தான் உமர் அலி சைபுதீனிடமே (Omar Ali Saifuddin II) மீட்டுக் கொடுத்தார்.

லபுவான் ஆளுநராக ஜேம்சு புரூக்

1842-ஆம் ஆண்டில், சுல்தான் உமர் அலி சைபுதீன், சரவாக்கின் முழு இறையாண்மையையும் ஜேம்சு புரூக்கிற்கு விட்டுக் கொடுத்தார். 1842 ஆகஸ்டு 18-ஆம் தேதி சரவாக் ராஜா என்ற பட்டம் ஜேம்சு புரூக்கிற்கு வழங்கப்பட்டது.

1844-இல் ஜேம்சு புரூக், தன் மேற்பார்வையில் இருந்த லபுவான் தீவை பிரித்தானிய அரசாங்கத்திற்கு வழங்கினார். 1848-இல் ஜேம்சு புரூக், லபுவானின் ஆளுநராகவும் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

சொந்த வாழ்க்கை

ஜேம்சு புரூக்கிற்குச் சட்டப்படியாக முறையான திருமணம் எதுவும் நடைபெறவில்லை என்று அறியப் படுகிறது. இருப்பினும் இங்கிலாந்தில் அவருக்கு ஒரு மகன் இருந்ததாகவும் தெரிய வருகிறது.


மனைவியின் அடையாளம் அல்லது மகனின் அடையாளம்; அல்லது அவர்களின் பிறந்த தேதிகள் தெளிவாகக் கிடைக்கப் பெறவில்லை.[3]

இருப்பினும் மகனின் பெயர் ரூபன் ஜார்ஜ் வாக்கர் (Reuben George Walker) என்றும்; அந்தப் பெயர் ஜார்ஜ் புரூக் (George Brooke) என மாற்றம் கண்டதாகவும் சொல்லப் படுகிறது.[4]

பெங்கீரான் அனாக் பத்திமா

ஆனாலும் ஜேம்சு புரூக்கிற்கு முஸ்லீம் முறைப்படி ஒரு முறை திருமணம் நடைபெற்று உள்ளது. புரூணை நாட்டைச் சேர்ந்த பெண்மணி பெங்கீரான் அனாக் பத்திமா (Pengiran Anak Fatima) என்பவரை முஸ்லீம் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிரான்சிஸ் வில்லியம் டக்ளஸ் (1874-1953) (Francis William Douglas) என்பவர், நவம்பர் 1913 முதல் சனவரி 1915 வரை, புரூணை மற்றும் லபுவான் பகுதிகளின் துணை ஆளுநராக (Acting Resident for Brunei and Labuan) பணி செய்தவர்.

அவர் 19 ஜூலை 1915-ஆம் தேதி லண்டனில் உள்ள பிரித்தானிய வெளியுறவு அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் அந்தத் திருமணத்தைப் பற்றி குறிப்பிட்டு உள்ளார்.[5]

ஜேம்சு புரூக்கிற்குப் பிறந்த மகள்

பெங்கீரான் அனாக் அப்துல் காதிர் (Pengiran Anak Abdul Kadir) என்பவரின் மகளும், புருணையின் 21-ஆவது சுல்தானான சுல்தான் முகம்மது கன்சுல் ஆலாம் (Sultan Muhammad Kanzul Alam) என்பவரின் பேத்தி பெங்கீரான் அனாக் பத்திமா. இந்தத் திருமணம் ஐரோப்பாவில் செல்லுபடி ஆகாது.

இந்தத் திருமணத்தின் மூலமாக அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். 1864-இல் பிரான்சிஸ் வில்லியம் டக்ளஸ் என்பவரால் இந்தப் பெண்மணி, நேர்காணல் புரூக்கின் மகள் செய்யப் பட்டார்.

அத்துடன் மருத்துவர் டாக்டர் ஓகில்வி (Dr Ogilvie) என்பவர் புரூக்கின் மகளை 1866-இல் சந்தித்ததாகவும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் டக்ளஸ் குறிப்பிட்டு உள்ளார்.[6]

வாரிசு

ஜேம்சு புரூக்கிற்கு முறையான பிள்ளைகள் இல்லாததால், 1861-இல் அவர் தன் சகோதரியின் மூத்த மகனான கேப்டன் ஜோன் புரூக் ஜான்சன் புரூக் (Captain John Brooke Johnson Brooke) என்பவரைத் தன் வாரிசாகப் நியமித்தார்.

இருப்பினும் இருவருக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டன. வாரிசு பட்டியலில் இருந்து ஜோன் புரூக் தவிர்க்கப் பட்டார். இவருக்குப் பதிலாக, இவரின் ஜோன் புரூக்கின் இளைய சகோதரர், சார்லஸ் அந்தோனி ஜான்சன் புரூக் என்பவரைத் தன் வாரிசாக நியமித்தார்.

இறப்பு

ஜேம்சு புரூக்கின், இறுதி கட்டத்தின் பத்து ஆண்டுகளில், மூன்று முறை பக்க வாதத்தால் பாதிக்கப் பட்டார்.

1868-ஆம் ஆண்டு ஜூன் 11-ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள டார்ட்மூர், டெவன்சையர் (Dartmoor, Devonshire) நகரில் இறந்தார். செயிண்ட் லியோனர்ட் தேவாலயத்தின் (St Leonard's Church) கல்லறையில் அடக்கம் செய்யப் பட்டார்.

சான்றுகள்:

1. Barley, Nigel (2002), White Rajah, Time Warner: London. ISBN 978-0-316-85920-2.

2. Cavendish, Richard, "Birth of Sir James Brooke", History Today. April 2003, Vol. 53, Issue 4.

3. Jacob, Gertrude Le Grand. The Raja of Saráwak: An Account of Sir James Brooks. K. C. B., LL. D., Given Chiefly Through Letters and Journals. London: MacMillan, 1876.

4. Wason, Charles William. The Annual Register: A Review of Public Events at Home and Abroad for the Year 1868. London: Rivingtons, Waterloo Place, 1869. pp. 162–163.

5.
Rutter, Owen (ed) Rajah Brooke & Baroness Burdett Coutts. Consisting of the letters from Sir James Brooke to Miss Angela, afterwards Baroness, Burdett Coutts 1935.

6. Doering, Jonathan. "The Enigmatic Sir James Brooke." Contemporary Review, July 2003.





 

14 அக்டோபர் 2022

சரவாக் சுல்தானகம்

(மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை. சரவாக் சுல்தானகம் கட்டுரையின் தமிழ் விக்கிப்பீடியா முகவரி: https://ta.wikipedia.org/s/b67g )

சரவாக் சுல்தானகம்
, (ஆங்கிலம்: The Sultanate of Sarawak; மலாய்: Kesultanan Sarawak; ஜாவி: كسلطانن ملايو سراوق دارالهنا) என்பது சரவாக் மாநிலத்தில்; இப்போதைய கூச்சிங் பிரிவில் மையம் கொண்டு ஆட்சி செய்த ஓர் உள்நாட்டு அரசு. 1599–ஆம் ஆண்டில் இருந்து 1641-ஆம் ஆண்டு வரை, 50 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த அரசு.


இந்தச் சுல்தானகம் உருவாவதற்கு முன்னர், சாந்துபோங் இராச்சியம் (Santubong Kingdom) எனும் ஓர் இராச்சியம் இருந்தது. இதன் தலைநகரம் விஜயபுரம் (Vijayapura). சாந்துபோங் இராச்சியம் 500-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது.

இந்தச் சாந்துபோங் இராச்சியத்தை ஸ்ரீ விஜய பேரரசு; மஜபாகித் பேரரசு ஆகியவை ஆட்சி செய்து இருக்கின்றன. 15-ஆம் நூற்றாண்டு வரை சாந்துபோங் இராச்சியம் ஆட்சியில் இருந்தது.

திடீரென வரலாற்றில் இருந்து சாந்துபோங் இராச்சியம் மறைந்து போனது. அதன் பின்னர் தஞ்சோங்புரம் இராச்சியம் (Tanjungpura Kingdom) உருவானது.

புரூணை சுல்தானகத்தின் படையெடுப்பிற்குப் பிறகு 1599–ஆம் ஆண்டில் இந்த இராச்சியம் நிறுவப்பட்டது. 1599–ஆம் ஆண்டில் இருந்து 1641-ஆம் ஆண்டு வரை, 50 ஆண்டுகள் மட்டுமே சரவாக் சுல்தானகம் ஆட்சியில் இருந்தது

இந்தச் சுல்தானகத்தின் முதலும் கடைசியுமான சுல்தான், இப்ராகிம் அலி உமர் ஷா இப்னி சுல்தான் முகம்மது அசன் (Ibrahim Ali Omar Shah Ibni Sultan Muhammad Hassa). இவர் புருணையின் சுல்தான் தெங்கா எனும் இளவரசர் ஆகும்.[2]

அப்போதைய புரூணை, ஜொகூர் அரசுகளுடன் சரவாக் சுல்தானகம் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தது. தவிர மேற்கு போர்னியோவில் இருந்த சம்பாஸ் (Sambas), சுகடனா (Sukadana) மற்றும் தஞ்சோங்புரா - மாத்தான் (Tanjungpura-Matan) உள்ளிட்ட மலாய் இராச்சியங்களில் வம்சாவழி ஆட்சிமுறைகள் தோன்றுவதற்கும் காரணமாக அமைந்தது.[3]

சர் வைனர் புரூக்

1641-ஆம் ஆண்டில் சுல்தான் தெங்கா இப்ராகிம் அலி உமர் ஷா இப்னி சுல்தான் முகம்மது அசன் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சரவாக் சுல்தானகம் கலைக்கப்பட்டது. பின்னர் புருணை சுல்தானகத்தால் நியமிக்கப்பட்ட உள்ளூர் மலாய் ஆளுநர்களால் நிர்வாகம் செய்யப்பட்டது.

வரலாறு

புரூணை நாட்டு அரசர்களின் கால வரலாற்றுச் சுவடு சலாசிலா ராஜா - ராஜா புரூணை (Salahsilah Raja-Raja Brunei). அந்த வரலாற்றுச் சுவடுகளின் பதிவுகளின் படி; 1582 - 1598-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் புரூணை பேரரசை ஆட்சி செய்த மன்னர் சுல்தான் முகமது அசன் (Sultan Muhammad Hassan); அவர் மறைவுக்குப் பிறகு சரவாக் சுல்தானகம் நிறுவப்பட்டது.

சுல்தான் முகமது அசனின் மூத்த மகன் சுல்தான் தெங்கா இப்ராகிம் அலி உமர் ஷா (Ibrahim Ali Omar Shah Ibni Sultan Muhammad Hassa). இருப்பினும், இளைய மகன் அப்துல் ஜலீல் (Abdul Jalilul Akbar) முடிசூடிக் கொண்டார்.


இதைச் சுல்தான் தெங்கா இப்ராகிம் அலி எதிர்த்தார். மூத்த இளவரசரான தனக்குத் தான் சுல்தானாகும் முன்னுரிமை இருப்பதாக நம்பினார்.[4]

புதிதாக அரியணை ஏறிய தம்பி அப்துல் ஜலீல், புருணை இராச்சியத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள எல்லைப் பிரதேசமான சரவாக்கில் தன் அண்ணன் சுல்தான் தெங்கா இப்ராகிம் அலியை சுல்தானாக நியமித்தார்.

கூச்சிங்கிற்கு வந்த சுல்தான் தெங்கா இப்ராகிம் அலி, சாந்துபோங்கில் ஒரு கோட்டை அரண்மனையை கட்டினார். அந்த பகுதியை சரவாக் சுல்தானகத்தின் அரச, நீதித்துறை நிர்வாக தலைநகராக மாற்றினார். தன்னை சரவாக் சுல்தானகத்தின் சுல்தானாக அறிவித்துக் கொண்டார். இப்படித்தான் சரவாக் சுல்தானகம் உருவானது.[5]

1641-ஆம் ஆண்டில், சுல்தான் தெங்கா இப்ராகிம் அலியும்; அவரின் அரசக் குடும்பத்தினரும் சரவாக், சாந்துபோங், பத்து புவாயா எனும் இடத்தில் தங்கி இருந்தார்கள். அப்போது, சுல்தான் தெங்கா இப்ராகிம் அலி, அவருடைய மெய்க்காப்பாளர் ஒருவரால் கொலை செய்யப் பட்டார். அவரின் இறப்பிற்குப் பின்னர் சரவாக் சுல்தானகம் கலைக்கப் பட்டது.[5][4]

(மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்; தமிழாசிரியர்களின் பயன்பாட்டிற்காக சரவாக் மாநிலத்தைப் பற்றி 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் தயாரிக்கப்பட்டு தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பல மாதங்களின் உழைப்பு. மாணவர்களும் ஆசிரியர்களும் அங்கிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தக் கட்டுரை 23.05.2022-ஆம் தேதி தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்யப்பட்டது.)

அதன் முகவரி: https://ta.wikipedia.org/s/b67g

சான்றுகள்:


1. Sahari, Suriani; McLaughlin, Tom. "History of the people from the Sarawak River Valley".

2. Porritt, Vernon L. (2012), Sarawak Proper: trading and trading patterns from earlier times to the registration of the Borneo Company in 1856., Borneo Research Council, Inc

3. Bruneidesi (2017), Sultans of Brunei, 2021-12-21 அன்று மூலம் பரணிடப்பட்டது, 2022-05-23 அன்று பார்க்கப்பட்டது

4. Kaffah (2017), Istana Alwatzikhubillah, Kabupaten Sambas, Kalimantan barat

5. Gregory, Zayn (2015), The Maqam of Sultan Tengah, BinGreogory




ஆஸ்தானா சரவாக்

உயிருக்கு உயிராய் நேசித்த ஒருவருக்காக நினைவு சின்னங்கள் எழுப்பப் படுவது வரலாறு பார்த்த உண்மைகள். வழக்கத்தில் வந்து போகும் கடந்த காலத்தின் சொப்பனங்கள்.

அந்த வகையில், இந்த உலகில் ஓர் அற்புதமான நினைவுச் சின்னம் இருக்கிறது என்றால் அது தாஜ்மகால் தான். முதல் இடத்தில் அசைக்க முடியாத ஓர் அழகு ஓவியம். அதற்கு இணையாக வேறு ஒரு மாளிகை இருப்பதாகத் தெரியவில்லை. இனி கட்டுவார்களா என்றும் தெரியவில்லை.

அந்த வரிசையில் ஆசை மனைவிக்காகக் கட்டப் பட்டதுதான் சரவாக் அரண்மனை. இதை ஆஸ்தானா சரவாக்  (Astana Negeri Sarawak); என்று அழைக்கிறார்கள். இந்த அரண்மனை மலேசியா, சரவாக், கூச்சிங் மாநகரில் உள்ளது. சரவாக் ஆற்றின் வடக்குத் திசையின் கரையோரத்தில் உள்ளது.

இந்த அரண்மனை, சரவாக் மாநிலத்தின் ஆளுநரான யாங் டி பெர்துவா சரவாக் (Yang di-Pertua Negeri Sarawak) அவர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். ’இஸ்தானா’ எனும் மலாய்ச் சொல்லின் மாறுபாட்டுச் சொல்தான் ’ஆஸ்தானா’. அரண்மனை என தமிழில் பொருள்படும்.[1]

இந்த அரண்மனை 1870-ஆம் ஆண்டுகளில், சரவாக் நிலப் பகுதிகளை ஆட்சி செய்த வெள்ளை இராஜா (White Rajah), சார்லஸ் புரூக் (Charles Brooke) என்பவரால்; அவரின் மனைவி மார்கரெட் ஆலிசு லிலி டி விண்ட் (Margaret Alice Lili de Windt) என்பவருக்குத் திருமணப் பரிசாக கட்டப்பட்டது.[2]

பொதுமக்களின் பார்வைக்கு இந்த அரண்மனை திறக்கப்படுவது இல்லை. இருப்பினும் அரண்மனையின் பூங்கா தோட்டங்களைப் பொதுமக்கள் சரவாக் ஆற்றின் கரைகளில் இருந்து காணலாம். கூச்சிங் பாரம்பரிய வளங்களின் (Kuching Heritage Trail) ஒரு பகுதியாக இந்த அரண்மனை கருதப் படுகிறது.[1]

வரலாறு

வெள்ளை இராஜா, (ஆங்கிலம்: White Rajah; மலாய்: Raja Putih Sarawak) என்பது சரவாக் மாநிலத்தில், சரவாக் இராச்சியம் எனும் ஆட்சியை நிறுவிய ஒரு பிரித்தானியக் குடும்பத்தின் வம்ச முடியாட்சியைக் குறிப்பிடும் பெயராகும்.

1840-ஆம் ஆண்டுகளில், புரூணை சுல்தானகத்தில் இருந்து ஜேம்சு புரூக் (James Brooke) எனும் பிரித்தானியர் சில பகுதிகளைப் பெற்றுக் கொண்டார். அந்தப் பகுதிகள் தான், பின்னர் ஒரு சுதந்திரமான அரசாக, சரவாக் இராச்சியம் எனப் பெயர் பெற்றது.

அந்தக் காலக் கட்டத்தில், சரவாக்கை ஆட்சி செய்யத் தொடங்கிய புரூக் அரசக் குடும்பத் தலைவரையும்; புரூக் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும்; வேறுபடுத்திக் காட்டுவதற்காக ’வெள்ளை இராஜா’ எனும் அடைமொழிப் பெயர் பயன்படுத்தப்பட்டது.

சார்ல்ஸ் புரூக்

ஜேம்சு புரூக் என்பவர் சரவாக் இராச்சியத்தின் முதல் இராஜாவாக ஆட்சி செய்தார். 1841-ஆம் ஆண்டில் இருந்து 1868-ஆம் ஆண்டு, ஜேம்சு புரூக் இறக்கும் வரையில் சரவாக்கை ஆட்சி செய்தார். மூன்றாவது ஆட்சியாளராக ஆட்சிக்கு வந்தவர் சார்லஸ் புரூக்.[3]

1800-ஆம் ஆண்டுகளில், சரவாக் நிலப்பகுதி புரூணை சுல்தானகத்திற்குச் சொந்தமான ஒரு காலனியாக இருந்தது. 1946-ஆம் ஆண்டு சரவாக்கைப் பிரித்தானிய அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் வரையில் சரவாக் இராச்சியத்தை வெள்ளை இராஜாக்கள் 95 ஆண்டு காலம் ஆட்சி செய்தார்கள்.

வெள்ளை இராஜா வம்சத்தின் கட்டிடக்கலைப் பாரம்பரியத்தை, இன்றும்கூட சரவாக்கில் உள்ள 19-ஆம் நூற்றாண்டு காலனித்துவப் பாரம்பரியக் கட்டிடங்களில் காணலாம். ஆஸ்தானா சரவாக், முன்பு அரசு மாளிகை (Government House) என்று அழைக்கப்பட்டது.[4]

சரவாக் இராச்சியத்தின் இராஜாவான சார்லஸ் புரூக் (Charles Brooke) என்பவரால்; அவரின் மனைவி மார்கரெட் ஆலிசு லிலி டி விண்ட் என்பவருக்குத் திருமணப் பரிசாக இந்த அரண்மனை கட்டப்பட்டது.

சார்ல்ஸ் புரூக் திருமணம்

1869 அக்டோபர் 28-ஆம் தேதி இங்கிலாந்தில் சார்லஸ் புரூக் - மார்கரெட் ஆலிசு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் மார்கரெட் ஆலிசு, சரவாக்கின் ராணி (Ranee of Sarawak) எனும் பட்டத்திற்குத் தகுதி உயர்த்தப் பட்டார். இராணி மார்கரெட் 1870-ஆம் ஆண்டில் சரவாக் வந்து சேர்ந்தார்.

பின்னர் அந்த அரசத் தம்பதிகள், சரவாக் ஆஸ்தானாவைத் தங்களின் முக்கிய இல்லமாகப் பயன்படுத்தினர். பின்னர் 1913-இல் வெளியிடப்பட்ட மார்கரெட் ஆலிசு நினைவுக் குறிப்பான மை லைப் இன் சரவாக்: தி அஸ்தானா (My Life in Sarawak: The Astana) எனும் நூலில் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி எழுதி உள்ளார்.[5]

அந்தக் காலக் கட்டத்தில், அரண்மனைப் பூங்காவில் சார்லஸ் புரூக், பாக்கு மரங்களை நட்டு வைத்து இருக்கிறார். தன்னைப் பார்க்க வரும் டயாக் மக்களின் தலைவர்களுக்கு பாக்குச் சீவல்களை அன்பளிப்பாக வழங்குவது சார்லஸ் புரூக்கின் அப்போதைய வழக்கமாக இருந்து உள்ளது.[6]

(இந்தக் கட்டுரை 04.08.2022-ஆம் தேதி விக்கிப்பீடியாவில் பதிவு செய்யப் பட்டது.)

அதன் முகவரி:https://ta.wikipedia.org/s/bapg

சான்றுகள்:

1. Tamara Thiessen (2008). Bradt Travel Guide - Borneo. Bradt Travel Guides. பக். 242–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84162-252-1.

2.
Sam Bedford (29 May 2018). "The Astana: Kuching's Palace of the White Rajahs". Culture Trip. 26 February 2019 அன்று பார்க்கப்பட்டது.

3.
James, Lawrence (1997). The Rise and Fall of the British Empire. New York: St. Martin's Griffin. பக். 244–245. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-312-16985-X.

4. Margaret Brooke (Ranee of Sarawak.) (1913). My Life in Sarawak. Methuen.

5.
Alan Teh Leam Seng (8 October 2017). "Home of the White Rajahs". New Straits Times. 26 February 2019 அன்று பார்க்கப்பட்டது.

 

சரவாக் இராச்சியம்

(மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்; தமிழாசிரியர்களின் பயன்பாட்டிற்காக சரவாக் மாநிலத்தைப் பற்றி பல கட்டுரைகளைத் தயாரித்து தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்துள்ளேன். சரவாக் வரலாற்றுக் கட்டுரைகளை அங்கிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தக் கட்டுரை 23.05.2022-ஆம் தேதி விக்கிப்பீடியாவில் பதிவு செய்யப்பட்டது.)

(சரவாக் இராச்சியம் கட்டுரையின் இணைய முகவரி: https://ta.wikipedia.org/s/b67g )

சரவாக் இராச்சியம்
அல்லது சரவாக் நாடு (ஆங்கிலம்: Raj of Sarawak; அல்லது State of Sarawak (மலாய்: Kerajaan Sarawak) என்பது போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியில் அமைந்து இருந்த பிரித்தானியாவின் ஒரு காப்பு நாடாகும். 

புரூணை சுல்தானகத்தில் இருந்து ஜேம்சு புரூக் (James Brooke) எனும் ஆங்கிலேயர் பெற்ற சில பகுதிகளைக் கொண்ட ஒரு சுதந்திர நாடாக சரவாக் நாடு உருவாக்கப்பட்டது.

1850-ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவும்; 1864-ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியமும் சரவாக் இராச்சியத்தைத் தனி நாடாக அங்கீகரித்தன.

சரவாக் இராச்சியம் தனிநாடாக அங்கீகரிக்கப் பட்டதும், ஜேம்சு புரூக் புரூணையில் இருந்து மேலும் சில பகுதிகளைச் சரவாக் இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டார்.

இவரின் ஆட்சிக்கு எதிராக சரவாக் இராச்சியத்தில் பல கிளர்ச்சிகள் நடைபெற்றன. அந்தக் கிளர்ச்சிகளை அடக்குவதற்கு ஏற்பட்ட செலவுகளாலும், அக்காலக் கட்டத்தில் நிலவிய பொருளாதார மந்த நிலையினாலும், புரூக் பெரும் கடனாளியானார்.

ஜேம்சு புரூக்கிற்குப் பின்னர் அவரின் மருமகன் சார்லசு புரூக் (Charles Brooke) ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இவரின் ஆட்சியில் சரவாக் நாட்டின் பொருளாதாரம் ஏற்றம் கண்டது, அரசுக் கடன்கள் குறைந்தன.

பொதுக் கட்டமைப்புகள் உருவாகின. 1888-ஆம் ஆண்டில் சரவாக் நாடு பிரித்தானியாவின் ஆளுகைக்கு உட்பட்ட காப்புநாடாக அறிவிக்கப் பட்டது.

சார்லசு புரூக்

பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்காக, சார்லசு புரூக் சீனாவில் இருந்தும் சிங்கப்பூரில் இருந்தும் தொழிலாளர்களை வரவழைத்து வேளாண்மைப் பணிகளில் ஈடுபடுத்தினார்.

மிக விரைவிலேயே, மிளகு உற்பத்தியில் சரவாக் நாடு, உலகின் முன்னணி இடத்திற்கு வந்தது. அத்துடன் எண்ணெயும் இயற்கை மீள்ம உற்பத்தியிலும் முன்னிலைக்கு வந்தது.

சார்லசு புரூக்கிற்குப் பின்னர் அவரின் மகன் சார்லசு வைனர் புரூக் (Charles Vyner Brooke) ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆனாலும் இரண்டாம் உலகப் போர், மற்றும் ஜப்பானியரின் வருகை இந்த இராச்சியத்திற்கு ஒரு முற்றுப் புள்ளியாக அமைந்தது.

சார்லசு வைனர் புரூக்

 
இரண்டாம் உலகப் போரின் போது, சார்லசு வைனர் புரூக், ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்தார்.[1] 1942-இல் சரவாக் நாடு ஜப்பானியரின் இராணுவ ஆளுகைக்குக் கீழ் வந்தது. போரின் இறுதியில், 1946-இல் பிரித்தானிய முடியாட்சிக்கு உரிய குடியேற்ற நாடாகியது.

பெரும்பாலான ஆஸ்திரேலிய, பிரித்தானியப் போர்க் கைதிகள் சரவாக்கில் சிறை வைக்கப் பட்டனர். இந்தக் காலக் கட்டத்தில் தான் சபா மாநிலத்தில் சண்டாக்கான் மரண அணிவகுப்பு நடைபெற்றது. 

சபா, சண்டாக்கான் சிறைச்சாலையில் இருந்து, 260 கி.மீ. தொலைவில் இருந்த ரானாவ் எனும் இடத்திற்கு, ஆஸ்திரேலியப் போர்க்கைதிகள் கால்நடையாக நடக்க வைக்கப்பட்டதில் பல ஆயிரம் பேர் இறந்து போன நிகழ்ச்சியைத் தான்  சண்டாக்கான் மரண அணிவகுப்பு என்று அழைக்கின்றனர்.

1942-இல் இருந்து 1945 வரை வட போர்னியோ ஜப்பானியர்களின் பிடியில் சிக்கி இருந்தது. தென் போர்னியோ தீவின் கலிமாந்தான் பகுதியும் அவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஜப்பானியர்களை எதிர்த்துப் போரிட்டக் கூட்டுப் படைகள், வானில் இருந்து குண்டுகளைப் போட்டன. அதனால் பல நகரங்கள் சேதம் அடைந்தன அல்லது அழிந்து போயின. அவற்றுள் சண்டாக்கான் குறிப்பிடத்தக்க ஒரு நகரமாகும்.

பசிபிக் போர்க் காலத்தில் கூட்டுப் படைகள் கிழக்கில் தமது இருப்பை நிலை நிறுத்தினர். பின்னர் அவர்கள் போர்னியோ தீவை விடுவித்தனர்.

ஜப்பானியப் படைகள்

ஜப்பானியர் ஆட்சி செய்த காலத்தில், சரவாக்கின் முக்கிய நகரங்கள் குண்டுகளால் தாக்கப்பட்டன.[2] 1945 ஆகத்து 15-இல் ஜப்பானியப் படைகள் சரண் அடைந்ததை அடுத்து போர் முடிவு அடைந்தது.

1945 செப்டம்பரில் இருந்து சரவாக்கின் நிர்வாகம் பிரித்தானிய இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சார்லசு வைனர் புரூக், நாட்டின் நிர்வாகத்தைக் கவனிக்கும் பொருட்டு நாடு திரும்பினார், ஆனாலும், பின்னர் காலத்தில் அதன் நிருவாகத்தை பிரித்தானியாவிடம் ஒப்படைத்தார்.

1946 சூலை 1-இல் சரவாக் பிரித்தானியாவின் முடியாட்சிக்கு உரிய குடியேற்ற நாடாகியது.[3][4][5] இந்தச் சரவாக் இராச்சியம் 1963 செப்டம்பர் 16-இல் சரவாக் என்ற பெயரில் மலேசியக் கூட்டமைப்பில் ஒரு மாநிலமாக இணைந்தது.

சான்றுகள்:

1. Bayly, Christopher Alan; Harper, Timothy Norman (2005). Forgotten Armies: The Fall of British Asia, 1941–1945. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-674-01748-1.

2.
Tan, Gabriel (2011). "Under the Nippon flag". The Borneo Post. 4 August 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது.

3.
Yust, Walter (1947). Ten eventful years: a record of events of the years preceding, including and following World War II, 1937 through 1946. Encyclopaedia Britannica.

4.
Lockard, Craig (2009). Southeast Asia in World History. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-972196-2.

5.
Sarawak State Government (2014). "Sarawak as a British Crown Colony (1946 â€" 1963)". Government of Sarawak. 4 August 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது.

6.
Great Britain. War Office (1942). Strategic survey of British North Borneo, Brunei and Sarawak: British Empire Section. May 8, 1942. Intelligence Division.
 

10 அக்டோபர் 2022

சிறந்த கட்டுரையாளர் விருது

-BEST JOURNAL ARTICLE AWARD-


நம்பிக்கை குழுமத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவின்; நம்பிக்கை நட்சத்திர விருதுகள் விழாவில்; ’சிறந்த பத்திரிகை கட்டுரையாளர் விருது’ மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.


இந்த விழா 08 அக்டோபர் 2022 (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு கோலாலம்பூர் உலக வணிக மையத்தில் (PWTC) நடைபெற்றது.


மலேசிய நாட்டில் மலேசிய இந்தியர்களின் அடையாளத்தை நிலைநிறுத்தப் பாடுபடும் சாதனையாளர்களை அங்கீகரித்து அவர்களைக் கௌரவிக்கும் ஓர் உன்னத நோக்கத்துடன் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.


டத்தோ ஸ்ரீ இக்பால் தலைமையிலான நடுவர் குழுவினர் வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர். கலை, பொழுதுபோக்கு மற்றும் சமூக ஊடகங்கள் தொடர்பான விருதுகளுக்கு, மக்களின் 200,000 வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.


மலேசியாவின் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பு செய்தார்.

இந்த விழா இன்றைய மிகச் சிறந்த தலைவர்களை அடுத்த தலைமுறைக்கு அடையாளம் காட்டும் என்றும் நம்பிக்கை நட்சத்திர விழாக் குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். நன்றி.