25 ஜனவரி 2011

கணினியும் நீங்களும் - பகுதி 86

உதயக்குமார் <uthayakumar15@gmail.com>
கே: வணக்கம் சார். Virtual PC என்று சொல்கிறார்களே. அப்படி என்றால் என்ன? சற்று விளக்கம் கொடுக்க முடியுமா?

ப:
வணக்கம் உதயக் குமார் அவர்களே. ஒரு நாளைக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பும் வாசகர்களில் நீங்களும் ஒருவர். வாழ்த்துகள். ஓர் அருமையான கேள்வியைக் கேட்டு இருக்கிறீர்கள்.
Virtual PC என்பதை மாயைக் கணினி என்று அழைக்கிறார்கள். கணினிக்கு உள்ளேயே ஒரு மாயமான உலகில் இயங்கும் இன்னும் ஒரு கணினியைத் தான் 'விர்ட்சுவல் பிசி' என்கிறார்கள்.

எடுத்துக் காட்டாக, உங்கள் கணினியில் விண்டோஸ் 7 இயங்குதளத்தைப் பதிப்பு செய்து இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

ஆனால், அதே கணினிக்குள் மற்றும் ஒரு விண்டோஸ் XP இயங்குதளத்தை இயங்கச் செய்வதைத் தான் மாயைக் கணினி என்கிறோம். விண்டோஸ் XP போல வேறு விண்டோஸ் இயங்குதளத்தையும் இயக்கச் செய்யலாம்.

ஒரே கணினித் திரையில் இரண்டு இயங்குதளங்கள் இயங்குவதை நீங்கள் நேரடியாகப் பார்க்கலாம்.


பார்க்கும் போது அது ஓர் அதிசயமாக இருக்கும். எப்படி இந்த மாதிரி ஓர் அதிசயம் என்று யோசிக்கலாம். என்னுடைய மடிக்கணினியை எடுத்துக் கொள்ளுங்களேன். மடிக்கணினித் திரையின் ஒரு பாதியில் விண்டோஸ் 7 வேலை செய்து கொண்டிருக்கும்.


இன்னொரு பாதியில் விண்டோஸ் XP வேலை செய்து கொண்டிருக்கும். உங்களுடைய இந்தக் கேள்விக்கான பதிலை விண்டோஸ் XP யில் தட்டச்சு செய்கிறேன்.

முரசு அஞ்சல் விண்டோஸ் XP யில் நன்றாக வேலை செய்கிறது. அதனால் விண்டோஸ் XP யில் முரசு அஞ்சல் இயங்குகிறது.

மடிக்கணினித் திரையின் வலது பக்கத்தில் தமிழில் விண்டோஸ் XP யில் தட்டச்சு செய்கிறேன். வாசகர்களின் மின்னஞ்சல் கடிதங்களை விண்டோஸ் 7 ல் திரையின் இடது பக்கத்தில் படிக்கிறேன்.

அவற்றுக்கான இணையத் தகவல்களையும் விண்டோஸ் 7 ல் தான் தேடுகிறேன். ஆக, ஒரே சமயத்தில் இரண்டு இயங்குதளங்கள் ஒரே கணினியில் இயங்குகின்றன. விண்டோஸ் 7 என்பது மனைவி என்றால் விண்டோஸ் XP என்பது பத்து வருஷக் காதலி.

இன்னும் ஒரு விஷயம். மாயைக் கணினி இயக்க வேண்டும் என்றால் உங்களுடைய கணினி அதிக ஆற்றல் உள்ளதாக இருக்க வேண்டும்.

ராஜேந்திரா வின்னாசி, கங்கார், பெர்லிஸ்

கே: உங்களுக்கு என்னுடைய பொங்கல் வாழ்த்துகள். எல்லா சுகங்களும் செல்வங்களும் பெற்று நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன். தை பிறந்தால் வலி பிறக்கும்.
ப: உங்களுக்கும் வாழ்த்துகள். நிறைய பேர் வாழ்த்து தெரிவித்து மின்னஞ்சல், குறும் செய்திகள் அனுப்பி உள்ளனர். எல்லாருக்கும் என் வாழ்த்துகள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.


நீங்கள் வலி பிறக்கும் என்கிறீர்கள். பரவாயில்லை. அன்பு மிகுதியால் வழி தவறி வலி வந்துவிட்டது.

வேகமும் விவேகமும் தூய்மையும் உழைப்பும் மலேசியத் தமிழர்கள் வாழ்வில் வேரில் முளைத்த வியர்வைப் பூக்கள் என்பதை நிலை நிறுத்த வேண்டும்.


அப்துல் சலிகான் முகமது கனி <masaligan@gmail.com>
கே: பழம் பெரும் நபர்களால் நாம் அறிந்து கொள்ள அவர்களின் பெயர்களைத் தட்டச்சு செய்து தேடினால், விக்கிபீடியாவில் விவரம் அறிகிறோம். அவர்களை யார் பதிவு செய்து வைப்பது? நாமும் அவ்வாறு செய்ய முடியுமா?
ப: விக்கிபீடியா என்பது உலக இணையக் கலைக் களஞ்சியம். உலக மக்களால் உலக மக்களுக்காக உருவாக்கப் பட்ட கலைக்களஞ்சியம்.

விக்கி என்றால் ஹவாய் மொழியில் விரைவு என்று பொருள். நீங்கள் அந்தக் கலைக்களஞ்சியத்தில் பதிவு செய்து கொண்டு உங்கள் கட்டுரைகளைப் பதிவேற்றம் செய்யலாம்.


தொடக்கத்தில் உங்கள் படைப்புகளைக் கலைக்களஞ்சிய ஆசிரியர்கள் கவனித்து திருத்தி வெளியிடுவார்கள். எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை, கருத்துப் பிழை என்று எதுவும் இல்லாமல் எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு காலக் கட்டத்திற்குப் பிறகு நீங்கள் தன்னிச்சையாக எழுதி வெளியிடலாம்.

அவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதுவரை அவர்களுடைய பாதுகாப்பில் உங்களுடைய எழுத்துகள் பிரசுரிக்கப் படும்.
விக்கிபீடியா பதிப்பாளர்களில் அடியேனும் ஒருவன்.

அண்மையில் நான் எழுதியது பரமேஸ்வராவைப் பற்றியது.

http://ta.wikipedia.org/wiki/பரமேசுவரா
எனும் முகவரியில் படிக்கலாம்.


கடவுள் பாதி  puruma86@gmail.com
கே: அண்மையில் என் நண்பரிடம் இருந்து ஒரு நோக்கியா கைப்பேசி வாங்கினேன். அந்தக் கைப்பேசி எப்போது தயாரிக்கப் பட்டது என்ற விவரங்களை எப்படி கண்டு பிடிப்பது?

ப: வணக்கம் கடவுள் பாதி. #92702689# என்று கைப்பேசியில் தட்டுங்கள். அதன் பரம்பரை வரலாறு அக்குவேர் ஆணி வேராகத் தெரியும். அது எல்லாம் சரி.

எப்படி ஐயா இந்த மாதிரியான பெயர்களை வைத்துக் கொள்ள முடிகிறது. மிச்சம் மிருகம் பாதி என்ன ஆனது ஐயா. தெரிந்து கொள்ள ஆசை.


மனோ ரஞ்சன் <prabu5509@yahoo.com>
கே: ஐயா, ஒவ்வோரு வாரமும் உங்களுடைய கணினி கேள்வி பதில்களைப் படிக்கக் காத்திருப்பேன். மிகவும் நன்றாக இருக்கிறது. என்னுடைய கேள்வி இதுதான். MP4 இசைக் கோப்புகளை MP3 வடிவத்திற்கு மாற்ற முடியுமா. ஒரு நல்ல மென்பொருள் இலவசமாகக் கிடைக்குமா? உதவி செய்யுங்கள் சார்.


ப: MP என்பது பொதுவாக பயன்படுத்தப் படும் ஒலி அல்லது ஒளி முறைமை. MP3 ஒலி முறைமை வந்த பிறகு கனி உலகில் ஒரு பெரிய புரட்சியே ஏற்பட்டது.


சாதாரணமாக ஒரு பாடலை MP முறைமையில் உருவாக்கினால் 40MB வரும். MB என்பது Mega Bytes என்பதைக் குறிக்கும் கொள் அளவு.
MP3 முறைமையில் அதே பாடலை 4MB க்குள் கொண்டு வந்துவிடலாம். கொள் அளவு அதாவது space  சிக்கனமாகிறது.
இந்த MP3 முறைமைக்கு முழு வடிவம் கொடுத்தவர்கள் தமிழ்க் கணினி வல்லுநர்கள் என்று பெருமையாகச் சொல்லலாம். கணினி உலகம் என்று
சொன்னாலே அங்கே இந்தியர்கள்தான் 'பளிச்' என்று தெரிகிறார்கள்.

MP3 முறைமை மிகவும் எளிமையானது. இலகுவானது. இப்போதைக்கு இந்த முறைமையில் இதுவரை பிரசித்தி பெற்று விளங்கும் பாடல் அமரர் கிளிவ் ரிச்சர்ட்டின் 'யங் ஒன்ஸ்'.



சரி. உங்களுக்கு இந்தச் செயலி எனும் Program இலவசமாக, அதாவது கள்ளத் தனமாகக் கிடைக்கும் இடம் தெரிந்தாக வேண்டும். அப்படித்தானே!


தம்பி மனோ, வாசகர்களுக்காக உதவி செய்யலாம். அதற்காக, அமலாக்க அதிகாரிகள் வந்து நம்மை  அள்ளிக் கொண்டு போகும் அளவுக்கு நம்முடைய நிலைமை மோசமாகி விடக் கூடாது பாருங்கள்.

அதனால் என்ன சொல்கிறேன் என்றால், கொஞ்சம் காசு கொடுத்து அசல் மென்பொருளை வாங்கிக் கொள்ளுங்கள். நானும் கொஞ்சம் நிம்மதியாகப் பெயர் போடலாம். பிரச்னை வராது. சரியா. 

கோலாலம்பூரில் புக்கிட் பிந்தாங் Law Yat Plaza, Imbi Plaza வில் தேடினால் அந்தச் செயலி கிடைக்கும்.


விக்னேஸ், ஈப்போ - viji nesh <sweetnesh.116@gmail.com>
கே: கணினியைச் சில நிமிடங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் Mouse கொஞ்ச நேரத்தில் தூங்கி விடுகிறது?

ப: என்ன செய்வது. கஷ்டப்பட்டு வேலை செய்தால் கண்டிப்பாக யாருக்கும் தூக்கம் வரும். இல்லையா. ஆனால், இங்கே வேறு மாதிரியான தூக்கம். நீங்கள் Wireless Mouse எனும் கம்பியில்லாச் சுழலியைப் பயன்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன். சில கட்டத்தில் சுழலியைத் தட்டி எழுப்ப வேண்டியிருக்கும். அப்படித்தானே. இருந்தாலும் பரவாயில்லை.


கம்பியில்லாச் சுழலியைத் தூங்கச் செய்திடும் செயல்பாடு கணினிக்குள் இருக்கிறது. கணினியில் நாம் எந்த வேலையையும் எட்டு நிமிடங்களுக்கு மேல் செய்யாமல் இருந்தால், கம்பியில்லாச் சுழலி கொட்டாவி விட்டு தூங்கிவிடும்.

இதற்கு காரணம், சுழலியின் உள்ளே இருக்கும் மின்கலச் சக்தியைக் கனி மிச்சப் படுத்தும் தன்மை. அதன் வேலையை அது செய்கிறது.

இரண்டு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை சுழலியை லேசாக நகர்த்துங்கள். இல்லை என்றால் Control Panel > Mouse > Device Settings போய் சரி செய்து கொள்ளுங்கள்.

09 ஜனவரி 2011

கணினியும் நீங்களும் - பகுதி 85


ராஜு முரளி  <raju_pollathavan@yahoo.com>
கே: கணினித் துறையில் இந்தியர்கள் சிறந்து விளங்குவதால் தான் மேல் நாட்டு கணினி நிறுவனங்கள் அவர்களைத் தேடி வருகின்றன என்பது சரியா?
ப: நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. உலகத்திலேயே கணினித் துறையில் சிறந்தவர்கள் யார் என்று கேட்டால் அவர்கள்தான் இந்தியர்கள். கணிதத் துறையின் மூலகர்த்தாக்கள். சுழியம், ஒன்று, இரண்டு எனும் எண்களைக் கண்டுபிடித்தவர்கள்.
பிரமகுப்தா
கி.பி.598ல் குஜாராத் மாநிலத்தில் வாழ்ந்த பிரமகுப்தா என்பவர்தான் சுழியம் எனும் எண்ணைக் கண்டுபிடித்தார். அந்த எண் கி.பி.700ல் கம்போடியாவில் பயன் படுத்தப் பட்டுள்ளது என்பது அண்மைய தகவல்.


http://wiki.answers.com/Q/Who_invented_the_number_system 
எனும் இடத்தில் விவரங்கள் கிடைக்கும்.


மற்ற எண்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே இந்தியாவில் கண்டுபிடிக்கப் பட்டு விட்டன. அவை அரபு நாடுகளுக்கு எடுத்துச் செல்லப் பட்டன. அங்கிருந்து எகிப்து நாட்டிற்குப் போய் ஐரோப்பிய நாடுகளில் பிரபலம் அடைந்தன.

கணிதம் என்பது இந்தியர்களின் இரத்தத்தில் ஊறிய இதிகாச நயனம். இயற்கை அள்ளிக் கொடுத்த சுதிவாச நாணயம். அதில் திராவிடர்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள்.

திராவிடர்களின் பாரம்பரிய கணிதப் புலமை இன்று வரை குறையவில்லை. இந்தப் புலமை யைக் கண்டு  சகோதரர் பில் கேட்ஸ் இந்தியாவிற்கு வருகிறார். தமிழ் நாட்டைச் சேர்ந்த 21,000 பேரை வேலைக்குச் சேர்க்கிறார்.

சம்பளத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கிறார். பல கோடீஸ்வரர்களையும் உருவாக்கி வருகிறார். மேல் விவரங்களுக்கு - http://www.fathersofmathematics.com/  எனும் இணையத் தளத்திற்குச் செல்லவும்.

அசோக் முகிலன்  ashok.mugilan@gmail.com
கே: சிறுவர்கள் சின்ன வயதிலேயே கணினியை இயக்கக் கற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால், பெரியவர்களால் முடியவில்லை. ஏன்?

ப: கற்றுக்கொள்ளும் ஆற்றல் வயது ஆக ஆகக் குறையும் என்பது உண்மைதான். ஆனால், அக்கறை வேண்டும். ஓர் ஆர்வம் இருக்க வேண்டும். கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு பிடிவாத குணம் இருக்க வேண்டும்.

நம்ம காலத்தில் இந்த கம்பியூட்டர் இல்லை. இப்போது இது ஏன் வந்து தொலைத்தது. இதைக் கட்டிக் கொண்டு ஏன் மாரடிக்க வேண்டும் என்று நினைப்பது தப்பு. வயதை ஒரு காரணம் காட்டி சாக்குப் போக்குச் சொல்லக் கூடாது. சரியா.

இன்னும் ஒரு விஷயம். இணையத்தை இருபத்து நான்கு மணி திறந்து விட்டால் படிக்கிற பிள்ளைகள் என்ன செய்வார்கள். அதை விட்டு விட்டு என் பிள்ளைகள் படிக்கவில்லை.

பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து கண்டதைக் கெட்டதைப் பார்த்துக் கெட்டுப் போகிறான் என்று பழி போடுவது நல்ல காரணமாக இருக்கிறதா. சொல்லுங்கள். இதில் உங்கள் பிள்ளைகள் கண்ட கண்ட சால்சாப்புகளைச் சொல்லலாம்.

அவர்கள் சுதந்திரமாக இணையத்தில் வலம் வருவதில் பாது காப்புத் திரையைப் போடுங்கள். நீங்கள் இருபது வயதில் தெரிந்து கொண்டதை இப்போது உள்ள பிள்ளைகள் பத்து வயதில் தெரிந்து கொள்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இணையத்தில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. உங்களுக்கு முன்னால் நல்லதைப் பார்க்கும் பிள்ளைகள், நீங்கள் கொஞ்சம் மறைந்ததும் மிச்சம் மீதியைப் பார்க்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

பதினாறு வயது வரை அவர்களைக் கட்டுப் படுத்துங்கள். அதன் பிறகு பாலியல் தொடர்பான இணையப் பக்கங்களைப் பார்ப்பதில் உள்ள பிரச்னைகளைச் சொல்லுங்கள். ஏற்றுக் கொள்வார்கள். http://www.megaupload.com/?d=GK7X43EN எனும் இடத்தில் குழந்தை கள் பாதுகாப்பு நிரலி இருக்கிறது.

அதைப் பதிவு இறக்கம் செய்து கணினியில் பதிப்பு செய்யுங்கள். அப்புறம் உங்கள் குழந்தை கள் பாலியல் (Video) காணொளிகளைப் பார்க்க முடியாது. கடவுச் சொல் வைத்து இருக்கும் உங்களுக்கு சகல உரிமைகளும் உண்டு. அதற்காக நீங்கள் கட்சி மாற வேண்டாம். அப்புறம் வேலியே பயிரை மேய்ந்த கதை ஆகி விடும்.

ஓம் முருகா oum9160@yahoo.com.sg
கே: சென்ற வாரம் வாசகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். மைக்ராசாப்ட் நிறுவனத்தில் உங்களுக்கு வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஆனல், வயது காலை வாரி விட்டது என்று பதில் கொடுத்து இருந்தீர்கள். அந்த அளவிற்கு நீங்கள் அமெரிக்காவினால் வேண்டப் படாதவரா அல்லது மற்றவர்கள் பார்த்துப் படித்து மெச்ச வேண்டும் என்பதற்காக இப்படி பதில் கொடுத்தீர்களா?

ப: ஓம் முருகா! மற்றவர்கள் மெச்ச வேண்டும் என்பதற்காகத் தான் அப்படி பதில் கொடுத்தேன். அதுதான் பாருங்கள். உங்களுக்கு மட்டும் அந்த உண்மை தெரிந்து இருக்கிறது. மற்றவர்களுக்குத் தெரியவில்லை.

செய்திகளைப் படித்தால் இப்படித் தான் நன்றாகக் கவனமாகப் படிக்க வேண்டும். அடுத்து பல இலட்சம் வாசகர்களுக்குப் பயன் படும்படியான  ஒரு நல்ல கேள்வியைக் கேட்டதற்குப் பாராட்டுகள். 



செல்வக்குமரன், தாமான் அண்டாலாஸ், கிள்ளான்
கே: சார், 4G கைப்பேசிகள் இப்போது தான் வந்து இருக்கின்றன. அதற்குள் 5G கைப்பேசிகள் வரப் போகின்றன  என்று கேள்விப் பட்டேன். இது எந்த அளவுக்கு உண்மை சார்?


ப: நீங்கள் கேள்வி பட்டது உண்மை. மேல் நாட்டு அறிஞர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் போலத் தெரிகிறது. 5G கைப்பேசிகளையும்  கண்டுபிடித்து விட்டார்கள். இந்தக் கைப்பேசிகளைப் பயன் படுத்தி லேசர் ஒளிகளின் மூலம் இரும்பை வெட்ட முடியும் என்கிறார்கள். நம்ப முடியவில்லை. திருடர்களுக்கு லாட்டரி அடித்தது மாதிரி ஆகி விடுமே.

அடுத்து, கணினிகள் செய்யும் வேலைகளை இந்தக் கைப் பேசிகள் எடுத்துக் கொள்ளும் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள். சென்னையில் ஒருவர் ஒரு தியேட்டரில் படம் பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அந்தப் படத்தை அப்படியே அதே சமயத்தில் அசகு பிசகு இல்லாமல் தெளிவாக மலேசியாவில் இங்கே நேரடியாகப் பார்க்க முடியும்.  அது மட்டும் அல்ல. 5G கைப்பேசி ஒரு முழு தமிழ்ப் படத்தை ஐந்து நிமிடங்களில் பதிவிறக்கம் செய்து விடும் ஆற்றல் கொண்டது.

அடுத்து, 5G கைப்பேசிகளில் வாசம் வரும். உங்கள் மனைவி என்ன வாசனைச் சவர்க்காரம் போட்டுக் குளித்தார் என்பதையும் சொல்லி விடும். அப்புறம் என்ன? இப்போதே ஆர்டர் செய்து விடுங்கள். 2013 ஆம் ஆண்டில் இந்த 5G கைப்பேசிகள் விற்பனைக்கு வருகின்றன. எதற்கும் தயாராக இருங்கள். உலகம் உள்ளம் கைக்குள் அடக்கமாகி வருகிறது.

இன்னும் ஒரு வேடிக்கை. ஜப்பான் 6G கைப்பேசி ஆய்வுகளில் இறங்கியுள்ளது. இந்தக் கைப்பேசிகளை வைத்துக் கொண்டு ஆள் இல்லாமல் கார்களை ஓட்ட முடியும் என்கிறார்கள்.

காரின் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு கைப் பேசி வழியாக கட்டளைகளை மட்டும் போட்டால் போதும். இடது பக்கம் மெதுவாகத் திரும்பு. வலது பக்கம் வெட்டு. லேசாகப் பிரேக் வை. காரை நிறுத்து. கதவைத் திறந்து விடு. இந்த மாதிரிச் சின்னக் கட்டளைகள்.

இதை எல்லாம் பார்க்கும் போது எனக்கும் ஓர் ஆசை வந்துவிட்டது. தண்நீரில் போட்டாலும் மூழ்காத 7G கைப்பேசியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற ஆசை.

யாருக்காவது தங்களுடைய பணத்தைத் தண்நீரில் போட வேண்டும் என்கிற ஆசை இருந்தால் சொல்லுங்கள். தாராளமாக முதலீடு செய்யலாம். ஆனால் போட்ட பணம் திரும்பி வருமா வராதா. வரும் ஆனால் வராது.

03 ஜனவரி 2011

கணினியும் நீங்களும் - பகுதி 84

தாமிதாரா, பாங்கி, சிலாங்கூர் (குறும் செய்தி)
கே: நான் பலமுறை குறும் செய்தி அனுப்பியும் என்னுடைய கேள்விகள் இடம் பெற வில்லை. என் நண்பர்களின் கேள்விகள் வருகின்றன. ஏன்?


ப:
அன்புள்ள தாமிதாரா, நீங்கள் ஓர் ஆணா இல்லை பெண்ணா என்று தெரியவில்லை. நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் குமாரி அல்லது திருமதி என்று குறிப்பிடுங்கள். பயப் பட வேண்டாம். நான் உங்களைக் கடத்திக் கொண்டு போய் விட மாட்டேன்.

ஒன்றை இங்கே சொல்ல விரும்புகிறேன். கணினிகளில் அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக வாசகர்கள் பலர் கேள்விகளைக் கேட்கிறார்கள்.


என்னால் இயன்றவரை கைப்பேசி வழியாகத் தீர்த்து வைக்கிறேன். இது ஓர் இலவசச் சேவை. இருந்தாலும் முடிந்த வரை குறும் செய்தி மூலமாகக் கேள்வி கேட்பதைத் தவிர்த்து விடுங்கள்.

நீங்கள் ஒருவர் மட்டும் குறும் செய்தி மூலமாகக் கேள்வி கேட்டால் பரவாயில்லை.  ஆனால், ஒரு நாளைக்கு குறைந்தது 15 குறும் செய்திகள், 10 கைப்பேசி அழைப்புகள், 10 மின்னஞ்சல்கள் வருகின்றன.


என் நிலையையும்  கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவசரமாக இருந்தால் உதவிகள் செய்யலாம். செய்தும் வருகிறேன்.

அதற்காக இரவு 12 மணிக்கு அழைத்துக் காணாமல் போன கைப்பேசியைக் கண்டுபிடித்து தருமாறு கேட்க வேண்டாம். 'காலையில் கூப்பிடலாம் என்று நினைத்தேன். நேரம் இல்லாமல் போய் விட்டது' என்று தயவு செய்து சமாதானம் சொல்ல வேண்டாம்.

ஒரே குறும்செய்தியைப் பத்து தடவைகள் அனுப்பி ஒருவருடைய பொறுமையைச் சோதிப்பதில் நியாயம் இருக்கிறதா. சொல்லுங்கள். என்னுடைய மின்னஞ்சல் முகவரியைத் தருகிறேன். ksmuthukrishnan@gmail.com கேள்விகளை அங்கே அனுப்பி விடுங்கள்.

ஒரு பல்கலைக்கழக மாணவி, சிலாங்கூர் (குறும் செய்தி)
கே: சார், நான் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். அண்மையில் 2G Spectrum என்றால் என்ன என்பதைப் பற்றி வீட்டில் நானும் என் தங்கையும் விவாதித்துக் கொண்டு இருந்தோம். அதைப் பார்த்த எங்கள் அப்பா அதைப் பற்றி விவாதிக்க வேண்டாம். தேவை இல்லை என்று கட்டளை போடுகிறார். அப்படி என்ன பெரிய இடத்து விவகாரம். வர வர அவர் எங்களை அடிக்கடி தேவை இல்லாமல் கட்டுப் படுத்துகிறார். பேசுவதில் கூட சுதந்திரம் இல்லையா. அது எங்களுக்குப் பிடிக்கவில்லை. உங்கள் கருத்தைச் சொல்லவும்.

ப: நல்லது. நீங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மாணவி. நல்லது கெட்டது எல்லாம் தெரிந்து இருக்க வேண்டிய வயது. இந்த வயதில் எந்தப் பெண் பிள்ளைக்கும் தன் தகப்பனைத் தவிர மற்றவர்கள் கட்டளைகளைப் போடுவது பிடிக்கவே பிடிக்காது. இது நான் அறிந்த உண்மை. உங்கள் வயதில் எனக்கும் ஒரு மகள் இருக்கிறார்.

ஆனால், உங்கள் விஷயத்தில் வேறு மாதிரியாக இருக்கிறது. அவருக்கே சலிப்பு ஏற்படும் வகையில் விவாதம் இருந்து இருக்கலாம் என்று என் உள் மனம் சொல்கின்றது.

தகப்பனாருடைய கைகளைப் பற்றி கூட்டிச் செல்லும் போது மகளுடைய இரத்த பாசம் பேசுகின்றது. மகளுடைய வாழ்க்கை இலக்கணங்கள் தடுமாறும் போது தகப்பனுடைய இதய பாசம்  பேசுகின்றது. 

இந்த நெளிவு சுழிவுகளினால் ஒரு தகப்பன் - மகள் உறவு நலிந்து போய் விடுமா. சொல்லுங்கள்.

தகப்பன் - மகள் உறவு என்பது ஒரு ஜென்மாந்திர உறவு. கட்டியவன் வீட்டுப் படிக்கட்டுகளில் ஏறி  நின்று ஏங்கித் தவிக்கும் ஒரு புனிதமான உறவு.  அப்படிப் பட்ட உறவைக் கொச்சைப் படுத்த நினைப்பது நன்றாக இல்லை. ரொம்பவும் தப்பு மகளே.

உங்களுடைய அப்பாவின் பேச்சைக் கேளுங்கள். அவரை மீறி எதையும் செய்ய வேண்டாம். எந்தத் தகப்பனும் தன் மகள் கெட்டுப் போக வழி சொல்லவே மாட்டான். இது சத்தியமான உண்மை.

நீங்கள் எழுதும் எழுத்து இருக்கிறதே அது உங்களுடைய  வெறும் கையெழுத்து.  ஆனால், உங்கள் தகப்பன் எழுதிய எழுத்து இருக்கிறதே அது உங்கள் தலை எழுத்தையே மாற்றிப் போடும் கையெழுத்து. 

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆக, இப்போதைக்கு படிப்பை ஒழுங்காகப் படித்து முடியுங்கள். அடுத்த வரும் கேள்விகள் உங்களுக்காக வருகின்றன.

சங்கேஸ்வரன், ஜாலான் தீமா, ஈப்போ
கே: 4G வரப் போகிறது. அப்படி இருக்கும் போது 2G விவகாரம் பற்றி ஏன் எல்லோரும் மிகவும் அலட்டிக் கொள்கிறார்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை. பழையதைப் பற்றி பேசுவதால் ஒரு நன்மையும் இல்லை என்பது கருத்து.

ப: அது சரி. வீடு பற்றிக் கொண்டு  எரிகிறது. அடுப்பு எரிக்க நெருப்பு கேட்பது போல இருக்கிறது உங்கள் கருத்து. என் கருத்தைச் சொல்லலாம் அல்லவா. அந்தப் பணத்தை எல்லாம் எடுத்து ஆறு கோடி மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து இருந்தால் ஒவ்வொருவருக்கும் 32,500 கிடைத்து இருக்குமே.

இப்போது சொல்லுங்கள். அலட்டிக் கொள்ளாமல் என்ன செய்யச் சொல்கிறீர்கள். எனக்கு என்னவோ நீங்கள் தான் புரிந்து கொள்ளாமல் அலட்டிக் கொள்வது போல தெரிகிறது.

சண்பகப்பிரியா, தாமான் உத்தாமா, மாசாய்
கே: 0G கைப்பேசிகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். உண்மையா சார்?
ப:
பேசி வைத்தால் போல இந்த வாரம் கைப்பேசிக் கேள்விகளாக வருகின்றன. கைப்பேசிகளில் 0G, 1G, 2G, 2.5G, 2.75G, 3G, 4G தலைமுறைகள் உள்ளன. G என்றால் Generation. தமிழில் தலைமுறை என்று சொல்கிறோம். 

0G என்பது ஆக மூத்தத் தலைமுறை.
முதன்முதலில் வெளிவந்த கம்பியில்லாத் தந்தி கைப்பேசிகள். இவை 1940-50 ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன. அதன் எடை 40 - 60 கிலோகிராம். முதுகில் கட்டித் தூக்கிச் செல்ல வேண்டும்.

அதை எரிக்சன் நிறுவனம் கண்டுபிடித்தது. ஆக, கைப்பேசிகளின் தந்தை யார் என்றால் எரிக்சன் கைப்பேசி தான். பின்னர் சோனி நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்ததால் சோனி எரிக்சன் என்று பெயர் வந்தது.

கைப்பேசிகளின் தந்தையையே ஓரம் கட்டி விட்டு நோக்கியா இப்போது முதன் நிலையில் நிற்கிறது. இது வரை உலகம் முழுமையும் 460 கோடி கைப்பேசிகள் தயாரிக்கப் பட்டுள்ளன. இவற்றுள் 120 கோடி நோக்கியா கைப்பேசிகள்.

1G என்றால் முதலாம் தலைமுறைக் கைப்பேசிகள். இவை 1940ஆம் ஆண்டுகளில் வெளி வந்தன. இந்த வகையான கைப்பேசிகளைக் கொண்டு பேச மட்டுமே முடியும். SMS எனும் குறும் செய்தி அனுப்ப முடியாது.

2G கைப்பேசிகள் 1990 ஆண்டுகளின் தொடக்கத்தில் வெளிவந்தன. இவற்றைக் கொண்டு குறும் செய்தி அனுப்பலாம். அழைப்பவர்களின் எண்களைப் பார்க்கலாம்.

2.5G கைப்பேசிகள் மூலம் மின்னஞ்சல், இணையச் சேவைகளைப் பெற முடியும். 3GP படங்களைப் பார்க்க முடியும்.

3G கைப்பேசிகள் 2003ஆம் ஆண்டில் வெளிவந்தன. அகன்ற அலைவரிசையின் (Broadband) வேகம் அதிகரிக்கப் பட்டது.

4G கைப்பேசிகள் இந்த 2010 ஆண்டில் அக்டோபர் மாதம் வெளியானது. இதில் அதி வேக அகன்ற அலை வரிசை இணையச் சேவை இருக்கிறது.

அதிக வரையறை (High Definition) காணொளிப் படங்களைப் பார்க்க முடியும். நேரடி நேரலை (Live Streaming) எனும் முறையும் இருக்கிறது.

4G முறையின் வழியாக உலகத்தின் எந்த மூலையில் உறவினர் நண்பர்கள் இருந்தாலும் நேரலை நிகழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே பேச முடியும்.

கையில் உள்ள எலும்புகளை எக்ஸ்ரே எடுக்க முடியும். சந்திர மண்டலத்தில் ஒருவர் இருந்தால் அவருடன் பேச முடியும்.

வீட்டில் நடக்கின்ற விஷயங்களைத் துப்பறியும் காமிரா மூலமாக ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கைப்பேசியில் பார்க்க முடியும். மனைவி

சீரியஸாக துணி தைக்கிறாளா இல்லை சீரியல் பார்க்கிறாளா என்பது தெரிந்து விடும். ஒவ்வொரு வீட்டிலும் மூன்றாம் உலகப் போர் வர வாய்ப்புகள் வரிசை பிடித்து நிற்கின்றன. பத்திரம்.

4G ஐக் கொண்டு தொலைதூரத்தில் இருந்து கணினியை இயக்க முடியும். சாவி போடாமல் கார்களின் கதவுகளைத் திறக்க முடியும். வீட்டில் நெருப்பு பிடித்து விட்டால், திருடர்கள் நுழைந்து விட்டால் எச்சரிக்கை ஒலிகள் வரும்.

இன்னும் நிறையப் பயன் பாடுகள் உள்ளன. தொழில்நுட்பம் எங்கோ போய்க் கொண்டு இருக்கிறது. விரட்டிப் பிடியுங்கள்.

25 டிசம்பர் 2010

கணினியும் நீங்களும் - 83

கார்த்திகா ஜித்  karthikajith@aol.com
கே: கணினி மன்னன் பில் கேட்ஸ் அவர்களின் மைக்ராசாப்ட் நிறுவனத்தில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்? தன் ஊழியர்களிடம் கெடுபிடியாக நடந்து கொள்வார் என்று கேள்வி பட்டேன். உண்மையா?

ப: அவரைப் பற்றி பலர் பலவிதமாகச்  சொல்லலாம். உண்மையில் அவர் ஒரு நல்ல மனிதர். ஒரு நல்ல முதலாளி. தன் ஊழியர்களிடம் தாராளமாக நடந்து கொள்ளும் அருமையான தோழர்.

நன்றாக வேலை செய்பவர்களுக்கு மைராசாப்ட் நிறுவனத்தின் பங்குகளை அன்பளிப்பு ஊதியமாகக் கொடுக்கிறார். வேலை செய்பவர்களுடன் வரிசையில் நின்று சாப்பாடு வாங்கிக் கொள்கிறார் என்றால் பார்த்துக் கொளுங்களேன்.

இவரிடம் வேலை செய்தவர்களில் ஏறக்குறைய 12,000 பேர் கோடீஸ்வரர்களாக ஆகி இருக்கிறார்கள். மறுபடியும் சொல்கிறேன். 12,000 கோடீஸ்வரர்கள். மேல் விவரங்கள் http://en.wikipedia.org/wiki/Microsoft எனும் இணையத் தளத்தில் கிடைக்கும்.

உயர் பதவியில் ஒருவர் எட்டு வருடங்கள் வேலை செய்தால் போதும். அவர் கோடீஸ்வரர் ஆகி விடலாம் என்று கணக்குப் போட்டு வைத்து இருக்கிறார்கள். ஒருவரின் சராசரி ஆரம்பச் சம்பளம் மாதத்திற்கு 34,000 மலேசிய ரிங்கிட். அப்படி என்றால் ஒரு நாளைக்கு 1,100 ரிங்கிட்.

இப்போது சொல்லுங்கள் பில் கேட்ஸ் தன் ஊழியர்களிடம் கெடுபிடியாக நடந்து கொள் கிறாரா? மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கு உலகம் முழுமையும் 100 அலுவலகங்கள் உள்ளன. அவற்றில் 89,000 பேர் வேலை செய்கிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் தலைமையகத்தில் மட்டும் 74,923 பேர் வேலை செய்கிறார்கள். 76 விழுக்காட்டினர் ஆண்கள். ஆகப் பெரிய முக்கியப் பதவிகளில் தமிழர்கள் நால்வர் இருக்கிறார்கள். பில் கேட்ஸ் 2008ல் தலைமைப் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். அறப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்.

மைக்ராசாப்ட் தலையமகத்தில் இலவசமாகக் குளிர்பானங்கள் வழங்கப் படுகின்றன. 2009 ஆம் ஆண்டு மட்டும் 552 மில்லியன் குளிர்பான பாட்டில்களைக் குடித்து முடித்து இருக்கிறார்கள். ஒரு கொசுறு செய்தி. ஐந்து வருடங்களுக்கு முன்னால் மைக்ராசாப்ட் நிறுவனத்தில் வேலை செய்ய எனக்கும் வாய்ப்பு கிடைத்தது.  ஆனால், வயது காலை வாரி விட்டு விட்டது.


குமாரி.கனகாம்பரம், பாசிர் கூடாங், ஜொகூர்
கே: உலகின் முதல் கணினியின் பெயர் எனியாக். ஏன் அப்படி ஒரு பெயரை வைத்தார்கள்?
ப: கனகாம்பரம் மலர்களிலேயே ஓர் அற்புதமான மலர். எனக்கு மிகவும் பிடித்த மலர். அந்தப் பெயரை ஏன் வைத்தார்கள் என்று கேட்டால் நான் என்னம்மா சொல்வது. நீங்கள் கேட்டதும் ஒரு வகையில் நன்மைக்கே.

உங்களுக்காக இணையத்தில் போய் ஆராய்ச்சி செய்தேன். நிறைய தகவல்கள் கிடைத்தன. எனியாக் என்றால் Electronic Numerical Integrator And Calculator என்பதன் சுருக்கம். அதன் எடை முப்பது டன்கள். 1943ல் கண்டுபிடிக்கப் பட்டது. 1945 ஆம் ஆண்டு அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்தில் கணக்குகள் செய்ய அந்தக் கணினியைப் பயன் படுத்தினார்கள்.

அதை உருவாக்க இருபது மில்லியன் ரிங்கிட் செலவு செய்தார்கள். 1954ல் அதன் பாகங்கள் எல்லாம் கழற்றப் பட்டன. அமெரிக்காவில் உள்ள நான்கு அரும் பொருள் காட்சியகங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப் பட்டன. 

அந்தப் பாகங்களைப் பார்ப்பதற்கு நாள் ஒன்றுக்கு ஆறாயிரம் பேர் வருகிறார்ளாம்.  செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பார்கள். அந்த மாதிரி எனியாக் இறந்தும் இருபது பேருக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுத்து வருகிறதாம். எனியாக் வாழ்க!

பாலக்கிருஷ்னன்   balakrishnan91@gmail.com
கே: முன்பு நீங்கள் நகைச்சுவையாகவும் நையாண்டியாகவும் பதில் கொடுப்பீர்கள். படிப்பதற்கு கலகலப்பாக இருக்கும். கொஞ்ச காலமாக அந்த நகைச் சுவையைக்  காணோம்?

ப: அந்தக் கதையை ஏன் கேட்கிறீர்கள். தீபாவளிக்கு முதல் நாள் திருநெல்வேலி அல்வா வாங்கப் போறேன்னு போனது தான். திருநெல்வேலிக்குப் போனதா இல்லை திருப்பதிக்கு போனதா. ஒன்றும் தெரியவில்லை. வரும் போது வரட்டும்.

ஜோசப் தாஸ்  jsphdoss@yahoo.com
கே: Artificial Intelligence எனும் நுண்ணறிவைப் பயன்படுத்தி மனிதனைப் போல சிந்தித்துச் செயலாற்றும் கணினிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்.
ப: Artificial Intelligence என்றால் செயற்கை நுண்ணறிவு. நம்முடைய ஆறாவது அறிவைப் போல அறிவார்ந்த முடிவு செய்வதைத் தான் செயற்கை நுண்ணறிவு என்கிறோம். அதாவது மனிதனைப் போல சிந்தித்துச் செயலாற்றும் திறன்முறை.

எடுத்துக்காட்டாக, ஓர் உணவகத்திற்குப் போனதும் மனைவிக்கு இது பிடிக்கும் அது பிடிக்காது. மகளுக்கு அது பிடிக்கும் இது பிடிக்காது என்று நம் மூளை உடனடியாக முடிவு செய்கிறது அல்லவா. 

அந்த மாதிரி உணர்வு கலந்து சிந்திப்பதைத் தான் அப்படி சொல்கிறோம்.தொட்டிலில் தூங்கும் குழந்தை அழுதால் நம்முடைய கைப்பேசிக்கு எஸ்.எம்.எஸ் பண்ணும் கணினிகளும் வந்துவிட்டன.

இவை தான் செயற்கை
நுண்ணறிவுக் கணினிகள். எதிர்காலத்தில் கணினிகளுக்கும் மனிதர்களைப் போல ஆசாபாசங்ககள் வரலாம்.

நம் வீட்டுக் கணினி நம்முடைய வீட்டில் நடக்கும் பிரச்னைகளை அடுத்து வீட்டுக் கணினிக்குச் சொல்லலாம். அந்த வீட்டுக் கணினி பக்கத்து வீட்டுக்குச் சொல்லலாம். இப்படியே செய்திகள் ஊர் பூராவும் பரவி கணினிகளுக்குள் வம்பு சண்டை வரலாம்.

உச்சக் கட்டமாக மனிதர்களுக்கு எதிராகக் கணினிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு தொழில் சங்கத்தையே உருவாக்கலாம். கணினிக் குண்டர் கும்பல்கள் காளான்களைப் போல முளைக்கலாம். மனிதனுக்கும் கணினிகளுக்கும் இடையே உலகப் போர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

கற்பனை இல்லை. நடக்கப் போகிற
உண்மை. அதற்காகக் கவலைப் பட்டு சாப்பிடாமல் கொள்ளாமல் இருந்து உங்கள் உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம். இது நடக்க ரொம்ப காலம் பிடிக்கும்.

மணிகண்டன்   manikandan9842@gmail.com
கே: Defragment எனும் கணினிச் சொல்லுக்குத் தமிழில் சுத்திகரிப்பு என்று சொல் கிறீர்கள். அது தவறான சொல் என்று நான் கருதுகிறேன். சரியான சொல் என்ன?
ப: Defragment எனும் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல் இன்னும் உருவாக்கப் படவில்லை என்பதைத் தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன். கணினிச் சொற்களை மொழி பெயர்க்கிறேன் என்று சொல்லி விழியைப் பிடுங்குவதில் நமக்கு உடன்பாடு இல்லை.

எடுத்துக் காட்டாக ஒன்றைச் சொல்கிறேன்.  RAM என்றால் Random Access Memory. சிலர் தமிழில் சார்பிலாத் தெரிவு இருப்பு வளம் என்று அழைக்கிறார்கள். அந்தச் சொற்களைச் சொல்லி முடிப்பதற்குள் கேட்பவருக்கு கணினியின் மீது இருக்கிற கொஞ்ச நஞ்ச ஆசையும் போய்விடும்.

அதற்கு தற்காலிக நினைவகம் என்று பெயர் வைத்து இருக்கிறோம். அதை அறிஞர்கள் பலர் ஏற்றுக் கொண்டு விட்டனர். உலக இணையக் களஞ்சியமான விக்கிபீடியாவும் பயன்படுத்துகிறது.

தற்காலிக நினைவகம் என்றால் என்ன என்று சிலர் கேட்கலாம். கணினியில் நடைபெறும் வேலைகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்  தற்காலிகமாக சேமித்து வைக்கும் சாதனத்திற்குப் பெயர் தற்காலிக நினைவகம். ஆங்கிலத்தில் RAM என்று அதற்குப் பெயர்.

ஆக, மொழி பெயர்ப்பு செய்யும் போது அந்தச் சொல்  எளிமையாக எல்லோராலும் உச்சரிக்கப் படக் கூடியதாக இருக்க வேண்டும்.  Defragmentation என்பதற்கு ஒருங்கமைப்பு  என்று பெயர் வைத்து இருக்கிறேன்.

வாசகர்கள் தங்கள் கருத்து களைச் சொல்லுங்கள். நல்ல சொல்லாக இருந்தால்
அதையே வைத்து விடுவோம்.


மணிகண்டன் ராமநாதன்  <manigandanramanathan@gmail.com>
கே: சார், இலவசமாக மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்யும் இணையத் தளங்களைச் சொல்வீர்களா?
ப: ஒரு சில இடங்களின் பெயர்கள் என்னிடம் உள்ளன. அவற்றுள் இந்த வாரம் மூன்று இடங்களின் பெயர்களைத் தருகிறேன். மற்றவை அடுத்த அடுத்த வாரங்களில் வெளி வரும்.
http://www.download3000.com/
http://www.soft32.com/
http://www.downloadatoz.com/
http://www.dl4all.com/

19 டிசம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 82




ஞானசேகரன், சுங்கைவே, பெட்டாலிங் ஜெயா
கே: நான் ஓர் உயர்நிலைப் பள்ளி மாணவன். என்னுடைய நண்பரின் USB Pen Drive மூலமாக வைரஸ்கள் என் கணினியில் நுழைகின்றன. அவர் வைரஸ்கள் எதுவும் இல்லை என்று சொல்லித் தான் கொடுப்பார். ஆனால், வைரஸ்கள் இருக்கும். என்னுடைய கணினியின் உள்ளே வைரஸ்கள் நுழையாமல் இருக்க ஏதாவது நிரலி இருக்கிறதா? இப்போது தொட்டதற்கு எல்லாம் காசு கேட்கிறார்கள் சார். இலவசமாகக் கிடைக்கும் நிரலியாக இருந்தால் சொல்லுங்கள்.


ப: இணையத்தில் கணினியைத் தாக்கும் நச்சு அழிவிகள் ஆயிரக் கணக்கில் உள்ளன. அது எப்போது வரும் யாரைத் தாக்கும் என்று எவருக்கும் தெரியாது. வைரஸ் என்பது ஒரு நச்சு. அந்த நச்சு வைரஸ்களைப் பரப்பி விடும் நிரலிக்குப் பெயர் நச்சு நிரலி.

அந்த நச்சு நிரலியையே அழிக்கும் ஒரு  தடுப்பு  நிரலிக்குப் பெயர் தான்  நச்சு நிரல் கொல்லி. ஆக, Anti Virus என்பதைத் தான் நச்சு நிரல் கொல்லி என்கிறோம். இந்தப் பதிலை எழுதிக் கொண்டு இருக்கும் போது என் மடிக்கணினியில் செய்தி வருகிறது. கடைசியாகக் கண்டுபிடிக்கப் பட்ட புதிய வைரஸ்கள். Trojan.SpyEye!, Trojan.Sefnit, Backdoor.Badpuck, Backdoor.Vinself, Trojan.Zbot.

ஒரு சின்ன புள்ளி விவரங்களைத் தருகிறேன். 1990 ஆம் ஆண்டு 200 வைரஸ்கள் இருந்தன. 2000 ஆம் ஆண்டில் 50,000 ஆக உயர்ந்தது. ஆகக் கடைசியாக 14.12.2010 திகதியில் அந்த எண்ணிக்கை 1,122,311 ஆக உயர்ந்து நிற்கிறது. எதிர்காலத்தில் நிம்மதியாக இணையத்தில் நுழைய முடியாது போலத் தெரிகிறது. கணினியைப் பற்றி கொஞ்சம் படித்து விட்டு சிலர் வைரஸ் நிரலிகளை எழுதித் தொலைக்கும் கேடு கெட்ட ஜென்மங்களாக மாறுகின்றார்கள்.

AVG,  Avira,  Avast,  Spybot Search & Destroy  போன்ற  இலவசமான  நச்சு நிரல் கொல்லிகளைப் பயன் படுத்தி உங்கள் கணினியைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். கீழ்க்காணும் இடங்களில் இலவசமான நச்சு நிரல் கொல்லிகள் கிடைக்கின்றன.

1. http://free.avg.com/us-en/homepage
2. http://www.avast.com/free-antivirus-download
3. http://www.avira.com/en/avira-free-antivirus
4. http://www.safer-networking.org/en/spybotsd/index.html
5. http://www.pctools.com/free-antivirus/


இவற்றுள் என்னுடைய தேர்வு PC Tools Antivirus நிரலி.

அடுத்து, உங்களுடைய USB Pen Drive மூலமாக கணினியை நச்சு நிரலி தாக்கி விட்டதாகச் சொல்கிறீர்கள். விரலிகளை மட்டும் குறி வைத்துத் தாக்கும் நச்சு நிரலிகள் இருக்கின்றன. இந்த வைரஸ் நச்சு நிரலிகள் கணினிக்குள் நுழையாமல் இருக்க ஒரு தடுப்பு ஊசி இருக்கிறது. இதை உங்கள் கணினியில் பதித்துக் கொள்வது நல்லது.

உங்கள் கணினியில் விரலியைச் செருகியதும் உடனே விரலிக்கு தடுப்பு ஊசி போடப் படும். தடுப்பு ஊசி போட்டு விட்டுத் தான் மறு வேலை. அதனால் கணினிக்கு மிகவும்  பாதுகாப்பு. அதைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய இடம் கீழே இருக்கிறது. இது ஓர் இலவச நிரலி. இதைப் பார்த்ததும் எல்லோரும் ஒரே சமயத்தில் போய்ப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அங்கு உள்ள பரிமாறிக் கணினி தடுமாறிப் போய் சேவைகளை நிறுத்தி வைக்கலாம். ஆக, பொறுமையைக் கையாளுங்கள். 
http://download.cnet.com/Panda-USB-Vaccine/3000-2239_4-10909938.html

மதியழகன் mathi038@gmail.com
கே: நம்முடைய ATM அட்டைகளில் MEPS என்று சின்னம் குறிக்கப் பட்டிருக்கிறது. அப்படி என்றால் என்ன? தயவு செய்து விளக்கப் படுத்துங்கள்.
ப:
MEPS என்றால் Malaysian Electronic Payment System. தமிழில் மலேசிய மின்னியல் பணம் வழங்கும் முறை என்று சொல்வார்கள்.  ஏ.டி.எம் அட்டைகளின் பின்புறம்  இந்தச் சின்னதைப் பார்க்க முடியும். ATM என்றால் Automated Teller Machine. தமிழில் தானியக்கப் பணம் வழங்கி. இதை வங்கி அட்டை என்றும் சொல்வார்கள். இந்த அட்டையில் மூன்று முக்கியப் பயன்பாடுகள் உள்ளன.


1. வங்கியில் இருந்து பணத்தைப் பெறுவது
2. இணையம் மூலமாகப் பொருட்களை வாங்குவது
3. சேமிப்பில் உள்ள பணத்தை அடமானமாகக் காட்டுவது

இந்த அட்டையைக் கொண்டு இந்தோனேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளில் ரொக்கப் பணத்தை உங்களால் பெற முடியும். இந்த நான்கு நாடுகளில் உள்ள வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. இன்னும் சுருக்கமாகச் சொன்னால் உங்களுடைய மலேசிய ஏ.டி.எம் அட்டையை சீனாவிற்கு எடுத்துச் சென்று அங்குள்ள வங்கிகளில் சீன யுவான் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன் உங்களுடைய கைப்பேசி எண்களுக்கு Topup எனும் முன்பணம் கட்டவும் முடியும். ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை மாற்றிக் கொள்ளவும் முடியும். 1997 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்ட இந்த முறையில் மலேசியாவின் 27 வங்கிகள் உறுப்பினர்களாக உள்ளன. ஆசியாவில் முதல் நாடாகவும் மலேசியா விளங்குகிறது. கூடுதலான விவரங்களைத் தெரிந்து கொள்ள http://www.meps.com.my/ எனும் இணையத் தளத்திற்குச் சென்று பார்க்கவும்.

நந்தினி   milcah.nandani@yahoo.com
கே: தோசையைச் சுருட்டுவது போல மடக்கிச் சுருட்டிக் கொண்டு போகும் அளவிற்கு ஒரு மடிக்கணினி வந்து விட்டதாகச் சொல்கிறார்கள் சார். இது எந்த அளவுக்கு உண்மை? நம்ப முடியவில்லையே சார்.

ப:
ஆமாம் தாயே. என்னாலும் தான் நம்ப முடியவில்லை. இந்த மடிக்கணினி வெளி வந்ததும் நாம் கணினித் தொழில் துறையில் ஒரு படி மேலே ஏறி நிற்போம். Orkin Design எனும் ஜெர்மனிய நிறுவனம் கண்டு பிடித்து இருக்கிறது. செய்தித் தாளைப் படித்து முடித்ததும் சுருட்டிக் கைகளுக்கு இடையில் அக்குளில் வைத்துக் கொண்டு போவது... அது ஒரு காலம்.


ஆனால், மடிக்கணினிகள் அந்த இடத்திற்கு வந்து விட்டன.  http://www.techkumar.org/gadgets/roll-top-laptop.html எனும் இடத்தில் விவரங்கள் இருக்கின்றன. போய்ப் பாருங்கள். கணினி உலகம் எங்கேயோ போய்க்
கொண்டு இருக்கிறது. இந்த அதிசயத்தைத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள்.

மதன முகிலன்   rmathanamuhilan@yahoo.com
கே: இணையத்தில் உள்ள தகவல்களைப் படித்து முடிக்க எத்தனை வருடங்கள் பிடிக்கும்? என் நண்பன் கின்னஸ் சாதனை செய்யப் போவதாகச் சொல்கிறான். அப்படி என்றால் யாரை அணுக வேண்டும்.


ப: யாரையும் அணுக வேண்டாம். நம்மை அணுகியதே போதும். இணையத்தில் உள்ள எல்லாத் தகவல்களையும் படித்து முடிக்க 57,000 ஆண்டுகள் பிடிக்கும். சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டாமா? படுக்கப் போகும் போது மட்டும் ஒரு பத்து நிமிடம் படிக்கச் சொல்லுங்கள். அது போதும். சாதனை செய்து முடிக்க 8,219,088 வருடங்கள் பிடிக்கும். அப்புறம் பூமி இருக்கிற வரைக்கும் அந்தக் கின்னஸ் சாதனையை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. உங்கள் நண்பருக்கு இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துகள்.