அமெரிக்காவில் ஏன் இந்த அளவுக்கு கொரோனா பாதிப்பு? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்காவில் ஏன் இந்த அளவுக்கு கொரோனா பாதிப்பு? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

07 ஏப்ரல் 2020

அமெரிக்காவில் ஏன் இந்த அளவுக்கு கொரோனா பாதிப்பு?

இந்த 21-ஆம் நூற்றாண்டில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு வரலாறு காணாத பாதிப்புகள். அமெரி்க்க நாட்டுக்கு உச்சக்கட்டப் பாதிப்புகள். வரலாறு மறக்க முடியாத உயிர் இழப்புகள்.

சீனாவையும் மிஞ்சிப் போகிற அளவிற்கு உயிர் இழப்புகள். ஒவ்வொரு நாளும் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிப் போகிறது. அதே போல் உயிர் இழப்புகளும் அதிகமாகிக் கொண்டே தான் போகின்றன.


அமெரிக்காவிற்கு என்ன ஆச்சு என்று ஆப்பிரிக்கா நாட்டு காங்கோ மக்கள் கேட்கும் அளவிற்கு நிலைமை மிக மிக மோசமாகி விட்டது.

அமெரிக்காவில் மட்டும் இது வரை 367,650 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிர் இழப்புகள் 10,943. இத்தாலியில் 16,523; ஸ்பெயின் 13,798; பிரான்ஸ் 8,911; இங்கிலாந்து 5,373. எல்லாமே ஆயிரக் கணக்கில் போகின்றன. 

அமெரிக்காவில் அடுத்து வரும் மூன்று வாரங்களில் உயிர் இழப்புகள் மேலும் உயரலாம். பாதிப்புகள் உச்ச நிலையை அடையலாம் என்று வெள்ளை மாளிகை எச்சரிக்கை செய்து உள்ளது.

கொரோனா வைரஸ் மூலம் அமெரிக்காவில் இரண்டு இலட்சம் மக்கள் வரை உயிர் இழக்கலாம் என பகீர் தகவலைச் சொல்லி பேதி மாத்திரையைக் கொடுக்கிறது வெள்ளை மாளிகை.


ஏன் அமெரிக்காவில் இந்த அளவுக்குப் பாதிப்புகள். காரணம் என்ன. அதைப் பற்றி அமெரிக்காவின் ’நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் அண்மையில் ஓர் ஆய்வு செய்தது. பல திடுக்கிடும் தகவல்கள் கசிகின்றன.

ஒரே ஒரு முக்கியக் காரணம். மக்களுக்குச் சரியான தகவல்கள் சரியான நேரத்தில் போய்ச் சேரவில்லை. அதுதான் முக்கியக் காரணம். பிரதான காரணம்.

கொரோனா தொடங்கிய தொடக்கக் காலத்தில் கொரோனாவைப் பற்றிய முழுமையான தகவல்கள் மக்களுக்குப் போய் சேர்ந்து இருந்தால், அமெரிக்காவில் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகிப் போய் இருக்காது.

சீனாவின் ஹூபே மாநிலத்தின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்த காலக் கட்டம். 2020 ஜனவரி 15-ஆம் தேதி தான் ஐ.நா.விற்குச் சீனா அதைப்பற்றி எச்சரிக்கை செய்தது.



எச்சரிக்கைக்குப் பின்னர் சீனாவில் இருந்து அமெரிக்கர்கள் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு படை படையாகக் கிளம்பி விட்டார்கள்.

437,000 பேர் அமெரிக்காவிற்கு விமானம் மூலம் போய்ச் சேர்ந்தார்கள். எண்ணிக்கையைப் பாருங்கள். 4 இலட்சத்து 37 ஆயிரம் பேர். ஆயிரக் கணக்கான விமானங்களில் பறந்து போய் இருக்கிறார்கள். போனவர்கள் சும்மா ஒன்றும் போகவில்லை.

பெரும்பாலோர் கொரோனா கிருமிகளையும் தங்களுடன் அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.

கொரோனாவின் கோட்டையாக விளங்கிய வுஹான் நகரில் இருந்து பல ஆயிரம் அமெரிக்கர்கள் நேரடி விமானங்கள் மூலமாக அமெரிக்காவிற்குச் சென்று இருக்கிறார்கள்.

2020 ஜனவரி மாதம் 15-ஆம்தேதி வரையில் கொரோனா தீவிரம் குறித்து, உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை செய்யவில்லை. அதனால் மக்களும் பெரிது படுத்தவில்லை.

என்ன செய்வது. கொரோனா இப்படி இறக்கைக் கட்டி கோரத் தாண்டவம் ஆடும் என்று யார்தான் எதிர்பார்த்தார்கள்.


இந்தக் கட்டத்தில் சீனாவில் இருந்து பல ஆயிரம் பேர் அமெரிக்காவின் பற்பல நகரங்களுக்குத் தங்கு தடை இல்லாமல் போய் இருக்கிறார்கள். அப்படிப் போனவர்கள் அமெரிக்கர்கள் மட்டும் அல்ல. பல நாட்டுக்காரர்களும் அவசரம் அவசரமாகப் போய் இருக்கிறார்கள். கொரோனாவில் இருந்து தப்பித்தால் போதும் என்கிற அவசரக் கோலம்.

2020 பிப்ரவரி மாதத்தில் சீனாவில் இருந்து 1,300 விமானங்கள் அமெரிக்காவின் 17 நகரங்களுக்குப் போய் இருக்கின்றன. Los Angeles, San Francisco, New York, Chicago, Seattle, Newark and Detroit போன்ற நகரங்கள்.

இந்த விமானங்கள் மூலம் தான் மக்கள் அமெரிக்காவிற்குப் போய் இருக்கிறார்கள். இந்த விமானக்கள் மூலமாகத் தான் கொரோனா வைரஸ்களும் அமெரிக்காவிற்குப் பறந்து போய் இருக்கின்றன.

கொரோனாவின் வீரியக் கொடுமைத் தன்மையைப் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை செய்வதற்கு முன்பாகவே சீனாவில் இருந்து நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்காவிற்குப் போய் விட்டார்கள்.

அப்போது அமெரிக்க விமான நிலையங்களில் கொரோனா குறித்த பரிசோதனைகளில் தீவிரம் இல்லை. மருத்துவ சோதனைகளில் தீவிரம் இல்லை. பெரிய பாதுகாப்பு எதுவும் இல்லை. வழக்கமான பயண விதி முறைகள் தான்.

அமெரிக்காவிற்குள் சென்ற பயணிகளில் எத்தனைப் பேர் கொரோனா வைரஸ் பாதிப்போடு அமெரிக்காவுக்குள் போனார்கள் என்கிற கணக்கும் தெரியவில்லை. அந்தக் கணக்கு விவரங்கள் இதுவரையிலும் கிடைக்கவில்லை. உலகத்துப் போலீஸ்காரருக்கு இப்படி ஒரு நிலைமையா?

அதன் பின்னர் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. ஆனாலும் அமெரிக்கர்கள் பலர் பொருட்படுத்தவில்லை. ஓர் அசட்டை தான். ஆகக் கடைசி நிமிடம் வரையிலும் சீனாவில் இருந்து விமானங்கள் அமெரிக்காவுக்குப் பறந்த வண்ணம் இருந்தன.

மார்ச் மாதம் மத்திய வாக்கில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் நகரங்களுக்கு பல நூறு விமானங்கள் போய் இருக்கின்றன. ஆனாலும் 250 விமானங்கள் என்று கணக்கு சொல்கிறார்கள். கூடுதலாகவே இருக்க வேண்டும் என்று சில நம்பக் தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

அமெரிக்க விமான நிலையங்களில் கடுமையான கட்டுப்பாட்டுச் சோதனைகளைக் கொண்டு வருவதற்கு முன்னதாகவே குழப்படிகள் நடந்து முடிந்து விட்டன. கொரோனா வைரஸ்களும் பேரன் பேத்திகளுடன் படை எடுத்துப் போய் விட்டன.

அமெரிக்காவில் கட்டுப்பாடுகள் தீவிரம் அடைதற்கு முன்னதாக சீனாவில் இருந்து அமெரி்க்காவுக்கு 3 இலட்சத்து 81 ஆயிரம் பயணிகள் விமானங்கள் மூலமாகப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். பெரும்பாலான விமானங்கள் சீன நாட்டு விமானங்கள். குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்கள்.

சீனாவில் இருந்து விமானங்களில் வந்தவர்களில் பலர் எவ்விதமான கொரோனா அறிகுறியும் இல்லாமல் அமெரிக்கா வந்து இருக்கிறார்கள்.

அப்படி வந்த பயணிகளில் குறைந்த பட்சம் 25 விழுக்காட்டுப் பயணிகள் கொரோனா வைரஸால் பாதி்க்கப்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்கா இப்போது சொல்கிறது.

இன்னும் ஒரு விசயம். அமெரிக்காவில் முதன்முதலில் 2020 ஜனவரி 20-ஆம் தேதி தான், வாஷி்ங்டன் தலைநகரில் கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டது.

இருந்தாலும் அதன்பின் பல வாரங்கள் எவருக்கும் அடையாளம் தெரியாமல்; எவரும் அறிய முடியாத வகையில்; கொரோனா வைரஸ் வாரக் கணக்கில் கேட்பார் மேய்ப்பார் இல்லாமல் அமெரிக்கா முழுவதும் படர்ந்து பரவி சங்கீர்த்தனங்கள் பாடி இருக்கின்றன.

இதில் இன்னும் ஒரு வேடிக்கை. அமெரிக்காவுக்கு இந்தக் கொரோனா வைரஸை முதன்முதலாக யார் இறக்குமதி செய்தார் என்கிற விசயம் இதுவரையிலும் ஒரு தங்கமலை இரக்சியமாகவே இருக்கிறது.

இப்போது அமெரிக்க கொரோனா பிரச்சினையில் அமெரிக்க அதிபர் சிக்கிக் கொண்டு தவிக்கிறார். ஏன் தெரியுங்களா. 2020 மார்ச் முதல் வாரம் வரை கொரோனா பிரச்சினையை அமெரிக்க அதிபர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

கொரோனா பிரச்சினையைப் பெரிது படுத்தினால் அது ஒரு பெரிய பிரச்சினையாக மாறி விடும். அப்புறம் அடுத்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது சிரமம். அப்படி ஒரு தூர நோக்கச் சிந்தனையில், கொரோனா விசயத்தைக் கிடப்பில் போட்டார்களாம்.

அந்த அமுக்கல் கிடப்பு வேலைதான் இப்போது பெரிய பிரச்சனையாகி விட்டது. பத்திரிகைகாரர்கள் சும்மா விடுவார்களா. அமெரிக்க அதிபர் இப்போது முள்வேலியின் முள்கம்பிகளில் சிக்கிக் கொண்டு தவிக்கிறார். ரோமாபுரி பற்றி எரியும் போது நீரோ மாமன்னன் பிடில் வாசித்தானாம். அந்தக் கதை நினைவிற்கு வருகிறது.

“I do think we were very early, but I also think that we were very smart because we stopped China. We’re the ones that kept China out of here.” - Mr. Trump

சான்றுகள்:

https://www.nytimes.com/2020/04/05/us/coronavirus-deaths-undercount.html

https://www.aljazeera.com/news/2020/04/recession-coronavirus-crisis-live-updates-200403233012626.html

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.04.2020