மஜபாகித் மகாராணியார் சுகிதா - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மஜபாகித் மகாராணியார் சுகிதா - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 செப்டம்பர் 2020

மஜபாகித் மகாராணியார் சுகிதா - 2

தமிழ் மலர் - 10.09.2020

இந்தோனேசியாவின் வரலாற்றில் மற்றும் ஒரு மகாராணியார் சுகிதா. அழகான அருமையான அற்புதமான மகாராணியார். மஜபாகித் பேரரசில் ஒரு குழப்பமான நிலைமை. அரசியல் நெருக்கடிகள் அலைமோதிய காலக் கட்டம். எந்த நேரத்திலும் கழுத்திற்கு கத்தி வரும் அபாயக் கட்டம். உள்நாட்டுப் போரின் புகைச்சல் வாடை ஓயவில்லை.

மகாராணியார் சுகிதா

இப்படிப்பட்ட ஓர் இக்கட்டான நிலைமையில் தான் ஓர் இளம் பெண் ஒரு பேரரசிற்கே அதிபதியாகப் பதவி ஏற்கிறார். அவர்தான் மகாராணியார் சுகிதா.

இவருக்கு சொகித்தா (Soheeta) என்று மற்றொரு பெயர். சீனர்கள் இவரை சு கிங் தா (Su King Ta) என்று அழைத்து இருக்கிறார்கள். இவர் இந்தோனேசியா, ஜாவாவைச் சேர்ந்த மஜபாகித் மகாராணியார். 1390-ஆம் ஆண்டு பிறந்து இருக்கலாம். உறுதியாகத் தெரியவில்லை.

ஜாவா தாமார்வூலான் (Damarwulan) புராண நூல்களில் பிரபு கென்யா (Prabu Kenya) என்று சித்தரிக்கப் படுகிறார். இவருடைய கணவரின் பெயர் பரமேஸ்வரா இரத்தின பங்கஜன் (Parameswara Ratnapangkaja).

சுகிதா மகாராணியாரின் ஆட்சிக் காலம் கி.பி. 1427 - கி.பி. 1447. இதில் கி.பி. 1427-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 1437-ஆம் ஆண்டு வரை, பத்து ஆண்டுகளுக்கு தன் கணவர் இரத்தின பங்கஜனுடன் இணைந்து மஜபாகித் அரசை ஆட்சி செய்தார். ஆக மொத்தம் இருபது ஆண்டுகள் ஆட்சி.

கி.பி. 1437-ஆம் ஆண்டு கணவர் இறந்து விட்டார். அதன் பின்னர் யாருடைய துணையும் இல்லாமல் தன்னிச்சையாக நின்று மஜபாகித் பேரரசை ஆட்சி செய்து இருக்கிறார். ஏற்கனவே மகாராணியார் திரிபுவன விஜயதுங்கா தேவி ஆட்சி செய்து இருக்கிறார். அவருக்குப் பிறகு மஜபாகித் இரண்டாவது பெண் மகாராணியார் சுகிதா.

மஜபாகித் உருவாக்கப் பட்ட காலத்தில், அதன் மேற்குப் பிரிவிற்கு விக்ரமவர்தனா அரசராக இருந்தார். கிழக்குப் பிரிவிற்கு வீரபூமி அரசராக இருந்தார்.

The mortuary deified portrait statue of Queen Suhita, the empress of Majapahit (reign 1429-1447 CE).
The statue discovered at Jebuk, Kalangbret, Tulungagung, East Java, Indonesia.
Colection of National Museum of Indon.

1406-ஆம் ஆண்டு பயங்கரமான உள்நாட்டுப் போர். ரேகிரே போர் (Regreg War) என்று சொல்வார்கள். விக்ரமவர்தனாவின் படைத் தளபதிகளில் ஒருவர் ராடன் காஜா (Raden Gajah). இவருக்கு மற்றொரு பெயர் பிரபு நரபதி (Bhra Narapati).

அந்த ரேகிரே போரில் தளபதி ராடன் காஜா, வீரபூமியை விரட்டிச் சென்று கொன்று விடுகிறார். அது மட்டும் அல்ல. வீர பூமியின் தலையை வெட்டி எடுத்து வந்து விக்ரமவர்தனாவிடம் கொடுக்கிறார்.

அதன் பின்னர் மேற்குப் பிரிவும் கிழக்குப் பிரிவும் ஒன்றாக இணைந்தன. ஒரே அரசு. ஒரே மஜபாகித். அதற்கு விக்ரமவர்தனா பேரரசர்.

Queen regnant Sri Gitarja, Tribhuwana Wijayatunggadewi

ரேகிரே உள்நாட்டுப் போர் முடிந்தது. சற்றே அமைதி. இந்தக் கட்டத்தில் பிரபு வீரபூமியின் மகள் பிரபா தகா (Bhre Daha) என்பவரை விக்ரமவர்தனா திருமணம் செய்து கொள்ளுகிறார்.

ரேகிரே போரில் கொல்லப்பட்ட வீரபூமியின் வைப்பாட்டிகளில் ஒருவருக்குப் பிறந்தவர் தான் பிரபா தகா. இந்தப் பிரபா தகாவிற்கும் விக்ரமவர்தனாவிற்கும் பிறந்தவர் தான் சுகிதா. அதாவது விக்ரமவர்தனாவின் மகள். வீரபூமியின் பேத்தி.

சுகிதா 1427-ஆம் ஆண்டு மஜபாகித் பேரரசின் மகாராணியானார். அப்போது அவருடைய கணவர் இரத்தின பங்கஜன் இருக்கிறார். சுகிதா மகாராணி ஆனதும் அவர் செய்த முதல் வேலை என்ன தெரியுங்களா? தன் தாத்தா வீரபூமியைக் கொன்ற ராடன் காஜாவைத் தேடிப் பிடிக்கும்படி கட்டளை போட்டார்.

Hayam Wuruk Maharaja Sri Rajasanagara

ராடன் காஜா எனும் பிரபு நரபதி ஆறு ஆண்டு காலம் தலைமறைவாகி காடு மேடுகளில் அலைந்து திரிந்தார். கடைசியில் பிடிபட்டார். அப்போது மஜபாகித் அரண்மனை துரோவூலான் (Trowulan) எனும் இடத்தில் இருந்தது. அந்த அரண்மனைக்கு ராடன் காஜா கொண்டு வரப் பட்டார்.

ராடன் காஜா கெஞ்சினார். விக்ரமவர்தனாவின் கட்டளையினால் தான் வீரபூமியைக் கொன்றதாகக் கூறினார். மன்னிப்புக் கேட்டும் ஒன்றும் நடக்கவில்லை. அதற்கு சுகிதா சொன்னாராம்.  

’வீரபூமி என்பவர் என்னுடைய தாத்தா. அவருடைய இரத்தம் என் உடலில் ஓடுகிறது’ என்று சொன்னாராம். பின்னர் கத்தியால் தன் கையைக் கிழித்து இரத்தம் சொட்டுவதைக் காட்டி இருக்கிறார். பின்னர் ஒரு தளபதியைக் கூப்பிட்டு அந்த இரத்தத்தை ராடன் காஜா உடலில் தடவச் சொல்லி இருக்கிறார்.

அதன் பின்னர் ராடன் காஜாவின் தலை கொய்யப் பட்டது. அவரின் உடல் காட்டில் நரிகளுக்குத் தீனியாகப் போடப் பட்டது. ராடன் காஜாவின் தலையை எடுத்துக் கொண்டு போய் யானையை மிதிக்க வைத்து இருக்கிறார்கள். 1433-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி.

தாத்தாவைக் கொன்றவனைப் பழி வாங்கிய பிறகு தான் மகாராணி சுகிதாவின் கோபம் அடங்கியது. சுகிதாவின் முதல் தண்டனையைப் பார்த்ததும் பலரும் பயந்து பிரமித்துப் போனார்கள். என்ன என்ன செய்யப் போகிறாரோ என்று பயந்து போய் இருந்தார்கள். ஆனால் சுகிதா அதற்கு நேர்மாறாக நல்லபடியாக ஆட்சி செய்து இருக்கிறார்.

சுகிதா ஆட்சி செய்யும் காலத்தில் பிரச்சினைகள் இருக்கவே செய்தன. மஜபாகித்திற்கு அருகில் ஒரு ஜாவானிய இந்து அரசு. பிளம்பங்கான் அரசு (Blambangan Kingdom) என்று பெயர். மஜபாகித் அரசிற்கு இணையாகப் பலம் வாய்ந்த அரசு. மஜபாகித் அரசிற்கே சவால் விடும் அரசு.

கஜ மதன் - Gajah Mada

இந்த அரசிற்கும் மஜபாகித் அரசிற்கும் ஜென்மப் பகை. இவர்களும் சுகிதாவிற்கு அடிக்கடி பிரச்சினைகள் கொடுத்து வந்தார்கள். இருப்பினும் சுகிதா சமாளித்து விட்டார். தன் படையை வழி நடத்திச் சென்று போர் முனையில் காயம் அடைந்து இருக்கிறார்.

அந்தக் காலத்தில் மகாராணியார்கள் படைகளை நடத்திக் கொண்டு போய் போர் முனையில் சண்டை போட்டு இருக்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்களுக்குப் படைத் தளபதியாக நின்று போர் முரசு கொட்டி இருக்கிறார்கள். காயம், படுகாயம், உயிர் போகும் காயம் எல்லாம் அடைந்து இருக்கிறார்கள்.

இப்போது போல இராணுவ வீரர்களைச் சண்டைக்கு அனுப்பி வைத்து விட்டு, இவர்கள் மட்டும் இங்கே தனியாக ’ஏர்கோன்’ அரண்மனையில் கச்சான் கொரிக்கும் குண்டக்க மண்டக்க வேலை எல்லாம் இல்லை.

Hayam Wuruk
Maharaja Sri Rajasanagara

போர் என்று வந்துவிட்டால் இவர்களும் குதிரை மீது ஏறிப் போய் சண்டை போட வேண்டும். மகாராணியாரைச் சுற்றி பத்து நூறு பேர் தனிப் பாதுகாப்பு வளையம் போட்டு இருப்பார்கள். இருந்தாலும் மகாராணியாரும் வாள் பிடித்து போர் புரிவார். சரி.

ஜாவாவில் வாயாங் கூலிட் பொம்மலாட்டத்தில் மகாராணியார் சுகிதாவைப் பற்றிய புராணம் உள்ளது (Damarwulan legend). [#3] இன்றும் நாடக வடிவில் நடிக்கப் படுகிறது.

ஜாவா தாமார்வூலான் புராண நூல்களில் பிளம்பங்கான் போர் பற்றி சொல்லப் படுகிறது. அதில் சுகிதா போர் புரிந்ததைப் பற்றி வாயாங் கிலிடிக் (wayang klitik) எனும் நிழல் ஆட்டத்தில் கதையாகச் சொல்லப் படுகிறது. அதில் சுகிதாவிற்கு கெங்கனா உங்கு (Queen Kencanawungu) என்று பெயர்.

[#3]. The Damarwulan legend is associated with her reign, as it involves a maiden queen (Prabu Kenya in the story), and during Suhita's reign there was a war with Blambangan as in the legend

Source: Claire Holt. Art in Indonesia: Continuities and Change. Ithaca: Cornell UP, 1967, p. 276. Jan Fontein, R. Soekmono

Suhita depicited in 'The Empire's Throne' Documentary Film

பினாங்குங்கான் (Penanggungan); லாவு (Lawu) மலைகளின் அடிவாரத்தில் பல கோயில்களையும் கட்டி இருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஜாவா, துலுங்காகுங் மாவட்டத்தில் (Tulungagung Regency) ஒரு சிலையைக் கண்டு எடுத்தார்கள். அது சுகிதாவின் சிலை என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். வலது கையில் ஒரு தாமரை மொட்டு. அரச உடையில் காது பதக்கங்கள்; கழுத்தணிகள்; வளையல்கள்; கணுக்கால், இடுப்புகளில் தொங்கவிடப்பட்ட பதக்கங்கள் கொண்ட சிலை.

1447-ஆம் ஆண்டு, 57-ஆவது வயதில் சுகிதா காலமானார். இவரின் கல்லறையும் கணவர் பரமேஸ்வரா இரத்தினபங்கஜன் கல்லறையும் சிங்கஜெயா எனும் இடத்தில் உள்ளன. இப்போது பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விட்டு இருக்கிறார்கள். மகாராணியார் சுகிதாவிற்குப் பிடித்தமான தாமரை மலர்களை அவரின் கல்லறையில் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டுப் போகிறார்கள்.

கஜ மதன் - Gajah Mada

எல்லா காலத்திலும் பெண்கள் ஆண்களுக்குச் சமநிகர் சமமாக ஆட்சி செய்து இருக்கிறார்கள். அந்த உண்மைகள் ஆணாதிக்கத்தின் அழுத்தங்களால் மறைக்கப்பட்டு இருக்கலாம்.

சுகிதாவிற்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் அவரின் ஒன்றுவிட்ட சகோதரர் தியா கர்த்தவிஜயன் (Dyah Kertawijaya) என்பவர் மஜபாகித் அரசராக நியமிக்கப் பட்டார். கர்த்தவிஜயனின் மற்றொரு பெயர் ஸ்ரீ மகாராஜா விஜய பரக்ரமவரதனன் (Sri Maharaja Wijaya Parakramawardhana).

இந்திய வம்சாவழியைப் பின்னணியாகக் கொண்ட இந்தோனேசியா மகாராணியார்கள் ஆறு பேர் மஜபாகித் சிம்மாசனம் பார்த்து இருக்கிறார்கள். அவர்களை மீண்டும் நினைவு கூர்ந்து பார்ப்போம். வாழ்த்துவோம்.

1. மகாராணியார் சீமா சத்தியா - கலிங்கப் பேரரசு (கி.பி. 674)

2. பிரேமதா வர்த்தனி மகாராணியார்- சைலேந்திரா பேரரசு கி.பி. 833 - கி.பி. 856)

2. இசையனா துங்கா விஜயா - மேடாங் பேரரசு (கி.பி. 947)

3. ஆர்ஜெயா ஜெயகீர்த்தனா - பாலி பேரரசு (கி.பி. 1200)

4. திரிபுவன விஜயதுங்கா தேவி - மஜபாகித் பேரரசு (கி.பி. 1328 - 1350)

5. சுகிதா - மஜபாகித் பேரரசு (கி.பி. 1429 - 1447)

6. மகாராணி ரத்னா காஞ்சனா - கல்யாணமதா சிற்றரசு (கி.பி. 1549)

இந்தோனேசிய வரலாற்றில் இந்திய வம்சாவழிப் பெண்கள் சிலர், பெரிய பெரிய சாதனைகளை எல்லாம் செய்து இருக்கிறார்கள். பெண்மைக்குள் ஓராயிரம் சக்திகளை உருவாக்கி உன்னதம் பேசி இருக்கிறார்கள். பெண்மைக்குள் மறைந்து இருக்கும் மகாசக்திகளுக்கு மகிமைகள் சேர்த்து வரலாறு படைத்து இருக்கிறார்கள்.

அவர்கள் அனைவருமே மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய மாபெரும் பெண்ணரசிகள். பேரரசிகள். பெண்மையின் செல்வங்கள். பெண்மையின் உச்சங்கள். அவர்களை வரலாறும் மறக்காது. வரலாற்று உலகமும் மறக்காது. வரலாற்று மைந்தர்களும் மறக்கக் கூடாது.

அந்தப் பெருமைகள் எல்லாம் இந்திய வம்சாவழிப் பெண்களுக்கு மட்டும் அல்ல. உலகப் பெண்கள் அனைவருக்குமே அழகியச் சீதனக் கலசங்களாய் அற்புதமான நீலநயனங்கள் பேசுகின்றன.

சான்றுகள்:

1. R. Soekmono, and Satyawati Suleiman. Ancient Indonesian Art of the Central and Eastern Javanese Periods, New York: Asia Society Inc., 1971, p. 146-147

2. https://tirto.id/dyah-suhita-pemimpin-perempuan-terakhir-di-jawa-timur-cDmn

3. Coedes, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. Page: 242.

4. Ricklefs, Merle Calvin (1993). A history of modern Indonesia since c. 1300 (2nd ed.). Stanford University Press / Macmillans.

(முற்றும்)
 
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
10.09.2020