தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 அக்டோபர் 2018

தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 4

தமிழ் மலர் - 10.10.2018 - புதன் கிழமை

இந்த 2018-ஆம் ஆண்டு மலேசியாவில் 47 தமிழ்ப் பள்ளிகளில் இருமொழிப் பாடத் திட்டம் அமலாக்கத்திற்கு வந்தது. இருமொழித் திட்டம் என்றால் தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கிலம் அல்லது மலாய் மொழியில் ஆங்கிலம், கணிதப் பாடங்களை நடத்தும் திட்டம். 



இருமொழித் திட்டம் என்பது நல்ல ஒரு திட்டம் தான். இல்லை என்று சொல்லவில்லை. இருந்தாலும் தூர நோக்குப் பார்வையில் இருந்து அந்தத் திட்டத்தைப் பார்க்க வேண்டும்.

அந்தத் திட்டத்தினால் தமிழ்ப் பள்ளிகளுக்குப் பற்பல விளைவுகள் உள்ளன. அந்தத் திட்டத்தினால் தமிழ்ப் பள்ளிகளுக்கு நன்மைகள் உண்டா? அதைப் பற்றித் தான் இந்தக் கட்டுரைத் தொடரில் அலசிப் பார்க்கின்றோம்.

எந்த ஒரு தரப்பிற்கும் நாம் சாதகமாகவும் பேசவில்லை. பாதகமாகவும் பேசவில்லை. உண்மையான நிலை என்ன என்பதைத் தான் ஆராய்ந்து பார்க்கிறோம். அவ்வளவு தான். அதனால் சிலருக்கும் பலருக்கும் மனத் தாக்கங்கள் ஏற்படாலாம். இருந்தாலும் உண்மை நிலையைக் கண்டறிய வேண்டிய காலத்தின் கட்டாயப் பிடிக்குள் சிக்கி இருக்கிறோம்.

இருமொழித் திட்டத்தை ஆதரிப்பவர்களில் பலர் ஆங்கில மொழியின் சிறப்புத் தன்மைக்கு முதன்மை வழங்கி வருகிறார்கள். அந்தத் திட்டத்தினால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆங்கில மொழியில் உலகளாவிய மொழிப் புலமையைப் பெற முடியும்; அறிவியல் கணிதப் பாடங்களில் சிறந்து விளங்க முடியும் என்று சொல்கிறார்கள்.



சிறு வயதில் கற்றுக் கொள்ளக் கூடிய எதுவுமே சிலைமேல் எழுத்து போல பிஞ்சு மனங்களில் ஆழமாய்ப் பதிந்து போகும். அனைவருக்கும் தெரிந்த ஒரு விசயம். அந்த வகையில் சிறு வயதிலேயே ஆங்கிலத்தையும் கணிதத்தையும் ஆங்கில மொழியில் கற்றுக் கொடுத்தால் அதில் உள்ள அனைத்து தகவல்களும் மழலையர் மனங்களில் ஆழமாய்ப் பதிந்து போகும் எனும் கருத்துகளையும் முன்வைக்கின்றனர்

இந்த இரு மொழிக் கொள்கை கல்வித் திட்டம் நல்ல ஒரு திட்டம். ஆனால் அந்தத் திட்டம் மலேசிய தமிழ்ப் பள்ளிகளைச் சிதைவுக்குக் கொண்டு செல்கின்றது எனும் சில பொறுப்பற்ற தரப்பினர் கூறி வருகின்றனர். அவர்களின் கூற்று முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத விதண்டாவாதம் என்றும் சிலர் வாதிடுகின்றனர். இந்தக் கருத்துகள் அந்தத் திட்டத்தை ஆதரிக்கும் தரப்பினரின் கருத்து.

அடுத்ததாக அந்த இருமொழித் திட்டத்தை எதிர்க்கும் தரப்பினர் கருத்துகளைப் பார்ப்போம்.

அவர்களின் வாதம்:- இருமொழித் திட்டம் தமிழ்ப் பள்ளிகளுக்குத் தேவை இல்லாதது. இந்தத் திட்டத்தினால் தமிழ்ப் பள்ளிகளின் தமிழ்மொழி சார்ந்த செயல்பாடுகளில் வீழ்ச்சிகள் ஏற்படலாம். 


முட்டை அடை காக்கப்படுவது போல கடந்த இருநூறு ஆண்டு காலமாகத் தமிழ்க் கல்வி தமிழர்களால் அடை காக்கப்பட்டு வந்து இருக்கிறது. ஆனாலும் அது சன்னம் சன்னமாய்ச் சிதைந்து போகும் வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் இந்த நாட்டில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்களும் தமிழ்த் தலைமையாசிரியர்களும் வேலை இழப்புகளை எதிர்நோக்க வேண்டி வரலாம்.

தமிழ்ப் பள்ளிகளில் நான்கு பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கும் ஒரு சூழல் ஏற்பட்டால் அந்தப் பாடங்களைச் சார்ந்து உள்ள நூற்றுக் கணக்கான தமிழ் கலைச் சொற்கள் பயன்பாடு இல்லாமல் போகலாம். அப்படியே அழிந்தும் போகலாம். அது மட்டும் அல்ல.

தமிழ்ப் பாட நூல்களைத் தயாரிப்பதற்குத் தமிழ் ஆசிரியர்கள் பலர் தேவை. அந்தப் பாடங்கள் தொடர்பான கேள்விகள் தயாரிப்பதற்கும் தமிழ் ஆசிரியர்கள் பலர் தேவை. யூ.பி.எஸ்.ஆர். தேர்வுகளில் கேள்வித் தாட்களைத் திருத்துவதற்கும் தமிழ் ஆசிரியர்கள் பலர் தேவை. இதுநாள் வரைக்கும் தமிழ் ஆசிரியர்களே அந்த வேலைகளைச் செய்து வந்து இருக்கின்றார்கள்.

அப்படி இருக்கும் போது இருமொழித் திட்டம் அமலுக்கு வந்தால் இந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப் படலாம். அல்லது தேவை இல்லாமலே போகலாம். தமிழ் ஆசிரியர்கள் இல்லாமல் மற்ற ஆசிரியர்கள் அந்தப் பணிகளைச் செய்யலாம். 


ஆகவே அந்த வகையில் தமிழ் ஆசிரியர்களின் பணிகளுக்கு இடைஞ்சல்கள் வரலாம். தமிழ் ஆசிரியர்களின் வேலைகளை மற்ற ஆசிரியர்கள் செய்யும் போது தமிழ் ஆசிரியர்கள் இனி தேவை இல்லை எனும் சொல்லும் வரலாம். இத்தகைய கருத்துகளையும் எதிர்தரப்பினர் முன்வைக்கின்றனர்.

இன்னும் ஒன்றையும் கவனிக்க வேண்டும். மிக அண்மைய காலங்களில் தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதைக் கவனித்தீர்களா. இதற்கு என்ன காரணம்.

மலேசிய இந்தியர்களின் மத்தியில் ஏற்பட்டு வரும் பிறப்பு விகிதாசார வீழ்ச்சியும் ஒரு காரணம். தமிழ்ப் பள்ளிகளில் கல்வி தொடர்பாக இந்திய மக்கள் அடைந்த அதிருப்தியின்  காரணம் என்று சொல்ல முடியாது. இந்தியர்களின் பிறப்பு விகிதாசாரம் மிக மிகக் குறைந்து வருகிறது. அதுதான் சரி. தமிழ் அறவாரியம் அதைத் தான் சொல்கிறது. இந்தக் கருத்தை மொழி சார்ந்த இயக்கங்களும் ஏற்றுக் கொள்கின்றன.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இருமொழித் திட்டத்திற்கு உடன்பாடான கருத்துகளும் இருக்கின்றன. எதிர்மறையான கருத்துகளும் இருக்கின்றன. ஆனால் எதிர்மறையான கருத்துகளே அதிகம்.



இந்த 2018-ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் சில மாநிலங்களில் நடந்த அதிரடி நிகழ்ச்சிகள். தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் தங்கள் பள்ளிகளையும் இருமொழித் திட்டத்தில் இணைத்துக் கொள்ளும் படி கல்வி அமைச்சுக்கு விண்ணப்பக் கடிதங்களை அனுப்பி இருக்கிறார்கள். அதுவும் அவசர அவசரமாக அனுப்பி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் வியப்பு கலந்த கவலையைத் தருகின்றது.

இருமொழித் திட்டத்தை எதிர்ப்பவர்களின் ரணங்களைக் கீறிப் பார்ப்பது போல அமைவதாக ஒரு தமிழ்க் கல்வியாளர் சொல்லி இருக்கிறார்.

இந்தச் செயலின் பின் விளைவுகளைப் பற்றி நன்றாக ஆராய்ந்து பார்க்காமல்; தூர நோக்குச் சிந்தனையுடன் ஆழமாகப் பார்க்காமல் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகவே தெரிகின்றது. அல்லது வேறு ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம். மேலிடத்து நெருக்குதல் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது சன்மானத் தொகை ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது ஊக்குவிப்புத் தொகை ஒரு காரணமாக இருக்கலாம். உறுதியாகச் சொல்ல முடியவில்லை, ஆக அப்படியும் நாம் பார்க்க வேண்டும். சரி.

இருமொழித் திட்டத்தைச் சீன மொழிப் பள்ளிகள் ஒட்டு மொத்தமாக ஒதுக்கி ஓரங்கட்டி விட்டன. சரிங்களா. அந்தத் திட்டத்தின் பாதக நிலையைப் பற்றி மலாய் கல்வியாளர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

அரசாங்கம் கூட ஒரு முழுமையான திட்ட வரைவை இன்னும் கொண்டு வரவில்லை. அப்படிப்பட்ட ஒரு திட்டம். அப்படி இருக்கும் போது தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் எந்த அடிப்படையில் அந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். ஏன் ஏற்றுக் கொள்கிறார்கள். புரியாதப் புதிராக இருக்கிறது.

இந்த இரு மொழிக் கொள்கையை ஏற்கலாமா வேண்டாமா. அதற்கு முன் சில முக்கிய விசயங்களை முன் வைக்கிறேன். நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.


முதலாவதாக:- அறிவியல், கணிதம், தகவல் தொடர்பு நுட்பவியல், வடிவமைப்பு நுட்பவியல் ஆகிய இந்த நான்கு பாடங்களை மலாய், ஆங்கில மொழிகளில் போதிக்கும் திட்டத்தை அரசாங்கம் இன்னும் முறையாக முழுமைப் படுத்தவில்லை. அதற்கான ஒரு செயல்திட்டமும் இன்னும் முறையாக வரையறுக்கப் படவில்லை. அதற்கான எதிர்காலச் செயல் நிலைகளைப் பற்றி இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் படவும் இல்லை. 

அரசாங்கம் ஒரு பரிச்சார்த்த முறையில் தான் அந்தத் திட்டத்தைத் தேசியப் பள்ளிகளில் பரிசோதித்து வருகிறது. அந்த முதல் கட்டத்தைத் தாண்டிய பின்னர் தான் அதிகாரப் பூர்வமான ஆய்வு முடிவுகள் தெரிய வரும். சரிங்களா.

ஆகவே அதன் உண்மை நிலையை முதலில் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இரு மொழிச் செயல்பாட்டு திட்டத்தினால் ஏற்படக் கூடிய பின்விளைவுகளைப் பற்றி ஆராய்ந்து பார்த்து இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் ஒரு சிலர் தாங்களாகவே முன்வந்து அந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தது நன்றாக இல்லை.

ரோஜாக் கூட்டத்தில் முட்கள் இருக்கவே செய்யும் எனும் தெனாலி ராமன் கதை நினைவிற்கு வருகின்றது. தப்பாக நினைக்க வேண்டாம். மனதில் பட்டது. சொல்கிறேன். அம்புட்டுதான்.

ஒரு தமிழ்ப் பள்ளிக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கும் பெற்றோர், அந்தப் பள்ளியின் கற்பித்தல் முறையில் நம்பிக்கை வைத்தே அனுப்பி வைக்கின்றார்கள். நன்றாகப் படித்துக் கொடுப்பார்கள் எனும் நம்பிக்கையில் அனுப்பி வைக்கின்றார்கள். 


ஆக அறிவியல் கணிதப் பாடங்களைத் தமிழில் கற்பதில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இதுவரை வந்தது இல்லை. இன்று நேற்று அல்ல. ஒரு நூறு வருட காலமாக அவர்களின் அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. அந்த நம்பிக்கையில் தான் அவர்களின் வாழ்வியல் சக்கரமும் நகர்ந்து போய்க் கொண்டு இருக்கிறது. சரி.

ஆக பள்ளியின் கற்பித்தல் முறையில் தடாலடி மாற்றங்களைச் செய்வதற்கு முன்னர் பள்ளி நிர்வாகம் தக்க நடவடிக்கைகளை எடுத்து இருக்க வேண்டும். வேறு யாரும் அல்ல. பள்ளி நிர்வாகம் தான். இருமொழித் திட்டக் கொள்கையைப் பற்றி பெற்றோர்களிடம் விளக்கி இருக்க வேண்டும். அதைப் பற்றி பெற்றோர்களிடம் கலந்து பேசி இருக்க வேண்டும்.

இப்படி ஒரு மாற்றம் வருகிறது என்று பள்ளி வாரியக் குழுவிடம் தெரியப் படுத்தி இருக்க வேண்டும். அதன் பின்னர் தான் மாற்றலாமா வேண்டாமா என்று முடிவு எடுத்து இருக்க வேண்டும். அதுதான் சரியான அணுகுமுறை. சரியான முறைபாடு.

ஆனால் அந்த மாதிரியான விளக்கக் கூட்டங்கள் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. அந்த மாதிரியான கல்விக் கலந்துரையாடல்கள் நடந்ததாகவும் தெரியவில்லை. நமக்கும் தெரியவில்லை. இன்றைக்குத் தாலி காட்டி நாளைக்கே பிள்ளையைப் பெற்றுக் கொடு என்று கேட்கும் கதையாகிப் போனது.

நாடு தழுவிய நிலையில் கருத்தரங்குகள்; கல்ந்துரையாடல்கள்; விளக்கக் கூட்டங்கள் நடத்தி இருக்க வேண்டும். எதார்த்தமான பெற்றோர்கள் மனநிறைவு அடையும் வரையில் போதுமான விளக்கங்களைக் கொடுத்து இருக்க வேண்டும். ஆக மீண்டும் சொல்கிறேன். அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. அரக்கப் பரக்க ஆற்றுக்குள் இறங்கி அயிரை மீனைப் பிடித்து வந்த கதையாகத் தெரிகிறது.

இந்தக் கட்டத்தில் இன்னும் ஒன்றையும் கவனிக்க வேண்டும். மலேசியாவில் உள்ள அத்தனைச் சீனப் பள்ளிகளில் ஒரு பள்ளிகூட இருமொழித் திட்டத்திற்கு ஆதரவு வழங்கவில்லை. தெரியும் தானே. பேசி வைத்த மாதிரி எல்லாச் சீனப் பள்ளிகளுமே ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்து விட்டன. ஏன் புறக்கணித்தன என்று ஆதரவு தரப்பினர் விளக்கம் கேட்கிறார்கள்.. 


இன்னும் ஒன்றையும் இங்கே மறந்துவிட வேண்டாம். இருமொழித் திட்டத்தை அமல் படுத்துவதில் தமிழ்ப்பள்ளிகள் மீது அரசாங்கம் எந்த ஓர் அழுத்தத்தையும் நெருக்குதலையும் கொடுக்கவில்லை. வற்புறுத்தவும் இல்லை. நிதர்சனமான உண்மைகளை நியாயத்துடன் ஏற்றுக் கொள்வோம்.

மலாய்க் கல்விமான்களே எதிர்க்கும் ஒரு திட்டத்தில் மேலிடமே மௌனம் சாதிக்கும் ஓர் இக்கட்டான நிலை. அந்த நிலைமையில் தமிழ்ப் பள்ளிகளின் மீது திணிப்புச் செய்வதில் ஒரு வகையான தயக்கமே படர்ந்து நிற்கிறது. 

ஆக அப்படி இருக்கும் போது ஏன் அவசரம் அவசரமாக நாமே வலிய போய் அந்தத் திட்டத்தை ஏற்க வேண்டும். முன்னாள் துணைக் கல்வி அமைச்சரும் மற்றும் ஒரு பேராசிரியரும் அவர்களாகவே முன்வந்து அந்தத் திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளை இணைத்துக் கொள்ள பரிவட்டம் கட்டி வந்தனர். அவர்களின் முயற்சிகள் அவர்களின் பார்வையில் சரியாக இருக்கலாம்.

இருந்தாலும் மாற்றம் செய்வதற்கான விளக்கங்களைச் சரியாகக் கொடுத்து இருக்க வேண்டும். அதைச் செய்தார்களா. அது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. மறந்து விட்டார்கள் என்று சொன்னால் உண்மையிலேயே அதுதான் பில்லியன் டாலர் அதிசயம்.

இன்றைய காலக் கட்டத்தில் மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் ஏற்படும் எந்த ஒரு மாற்றமும் அடுத்து வரும் பல பத்து ஆண்டுகளுக்கும் பற்பல விளைவுகளை ஏற்படுத்தும். அதை நினைவில் கொள்ள வேண்டும்.

நாளைய கட்டுரையில் வணிக வள்ளல் பி.கே.குமார் அவர்களைச் சந்திக்கின்றோம். இவர் ஒரு தமிழ்மொழி ஆர்வலர். பல்வேறு தமிழ் அமைப்புகளின் அறிவுரைஞர். ஈப்போ பேராக் மாநில தமிழ்மொழி மேம்பாட்டு அறவாரியத்தின் செயலாளர். ஈப்போ சுங்கை பாரி இடைநிலைப் பள்ளியின்  பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர். ஈப்போ சுங்கை பாரி அரசினர் தமிழ்ப் பள்ளியில் 40 கணினிகள் மூலமாக பாலர் பள்ளி முதல் 6-ஆம் வகுப்பு வரை கணினிக் கல்வி நடைபெற துணையாக நின்றவர். இருமொழிப் பாடத் திட்டத்தைப் பற்றிய அவருடைய கருத்துகளைத் தெரிந்து கொள்வோம்.

(தொடரும்)

சான்றுகள்:

1. Taskforce vows to sue Tamil schools over dual-language programme - https://www.malaysiakini.com/news/408540

2. Tamil NGOs say no to dual language programme - https://www.thestar.com.my/news/nation/2016/12/25/tamil-ngos-say-no-to-dual-language-programme/

3. DLP will boost enrollment in Tamil schools - https://www.beritadaily.com/dlp-will-boost-enrollment-in-tamil-schools/

4. Ramasamy tells Education Ministry to abolish dual language programme - https://www.malaymail.com/s/1281805/ramasamy-tells-education-ministry-to-abolish-dual-language-programme

5. Tamil school’s dual-language legal limbo - https://www.themalaysianinsight.com/s/29830