பாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஆகஸ்ட் 2014

பாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு - பாகம் 3

[இந்தக் கட்டுரை மலேசியா தினக்குரல் 05.08.2014 நாளிதழில் பிரசுரிக்கப் பட்டது.]

காலப் போக்கில் கானானிய நாகரீகம் அழிந்த போனது. புதிய இஸ்ரேலிய நாகரிகம் தோன்றியது. முன்பு இஸ்ரேலியர்களிடம் விக்கிர வழிபாடு இருந்தது. நாளடைவில் மறைந்து போனது.


பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் டேவிட் என்கிற மன்னன் வாழ்ந்த காலத்தில் இஸ்ரேல் எனும் நாடு உருவானது என்றும் சொல்வார்கள். அப்போது ஹிப்ரு மொழி பேசுவோரின் நாடாக இஸ்ரேல் இருந்தது. 

அராமிய மொழி

இதற்குப் பின்னர் தான், யூதர்கள் என்கிற ஓர் இனம் இருப்பதாக அடையாளம் காணப் பட்டது. யூதர்கள் அராமிய மொழியைப் பயன்படுத்தினர். அராபிய மொழி இல்லை. 


அராமிய மொழி. இயேசு மகான் கிறிஸ்துவின் தாய் மொழியும் அராமிய மொழிதான். இந்த அராமிய மொழி இன்று கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றது. இயேசு மகான் பயன்படுத்திய அந்த மொழியை, இப்போது ஒரு மூவாயிரம் பேர்தான் பேசி வருகிறார்கள். 

ஜார்ஜ் சோரோஸ்

யூதர்களில் பலர் ஐரோப்பா பக்கம் புலம் பெயர்ந்தனர். ஜெர்மனியில் தான் அதிகமான குடியேற்றம். பல நூறாண்டுகளாக ஐரோப்பாவிலேயே இருந்தனர்.


பொருளாதாரத்தில் முன்னுக்கு வந்தனர். மற்ற ஐரோப்பிய சமூகங்களைப் பின்னுக்குத் தள்ளினர். ஜெர்மன் மக்களையும் இரண்டாம் தர மக்களாக்கினர். உழைப்பு உழைப்பு என்பதுதான் அவர்களின் தாரக மந்திரமாக விளங்கியது. 

இப்போது உலகில், பெரிய பெரிய பணக்காரர்கள் எல்லாம் யூதர்களாகத்தான் இருக்கிறார்கள். அதை நாம் மறந்து விடக் கூடாது. அவர்களில் ஒருவர்தான் ஜார்ஜ் சோரோஸ்.


1997-இல் இவருக்கும் நம்முடைய முன்னாள் பிரதமர் மகாதீருக்கும் வாக்குவாதங்கள் வந்தன. சிலருக்கு நினைவு இருக்கலாம். உலக மகா விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன்கூட ஒரு யூதர்தான்.

ஹிட்லர் செய்த யூத இனப் படுகொலை

அப்புறம் அடுத்து, ஹிட்லர் செய்த யூத இனப் படுகொலை. இதை நாஜி பேரழிப்பு அல்லது ’நாஜி ஹோலோகாஸ்ட்’ என்பார்கள். அதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஒரு திட்டம் போட்டன.


யூதர்களைப் பாலஸ்தீனம் பக்கம் அனுப்பி வைப்பது எனும் முடிவு. யூதர்கள் பாலஸ்தீனத்திற்குப் புலம் பெயர்ந்த போது,  பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி பிரிட்டனின் கைவசம் இருந்தது. 

நாஜிகளின் நரவேட்டையில் இருந்து தப்பித்த யூதர்கள், கப்பல் கப்பலாக பாலஸ்தீனம் சென்று குடியேறினர். அதற்கு முன்னர், 1910-களில் இருந்தே யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறத் தொடங்கி விட்டனர். ஆக, அப்போதே சின்னச் சின்ன பிரச்சினைகள் தொடங்கி விட்டன. இருந்தாலும் பெரிதாக எதுவும் இல்லை.


பாலஸ்தீன மக்கள் வந்தவர்களை அனுதாபத்துடன் பார்த்தார்கள். முடிந்த வரை அவர்களுக்கு உதவிகளையும் செய்து வந்தனர். ரொம்பக் க‌ஷ்டப்பட்டு வந்து இருக்கிறார்கள் என்று தங்குவதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்கள். 

சும்மா சொல்லக் கூட்டது. சொந்தச் சகோதரனைப் போல பார்த்துக் கொண்டார்கள். பொதுவாக, பாலஸ்தீனர்கள் ரொம்பவுமே இரக்க சுபாவம் கொண்டவர்கள். 

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதை

வெளுத்தது எல்லாம் பால் என்று நினைத்தது தான் பாலஸ்தீனர்கள் செய்த பெரிய தவறு. அந்தத் தவற்றின் விளைவுகளை இப்போது அனுபவிக்க வேண்டி இருக்கிறது.


ஏற்கனவே சொன்னேன். ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதை. இந்தக் கட்டத்தில் அது இங்கே சரியாக அமைகிறது. ஆக, பாலஸ்தீனர்கள் இருக்க இடம் கொடுத்தார்கள். 

ஆனால், வந்தவர்கள் படுப்பதற்கே மடத்தைப் பிடுங்கி எடுத்துக் கொண்டார்கள். 1940-களில் ஒரு பெரிய புலம்பெயர்ப்பே நடந்து இருக்கிறது. அதைத் தான் பாலஸ்தீனர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.


பாலஸ்தீனர்களைக் குறை சொல்ல முடியாது. அவர்கள் மனித உணர்வுகளுக்கு மதிப்பு அளித்தார்கள். இரக்கச் சிந்தையுடன் நடந்து கொண்டார்கள். ஆனால், யூதர்கள் அப்படி நினைக்கவில்லையே. பிடுங்கித் தின்ன ஆசைப் படுகிறவன் நடுங்கிப் போவதைப் பார்த்து இருக்கிறீர்களா. 

பாலஸ்தீனர்களின் வரலாற்றை ஒரு கதையாகத் தான் சொல்கிறேன். அதனால், வருடங்களைப் பெரிது படுத்தவில்லை. அடுத்து ஐக்கிய நாட்டு சபை, இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டது.


பாலஸ்தீனத்தில் குடியேறிய யூதர்கள் அங்கேயே இஸ்ரேல் என்கிற ஒரு நாட்டை அமைத்துக் கொள்ளலாம். இந்த அங்கீகாரத்தின் பின்னணியில் இருந்தவர் யார் தெரியுமா. 

உலக வாத்தியார் அமெரிக்கா தான். அவருக்கு உதவியாகப் பிரிட்டன் என்கிற சட்டாம்பிள்ளை. போதுமான அளவுக்கு யூதர்கள் குடியேறியதும், ஐ.நா.சபை பாலஸ்தீனத்தை இரு துண்டுகளாகப் பிரித்துப் போட்டது.


ஒரு சில வாரங்களில், இஸ்ரேலியக் குடியரசு பிரகடனம் செய்யப் பட்டது. ஐ.நா.வின் முடிவை யூதர்கள் வரவேற்றனர். என்ன நடக்கின்றது என்பதைப் பாலஸ்தீன அரபுக்கள் மெதுவாகத் தான் உணர்ந்தனர். அதற்குள் காலம் கடந்து விட்டது. வெள்ளந்தியாய் வாழ்ந்து மோசம் போனது தான் மிச்சம். 

ஜோர்டான் மன்னர் ஹுசைன்

பாலஸ்தீனம் பிரிக்கப் பட்டதை, அரபுக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பாலஸ்தீனர்களிடையே மனக்கசப்புகள். மன வெதும்பல்கள். கொஞ்ச நாளில் பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே சில பல வன்முறைப் போராட்டங்கள், சண்டைகள்.


அடுத்து அடுத்து போர்கள்.  நவீன ஆயுதங்களைக் கொண்டு இஸ்ரேலியர்கள் வெற்றி பெற்றனர். அந்தச் சமயத்தில், யூதர்களுக்கு நவீன ஆயுதங்களை அமெரிக்காவும் பிரிட்டனும் கொடுத்தன. பற்றாக்குறைக்கு ஏற்கனவே சோவியத் ரஷ்யா கொடுத்த ஆயுதங்களும் இருந்தன. 

இஸ்ரேலின் முதல் கூட்டாளி யார் தெரியுங்களா. அமெரிக்காவும் இல்லை. பிரிட்டனும் இல்லை. ரஷ்யா தான் முதல் ஆத்ம ஆயுத நண்பர். இந்த விஷயம் பலருக்குத் தெரியாது.


இஸ்ரேலைக் கைக்குள் போட்டுக் கொண்டு, மத்திய கிழக்கில் மண்டோர் வேலை செய்யலாம் என்பதே ரஷ்யாவின் மாஸ்டர் பிளேன். ஆனால், அது நடக்காமல் போய் விட்டது.

சொந்த மண்ணிலேயே அனாதைகளாக வாழ்ந்து வருகிறார்கள்

அப்புறம் யூதர்களின் பக்கம் வெற்றி. காலம் காலமாய் கிராமங்களில் வாழ்ந்து வந்த அரபு மக்கள், பாலஸ்தீனத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப் பட்டனர். பாவம் அவர்கள். 

கடைசியில் பக்கத்து பக்கத்து அரபு நாடுகளில் அகதிகளாய்த் தஞ்சம் அடைந்தனர். இப்போது சொந்த மண்ணிலேயே அனாதைகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதுதான் இப்போதைய காஸா.


பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே நடந்த சண்டைகளைப் பற்றி நான் அதிகம் எழுத விரும்பவில்லை. சங்கடமாக இருக்கிறது. இஸ்ரேல் செய்தது மாபெரும் நம்பிக்கைத் துரோகம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. 

அந்தச் சமயத்தில், ஜோர்டான் மன்னர் ஹுசைன் இருந்தார். அவர் அமெரிக்காவின் பேச்சைக் கொண்டு, பாலஸ்தீனர்களுக்கு நிறையவே துரோகம் செய்து விட்டார். 

இந்த விஷயம் பலருக்குத் தெரியாது. அந்தத் துரோகங்களுக்குப் பிராயச் சித்தமாக, பின்னர் பாலஸ்தீன அகதிகளுக்கு ஜோர்டானிய அரசாங்கம் குடியுரிமை வழங்கியது. அடுத்து, 1970-களில் பாலஸ்தீன இயக்கங்கள் ஜோர்டானில் இருந்து அடித்து விரட்டப் பட்டன. 

பாலஸ்தீன அரபுக்கள் லெபனான் நாட்டில் தஞ்சம்

மன்னர் ஹுசைனுக்கு விசுவாசமாக இருந்த இராணுவப் படைகள் பாலஸ்தீன எழுச்சிகளை மூர்க்கத்தனமாக அடக்கின. அதில் 5000 பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டனர். 

இறுதியாக, வேறுவழி இல்லாமல் பாலஸ்தீன அரபுக்கள் லெபனான் நாட்டில் தஞ்சம் அடைந்தனர். அங்கு இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் செய்தனர். பலவீனமான லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் படை எடுத்தது. அதன் சில நிலங்களைப் பறித்துக் கொண்டது.

அடுத்து பாலஸ்தீனப் போராளிகளை அடக்கப் போவதாக இஸ்ரேல் கூறியது. அந்தச் சாக்கில் எகிப்து நாட்டின் மீதும் படை எடுத்தது. லெபனான் தலைநகர் பெய்ரூட் வரை போன இஸ்ரேலிய படைகள், 2000  பாலஸ்தீன அகதிகளைப் படுகொலை செய்தன. 

அந்த இனப் படுகொலைக்கு தலைமை தாங்கியவர் ஜெனரல் ஷரோன். இவர்தான் பின்னாளில் இஸ்ரேலின் பிரதமர் ஆனார். பல பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் அரபு நாடுகளில் தளம் அமைத்து போராடி வந்தன. யாசீர் அரபாத் தேசியவாதக் கொள்கை கொண்டவர்.


அவர் தலைமையில் Tahir al Hatani al Falestini எனும் இயக்கம் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்று இருந்தது. பலப் பல தாக்குதல்களை நடத்தியது. 

அமெரிக்காவின் ஆதரவு

ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராகப் பல தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், அமெரிக்கா தன்னுடைய ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்தனையையும் வெட்டிப் போட்டது. 

சோவியத் ரஷ்யாவைப் பொருத்த வரையில், அப்போதும் இப்போதும் பாலஸ்தீன விடுதலைக்கு மறைமுகமான ஆதரவுகளை வழங்கி வருகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் எல்லாமே ஒப்புக்குத்தான்.

அடுத்து Harakat al-Muqaama al-Islamiya எனும் இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் அல்லது "ஹமாஸ்" இயக்கத்தை மறந்துவிடக் கூடாது. இந்த இயக்கம்தான் இப்போதைக்கு இஸ்ரேலுக்கு பெரும் குடைச்சல். 

ஹமாஸ் இயக்கம், இராணுவ நடவடிக்கைகளில் மட்டும் இல்லை. அரசியல் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருகின்றது. 

பாலஸ்தீனத்தில் ஏழை மக்களுக்கான இலவச மருத்துவமனைகள். இலவச பாடசாலைகள். அநாதை இல்லங்கள். அற நல  மையங்கள் போன்றவற்றை நடத்தி வருகின்றது. 

மனிதாபிமான அடிப்படையில் நிதியுதவிகள்

ஹமாஸின் தர்ம காரியங்களுக்கான நிதி உதவி உலகின் பல நாடுகளில் இருந்து வந்து சேர்கின்றன. பெரும்பகுதி சவூதி அரேபியா, பாகிஸ்தான், குவாயிட், பகரேன், துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் இருந்து போகின்றது. மலேசியாவும் மனிதாபிமான அடிப்படையில் நிதியுதவிகள் செய்து வருகின்றது. இந்தோனேசியாவும் ஓரளவுக்கு உதவிகள் செய்கிறது.

சரி. ஓர் அறிவிப்பு. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஒரு வசதியான வீடு. பிள்ளைகளுக்கு இலவசப் பள்ளிக்கூடம். இலவச மருத்துவமனை வசதிகள். கூடவே ஒரு துப்பாக்கி. வேண்டுமா சொல்லுங்கள். எல்லாமே அரசாங்கச் செலவில் கிடைக்கும். இஸ்ரேலில் குடியேறினால் போதும். அவை எல்லாம் இலவசம். 

ஆனால், ஒரே ஒரு ’கண்டிசன்’. நீங்கள் ஒரு யூதராக மாற வேண்டும். உலகில் யார் வேண்டும் என்றாலும் யூதராக மதம் மாறலாம். இஸ்ரேல் அனுமதி வழங்குகிறது. 

இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள பாலஸ்தீன நிலங்களில், ஒரு ராஜா மாதிரி போய் உட்கார்ந்து கொள்ளலாம். உலகின் எந்த மூலையில் இருந்து வந்தாலும், ஒரு யூதர் ஓர் இஸ்ரேலிய பிரஜையாகக் கருதப் படுகின்றார். 

ஆனால், என்ன. இஸ்ரேலுக்குப் போனதும் மனைவி மக்களை விட்டுவிட்டு, துப்பாக்கியைத் தூக்க வேண்டும். சாகத் தயாராக வேண்டும். எப்படி உங்கள் வசதி.

இருக்க இடம் கொடுத்தார்கள் குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்கள்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, தாங்கள் பிறந்து வாழ்ந்து வந்த அந்தப்  பாலஸ்தீன மண்ணிலேயே நிரந்தரமாய் வாழ, வாழ்ந்தவர்களுக்கே உரிமை இல்லை. அதுதான் வேதனையிலும் வேதனையான வேதனை.

பாவம் பாலஸ்தீன மக்கள். இருக்க இடம் கொடுத்தார்கள். குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்கள். சாப்பிட சோறு கொடுத்தார்கள். படுக்கப் பாய் கொடுத்தார்கள். கடைசியில், என்ன ஆனது பார்த்தீர்களா. 

ஆக, இதையே ஒரு வாழ்க்கைத் தத்துவமாக எடுத்துக் கொள்ளுங்கள். அப்பா, அம்மா, மனைவி மக்கள். இவர்களைத் தவிர, வேறு யாரையும் வீட்டில் சேர்ப்பதற்கு முன்னால் இரண்டு மூன்று முறை யோசித்துப் பாருங்கள். வருபவர் நல்லவராக இருக்கலாம். 

நாணயமானவராகத் தோன்றலாம். ஆனால், அவர் மனசில் என்ன இருக்கிறது என்பது அவருக்கே தெரியாமல் இருக்கலாம். 

ஆக, அவரைக் குடும்பத்தில் ஒருவராகச் சேர்ப்பதற்கு முன்னால் என்ன என்ன விளைவுகள் ஏற்படலாம் என்பதை நன்றாக யோசித்துப் பாருங்கள். 

இப்போது இந்தக் கலியுகத்தில் நல்ல நல்ல கலாசாரங்கள் எல்லாம் மூன்றாம் தரக் கலாசாரங்களாக மாறி வருகின்றன. இருக்கிற சொத்தைப் பிடுங்கிக் கொண்டு போவதில்தான், பல சொந்த பந்தங்கள் 24 மணி நேரமும் கணக்குப் போட்டுப் பார்க்கின்றன. 

நாம்தான் பத்திரமாக இருக்க வேண்டும்! பத்திரமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்! 

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி.