சிபில் கார்த்திகேசு - ஜார்ஜ் அரசு விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிபில் கார்த்திகேசு - ஜார்ஜ் அரசு விருது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 செப்டம்பர் 2019

சிபில் கார்த்திகேசு - ஜார்ஜ் அரசு விருது

இரண்டாம் உலகப் போரின் போது பல ஆயிரம் சீனர்களின் உயிர்களைக் காப்பாற்றியவர். இங்கிலாந்து நாட்டின்  உயரிய விருதான 'ஜார்ஜ் பதக்கம்' பெற்றவர். மலேசிய சீனர் சமூகம் இவரை  தியாகி என்று போற்றுகின்றது. ஈப்போ மாநகரின் முக்கிய சாலைக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

In memory of Sybil Karthigesu

இவர் மேடானில் 1899ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை தோட்ட நிர்வாகியான ஆங்கிலேயர். தாயார் ஒரு தமிழர்.

சிபில் தேர்ச்சி பெற்ற ஒரு செவிலியர் (நர்ஸ்). சீன மொழியில் இயல்பாகப் பேசக் கூடியவர். 1919 ஆம் ஆண்டு டாக்டர் கார்த்திகேசு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் ஈப்போவில் ஒரு சிறிய மருத்துவமனையை நடத்தி வந்தனர்.

1941 ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் மலாயா மீது படை எடுத்து  ஈப்போ நகரைக் கைப்பற்றுவதற்கு முன்னர் கணவனும் மனைவியும் பாப்பான் எனும்  ஈப்போவிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊருக்கு சென்றனர். சீனர்கள் அதிகம் வாழும் இந்த நகரம் அலுமினியச் சுரங்கத் தொழிலுக்குப் பெயர் பெற்றது.

ஜப்பானியர்கள் மலாயாவைக் கைப்பற்றிய பின்னர் கொடுங்கோல் ஆட்சி செய்தனர். மலாயா மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தனர். இலட்சக் கணக்கான மக்களைச் சித்திரவதையும் செய்தனர். இவர்களில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சீனர்கள்.

ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து மலாயாவில் சில கொரில்லா போராளிக் குழுக்கள் உருவாகின.

The George Medal of United Kingdom.
Sybil Medan Kathigasu GM was a Malayan Eurasian nurse 
who supported the resistance during the 
Japanese occupation of Malaya. 
She was the only Malayan woman to be ever 
awarded with the George Medal for bravery.

பின் டாக்டர் கார்த்திகேசு மட்டும் மறுபடியும் ஈப்போவிற்கு வந்து விட்டார்.  சிபில்  பாப்பானிலேயே தங்கி ஏழை எளியவர்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்தார்.

அதன் பின்புறம் ஒரு காய்கறித் தோட்டம் இருந்தது. அந்தக் காய்கறித் தோட்டம் அவர்களுக்கு ஒரு மறைவிடமாக அமைந்தது. அந்தப் போராளிகளுக்குச் சிபில் இலவசமாக மருத்துவம் செய்து அனுப்பினார். அதனால் சுற்று வட்டார சீனர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றார்.

அந்தச் சமயத்தில் தன்னுடைய பாப்பான் மருத்துவமனையைில் ஒரு சின்ன சிற்றலை வானொலியையும் வைத்திருந்தார். பி.பி.சி வானொலிச் செய்திகளை ரகசியமாகக் கேட்டு அந்த செய்திகளைப் பாப்பான் மக்களுக்கு தெரிவித்தும் வந்தார். சிபில்  செய்தவை அனைத்தும் ஜப்பானியர்களுக்கு எதிரான செயல்கள்.

பாப்பான் நகர மக்கள் தான் அதிகமாகப் போராளிகளுக்கு உதவி செய்கின்றனர் என்பதை ஜப்பானிய இராணுவம் அறிந்தது. அதனால் அந்த மக்களைக் கைது செய்ய ஆரம்பித்தனர்.

சிபிலும் 1943 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.  பல நாட்கள் விசாரணை செய்யப்பட்டார். ஆனால், சிபில்  ஜப்பானியர்களுடன் ஒத்துழைக்க வில்லை; போராளிகளின் பெயர்களைச் சொல்லவில்லை.



Elaine Daly, the great granddaughter of Sybil Kathigasu. 
She is a popular Malaysian actress and TV host. 
The 42-year-old beauty, who is also national director of the 
Miss Universe Malaysia organisation and channel director of www.hurr.tv

ஒரு நாளைக்கு பத்து பேர் விகிதம் இரண்டு ஆண்டுகளுக்குச் சிபில் கார்த்திகேசு இலவசமாக மருத்துவம் பார்த்து இருக்கிறார். பேராக் வட்டாரத்தில் உள்ள ஏறக்குறைய 6000 போராளிகளுக்கு அவர் அவசர சிகிச்சை செய்து இருக்கிறார்.

ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் விகிதம் 30,000 பேரின் உயிருக்கு ஆபத்து என்பதை சிபில் உணர்ந்தார். எனவே போராளிகளின் பெயர்களை அவர் ஜப்பானியர்களுக்குச் சொல்லவில்லை.

பிறகு பத்து காஜா சிறைச்சாலைக்கு மாற்றப் பட்டு   பெரும் கொடுமைகள் இழைக்கப்பட்டன.  சிபிலலைப் போல அவருடைய கணவர் டாக்டர் கார்த்திகேசுவையும் ஜப்பானியர்கள் கட்டி வைத்து அடித்தனர். தமக்கு ஒன்றுமே தெரியாது என்று அவர் மறுத்து விட்டார்.

ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் சிபில் கார்த்திகேசுவின் குடும்பமே ஜப்பானியரின் சித்ரவதைக்கு உள்ளாகி இருந்தது.

ஜப்பான் தோற்கடிக்கப்பட்டு இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. 1945 ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் மலாயாவிலிருந்து வெளியேறினர். மலாயா மீண்டும் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. கேப்டன் டேவிட் மெக்பர்லேன் என்பவர் சிபில் கார்த்திகேசுவைத் தேடும் முயற்சியில் இறங்கினார்.

சிபில் கார்த்திகேசு பத்து காஜா சிறையில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அவர் பாப்பான் கொண்டு வரப்பட்டார். மக்கள் அனைவரும் திரண்டு நின்று அவரை வரவேற்றனர். பின்னர், ஆங்கிலேயர்கள் அவரை உடனடியாக இங்கிலாந்து கொண்டு சென்று மருத்துவம் வழங்கப் பட்டது.


Jalan Sybil Karthigesu at Ipoh, near General Hospital Ipoh.

அப்போது சிபிலை ஆறாம் ஜார்ஜ் மன்னர் பார்க்க ஆசைப் பட்டார். சிபில் பக்கிங்காம் அரண்மனைக்குத் தள்ளு வண்டியில் கொண்டு வரப்பட்டார். அங்கே சிபிலுக்கு  இங்கிலாந்தின் இரண்டாம் உயரிய விருதான ஜார்ஜ் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. மலேசியாவில் இதுவரை வேறு எந்தப் பெண்ணும் இப்பதக்கத்தைப் பெற்றதில்லை.

அவருக்கு ஆங்கிலேய அரசின் மிகச் சிறப்பான மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டன. இருப்பினும் ஜப்பானிய சித்ரவதையினால் ஏற்பட்ட உள் உடல் காயங்களை மருத்துவர்களால் முழுமையாகத் தீர்க்க முடியவில்லை.

1948-ஆம் ஆண்டு தன்னுடைய 49வது வயதில் மறைந்தார். அவருடைய உடல் 'ஸ்காட்லாந்திலிருந்து ஈப்போவிற்க்கு கொண்டு வரப்பட்டது. பேராக் மாநிலம் இதுவரை கண்டிராத மாபெரும் இறுதி ஊர்வலம் அன்று ஈப்போவில் நடை பெற்றது.

சிபில் கார்த்திகேசுவின் உடல் எடுத்துச் செல்லப்படும் போது ஈப்போ நகரத்தின் வழி நெடுகிலும் நின்று  லட்சக் கணக்கான சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் கண்ணீர் விட்டு மரியாதை செய்தனர்.

1948-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12-ஆம் தேதி தன்னுடைய 49-வது வயதில் சிபில் கார்த்திகேசு இறந்து போனார். அவருடைய உடல் ஸ்காட்லாந்து லானார்க் எனும் இடத்தில் முதன்முதலில் புதைக்கப் பட்டது.

பின்னர் லானார்க் சமாதியில் இருந்து 20.3.1949-இல் தோண்டி எடுக்கப் பட்டு, பினாங்கிற்கு கப்பல் வழியாகக் கொண்டு வரப்பட்டது.

பின்னர் ஈப்போவில் உள்ள அவருடைய புருவ்ஸ்டர் சாலை இல்லத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. பேராக் மாநிலம் இதுவரை கண்டிராத மாபெரும் இறுதி ஊர்வலம் அன்று ஈப்போவில் நடை பெற்றது.

சிபில் கார்த்திகேசுவின் உடல் எடுத்துச் செல்லப் படும் போது ஈப்போ நகரத்தின் வழி நெடுகிலும் நின்று ஓர் இலட்சம் மக்கள் கண்ணீர் விட்டு மரியாதை செய்தனர்.

சிபில் கார்த்திகேசுவினால் உயிர் தப்பியவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள். ஆகவே அவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் கூடியதில் வியப்பு ஒன்றும் இல்லை. இது நடந்தது 1949-ஆம் ஆண்டில்.


No Dram of Mercy... 
Unfinished first-person account of the experiences 
of a Malayan woman whose attempts to assist her 
compatriots during World War II resulted in her imprisonment and death.

மலேசிய மண்ணிலும் சரி, பேராக் மாநிலத்திலும் சரி இன்றும் சீனர்களிடையே சிபில் கார்த்திகேசு மிகவும் பிரபலமாகப் பேசப் படுகிறார். சிபில் கார்த்திகேசுவின் பெயரை ஈப்போ மாநகரத்தில் உள்ள ஒரு முக்கிய சாலைக்கு வைத்து பெருமையும் செய்து இருக்கிறார்கள்.

சீனர்கள் பலர் தங்கள் பிள்ளைகளுக்கு சிபில் என்று பெயர் வைத்து சிபில் கார்த்திகேசுவை நினைத்துப் பார்க்கிறார்கள்.

அவர் வாழ்ந்து மறைந்த பாப்பான் பட்டணத்து இல்லம் ஓர் அருங்காட்சியகமாக மாற்றப் பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய துணிமணிகள், பீங்கான் தட்டுகள், குவளைகள், படுக்கை விரிப்புகள், குடும்பப் படங்கள், அலுமினியப் பொருட்கள், மருந்துப் பெட்டிகள் அனைத்தும் சேகரிக்கப் பட்டு பத்திரமாகக் காட்சிக்கு வைக்கப் பட்டு உள்ளன.

சீனா, தைவான், ஹாங்காங், வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து வரும் சீனர்கள் அவருடைய சமாதிக்குச் சென்று மலர் வளையங்கள் சார்த்தி விட்டுச் செல்கின்றனர்.

சிபில் கார்த்திகேசுவைப் பற்றிய ஒரு தொலைக்காட்சித் தொடர் நாடகத்தை 1997-ஆம் ஆண்டு சிங்கப்பூர் தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பு செய்தது.

பின்னர் மலேசியாவின் அஸ்ட்ரோ தொலைக் காட்சி நிலையம் Apa Dosaku? எனும் தலைப்பில் 10 வாரங்களுக்கு சிபில் கார்த்திகேசு பற்றிய நாடகத் தொடரை ஒளிபரப்பு செய்தது.

அண்மையில் சிபில் கார்த்திகேசு வாழ்ந்த அந்த பாப்பான் நகரத்து வீட்டை நண்பர்களுடன் சென்று பார்த்தேன். அப்போது ஐந்தாறு சீனர்கள் மௌனமாகக் கண்களை மூடிக் கொண்டு நின்றனர். அனைவரும் மிக மிக வயதானவர்கள்.

அவர்களின் அத்தனை பேரின் கண்களில் கண்ணீர் மல்கியது. அதைப் பார்த்து என் மனதில் ஓர் இறுக்கம். சிபில் கார்த்திகேசு பயன் படுத்திய சில பொருட்களையும் தடவிப் பார்த்தேன். சிபில் கார்த்திகேசு அந்தப் பொருட்களில் இருந்து புன்னகை செய்து கொண்டு இருந்தார்.

இந்தக் கட்டுரையை எழுதும் போது என் மனம் ரொம்பவும் வலிக்கின்றது. சத்தம் போடாமல் அழவும் செய்கின்றது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)

சிபில் கார்த்திகேசுவைப் பற்றி விக்கிப்பீடியாவில் எழுதி இருக்கிறேன். முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். அதன் முகவரி:

https://ta.wikipedia.org/s/xro

பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
 
Baskaran Palanisamy Had read " No dram of Mercy" a few years ago
  
Muthukrishnan Ipoh Unfinished first-person account of the experiences of an heroic Malayan woman whose attempts to assist her compatriots during World War II...
 
Yogavin Yogavins U really awesome sir.
  
Malathi Nair Wish to visit Cybil mom's house.
  
Muthukrishnan Ipoh மூன்று நான்கு முறை அவர் வாழ்ந்த இல்லத்திற்குப் போய் இருக்கிறேன்... கடைசியாக சென்ற வருடம்...
 
Muthukrishnan Ipoh சிபில் கார்த்திகேசு வாழ்ந்த வீட்டிற்கு முன்னால் எடுத்துக் கொண்ட படம்... அந்த இல்லம் மிக அமைதியாகக் காட்சி அளிக்கிறது... ஒரு பெரிய வரலாறு அடங்கி இருப்பது கொஞ்சமும் தெரியவில்லை...
 
Image may contain: 1 person, standing, plant and outdoor 

Manickam Nadeson Muthukrishnan Ipoh கருப்பு கண்ணாடி அணிந்திருக்கும், கலை அம்சம் பொருந்திய கதாநாயகன் யரோ??
 
M R Tanasegaran Rengasamy வீர மங்கையின்மறையா வரலாறு... சிபில் கார்த்திகேசுவின் தியாகம் ஒரு ஜோதியாய் என்றும் சுடர்விடும். வாழ்க அவர் நாமம்.

(இலைமறை காயாக இருக்கும் பலரின் சுயசரிதையை தேடித் தரும் தங்களின் சேவையைப் போற்றுகின்றேன். நன்றி சார்.)
 
Neela Vanam இவரின் கதையை படிக்கும்போது கண்களிலிருந்து தானாக நீர் சொட்டியது ரொம்ப சோகமய்யா அவர்களுக்கு வாரிசு யாரும் இல்லையா உங்கள் பதிவுக்கு நன்றிகள்
 
Muthukrishnan Ipoh இவர் பயன்படுத்திய பொருட்கள் பாப்பான் நகரில் ஓர் அரும் காட்சியகத்தில் உள்ளது. அவற்றைப் பார்த்தால் மனசு கலங்கும்.
 
Periasamy Ramasamy படிக்கும் போதே அந்த அன்னையை நினைத்து கசிந்த கண்ணீரை அடக்க முடியவில்லை. அன்னை என்றாலே அன்புதான்.
 
Muthukrishnan Ipoh ஜப்பான்காரர்கள் பெரிய சித்ரவதை செய்து இருக்கிறார்கள். இங்கிலாந்தில் சிறப்பு மருத்துவம் செய்தும்... உடலின் உட்பாகத்தில் ஏற்பட்ட இரத்தக் கசிவு நிற்கவில்லை. தன் 48-ஆவது வயதில் காலமானார்.
 
Periasamy Ramasamy அத்தனை சித்ரவதைகளையும் சகித்துக் கொண்ட அந்த அன்னையின் நிலைமை நம் குடும்ப உறவுகளில் ஒருவருக்கு ஏற்பட்ட நிலை போல உணர வைத்தது. அந்த ஜப்பானியர்கள் மீது என் மனக்கண் காட்டிய வெறுப்பு சொல்லி மாளாது.
 
Muthukrishnan Ipoh Periasamy Ramasamy அவர் கண் முன்னாலேயே அவருடைய பிள்ளைகளும் சித்ரவதை செய்யப்பட்டு இருக்கிறார்கள்... இருந்தாலும் அவர் காட்டிக் கொடுக்கவில்லை...
 
Periasamy Ramasamy அதனால்தான் இன்றும் எல்லாருக்கும் அன்னையாகத் திகழ்கிறார்.