பிரம்படிகளின் பிம்பங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரம்படிகளின் பிம்பங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 ஆகஸ்ட் 2012

பிரம்படிகளின் பிம்பங்கள்

எச்சரிக்கை: பிரம்படிகள் கிடைத்த மனிதர்கள் அனுபவித்த கொடூர வேதனைகளைப் பற்றிய கட்டுரை. இளகிய மனம் படைத்தவர்கள் தவிர்க்கலாம். இந்தக் கட்டுரை மலேசியாவில் வெளிவரும் ‘தினக்குரல்’ நாளிதழில் 29.6.2012இல் பிரசுரிக்கப்பட்டது.

 

மனிதனாகப் பிறந்த வருக்கும் ஏதாவது ஒரு வகையில் பிரம்படி கிடைத்து இருக்கும். ஆசிரியரிடம் சின்ன சின்ன அடிகள். டியூஷன் ஆசிரியரிடம் லேசான அடிகள். அப்பா அம்மாவிடம் செல்லமான அடிகள். தாத்தா பாட்டியிடம் தமாஷான அடிகள். வை எல்லாம் அடுத்த விநாடியே மறைந்து போகும் கொசுக்கடிகள். அவை மனதில் நிற்பதும் இல்லை. கனவில் வருவதும் இல்லை. காணாமல் போகின்ற அனுபவங்கள்.

ஆனால், சிறைச்சாலையில் கைதிகளுக்கு கொடுக்கிறார்களே பிரம்படிகள்,  அவை ஜென்மா ஜென்மத்திற்கும் சாகாவரம் பெற்றவை. ஓர் அடியில் மேல் தோல் பிய்த்துக் கொள்ளும். இரண்டாவது அடியில் சதை பெயர்த்துக் கொண்டு வரும். மூன்றாவது அடியில் தோல் சதை காற்றில் பஞ்சு மாதிரி பறக்கும்.  நான்காவது அடியில்  இரத்தம் பிய்த்துக் கொண்டு ஊற்றும்.


எல்லாம் பிட்டத்தில் விழும் அடிகள்தான். அதனால் செத்துச் சமாதி கட்டும் போதும்கூட பிரம்படி வடுக்கள் சொந்த பந்தமாக ஒட்டிக் கொண்டே வரும். அத்தனை ஆழமான வடுக்கள்.

ஆயுதமேந்திய கொள்ளை, வன்புணர்வு (Rape), வன் தாக்குதல் (Aggravated Assault), ஒருபால்புணர்வு, நம்பிக்கை மோசடி, வழிப்பறி கொள்ளை, வீட்டை உடைத்து கொள்ளை, மானபங்கம் செய்தல் (Outrage of Modesty), விலைமாதின் வருமானத்தில் வாழ்தல் (Living on prostitution)  போன்ற குற்றங்களுக்காகப் பிரம்படிகள் கொடுக்கப்படுகின்றன.


2003 ஆம் ஆண்டில் இருந்து வட்டி முதலைகளுக்கும், திருட்டுத்தனமாய் வட்டிக்கு விடுபவர்களுக்கும் பிரம்படிகள் கொடுக்க சட்டம் திருத்தம் செய்யப்பட்டது. ஒரு கொசுறு. பிரம்படிகள் ஆண்களுக்கு மட்டுமே. பெண்களுக்கு இல்லை.  

ஒருவருக்கு 12 பிரம்படிகள் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டால், அத்தனைப் பிரம்படிகளையும் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் கொடுத்து தீர்த்துவிடுவார்கள். தவணை முறையில் இந்த மாதம் இரண்டு அடுத்த மாதம் இரண்டு என்கிற பேச்சிற்கே இடமில்லை.


ப்படித்தான் வெளியில் எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பேசிக் கொண்டும் இருக்கிறார்கள். அது தவறு. 24 பிரம்படிகள் என்றால் அந்த 24 பிரம்படிகளையும் ஒரே நாளில் ஒரே தடவையாக கொடுத்து முடித்து விடுவார்கள். (சான்று: http://www.corpun.com/singfeat.htm#offences -  Judicial Caning in Singapore, Malaysia and Brunei)  

ஒரு கைதிக்கு அதிகபட்சமாக 24 பிரம்படிகள் கொடுக்க சட்டம் அனுமதி அளிக்கிறது. அப்படி 24 பிரம்படிகளையும் கொடுக்கும் போது பக்கத்தில் மருத்துவர் எப்போதும் தயார் நிலையில் இருந்து கொண்டே இருப்பார். ஒரு கைதியால் அத்தனை அடிகளையும் தாங்கிக் கொள்ள முடியுமா என்று பரிசோதனை செய்து உறுதிபடுத்துவார்.


பெரும்பாலும் நான்காவது ஐந்தாவது அடிகளில் மயக்கம் வந்துவிடும். அருகில் இருக்கும் சிறைப் பாதுகாவலர்கள் மயக்கத்தைத் தெளிய வைப்பார்கள். மயக்கம் தெளிந்ததும் மறுபடியும் பிரம்படிகள் தொடரும்.  மருத்துவர் நிறுத்தச் சொல்லும் வரையில் தண்டனை நிறுத்தப் படாது. அடி வாங்கும் போது கைதிக்கு ஒன்றுக்கு போவது இரண்டுக்குப் போவது எல்லாம் சகஜம்.


ஒரு கைதிக்கு பிரம்படி கொடுக்க முடியுமா முடியாதா என்பதை மருத்துவ ரீதியில் முதலில் உறுதி செய்து கொள்வார்கள். எந்த நேரத்திலும் பிரம்படியை மருத்துவர் நிறுத்த முடியும். பிரம்படி கொடுக்கப்பட்டதும் அந்தக் கைதி உடனடியாக சிறைச்சாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார். அங்கே அவரைக் குப்புறப் படுக்க வைத்து பிட்டத்தைச் சுத்தம் செய்து மருந்து போடுவார்கள்.


காயங்கள் ஆறுவதற்கு மூன்று வாரங்கள் பிடிக்கும். அந்த மூன்று வாரங்களும் ஒழுங்காக உட்கார முடியாது. மல்லாந்து படுக்க முடியாது. சிலுவார் போட்டு நடக்க முடியாது. கைலிதான் கட்ட வேண்டும். பிரம்படியின் வலி இருக்கிறதே, அது பத்தாண்டுகள் வரை நீடித்து இருக்கும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

தவிர,  இரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு விதிவிலக்கு. அவர்களுக்கு பிரம்படி கிடையாது. (சான்று: "10 years on, and we still feel the pain", The New Paper, Singapore, 10 September 1991)


எப்போது பிரம்படி கொடுக்கப்படும் என்பதைக் கைதியிடம் முன்கூட்டியே சொல்லமாட்டார்கள். கடைசி நிமிடத்தில்தான் சொல்வார்கள்.  மலேசியாவைப் பொருத்த வரையில் சிறைச்சாலையில் ஒரு திறந்த வெளியில்தான் பிரம்படி கொடுக்கப்படும்.

பிரம்படி கொடுக்கப்படுவதை மற்ற கைதிகள் பார்க்க முடியாது. அந்தச் சமயத்தில் சிறை அதிகாரிகள் சிலர், ஒரு மருத்துவர், ஆண் நர்ஸ்கள், பிரம்படி கொடுப்பவர்கள் மட்டுமே இருப்பார்கள். பிரம்படி கொடுப்பவர்களைப் பிரம்படிக்காரர்கள் என்று அழைக்கலாம். ஆங்கிலத்தில் Caning Officers.


இவர்கள் நல்ல உடல்கட்டுடன், தற்காப்புக்கலை தெரிந்தவர்களாகவும் இருப்பார்கள். இந்த பிரம்படி மன்னர்கள் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். மணல் மூட்டைகள், வைக்கோல் பொம்மைகள், வாழைமரங்கள் போன்றவற்றில் பல மாதங்களுக்கு பிரம்படி பயிற்சி பெற்றவர்கள். மலேசியாவில் மொத்தம் 62 பிரம்படிக்காரர்கள் இருக்கிறார்கள். (சான்று: Amnesty International Briefing on Singapore, January 1978)

பிரம்படி என்பது குறைவான உடல் சேதத்தில் மிகையான வேதனையைத் தருவதாக இருக்க வேண்டும். அதுதான் பிரம்படியின் தாரக மந்திரம். பிரம்படிக்காரர்களுக்கு அவர்களுடைய சம்பளம் போக, ஒவ்வோர் பிரம்படிக்கும் மிகை ஊதியம் (Bonus) வழங்கப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு வரை ஒரு பிரம்படிக்கு 3 ரிங்கிட்  மிகை ஊதியம். இப்போது ஒரு பிரம்படிக்கு பத்து ரிங்கிட். காஜாங் சிறைச்சாலையில் ஒவ்வொரு புதன், வெள்ளிக்கிழமைகளில் பிரம்படிச் சடங்கு நடைபெறுகிறது.


சிறைச்சாலை விதிகளின்படி ஒருவருக்கு பிரம்படி அவருடைய பிட்டத்தில்தான் கொடுக்கப்பட வேண்டும். மற்றபடி உடம்பில் வேறு எங்கும் அடிபடக்கூடாது.

தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னால் கைதிகள் அனைவரையும் ஓர் அறைக்குள் பூட்டி வைப்பார்கள். பின்னர் ஆறு ஆறு பேராக அறைக்கு வெளியே கொண்டு வரப்படுவார்கள். நடைபாதையில் உட்கார வைக்கப்படுவார்கள். பின்னர் ஒருவர் ஒருவராக நிர்வாணமாக, பிரம்படி கொடுக்கப்படும் இடத்திற்கு அழைத்து வரப்படுவார்.


அங்கே இருக்கும் A வடிவ சாய்கால் சட்டத்தில் (Trestle A-frame) கைதி நிற்க வைக்கப்படுகிறார். அவருடைய ஆண் பாகத்தில் ஒரு சின்ன பஞ்சு மெத்தை பாதுகாப்புக்காக வைக்கப்படுகிறது.  சிறுநீரகப் பகுதியின் மேல்புறமும் ஒரு பஞ்சு மெத்தை வைக்கப்படுகிறது. முகம் கட்டப்படுவது இல்லை. வாயில் துணி வைக்கப்படுவதும் இல்லை. கைகளும் கால்களும் வார்ப்பட்டைகளினால் இறுக்கமாகக் கட்டப்படுகின்றன. பின்னர், பிரம்படிக்காரர் கைதி கட்டப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து ஐந்து அடிகள் பின்னால் தள்ளி நிற்பார்.

முதல்நாள் நீரில் ஊறப்போட்ட பிரம்பு இளக்கமாகவும் பதமாகவும் இருக்கும். நீரில் ஊறப்போட்ட பிரம்பு உடையாது, சிதறாது. இன்னோர் அதிகாரி ‘சத்துஎன்று சத்தமாகச் சொல்வார். அடுத்த ஐந்தாவது விநாடியில் கைதியின் பிட்டத்தில் அடி விழும். அடுத்து, முப்பது விநாடிகள் கழித்து ‘டுவாஎன்று உரக்கமாகக் கத்துவார். இரண்டாவது அடி விழும்.


சமயங்களில் இரு பிரம்படிக்காரர்கள் மாறி மாறி அடிகளைக் கொடுப்பார்கள். பிட்டத்தில் அடி விழும் போது அந்தப் பிரம்பின் நுனியை பிட்டத்தோடு சேர்த்து இழுப்பார்கள். அப்படி இழுப்பது என்பது கொடுமையிலும் கொடுமையான வலியைக் கொடுக்கும். எவ்வளவு பலத்தைக் கொண்டு அடிக்க முடியுமோ அவ்வளவு பலத்தையும் கொண்டு ஒரே இடத்தில் குவித்து அடியைக் கொடுப்பார்கள்.

ஒரு பிரம்பின் நீளம் 4 அடி. அதாவது ஒரு மீட்டர். அதன் தடிப்பு அரை அங்குலம். (1½ செண்டிமீட்டர்) மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பிட்டத்தை நோக்கி வரும் பிரம்பு,  90 கிலோகிராம் தாக்கத்தைக் கொடுக்கிறது. அந்தத் தாகத்தில்தான் தோல் பிய்ந்து, சதை பிய்ந்து, இரத்தம் பீய்ச்சுகிறது. 


ஆரமபத்தில் ஒரே இடத்தில் இரண்டு அடிகள் அடுத்து அடுத்து விழுவது இல்லை. ஓர் அடி மேலே விழும். அடுத்த அடி சற்று கீழே அல்லது அதற்கும் மேலே விழும்.  அந்த அளவுக்கு பிரம்படிக்காரர்கள் கெட்டிக்காரர்கள்.  

ஆனால், பதினைந்தாவது பிரம்படிக்கு மேலே போகும் போது, அடிபட்ட இடத்திலேயே அடி விழுவதும் உணடு. அடிபட்ட இடத்திலேயே அடி விழுந்தால் வலி குறைவாக இருக்கும் என்பதையும் கண்டுபிடித்து வைத்து இருக்கிறார்கள். புதிய இடத்தில் அடி விழும் போதுதான் அதிகமான வேதனையைக் கொடுக்கும்.


இவ்வளவு நடந்து கொண்டு இருக்கும் போது கைதியின் எதிர்வினை எப்படி இருக்கும். அதையும் தெரிந்து கொள்ளுங்கள். பெரும்பாலான கைதிகள் முதல் மூன்று அடிகள் வரை போராட்டம் நடத்துவார்கள். அதற்கு பின்னர் அவர்களுடைய போராட்டம் குறைந்து போகும். ஏன் என்றால் அந்தக் கட்டத்தில் அவர்களுடைய உடல் பலகீனமாகிப் போய் விடுகிறது.

மூன்றாவது அடிக்குப் பின்னர் அதிர்ச்சியில் உடல் சரிந்து போகும். உடனே மருத்துவரும் அவருடைய உதவியாளர்களும் கைதியின் காயங்களுக்கு மருந்து போடுவார்கள். மயக்கம் அடைந்து விட்டது போல சிலர் நடிப்பதும் உண்டு. மருத்துவர் பரிசோதித்து மயக்கம் இல்லை என்று சொன்னதும், பிரம்படிச் சடங்கு மறுபடியும் தொடங்கும்.


நீதிமன்றம் விதித்த அத்தனை பிரம்படிகளையும் வழங்கிய பின்னர்தான் சடங்கு ஒரு முடிவிற்கு வரும். 16 பிரம்படிகள் என்றால் 16 பிரம்படிகளும் முடிந்தாக வேண்டும். மருத்துவர் நிறுத்துச் சொல்லும் வரையில் நிறுத்த மாட்டார்கள்.

அடி வாங்கும் போது கைதிகளில் சிலர் வலுக்கட்டாயமாக அமைதியாக நிற்பார்கள். அப்படிப்பட்டவர்கள் மூன்று அடிகள் வரை தாக்குப் பிடிப்பார்கள். அதற்கு பிறகு அவர்களால் முடியாது. அடி விழும் போது சிலர் ஆண்டவரைச் சத்தம் போட்டு கூப்பிடுவார்கள்.  சிலர் கருணை காட்டும்படி கெஞ்சிக் கதறுவார்கள். சிலர் வெறித்தனமாக அலறுவார்கள். (சான்று: "The Caning of Michael Fay: The Inside Story by a Singaporean", by Gopal Baratham, KRP Publications, Singapore, 1994)


பிரம்படிகள் கொடுக்கப்படுவதில் முதல்வகைப் பிரம்படி என்றும் இரண்டாம் வகைப் பிரம்படி என்றும் இரு வகைகள் உள்ளன.  இதில் முதல் வகை மிக மோசமான வேதனையைக் கொடுக்கும். இரண்டாம் வகை சுமாரானது. மலேசியாவிற்குள் கள்ளத்தனமாக வந்து பிடிபடுபவர்களுக்கு இரண்டு பிரம்படிகள் கொடுக்கப்படுவதற்கு சட்டம் வகை செய்கிறது. அவர்களுக்கு கொடுக்கப்படும் பிரம்படிகள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவை. வணிகக்குற்றங்கள் (White Collar Offences) தண்டனை பெற்றவர்களுக்கும் இரண்டாம் வகை பிரம்படிகளே!

2004, 2005 ஆம் ஆண்டுகளில் 18,607 கள்ளக்குடியேறிகளுக்கு பிரம்படிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களில் 15,214 பேருக்கு ஒரே ஒரு பிரம்படி கொடுக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் 11,473 இந்தோனேசியர்களும் பிரம்படி பெற்றார்கள். அண்மைய புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை.

இன்னும் ஒரு விஷயம். ஒருவருக்கு அதிகபட்சமாக 24 பிரம்படிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்று சட்டம் சொல்கிறது. அவர் செய்த ஒரு குற்றத்திற்கு 24 பிரம்படிகள் என்றால் 24 பிரம்படிகள்தான்.

ஆனால், அவர் இரண்டு குற்றங்களைச் செய்து, 48 பிரம்படிகள் என்றால், அவர் அந்த 48 பிரம்படிகளையும் வாங்கித்தான் ஆக வேண்டும். தயவு தாட்சண்யம் கிடையாது. இரண்டு தண்டனைகளும் (Concurrently) ஒரு சேர வழி இல்லை. 2004 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு காம வெறியனுக்கு 50 பிரம்படிகள் கொடுக்கப்பட்டன என்பதையும் நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

அது மலேசிய சிறைச்சாலை சாதனை. மற்றபடி, மருத்துவர் அனுமதிக்காமல் அந்த 50 பிரம்படிகளையும் ஒரே சமயத்தில் கொடுத்திருக்க மாட்டார்கள். அது மட்டும் இல்லை. 50 அடிகளையும் ஒரே சமயத்தில் கொடுத்து விடுங்கள் என்று கைதி கேட்டுக் கொண்ட பிறகுதான் தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.

சிங்கப்பூரில் சற்று மாறுபட்ட ஒரு நிகழ்ச்சி. 1991ஆம் ஆண்டு குவேக் கீ சோங் என்பவர் ஆயுதம் ஏந்தி நான்கு முறை கொள்ளைகள் அடித்தார். அவருக்கு சிறைத்தண்டனையும், ஒரு கொள்ளைச் சம்பவத்திற்கு 12 பிரம்படிகளும் கொடுத்து தீர்ப்பு வழங்கபட்டது. அப்படி என்றால் 48 பிரம்படிகள்.

ஆனால், அந்த 48 பிரம்படிகளையும் ஒரே தடவையாக கைதிக்கு கொடுத்துவிட்டனர். அரசாங்கத்தின் மீது குவேக் வழக்கு தொடர்ந்தார். 48 பிரம்படிகளுக்குப் பதிலாக 12 பிரம்படிகள் என நான்கு முறை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். வெற்றியும் பெற்றார். அரசாங்கம் அவருக்கு நஷ்டயீடு கொடுத்தது.  அதுவும் ஒரு வரலாறு.

பிரம்படிக்காரர்களின் மனநிலை எப்படி இருக்கும். அரசாங்கத்திற்காகவும் நீதித்துறைக்காகவும் ஒருவரை அடிக்கிறேன். வேண்டும் என்று ஒருவரைத் துன்புறுத்தவில்லை.  ஆண்டவா என்னை மன்னித்துவிடு என்று வேண்டிக் கொண்டுதான் பிரம்படி கொடுக்கிறார்கள். தூக்குத் தண்டனை நிறைவேற்றுகிறார்களே அவர்களில் சிலருக்கு பல நாட்கள் தூக்கமே வராதாம். சாப்பிட முடியாதாம்.

மனிதனாய்ப் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும் என்று ஒரு கவிஞர் பாடினார். அதையே கொஞ்சம் மாற்றினால் மனிதாய்ப் பிறந்து பிரம்படி வாங்க மாபாவம் செய்திடல் வேண்டும் அம்மா என்று வருகிறது.

உப்பைத் தின்ன வேண்டாம். தண்ணீருக்கு அலையவும் வேண்டாம். தப்புகளைச் செய்ய வேண்டாம் பிரம்படிகளைப் பெறவும் வேண்டாம். பிரம்படிகள் இருக்கிறதே... ஐயோ கடவுளே... தயவு செய்து அது வேண்டவே வேண்டாம். தப்பு தண்டாக்கள் வேண்டாம்... வேண்டாம்.

நியாயமாக, நீதியாக, சட்டத்திற்கு கட்டுப்பட்டு, நல்ல ஒரு மனிதனாக நடந்து கொள்வோம். பிரம்படிகளைப் பற்றி நினைக்கவே வேண்டாம். பிரம்படிகள் வேண்டவே வேண்டாம். 

(படங்கள்: மலேசியாவில் இருக்கும் புடு சிறைச்சாலை, காஜாங் சிறைச்சாலைகளின்  அரும் காப்பகத்தில் இருந்த கிடைத்த பதிவுப்படங்கள். இந்தப் படங்கள் மற்ற சில கல்விக் கூடங்களிலும் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.)