22 July 2021

கொரோனா இறப்பு: ஆண்கள் அதிகம் பெண்கள் குறைவு. உண்மையா?

தமிழ் மலர்  - 19.07.2021

கொரோனா கொரோனா என்று உலகமே கொதித்துப் போய் நிற்கிறது. அந்தப் பக்கம் பார்த்தால் கொரோனா வைரஸ். இந்தப் பக்கம் பார்த்தால் டெல்டா வைரஸ். இன்னும் கொஞ்சம் தள்ளிப் போனால் தென்னாபிரிக்கா வைரஸ். ஆக எந்தப் பக்கம் திரும்பினாலும் கொரோனா கோவிட் கொக்கரிப்புகள்கள்.

அலைகள் ஓய்வது இல்லை. மலைகள் சாய்வது இல்லை. அது அந்தக் காலத்துப் பொன்மொழி. கொரோனா ஓய்வதும் இல்லை. கோவிட் சாய்வதும் இல்லை. இது இந்தக் காலத்துப் பொன்மொழி. இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

அலைகள் ஆழமான கடலில் ஆர்ப்பரிக்கின்றன. கொரோனா மனித உடலில் கொக்கரிக்கின்றன. அலைகளைக் கடல் விடுவது இல்லை. அதைப் போல கொரோனா மனிதர்களை விடுவதாகவும் இல்லை.

எப்படி அலைகள் ஓய்வது இல்லையோ; அதே போல கொரோனாவும் அவ்வளவு சீக்கிரத்தில் அடங்கப் போவதும் இல்லை.

இருந்தாலும் கொரோனாவின் ஆட்டம் கண்டிப்பாக ஒரு முடிவிற்கு வரும். அதுவும் விரைவில் வரும். எதிர்பார்ப்போம்.

கொரோனாவினால் ஆண்கள் தான் அதிகமாய் உயிர் இழக்கிறார்கள். பெண்களின் இறப்பு ஆண்களைவிட குறைவு என்றும்; சராசரியாக ஒரு பெண்ணுக்கு மூன்று ஆண்கள் உயிர் இழக்கிறார்கள் என்றும்; புதிய மருத்துவ ஆய்வுத் தகவல்கள் பரவலாகி வருகின்றன.

இது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும். ஆராய்ந்து பார்த்ததில், உடலமைப்பு ரீதியில் பெண்களைவிட ஆண்கள் சற்றே பலவீனமானவர்கள் எனும் உண்மை தெரிய வருகிறது.

உயிர் வாழும் முறை என்று வரும் போது பெண்களைவிட ஆண்கள் சற்றே பலவீனமானவர்கள் (When it comes to survival, men are the weaker sex.). அதற்குச் சில காரணங்கள் சொல்லப் படுகின்றன. என்ன காரணங்கள் என்று பார்ப்போம்.

இப்போது ஏற்பட்டு இருக்கும் இந்தக் கொரோனா தொற்று இருக்கிறதே, இது ஒன்றும் முதன்முறையாக ஏற்பட்ட உலகளாவியத் தொற்று நோய் அல்ல. ஏற்கனவே பற்பல கொடிய நோய்கள் வந்து போய் விட்டன. பல கோடி மக்கள் இறந்து போய் இருக்கிறார்கள்.

கறுப்பு மரணம் என அழைக்கப்படும் பிளேக் நோய்; காலரா; ஸ்பானிஷ் காய்ச்சல் (Spanish flu); சார்ஸ் (Severe Acute Respiratory Syndrome (SARS) போன்ற ’பெண்டமிக்’ தொற்றுகள் வந்து போய் இருக்கின்றன.

இதில் ஸ்பானிஷ் (Spanish Flu) காய்ச்சலுக்கு ஸ்பானிஷ் ஈ (Spanish Fly) என்று பெயர் வைத்த உலக மகா அமைச்சர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஒரு நாட்டின் சுகாதார அமைச்சருக்கு இதுகூட தெரியவில்லை என்றால் எங்கே போய் முட்டிக் கொள்வது?

இப்போதைய உலக மக்களில் 100 வயது வரை வாழ்ந்து கொண்டு இருப்பவர்களில் 80 விழுக்காட்டினர் பெண்கள். 110 வயதை எட்டியவர்கள் 95 விழுக்காட்டினர் பெண்கள். ஆண்கள் சிலர் மட்டுமே தட்டுத் தடுமாறி 100 வயதுகளைத் தொட்டுப் பார்க்கிறார்கள்.

இந்தப் பக்கம் இல்லாத கூத்துகள் பண்ணிக் கொண்டு இருக்கும், ஒரு மெகா மனிதரையும் அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மனித மரபணுக்களில் ஆண்களின் மரபணுக்கள்; பெண்களின் மரபணுக்கள்; இரண்டும் ஒன்று தான். ஒரே மாதிரி தான். ஆனால் அவற்றின் பரிணாம வளர்ச்சியின் (evolutionary growth) முறையில் தான், இரண்டுமே கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றம் கண்டு இருக்கின்றன. பரிணாமத்தைப் பொறுத்த வரையில் அது லேசான மாற்றம்.

பரிணாமம் என்றால் என்ன? வாழ்வியல் சூழலுக்கு ஏற்றவாறு கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நாமே செதுக்கிக் கொள்வதைத் தான் பரிணாமம் என்கிறோம். உயிருடன் வாழும் ஓர் உயிர்ப் பொருளை உயிரி என்கிறோம்.

அந்த உயிரி, பூமியின் காலச் சூழல்; சுற்றுச் சூழல் அமைப்புக்கு ஏற்றவாறு படிப்படியாகத் தன்னை மாற்றிக் கொள்கிறது. அது தான் பரிணாமம்.

உயிரினங்களில் பல கோடிக் கோடி இனங்கள் உள்ளன. அந்த உயிரினங்களில் படிப்படியாக, மரபு வழியாக, அடுத்த பரம்பரைக்கு மாற்றங்கள் கொண்டு போகப் படுகின்றன. கடத்தப் படுகின்றன என்று சொன்னால் சரியாக இருக்கும்.

காலம் செல்லச் செல்ல, பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து போக, உயிரினங்களின் மரபணுக்களில் வெவ்வேறு பதிப்புகளின் (different alleles of genes) விகிதங்கள் மாறுபட்டுக் கொண்டே போகும். அது தான் பரிணாமம்.

தனி ஓர் உயிர்ப் பொருளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது பரிணாமம் அல்ல. தனி ஓர் உயிர் தன்னம் தனியாகப் பரிணாமம் அடைவது இல்லை. ஓர் உயிரினத்தைச் சார்ந்த ஒரு கூட்டமே பரிணாமம் அடையும்.

ஆண்களின் மரபணுக்கள் ஆண்களுக்குக் கொஞ்சம் கூடுதலான உடல் தசையைக் கொடுக்கிறது. உடலுக்குக் கொஞ்சம் கூடுதலாக உயரத்தையும் கொடுக்கிறது. இது பல இலட்சம் பல கோடி ஆண்டுகளாக நடந்த பரிணாமம்.

பரிணாமம் பற்றி மேலும் கொஞ்சம் கூடுதலான தகவல். மிக மிக எளிதாக விளக்கி இருக்கிறேன்.  பரிணாமங்களில் இரு வகை உள்ளன.

1. நுண் ப‌ரிணாமம் (microevolution)

2. பெரும் ப‌ரிணாம‌ம் (macroevolution)

நுண் ப‌ரிணாமம் என்பது ஒரே ஓர் உயிரின‌க் கூட்ட‌த்திற்குள் (within a particular species) நடக்கும் மரபியல் மாற்ற‌ங்க‌ள். பெரும் ப‌ரிணாம‌ம் என்பது ஓர் உயிரின‌க் கூட்ட‌த்தையும் தாண்டி நிலையில் மற்ற உயிரினங்களிலும் ம‌ர‌பிய‌ல் மாற்ற‌ங்க‌ள் ஏற்படுத்துவது ஆகும் (above the level of species).

அதாவது ஓர் இனத்தில் இருந்து இன்னோர் இனத்தில் ம‌ர‌பிய‌ல் மாற்ற‌ங்க‌ளை உருவாக்குவது ஆகும்.

பொதுவாகவே ஆண்களின் உடல் எடையும் உடல் வலிமையும் பெண்களைவிட கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. ஏன் ஆண்களுக்கு மட்டும் இப்படி தனிப்பட்ட மரபணுச் சலுகைகள் என்று கேட்கலாம். நல்ல கேள்வி.

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து ஆண்களுக்கு உடல் ரீதியாகவே பற்பல கஷ்டங்கள்; எதிர்நீச்சல்கள்; சண்டைகள்; கலவரங்கள்; திண்டாட்டங்கள்; தத்தளிப்புகள்; போர்கள்; போராட்டங்கள். சவாலே சமாளி என்று சமாளிக்கும் தன்மையில் ரொம்பவுமே சவால்கள்.

குகைகளில் வாழும் காலத்தில் குடும்பத்தைக் கொடிய விலங்குகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். அங்கே ஒரு போராட்டம். உணவு தேடிப் போகும் போது காட்டு விலங்குகளிடம் இருந்து உயிர் தப்பிக்க வேண்டும். அங்கே ஒரு போராட்டம்.

எதிரிக் குழுக்களிடம் இருந்து குடும்ப உறுப்பினர்களைத் தற்காக்க வேண்டும். அங்கே ஒரு போராட்டம். பயிர் பச்சைகளைப் பெரிய மிருகங்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். அங்கே ஒரு போராட்டம்.

இப்படி எக்கச்சக்கமான போராட்டங்கள். பல இலட்சம் ஆண்டுகளாக இந்த மாதிரியான தப்பிப் பிழைக்கும் போராட்டங்களை, ஆண்கள் நடத்தி வந்து இருக்கிறார்கள். அங்கே இருந்து தான் ஆணாதிக்கமும் தலை தூக்கி இருக்கிறது.

அதனால் ஆண்களின் மரபணு பரிணாமத்தில் சற்றே கூடுதலான வலிமை மாற்றங்கள். ஆண்களுக்குக் கொஞ்சம் கூடுதலான பலம் வந்ததற்கு அதுதான் காரணம். புரியும் என்று நினைக்கிறேன். சரி.

தலைப்பிற்கு வருவோம். கொரோனா நோயினால் பெண்களைவிட ஆண்கள் தான் அதிகமாய் உயிர் இழப்பதாகத் தகவல்கள். என்ன காரணங்கள். இந்தக் கட்டத்தில் ஆண்கள் சில கசப்பான உண்மைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பெண்களை ஆராதனை செய்யும் ஆண்கள் கட்சி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

முதல் காரணம்: ஆபத்தான நேரங்களில் ஆண்களைவிட பெண்கள் அதிக மனவலிமையுடன் செயல்படும் திறன் கொண்டவர்கள். அதே சமயத்தில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக மனத் துணிச்சல் கொண்டவர்கள்.

ஆபத்துகளை எதிர்கொள்வதில் ஆண்களைவிடப் பெண்களே துணிச்சல் மிக்கவர்கள் என்று சொல்லப் படுகிறது. இந்தக் காரணம் மனவலிமை தொடர்பானது.

இரண்டாவது காரணம்: மது அருந்தும் பழக்கம். இந்தப் பழக்கம் ஆண்களுக்கு அதிகம். பெண்களைவிட ஆண்களே மதுப் பழக்கத்திற்கு அதிகமாய் அடிமையானவர்கள். இதுவும் ஒரு பொதுவான கருத்து.

மூன்றாவது காரணம்: புகைபிடிக்கும் பழக்கம் (Higher rates of tobacco consumption). புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குப் பொதுவாக நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது உண்டு.

கொரோனா வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் மூக்கு வழியாக நுழைந்து மூச்சுக் குழாயை முதலில் சேதப் படுத்துகிறது. அடுத்து நுரையீரலைச் சிதைக்கிறது. அதனால் வைரஸ் தொற்று ஏற்பட்டதும் அவர்களின் நுரையீரல் அதிகமாய்ப் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கிறார்கள்.

நான்காவது காரணம்: பெண்களின் ஹார்மோன் (hormone) சுரப்பிகளில் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பது ஒரு காரணம் (more aggressive immune system).

அதனால் கொரோனாவை எதிர்க்கும் ஆற்றல் பெண்களிடம் அதிகமாக உள்ளது. வைரஸ் கிருமிகளை எதிர்த்துப் போராடும் சக்தி பெண்களுக்கு அதிகம். அடடடா… நான் ஏன் பெண்ணாகப் பிறக்கவில்லை என்று ஆண்கள் சிலர் யோசிக்கலாம். டூ லேட்.

ஆனாலும் பெண்களின் ஹார்மோன் (hormone) சுரப்பிகளில் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால் அதுவே சமயங்களில் அவர்களுக்கு ஆபத்தாகவும் முடியலாம். இது பெண்களுக்கு ஒரு பின்னடைவு.

ஆக பெண்களே எச்சரிக்கை. அட்ரா சக்கை நாங்க ஆண்களை மிஞ்சிட்டோம் என்று சொல்லி ரொம்பவும் பெருமை வேண்டாமே.

முடக்கு வாதம் (rheumatoid arthritis); தண்டுவட மரப்பு நோய் (multiple sclerosis}; கேடயச் சுரப்பியைத் தாக்கி அழிப்பது (autoimmune thyroiditis); ஜோக்ரன் சிண்ட்ரோம் (Sjögren’s syndrome); தோல் அழிநோய் (lupus) போன்ற நோய்கள் பெண்களுக்கு அதிகம்.

ஆக பெண்களின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு அவர்களின் ஹார்மோன்களே காரணம். ஆண்களுக்கு இந்தப் பாதிப்பு குறைவு.

பொதுவாகவே உலகம் எங்கும் உள்ள ஆண்கள், பெண்களை விட குறுகிய காலமே உயிர் வாழ்கிறார்கள். அது ஏன் என்று பொதுமக்களிடம் கேட்கப் பட்டது. அதற்குப் பலவாறான பதில்கள்.

ஆண்கள் பெரிய பெரிய ஆபத்துகளை எதிர்நோக்குகிறார்கள். ஆண்கள் குடிக்கிறார்கள். அதிகமாகப் புகைக்கிறார்கள்.

ஆனால் அது ஒரு பெரிய காரணம் அல்ல. புதிய ஆராய்ச்சிகளில் ஓர் உண்மையான காரணத்தைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். குரோமோசோம் தொடர்புடைய காரணங்கள்.

குரோமோசோம் (Chromosome) என்றால் என்ன? மனித உடல் செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லின் மையத்திலும் ஒரு கரு உள்ளது. அந்தக் கருவுக்குள் இருக்கும் மரபணு கட்டமைப்பு தான் குரோமோசோம்கள்.

கண் நிறம்; இரத்த வகை; உடல் அமைப்பு; ஒருவரின் பண்பு; சிந்திக்கும் திறன் போன்றவற்றைத் தீர்மானிக்கும் மகா தன்மைகள் மரபணுக்களிடம் உள்ளன. அந்த மரபணுக்களின் ஒருகூறு தான் குரோமோசோம்கள்.

மனிதரின் செல் 23 ஜோடி குரோமோசோம்களைக் கொண்டு இயங்குகிறது. அதில் ஒரு ஜோடிக்கு எக்ஸ் - ஒய் (X - Y) என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த எக்ஸ் - ஒய் குரோமோசோம்கள் தான் ஒரு நபர் ஆணா பெண்ணா என்று தீர்மானிக்கின்றன. இந்த எக்ஸ் - ஒய் குரோமோசோம்கள் ஆணிடம் மட்டுமே உள்ளன. பெண்களிடம் இல்லை.

ஒரு பெண்ணுக்கு இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள். இரண்டுமே எக்ஸ் எக்ஸ் (XX) குரோமோசோம்கள். அதே சமயத்தில் ஓர் ஆணுக்கு வெவேறான இரு குரோமோசோம்கள் உள்ளன.

ஒரு குரோமோசோம்: பெயர் எக்ஸ் (X). மற்றும் ஒரு குரோமோசோம். அதன் பெயர் ஒய் Y. இரண்டையும் சேர்த்து எக்ஸ் - ஒய் (X - Y) குரோமோசோம்கள் என்று சொல்வார்கள்.

சுருங்கச் சொன்னால் ஆண்களின் மரபு அணுக்களில் ஒரே வகையில் இரு குரோமோசோம்(கள்) உள்ளன (chromosome (XY). பெண்களின் மரபு அணுக்களில் இரு வகையில் இரு குரோமோசோம்(கள்) உள்ளன (chromosomes (XX). சரிங்களா.

ஓர் ஆணும் பெண்ணும் இணைந்த பின்னர் அந்த ஆணின் எக்ஸ் குரோமோசோம் பெண்ணின் கரு முட்டையில் இணைந்தால் பெண் குழந்தை பிறக்கிறது. அதே ஆணின் ஒய் குரோமோசோம் இணைந்தால் ஆண் குழந்தை பிறக்கிறது.

ஆக ஒரு குழந்தை ஆணாகப் பிறப்பதற்கும் அல்லது பெண்ணாகப் பிறப்பதற்கும் ஓர் ஆணின் குரோமோசோம்கள் தான் முடிவு செய்கின்றன. அது அப்படியே இருக்கட்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள மரபணுக்களை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள்.

அந்த ஆய்வின் மூலமாக ஆண்களைவிட பெண்கள் 15-இல் இருந்து 25 ஆண்டுகளாகக் கூடுதலாக வாழ முடியும் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

பெண்களின் ஆயுட்காலம் கூடுதலாக இருப்பதற்கு மேலும் ஒரு காரணம். பெரும்பாலும் பெண்கள் வீட்டிலேயே இருக்கிறார்கள். ஆதிகாலத்தில் இருந்து இந்தக் காலம் வரை வீட்டிற்குள்ளேயே வாழ்க்கையை ஓட்டி விடுகிறார்கள்.

அண்மையில் ஒரு ஐம்பது ஆண்டு காலமாகத் தானே பெண்கள் வெளியே வந்து ஆண்களுக்கு நிகராகப் பெரிய பெரிய பதவிகளை வகிக்கிறார்கள்.

முன்பு காலத்தில் பெண்களை ஆண்கள் அடக்கி வைத்து இருந்தார்கள். ஆணாதிக்கம் என்று சொல்வார்களே அதுதான். பெண்களைப் பொறுத்த வரையில் அவர்கள் தங்களின் உடலை எப்போதும் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்கிறார்கள். பெண்களின் காலா காலத்து இயல்பு.

ஆனால் ஆண்கள் அப்படி இல்லையே. அதிகமாய் வெளியே போவது வழக்கம். அதனால் உடல் சுத்தம் கொஞ்சம் குறைவு. பெண்களுக்கு வீடுதான் உலகம். ஆண்களுக்கு உலகமே வீடு.

இந்த மாதிரியான காரணங்களினால் தான் கொரோனா உயிரிழப்பு விகிதத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள். ஆக என்னதான் வேறுபாடுகள் இருந்தாலும், ஆண்களின் உயிரிழப்புகள் என்பது பெண்களையும் மறைமுகமாகப் பாதிக்கும்.

ஏன் என்றால் பெண் இனம்; ஆண் இனத்தைச் சார்ந்து இருக்கிறது. ஆண் இனம்; பெண் இனத்தைச் சார்ந்து இருக்கிறது. ஆண் இனத்திற்கு இழப்பு என்றால் அது பெண் இனத்தையும் பாதிக்கும். நீ இல்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் நான் இல்லை. அப்போது 100%. இப்போது ஒரு கேள்விக்குறி.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.07.2021
21 July 2021

சிறகு ஒடிந்த சின்னத் தாமரை சுபாசிணி ஜெயரத்தினம்

பட்ட காலிலே படும். சுட்ட கையிலே சுடும். அந்த மாதிரி தான் பல நிகழ்ச்சிகள்  நடந்து உள்ளன. 2014 மார்ச் மாதம் 8-ஆம் தேதி, மலேசியாவின் எம்.எச். 370 விமானம் மாயமாய் மறைந்து போனது. அந்தச் சோகம் மறைவதற்குள் மற்றும் ஒரு சோகம்.

நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூர் நோக்கி பயணித்த மலேசியாவின் எம்.எச்.17 விமானம், 2014 ஜுலை 17-ஆம் தேதி, ரஷ்ய - உக்ரைன் எல்லைக்கு அருகில் சுட்டு வீழ்த்தப் பட்டது. நேற்றைய தினத்துடன் ஏழு ஆண்டுகள்.


விமானத்தில் பயணித்த 298 பேரும் பலியாகி விட்டனர். 283 பேர் பயணிகள். 15 பேர் விமானச் சிப்பந்திகள். 132 நாட்களில் மறுபடியும் ஒரு சோக நிகழ்ச்சி. அதுவே மலேசிய வரலாற்றில் மற்றும் ஒரு சோக வடு.

சுட்டு வீழ்த்தப்பட்ட எம்.எச்.17 மலேசிய விமானத்தில், மலேசியத் தமிழ் நடிகை சுபாசிணி ஜெயரத்தினம் (Shubashini Jeyaratnam) வயது 38, என்பவரும் தன் குடும்பத்துடன் பலியானார். அவரின் கணவரும், இரண்டு வயது மகள் கயிலாவும் அந்த விபத்தில் பலியானார்கள்.

சுபா ஜெயா என்று செல்லமாகப் பலராலும் அழைக்கப் பட்டார். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். ஒரு தமிழ்ப்பெண். இலங்கைத் தமிழர் வம்சாவழியைச் சேர்ந்தவர். ஜெயா என்றும் சுபா என்றும் நட்பு வட்டாரத்தில் அன்புடன் அழைக்கப் பட்டவர். கலைத் துறையில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்.


அவர் இறப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர், 2014 ஜூலை 15 ஆம் தேதி, தன் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்.

சுபாசிணி ஜெயரத்தினம், நாடகத் துறை; நடனத் துறை; சினிமாத் துறை; வானொலி தொலைக்காட்சி ஊடகங்கள் என்று பல துறைகளில் திறமையுடன் திகழ்ந்தவர். ஆங்கிலம், மலேசிய மொழி தமிழ் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக் கூடியவர். மூன்று மொழிகளிலும் தன் நடிப்புத் திறமையை வெளிக்காட்டியவர்.

சுபா ஜெயா ஆரம்பத்தில் நியூ ஸ்டிரெயிட் டைம்ஸ் நாளிதழில் எழுத்தராகப் பணியாற்றினார். பின்னர் அந்தச் செய்தித் தாளின் விளம்பரப் பிரிவுக்கு மாறினார். அதன் பின்னர் தொலைக்காட்சித் துறைக்குப் புலம் பெய்ர்ந்தார்.


2010-ஆம் ஆண்டு சுபா ஜெயாவும், அவரது தந்தை ஜெயரத்னமும் இணைந்து ’மரி மெனாரி’ என்ற நேரடி ஒளி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதன் பிறகு தான் சுபா ஜெயா நிறைய தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

2009-ஆம் ஆண்டில் 15 மலேசியத் திட்டத்தின் கீழ் பல குறும் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

அவர் தன் 31 வது வயதில் முழுநேர நடிப்புத் தொழிலுக்குள் வந்தார். அப்படியே ‘ரிலேசன்சிப் ஸ்டேட்டஸ்’ (Relationship Status (2012); தோக்காக் (Tokak (2013) எனும் மலேசிய சினிமாப் படங்களில் நடித்தார்.

மேலும் அவர் மலேசியத் தொலைக்காட்சியில் வெளி வந்த, ‘சுகமான சுமைகள்’, காடிஸ் 3 (Gadis 3) ஆகிய தொடர்களில் முக்கிய வேடங்களில் தோன்றி இருக்கிறார். 


போர்பிளே (Fourplay); சார்லிஸ் ஆன்டி (Charley's Auntie); ஹங்க்ரி பார் ஹோப் (Hungry for Hope); ஸ்பானர் ஜெயா (Spanar Jaya) ஆகிய நாடகங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்.

’சோஷியல் நெட்வொர்க்கிங்’ என்ற மேடை நாடகம். அதில் இணையம் மீது பைத்தியம் பிடித்துத் திரியும் பெண் வேடத்திலும் சிறப்பாக நடித்து பெயர் வாங்கியவர் சுபா ஜெயா. இப்படித்தான் அவரின் திரைப்பட வாழ்க்கை உச்சம் பார்த்து வந்தது. விறு விறு வென்று வளர்ந்து கொண்டு வந்தார்.

மலேசிய ரசிகர்கள் அன்றாடம் உச்சரிக்கும் ஒரு சொல்லாகவும் மாறி வந்தார். அதாவது புகழின் உச்சிக்கு ஏணி வைத்து விட்டார் என்றும் சொல்லலாம். 


ஒரு கட்டத்தில் மலேசிய நிறுவனம் வியட்நாம் நாட்டில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தயாரித்துக் கொண்டு இருந்தது. சுசுபா ஜெயாவும் அங்கே போய் இருந்தார்.

பாவ்ல் கோஸ் (Paul Goes) எனும் நெதர்லாந்து நாட்டு வாலிபரை அங்கு சந்தித்தார். அந்தச் சந்திப்பு காதலாக மலர்ந்தது. பின்னர் 2010-ஆம் ஆண்டு மணம் புரிந்து கொண்டனர். 2012-ஆம் ஆண்டு கையிலா மாயா ஜெய் கோஸ் என்கிற ஒரு மகள் பிறந்தாள்.

மகள் பிறந்து 21 மாதங்கள். அவரை நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாமில் உள்ள தன் பெற்றோரிடம் எடுத்துச் சென்றுக் காட்டுவதற்கு ஜெயாவின் கணவர் விரும்பினார். தன் மனைவி சுபா ஜெயாவிடம் சொன்னார். அவரும் சம்மதித்தார்.


அதைத் தொடர்ந்து தங்கள் மகளுடன் நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாம் நகருக்குப் பயணித்தனர். மாமியார் வீட்டில் மகளோடு மகிழ்ச்சி வெள்ளம்.

பின்னர் கணவர், குழந்தையுடன் கோலாலம்பூர் திரும்பிய போதுதான் விமான விபத்து. மூவரும் ஒரே நேரத்தில் பலியாகி விட்டனர்.

எம்.எச். 17 விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதின் பின்னணியையும் பார்க்க வேண்டும். கிழக்கு உக்ரைன் பகுதியில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினருக்கும், உக்ரைன் அரசுப் படையினருக்கும் பல ஆண்டுகளாகச் சண்டை நடைபெற்று வந்தது.

உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான விமானங்கள், ஹெலிகாப்டர்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினர் சுட்டு வீழ்த்தி வந்தனர். தவறான நேரத்தில் தவறான இடத்தில் எம்.எச். 17 விமானம் சிக்கிக் கொண்டது.


எம்.எச். 17 விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது, சுட்டு வீழ்த்தப் பட்டது. தரையில் இருந்து வான் நோக்கிச் செலுத்தப்படும் ஏவுகணையின் மூலமாக அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, எம்.எச். 370 விமானம் பசிபிக் பெருங்கடலில் காணாமல் போனது. அந்த விமானத்திற்கு என்னதான் ஆனது என்று இதுவரை தெரியவில்லை. இந்த் நிலையில், எம்.எச். 17 விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்த சம்பவம் மலேசிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கிழக்கு உக்ரைனில் தோனேஸ்க் மாவட்டம் ரஷ்ய எல்லைக்கு அருகில் இருக்கிறது. அந்த மாவட்டத்தின் தலைநகர் ஷாக்டார்ஸ்க். அந்த நகரின் மீது விமானம் பறந்து கொண்டு இருந்த போது சுட்டு வீழ்த்தப் பட்டது. 


விமானம் நடுவானில் வெடித்துச் சிதறி தீப்பிழம்பாக எரிந்து கீழே விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள்.

ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாம்பூர் விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்றால், எல்லா விமானங்களும் உக்ரைன் நாட்டைக் கடந்துதான் வர வேண்டும்.  அதுவும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினர் தீவிரமாக இயங்கி வரும் தோனேஸ்க் மாவட்டத்தைக் கண்டிப்பாகக் கடக்க வேண்டும்.

அந்த இடத்தில் தான் இப்போது ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினருக்கும், உக்ரைன் அரசுப் படையினருக்கும் தீவிரமாகச் சண்டைகள் நடந்து வந்தன. அந்தப் பகுதியைக் கடக்கும் போதுதான் விமான விபத்து நடந்தது. 


எம்.எச். 17 விமானம் சுட்டு வீழ்த்தப் படும் போது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எஸ்.கியூ. 351 விமானமும், ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏ.ஐ. 113 விமானமும் 25 கி.மீ. தூரத்திற்கு அப்பால் பயணம் செய்து இருக்கின்றன. நல்லவேளையாக அந்த விமானங்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. சரி.

சுபாசிணி மரணம் அடைவதற்கு இரு நாட்களுக்கு முன்னர் தான், தன் 38-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி இருக்கிறார். பிறந்த நாளைக் கொண்டாடிய இரண்டு நாட்களில் மரண தேவன் தூது சொல்ல வருவான் என்று அவர் கொஞ்சமும்  நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார்.

சுபாசிணி ஜெயரத்தினம் நடித்த பல குறும் படங்களை இயக்கியவர் கைரில் பஹர். இவர் மலேசியக் கதாசிரியர்; இயக்குநர். 


அவர் சொல்கிறார்: ’சுபா ஜெயா புகழுக்காக நடிக்க விரும்பாதவர். நடிப்பின் மீது அதிக மோகம் கொண்டவர். தனது நடிப்புத் திறமையைச் சரியாக பயன்படுத்திக் கொண்டவர். நாடகங்களில் தான் முதலில் நடித்து திரையுலகுக்கு வந்தார்.

அவர் ஒரு போற்றத்தக்க பெண்மணி. தன் எதிர்காலத்தைப் பற்றி நிறைய திட்டங்கள் வைத்து இருந்தார். அவர் இறந்து விட்டார் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை’ என்றார்.

சுபா ஜெயாவை விரும்பாதவர்களே கிடையாது. அனைவரின் பாசத்தையும் பெற்றவர். தன் வாழ்க்கையில் நிறைய திட்டங்களை வைத்து இருந்தார். நிறைய கனவுகள். இப்போது அவர் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை என்றார்.


திருமணத்திற்குப் பின்னர் தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம்; குழந்தை வளர்ப்பு; ஆகியவை தொடர்பான விழிப்புணர்வுப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இவற்றைப் பற்றி பத்திரிகைகள் பெரிய அளவில் செய்திகளைப் பிரசுரித்தன. அதன் பின்னர் மலேசிய அளவிலும் உலக அளவிலும் சுபா ஜெயா பிரபலம் அடைந்தார்.

உலகப் புகழ்பெற்ற நாளிதழ் தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் (The Wall Street Journal). அந்த நாளிதழும் சுபா ஜெயாவைப் புகழாரம் செய்து "ஷூபா ஜே" என்று அழைத்து இருக்கிறது.

மற்றும் ஒரு பிரபலமான தாளிகை பிரஸ்டீஜ் (Prestige Magazine). அந்தத் தாளிகை, 40 வயதிற்கும் உட்பட்ட மலேசியாவின் முதல் 40 நபர்களில் ஒருவராக சுபா ஜெயாவைத் தேர்ந்து எடுத்து சிறப்பு செய்து உள்ளது (Malaysia's top 40 individuals under the age of 40).

பத்திரிகையாளர் கரிகாலன் கீழ்கண்டவாறு வாட்ஸ் அப் தளத்தில் பதிவு செய்து உள்ளார். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


சுபாவின் மறைவு குறித்து அவரின் நண்பர் சிவா சொல்கிறார்: அகாலமாக மறைந்து விட்டீர்கள் சுபா. உங்கள் திருமணத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தீர்கள். நிறைவேற்றுவதற்கு நிறைய கனவுகளை வைத்து இருந்தீர்கள்.

அற்புதமான புன்னகை சிந்தும் அழகு மகளை பெற்று இருந்தீர்கள். இப்போதோ நீங்கள் மூவரும் ஒரே நேரத்தில் போய் விட்டீர்கள். உங்களை இழந்து தவிக்கிறோம்’’ என்று உருக்கமாக கூறி இருக்கிறார்..

மற்றும் ஒரு நடிகரும், இயக்குநருமான பாகி ஜெய்னல் என்பவர், ‘‘சுபா ஜெயா, பாவ்ல், பேபி காயிலா... நீங்கள் மூவருமே மேகங்களுடன் மறைந்து விட்டீர்கள்’’ என்று சொல்கிறார்.  


மறைந்தும் மறையாத ஓர் அழகிய மகள் சுபாசிணி ஜெயரத்தினம். மலேசிய மண்ணில் சுடர்விட்டுப் பிரகாசிக்க வேண்டிய ஒரு கலாரத்தினம். சின்ன வயதிலேயே போய்ச் சேர்ந்து விட்டார்.

அவர் மறைந்து ஏழு ஆண்டுகள். ஆனாலும் அவரின் நினைவுகள் என்றைக்கும் இந்த மண்ணிலே வாழ்ந்து கொண்டு தான் இருக்கும். ஓர் அழகிய மகளை மீண்டும் நினைத்துப் பார்க்கிறோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.07.2021


சான்றுகள்:

1. Lewis, Hilary. "Malaysia Airlines Crash: Actress, Ex-BBC Journalist Among Victims". The Hollywood Reporter.

2.https://www.thestar.com.my/Lifestyle/Family/Features/2014/03/21/Home-birth-The-experiences-of-three-women/

3. https://en.wikipedia.org/wiki/Shuba_Jay

4. Bello, Marisol; Ramakrishnan, Mahi (19 July 2014). "Flight MH17 victims symbolize tragedy". USA Today.

5. A leader, inspiration, friend – tributes pour in". Malaysiakini. 20 July 2014.


 

20 July 2021

வட வியட்நாம் 11-ஆம் நூற்றாண்டு சமஸ்கிருதம் - தமிழ் வரிவடிவ எழுத்துகள்

வட வியட்நாம் ஹனோய் நகரில் ஓர் அரண்மனை இருக்கிறது. மறு சீரமைப்பு செய்யப்பட்ட அரண்மனை. அதன் பெயர் தாங் லோங் (Citadel of Thang Long) அரண்மனை. வட வியட்நாமில் சம்பா அரசை ஆட்சி செய்த பல்லவ அரசர்கள் கட்டிய அரண்மனை. 

Brick - Hanoi, Vong La temple, eleventh cen.jpg
(Source: Art of Champa - Journal of Southeast Asian study, no 2: pp. 75-80)

இந்த அரண்மனையை ஜெயா சம்பு வர்மன் (Jaya Sambhuvarman) எனும் சம்பா அரசர் கட்டத் தொடங்கினார். இவருடைய ஆட்சிக் காலம் கி.பி. 572 - கி.பி. 629. இவர் சம்பா சிம்மபுர (Simhapura) பல்லவ வம்சாவழியைச் சேர்ந்தவர். அவருக்குப் பின்னர் வந்த பல்லவ அரசர்கள் பலர் அரண்மனையை விரிவுபடுத்தி உள்ளனர். அந்த அரசர்களின் விவரங்கள்:

1. காந்தர்பதர்ம வர்மன் (Kandarpadharmavarman - 629)

2. பாசதர்ம வர்மன் (Bhasadharmavarman - 645)

3. காபாதரேச வர்மன் (Bhadresvaravarman - 663)

4. விக்கிரதாண்டவ வர்மன் I (Vikrantavarman I - (663 - 686)

5. விக்கிரதாண்டவ வர்மன் II (Vikrantavarman II - (686-731)

இந்தக் காலக் கட்டத்தில் சீனா நாட்டு சூய் வம்சாவழியினர் (Sui dynasty) படை எடுத்து வந்து தாங் லோங் அரண்மனையை இடித்து விட்டனர். எனினும் 11-ஆம் நூற்றாண்டில் அந்த அரண்மனை மீண்டும் கட்டப்பட்டது. சம்பா அரசை அப்போது ஆட்சி செய்த இந்திராபுர (Indrapura) பல்லவ வம்சாவழியினர் கட்டினார்கள்.

அந்தக் காலக் கட்டத்தில் சமஸ்கிருதம் - தமிழ் வடிவம் கலந்த எழுத்துகள் கொண்ட செங்கற்கள் அந்த அரண்மனையில் பதிக்கப்பட்டன. (Red brick fragment from Thang Long citadel, Hanoi). அவற்றில் ஒரு செங்கல்லை 1998-ஆம் ஆண்டில் கண்டு எடுத்தார்கள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
20.07.2021

Notes:

1. The Thang Long Imperial Citadel was built in the 11th century by the Indrapura (Ly Viet) Dynasty, It was built on the remains of a fortress dating from the 7th century, on drained land reclaimed from the Red River Delta in Hanoi. It was the centre of regional political power for almost thirteen centuries without interruption.

2. Jaya Sambhuvarman of Champa (Chinese: 商菩跋摩), personal name Phạm Phạn Chí (chữ Hán: 范梵志), was the king of Lâm Ấp from 572 to 629 CE.

3. It is acknowledged that the historical record is not equally rich for each of the regions in every historical period. For example, in the 10th century AD, the record is richest for Indrapura; in the 12th century AD, it is richest for Vijaya; following the 15th century AD, it is richest for Panduranga.

சான்றுகள்:

1. Journal of Southeast Asian Studies , Volume 45 , Issue 3 , October 2014 , pp. 315 - 337

2. Art of Champa - Journal of Southeast Asian study, no 2: pp. 75-80.

3.https://en.m.wikipedia.org/wiki/File:Brick_-_Hanoi,_Vong_La_temple,_eleventh_cen.jpg