கஸ்தூரி தேசிகன், பந்தாய் ரெமிஸ், பேராக்
கே: சார், நான் BLOG எனும் வலைப்பதிவு செய்யலாம் என்று ஆசைப்
படுகிறேன். ஒரு புளோக் உருவாக்குவது எப்படி? அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.
உங்களுடைய கேள்வி பதில்களை படித்து விட்டு, அதை வெட்டி வைத்துக் கொள்கிறேன். ஒரு
புத்தகத்தையே உருவாக்கி இருக்கிறேன். நீங்கள் எப்போது உங்கள் புத்தகத்தை வெளியிடப்
போகிறீர்கள்.
ப: மிக்க மகிழ்ச்சி. ‘கணினியும்
நீங்களும்’ நூலை வெளியிடுவதற்கு கொஞ்சம் பிரச்னை. என்ன, எல்லாம் பண
நெருக்கடிதான். யாராவது அரசியல் அல்லாத ஆதரவாளர் கிடைப்பாரா என்று பார்க்கிறேன். பார்ப்போம்.
ஒரு நல்ல செய்தி வரும். சரி. Web log என்பதன் சுருக்கமே
Blog ஆகும். Web எனும் சொல்லின் கடைசி எழுத்தையும், log எனும் சொல்லின்
முதல் எழுத்தையும் சேர்த்துக் கொண்டார்கள்.
தமிழில் வலைப்பூ அல்லது வலைப்பதிவு என்று அழைக்கலாம். இந்த வலைப்பதிவின் மூலமாக உங்களுடைய
கருத்துக்களை, அனுபவங்களை உலக
மக்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அல்லது நீங்கள் ரசித்ததை மற்றவர்களுடன்
பகிர்ந்து கொள்ளலாம். இணையத்தின் மூலமாகப் பணம் சம்பாதிப்பதற்காகவும் வலைப்பதிவைத்
தொடங்கலாம்.
பணம் சம்பாதிப்பதற்காக, வலைப்பதிவைத்
தொடங்க நினைத்தால், அந்த வலைப்பதிவை ஆங்கிலத்தில் தொடங்குங்கள். இலவசமாக வலைப்பதிவு
தொடங்குவதற்கு பல இணையத் தளங்கள் உள்ளன. அவற்றில் பிரபலமானவை புளாகர் (Blogger)
மற்றும் வோர்ட்பிரஸ் (Word Press) எனும் இணையத்
தளங்கள். Blogger தளம் கூகிள்
நிறுவனத்திற்குச் சொந்தமான தளம்.
உங்களுக்கு ஜிமெயில் (Gmail) , யூட்யூப் (You Tube) போன்ற கூகிள்
கணக்கு இருந்தால், அதன் மூலம் Blogger தளத்தைப் பயன்படுத்தலாம். அல்லது புதிதாக ஒரு கூகிள் கணக்கைத் தொடங்கினாலே போதும்.
நீங்கள் தொடங்கும் வலைப்பூவின் முகவரியில்,
நீங்கள் கொடுக்கும் பெயருடன் .blogspot எனும் இணைப்பும் சேர்ந்து வரும்.
அதற்கு Subdomain என்று பெயர். எடுத்துக் காட்டாக, நீங்கள் Blogname எனும் இடத்தில் kasturi என்று பெயர்
கொடுத்து இருந்தால், உங்கள் முகவரி kasturi.blogspot.com என்று வரும். உங்கள் புளாகிற்குப் பெயர் வைக்க, பல பெயர்களை முடிவு செய்து
வையுங்கள்.
ஏனெனில், நீங்கள் நினைக்கும் பெயரை, ஏற்கனவே யாராவது ஒருவர் வைத்து இருக்கக் கூடும். அடுத்து, நீங்கள் எதைப் பற்றி
எழுதப் போகிறீர்களோ, அது தொடர்பான சொற்களாகப் பெயர் இருந்தால் நல்லது. அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது:
1. முதலில் www.blogger.com என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.
2. உங்களுக்கு ஜிமெயில் கணக்கு அல்லது
வேறொரு மின்னஞ்சல் கணக்கு இருந்தால், அதன் மூலம் உள்ளே நுழையுங்கள்.
இல்லை என்றால் புதிதாக ஒரு ஜிமெயில் கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒரு ஜிமெயில் கணக்கை ஐந்து
நிமிடங்களில் உருவாக்கிக் கொள்ளலாம்.
3. அடுத்து வரும் Display
Name என்ற இடத்தில்,
உங்கள் பெயரை கொடுத்து, Email
Notifications என்ற இடத்தில் (√) ’செக்’ செய்து விடுங்கள். Accept
of Terms என்ற இடத்தில்
(கண்டிப்பாக) ’செக்’ செய்ய வேண்டும். அடுத்து Continue என்பதைச்
சொடுக்குச் செய்யுங்கள்.
4. Title என்ற இடத்தில் வலைப்பதிவின் பெயரைக்
கொடுக்கவும். தமிழ் புளாக் என்றால் தமிழில் தட்டச்சு செய்யுங்கள். தமிழ் மொழியுடன் 76
மொழிகளில் பதிவு செய்யலாம்.
5. Address என்ற இடத்தில் உங்கள் புளாகிற்கான
முகவரியைக் கொடுங்கள். அதாவது kasturi.blogspot.com
போன்ற முகவரி. நீங்கள் கொடுக்கும் முகவரி ஏற்கனவே பதிவு
செய்யப்பட்டு இருந்தால் ஏற்றுக் கொள்ளாது. வேறு ஒன்றைக் கொடுக்கவும். இங்கே முக்கியமான
ஒரு விஷயம். முகவரியில் என்ன பெயரைக் கொடுக்கிறீர்களோ, அதே பெயரையே புளாக் பெயராகக் கொடுங்கள். இரண்டும் வேறு வேறாக இருந்தால்,
வாசகர்கள்தான் குழப்பம் அடைவார்கள்.
6. Template என்ற இடத்தில், உங்களுக்கு பிடித்தமான ஒரு தோற்றத்தைத் தேர்வு
செய்யுங்கள். அங்கே நிறையத் தோற்றப் படங்கள் இருக்கும். அதை நீங்கள் எப்போது
வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். பிறகு Create Blog என்பதை சொடுக்குச் செய்யுங்கள்.
அவ்வளவு
தான்! உங்களுக்கான புதிய புளாக் உருவாகி விட்டது. அதனைப் பார்க்க View
Blog என்பதைச் சொடுக்குச் செய்யுங்கள்.
7. புதிதாக உள்ளே நுழையும் போது சில
குறிப்புகளைக் காட்டும். அவற்றையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
8. பிறகு வருவது Dashboard
எனும் பக்கம். புளாகரில் நாம் அனைத்து வேலைகளையும் பராமரிக்கும்
இடம்.
9. புதிய புளாக் ஒன்றை
உருவாக்க New Blog என்னும் பொத்தானைச் சொடுக்கு செய்யுங்கள்.
10. அதில் Start Blogging என்பதைச் சொடுக்குச் செய்தால், புதிய பதிவு எழுதுவதற்கான
பக்கம் வரும். அந்தப் பக்கத்தில் மேலே ஒரு சிறிய பெட்டி
இருக்கும். அதில் பதிவிற்கான ஒரு தலைப்பைக் கொடுக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, ‘அலி பாபாவின்
குகையிலே ஓர் அல்லி ராணி’. தமிழில் அப்படியே தட்டச்சு செய்யலாம்.
11. அதற்கும் கீழே ஒரு பெரிய பெட்டி இருக்கும். அதில், நீங்கள் எழுத நினைப்பதை
எல்லாம் எழுதித் தள்ளலாம். பத்திரம். அரச நிந்தனை, அரசு நிந்தனை, சமய
நிந்தனை, மொழி நிந்தனை போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். அடுத்து தலைப்புக்கு
பக்கத்தில் நான்கு பட்டைகள் இருக்கும்.
12. பதிவை எழுதி முடித்தப் பின், அதனைப் பிரசுரிப்பதற்கு Publish எனும் பட்டையைச் சொடுக்கவும். அப்புறம், உங்களுடைய வலைப் பதிவிற்குச் சென்று, நீங்கள் எழுதியதைப் பார்க்கலாம். அப்புறம் என்ன. நீங்களும் ஒரு வலைப்பதிவாளர். ஏதாவது சந்தேகம் இருந்தால் எனக்கு அழையுங்கள். உதவி செய்கிறேன்.
[குறிப்பு: Google தேடல்
இயந்திரத்தில்
ksmuthukrishnan என்று
தட்டச்சு செய்யுங்கள்.
என்னுடைய வலைப்பதிவுகள்
இருக்கும். ஏதாவது
ஒரு பதிவைச் சொடுக்கினால், அங்கே என்
மின்னஞ்சல் இருக்கும். உங்கள் கேள்வியை
எழுதி அனுப்புங்கள். இல்லை என்றால்
012-9767462 எனும் கைப்பேசி எண்களுக்கு குறும் செய்தி அனுப்புங்கள்.]