மலேசியா 1MBD மோசடி - 2 (வண்ணத்துப்பூச்சி விளைவு) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியா 1MBD மோசடி - 2 (வண்ணத்துப்பூச்சி விளைவு) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 நவம்பர் 2018

மலேசியா 1MBD மோசடி - 2 (வண்ணத்துப்பூச்சி விளைவு)

தமிழ்மலர் - 17.11.2018 - சனிக்கிழமை

வண்ணத்துப்பூச்சி விளைவு பற்றி பலர் கேள்விப்பட்டு இருக்கலாம். ஆங்கிலத்தில் பட்டர்பிளை இபெக்ட் (Butterfly effect) என்று சொல்வார்கள். பிரேசில் நாட்டில் ஒரு வண்ணத்துப் பூச்சி பறந்து கொண்டு இருக்கிறது. அதன் சிறகுகள் படபடக்கின்றன. அதனால் அங்கே ஒரு சலசலப்பு. 




அந்தச் சலசலப்பினால் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அமெரிக்காவில் இருக்கும் சின்ன ஒரு கிராமத்தில் சின்ன ஒரு புயல்காற்று உண்டாகிறது. நம்புவீர்களா. நம்ப முடியவில்லை தானே. ஆனால் அந்த வண்ணத்துப் பூச்சிக்கும் அந்தப் புயல்காற்றுக்கும் தொடர்பு உண்டு என்று நிரூபித்துக் காட்டலாம் என்கிறார்கள்.

ஒழுங்கின்மைக் கோட்பாட்டின் (chaos theory) தந்தை என்று அழைக்கப் படுபவர் எட்வர்ட் லோரன்ஸ். இவர் 1963-ஆம் ஆண்டு கணித முறைப்படி வண்ணத்துப் பூச்சி விளைவு என்பது சரியாக அமையும் என்று உறுதி படுத்தினார். கணிதச் சமன்பாடுகளையும் வானிலைக் கோட்பாடுகளையும் இழுத்து இணைத்துப் போட்டு உலக அறிவியலாளர்களை ஒரு வழி பண்ணி விட்டார்.

அதனாலேயே அந்தத் தத்துவத்திற்கு வண்ணத்துப்பூச்சி விளைவு என்று பெயர் வந்தது. ஒரு சின்ன தொடக்க நிலை விளைவு; நீண்ட கால பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று சொன்னார். அதையே சங்கிலித் தொடர் விளைவுகள் என்றும் இப்போது சொல்லத் தொடங்கி விட்டார்கள்.




அதே போல தான் டோமினோ விளைவு (Domino effect). பல சிறிய டோமினோ கட்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அடுக்கி வையுங்கள். அவற்றில் முதலாவதாக நிற்கும் கட்டையைத் தட்டி விடுங்கள். அதன் பின்னர் பாருங்கள். அடுத்தடுத்து இருக்கும் எல்லாக் கட்டைகளும் அப்படியே அடுக்கு அடுக்காய் விழும். அதுதான் டோமினோ விளைவு.

அதாவது பல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றால் அதற்கு மூலகாரணமாக முதலில் ஒரு நிகழ்ச்சி கண்டிப்பாக நடந்து இருக்கும். அந்த முதல் நிகழ்ச்சியின் தாக்கத்தினால் தான் மற்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும். நடைபெறலாம்.



ஆனால் பலர் அதை மறந்து விடுகிறார்கள். கடைசியாக நடந்த நிகழ்ச்சியை மட்டுமே பெரிதாகப் பார்க்கிறார்கள். அதுதான் வண்ணத்துப்பூச்சி விளைவு. இந்த உலகில் சிலரால் அறியப் பட்ட விதி அல்லது விளைவு. பலரால் அறிய முடியாத அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத விளைவு.

ஒரு நிகழ்ச்சியின் தாக்கம் என்பது அதன் தொடக்க காலத்தின் சின்ன ஒரு நிகழ்ச்சியைச் சார்ந்து உள்ளது என்பதே வண்ணத்துப்பூச்சி விளைவின் சுருக்கம்.

வண்ணத்துப்பூச்சி விளைவு போன்றது தான் டோமினோ விளைவு. அதே அந்த விளைவு தான் 1எம்.டி.பி. நிறுவனத்தில் அடுத்தடுத்து அடுக்கடுக்காய் நடந்து உள்ளது. அந்த நிறுவனத்தின் மோசடிகளில் முதலில் வந்து நிற்பது கோல்ட்மேன் சாஸ் எனும் முதலீட்டு வங்கியின் விளைவு.

கோல்ட்மேன் சாஸ் வங்கி 2015-ஆம் ஆண்டில், மலேசிய அரசாங்கத்தின் உத்தரவாதத்தின் பேரில் 1எம்.டி.பி. நிறுவனத்திற்கு 2706 கோடி ரிங்கிட் பணத்தைக் கடனாகத் திரட்டிக் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் அந்த கோல்ட்மேன் சாஸ் வங்கிக்கு சேவைக் கட்டணமாக 201 கோடி ரிங்கிட் தரகுப் பணம் (கமிசன்) கிடைத்து இருக்கிறது. 




1எம்.டி.பி. நிறுவனத்திற்கு கிடைத்த பெரும்பாலான பணத் தொகை ஜோலோ என்பவரின் (Low Taek Jho) வங்கிக் கணக்கில் சேர்க்கப் பட்டது. அந்தப் பணத்தைக் கொண்டு ஜோலோ ஆடாத ஆட்டம் ஆடினார். பிளேபாய் கணக்கில் கோடிக் கணக்கில் வாரி வாரி இறைத்து இருக்கிறார். அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமாக இருந்து இருந்தால் அப்படி செய்து இருப்பாரா. அத்தனையும் மலேசிய மக்களின் பணம். சும்மா வந்த காசு தானே. அதான் அந்த மாதிரி ஆட்டம் போட்டு இருக்கிறார். சரி.

2015 ஆகஸ்டு 3-ஆம் தேதி நஜீப்பின் வங்கிக் கணக்கில் 260 கோடி ரிங்கிட் போடப் பட்டதாக கண்டுபிடிக்கப் பட்டது. நஜீப் மறுத்து வருகிறார்.

1எம்.டி.பி. நிறுவனக் கடனுக்கு ஏற்பாடுகள் செய்த கோல்ட்மேன் சாஸ் வங்கி அதிகாரிகள் அமெரிக்க அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்தனர். சட்ட விரோதமாகப் பணச்சலவை செய்த குற்றத்திற்காக அவர்கள் மீது அமெரிக்க அரசாங்கம் குற்றம் சாட்டியது.




இதில் திம் லெய்சனர் எனும் கோல்ட்மேன் சாஸ் வங்கி அதிகாரி குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவருக்கு கிடைத்த 18 கோடி கமிசன் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் ஒப்புக் கொண்டார். இப்போது அமெரிக்காவில் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

ரோஜர் நிங் எனும் மற்றோர் கோல்ட்மேன் சாஸ் வங்கி அதிகாரியை மலேசியப் போலீசார் கைது செய்து விட்டனர். இவர் அமெரிக்காவிற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நாடு கடத்தப் படுகிறார்.

டோமினோ விளைவு பற்றி சொல்லி இருந்தேன். அந்த டோமினோ விளைவினால் பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் தான் முன்னாள் பிரதமர் நஜீப். 1எம்.டி.பி. குளறுபடிகளில் சரிந்து விழுந்த டோமினோ கட்டைகளில் ஒருவராகத் தான் அவரைப் பார்க்க முடிகின்றது.

மலேசியப் பிரதமர்களில் இந்தியர்களுக்கு நிறையவே நிதியுதவிகள் செய்த பிரதமர். உண்மை. தமிழ்ப் பள்ளிகளுக்கு நிறையவே உதவிகள் செய்தவர். அந்த உதவிகளை மலேசிய இந்தியர்கள் மறக்க மாட்டார்கள். 




அவர் வழங்கிய பணத்தில் பாதி பணத்தைப் பாதி வழியிலேயே பிடுங்கித் தின்னவர்கள் தான் ஏராளம். மீதிப் பணத்தில் மிச்சமாவது கிடைத்ததே. மகிழ்ச்சி அடைவோம். அவர் செய்த உதவிகளை மறக்க மாட்டோம். இருந்தாலும் அவருடைய இன்றைய நிலையில் அவருக்காக வருந்துவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. சரி.

அந்த டோமினோ கட்டைகளில் முதல் டோமினோ கட்டை யார் தெரியுங்களா. சொன்னால் நம்ப மாட்டீர்கள். அவர் தான் ஜோலோ. உலகிலேயே இப்போதைக்கு மகா மகா பெரிய கில்லாடி. அனைத்துலகப் போலீசாருக்கே டிமிக்கி கொடுத்து, கண்ணாமூச்சி காட்டும் அனைத்துலக மன்மதக் குஞ்சு.

ஜோலோ தான் திரங்கானு மேம்பாட்டுக் கழகத்தை 1எம்.டி.பி. நிறுவனமாக மாற்றுவதற்குப் பாதை போட்டுக் காட்டியவர். நஜீப்புடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு காய்களை நகர்த்தியவர். 




இவர் இங்கிலாந்தில் படிக்கும் போது இவருக்கும் ரிஷா அசீஸுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. ரிஷா அஜீஸ் வேறு யாரும் அல்ல. ரோஸ்மாவின் முதல் கணவர் அப்துல் அஜீஸ் நோங் சிக் என்பவருக்குப் பிறந்த மூத்த மகன். நஜீப்பிற்கு மாற்றாள் மகன்.

இங்கிலாந்தில் ஏற்பட்ட நட்பு அப்படியே ரோஸ்மா வரை வந்து அப்படியே நஜீப் வரை போய்ச் சேர்ந்தது. நஜீப் குடும்பத்தாருடன் நல்ல நட்புகளை ஏற்படுத்திக் கொண்டு அவர்களை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்.

ஜோலோவின் இயற்பெயர் லோ தேக் ஜோ. (Low Taek Jho). 1981 நவம்பர் மாதம் 4-ஆம் தேதி பினாங்கு ஜார்ஜ் டவுனில் பிறந்தவர். சற்றே வசதி படைத்த குடும்பம். கூடப் பிறந்தவர்கள் இருவர். குடும்பத்தில் கடைக்குட்டி.

பினாங்கு சுங் லிங் சீனப் பள்ளியில் படித்துவிட்டு லண்டனில் உள்ள ஹாரோவ் பள்ளியில் மேல்படிப்பு. அங்கே தான் ரிஷா அஜீஸைச் சந்தித்தார். நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். முன்னாள் பிரதமர் நஜீப் அவர்களின் மாற்றாள் மகன் தான் ரிஷா அஜீஸ். 




பின்னர் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா வார்ட்டன் கல்லூரியில் படிக்கும் போது குவைத், ஜோர்டான், மலேசிய மாணவர்களுடன் தொடர்புகள். அப்படியே அவர்களின் குடும்பத்தாருடன் நெருக்கங்கள்.

ஜோலோ தன்னுடைய 25-ஆவது வயதிலேயே பணம் சம்பாதிப்பதில் கால் பதித்து விட்டார். 2006-ஆம் ஆண்டு குவாயித் நிதி நிறுவனத்திற்கு கோலாலம்பூரில் 340 மில்லியன் ரிங்கிட் மதிப்பு உள்ள ஆடம்பர அடுக்கு மாடி சொகுசுக் கட்டிடத்தைப் பேரம் பேசி வாங்கிக் கொடுத்தார். அது தான் அவருடைய முதல் பெரிய வணிகத் தலையீடு.

2007-ஆம் ஆண்டு ஒரு முதலீட்டு நிறுவனத்தைத் தோற்றுவித்தார். அந்த நிறுவனத்தில் மலேசியாவைச் சேர்ந்த ஓர் இளவரசர்; குவாயித் நாட்டு ஷேயிக்; ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டைச் சேர்ந்த நண்பர் ஆகியோர் முக்கியப் பதவிகளில் இருந்தார்கள்.

2010-ஆம் ஆண்டு ஜெயின்வெல் முதலீட்டு நிறுவனத்தைத் தோற்றுவித்தார். சின்ன வயதிலேயே பெரிய பெரிய அணுகுமுறைகள். அந்த நிறுவனத்திற்கு தன் அண்ணனையே தலைவர் ஆக்கினார்.

2009-ஆம் ஆண்டு நஜீப், மலேசியாவின் பிரதமர் ஆனதும், 1எம்.டி.பி. நிறுவனத்தின் ஆலோசனை மன்றத்தின் தலைவர் பதவி ஜோலோவிற்கு வழங்கப் பட்டது. அவருக்கு (ஜோலோவிற்கு) அரசாங்கப் பதவி எதுவும் இல்லை என்றாலும் 1எம்.டி.பி. தொடர்பாக அவரிடம் ஆலோசனை கேட்கப் பட்டது.




அந்த வகையில் ஜோலோ மூலமாக நிறைய பணப் பட்டுவாடாக்கள் நடந்து உள்ளன. தன் சொந்தப் பயன்பாட்டிற்கும் 1எம்.டி.பி. பணத்தைப் பயன்படுத்தி வந்தார். 1எம்.டி.பி. அதிகாரிகளுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருந்து இருக்கலாம்.

2015-ஆம் ஆண்டு 1எம்.டி.பி. பணத்தைக் கொண்டு அமெரிக்கா நியூயார்க்கில் 34 மில்லியன் டாலர் மதிப்பில் ஒரு சொகுசு மாளிகையை வாங்கினார். பின்னர் இந்த மாளிகை நஜீப்பின் மாற்றாள் மகன் ரிஷா அஜீஸ்-இன் பெயருக்கு மாற்றம் செய்யப் பட்டது.

அடுத்ததாக, அமெரிக்கப் புகழ் பெவர்லி ஹில்ஸ் ஆடம்பர வீட்டு மனைப் பகுதியில் மேலும் ஒரு சொகுசு மாளிகையை ஜோலோ வாங்கினார். பல கோடி ரிங்கிட் மதிப்பு உள்ள அந்த மாளிகையையும் ரிஷா அஜீஸ்சிற்கு அன்பளிப்பு செய்தார்.

இந்தக் கட்டத்தில் இண்டர்போல் அனைத்துலகப் போலீசார் ஜோலோவைக் கண்காணிக்க ஆரம்பித்தார்கள். பணம் தான் கோடிக் கணக்கில் புரள்கிறதே. கொஞ்சமாவது நெருடல் ஏற்பட்டு இருக்காது. ஒவ்வொரு நாளும் விலையுயர்ந்த விடுதிகளில் கேளிக்கை விருந்துகள் வைத்தார்.

அமெரிக்காவில் புகழ்பெற்ற நடிகைகளை எல்லாம் தன் விருந்திற்கு அழைத்தார். அவர்களும் சந்தோஷமாக வந்து குடித்துவிட்டு அவருடன் கும்மாளம் போட்டுவிட்டுப் போனார்கள். ஒவ்வோர் இரவு விருந்திற்கும் ஐந்து இலட்சத்தில் இருந்து பத்து இலட்சம் வரை ஜோலோ செலவு செய்து இருக்கிறார். ஜோலோவின் மன்மத ஆட்டங்கள் நாளையும் வரும்.

(தொடரும்)

மலேசியா 1MBD மோசடி - 1
மலேசியா 1MBD மோசடி - 2
மலேசியா 1MBD மோசடி - 3
மலேசியா 1MBD மோசடி - 4

மலேசியா 1MBD மோசடி - 5
மலேசியா 1MBD மோசடி - 6
மலேசியா 1MBD மோசடி - 7


சான்றுகள்

1. Investigators Believe Money Flowed to Malaysian Leader Najib’s Accounts Amid 1MDB Probe - https://www.wsj.com/articles/SB10130211234592774869404581083700187014570

2. Full transcript of interview with 1MDB president Arul Kanda on TV3’s ‘Soal Jawab’  - http://www.therakyatpost.com/news/2015/08/13/full-transcript-of-interview-with-1mdb-president-arul-kanda-on-tv3s-soal-jawab-video/

3. Wright, Tom (9 July 2015). "Malaysian Financier Jho Low Tied to 1MDB Inquiry". The Wall Street Journal. ISSN 0099-9660.

4. Story, Louise and Stephanie Saul. "Jho Low, Well Connected in Malaysia, Has an Appetite for New York". The New York Times

5. Jynwel Capital, led by Jho Low, and Abu Dhabi Funds seek to buy Reebok from Adidas. The Rakyat Post. 20 October 2014.