தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 5 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 5 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 அக்டோபர் 2018

தமிழ்ப்பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 5

 தமிழ் மலர் - 11.0.2018 - வியாழக்கிழமை

சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியது நம் கடமை

மலேசிய நாட்டிற்கு இருநூறு ஆண்டுகளாய் ஓடாய் உழைத்துத் தேய்ந்தவர்கள். வியர்வைச் சகதியில் குருதிப் புனலைப் பார்த்தவர்கள். மலையூர் காடுகளை வெட்டித் திருத்தி உச்சம் தொட்டவர்கள். பச்சைக் கானகத்தைப் பயிர்விளைப் பூமியாய் மாற்றிப் போட்டவர்கள். 



செம்மண் சடக்குகளில் எலும்பும் தோலுமாய்ச் சிதைந்தும் சேதாரம் மறுத்தவர்கள். இன்று வரையில் தமிழர் அடையாளத்தை இழக்காமல் உரிமைப் போராட்டம் செய்யும் வெள்ளந்தி ஜீவன்கள். அவர்கள் தான் மலையகத்தின் பச்சைத் தமிழர்கள். உங்களையும் என்னையும் பெற்றுப் போட்ட மலையக மாணிக்கங்கள்.

மலாயா தமிழர்களை இரு வகையாகப் பிரிக்கலாம். உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஒரு பிரிவினர். கொஞ்சம் பணப் போக்குவரத்து உள்ளவர்கள் மற்றொரு பிரிவினர். இந்த இரு பிரிவினரில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் 85 விழுக்காடு என்றால் மற்ற நடுத்தரப் பிரிவினர் 15 விழுக்காடு.

உடல் உழைப்பு தொழிலாளர்களில் பெரும்பாலோர் வறுமை நிலையில் வாழ்ந்த தமிழர்கள். இவர்கள் பேசும் மொழி தமிழ். இவர்களின் பழக்க வழக்கங்கள்; இவர்களின் பாரம்பரியப் பண்பாடுகள்; இவர்களின் கலை கலாசார சமயப் பார்வைகள் அனைத்துமே தமிழோடு ஒன்றித்துப் போனவை.

நம் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக மலையகத் தமிழர்களின் உரிமைகள் மறக்கப்பட்டு வந்தன. அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதில் மூடுமந்திரம் எதுவும் இல்லை. தமிழர்களின் வளர்ச்சியும் சரி; தமிழர்களின் வளப்பங்களும் சரி; அவர்களின் சொந்தப் போராட்டங்களில் வியர்வைச் சீதனங்களாய் வந்த வரப்பிரசாதங்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 



காலனித்துவக் காலத்தில் வெள்ளைக்காரர்களை நம்பினார்கள். அவர்களுக்குப் பின்னர் வந்த உள்நாட்டு அரசியல்வாதிகளை நம்பினார்கள். ஆனால் நம்பிப் பிரயோசனம் இல்லை. மோசம் போனது தான் மிச்சம். இருந்ததும் சரி இல்லை. வந்ததும் சரி இல்லை என்று சொல்வார்களே அந்த மாதிரி இரண்டுமே கைகொடுக்கவில்லை. கண்டும் காணாமல் போய் விட்டன. 


அதன் பின்னர் யாரையும் எதிர்பார்க்காமல் அவர்களாகவே சொந்தமாகப் போராடினார்கள்.  ஓரளவுக்கு வளர்ச்சி அடைந்தார்கள். தங்கத் தாம்பாளத்தில் வைத்து யாரும் அவர்களுக்குத் தங்கக் கரண்டியில் ஊட்டிவிடவில்லை. வெள்ளிக் கிண்ணத்தில் வெற்றிலைப் பாக்கு வைத்து யாரும் அவர்களுக்கு ஆரத்தி எடுக்கவில்லை. வரலாறு முழுமைக்கும் விழுந்து விழுந்து எழுந்து நிமிர்ந்து நின்று சரித்திரம் படைத்து இருக்கிறார்கள்.

ஓர் இனம் உயிர்ப்பு பெற்று உயர்வு அடைய வேண்டும் என்றால் அரசியல் அவர்களுக்குப் பக்க பலமாக இருக்க வேண்டும். ஆனால் மலேசியத் தமிழர்களுக்கு அரசியல் உதவிகள் கிள்ளிப் போட்ட அல்வாத் துண்டுகளாய்ச் சிதறிப் போயின. ஒரே வார்த்தையில் சொன்னால் இந்தா எடுத்துக்கோ.

இந்த நாள் வரைக்கும் மலேசியத் தமிழர்களுக்கு என்று தனியாக ஒரு நிரந்தரமான அரசியல் பலம் உருவாக்கப் படவே இல்லை. அப்படி ஒரு வாய்ப்பு வழங்கப் படவும் இல்லை. 



இருந்தாலும் அப்போது வாழ்ந்த தமிழர்களின் பிரதிநிதியாக ம.இ.கா.வை அரசாங்கம் தேர்வு செய்தது. இன்றைக்கும் சரி. மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சி என்று சொன்னால் அது ம.இ.கா. தான். வேறு எத்தனைக் கட்சிகள் வந்தாலும் ம.இ.கா.வையும் மலேசிய இந்தியர்களையும் பிரிக்க முடியாது. அந்த அளவிற்கு ஒன்றித்துப் போய் இருந்தார்கள். ஆனால் இப்போது இல்லைங்க. காய்ந்து போன கரும்புச் சக்கையாகி விட்டது.

அப்போதைய ம.இ.கா., மத்தியத்தர வகுப்பினரின் குடும்பச் சொத்தாகவே பேர் போட்டு தம்பட்டம் அடித்தது. வசதி படைத்தவர்களுக்கு மேலும் வசதிகளைத் தேடித் தந்த அட்சயப் பாத்திரமாகவும் ஆசீர்வதிக்கப் பட்டது. அதே சமயத்தில் ஏழைத் தமிழர்களைப் பிரதிநிதிப்பது போல கலர் கலராய் மெகா சீரியல்களைப் போட்டுப் படம் காட்டியது.

போற்றிப் புகழும் அளவிற்கு ம.இ.கா. சிறப்பாக எதையும் செய்து விடவில்லை, செய்து இருக்கிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. மலேசிய இந்தியர்களின் சரித்திரத்தில் இடம்பெறும் அளவிற்கு பெரிசா ஒன்றும் சாதித்து விடவில்லை. மன்னிக்கவும். அப்படித்தான் சொல்ல முடிகிறது.

அரசாங்கத்திடம் இருந்து மானியங்களும் வாய்ப்புகளும் கிடைத்தன. நிறையவே கிடைத்தன. ஆனால் அடிமட்டத் தமிழர்களிடம் வந்து சேர்வதற்குள்… 



என்ன வந்து சேர்வதற்குள்… வரும் வழியிலேயே என்று சொல்லுங்கள். வரும் வழியிலேயே இத்தனை பெர்செண்ட் அத்தனை பெர்செண்ட் என்கிற கணக்கில் பிச்சுக் குதறிய எச்சத்திலும் பிக்கல் பிடுங்கல்கள். அப்புறம் என்ன வந்து சேர்வது. போய் சேர்வது.

அப்படியே வந்து சேர்ந்தாலும் கோச டப்பாக்களில் கொசுறு மிட்டாய்கள் தான். இது மலேசியத் தமிழர்களின் காலாகாலத்து கித்தா காட்டு ராமாயணங்கள். என்றைக்கு வேண்டும் என்றாலும் பாடிக் கொண்டு இருக்கலாம். விடுங்கள். மலேசியத் தமிழர்கள் வாங்கி வந்த வரம். இருமொழித் திட்டம் பற்றிய கருத்துக் களத்தைத் தொடர்வோம்.

ஈப்போ பி.கே.குமார் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். இவர் ஒரு தமிழ்மொழி ஆர்வலர். பல்வேறு தமிழ் அமைப்புகளின் அறிவுரைஞர். ஈப்போ பேராக் மாநில தமிழ்மொழி மேம்பாட்டு அறவாரியத்தின் செயலாளர்.

ஈப்போ சுங்கை பாரி இடைநிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர். ஈப்போ சுங்கை பாரி அரசினர் தமிழ்ப் பள்ளியில் 40 கணினிகள் மூலமாகக் கணினிக் கல்வி நடைபெற துணையாக நின்றவர். இருமொழிப் பாடத் திட்டத்தைப் பற்றிய அவருடைய கருத்துகளைத் தெரிந்து கொள்வோம்.



மலேசியாவின் மக்கள் தொகை 2017-ஆம் ஆண்டு கணக்குப்படி 320 இலட்சம். இவர்களில் 287 இலட்சம் பேர் குடியுரிமை பெற்ற குடிமக்கள். இதர 33 இலட்சம் பேர் குடிமக்கள் அல்லாதவர்கள். இதில் இந்தியர்கள் 21 இலட்சம்.

அந்த 21 இலட்சம் பேரில் ஏறக்குறைய எட்டு இலட்சம் பேருக்கு இன்றைய வரைக்கும் சொந்த வீடுகள் இல்லை. அது தெரியுமா உங்களுக்கு. இன்று வரையிலும் வறுமை நிலையில் இருக்கும் மலேசியத் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப் படவே இல்லை.

நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் 70% பள்ளிகளுக்கு அரசாங்கத்தின் முழு ஆதரவு இன்னமும் கிடைக்காமல் இருக்கிறது. தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளும் தொடர்கின்றன. நியாயமான மாதச் சம்பளம்; வீட்டுடைமைத் திட்டம்; ஓய்வூதியம் போன்றவை இன்றுவரை தொடரும் பிரச்சினைகளாக இருக்கின்றன.

ஈப்போ பி.கே.குமார் மேலும் சொல்கிறார். இந்தியர்களின் ஒட்டு மொத்த பொருளாதார நிலைமை கடந்த 40 ஆண்டுகளாக அதே 1.5% தான். அதுவும் முழுமையாக இல்லை. பெரும் பணக்காரர்களின் கைகளில் சிக்கி உள்ளது. சுருங்கச் சொன்னால் சாமான்ய இந்தியர்களிடம் இல்லை. 




அந்த வகையில் இந்தியர்கள் இடையே அதிகரித்து வரும் சமூகப் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி விட்டன. அது அவர்களைத் தொடரும் வறுமையின் பிரதிபலிப்பு என்றே சொல்ல வேண்டும்.

ஒரே வார்த்தையில் சொன்னால் வறுமையில் தொடங்கிய மலாயா இந்தியர்களின் வாழ்க்கை இன்றைய நாள் வரைக்கும் இலவு காத்த கிளியாக வாடிப் போய் நிற்கிறது. அந்த மாதிரி வாடிப் போய் நிற்கும் வறுமைச் சமுதாயத்திற்குத் தமிழ்ப்பள்ளிகள் தான் அடைக்கலமாகவும் ஆதரவாகவும் இருந்து வருகின்றன. அதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

இப்போது அதே அந்தத் தமிழ்ப் பள்ளிகளில் இருமொழிச் சதிராட்டங்கள். அறிவியல் கணிதப் பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்க அறைகூவல். அப்படி பயிலும் குழந்தைகள் அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் போகும் நிலை கண்டிப்பாக ஏற்படலாம். இத்தனை வருடங்கள் தமிழில் படித்துவிட்டு திடீரென்று வேறு மொழிக்குப் போனால் நிச்சயமாக தடுமாற்றம் ஏற்படும்.

அதனால் அடிப்படை அறிவாற்றல் இல்லாத நிலையில் தமிழ்ப் பிள்ளைகள் பள்ளியை விட்டு வெளியே வருகிறார்கள். அப்படி வருபவர்கள் ஒட்டு மொத்தமாகக் கணித அறிவியல் சார்ந்த அறிவுத் திறன்களில் திறமை குறைந்தவர்களாகவே இருப்பார்கள். உண்மை தானே.

சாதாரணமான வேலைகளைச் செய்யும் திறன்கூட இல்லாமல் போய்விடும். இந்த நிலையில் இவர்களால் எப்படிங்க நாட்டின் வளர்ச்சியில் பங்கு கொள்ள முடியும். சொல்லுங்கள். அதுவே நம் நாட்டிற்குப் பெரும் இழப்பாக அமையும்

ஈப்போ பி.கே.குமார் மேலும் சொல்கிறார். ஆங்கில மொழி மிகவும் முக்கியம். நாம் கண்டிப்பாக ஆங்கில மொழியில் புலமை பெற்று இருக்க வேண்டும். ஆனால் அதே அந்த ஆங்கில மொழியை அறிவியல் கணிதப் பாடங்கள் வழியாகச் சரியாகக் கற்க இயலாது.

அறிவியலும் கணிதமும் புரிந்து கொள்ள வேண்டிய பாடங்கள். புரிந்து கொண்டால் தான் அறிவியல் கணிதம் சார்பு உடைய அறிவு வளர்ச்சி உண்டாகும். தாய்மொழி வழியாக எதையும் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும். இதைப் பற்றி அனைத்துலக ரீதியில் ஆய்வு செய்து இருக்கிறார்கள். அந்த ஆய்வுகள் அப்படித் தான் சொல்கின்றன.



ஆங்கில மொழியில் அறிவியல் கணிதப் பாடங்களைக் கற்கவே முடியாதா என்று நான் பி.கே.குமாரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொல்கிறார்.

முடியும். தமிழ்ப் பள்ளியில் முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான தொடக்கக் கல்வியில் அறிவியல் கணிதப் பாடங்களைக் கற்றுப் புரிந்து கொண்டால் அதன் பின்னர் கற்றுக் கொள்வது எளிது. அதாவது இடைநிலைப் பள்ளியில் ஒன்றாம் படிவம் தொடங்கி மூன்றாம் படிவம் வரை அந்தப் பாடங்களை ஆங்கில மொழியில் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். அதே சமயத்தில் தொடக்கத்தில் புரியாத ஆங்கில மொழியில் கற்பதால் காலப் போக்கில் அறிவியல் கணிதப் பாடங்கள் புரியாத பாடங்களாகவே மாறிப் போகும். புரியுதுங்களா.

நம்முடைய மலேசியத் தமிழ்ப் பிள்ளைகளுக்கு ஆங்கிலமொழி மிக மிக அவசியம். கண்ண்டிப்பாகத் தேவை. ஆனால் அந்த மொழியைப் பயன் தரும் அளவிற்குச் செம்மையாகக் கற்றுக் கொள்ள வேண்டும். அங்கே தான் நாம் நிற்கிறோம்.

தாய்மொழியில் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளும் பிள்ளைகள் பிறமொழிகளில் அறிவியல் அறிவைப் பெறுவது என்பது மிகவும் எளிது. மிகவும் வளர்ச்சி அடைந்த நாடுகளைப் பாருங்கள். சுவீடன், சுவிட்சர்லாந்து, ஜப்பான், சீனா, கொரியா, பிரான்ஸ், நார்வே, பின்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து போன்ற நாடுகள் அவர்களின் சொந்த தாய்மொழியில் தான் அறிவியல் கணிதப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறார்கள். 

ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூஸிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஆங்கிலம் தான் தாய்மொழி. ஆக அந்தத் தாய்மொழியிலேயே கற்கிறார்கள். தாய்மொழியில் பயிற்றுவிக்கும் நாடுகள் எப்படி இருக்கின்றன. அதையும் பாருங்கள் என்கிறார் பி.கே.குமார். இவரின் கருத்துகள் நாளையும் தொடரும்.

தாய்மொழிக் கல்வி என்பது நம் அரசியலமைப்புச் சாசனத்தில் அந்த மொழிக்கு வழங்கப்பட்ட ஓர் உரிமை. ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அந்த உரிமையை மதிக்க வேண்டும். அந்த உரிமையை அப்படியே நடைமுறைப்படுத்தவும் வேண்டும். அதுவே கண்ணியமான கடமையாகும்.

அந்த வகையில் பார்த்தால் அரசாங்கம் என்பது நாம் தேர்வு செய்யும் ஓர் அரசியல் கட்சியின் பிரதிநிதி. ஆகவே நமக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டும். அரசாங்கம் கேட்கிறதோ இல்லையோ. அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியது நம்முடைய கடமை. அரசாங்கம் உணரும் வரையில் நம் ஆதங்கத்தைச் சொல்லி வர வேண்டும். அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். சரி தானே.

நம்முடைய இப்போதைய பிரச்சினை இந்த இருமொழித் திட்டப் பிரச்சினை. இந்தத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளை அரசாங்கம் உணர்ந்தால் நிச்சயமாக மாற்றம் செய்ய மாட்டார்கள். உதவிக் கரம் நீட்டுவார்கள். இதுவே என் கணிப்பு.

(தொடரும்)

சான்றுகள்:

1. Education Ministry approves dual language programme for another 126 schools - https://www.thestar.com.my/news/nation/2018/01/05/education-ministry-approves-dual-language-programme-for-another-126-schools/

2. SJKT Vivekananda Petaling Jaya was declared a DLP school in 2017s - https://www.freemalaysiatoday.com/category/opinion/2018/01/02/no-politics-in-education-please/

3. Penang people say NO TO DLP (Dual Language Program) in Tamil Schools. - https://www.youtube.com/watch?v=ozuDvsfXXzU

4. Revoke DLP approval for Tamil schools. - https://www.thestar.com.my/news/nation/2017/02/08/revoke-dlp-approval-for-tamil-schools/

5. Lack of info on DLP in Tamil schools - https://www.beritadaily.com/lack-of-info-on-dlp-in-tamil-schools/