பூஜோங் மிஞ்சா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூஜோங் மிஞ்சா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஜூலை 2020

பூஜோங் மிஞ்சா

தமிழ் மலர் - 12.07.2020

பூஜோங் மிஞ்சா (Bojongmenje). இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்துக் கோயிலின் இடிபாடுகள். கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் மத்திய ஜாவாவை ஆட்சி செய்த கலிங்கா பேரரசு (Kalingga Kingdom) காலத்தில் கட்டப்பட்ட ஒரு கோயிலின் இடிபாடுகள். இந்தோனேசிய அரசாங்கத்தால் இப்போது மீட்டு எடுக்கப்பட்டு வரும் தொல்பொருள் இடிபாடுகள்.



பல மில்லியன்கள் செலவு செய்து, புதையுண்டு கிடக்கும் பூஜோங் மிஞ்சா கோயிலின் கட்டுமானத்தை இந்தோனேசிய அரசாங்கம் மீட்டு எடுத்து வருகிறது. ஆனால் இந்தோனேசியாவிற்குப் பக்கத்தில் இருக்கும் நாட்டில் அப்படியா நடக்கிறது.

இருக்கிற கோயில்களை எல்லாம் உடைத்துக் கொண்டு வருகிறார்கள். இருக்கிற வரலாறுகளை எல்லாம் அழித்துக் கொண்டு போகிறார்கள். தலைகால் தெரியாமல் ஜிங்கு ஜிக்கான் அரசியல் கூத்துகள் நடத்துகிறார்கள். 



ஒரு புறம் உயிர்ப்பு. இன்னொரு புறம் தவிர்ப்பு. ஒரு புறம் போற்றுகிறார்கள். இன்னொரு புறம் தூற்றுகிறார்கள். ஒரு புறம் பெருமை சேர்க்கிறார்கள். இன்னொரு புறம் சிறுமை படுத்துகிறார்கள். வேதனை.

தமக்கு வந்தால் இரத்தம். அடுத்தவனுக்கு வந்தால் தக்காளிச் சட்டினியா? மொழிவாதம், இனவாதம், மதவாதத்தில் கோணலாகிப் போன ஒரு பக்கவாதம். அதில் வீணாய்ப் போன ஒரு வக்கிரவாதம். 

மண்ணுக்குள் புதைந்து கிடந்த அந்தக் கோயிலைச் சீரமைக்கும் பணிகளில் இந்தோனேசிய மக்கள் தீவிரம் காட்டுகிறார்கள். இந்தோனேசிய அரசாங்கமும் மும்முரம் காட்டுகிறது. 



மண்ணில் இருந்து கிடைத்த பொருள் மண்ணுக்கு மட்டும் சொந்தம் அல்ல. மனிதர்களுக்கும் சொந்தம் என்று அங்கே வரலாறு படைக்கின்றார்கள்.

இந்த இடிபாடுகள் மேற்கு ஜாவா, பண்டுங் (Bandung) மாவட்டத்தின் பூஜோங் மிஞ்சா கிராமத்தில் கண்டுபிடிக்கப் பட்டன. இந்தக் கோயிலை மீட்டு எடுக்கும் பணியில், குறிப்பாக ஜாவா மக்கள் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அந்தப் பகுதி சுற்றுலாத் தளமாக மாறலாம் என்பதே அவர்களின் வியூகம். பாராட்டப்பட வேண்டிய முயற்சிகள்.

இந்தத் தொல்பொருள் தளம் 2002 ஆகஸ்ட் 18-ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. பூஜோங் மிஞ்சா கிராமத்தில் மேடும் குழியுமான ஒரு கிராமத்துப் பாதை. அதில் மண்ணைப் போட்டு நிரப்ப வேண்டி இருந்தது. பாதைக்கு அருகில் ஒரு சமவெளிப் பகுதி. அங்கே மண்ணைத் தோண்டினார்கள்.  



மண்ணைத் தோண்டிக் கொண்டு இருக்கும் போதுதான் அந்தக் கோயில் இடிபாடுகளைக் கண்டுபிடித்தார்கள். கோயில் இடிபாடுகள் இருந்த இடம் அனென் (Anen) எனும் உள்ளூர்வாசிக்குச் சொந்தமான இடம். இடிபாடுகள் இருந்த இடத்தைச் சுற்றிலும் எறும்புகளின் புற்றுகள். மஞ்சள் சாம்பல் நிறம் கலந்த புற்றுகள்.

ஏன் இவ்வளவு புற்றுகள். ஏன் இவ்வளவு எறும்புகள். ஜாவாவில் அப்படிப்பட்ட எறும்புகள் இல்லையே என்று ஆச்சரியம் அடைந்தார்கள். கருநீல நிறத்தில்; நீண்ட கால்களைக் கொண்ட எறும்புகள். ரொம்பவுமே வித்தியாசமான எறும்புகள். முதல் தடவையாகப் பார்க்கிறார்கள்.

மண்ணைத் தோண்டிய பின்னர் தான் அந்தப் புற்றுகள் தெரிய வந்தன. ஆக அங்கே மேலும் என்ன இருக்கலாம் என்று கண்டுபிடிக்க ஆழமாய்த் தோண்ட ஆரம்பித்தார்கள். ஒரு மீட்டர் ஆழத்தில் பாறைகளின் இடிபாடுகள் இருந்தன. சதுர வடிவிலான பாறைகள் அடுக்கடுக்காய் இருப்பதைக் கண்டார்கள்.



பாறைகளின் முழு வடிவங்கள் நன்றாகத் தெளிவாகத் தெரியும் வரையில் தோண்டிப் பார்த்தார்கள். அங்கே ஒரு பழமையான கற்பாறை இடிபாடுகள் இருந்தன. உடனே தோண்டுவதை நிறுத்திக் கொண்டு அரசாங்க அதிகாரிகளிடம் தெரிவித்தார்கள்.

அங்கே ஒரு பழமையான இந்து கோயில் இருப்பது தெரிய வந்தது. அரசாங்க அதிகாரிகள் உடனே அந்த இடிபாடுகளைச் சுற்றிலும் முள்வேலி அமைத்தார்கள்.  இது ஒரு பழங்காலத்துப் புதைபொருள் இடம். பொது மக்கள் உள்ளே நுழையக் கூடாது. மீறி நுழைந்தால் 20 மில்லியன் ரூப்பியா அபராதம் என ஓர் அறிவிப்பு பட்டையையும் நிறுத்தி வைத்தார்கள்.

இந்தக் கோயிலை யார் கட்டி இருப்பார்கள் என்பதில் அனைவருக்கும் முதலில் ஐயப்பாடு. இருப்பினும் கற்பாறைகளின் சில்லுகளை எடுத்துக் கொண்டு போய் கார்பன் காலக்கணிப்பு (carbon dating) செய்து பார்த்தார்கள். 1300 ஆண்டுகள் பழமையானவை எனத் தெரிய வந்தது. 



1300 ஆண்டுகள் என்றால் அந்தக் காலக் கட்டத்தில் மத்திய ஜாவாவை கலிங்கா பேரரசு ஆட்சி செய்து வந்தது. ஆகவே அந்தக் கோயில் இடிபாடுகள் கலிங்கா அரசு காலத்தின் இடிபாடுகள் என முடிவு செய்தார்கள்.

கோயில் இடிபாடுகள் இருந்த பகுதியை, முன்னர் காலத்தில் கலிங்கா பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது.

அகழ்வாராய்ச்சி இன்னும் முடிக்கப்படவில்லை. இந்த இடம் கிராமவாசிகளின் குடியிருப்பு பகுதியில் அமைந்து உள்ளது. கோயில் தளத்தின் சுற்றுப்புறப் பகுதி நீரால் நிரப்பப்பட்ட ஒரு குளமாக இருக்கலாம். இப்போது  அந்தப் பகுதியின் மையத்தில் உள்ள இடிபாடுகள் முள் கம்பிகளால் பாதுகாக்கப் படுகின்றன.



கோயிலுக்கு அருகே ஒரு கட்டிடம். கண்டு எடுக்கப்படும் பொருள்களைப் பற்றிய பதிவுகள்; அகழ்வாராய்ச்சி தொல்பொருள்கள் (registration, research, excavation and storing the archeological items) போன்றவற்றைச் சேமித்து வைக்கும் தளமாக அந்தக் கட்டிடம் உள்ளது.

இந்தக் கோயில் சேதம் அடைந்ததற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. 75 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய ஜாவாவை ஜப்பானியர்கள் ஆட்சி செய்தார்கள். அப்போது அவர்களின் இராணுவப் பயிற்சிக்கு பீரங்கிகள், கவச வாகனங்கள் போன்ற கனரக உபகரணங்களைப் பயன்படுத்தினார்கள். இந்த இடத்தில் போர்ப் பயிற்சிகளிலும் ஈடுபட்டு இருந்தார்கள். 



அதனால் அந்தக் கோயில் சேதம் அடைந்து இருக்கலாம். தவிர பழங்காலத்து கல்லறையும் அங்கே இருந்தது. அந்தக் கல்லறையில் இருந்து பழைமைப் பொருள்கள் களவாடப்பட்டு இருக்கலாம்.

ஆக ஆரம்ப காலத்தில் அந்தக் கோயில் எப்படி இருந்தது; எப்படி இருந்து இருக்கலாம் என்பது எவருக்கும் தெரியாது. அகழ்வாராய்ச்சிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதே சமயத்தில் கோயில் கட்டுமானத்தைச் சீரமைப்பு செய்து புதுப்பிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் பெக்காலோங்கான் (Pekalongan) நகரம். இந்த நகரம் இப்போது ஜெப்பாரா (Jepara Regency) எனும் மாநிலத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் கெலிங் (Keling) எனும் துணை மாநிலம் உள்ளது.

இங்கே தான் 6-ஆம்; 7-ஆம் நூற்றாண்டுகளில் புகழ் பெற்ற ஒரு பேரரசு ஆட்சி செய்தது. அதன் பெயர் கலிங்கா பேரரசு. ஏறக்குறைய 200 ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.



இந்தோனேசியாவை ஆட்சி செய்த மேடாங் பேரரசு (Medang Kingdom); சைலேந்திரா பேரரசு (Shailendra Kingdom); ஸ்ரீ விஜய பேரரசு (Srivijaya Kingdom) ஆகியவற்றின் முன்னோடி மூதாதையர் பேரரசு எனும் பெருமை இந்த கலிங்கா பேரரசிற்கு உண்டு. இந்தோனேசியாவை ஆட்சி செய்த மிகப் பழமையான பேரரசுகளில் கலிங்கப் பேரரசும் ஒன்றாகும்.

தொடக்கக் காலத்தில் கலிங்கா பேரரசு இந்து மதம் சார்ந்த அரசாக இருந்தது. காலப் போக்கில் புத்த மதம் பரவியதால் இந்தப் பேரரசு புத்தம் சார்ந்த பேரரசாகவும் கொஞ்ச காலம் ஆட்சி செய்தது.

இந்தியாவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கலிங்கம் என்பது வேறு. இந்தோனேசியாவில் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்த கலிங்கா நாடு என்பது வேறு. இரு நாடுகளுக்கும் சொல் ஒற்றுமைகள் உள்ளன.

 

இருப்பினும் இரண்டும் வெவ்வேறான கலிங்கங்கள். ஆக இந்தியக் கலிங்கம் என்பது வேறு. இந்தோனேசியக் கலிங்கம் என்பது வேறு.

அந்தக் காலக் கட்டத்தில் இந்தியாவின் கலிங்க நாட்டவர் இலங்கை, பர்மா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் குடியேறினார்கள். ஆங்காங்கே சிற்றரசுகளை உருவாக்கினார்கள். சிறப்பாக ஆட்சி செய்தார்கள். வரலாறு பேசுகிறது.

அந்த வகையில் உருவாக்கப் பட்டது தான் இந்தோனேசியா, ஜாவா தீவின் கலிங்கா பேரரசு. ஜாவா தீவின் வடப் பகுதியில் மையம் கொண்டது.

கலிங்கா பேரரசு என்பதில் கலிங்கம் எனும் சொல் வருகிறது. அந்த வேர்ச் சொல்லில் இருந்து தான், இந்தோனேசியாவில் இப்போது இருக்கும் கெலிங் துணை மாநிலத்திற்கும் பெயர் வைத்து அழகு பார்க்கிறார்கள்.



கலிங்கம் அல்லது கலிங்கா எனும் சொல்லில் இருந்து தான் கெலிங் (Keling) எனும் சொல்லும் உருவானது. கெலிங் என்பது நல்ல ஒரு வரலாற்றுச் சொல் தான். தப்பாகப் பயன்படுத்தப் போய் தப்பாக திரிந்து போய் விட்டது. விடுங்க.

இதை எல்லாம் ஆராய்ச்சிப் பன்ணிக் கொண்டு இருந்தால் அப்புறம் சோற்றுக்குச் சுண்ணாம்பு கிடைக்காமல் போய் விடும்.

ஜாவாவில் பெக்கா லோங்கான் எனும் ஓர் இடம். பாத்தாங் மாநிலத்தில் உள்ளது. அங்கே அகழாய்வுகள் செய்தார்கள். அந்தப் பெக்கா லோங்கான் தான் கலிங்கப் பேரரசின் தலைநகரமாக விளங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

1700 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததைச் சொல்கிறேன். பெ-கலிங்கா-ன் என்பதே பெக்கா லோங்கான் என்று மாறி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. சரி.



பூஜோங் மிஞ்சா கோயில், ஆண்டிசைட் (andesite rocks) எனும் எரிமலைப் பாறைகளைப் பயன்படுத்தி கட்டப்பட்டு உள்ளது. மிகவும் எளிமையான பாணியில் கட்டப்பட்டு இருக்கலாம். நடுத்தரமான கோயில் பரப்பளவு.

பிரம்பனான் (Prambanan) சிவன் கோயில்; போரோபுதூர் (Borobudur) புத்த கோயில்கள் கட்டப்படும் போது ஜாவா மக்களிடம் கலாச்சாரத் தரம் (cultural quality) உயர்ந்து இருந்தது.

ஆனால் பூஜோங் மிஞ்சா கோயில் கட்டப்படும் போது அந்தக் கலாச்சாரத் தரம் மிக எளிமையாகவும் குறைவாகவும் இருந்து இருக்க வேண்டும். பூஜோங் மிஞ்சா கட்டுமான அமைப்பில் இருந்து தெரிய வருகிறது.



இந்தோனேசியா எனும் நாட்டையும் இந்தோனேசியாவில் உள்ள இந்து கோயில்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு அந்த நாட்டில் கோயில்கள் ஆழமாய்ப் பதிந்து விட்டன. இந்தோனேசிய மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

இந்தோனேசியாவின் கடந்த கால கலாசாரத்தின் விளைபொருளாகத் தான் கோயில்கள் அங்கே காட்சி அளிக்கின்றன. கடந்த கால அரசுகளின் கடந்த காலத்தையும் பிரதிபலிக்கின்றன. அங்கு உள்ள பெரும்பாலான இந்து கோவில்கள் அங்கு வாழ்ந்த மன்னர்களால் கட்டப் பட்டவையாகும்.

ஜாவா பள்ளத்தாக்கில் மட்டும் ஆயிரக் கணக்கான இந்து கோயில்கள் இருந்தன. கி.பி 1006-ஆம் ஆண்டில் மெராபி மலை (Mount Merapi) வெடித்ததினால் பல கோயில்கள் புதையுண்டு போயின.



பாலி தீவில் மட்டும் இப்போது 20,000-க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் உள்ளன. ஒரு கிராமத்திற்கு ஒரு கோயில் என மூலைக்கு மூலை கோயில்களைக் கட்டிப் போட்டு இருக்கிறார்கள்.

பாலி கோயில்களில் வைக்கப்பட்டு இருக்கும் விஷ்ணு, பிரம்மா, தாரா, துர்கா போன்ற தெய்வங்களின் சிலைகள், பாலி மக்கள் முன்னோர்களின் வெளிப்பாடாகக் காட்சி தருகின்றன.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
12.07.2020

சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/Bojongmenje

2. https://candi.perpusnas.go.id/temples_en/deskripsi-west_java-bojongmenje_temple_10

3.https://www.liputan6.com/lifestyle/read/3869065/cerita-penemuan-situs-candi-bojongmenje-di-rancaekek

4. https://ssyoutu.be/6vlIRDENo6Y?t=108