செயற்கை சுவாசப்பை வரலாற்றில் மலேசியா சாதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செயற்கை சுவாசப்பை வரலாற்றில் மலேசியா சாதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஏப்ரல் 2020

செயற்கை சுவாசப்பை வரலாற்றில் மலேசியா சாதனை

தமிழ் மலர் 12.04.2020

நோய்க் கிருமிகள் சாதி சனம் பார்ப்பது இல்லை. சமயச் சடங்குகள் பார்ப்பது இல்லை. மதம் மார்க்கம் பார்ப்பது இல்லை. ஆசா பாசங்கள்; ஆத்தா அப்பத்தா; கண்ணாளம் கருமாதி என்று எதையுமே பார்ப்பது இல்லை.

அவற்றுக்குத் தெரிந்த ஒரே விசயம். ஒரே சந்தோஷம். ஒன்னே ஒன்னுதான். வந்தேன் பார்த்தேன் கவிழ்த்தேன். ஐ டோண்ட் கேர் என்று போய்க் கொண்டே இருக்கும். அம்புட்டுத்தான்.




எப்போதும் எங்கேயும் எவரையும் எப்படியும் நோய்க் கிருமிகள் தாக்கலாம். அந்தத் தாக்கத்தினால் அவரின் உடல்நலம் பாதிக்கப் படலாம். அந்தப் பாதிப்பினால் அவரின் இயல்பான உடல் இயக்கங்கள் சுணங்கிப் போகலாம்.

மனித உடலில் பல முக்கியமான இயக்கங்கள் உள்ளன. எல்லா இயக்கங்களும் முக்கியமானவை தான். ஓர் இயக்கம் இல்லாமல் மற்றொன்று இல்லை. ஒன்றைச் சார்ந்து மற்றொன்று இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு வகையில் முக்கியமானது. எதையும் தனித்துப் பிரித்துப் பார்க்க முடியாது. அவற்றுள் முக்கியமானது நுரையீரல் இயக்கமாகும்.

நுரையீரல் பாதிக்கப்பட்ட ஒருவர் நன்றாக மூச்சுவிட முடியாது. மூச்சு அடைக்கும். ஒரு கட்டத்தில் இழுத்துப் பறிக்கும் நிலையில் உச்சக்கட்ட மூச்சுத் திணறல் ஏற்படலாம்.


அந்த மாதிரி முழுமையான மூச்சுத் தடை ஏற்படும் போது அந்த நோயாளிக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவி தேவைப் படுகிறது. செயற்கை சுவாசக் கருவிக்கு வெண்டிலேட்டர் என்று பெயர்.

அந்த வகையில் செயற்கையான முறையில் மூச்சுக் காற்று வழங்கும் கருவியே வென்டிலேட்டர் ஆகும். அதாவது செயற்கையாகச் செயல்படும் ஒரு மூச்சுக்கருவி.

இயற்கையாக ஒருவர் மூச்சு விட முடியாமல் தவிக்கும் போது இந்த வென்டிலேட்டர், உயிர்க் காப்பான் தோழனாக உயிர் கொடுக்கிறது. அதாவது செயற்கை முறையில் சுவாசிக்க வைப்பதே வெண்டிலேட்டர் எனும் மூச்சுக் கருவியின் முதன்மைப் பணியாகும்.

ஒருவரின் ஒட்டுமொத்த சுவாசச் செயல்பாட்டை இயக்கச் செய்யும் கருவி என்றுகூட சொல்லலாம். இதை ஒரு கருவி என்று சொல்வதைவிட நாலும் தெரிந்த நல்லையன் என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும். 




ஏன் தெரியுங்களா. ஒரு கருவி என்பது ஒரு வேலையை மட்டுமே செய்யும். ஆனால் இந்த வெண்டிலேட்டர் அப்படி அல்ல. ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்கிறது. வெளியே இருந்து காற்றை இழுக்கிறது. அந்தக் காற்றில் உள்ள உயிர்க்காற்றை (ஆக்சிஜன்) மட்டும் தனியாகப் பிரித்து எடுக்கிறது.

அந்த உயிர்க்காற்றைக் குழாய் வழியாக நுரையீரலுக்குள் செலுத்துகிறது. அப்புறம் நுரையீரலுக்குள் இருக்கும் கரியமிலக் காற்றை இழுத்து குழாய் வழியாக வெளியே தள்ளுகிறது. நுரையீரல் எவ்வளவு வேகத்தில் வேலை செய்கிறது என்பதை கண்காணிக்கிறது.

வெண்டிலேட்டர் இயந்திரத்தில் ஈரப்பதமூட்டி (Humidifier) என்கிற மற்றும் ஒரு துணைக் கருவியும் இருக்கிறது. காற்றில் உள்ள வெப்பத்தையும் ஈரப் பதத்தையும் நோயாளியின் உடல் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கின்றது.




நுரையீரல் கொஞ்சம் தாமதமாக வேலை செய்தால் எச்சரிகை மணியை எழுப்புகிறது. மருத்துவர்களும் செவிலியர்களும் நோயாளியின் அறைக்கு வெளியே இருந்தாலும் கட்டுப்பாட்டு அறைக்குச் செய்தியை அனுப்புகிறது. சமயங்களில் மருத்துவரின் கைப்பேசிக்கும் செய்தி அனுப்புகிறது.

ஒரு நோயாளியின் சுவாசப் பைகளில் உயிர்க் காற்றின் அளவு குறைந்தால் உடனடியாகக் கூடுதலான உயிர்க் காற்றை வலுக்கட்டாயமாக உட்செலுத்துகிறது.

நோயாளியின் இரத்த அழுத்ததைக் கவனித்து, அவரின் உடலுக்குள் எவ்வளவு உயிர்க்காற்று செலுத்த வேண்டும் என்பதையும் நிர்ணயிக்கிறது.

ஒரு நுரையீரல் ஈர்க்க வேண்டிய காற்றைச் சரியாக எடை போட்டு, செயற்கை மூளைப் பயன்படுத்தி அந்த இயந்திரம் இயங்குகிறது. மனித மூளை எப்படி யோசிக்குமோ அதே போலத் தான் இந்த வெண்டிலேட்டர் இயந்திரமும் யோசிக்கிறது. இப்போது உள்ள வெண்டிலேட்டர்களுக்குப் பக்கா செயற்கை மூளை.




இந்த வெண்டிலேட்டர் முதலில் சுவாசப் பைக்குள் காற்றைப் புகுத்துகிறது. அப்புறம் அங்கே ஏற்கனவே இருக்கும் கெட்ட காற்றை உறிஞ்சி வெளியே தள்ளுகிறது. பார்த்தீர்களா. ஒரே ஒரு கருவி. எத்தனை வேலைகளை ஒரே சமயத்தில் செய்கின்றது. அதிசயம். ஆனால் உண்மை.

ஒன்றை இங்கே நன்றாகக் கவனிக்க வேண்டும். ஒருவருக்கு செயற்கைச் சுவாசப்பை பொருத்தப்பட்டு இருக்கிறது என்றால் அவரின் சுவாசப்பை சரியாக இயங்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தக் கருவி எப்படி இந்த மாதிரி அசுரமான வேலைகளைச் செய்கிறது என்று வியந்து போகலாம். அவை மனிதனின் அபாரமான அறிவியல் தொழில்நுட்பத் திறமைகள் தான். மனிதன் கண்டுபிடித்த அபூர்வமான தொழில்நுட்ப இயந்திரங்களில் வெண்டிலேட்டர் இயந்திரமும் ஒன்றாகும்.

(Modern ventilators are computerized microprocessor-controlled machines)

சுருக்கமாகச் சொன்னால் இயற்கை முறையில் சுவாசிக்க முடியாமல் போகும் போது, வெண்டிலேட்டர் கருவி ஒரு நோயாளிக்கு செயற்கைச் சுவாசத்தை வழங்குகிறது. 




எடுத்துக்காட்டிற்கு ஒரு கொரோனா கோவிட் நோயாளியை எடுத்துக் கொள்வோம். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு எதிர்த்துப் போராட முடியவில்லை; தவிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அப்போது அவருக்கு வெண்டிலேட்டர் இயந்திரத்தின் உதவியை வழங்குகிறார்கள். இந்த வெண்டிலேட்டர் இயந்திரம் அவரைப் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு சற்றே கால அவகாசம் வழங்குகிறது.

அதன் மூலம் அவர் பழைய நிலைக்குத் திரும்பினால் அவர் பிழைத்துக் கொண்டதாகப் பொருள். இல்லை என்றால் புரிந்து கொள்ளுங்கள்.

கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் 80 விழுக்காட்டினர் மருத்துவமனை சிகிச்சை இல்லாமலேயே குணம் அடைகின்றனர். அவர்களின் உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை கூடுதலாக இருப்பதால் தப்பித்துக் கொள்கின்றனர்.

ஆனால் அவ்வாறு பாதிப்பு அடைந்த ஆறு பேரில் ஒருவரின் உடல்நிலை அளவு கடந்து மோசம் அடைகிறது. நுரையீரலில் பெரிய பிரச்சினை ஏற்படுகிறது. மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இவை உலக சுகாதார நிறுவனம் சொல்லும் செய்திகள். 




மிக மிகப் பாதிக்கப்பட்டவரின் நுரையீரல் செயல்பாடு கட்டம் கட்டமாகப் பலவீனம் அடைகிறது. இந்தச் சமயத்தில் நோயாளியின் உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்புத் தன்மை விழித்துக் கொள்கிறது.

எதிரிகள் நுழைந்து விட்டதாக நினைத்துக் கொண்டு தீவிரமாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அதனால் இரத்த குழாய்கள் விரிவு அடைகின்றன. அதிக அளவிலான நோய் எதிர்ப்புச் செல்கள் உற்பத்தி ஆகின்றன. அப்படியே இரத்தத்தில் கலக்கின்றன. ’விட்டேனா பார்’ என்று பாதிக்கப்பட்ட நுரையீரலுக்குப் படை எடுகின்றன.

இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஏற்கனவே நுரையீரலில் கிருமிகள் நுழைந்து மைக்கல் ஜேக்சன் மாதிரி பிரேக் டான்ஸ் ஆடிக் கொண்டு இருக்கின்றன. அந்த ஆட்டத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நுரையீரல் தடுமாறிக் கொண்டு நிற்கிறது.

எதிரிகளால் நுரையீரல் மேடை சரிந்து விழும் நிலை. அதே சமயத்தில் உடலின் தற்காப்புப் படையின் பெரிய ஒரு படையெடுப்பு. நோய் எதிர்ப்புத் தன்மை மேலும் தற்காப்பு வீரர்களை மேலும் மேலும் அனுப்பி வைக்கிறது. ஆக நுரையீரலில் மூன்றாவது அணு ஆயுதப் போர் நடக்கிறது என்று ஒரு கற்பனை செய்து கொள்ளுங்கள்.




இந்தச் சமயத்தில், இரு தரப்பு மோதல்களினால் நுரையீரலுக்குள் அதிகப் படியான திரவங்கள் கோர்த்துக் கொள்கின்றன. தண்ணீர் கோர்த்துக் கொள்கிரது. இதனால் தான் நோயாளி சுவாசிக்கச் சிரமப் படுகிறார்.

அடுத்தக் கட்டமாக உடலுக்குத் தேவையான உயிர்க்காற்றின் (ஆக்சிஜன்) அளவும் குறையத் தொடங்குகிறது. இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படும் போது தான் வென்டிலேட்டர் உச்சக் கட்டத்திற்குப் போகிறது. அதிக அளவு ஆக்சிஜன் கொண்ட காற்றை நுரையீரலுக்குள் வலுக்கட்டாயமாகச் செலுத்துகிறது.

இன்னும் ஒரு விசயம். வென்டிலேட்டரில் ஈரப்பதமூட்டி எனும் மேலும் ஒரு துணைக்கருவி உள்ளது. காற்றில் உள்ள வெப்பம்; ஈரப் பதம்; இரண்டையும் நோயாளியின் உடல் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு சரிசமமாக மாற்றி அமைக்கின்ற கருவி. அற்புதமான துணைக் கருவி. கண்டுபிடித்தவர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டும். வெண்டிலேட்டர் வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.

1928-ஆம் ஆண்டில் போலியோ நோயினல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முதன்முதலில் வெண்டிலேட்டர்களைப் பயன்படுத்தினார்கள். அந்தக் காலத்துப் பழைய மோடல்கள். டிரிங்கர் ரெஸ்பிரேட்டர் என்று பெயர் (Drinker respirator). 




இந்தக் கட்டுரையில் வெண்டிலேட்டர் எனும் சொல்லையே பயன்படுத்துகிறேன். செயற்கைச் சுவாசக் கருவி என்று நினைவில் கொள்வோம்.

பின்னர் 1931-ஆம் ஆண்டு ஜான் எமர்சன் (John Haven Emerson) என்பவர் பழைய வெண்டிலேட்டருக்கு மாற்றங்களைச் செய்தார். 1937-ஆம் ஆண்டு எட்வர்ட் பூத் (Edward Both) என்பவர் மெல்லியப் பலகைகளைக் கொண்ட ஒரு வெண்டிலேட்டரைத் தயாரித்தார். அதற்கு ‘போத் பார்ட்டபிள் கேபினட் ரெஸ்பிரேட்டர் (Both Portable Cabinet Respirator) என்று பெயர். அதன் பின்னர்

டிரகர் (Drager EV-A);

பைபாசிக் குயிராஸ் (Biphasic Cuirass Ventilation);

ஸ்டர்மி ஆர்ச்சர் (Sturmey-Archer);

புரித்தான் பென்னட் (Puritan Bennett 7200);

பேர் 1000 (Bear 1000);

செர்வொ 300 (SERVO 300);

ஹமில்டன் வெலார் (Hamilton Veolar);


என பற்பல வெண்டிலேட்டர்கள் புழக்கத்திற்கு வந்தன.

இப்போது அதி நவீனமான எம்.ஐ.டி. இ-வெண்ட் (MIT E-Vent Unit 002) எனும் வெண்டிலேட்டரைப் பயன்படுத்துகிறார்கள். உலகளாவிய நிலையில் கொரோனா வந்த பிறகு தான் அதுவும் 2020 மார்ச் 21-ஆம் தேதியில் தான், இந்த வெண்டிலேட்டர் உருவாக்கப் பட்டது. விலை மலிவு. செயல்பாட்டுத் திறன் அதிகம். சரி.




(MIT Emergency Ventilator (E-Vent) Project - https://e-vent.mit.edu/)

பொதுவாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் தேவைப் படுவது இல்லை. எப்போதும் கிடைக்கும் உயிர்க்காறே (ஆக்சிஜன்) போதும்.

இருப்பினும் தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்குக் கண்டிப்பாக வெண்டிலேட்டர்களைப் பயன்படுத்த வேண்டி உள்ளது.

எந்த நேரத்திலும் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம். எந்த நேரத்திலும் நோயாளியின் மூச்சு நின்று போகலாம். முன் ஏற்பாடாகத் தான் வெண்டிலேட்டர்களை இணைத்து விடுகிறார்கள்.

எல்லா மருத்துவ மனைகளிலும் எல்லா தனியார் மருத்துவ மனைகளிலும் வென்டிலேட்டர் இருப்பது இல்லை. அப்படியே இருந்தாலும் ஒன்று அல்லது இரண்டுதான் இருக்கும்.




மலேசியாவின் 26 அரசு பொது மருத்துவமனைகளில் (Intensive Care Units (ICU) 925 வெண்டிலேட்டர்கள் உள்ளன. தீவிரச் சிகிச்சை வார்டுகள் 300 உள்ளன. தீவிரச் சிகிச்சை வார்டுகளில் 3,400 படுக்கைகள் உள்ளன. உலகத் தரம் வாய்ந்த தீவிரச் சிகிச்சைக் கவனிப்புகள்.

சராசாரியாக ஒவ்வொரு மருத்துவமனையிலும் 40 வெண்டிலேட்டர்கள் உள்ளன. அதே சமயத்தில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் 10 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையிலும் உள்ளன.

மேலும் 500 வெண்டிலேட்டர்களைச் சீனாவிடம் ஆர்டர் செய்தார்கள். அவற்றில் கடந்த 2020 ஏப்ரல் 5-ஆம் தேதி 94 வெண்டிலேட்டர்கள் வந்து சேர்ந்து விட்டன. அது தவிர மேலும் சில நாடுகளிடம் ஆர்டர் செய்து இருகிறார்கள்.

சில நாடுகளின் பெரிய பெரிய மருத்துவமனைகளில் 3, 4 வெண்டிலேட்டர்களை வைத்துக் கொண்டு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் இந்த விசயத்தில் மலேசியாவை உண்மையிலேயே பாராட்டியே ஆக வேண்டும். முன்னெச்சரிகையுடன் விவேகத்துடன் மலேசியச் சுகாதார அமைச்சு நன்றாகச் செயல் படுகிறது. பாராட்டுகள். வாழ்த்துகள். 




கடைசியாக ஓர் உண்மை. ஆச்சரியம். ஆனால் பெருமைப்பட வேண்டிய உண்மை.

உலகளாவிய கொரோனா தாக்கத்தில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் முதல் பத்து நாடுகளில் மலேசியாவும் ஒரு நாடாகத் திகழ்கிறது. அந்த அளவுக்கு நாட்டைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்கள்.

இந்தப் பெருமையில் ஒரு சிலரின் திமிர்த் தனங்கள் வேதனை அளிக்கின்றன. சட்டத்தை மதிக்காமல் புத்தி கெட்டு ஊர் சுற்றித் திரிகின்றார்கள். கேட்டால் இது எங்கள் கோட்டை என்கிறார்கள்.

கொரோனா தொடையைத் தட்டிக் கொண்டு இருக்கிறது. எடுபட்டவைகளா என்று சாட்டையை எடுத்து தோலை உரிக்கப் போகிறது. அப்படியாவது திருந்தாத ஜென்மங்கள் திருந்தட்டும்.


(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
12.04.2020


பேஸ்புக் பதிவுகள்


Muniandy Segar உங்கள் கட்டுரை துல்லியமாக எழுதப்பட்டது மற்றும் விஞ்ஞானி மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கும் நல்ல மருத்துவ நிர்வாகிகளுக்கும் நன்றி

Muthukrishnan Ipoh கருத்துகளுக்கு நன்றி... மகிழ்ச்சி... என்னதான் புதிது புதிதாக மருந்துகளையும் மருத்துவக் கருவிகளையும் கண்டுபிடித்தாலும்... சமயத்தின் பேரில் ஒன்றுகூடி நோய்ப் பரவலைப் பெரிதாக்குவதைத் தவிர்க்க வேண்டும்.. கொஞ்ச காலத்திற்கு சமூக விலகைக் கடைப்பிடிப்பதே சிறப்பு...