லாவோஸ் நாட்டில் இந்தியப் பாரம்பரியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லாவோஸ் நாட்டில் இந்தியப் பாரம்பரியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 ஏப்ரல் 2020

லாவோஸ் நாட்டில் இந்தியப் பாரம்பரியங்கள்

தென்கிழக்கு ஆசியாவில் லாவோஸ் ஓர் அமைதியான நாடு. மலேசியப் பரப்பளவில் மூன்றில் இரு மடங்கு. வடமேற்கே சீனா; மியான்மார். கிழக்கே வியட்நாம். தெற்கே கம்போடியா. மேற்கே தாய்லாந்து. அதன் தலைநகரம் வியன்டியன் (Vientiane).


லாவோஸ் மக்களின் வரலாற்றில் இந்தியர்களின் தாக்கங்கள் தான் அதிகம். அருகாமையில் சீனா நாடு. இருந்தாலும் அதன் தாக்கங்கள் குறைவு. மிக அருகாமையில் வியட்நாம். இருந்தாலும் அதன் தாக்கங்களும் குறைவு. ஆனால் சற்றுத் தொலைவில் இருக்கும் தாய்லாந்தின் தாக்கங்கள் சற்று அதிகம்.

லாவோஸ் நாட்டில் பெரும்பான்மை மக்கள் மகாபாரதம்; இராமாயணம் இந்திய இதிகாசங்களைத் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அந்த இதிகாசங்களின் தாக்கங்கள் இன்றும் லாவோஸ் நாட்டில் நன்றாகவே உணரப் படுகிறது.
லாவோஸ் அஞ்சல் தலையில் கணேசர் படிவம்

2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இந்தோசீனா நாடுகளுக்கு வணிகம் பார்க்கச் சென்ற இந்தியர்கள் இந்து மதத்தையும் தேரவாத புத்த மதத்தையும் படரச் செய்தார்கள் (Theravada Buddhism). அதில் புத்தம் தழைத்தது. இந்து மதம் குழைந்து போனது.

(People of Laos were influenced by Indian rather than Chinese culture. From the 1st century AD Indian merchants introduced Theravada Buddhism into Laos.)

சான்று: http://www.localhistories.org/laos.html


ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக லாவோஸ் நாடு பகுதி பகுதிகளாகப் பிரிந்து சிதறிப் போய்க் கிடந்தது. அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து ஓர் ஐக்கிய நாடாக உருவாக்கியவர் பா நிகும் (Fa Ngum).

இவரின் அசல் பெயர் ஸ்ரீ சதான கனயுதா மகாராஜா ராஜாதரனா ஸ்ரீ சுத்தான நகரன் (Somdetch Brhat-Anya Fa Ladhuraniya Sri Sadhana Kanayudha Maharaja Brhat Rajadharana Sri Chudhana Negara).

இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். இருந்தாலும் பின்னாட்களில் இவரின் பெயர் பா நிகும் என்று மாற்றம் கண்டு லாவோஸ் வரலாற்றில் நிலைத்துப் போனது. 



இவர் இப்போது பா நிகும் எனும் பெயரில் தான் பிரபலம் அடைந்து உள்ளார். பா நிகும் எனும் மகாராஜா ராஜாதரனா தான், லாவோஸ் நாட்டில் லான் சாங் (Lan Xang) எனும் பேரரசை 1353-ஆம் ஆண்டில் உருவாக்கினார்.

மகாராஜா ராஜாதரனாவின் தந்தையார் பெயர் சம்மாத பிரகதிஞ்ச பைவாதம் (Samdach Brhat-Anya Phya Vath). இவர் ராஜதரணி ஸ்ரீ சுத்தானம் எனும் சிற்றரசின் (King of Rajadharani Sri Sudhana) அரசராக இருந்தார்.

இவருக்கு இரு மனைவிமார்கள். மூத்தவர் கெமர் பேரரசின் இளவரசியார். இரண்டாம் மனைவி தாய்லாந்தின் அயோத்தியா பேரரசின் இளவரசியார். அயோத்தியா அரசர் ராமாதிபதி (King Ramadipati of Ayudhaya) என்பவரின் மகள். 

லாவோஸ் நாட்டில் இந்திரன்

மகாராஜா ராஜாதரனாவின் பாட்டனார் பெயர் சௌனா காம்புங் (Souvanna Khamphong). இவர் லாவோஸ் முவாங் சுவா (Muang Swa) நிலப் பகுதியின் ஆட்சியாளர். இந்த முவாங் சுவா நிலப் பகுதிதான் இப்போது லுவாங் பிரபாங் (Luang Prabang) என்று அழைக்கப் படுகிறது. 

தாத்தா, மகன், பேரன் இவர்களின் சுருக்கம்.

1. மகாராஜா ராஜாதரனா ஸ்ரீ சுத்தான நகரன். லாவோஸ் நாட்டு மொழியில் பா நிகும் (Fa Ngum).

2. மகாராஜா ராஜாதரனா தந்தையாரின் பெயர் சம்மாத பிரகதிஞ்ச பைவாதம் (Samdach Brhat-Anya Phya Vath). லாவோஸ் நாட்டு மொழியில் சாவோ நிகியோ (Chao Fa Ngiao).

3. மகாராஜா ராஜாதரனா தாத்தாவின் பெயர் சௌனா காம்புங் (Souvanna Khamphong). 

லாவோஸ் நாட்டில் சரஸ்வதி தேவி

தாத்தா சௌனா காம்புங்கின் வைப்பாட்டிகளில் ஒருவருடன், மகாராஜா ராஜாதரனாவின் தந்தையார் சம்மாத பிரகதிஞ்ச பைவாதம் நெருக்கமாகப் பழகியதற்காகப் குடும்பத்தில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

மகாராஜா ராஜாதரனாவின் குடும்பம் கம்போடியத் தலைநகரான அங்கோர் வாட்டிற்குத் தப்பிச் சென்றது. கம்போடியாவில் தான் மகாராஜா ராஜாதரனா வளர்க்கப் பட்டார். பின்னர் ஒரு கெமர் நாட்டு இளவரசியை மணந்தார்.

1350-ஆம் ஆண்டு வாக்கில் மகாராஜா ராஜாதரனாவும் அவருடைய தந்தையாரும் கம்போடியாவில் ஓர் இராணுவப் படையை உருவாக்கினார்கள். மீகோங் நதி பள்ளத்தாக்கில் ஏராளமான சண்டைகள். அந்தச் சமயத்தில் மகாராஜா ராஜாதரனாவின் தந்தையார் இறந்தார். 

மகாராஜா ராஜாதரனா

பின்னர் மகாராஜா ராஜாதரனாவின் தாத்தா சௌனா காம்புங் தோற்கடிக்கப் பட்டார். அவரின் அரசு கைப்பற்றப்பட்டது. மகாராஜா ராஜாதரனா தான் கைப்பற்றிய நிலப் பகுதிகளை எல்லாம் ஒன்றிணைத்து லாவோஸ் எனும் நாட்டை உருவாக்கினார்.

லாவோஸ் நாட்டின் முதல் ராஜா. இவரின் வாரிசுகளில் கடைசியாக வந்தவர் ஸ்ரீ சாவாங் வதனா. 1975-ஆம் ஆண்டு காலமானார். அதன் பின்னர் லாவோஸ் நாட்டில் அரச பரம்பரை மறைந்து போனது.

பின்னர் காலத்தில் மகாராஜா ராஜாதரனா எனும் பெயர் பா நிகும் (Fa Ngum) என்று மாற்றம் கண்டு நிலைத்துப் போனது. அசல் மகாராஜா ராஜாதரனா எனும் பெயர் கரைந்து போனது. இருந்தாலும் லாவோஸ் மக்கள் தங்களின் இந்தியப் பின்புலத்தை மறக்கவில்லை.

மகாபாரதத்தில் கிருஷ்ண உபதேசம்

இந்திய இதிகாசங்களின் பிரதான மாந்தர்களுக்கு மரியாதை மதிப்பு கொடுக்கும் வகையில் அஞ்சல் தலைகளை வெளியிட்டு வருகிறார்கள்.

லாவோஸ் பற்றி ஒரு சின்ன தகவல். கரும் பச்சை மலைகள். ஆழ்மஞ்சள் மீகோங் நதிக்கரைக் காடுகள் (Mekong River). இயற்கை எழில் கொஞ்சும் அழகிய பசும் மழை மேகங்கள். இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் செதுக்கியச் சிற்பங்களாய் மலை மேடுகள்.

இடை இடையே கோபுர வாசல்களாய் குன்றுக் குகைகள். பச்சை பசேல் கானகத்து ஓவியங்கள். நாடு முழுவதும் நடனம் ஆடும் வயல்காட்டுப் புல்வெளிகள். கூடவே தங்க ரத நெல்மணிக் கோலங்கள். வர்ணனை போதுங்களா.

லாவோஸ் அரண்மனை நாட்டியமணி

ஆனாலும் அங்கே வலிமிகுந்த கடந்த கால நினைவுகள். முதலில் பிரெஞ்சுக்காரர்களின் சுரண்டல்கள். அடுத்து ஜப்பானியர்களின் மிரட்டல்கள். அடுத்து வியட்நாம் போரின் வேதனைகள். லாவோஸ் மக்கள் இன்றும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். பாவம் அவர்கள்.

உலகில் அதிகமான குண்டுகளைத் தன்னுள் புதைத்துக் கொண்டு வாழும் நாடு லாவோஸ். அந்த நாட்டின் துயர்ப் புகழாரங்கள் அன்றாடம் காம்போதிகள் பாடுகின்றன.


இராமர், சீதை, இராவணன், அனுமான்
ஆகியோரைச் சித்தரிக்கும் அஞ்சல் தலைகள்

அந்த நாட்டில் 67 விழுக்காடு புத்த மதம். 30 விழுக்காடு நாட்டுப்புற ஆன்மீகவாதங்கள் (animism). ஒரே ஒரு விழுக்காட்டு தான் இந்து மதத்தினர்.
இருந்தாலும் பாருங்கள்... இந்திய இதிகாசங்களான மகாபாரதம்; இராமாயணம் தொடர்பான கதாமாந்தர்களுக்கு அஞ்சல் தலைகளை வெளியிட்டு இந்து மதத்திற்குப் பெருமை செய்து இருக்கிறார்கள். 


மணல் ஸ்தூபி

இதில் ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் சரஸ்வதி தேவிக்குத் தான் அதிகமான அஞ்சல் தலைகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.

1955-ஆம் ஆண்டில் இராமர், சீதை, இராவணன், அனுமான் ஆகியோரைச் சித்தரிக்கும் 6 அஞ்சல் தலைகளை வெளியிட்டார்கள். 

சரஸ்வதி தேவி இந்திரன்

1969-ஆம் ஆண்டில் லாவோஸ் மீண்டும் 8 அஞ்சல் தலைகளின் தொகுப்பை வெளியிட்டது. அதில் இராமாயணத்தின் காட்சிகள் இடம் பெற்றன.

1971-ஆம் ஆண்டில் மற்றோர் அஞ்சல் தலையை வெளியிட்டது. அதில் விஷ்ணுவின் மீன் அவதாரம் அனுமனுடன் சண்டையிடுவதைச் சித்தரிக்கிறது.

இலவகுசன், இராமர், சீதை, இராவணன் மற்றும் அனுமான்
ஆகியோரைச் சித்தரிக்கும் லாவோஸ் நாட்டு அஞ்சல் தலைகள்

1974-ஆம் ஆண்டில் சரஸ்வதி, இந்திரன் மற்றும் பிரம்மா ஆகியோரைச் சித்தரிக்கும் 3 அஞ்சல் தலைகளின் தொகுப்பை வெளியிட்டது.

2004-ஆம் ஆண்டில் இராமாயணத்தின் 4 காட்சிகளைக் கொண்ட 4 அஞ்சல் தலைகளின் தொகுப்பை வெளியிட்டது.

மகாபாரதக் காட்சி

2006-ஆம் ஆண்டில் இலவகுசன், இராமர், சீதை, இராவணன் மற்றும் அனுமான் ஆகியோரைச் சித்தரிக்கும் 5 அஞ்சல் தலைகளின் தொகுப்பை வெளியிட்டது.

அண்மையில் விநாயகர் படத்தையும் அஞ்சல் தலையாக வெளியீடு செய்து உள்ளது. லாவோஸ் நாட்டைப் பற்றிய தகவல்கள் மேலும் வரும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.04.2020