மாறன் மகாவம்சன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாறன் மகாவம்சன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 நவம்பர் 2018

மாறன் மகாவம்சன்

கெடா வரலாற்று ஆய்வு

காலம் காலமாகக் கெடா வரலாற்றை மேற்கோள் காட்டுவது கெடா வரலாற்றுப் பதிவேடுகள் (Kedah Annals). அதில் மாறன் மகாவம்சன் (Maaran Mahavamsan) எனும் மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa) என்பவர் தான் கெடா சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் என்று சொல்லப் படுகிறது. சரி.
 
Alexander The Great

ஆனால் அந்த மாறன் மகாவம்சன் என்பவர் மாசிடோனியாவில் இருந்து வந்தவர் என்று உள்ளூர் வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அடம் பிடிக்கிறார்கள். அது சரியன்று. தப்பு.

மாறன் மகாவம்சன் என்பவர் மகா அலெக்ஸாண்டரின் பரம்பரையில் இருந்து வந்தவரா? இது எப்படி என்று பார்ப்போம்.

(சான்று: LAMB, A. 1960 Report on the Excavation and Reconstruction of Chandi Bukit Batu Pahat, Central Kedah, Federation Museums Journal N.S.5.)

உண்மையில் மாறன் மகாவம்சன் என்பவர் பாரசீகத்தில் இருந்து வந்தவர். மாசிடோனியா எனும் ரோமாபுரியில் இருந்து வரவில்லை. எப்படி என்று கதையைக் கேளுங்கள்.

கெடாவின் வரலாறு மாறன் மகாவம்சன் காலத்தில் இருந்து தான் தொடங்குகிறது.
 

மகா அலெக்ஸாண்டர் (Alexander the Great) கி.மு. 326-இல் இந்தியாவின் மீது படை எடுத்தார். பலருக்கும் தெரிந்த விசயம். அதற்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பாரசீகத்தின் மீது ஒரு படையெடுத்தார்.

பாரசீகம் என்றால் ஈரான் நாட்டைக் குறிக்கும். ஆரியன் (Land of the Aryans) எனும் சொல்லில் இருந்து தான் ஈரான் என்று அந்த நாட்டிற்குப் பெயரும் வந்தது. முன்பு காலத்தில் ஈரானைப் பாரசீகம் என்று அழைத்தார்கள். தெரிந்து கொள்ளுங்கள். ஆரியன் எனும் சொல்லில் இருந்து தான் ஈரான் எனும் சொல்லே உருவானது.

ஈரான் நாட்டின் தென் பகுதியில் பெர்சிஸ் (Persis) எனும் சமவெளி உள்ளது. ஈரான் மீது படை எடுத்து வந்த கிரேக்கர்கள் ஈரானைப் பெர்சிஸ் என்று அழைத்தார்கள். காலப் போக்கில் ஈரான் நாடு பெர்சியா (Persia) ஆனது. தமிழர்கள் பார்சீகம் என்று அழைத்தார்கள். 1935-ஆம் ஆண்டு பெர்சியா என்பது ஈரான் ஆனது.

(சான்று: https://www.britannica.com/place/Persia - The term Persia was used for centuries and originated from a region of southern Iran formerly known as Persis.)

கி.மு. 330-களில் பாரசீகத்தின் மேற்குப் பகுதியை டாரியஸ் III (King Darius III) எனும் அரசர் ஆட்சி செய்து வந்தார். காவுகமேலா எனும் இடத்தில் (Battle of Gaugamela - 1st October 331 BCE) மகா அலெக்ஸாண்டர் படையுடன் ஒரு பயங்கரமான போர்.
 

இந்தப் போருக்கு அரபேலா போர் (Battle of Arbela) எனும் மற்றொரு பெயரும் உண்டு. அந்தப் போரில் அரசர் டாரியஸ் தோற்றுப் போனார். மகா அலெக்ஸாண்டருக்கு வெற்றி.

இந்தப் போர் முடிந்ததும் மகா அலெக்ஸாண்டர், ஈரான் நாட்டின் கிழக்குப் பக்கமாய் வந்தார். அப்போது அந்தப் பகுதியை ராஜா கீதா (Raja Kida Hindi of Hindostan) எனும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசர் ஆட்சி செய்து வந்தார்.

இந்த ராஜா கீதாவிற்கு அழகிய மகள் ஒருத்தி இருந்தார். அவருடைய பெயர் இளவரசி ஷார் பெரியா (Shaher Ul Beriah). இந்தக் காலக் கட்டத்தில் இந்து மதம் தான் பிரதான மதம். வேறு எந்த மதமும் தோன்றவில்லை.

ஆக ஷார் பெரியா எனும் இளவரசியை மகா அலெக்ஸாண்டர் திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் தந்தையார் ராஜா கீதாவிற்கு 300,000 தங்க தினார் நாணயங்களை மகா அலெக்ஸாண்டர் அன்பளிப்பாக வழங்கினார்.

இந்தத் திருமணத்திற்குப் பின்னர் மகா அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படை எடுத்தார். போரஸ் (King Porus) மன்னரை எதிர்த்துப் போரிட்டார். போரஸ் மன்னனின் துணிச்சலைக் கண்டு அவருக்கே அவருடைய நாட்டைத் திருப்பிக் கொடுத்தார். அது ஒரு தனி வரலாறு.

(https://en.wikipedia.org/wiki/Battle_of_the_Hydaspes - The Battle of the Hydaspes was fought in 326 BC between Alexander the Great and King Porus of the Paurava kingdom on the banks of the river Jhelum)
 

இன்னும் ஒரு விசயம். அலெக்ஸாண்டர் - போரஸ் போர் நடக்கும் போது ஈரான் இளவரசி ஷார் பெரியாவும் அலெக்ஸாண்டருடன் இருந்து இருக்கிறார்.

போர் முடிந்து அலெக்ஸாண்டர் திரும்பிப் போகும் போது இளவரசி ஷார் பெரியாவைப் பாரசீகத்திலேயே விட்டுச் சென்று இருக்கிறார். பின்னர் அவர் ரோமாபுரிக்கு போகிற வழியில் மர்மமாய் இறந்து போனார். அதுவும் தனி ஒரு கதை.

இந்த மகா அலெக்ஸாண்டர் - இளவரசி ஷார் பெரியா திருமணத்தின் 11-ஆவது தலைமுறை நாயகர் தான் மாறன் மகாவம்சன். புரியுதுங்களா.

மகா அலெக்ஸாண்டர் - இளவரசி ஷார் பெரியாவிற்கும் பிறந்த குழந்தைகளின் வழிவழி வந்தவர்களில் 11-ஆவது தலைமுறையைச் சேர்ந்தவர் தான் மாறன் மகாவம்சன் (Maaran Mahavamsan).

ஆக மாறன் மகாவம்சன் என்பவர் ரோமாபுரியில் இருந்து வரவில்லை. மாசிடோனியாவில் இருந்தும் வரவில்லை. அவர் பாரசீகத்தில் இருந்து வந்தவர்.

பாரசீகத்தின் அப்போதைய பிரதான மதம் மஸ்தியாசனம் அல்லது மத்தியாசனா (Mazdayasna) எனும் மதமாகும்.

(சான்று: Boyd, James W.; et al. (1979), "Is Zoroastrianism Dualistic or Monotheistic?", Journal of the American Academy of Religion, Vol. XLVII, No. 4, pp. 557–588)

மத்தியாசனா மதம் என்பது சோரோஸ்டிரியம் (Zoroastrianism) எனும் வழிப்பாட்டில் இருந்து தோன்றியது. இந்த மத்தியாசனா மதமும் இந்து மதமும் சம காலத்தில் இருந்த மதங்கள்.
 
King Porous

இந்து மதம் சிந்து வெளியில் துரிதமாகப் பரவி வரும் காலத்தில் மத்தியாசனா மதம் பாரசீகத்தில் படர்ந்து பரவி நின்றது.

கிறிஸ்துவ மதம் தோன்றுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்லி வருகிறேன்.

மத்தியாசனா மதம் இந்து மதத்திற்குப் பின்னர் தோன்றி இருக்கலாம் என்பது வரலாற்று ஆசிரியர்கள் பலரின் கருத்து. சோரோஸ்டிரியம் என்பது ஒரு கிரேக்கச் சொல்.

நாம் இங்கே மதங்களைப் பற்றி விவாதிக்கவில்லை. அது நமக்குத் தேவையும் இல்லை. மாறன் மகாவம்சன் என்பவர் எங்கே இருந்து வந்தார். எப்படி கெடாவிற்கு வந்தார் என்பதைப் பற்றித் தான் அலசி ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம். சரிங்களா.

(சான்று: https://prezi.com/h5nqop0pj6h5/hinduism-and-zoroastrianism/)

(சான்று: Gerardo Eastburn. The Esoteric Codex: Zoroastrianism. Books.google.com. p. 1)

இன்னும் ஒரு விசயம். ஒரு தாழ்மையான தனிப்பட்ட பதிவு.. இந்தக் கட்டுரை மிகச் சரியான வரலாற்றுச் சான்றுகளுடன் முன் வைக்கப் படுகிறது. இருந்தாலும் விமர்சன விவாதங்கள் வரலாம். அப்படி ஒரு சூழ்நிலையில் எந்தக் கல்வி மேடையிலும் இந்தக் கட்டுரையின் சான்றுகளை உறுதிபடுத்தத் தயாராக இருக்கின்றோம்.

மாறன் மகாவம்சன். இந்தப் பெயரைச் சற்று உற்றுக் கவனியுங்கள். மாறன் மகாவம்சன் என்பவர் பாரசீகத்தில் இருந்து வந்தவர் தான். இல்லை என்று சொல்லவில்லை.

இருந்தாலும் அந்தப் பெயர் ஓர் இந்து மதப் பெயராகத் தெரியவில்லையா. மாறன் எனும் சொல் பாண்டியனைக் குறிக்கும் சொல்லாகும். மாரன் எனும் சொல் மன்மதனைக் குறிக்கும் சொல்லாகும்.

மாரன் என்பது ஒரு வடச் சொல். மாறன் என்பது தமிழ்ச் சொல்.

வேந்துமேம் பட்ட பூந்தார் மாற

எனும் சொற்கள் புறநானூற்றில் சொல்லப் படுகின்றன.

(சான்று: http://www.tamilvu.org/slet/l1280/l1280spg.jsp?no=55&file=l1280d10.htm).

புறநானூறு எனும் காப்பியம் இடைச் சங்கக் காலத்தில் தோன்றியது. இந்தக் காலப் பகுதி கி.மு. நான்காம் நூற்றாண்டில் இருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை நீடித்தது.

மதுரையை மையமாகக் கொண்டு தமிழ்ப் புலவர்கள் சங்கம் அமைத்தனர். தமிழ் வளர்த்தனர். அதனால் சங்க காலம் என  பெயர் சூட்டப்பட்டது. சரி.

இந்தச் சங்கக் காலத்தில் மாறன் எனும் பெயர் புழக்கத்தில் இருந்தது. தமிழகத்தை ஆட்சி செய்த பாண்டிய மன்னனின் தாக்கத்தினால் அப்போது பிறந்த குழந்தைகளுக்கு மாறன் என்று பெயர் சூட்டினார்கள்.

அந்த வகையில் தான் மாறன் மகாவம்சனுக்குப் பெயர் வந்தது. இந்த மாறன் மகாவம்சனைத் தான் மேரோங் மகாவங்சா (Merong Mahawangsa) என்று கெடா வரலாற்றுப் பதிவேடுகள் (Kedah Annals) சான்று கூறுகின்றன.

(சான்று: R. O. Winstedt (December 1938). "The Kedah Annals". Journal of the Malayan Branch of the Royal Asiatic Society. 16 (2 (131)): 31–35.)

மகா என்பது சமஸ்கிருதப் புறமொழிச் சொல். உயர்ந்த அல்லது உன்னதம் என்பதைக் குறிக்கிறது.

முன்பு காலத்தில் பாய்மரக் கப்பல்களில் கடல் கடந்து போய் வணிகம் செய்து வந்தார்கள். அந்த வகையில் மாறன் மகாவம்சன் எனும் அரச நாயகர் தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு வந்து இருக்கிறார்.

அங்கே இருந்து கெடாவிற்கு வந்து இருக்கிறார். அப்படியே கெடா மன்னராட்சியையும் உருவாக்கி இருக்கிறார். மாறன் மகாவம்சன் என்பவர் தான் கெடா வரலாற்றின் தலையாய நாயகன். வேறு யாரும் அல்ல.

பூஜாங் சமவெளி எனும் இந்து சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் நாட்டு விழா செய்த நாயகனும் அதே மாறன் மகாவம்சன் என்பவர் தான்.

பள்ளிப்பாட நூல்களிலும் சரி; உயர்க் கல்விக் கூடங்களிலும் சரி; அறிவியல் அகழாய்வுச் சாலைகளிலும் சரி; உண்மையான வரலாற்றை நேர்மையான முறையில் பதிவு செய்ய வேண்டும். அதுவே தார்மீகப் பொறுப்புகளின் தாரக மந்திரங்கள்.

ஏழு ஸ்வரங்களில் சிந்து பைரவி இனிக்கும்.

சாருகேசி இசைக்கும்.

கௌரி மனோகரி மணக்கும்.

நவநீதம் நளினத்தில் தனித்துப் போகும்.

ராகங்கள் மாறுவது இல்லை.

அதே போல வரலாறும் மாறுவது இல்லை.