மலேசிய இந்தியர்கள் தியாகிகளா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசிய இந்தியர்கள் தியாகிகளா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 செப்டம்பர் 2019

மலேசிய இந்தியர்கள் தியாகிகளா?

மலேசிய இந்தியர்களின் மூதாதையர் தியாகிகளா? அல்லது கூலிக்கு மாரடித்தவர்களா? 

அண்மைய காலங்களில் சமூக ஊடகங்களில் பரவலாகி வரும் ஒரு கேள்வி.

இப்போதைய மலேசிய இந்தியர்களின் மூதாதையர் தியாகிகள் என்பதை ஒரு சாரார் ஆதரிக்கிறார்கள். மறு சாரார் மறுக்கிறார்கள். தியாகிகள் என்று சொல்பவர்கள் சிலரின் கருத்துகள் ரொம்பவுமே அழுத்தமானவை. உணர்வுகளைக் கொப்பளிக்க வைக்கும் பதிவுகள். அவற்றைப் பின்னர் பார்ப்போம்.




மலேசிய இந்தியர்களின் மூதாதையர் தியாகிகள் அல்ல. அவர்கள் கூலிக்கு மாரடித்தவர்கள் என்று சொல்பவர்கள் என்ன மாதிரியான காரணங்களைச் சொல்கிறார்கள் என்பதை முதலில் பார்ப்போம்.

மலேசிய இந்தியர்களின் மூதாதையர் கூலி வேலை செய்வதற்காக மலாயாவுக்கு அழைத்து வரப் பட்டவர்கள். செய்த வேலைக்கு அவர்கள் கூலி வாங்கினார்கள். அதாவது வாங்கிய கூலிக்கு வஞ்சகம் இல்லாமல் வேலை செய்தார்கள்.

ஆகவே செய்த வேலைக்கு கூலி வாங்கியவர்களைத் தியாகிகள் என்று எப்படிச் சொல்ல முடியும் என்று வாதிடுகிறார்கள்.

கூலிக்கு வேலை செய்தவர்களைத் தியாகி என்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது. மலேசிய இந்தியர்கள் இந்த நாட்டின் குடிமக்கள். அந்த அடிப்படையில் தான் அவர்களுடைய கோரிக்கைகளும் இருக்க வேண்டும்.

மலேசிய இந்தியர்களின் மூதாதையர் வந்தார்கள்; வாழ்ந்தார்கள்; வீழ்ந்தார்கள். அப்படி இருக்கும் போது அவர்களை எப்படி தியாகிகள் என்று சொல்ல முடியும் என்று திருப்பிக் கேட்கிறார்கள்.




காட்டை வெட்டினோம், ரோட்டைப் போட்டோம், இரயில் பாதை போட்டோம் என்று இன்னும் எத்தனை நாளைக்குத் தான் சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறோம். எத்தனை முறைகளுக்குத் தான் அதையே திரும்பத் திரும்ப இராமாயணம் பாடிக் கொண்டு இருக்கப் போகிறோம்.

அப்படிப் பார்த்தால் சீனர்கள் நம்மை விட இந்த நாட்டின் வளர்ச்சிக்குப் அதிகமாகப் பாடு பட்டு இருக்கிறார்கள். நாம் இந்த நாட்டின் குடி மக்கள். நம் அடிப்படை உரிமைகளுக்குப் போராடும் குணம் தான் நமக்கு இப்போதைக்குத் தேவை என்றும் சொல்கிறார்கள்.

அமெரிக்கா நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு காலத்தில் இங்கிலாந்து நாட்டின் காலனி நாடாக இருந்தது. இப்போது பாருங்கள். அமெரிக்கா ஒரு மாபெரும் வல்லரசு. ஆட்சி செய்த இங்கிலாந்து நாடே அடக்கி வாசிக்கிறது.




அமெரிக்கா என்பது உலகின் பல நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் பலரும் ஐக்கியமாகிப் போன நாடு. அப்படிப் புலம் பெயர்ந்தவர்கள் அனைவரும்  இப்போது அந்த நாட்டின் குடி மக்கள்.

அமெரிக்கர்கள் எனும் அந்த ஒரே இன அடையாளத்தை வைத்துக் கொண்டு தன் அவர்கள் முன்னேறி வருகிறார்கள். உலகப் பொருளாதாரத்தை இறுக்கிப் பிடித்து உலகத்தையே ஆட்டிப் படைக்கிறார்கள்.

உலகப் போலீஸ்காரர் என்று பேர் எடுத்தாலும் கட்டப் பஞ்சாயத்து செய்து உகாண்டா இடி அமினையே மிஞ்சிப் போகிறார்கள். இது ஒருவரின் கருத்து. சரி. அந்தப் பக்கம் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

மலேசிய இந்தியர்கள் கூலிக்கு மாரடித்தவர்களா? யார் சொன்னது. எந்த விளக்கெண்ணெய் சொன்னது. என்னிடம் வரச் சொல்லுங்கள். நன்றாகக் கேள்வி கேட்டு அனுப்புகிறேன் என்று ஆத்திரம் ஆவியாகி கண்களில் அனல் பறக்க கொப்பளிக்கிறார் ஓர் அன்பர். பெந்தோங்கைச் சேர்ந்த எழுத்தாளர் பெந்தோங் சத்தியா ராமன். 1980-களில் மலேசியாவில் புகழ்பெற்ற எழுத்தாளர்.

சோறு போட்ட கைக்கு சூடு போடுகிறவர்கள் மலேசிய இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்ள கொஞ்சமும் லாயக்கு இல்லாதவர்கள் என்று குமுறுகிறார்.

அவரவர் கருத்துகளைச் சொல்ல அவரவருக்கு உரிமை உள்ளது. ஆனால் மலேசிய இந்தியர்கள் கூலிக்கு மாரடித்தவர்கள். அவர்கள் தியாகிகள் அல்ல என்று வம்சாவளி உணர்வு கொண்டவர்கள் எவரும் சொல்ல மாட்டார்கள். சொல்ல மனசும் வராது.




மலேசிய இந்தியர்கள் ஆயிரம் ஆயிரம் வேதனைச் சோதனைகளைக் கடந்து வந்தவர்கள். மலாயாத் தோட்டத் தமிழர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்கும் மறக்காது. மறப்பதற்கு மனசும் வராது. எப்படி மறக்க முடியும். எப்படிங்க மறைக்க முடியும்.

மலாயா தமிழர்கள் இந்த மண்ணில் எத்தனையோ நூறாண்டுகளுக்கு முன்னரே கால் பதித்து விட்டார்கள். இது ஒரு வரலாற்று உண்மை. அது மட்டும் அல்ல. உலக வரலாற்றில் தவிர்க்க முடியாத உண்மையுங்கூட.

மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய நிலைமை. என்ன தான் வரலாற்றுப் படிவங்களைச் சிதைத்துப் போட்டாலும்; மறைத்துப் போட்டாலும்; மலாயாத் தமிழர்களின் வரலாற்று உண்மைகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். என்றைக்கும் அவை வரலாறு பேசும் வாய்மையான உண்மைகள்.

வரலாற்றை வரலாறாகப் பார்க்கும் பக்குவம் வேண்டும். வரலாற்றை வரலாறாகப் பார்க்கும் நல்ல எண்ணமும் வேண்டும். வரலாற்றை முறையாகப் படிக்காமல் அறியாமையில் சொல்வது மிகவும் தப்பு.




கடந்த 200 - 250 ஆண்டு காலமாக இந்த நாட்டிற்காக உழைத்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்களைத் தியாகிகள் என்று சொல்வதில் தப்பு இல்லை என்பதே என் கருத்து. கூலிக்கு மாரடித்தார்கள் என்று சொல்வது பெரிய தப்பு.

ஓர் அனைத்துலக விளையாட்டுப் போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கம் அல்லது ஒரு தங்கப் பதக்கம் பெற்றவருக்கு டத்தோ விருது... 2 இலட்சம், 5 இலட்சம் ரொக்கம். மாதாந்திரப் பென்சனாக 2000 லிருந்து 3000. இதில் வீரர் தீரர் எனும் புகழ் மாலைகள். இரண்டு மூன்று வருட விளையாட்டு அனுபவத்தில் இத்தனைச் சலுகைகள்.

ஆனால் 100 - 200 வருடங்களாக உழைத்தவர்களுக்கு வீரர் பட்டம் வேண்டாங்க... வீர விருதும் வேண்டாங்க... ரொக்கமாக இலட்சம் ஆயிரங்கள் வேண்டாங்க... அவர்களின் உழைப்பிற்கு ‘தியாகிகள்’ எனும் ஓர் அடைமொழியைக் கொடுத்து விட்டுப் போகலாமே. அந்த அடை மொழிக்கு இப்படி ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் வேண்டாமே. அதற்கு வேறு சப்போர்ட். அட… சப்போர்ட் செய்வதற்கும் ஒரு விவஸ்தை வேண்டாமா.




இதிலும் கூடவா இன ஒதுக்கல்கள்... இன ஓர வஞ்சனைகள். மூதாதைய மலேசிய இந்தியர்களுக்குத் தியாகிகள் அடைமொழி வழங்கி அவர்களை நினைத்துப் பார்ப்பதில் என்னங்க தப்பு.

விதை சத்தம் இல்லாமல் முளைக்கிறது... மரம் சத்தத்தோடு முறிகிறது... அம்புட்டு தான்.

இந்த நாட்டில் இந்தியர் இனம் சில நூற்றாண்டுகளுக்கும் மேலாக சத்தம் இல்லாத விதைகளாய்த் தான் இருந்தார்கள். ஆனால் இப்போது ஏற்பட்டு உள்ள அரசியல் குளறுபடிகளைச் சலவை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைக் கோரிக்கைகளாக முன் வைக்கிறார்கள். அதில் என்ன தப்பு. இடையில் புகுந்து மலேசிய இந்தியர்கள் கூலிக்கு மாரடிக்க வந்தவர்கள் எனும் ஜிங்கு ஜிக்கான் நாடகம் தேவையே இல்லை.

மலேசிய இந்தியர்களுக்குத் தியாகிகள் பட்டத்திற்குத் தோள் கொடுக்க விருப்பம் இல்லை என்றால் வாயை மூடிக் கொண்டு இருப்பதே சிறப்பு. வெந்த புண்ணில் பிளேடு போட்டு வேடிக்கை பார்க்காமல் இருந்தால் பெரிய புண்ணியம். 




தமிழ் ஆர்வலரும் சிந்தனையாளருமான ஸ்ரீ காளி கருப்பர் உபசாகர் 16.08.2019-ஆம் தேதி பேஸ்புக் ஊடகத்தில் பதிவு செய்த கருத்து:

சில பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மலேசிய மண்ணில் தடம் பதித்து விட்ட உழைப்பாளிகள். இந்த நாட்டைப் பொன் விளையும் பூமியாக மாற்றிக் காட்டிய படைப்பாளிகள். அதை மறக்கலாமா? இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டுப் பல தியாகங்கள் செய்தவர்கள் மலேசிய இந்தியர்கள்.

எழுத்தாளர்  சத்தியா ராமன் மேலும் சொல்கிறார். முன்னுக்கு பின் முரணான சுய விளக்கம் ஒரு தெளிவு இல்லாத சிந்தனையைக் குறிக்கும். இந்த நாட்டு இந்தியர்கள் அவர்கள் செய்த வேலைக்கு மட்டும் கூலி பெற்று விட்டார்கள் என்று சொல்வது தப்பு. அவர்களைத் தியாகிகள் என்று முத்திரை குத்தக் கூடாது என்று சொன்னால் அது தப்பிலும் பெரிய தப்பு.




ஒருவர் ஆன்மீகவாதியாக இருக்கலாம். நாத்திகராக இருக்கலாம். பிரச்சினை இல்லை. ஆனால் இந்த நாட்டில் இந்தியர்கள் பட்ட அவலங்களின் மேல் அக்கறைக் காட்டாமல் இருப்பது பெரிய ஓர் அலட்சியப் போக்காகும்.

அதுவும் இல்லை என்றால் அரசியல் சார்பில் ஒரு பக்க வாதமாக இருக்கலாம். அப்படியும் இருக்கலாம். வேலைக்கு தகுந்த சம்பளம் கொடுக்கப் படுகிறது. இதில் என்ன தியாகி பட்டம் வேறு என்று வினா வைப்பது ரொம்பவும் தவறு.

காலை எட்டு மணிக்கு வேலைக்குப் போய் மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்புவர்களுக்கு வேண்டும் என்றால் மலேசிய இந்தியர்கள் கூலிக்கு மாரடித்தவர்கள் எனும் கூற்று பொருந்தி வரும்.

ஆனால் இந்தியாவில் இருந்து இங்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அழைத்து வரப்பட்ட இந்தியர்களைக் கொத்தடிமைகளாகக் கொடுமைப் படுத்தினார்கள். 




அதிகாலை தொடங்கிச் சூரியன் மறையும் வரை துன்புறுத்தி வேலை வாங்கினார்கள்.  20, 30 காசு சம்பளத்திற்காக நாள் முழுதும் சிறைப் பட்டு சிதைக்கப் பட்டார்கள். அது தியாகம் இல்லையா?

எத்தனை இன்னல் வந்தாலும் பொறுமையோடும் சகிப்புத் தன்னையோடும் நாளும் செத்து செத்து வாழ்ந்தார்களே அது தியாகம் இல்லையா?

முதலில் அவர்களது அயராத உழைப்புக்கு தருந்த ஊதியம் கொடுக்கப் பட்டதா? அதற்கு எவராலும் பதில் சொல்ல முடியுமா? இன்று இந்த நாட்டில் மலிந்து கிடக்கும் மற்ற நாட்டுக்காரர்களுக்கு யாருங்க காரணம்.

திறமை இல்லா விட்டாலும் பெரிய சம்பளம் வேண்டும். உடல் உழைப்பு வேலைகள் வேண்டாம். படித்த படிப்புக்கு தகுந்த வேலையே வேண்டும் என்கிற பிடிவாதம் இங்கே பலருக்கும் உண்டு.. தகுந்த வேலை கிடைக்கும் வரை வேறு வேலைகளில் நாட்டம் இல்லாமல் போவது இப்போதைக்குப் பல பட்டதாரிகளின் நடப்பு விவகாரம். அது போன்ற காரணங்களைக் கூறி விரல் நீட்டலாம்.

ஆக உடலை வருத்தி உழைக்காமல் சொகுசாய் உள்ளவர்களே தியாகிகளாய் ஆக்கப்படும் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அன்று மலாயாவாக இருந்த நாட்டை மலேசியாவாக மாற்றி அமைக்க அரும்பாடு பட்டவர்கள் மலேசிய இந்தியர்கள். 




தனக்காக யோசிக்கத் தெரியாமல் நாட்டுக்காக நிறையவே ஆசா பாசங்களை இழந்த இந்தியர்களைத் தியாகிகள் என்று சொல்வதில் என்ன தவறு?

அதை விட்டு விட்டு "படிப்பது இராமாயணம்... இடிப்பது பெருமாள் கோவிலாக’ இருக்கக் கூடாது என்பது அந்த எழுத்தாளரின் கருத்து.

ஆக அவ்வப்போது சில அறைகுறை கூஜா தூக்கிகளும் வருவார்கள். போவார்கள். அவர்களின் சுய லாபத்திற்காக எதையாவது உளறி விட்டுச் செல்வார்கள். இவர்களுக்கு ஜால்ரா போடுவதற்காகவே சில வெங்காயச் சட்ணிகளும் இருக்கவே செய்வார்கள்.

மலேசிய இந்தியர்கள் நேற்று முந்தா நாள் மலாயாவுக்கு விருந்தாளிகளாக வந்தவர்கள் அல்ல. அவர் உண்மையிலேயே தியாகிகள். கூலிக்கு மாரடிக்க வந்தவர்கள் அல்ல.

மலேசிய இந்தியர்கள் இந்த மலையகத்தைத் தங்கள் உழைப்பால் உயர்த்தி உலகமே உற்றுப் பார்க்கும் அளவுக்கு கெளரவப் படுத்தியவர்கள்.

நம் மூதாதையர்கள் உழைச்சுப் போட்டுப் போன சுகத்தில் தான் இப்போது நாம் சொகுசாய்க் கால் மேல் கால் போட்டு சீரியல் பார்க்கிறோம். சொகுசாய்ச் சவடால் பேசிக் கொண்டு இருக்கிறோம். ரொம்பவும் வாசிக்க வேண்டாமே. அவர்கள் இல்லை என்றால் நீங்களும் இல்லை. நானும் இல்லை. அதை மறக்க வேண்டாமே.

நம்முடைய மூதாதையர்களை மறக்காமல் அவர்களை என்றைக்கும் நினைத்துப் பார்ப்போம். காலா காலத்திற்கும் அவர்களுக்கு நன்றி சொல்வோம். நம்முடைய மூதாதையர்களைக் கூலிக்கு மாரடித்தவர்கள் என்று வாய் கூசாமல் பேசுவதை நிறுத்திக் கொள்வோம்.

மலேசிய இந்தியர்கள் அன்றைக்கும் அஞ்சலிகள். இன்றைக்கும் அஞ்சலிகள். இனி என்றைக்கும் அஞ்சலிகள்… புஷ்பாஞ்சலிகள்.




01 செப்டம்பர் 2019

மலேசிய இந்தியர்கள் தியாகிகளா?

மலேசிய இந்தியர்கள் கூலி வேலை செய்வதற்காக மலாயாவுக்கு அழைத்து வரப் பட்டவர்கள். செய்த வேலைக்கு கூலி வாங்கினார்கள். ஆகவே அவர்களைத் தியாகிகள் என்று சொல்வது தவறு. இது ஒரு சாராரின் கருத்து. உங்கள் கருத்து என்ன? என் கருத்தைப் பதிவு செய்கிறேன். 


கூலிக்கு வேலை செய்தவர்களும்; கூலிக்கு மாரடித்தவர்களும்; கூலிக்குக் குப்பை கொட்டியவர்களும்; எல்லாம் ஒன்று தான். கூலி வேலைக்கு வந்தவர்கள் கூனிக் குருகி கூலி வாங்கிக் கொண்டு வேலை செய்தார்கள். அது ஒரு சிலரின் கருத்து. சரி.

அந்தக் கூலி வேலையின் பின்னணியில் மறைந்து நிற்கும் சேவை மனப்பான்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும். அந்தச்  சேவை மனப்பான்மையில் அடிச் சுரமாக ஆழ்ந்து நிற்கும் தியாக உணர்வையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மலாயாவில காசும் பணமும் கித்தா மரத்தில் காய்ச்சுத் தொங்குது. காற்று அடித்தால் ஒரு பக்கம் ஒத்த ஒத்த வெள்ளியா கொட்டும். ஒரு பக்கம் அஞ்சு அஞ்சு வெள்ளியா கொட்டும். இன்னொரு பக்கம் பத்து பத்து வெள்ளியா கொட்டும்.

எப்ப கொட்டும்னு தெரியாது. பொறுக்கி எடுக்கிறது வேலை தான். ஆள் பிடிக்கப் போன கங்காணிகள் ஆசை ஆசையாய் அவிழ்த்து விட்ட இசைப் பாடல்கள்.

250 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த துரோகத்தின் மறுவடிவங்கள். இருந்தாலும் கிடைத்த கூலிக்கு வஞ்சகம் இல்லாமல் வேலை செய்து இருக்கிறார்கள்.

மலாயா கித்தா மரங்களில் காய்த்துத் தொங்கிய பணம் காசை மூட்டை மூட்டையாய்க் கட்டி இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கவே நம் மூதாதையர்கள் அழைத்து வரப் பட்டார்கள்.

நம் மூதாதையர்கள் வந்து 250 ஆண்டுகள் ஆகின்றன. வெள்ளைக்காரர்களும் கப்பல் கப்பலாய் பணத்தை ஏற்றிக் கொண்டு போய் விட்டார்கள். மாட்டிக் கொண்டு தவிப்பது நம் மூதாதையர்கள்...

கூலி வேலைக்கு வந்தவர்கள் காடுகளை அழித்தார்கள். அந்தக் காடுகளில் இருந்த வன விலங்குகளுக்குப் பலியானவர்கள். 250 ஆண்டு கால மலேசிய இந்தியர்கள் வரலாற்றில் 3,50,000 இந்தியர்கள் மலாயா காடுகளில் பலியாகி இருக்கிறார்கள். புள்ளி விவரங்கள் உள்ளன.

காட்டுப் பாதைகளில் கம்பிச் சடக்குகள் போடும் போது பல்லாயிரம் பேர் காணாமல் போய் இருக்கிறார்கள். கிம்மாஸ் - கோத்தாபாரு கம்பிச் சடக்குகள்; கோலாலம்பூர் - தைப்பிங் கம்பிச் சடக்குகள்; பட்டர்வர்த் - அலோர் ஸ்டார் கம்பிச் சடக்குகள் போடும் போது முக்கால்வாசி பேர் மலேசிய இந்தியர்கள்.

சயாம் - பர்மா இரயில் பாதை போடுவதற்கு கொண்டு போகப் பட்டவர்களில் 1,86,000 பேர் தமிழர்கள். இவர்களில் திரும்பி வந்தவர்கள் 44,000 பேர். எஞ்சியவர்கள் பசி பட்டினி நோய் நொடியினால் பர்மா காடுகளில் உயிர் விட்டு இருக்கிறார்கள். இந்தக் கணக்கை எதில் கொண்டு போய் சேர்ப்பதாம்.

தார் சடக்குகள் போடும் போது வெயிலின் கொடுமை; தார் ரோட்டின் வெப்பக் கொடுமை; தார் நெடி; இதில் செத்துப் போனவர்கள் பல ஆயிரம்.

விமானப் பாதைகளை உருவாக்கும் போது பாம்புக் கடித்து; காட்டுப் பன்றி அடித்து; கரடி அடித்து; புலி அடித்து; மலைப்பாம்பு விழுங்கி பல ஆயிரம் பேர் மரித்துப் போய் இருக்கிறார்கள். இந்தக் கணக்கை எதில் கொண்டு போய் சேர்ப்பதாம்.

அவர்கள் செய்த வேலைகளுக்குப் பின்னணியில் ஓர் அர்ப்பணிப்பு உணர்வு இருப்பதை உணர முடிந்தால் அதுவே பெரிய புண்ணியம்.

இப்படி உழைத்தவர்களை வந்தேறிகள் என்று சொன்னால் நியாயமா? திரும்பிப் போங்கள் என்று நேற்று வந்த ஒருவர் சொல்வது நியாயமா?

மலேசிய இந்தியர்கள் கூலி வேலை செய்வதற்காக அழைத்து வரப் பட்டவர்கள் என்று வீர வசனம் பேசுபவர்களைத் திரும்பிப் போங்கள் என்று சொன்னால் அவர்கள் தான் எங்கே போவார்கள். சொல்லுங்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்.

செய்த வேலைகளின் பின்னணியில் நம் மூதாதையரின் தியாக வடிவ அர்ப்பணிப்புகள் மேலோங்கி நிற்கின்றன. அதை முதலில் உணர்ந்து பார்ப்போம்.

இங்கே 60 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் தான் குடியுரிமை வழங்கி இருக்கிறார்கள். இது என்ன மாதிரியான நடைமுறை?

நேற்று வந்த மங்களா தேசிக்கு குடியுரிமை. முந்தா நாள் வந்த புகிஸ்தான் வாசிக்கு குடியுரிமை. காலம் காலமாக வாழும் மலேசிய இந்தியர்கள் பலருக்கு மறுப்பு. இந்தக் கணக்கை எதில் கொண்டு போய் சேர்ப்பதாம்.

இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான தமிழாசிரியர்கள்; தமிழ்க் கல்விமான்கள் தாங்கள் வாங்கும் ஊதியத்தை முதன்மை படுத்தாமல் தாங்கள் செய்யும் பணியைத் தமிழ் மொழிக்குச் செய்யும் ஓர் அர்ப்பணிப்பாகக் கருதுகிறார்கள். இதுவும் ஒரு வகையில் தியாகம் தானே. இதுவும் ஒரு வகையில் புண்ணியம் தானே. அதில் மாற்றுக் கருத்துகள் இருக்கலாமா?

ஒருவர் வாங்கும் கூலியை நியாயப் படுத்த வேண்டாமே. அந்தக் கூலியின் பின்னால் மறைந்து இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வுகளை உயர்த்திப் பார்ப்போமே... அந்த அர்ப்பணிப்பு உணர்வுகளில் அரியாசனம் காணும் தியாக உணர்வுகளுக்கு மரியாதை கொடுப்போமே!

நம் மூதாதையரின் கூலிக்கு மாரடித்த வேலையில் இருந்து தான் நாம் இப்போதைக்கு ஒரளவுக்குச் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுகளில் இருந்து தான் இப்போதைக்கு ஒரளவுக்குச் சுகம் காண்கிறோம்.

ஆகவே அவர்களின் அந்தத் தியாக மனப்பான்மையில் மாற்றுக் கருத்துகள் வேண்டாமே. வந்தார்கள் வாழ்ந்தார்கள் வீழ்ந்தார்கள் என்று சொல்லி நம் மூதாதையர்களின் தியாக உணர்வுகளைச் சிறுமைப் படுத்த வேண்டாமே. அந்த வாயில்லாப் பூச்சிகளைக் களங்கப் படுத்த வேண்டாமே. இதுவே என் கருத்து. மன்னிக்கவும். என் மனவேதனை.


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்


Muthukallianna Gounder We the willing lead by the unknown are doing impossible for tho ungreatfuls. We have been doing so much for so little beatitude. Now we are qualified to do any thing for nothing, my friends. Oh, God, please lead our path.


Nagappan Arumugam ஆமாம். கூலிக்குத்தான் மாரடித்தோம். இதைத் தியாகம் என்று சொல்வது உணர்ச்சிவயப்பட்ட பேச்சு. ஒரு தொழிலாளிக்கு உரிய உரிமைகளைக் கேட்டு வாங்கும் அறிவு நமக்கு இல்லை. கேட்டு வாங்கிக் கொடுக்கும் தலைவனும் நமக்கு இல்லை. இந்தக் கூலிகளை வெள்ளைக்காரன் மட்டுமல்ல, தொழிற் சங்கத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் கூடத் சுரண்டிக் கொழுத்தார்கள்.

நாம் இன்னமும் தியாகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். நான் உழைத்தவன். என் உரிமை எங்கே என்று கேட்க வேண்டும் என்பதே என் கூற்றின் உள்ளுறை.

போதும் இந்தத் தியாகப் புலம்பல்!




Muthukrishnan Ipoh /// என் உரிமை எங்கே என்று கேட்க வேண்டும் என்பதே என் கூற்றின் உள்ளுறை. /// சரிங்க ஐயா...


Kandasamy Periyasamy மிக மிக அருமையான அற்புதப் படைப்பு. இன்றைய இளைஞர்களும் இளம் தம்பதிகளும் உணர வேண்டும். உணர வேண்டிய ஒன்று. உலகம் அறிய ஊமத்தர்களுக்கு எடுத்துச் சொல்லி, நம் முன்னோர்களின் உன்னத உழைப்பை உலகுக்கு எடுத்துச் சொல்வோம்/ செல்வோம்.



Muthukrishnan Ipoh நம் முன்னோர்களின் உன்னத உழைப்பை உலகுக்கு எடுத்துச் சொல்வோம்... அது நம் கடமையாகும்.


மோஹன் Mohan அடுத்த தலைமுறை வாழ்க்கை தரம் மாற வேண்டும் என்று..... சொந்தங்களை விட்டு பிழைப்பு தேடி வந்த நம் முன்னோர்கள் தியாகிகள்....... இன்னும் இந்த தியாகிகளின் வாரிசுகள் பல அவமானங்களை தாங்கி போராடும்



Muthukrishnan Ipoh சொந்தங்களை விட்டு பிழைப்பு தேடி வந்த நம் முன்னோர்கள் தியாகிகள்>>> உண்மையிலேயே...


Meera Arangkannal கூலிக்கு மாரடித்து நேர்மையாக உழைப்பைக்கொட்டியது இழிவு என்றால் உயிரை பிழிந்து உழைப்பைச் சொரண்டிய முதலாலிகளை என்ன வென்று சொல்வது...😥


Muthukrishnan Ipoh மலாயா கித்தா மரங்களில் காய்த்துத் தொங்கிய பணம் காசை மூட்டை மூட்டையாய்க் கட்டி இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கவே நம் மூதாதையர்கள் அழைத்து வரப் பட்டார்கள்.

நம் மூதாதையர்கள் வந்து 250 ஆண்டுகள் ஆகின்றன. வெள்ளைக்காரர்களும் கப்பல் கப்பலாய் பணத்தை ஏற்றிக் கொண்டு போய் விட்டார்கள். மாட்டிக் கொண்டு தவிப்பது நம் மூதாதையர்கள்...





Meera Arangkannal Muthukrishnan Ipoh வரலாற்றை புரிந்தால் தான் வரலாறு படைக்க முடியும் ஐயா🙏தங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள் அடுத்த தலைமுறை சமுதாய சிந்தனையை செதுக்க உறுதுணையாய் இருக்கும்..தொடரட்டும் தங்கள் நற்பணி🙏💐💐💐


Sathya Raman Muthukrishnan Ipoh இன்னும் எத்தனை எத்தனை பக்கம் தெளிவான விளக்கத்தை தேடி தேடி எம் இனத்திற்கான ஆய்வுகளை அயராது ஆராய்ந்து பதிவு பண்ணினாலும் அனைவரையும் அவை திருப்தி படுவதில்லை சார்.

கண்ணெதிரே கர்ண கொடுமைகள் நடந்தாலும் அதைக் கண்டும் காணாதவர்கள் கைப் புண்ணுக்கும் கண்ணாடி தேடுபவர்கள் இவர்கள். இப்படி பட்டவர்களின் கண்களுக்கு நம் முன்னோர்களின் தியாகமோ, உழைப்போ, உதிரச் சிந்தலோ உணர்ந்து கொள்ளும் அறிவோ கிடையாது.

"நம் சமூக தியாகிகளுக்காக "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரும் கொட்டுதடி" என்கிற பாரதியின் பாட்டு வரிகளாக நாம் இருப்போம் சார்.

மற்றவர்களின் அக்கப்போர் பற்றி நமக்கென்ன கவலை? சிவசங்கரி வரிகள் போல் "சின்ன நூல் கண்டுகளா நம்மை சிறைப் படுத்துவது" என்று நாம் நாமாக இருப்போம், செயல்படுவோம். நன்றிங்க சார் 🙏


Sathya Raman இந்த தெளிவில்லாத சிந்தனைக் குறித்து நேற்றே எழுத நினைத்தேன். இந்த நாட்டு இந்தியர்கள் அவர்கள் செய்த வேலைக்கு மட்டும் கூலி பெற்று விட்டார்கள். மற்றப்படி அவர்களைத் தியாகிகள் என்று முத்திரை குத்தக்கூடாது... என்பன போன்ற முன்னுக்கு பின் முரணான சுய விளக்கம் கொடுக்கும் ஐயா அவர்களே.

நீங்கள் ஆன்மீகவாதியாக ஆகி விட்டதால் இந்நாட்டில் இந்தியர்கள் பட்ட அவலங்களின் மேல் அக்கறைக் காட்டாமல் இருக்கலாம்.

அதுவும் இல்லை என்றால் அரசியல் சார்பில் ஒரு பக்க வாதமாக இருக்கலாம். வேலைக்கு தகுந்த சம்பளம் கொடுக்கப் படுகிறது. இதென்ன தியாகி பட்டம் வேறு என்று வினா வைக்கிறீர்கள்.

காலை எட்டு மணிக்கு வேலைக்குப் போய் மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்புவர்களுக்கு வேண்டுமென்றால் உங்கள் கூற்று பொருந்தும்.

ஆனால் இந்தியாவிலிருந்து இங்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அழைத்து வரப்பட்ட இந்தியர்களைக் கொத்தடிமைகளாக, கொடுமைப் படுத்தி அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை துன்புறுத்தி வேலை வாங்கி 20, 30 காசு சம்பளத்திற்காக நாள் முழுதும் சிறைப் பட்டு சிதைக்கப் பட்டார்களே அது தியாகம் இல்லையா?

எத்தனை இன்னல் வந்தாலும் பொறுமையோடும் சகிப்புத் தன்னையோடும் நாளும் செத்து செத்து வாழ்ந்தார்களே அது தியாகம் இல்லையா?

முதலில் அவர்களது அயராத உழைப்புக்கு தருந்த ஊதியம் கொடுக்கப் பட்டதா? அதற்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா? இன்று இந்த நாட்டில் மலிந்து கிடக்கும் மற்ற நாட்டுக்காரர்களுக்கு யார் காரணம்.

திறமை இல்லா விட்டாலும் பெரிய சம்பளம் வேண்டும். உடல் உழைப்பு வேலைகள் வேண்டாம் படித்த படிப்புக்கு தகுந்த வேலையே வேண்டும் என்கிற பிடிவாதம். பட்டதாரிகள் தகுந்த வேலை கிடைக்கும் வரை வேறு வேலைகளில் நாட்டம் இல்லாமை போன்ற பல காரணங்களை கூறி மலேசியர்களை நோக்கி விரல் நீட்டலாம்.

உடலை வருத்தி உழைக்காமல் சொகுசாய் உள்ளவர்களே தியாகிகளாய் ஆக்கப்படும் போது அன்று மலாயாவாக இருந்த நாட்டை மலேசியாவாக மாற்றி அமைக்க அரும்பாடு பட்டவர்களை, தனக்காக யோசிக்க தெரியாமல் நாட்டுக்காக நிறையவே ஆசா பாசங்களை இழந்த இந்தியர்களை தியாகிகள் என்று சொல்வதில் என்ன தவறு?

"விதை சத்தமில்லாமல் முளைக்கிறது,"மரம் சத்தத்தோடு முறிகிறது".

இந்த நாட்டில் எம் இனமும் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக சத்தம் இல்லாத விதைகளாய்த் தான் இருந்தார்கள். ஆனால் இந்த அரசியல் சாக்கடைகளை சலவை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இப்போது இருக்கிறார்கள்.

தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளையே கோரிக்கையாக வைக்கிறார்கள். இதில் இடையில் புகுந்து இன்ப நாடகம் தேவையில்லாத ஒன்று. தோள் கொடுக்க விருப்பமில்லை என்றால் விலகிக் கொள்ளுங்கள்.

அதை விட்டு "படிப்பது இராமாயணம்... இடிப்பது பெருமாள் கோவிலாக’ இருக்கக் கூடாது.



Muthukrishnan Ipoh நல்ல ஒரு பதிவு சகோதரி... நன்றி... நன்றி... நன்றி.


மலேசிய இந்தியர்கள் தியாகிகளா? கூலிக்கு மாரடித்தவர்களா? இரு சார்புக் கேள்வி. இதில் அவரவர் கருத்துகள் சொல்ல அவரவருக்கு உரிமை உள்ளது.

கடந்த 200 - 250 ஆண்டு காலமாக இந்த நாட்டிற்காக உழைத்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்களைத் தியாகிகள் என்று சொல்வதில் தப்பு இல்லை என்பதே என் கருத்து. கூலிக்கு மாரடித்தார்கள் என்று சொல்வது பெரிய தப்பு.

ஓர் அனைத்துலக விளையாட்டுப் போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கம் அல்லது ஒரு தங்கப் பதக்கம் பெற்றவருக்கு டத்தோ விருது... 2 இலட்சம், 5 இலட்சம் ரொக்கம். மாதாந்திரப் பென்சனாக 2000 லிருந்து 3000. இதில் வீரர் தீரர் எனும் புகழ் மாலைகள். இரண்டு மூன்று வருட விளையாட்டு அனுபவத்தில் இத்தனைச் சலுகைகள்.

ஆனால் 100 - 200 வருடங்களாக உழைத்தவர்களுக்கு வீரர் பட்டம் வேண்டாங்க... வீர விருதும் வேண்டாங்க... ரொக்கமாக இலட்சம் ஆயிரங்கள் வேண்டாங்க... அவர்களின் உழைப்பிற்கு ‘தியாகிகள்’ எனும் ஓர் அடைமொழியைக் கொடுத்து விட்டுப் போகலாமே.

அதிலும் கூடவா ஒதுக்கல்கள்... ஓர வஞ்சனைகள். மூதாதைய மலேசிய இந்தியர்களுக்குத் தியாகிகள் அடைமொழி வழங்கி அவர்களை நினைத்துப் பார்ப்பதில் என்னங்க தப்பு.

நம் மூதாதையர்கள் உழைச்சுப் போட்டுப் போன சுகத்தில் தான் இப்போது நாம் பேர் போட்டு இருக்கிறோம். சொகுசாய்ச் சவடால் பேசிக் கொண்டு இருக்கிறோம். அவர்கள் இல்லை என்றால் நீங்களும் இல்லை. நானும் இல்லை. அதை மறக்க வேண்டாம்.

நம்முடைய மூதாதையர்களை மறக்காமல் அவர்களை என்றைக்கும் நினைத்துப் பார்ப்போம். அவர்களுக்கு காலா காலத்திற்கும் நன்றி சொல்வோம். நம்முடைய மூதாதையர்களைக் கூலிக்கு மாரடித்தவர்கள் என்று வாய் கூசாமல் பேசுவதை நிறுத்திக் கொள்வோம்.


Varusai Omar அவர்கள் வெள்ளைக்காரர்களா... கொள்ளைக்காரர்களா?
சற்றே விளக்குங்களேன்"


Vejaya Kumaran apadi podungge aruwaawe.. (அப்படி போடுங்க அரிவாளை,,,)


Manickam Nadeson ஏமாளிகள் !!!


Rama Arumugam Rama வணக்கம். எம் தமிழினம் பற்றி என்ன தெரியும் போக்கற்றவர்களுக்கு.... விவாதம் செய்ய விருப்பமில்லை....  சரித்திரம் படியும்.... நாகரீக மேலான்மைக் கொண்டவனடா தமிழன்...


Hamba Mu Umar Umar Uruthiayaga kurykeren thiagikal tamillarkal (உறுதியாகக் கூறுகிறேன்... தியாகிகள் தமிழர்கள்)
Image may contain: people sitting and shoes 


மாரியப்பன் முத்துசாமி தமிழர்கள் போல் அடிமையாக வாழ்ந்த இனம் ஒன்று உண்டா சொல்லுங்கள்