ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 12 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 12 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 ஜூன் 2019

ஈழத் தமிழர்களின் வீர வரலாறு - 12

கனகரத்தினம் இலங்கைத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரபலமான அரசியல்வாதி. தமிழர்களின் துரோகி என யாழ்ப்பாணத்துத் தமிழர்களால் பட்டயம் கட்டப் பட்டவர். அவரே புலிகளின் அடுத்த இலக்கு. 


அந்த வகையில் கொள்ளுப்பிட்டியா எனும் இடத்தில் கனகரத்தினம் சுடப் படுகிறார். மூன்று குண்டுகள் பாய்கின்றன. அவருக்கு நல்ல நேரம். காலன் கதவைத் தட்டவில்லை. மயங்கிய நிலையில் சாலையில் சரிந்து போகிறார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள்.

அவசர சிகிச்சை மூலமாகக் துப்பாக்கி ரவைகள் அகற்றப் பட்டன. கனகரத்தினம் உயிர் பிழைத்துக் கொண்டார்.

தன்னைச் சுட்டது ஒரு கட்டைப் பையன். பக்கத்தில் ஒரு நெட்டைப் பையன் இருந்தான் என போலீஸ் வாக்குமூலத்தில் கனகரத்தினம் சொல்கிறார். யார் இந்தக் கட்டைப் பையன். யார் இந்த நெட்டைப் பையன். சிங்களத்து மேலிடம் கொழும்பு மருத்துவமனைச் சுவர்களில் மண்டையைப் போட்டு முட்டி மோதிக் கொள்கிறது.

இங்கே கட்டைப் பையன் என்றால் பிரபாகரன். நெட்டைப் பையன் என்றால் உமா மகேஸ்வரன். புரியுதுங்களா.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கனகரத்தினம் அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்தார். பழைய தெம்பு இல்லை. அவரால் அதிக காலம் உயிர் வாழ முடியவில்லை. மூன்று மாதங்கள் கழித்து இறந்து போனார். அப்புறம் என்ன. தமிழர்களுக்குச் செஞ்ச துரோகம் சும்மா விடுமா.

இந்த நிகழ்ச்சி சிங்கள அரசைக் கொதிப்பு அடையச் செய்தது. கோபம் கண்களை மறைத்தது.  இதற்கு முன்னர் அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப் பட்டார். இப்போது கனகரத்தினம்.

இந்த இருவருமே சிங்களவர்களின் ஆத்ம நண்பர்கள். ஆதரவான யாழ்ப்பாணத்துத் தோழர்கள். இந்த இரு இறப்புகளும் சிங்கள அரசை சற்றே ஆட்டம் காணச் செய்தது.



கனகரத்தினத்தைக் கொலை செய்ய முயற்சி செய்தவர்களை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். முடிந்தால் சுட்டுக் கொல்லுங்கள் என சிங்கள அரசு அதிரடியான கட்டளை போட்டது.

அதற்காக ஒரு தனிப்படையே யாழ்ப்பாணத்தில் உருவாக்கப் பட்டது. கட்டைப் பையனையும் நெட்டைப் பையனையும் விட்டு வைக்கக் கூடாது. ஆபத்து என்று தண்டோரா போட்டது.

அந்தத் தனிப்படைக்குத் தலைமை அதிகாரி பாஸ்தியம் பிள்ளை. ஏற்கனவே கொலை செய்யப்பட்ட அல்பிரட் துரையப்பா வழக்கில் பிரபாகரனை மோப்பம் பிடித்து அலைந்த அதே பாஸ்தியம் பிள்ளை தான்.

இவர் தமிழர்களுக்கு எதிராக வேலை செய்கிறார் என்று விடுதலைப் புலிகள் அவர் மீது  ஏற்கனவே கொலை வெறியில் இருந்தார்கள். மாட்டினாய் மவனே மாறு கை மாறு கால் தான் என்று சீறிக் கொண்டு இருந்தார்கள்.

மீண்டும் அவரா... என்ன செய்வது. எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதியே செல்லும். கட்டைப் பையனும் நெட்டைப் பையனும் மன்னார் காட்டில் இருப்பதாகப் பாஸ்தியம் பிள்ளைக்குச் செய்தி வருகிறது. உடனடியாகக் களம் இறங்குகிறார்.

1978 ஏப்ரல் 7-ஆம் திகதி. தேதியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். யாழ்ப்பாணத்துப் போலீஸ் அதிகாரிகள் பாஸ்தியம் பிள்ளை; பாலசிங்கம்; பேரம்பலம். இவர்களுடன் ஜீப் வண்டி ஓட்டுநர். நால்வரும் மன்னார் நோக்கிப் பயணிக்கிறார்கள்.

மன்னார் காட்டை அடைந்ததும் ஜீப் வண்டியை வெளியில் நிறுத்தி விட்டு காட்டுக்குள் போகிறார்கள்.

அந்தச் சமயத்தில் செல்லக்கிளி, உமா மகேஸ்வரன், நாகராஜா ஆகிய மூவரும் அந்த மன்னார் காட்டுக்குள் தான் இருந்தார்கள். அப்போது பிரபாகரன்  அங்கு இல்லை. வவுனியா காட்டில் இருந்தார்.



விடுதலைப் புள்ளிகள் பெரும்பாலும் காட்டுக்குள் ஓர் உயரமான மரத்தில் ஒரு சிறிய கண்காணிப்புக் கோபுரத்தைக் கட்டி இருப்பார்கள். அன்றைக்கும் அப்படித்தான். ஒரு மரத்தின் மீது சிறியதாகக் கட்டப்பட்டு இருந்த கண்கானிப்புக் கோபுரத்தில் உமா மகேஸ்வரனும் நாகராஜாவும் இருந்தனர்.

இவர்கள் பாஸ்தியம் பிள்ளையையும் இதர போலீஸ்காரர்களையும் பார்த்து விட்டார்கள். உடனே காட்டு முகாமில் இருந்த செல்லக்கிளிக்குச் செய்தி போகிறது.

செய்தி கேட்டுச் செல்லக்கிளி பதற்றம் அடையவில்லை. சரி வருகிறவர்கள் வரட்டும் என பேசாமல் காத்து நிற்கிறார்.

போலீஸ்காரர்கள் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் வந்து கொண்டு இருக்கிறார்கள். அதைப் பார்த்ததும் செல்லக்கிளியும் தயாராகி விட்டார். அப்போது தன்னோடு இருந்த இரு மெய்க்காவலர்களை அழைத்தார்.

’இந்தா பாருங்க... போலீஸ்காரர்கள் வருகிறார்கள். நீங்கள் எதையும் காட்டிக் கொள்ளாமல் அவர்கள் வரும் பாதையிலேயே போங்கள். நிச்சயம் அவர்கள் உங்களை மறித்து ஏதாவது கேட்பார்கள். பயப்பட வேண்டாம். நான் இருக்கும் இடத்திற்கே கூட்டி வாருங்கள்’ என்று செல்லக்கிளி சொல்கிறார்.

செல்லக்கிளி சொன்னது மாதிரியே மெய்க்காவலர்கள் இருவரும் நடந்து போகிறார்கள். அவர்களை வழி மறிக்கிறார் பாஸ்தியம் பிள்ளை. இரண்டு மூன்று கேள்விகள் கேட்கிறார். தூரத்தில் ஒரு குடிசை. அந்தக் குடிசையைப் போய்ப் பார்க்கலாம் என அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு வருகிறார்.

அங்கே செல்லக்கிளி அமைதியின் வடிவமாய் நின்று கொண்டு இருந்தார். குடிசையைச் சல்லடை போட்டுச் சோதிக்கிறார்கள். அப்போது அங்கே ஆறு இளைஞர்கள் இருந்தார்கள். அவர்களைப் பார்த்து உங்களில் யார் பிரபாகரன் என்று உருட்டி மிரட்டிக் கேட்கிறார். சரியான பதில் கிடைக்கவில்லை.

பின்னர் கொஞ்ச நேரம் கழித்து “சரி சரி பிரச்சினை ஒன்னும் இல்ல. சும்மா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கையெழுத்து வச்சிட்டு போங்க” என சொல்கிறார்.

போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனால் எப்படிப்பட்ட விருந்தோம்பல் கிடைக்கும்; எப்படிப்பட்ட ராஜ மரியாதை நடக்கும் என்பது எல்லாம் செல்லக்கிளிக்கு நன்றாகவே தெரியும்.



சற்று சுதாகரித்துக் கொண்ட செல்லக்கிளி, அதற்கு என்னங்க தலைவரே. நல்லா போகலாமே... போறதுக்கு முன்னாடி சூடா ஒரு காபி குடிச்சிட்டு போகலாம் தலைவரே என்கிறார்.

பாஸ்தியம் பிள்ளையும் சரி சரி கொண்டு வாங்கோ... குடிச்சிட்டே கிளம்பலாம் என சொல்லி காபி வரும் வரை காத்து இருக்கிறார்,

ஐந்து நிமிடத்தில் காப்பி தயார். மிகுந்த மரியாதையுடன் பாஸ்தியம் பிள்ளைக்கு ஒரு கோப்பையில் காப்பியை வழங்குகிறார் செல்லக்கிளி. பாஸ்தியம் பிள்ளையும் கையில் இருந்த இயந்திரத் துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு காப்பியை வாங்குகிறார். அம்புட்டுத் தான்.

கண் இமைக்கும் நேரம் தான். பாஸ்தியம் பிள்ளை காப்பியை வாங்கி வாயில் வைக்கவில்லை. அதற்குள் கீழே வைக்கப்பட்ட இயந்திரத் துப்பாக்கியைப் பாய்ந்து எடுக்கிறார் செல்லக்கிளி.

அடுத்த சில விநாடிகளில் இரண்டு குண்டுகள் பாஸ்தியம் பிள்ளையின் மார்பில் பாய்கின்றன. மற்ற போலீஸ்காரர்கள் தடுக்க வருகிறார்கள். அவர்களையும் போட்டுத் தள்ளுகிறார் செல்லக்கிளி.

பாஸ்தியம் பிள்ளை, பாலசிங்கம், பேரம்பலம், ஜீப் டிரைவர் நால்வரும் அதே இடத்தில் உயிரை விடுகிறார்கள். சுட்டுக் கொல்லப்பட்ட நால்வரையும் அருகில் இருந்த கிணற்றில் வீசி விடுகிறார்கள்.

அதன் பின்னர் போராளிகள் அனைவரும் போலீஸ்காரர்கள் கொண்டு வந்த ஜீப் வண்டியிலேயே ஏறி கிளிநொச்சி நோக்கிச் செல்கிறார்கள். கிளிநொச்சியை அடைந்ததும் போலீஸ்காரர்களின் ஜீப் வண்டியை பெட்ரோல் ஊற்றி எரித்து விடுகிறார்கள். அப்புறம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையாகப் பிரிந்து போய் விடுகிறார்கள்.

அதன் பின்னர் இலங்கை முழுவதும் போலீஸ்காரர்கள் கொலைகளைப் பற்றிய பேச்சு தான்.

ல நாட்களில் உமா மகேஸ்வரன்; செல்லக்கிளி இருவரும் பிரபாகரனை வவுனியா காட்டுக்குள் சந்திக்கிறார்கள். செல்லக்கிளியைப் பார்த்ததும் பிரபாகரன் ஓடோடி வந்து கட்டி அணைத்துக் கொள்கிறார்.

“தமிழர்களின் வரலாற்றில் காலா காலத்திற்கும் நினைவில் நிற்கும் ஒரு வேலையை செய்து இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். இத்தனைக் காலமும் நாட்டுத் துப்பாக்கியை வைத்துக் கொண்டு பயிற்சிகள் எடுத்த புலிகளுக்குப் புதிய இயந்திரத் துப்பாக்கிகள் கிடைத்ததில் பெரும்  மகிழ்ச்சி.

அப்போது உமா மகேஸ்வரன் ஒரு கருத்தை முன்வைக்கிறார்.

“இறந்து போன துரோகிகளைப் பற்றி மக்களுக்குச் சொல்ல வேண்டும்” என்று சொல்கிறார். 



பிரபாகரனுக்கும் சரி என படுகிறது. இதன் படியே துரோகிகளின் பெயர்களைப் பட்டியலாகத் தயாரித்து கொழும்புவிற்குக் கொண்டு செல்கிறார் உமா மகேஸ்வரன். அப்போது தான் ஒரு பெண்ணைச் சந்திக்கிறார் உமா மகேஸ்வரன். திருமணமாகி விவாகரத்தான ஊர்மிளா எனும் பெண். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தியது இந்தப் பெண்மணிதான். பின்னர் தெரிந்து கொள்வோம்.

தாங்கள் வஞ்சம் தீர்த்த பதினொரு பேரின் பெயர்களையும் தட்டச்சு செய்து அதன் கீழே புலிகள் என பெரிய எழுத்தில் எழுதுமாறு கேட்டார். அதன் படியே துரோகிகள் என ஒரு கடிதம் உருவானது. அந்த கடிதம் பின்வருமாறு இருந்தது.

“யாழ் நகர் மேயர் ஆல்பிரட் துரையப்பா தொடங்கி பாஸ்தியம் பிள்ளை வரை மொத்தம் 11 பேரை விடுதலைப் புலிகளாகிய நாங்கள் தான் கொன்றோம். புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயரில் இயங்கி வந்த நாங்கள், இப்போது தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் இயங்கி வருகிறோம்.

இந்தக் கொலைகளுக்கு எந்த ஒரு தனி நபரோ வேறு எந்த ஓர் இயக்கமோ பொறுப்பு ஏற்க முடியாது. அவ்வாறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்படி ஓர் அதிகாரப் பூர்வமான கடிதம் அச்சிடப்பட்டு இலங்கை அதிபர்; இலங்கைப் பிரதமர்; அனைத்து இலங்கைப் பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி வைக்கப் பட்டது.

இலங்கை அரசாங்கத்திற்கும் சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் இடி விழுந்தது போல கிறுகிறுப்பு. அதைத் தொடர்ந்து இலங்கையின் தெற்கு பகுதிகள் முழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. இலங்கை அரசுக்குப் பல இடங்களில் இருந்தும் அழுத்தங்கள்.

விழித்துக் கொண்ட இலங்கை அரசாங்கம் தேடப் படுவோர் பட்டியலை வெளியிட்டது. அதில் 38 பெயர்கள். தலைவர் பிரபாகரன் பெயரும் இடம் பெற்று இருந்தது.

அதில் பெரும்பாலானோர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள். தமிழர்கள் சிலர் அவர்களாகவே முன் வந்து சரண் அடைந்தார்கள். இருந்தாலும் மிக முக்கியமான விடுதலைப் புலிகள் அகப்படவில்லை.

இது இப்படி ஒரு புறம் இருக்க அடுத்து ஓர் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க பிரபாகரன் முடிவு செய்கிறார். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நடந்த கலவரத்தை முன் வைத்து அரசாங்கத்தை கதி கலங்கச் செய்ய வேண்டும் என்கிற முடிவு. என்ன செய்யலாம். யோசிக்கிறார் பிரபாகரன்.

ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் காரியமாக இருக்க வேண்டும். ஆனால் பொது மக்களுக்கு எந்த வித சேதமும் இருக்கக் கூடாது. அந்த வகையில் இலங்கை விமானம் ஒன்றை வெடிக்கச் செய்வது என முடிவு செய்கிறார்கள்.

அதன் படி 1978 செப்டம்பர் 7-ஆம் தேதி பலாலி (Palaly) விமான நிலையத்தில் இருந்து ரத்மலானா (Ratmalana Airport) விமான நிலையத்திற்குச் செல்லும் விமானம் தேர்ந்து எடுக்கப் படுகிறது. காரியத்தையும் கச்சிதமாகச் செய்து முடித்து விட்டார்கள்.

Sri Lanka Air Force Avro 748 CR835 was shot down on 28 April 1995 by a SA-7 missile fired by the LTTE. The plane, an Avro 748-334 Srs. 2A airliner, was en route to Ratmalana Airport and was shot down soon after take-off from SLAF Palaly. All 51 crew and passengers were killed.

இலங்கை அரசு அதை எதிர்பார்க்கவே இல்லை. உலகமே திகைத்துப் போனது. யார் செய்தார்கள் என்பதை கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே இந்தத் தாக்குதலைச் செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் கடிதம் வெளியாகிறது.

தங்களுக்கு எதிராக ஒரு பெரிய அமைப்பு உருவாகி விட்டதை இலங்கை அரசு முழுமையாக பரிபூரணமாக உணர்ந்தது. இனிமேலும் இதை இப்படியே விட்டு வைத்தால் அது ஒட்டு மொத்த நாட்டுக்கே ஆபத்து என்பதையும் உணர்கிறது. அதன் விளைவாக இலங்கை முழுக்கச் சல்லடை போட்டுத் தேடி தமிழீழ இளைஞர்களை கைது செய்கிறது.

(தொடரும்)