கம்சாயினி குணரத்தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்சாயினி குணரத்தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 ஜூலை 2019

கம்சாயினி குணரத்தினம்

அந்தக் காலத்துப் பெண்கள் நாடு விட்டு நாடு போய் நல்ல நல்ல மருமகள்களாகப் பேர் போட்டு வாழ்ந்தார்கள். இந்தக் காலத்துப் பெண்கள் நாடு விட்டு நாடு போய் நாட்டு மக்களுக்கே நல்ல நல்ல தலைவர்களாகப் பேர் போட்டு வாழ்கின்றார்கள். பெரிய இடைவெளி.



அது மட்டும் அல்ல. ஆண்களுக்குச் சரிநிகர் சமமாகச் சவாலே சமாளி என்று சாதனை படைத்தும் வருகின்றார்கள். நாடும் ஏடும் போற்றும் நயன்மிகுச் சேவைகளைச் செய்தும் வருகின்றார்கள்.

அடுப்பாங்கரையில் இருப்புச் சட்டிகளை உருட்டிய காலம் எல்லாம் மலை ஏறி விட்டது. இன்றைய காலத்தில் குளிர்ச்சாதன அறைக்குள் கோட் சூட் போட்டு மிடுக்காய் அதிகாரம் செய்கின்றார்கள். என்னே ஓர் உருமாற்றம்.

இமயத்தில் சிகரம் பார்க்கும் அந்தப் பெண்களை இதயத்தில் ஏற்றி வைத்துப் பெருமை கொள்வோம்.


நார்வே  நாட்டின் தலைநகரம் ஒஸ்லோ. அந்த நகரின் உதவி மேயராக ஒரு பெண். அதுவும் ஒரு தமிழ்ப் பெண். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த பெண்மணி. பெயர் கம்சாயினி குணரத்தினம் (Khamshajiny Gunaratnam). வயது 31. ஏழு இலட்சம் நார்வே நாட்டு நகரவாசிகளுக்கு தலைவராக இருக்கிறார். என்னே ஒரு சாதனை.

இன்னும் ஒரு விசயம். அந்த நகரின் மேயராக இருப்பவரும் ஒரு பெண்மணி தான். ஒரு நார்வே நாட்டுக்காரர். அவரின் பெயர் மாரியான் போர்கேன் (Marianne Borgen). இரண்டு பெண்களும் சேர்ந்து ஓர் அல்லி தர்பார் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். சும்மா ஒரு ஜோக் தான். தப்பாக நினைக்க வேண்டாம்.




அப்புறம் என்ன. கம்சாயினி எனும் அந்தத் தமிழ்ப் பெண்ணைப் பார்த்து போகிற வருகிற வெள்ளைக்கார ஆண்கள் எல்லாம் சலாம் போட்டுக் கொண்டு போகிறார்கள். வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்று சும்மாவா சொன்னார்கள். என்ன ஏது என்று பார்ப்போம்.

கம்சா எனும் பெயர் இந்து இதிகாசத்தில் வரும் அழகிய பெயர். கேள்விப்பட்டு இருப்பீர்கள். அந்தப் பெயரில் தான் கம்சாயினி எனும் பெயரும் வந்து போகிறது.

இலங்கை, யாழ்ப்பாணத்தில் 1988 மார்ச் 27-ஆம் தேதி பிறந்தவர் கம்சாயினி. மூன்று வயதில் நார்வேக்குப் புலம் பெயர்ந்தவர். 




நார்வே நாட்டு தேசிய மொழி நார்வியம். அந்த மொழியில் தொடக்க நிலைக் கல்வி. அதன் பின்னர் இடைநிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என எல்லாமே நார்வீய மொழியில் தான் பயின்றார்.

ஆனால் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழ் வகுப்பிற்குக் கண்டிப்பாகப் போக வேண்டும். இது தந்தையாரின் கட்டளை. இல்லை தாயாரின் வற்புறுத்தல். அதனால் கம்சாயினி தன் பாரிய வாழ்க்கையில், தமிழ் மொழியையும் இணைத்துக் கொண்டார்.

நாடு விட்டு நாடு போனாலும்; சொந்த பந்தங்களை விட்டு நகர்ந்து போனாலும்; சுற்றுச் சூழலை விட்டு விலகிப் போனாலும் தாய்மொழியான தமிழை மட்டும் இவர் துறந்து போகவே இல்லை. 




தமிழ் எங்கள் தாய்மொழி என பெருமைப் படும் இவர் எங்கே? ஒரு வார்த்தைக்கு ஒன்பது ஆங்கிலச் சொற்களைக் கலக்கும் இன்றைய சில நயனா வாசிகள் எங்கே?

அவர் பேசும் தமிழைக் கேளுங்கள். யூடியூப்பில் இருக்கிறது. அசந்து போவீர்கள். தமிழ் என்றும் எங்கள் தாய்மொழி என்று பெருமைப் படும் இவரை வாழ்த்துவோம்.

நார்வே நாட்டின் நாடாளுமன்றத்தை ஸ்டோர்ட்டிங் (Storting) என்று அழைப்பார்கள். அந்த ஸ்டோர்ட்டிங் நாடாளுமன்றத்தில் கம்சாயினி 2013 லிருந்து 2017 வரை ஓர் உறுப்பினராகப் பதவி வகித்து உள்ளார். 




2016-ஆம் ஆண்டு துணை மேயர் பதவிக்குத் தேர்வு செய்யப் பட்டார். தொழிற் கட்சியின் இளைஞர் அணியில் தலைவராக இருந்தவர்.

பதினெட்டு வருடங்களுக்குப் பின் நார்வே நாட்டின் தொழிற்கட்சி ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் கம்சாயினி துணை மேயர் பதவிக்குப் போட்டியிட்டார். இப்போது சரித்திரம் படைக்கிறார்.

அரசியலைத் தனது முழுநேரப் பணியாகக் கொண்ட கம்சாயினி இளம் வயதிலேயே உதவி மேயராகத் தேர்வாகி உள்ளார். அதுதான் பெரிய ஆச்சரியமான தகவல்.




இவர் ஏற்கனவே தொழிற் கட்சியின் இளைஞர் அணியில் தலைவராக இருந்தவர் தான். தவிர நார்வே நாட்டின் தலைசிறந்த தாளிகை பிரகாசிஸ் (Praksis). அதன் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.

கம்சாயினியின் தந்தையார் பெயர் குணரத்தினம். இவர் இலங்கையில் பிறந்து நார்வே நாட்டிற்குச் சென்றவர். புலம் பெயர்ந்து போகும் போது கம்சாயினிக்கு வயது 3. இலங்கையில் அவர்களுடன் சேர்ந்து யாழ்ப்பாணத்து மக்கள் சிலரும் புலம் பெயர்ந்தார்கள்.

நார்வே நாட்டின் வடக்கே நிறைய மீன்பிடி கிராமங்கள் உள்ளன. அங்கே தான் கம்சாயினியின் குடும்பம் முதலில் தங்கி இருந்தது. நார்வே மீன்பிடிக்காரர்களுடன் சேர்ந்து இவர்களும் வேலை செய்தார்கள். வாழ்க்கை ஓடியது.

பின்னர் சில ஆண்டுகள் கழித்து ஓஸ்லோ தலைநகரத்தில் குடியேறினார்கள். ஓஸ்லோவில் தான் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் இருந்தன. கம்சாயினியும் அவருடைய அண்ணனும் தமிழ் படிக்க வேண்டும் என்று அவர்களின் பெற்றோர் விரும்பினார்கள். ஆக தமிழ் படிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் ஓஸ்லோவிற்கு இடம் பெயர்ந்தார்கள்.




ஓஸ்லோவில் ஓர் தமிழர் இயக்கம். அதன் பெயர் ஓஸ்லோ தமிழ் இளைஞர் இயக்கம். அந்த இயக்கத்தில் கம்சாயினி சேர்ந்தார். இயக்கத்தின் தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னால் இயன்ற சேவைகளைச் செய்து வந்தார்.

பின்னர் ஓஸ்லோவின் மேயர் ரேய்மண்ட் என்பவரின் பழக்கம் ஏற்பட்டது. அவர் தான் கம்சாயினியை அரசியலில் சேரச் சொல்லி ஆர்வம் கொடுத்தார்.

கம்சாயினியும் இளைஞர் அணியில் சேர்ந்து சேவை செய்து வந்தார். அதே காலக் கட்டத்தில் ஓஸ்லோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சமூகப் புவியியல் படித்தார். அப்படியே படிப்படியாக அரசியலில் தீவிரமாக களம் இறங்கி இன்றைக்கு ஓஸ்லோ தலைநகரத்தின் துணை மேயராக வலம் வருகிறார். 




நார்வேக்குப் புலம் பெயர்ந்த இலங்கை மக்களுடன் கம்சாயினி நெருக்கமான சமூக உறவுகளைக் கொண்டு உள்ளார். அரசியல் ரீதியாக என்ன என்ன உதவிகளைச் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்து வருகிறார்.

இலங்கையில் அவதிப்படும் தமிழர் குழந்தைகளுக்கு உதவி செய்யும் திட்டத்தில் இறங்கினார். இலங்கையின் மீது இவருக்கு ஏற்பட்ட தீவிர அரசியல் தாக்கத்தைப் பார்த்த இலங்கை அரசாங்கம் சற்றே கலக்கம் அடைந்தது. ஆக மிக அண்மையில் அவரை இலங்கைக்கு வரவிடாமல் தடை செய்து விட்டது.

கம்சாயினி அண்மையில் தி கார்டியன் நாளிதழுக்கு ஒரு பேட்டி கொடுத்து இருந்தார். அதில் அவர் சொல்கிறார்.




என்னைப் பொறுத்த வரையில் எந்த ஒரு தேசத்திற்குப் போனாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும். சம உரிமை வழங்க வேண்டும். இரு பாலரிடமும் ஏற்றத் தாழ்வுகளைப் பார்க்கக் கூடாது.

நார்வேயில் எங்கு போனாலும் பல்லின அமைப்புகள், சங்கங்கள் உள்ளன. அந்த அமைப்புகளில் பெண்களுக்குச் சம பங்கு வழங்க வேண்டும். அதுதான் என்னுடைய கோரிக்கை.

சென்ற ஆண்டு அவர் இலங்கையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கு பயணம் செய்தார். அங்கு உள்ள பெண்கள் அமைப்புக்களுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்கா அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் ஓர் ஊடகவியலாளர் சந்திப்புக் கூட்டம். அந்தக் கூட்டத்தில் அவர் பேசும் போது:  




நான் இலங்கைக்கு பல தடவை வந்து போய் இருக்கிறேன். என்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறேன். நான் நார்வே நாட்டில் ஒரு பெரிய பதவியில் இருக்கலாம். இருந்தாலும்  என் உடலில் தமிழர் இரத்தம் ஓடுகிறது.

இலங்கை பத்திரிகைக்காரர்கள் விடவில்லை. விடாமல் துரத்திச் சென்று கேள்விகள் கேட்டார்கள்.

கேள்வி: தமீழழ விடுதலைப் புலிகள் பெண்களுக்குச் சரியான இடத்தை வழங்கவில்லை என்று கருத்து வெளியிட்டு இருந்தீர்கள். இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்? 

பதில்: என்னைப் பொறுத்த வரையில் எந்த ஒரு தேசத்திற்குப் போனாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும். அதைத் தான் நான் எதிர்பார்க்கிறேன். 

நார்வேயின் ஒஸ்லோ மாநாகர சபையில் கூட இருபாலாருக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்று தான் விரும்புகின்றேன். ஏற்றத் தாழ்வுகள் தேவை இல்லை.




இதுவரைக்கும் எங்கும் பெண்களுக்கு 50 க்கு 50 விழுக்காடு சம உரிமை கிடைக்கவில்லை. அதற்காக நான் கஷ்டப்பட்டு முயற்சிகள் எடுத்து வருகின்றேன்.

அதே போல் தான் நார்வே நாடாளுமன்றத்திலும் ஆண்கள் பெண்கள் விகிதாசாரம் 50 க்கு 50 இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றேன். எங்கு போனாலும் ஆண்களும் பெண்களும் சரிசமமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

நான் எவரையும் குற்றம் சொல்ல விரும்புவது இல்லை. நாங்கள் தமிழர்கள். எங்கு போனாலும் அமைப்புகள், சங்கங்கள் உள்ளன. அந்தச் சங்கங்களில் பெண்களுக்கு சம பங்கு வழங்க வேண்டும் என்றுதான் கேட்டுக் கொள்கின்றேன்.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் பெண்களுக்கு சரியான ஓர் இடத்தை; ஓர் அங்கீகாரத்தை வழங்கவில்லை என்பதை நீங்கள் சரி என்று நினைக்கின்றீர்களா?




பதில்: நான் அவ்வாறு சொல்லவில்லையே. எல்லா மட்டங்களிலும் பெண்கள் உள்ளனர். ஆனால் வளர்ச்சி அடைந்து செல்லும் போது பெண்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று தான் தெரிவித்தேன். குறை சொல்வதற்காக நான் எதையும் சொல்லவில்லை. நாங்கள் தமிழர்களை மேலும் வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்பதையே சுட்டிக் காட்டி இருந்தேன்.

கேள்வி: விடுதலைப் புலிகள் பெண்களுக்குச் சரியான ஓர் இடத்தை வழங்கி இருந்தார்களா இல்லையா?

பதில்: இடம் கொடுத்து உள்ளனர். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் மேலும் கூடுதலாக தலைமைப் பதவிகளைக் கொடுத்து இருக்கலாம். 




ஒரு விசயத்தை ஒரு கோணத்தில் இருந்து பார்க்க முடியாது. அனைத்துக் கோணங்களில் இருந்தும் பார்க்க வேண்டும் என்று சொல்லும் கம்ஷாயினி முற்போக்கான எண்ணங்களைக் கொண்டு உள்ளார்.

பெண் உரிமைகளுக்காகப் போராடி வரும் இவரைப் போன்று மேலும் பல பெண்கள் வர வேண்டும். பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை. அதே போல ஆண்கள் இல்லாமல் பெண்களும் இல்லை. அதுவே மனித வாழ்வியல் நியதி.

கம்சாயினி போன்று மேலும் நிறைய பெண்கள் வர வேண்டும். சாதனைகள் பல செய்ய வேண்டும். அனைத்துலக அரசியல் அரங்கில் ஆண்களுக்குச் சரிநிகர் சமமாய் அவதானிக்க வேண்டும். 



  ......................

பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்



Maana Mackeen அருமை அருமையான பதிவு உங்களுக்கே
உரிய நடையில்...
 

Muthukrishnan Ipoh நன்றிங்க ஐயா... தங்களுடைய படைப்புகளை இலங்கை, தமிழக மற்றும் வெளிநாட்டு மின்இதழ்களில் படித்து இருக்கிறேன்... தங்களுடைய எழுத்து நடையும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துகள்.
 
 
Maana Mackeen உங்களது 'மோதிரக்கை'! ஓரு தகவல் வேண்டுமே! நீங்கள் இப்போது கோலோச்சுகிற. 'தமிழ் மல'ரில் முன்னர் ஆசிரியராக இருந்த திரு சங்கு சண்முகம் பற்றிய இன்றைய நிலை?
 
 
Muthukrishnan Ipoh திரு. சங்கு சண்முகம்.... முடியாமல் இருப்பதாகக் கேள்விப் பட்டேன். மேல் விவரங்கள் கிடைக்கவில்லை....
 
 
Arjunan Arjunankannaya அருமை ஐயா. தமிழ் எங்கள் உயிருக்கு மேல்...
 
 
Kumar Murugiah Kumar's Iron lady... !!!


Muthukrishnan Ipoh உண்மையாகவே பாராட்ட வேண்டும் சார்... 31 வயதில் 7 இலட்சம் ஐரோப்பிய வெள்ளையர்களைக் கட்டுப் படுத்துகிறாரே...
 
 
M R Tanasegaran Rengasamy குலேபகாவலி பழைய எம்.ஜி.ஆர். படத்தில் "அநியாயம் இந்த நாட்டிலே அநியாயம்" எனும் பாடல் காட்சி நினைவுக்கு வருகிறது. அதில் பெண்கள் ஆண்களை அடிமைப் படுத்துவதாக இருக்கும். ஆனால் பெண்ணடிமைக் கொடுமைக்கு ஒட்டு மொத்தமாய் சாவு மணி அடித்துள்ள நார்வே நாட்டுப் உயர் பெண்மணிகள் இருவருக்கும் வாழ்த்துகள்.
 
 
Rajoo Veeramuthu நார்வே நாட்டில் மிளிரும் தங்க தமிழ் தாரகைக்கு இனிய வாழ்த்துகள். கட்டுரைப் படைத்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி மலர்கள்.
 
 
Manickam Nadeson நல்ல படைப்பு, நன்றி ஐயா சார்
 
 
Murugan Rajoo வரிகள் மிகச் சிறப்பு ஐயா... எழுச்சியின் உச்சம்... நல்வாழ்த்துகள்
 
 
Letchumanan Nadason அருமையான பதிவு. நன்றி ஐயா.
 
 
Barnabas அருமை.பெருமை