ஜாவா தாயாங் அர்ஜுனா ஆலயங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாவா தாயாங் அர்ஜுனா ஆலயங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஜூலை 2020

ஜாவா தாயாங் அர்ஜுனா ஆலயங்கள்

இந்தோனேசியாவின் ஆலயங்கள் என்று சொல்லும் போது பாலித் தீவில் உள்ள ஆலயங்கள் முதலில் தெரிய வரும். அடுத்து யோக்ஜாகர்த்தாவில் உள்ள பிரம்பனான் (Prambanan) ஆலயம் தெரிய வரும். அடுத்து அதன் அருகில் இருக்கும் போரோபுதூர் (Borobudur) ஆலயம் தெரிய வரும்.


ஆனால் இந்த ஆலயங்களுக்கு எல்லாம் தலைவாசல் வைக்கும் ஓர் ஆலய வளாகம் இருக்கிறது. அதைப் பற்றி பலருக்கும் தெரியாது. அதுதான் தாயாங் பீடபூமி ஆலயங்கள் (Dieng Plateau Temples). 400-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இருக்கின்றன.

உண்மையில் இந்தத் தாயாங் ஆலயங்கள் (Dieng Temples) தான் இந்தோனேசியாவிலேயே மிக மிகப் பழமையான ஆலயங்கள் ஆகும். பிரம்பனான் ஆலயம்; போரோபுதூர் ஆலயம்; பாலித் தீவு ஆலயங்கள் (Bali Island Temples) வருவதற்கு முன்னதாகவே தாயாங் பீடபூமி ஆலயங்கள் உருவாகி விட்டன.


1000 ஆண்டுகளுக்கு முன்னர் தாயாங் பீடபூமியில் ஒரே இடத்தில் 400 ஆலயங்கள் இருந்து இருக்கின்றன. ஆனால் இப்போது 8 ஆலயங்கள் மட்டுமே எஞ்சி உள்ளன.

எரிமலை வெடிப்புகளினால் பல ஆலயங்கள் அழிந்து போயின. இன்னும் பல ஆலயங்களின் கற்களும் கற்பாறைகளும் கிராமவாசிகளால் சூறையாடப்பட்டன. இன்னும் பல ஆலயங்கள் நிலநடுக்கம்; இயற்கைப் பேரிடர்களினால் மண்ணுக்குள் புதையுண்டு போயின. 1000 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட காலம் ஆகும்.

எஞ்சிய எட்டு ஆலயங்களையும் இந்தோனேசிய அரசாங்கம் பத்திரமாய்ப் பாதுகாத்து வருகிறது.


மத்திய ஜாவாவில் வோனோசோபோ (Wonosobo) நகருக்கு அருகில் தாயாங் பீடபூமி உள்ளது. மலைப்பாங்கான பகுதி. முதன்முதலில் கலிங்கா பேரரசின் (Kalingga Kingdom) அரசர்கள் 7-ஆம் நூற்றாண்டில் அந்த ஆலயங்களைக் கட்டி இருக்கிறார்கள்.

அடுத்து 8-ஆம் நூற்றாண்டில் மத்தாரம் பேரரசு (Mataram Kingdom) ஆட்சியாளர்கள் கட்டி இருக்கிறார்கள். இவர்கள் சஞ்சய வம்சாவளியைச் (Sanjaya Dynasty) சேர்ந்தவர்கள். பெரும்பாலான ஆலயங்களை மத்தாரம் அரசர்கள் தான் கட்டினார்கள். ஏற்கனவே சொன்னது போல 400 ஆலயங்கள். போட்டிப் போட்டுக் கொண்டு கட்டி இருக்கிறார்கள்.

ஜாவாவில் இதுவரை கட்டப்பட்ட மிகப் பழமையான மதக் கட்டமைப்புகள்;  அல்லது ஆரம்பகால இந்து கோவில்களில் தாயாங் ஆலய வளாகம் தான் பழைமையானது.


இந்திய இந்துக் கோயில் கட்டிடக் கலையின் பல அம்சங்களை இந்தக் கோயில்கள் பறைசாற்றுகின்றன.

கம்போடியா அங்கோர் வாட் ஆலய வளாகத்திலும் இப்படித்தான் நிகழ்ந்து இருக்கிறது. ராஜவர்மன் (Rajavarman); சூரியவர்மன் (Suriavarman) பரம்பரையினர் நீயா நானா என்று போட்டிப் போட்டுக் கொண்டு மூலைக்கு மூலை ஆலயங்களைக் கட்டிப் போட்டு இருக்கிறார்கள்.

கடல் மட்டத்தில் இருந்து 2000 மீட்டர் அல்லது 6500 அடி உயரத்தில் உள்ளது. எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.


கோயில்களின் உண்மையான பெயர், வரலாறு மற்றும் இந்தக் கோயில்களின் கட்டுமானத்திற்குப் பொறுப்பான மன்னர்கள் யார் எவர் என்று தெரியவில்லை. ஏனென்றால் இந்த கோயில்களின் கட்டுமானத்துடன் தொடர்புடைய தகவல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை.

ஒன்று மட்டும் உண்மை. இந்தக் கோயில்கள் அனைத்தும் 7-ஆம் - 8-ஆம் நூற்றாண்டுகளில் ஒரே காலக் கட்டத்தில் கட்டப்பட்டவை ஆகும்.

தாயாங் ஆலய வளாகத்தில் அர்ஜுனா கோயிலுக்கு (Arjuna temple) அருகே ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கி.பி 808-809 என பொறிக்கப்பட்டு இருந்தது.

(An inscription discovered near Arjuna temple in Dieng was dated circa 808-809 CE, it was the oldest surviving specimen of old Javanese script, which revealed that the Dieng temple is continuously inhabited from mid 7th to early 9th century.)


உள்ளூர் ஜாவானிய மக்கள் ஒவ்வொரு கோயிலுக்கும் அவர்களின் ஜாவானிய காப்பியக் கதாபாத்திரங்களின்படி பெயரிட்டு உள்ளனர். பெரும்பாலும் மகாபாரத காவியத்தில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்கள்.

இந்தத் தாயாங் ஆலயங்களுக்கு என்று ஓர் அருங்காட்சியகத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். அதன் பெயர் கைலாசா அருங்காட்சியகம் (Kailasa museum). தாயாங் ஆலயங்களில் இருந்து அகற்றப்பட்ட பல சிற்பங்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.

தாயாங் என்றால் பழைய ஜாவானிய காவி (Old Javanese Kawi) மொழியில் “தெய்வங்கள் தங்குமிடம்” (Abode of Gods) என்று பொருள்.

தாயாங் ஆலயங்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.

1. அர்ஜுனா (Arjuna) ஆலயங்கள்;

2. துவாராவதி (Dwarawati) ஆலயங்கள்;

3. கடோட்கஜன் (Gatotkaca) ஆலயங்கள்;

4. பீமா (Bima) ஆலயம்.

(The temples are clustered around three groups; Arjuna, Dwarawati and Gatotkaca clusters, while Bima temple was constructed as a separate single temple.)


இந்த ஆலயங்களுக்கு இந்தோனேசியர்கள் தான் அதிகமாக வருகை புரிகிறார்கள். தங்களின் மூதாதையரின் கலை வடிவங்கள் என்று சொல்லிப் பெருமைப் படுகிறார்கள். படம் பிடித்துக் கொள்கிறார்கள்.

ஆனால் இந்த ஆலயங்களின் பக்கத்து நாட்டில் அப்படியா நடக்கிறது. எதிர்மாறாக நடக்கிறது.

இருக்கிற கோயில்களை எல்லாம் உடைத்துக் கொண்டு வருகிறார்கள். இருக்கிற வரலாறுகளை எல்லாம் அழித்துக் கொண்டு போகிறார்கள். தலைகால் தெரியாமல் ஜிங்கு ஜிக்கான் அரசியல் கூத்துகள் நடத்துகிறார்கள்.

ஒரு புறம் உயிர்ப்பு. இன்னொரு புறம் தவிர்ப்பு. ஒரு புறம் போற்றுகிறார்கள். இன்னொரு புறம் தூற்றுகிறார்கள். ஒரு புறம் பெருமை சேர்க்கிறார்கள். இன்னொரு புறம் சிறுமை படுத்துகிறார்கள். வேதனை.

தமக்கு வந்தால் இரத்தம். அடுத்தவனுக்கு வந்தால் தக்காளிச் சட்டினியா? மொழிவாதம், இனவாதம், மதவாதத்தில் கோணலாகிப் போன ஒரு பக்கவாதம். அதில் வீணாய்ப் போன ஒரு வக்கிரவாதம். 

தாயாங் ஆலயங்களைப் பற்றிய முழுக் கட்டுரை விரவில் வெளிவருகிறது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
11.07.2020

சான்றுகள்:

1. Dumarcay, J and Miksic J. Temples of the Dieng Plateau in Miksic, John 1996

2. Witton, Patrick (2003). Indonesia (7th edition). Melbourne: Lonely Planet. pp. 209–211.

3. https://en.wikipedia.org/wiki/Dieng_temples