ரோம் சாசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரோம் சாசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

04 ஜூன் 2019

ரோம் சாசனம்

ரோம் சாசனம் என்பது உலக நாடுகளுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட ஓரு பொதுவான அனைத்துலக ஒப்பந்தம். இந்தச் சாசனம் தான் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை வழிநடத்திச் செல்கிறது. ஆங்கிலத்தில் Rome Statute என்று அழைக்கிறார்கள். 


1998 ஜூலை மாதம் 17-ஆம் தேதி இத்தாலியின் ரோம் நகரில் இந்தச் சாசனம் உருவாக்கப் பட்டது. ரோம் சாசனத்தில் கையெழுத்திட்ட எந்த ஒரு நாடும் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரத்தை மதித்து நடப்பதாகப் பொருள் படுகிறது.

இந்தச் சாசனத்தை அடிப்படையாகச் கொண்டுதான் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) செயல் படுகின்றது.

ரோம் சாசனம் கையெழுத்தான பிறகே அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப் பட்டது. நினைவில் கொள்வோம்.

இனப் படுகொலைகள்; இன அழிப்புகள்; போர்க் குற்றங்கள்; ஆக்கிரமிப்புக் குற்றங்கள்; அனைத்துலகக் குற்றங்கள்; மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்; மனிதத் தன்மைகளுக்கு எதிரான குற்றங்கள்; போன்ற குற்றங்களை இந்த அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் விசாரணை செய்ய முடியும். ரோம் சாசனத்தின் மூலமாக அதற்கு அந்த அதிகாரம் உள்ளது.


இந்தச் சாசனத்தின் மூலமாக ஆட்சியில் இருக்கும் எந்த ஒரு தலைவரின் மீதும் எவரும் வழக்கு தொடர முடியும். எந்த ஓர் அரசாங்கத்தின் மீதும் வழக்கு தொடர முடியும். அந்த மாதிரியான வழக்குகளை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் விசாரணை செய்யும்.

இந்தச் சாசனம் 2002-ஆம் ஆண்டு ஜுலை 1-ஆம் தேதி அனைத்துலக அளவில் நடைமுறைக்கு வந்தது. 2018 மார்ச் மாதம் வரையில் 122 நாடுகள் சாசனத்தில் கையெழுத்து வைத்து உள்ளன.

உலகில் உள்ள அரசியல்வாதிகள் தொடங்கி சாதாரண மனிதர்கள் மீதும் இந்த சாசனத்தின் மூலமாகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

அனைத்துலகக் குற்றங்களுக்கு எதிராக எவரும் நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம். ஒரு சாமான்ய மனிதர் அவருடைய நாட்டின் அதிபரின் மீது வழக்கு தொடரலாம். அந்த நாட்டின் பிரதமரின் மீதும் வழக்கு தொடரலாம்.

இப்படித் தான் ரோம் சாசனம் சொல்கின்றது. இதைத் தான் ரோம் சாசனம் என்று அழைக்கிறோம்.

உலகின் பல பாகங்களில் இன அழிப்பு குற்றங்கள் நடந்து உள்ளன. அதைத் தடுக்கும் நோக்கத்தில்தான் ரோம் சாசனம் தோற்றுவிக்கப் பட்டது.

1940-ஆம் ஆண்டுகளில் ஜெர்மனியில் நாஜி அரசை முன் எடுத்த ஹிட்லர் ஆயிரக் கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தார். ஓர் இன அழிப்பைச் செய்தார். அத்துடன் அவர் பல நாடுகளின் மீது போர் தொடுத்துப் பல்வேறான போர் குற்றங்களைச் செய்தார்.

அந்த மாதிரி இனி நடக்கக் கூடாது என்பதற்காகவும் ரோம் சாசனம் தோற்றுவிக்கப் பட்டது. 


நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹேக் நகரத்தில் அமைந்து உள்ள அனைத்துலக நீதி மன்றம் ரோம் சாசனத்தின் அடிப்படையில் இயங்கி வருகிறது.

ரோம் சாசனத்தில் ஒரு நாடு கையெழுத்து போடவில்லை என்றால் அந்த நாட்டின் மீது அனைத்துலக நீதி மன்றத்தின் மூலமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஆனால் அதற்கும் மாற்றுவழி இருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.

அனைத்துலக அளவில் பெரும் குற்றங்களைப் புரிந்தவர்களை விசாரித்துத் தண்டனை வழங்குவதே அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் தலையாய நோக்கமாகும்.

அதற்காக, சௌக்கிட் சாலையில் மாங்காய் திருடிய ஒருவனைப் பிடித்துக் கொண்டு போய் அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது. அதை உள்நாட்டு நீதிமன்றங்கள் பார்த்துக் கொள்ளும்.

இரும்பு அடிக்கிற இடத்தில் ஈக்களுக்கு வேலை இல்லை. அந்த மாதிரி பெரிய பெரிய மோடி மஸ்தான்கள் முட்டிப் பார்க்க வேண்டிய அனைத்துலக நீதிமன்றத்தில் சூசூபி கேஸ்களுக்கு எல்லாம் இடம் இல்லை. 


ரோம் சாசனத்தின் ஐந்தாவது விதி.

(Article 5 of the Rome Statute)

சற்று ஆழமாகப் பார்ப்போம். கீழே சொல்லப்படும் குற்றங்களை விசாரிப்பதற்கு அந்தச் சாசனம் தகுதி பெறுகின்றது.

1. இனவழிப்பு: ஒரு குறிப்பிட்ட இனம்; ஒரு குறிப்பிட்ட நாட்டினத்தவர்; ஒரு குறிப்பிட்ட சமயக் குழுவினரை அழிக்க முயற்சி செய்தல்;

2. மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள்:  ஒரு நாட்டின் ஒரு பகுதி மக்கள் மீது மட்டும் திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறைகள். எ.கா: அடிமைப் படுத்தல்; இன ஒதுக்கல்; கொலை; பாலியல் வன்முறைகள்;

3. போர்க் குற்றங்கள்: போர்க் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய மனிதாபிமான விதி முறைகளை மீறிச் செல்லும் செயல்கள். அதாவது பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மீது வெடிகுண்டுகளைப் போடுவது; போர்க் கைதிகளைச் சித்ரவதை செய்வது; உயிர்க்கொல்லி ஆயுதங்களைப் பயன்படுத்துவது (biological weapons);

4. வலிய தாக்குதல்: அதாவது வலிந்து போய் ஒரு போரைத் தொடங்குவது;

ஆக இந்த நான்கு குற்றங்களைத் தான் ரோம் சாசனத்தின் வழி விசாரணை செய்ய முடியும். விசாரணை செய்வதற்கு அந்தச் சாசனத்திற்கு அதிகாரம் உள்ளது.

நம் நாட்டில் அரசு வழக்குரைஞர்கள் இருப்பது போல அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திலும் அனைத்துலக வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள். இவர்களை Office of The Prosecutor (OTP) என்று அழைக்கிறார்கள். 


இங்கே ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒருவர் ஒரு பாக்கெட் மெகி மீ திருடி விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அவரைக் கோர்ட்டிற்கு இழுத்துக் கொண்டு போகலாம். அவர் மீது குற்றப் பதிவு செய்யலாம். அவர் குற்றவாளி என நிரூபிக்க நீதிமன்றத்தில் வழக்காடலாம்.

நாலைந்து நாட்களுக்குச் சிறையில் போட்டு அடைத்து வைக்கலாம். திருடியது என்னவோ இரண்டு வெள்ளி பாக்கெட் மீயாக இருக்கும். ஆனால் ஒரு நாளைக்கு நாற்பது வெள்ளி செல்வு செய்ய வேண்டி இருக்குமே. சும்மா ஒரு கணக்கு. சரி.

ஆனால் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் அப்படி எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. சும்மா ஒரு நாட்டை கோர்ட்டிற்கு இழுத்துக் கொண்டு போய் கேஸ் போட முடியாது. நாட்டின் தலைவர்கள் மீது வழக்கு பதியலாம். ஆனால் நாட்டின் மீது வழக்கு பதிய முடியாது. சில இடக்கு முடக்குகள் இருக்கின்றன.

ரோம் சாசனத்தில் கையெழுத்துப் போட்ட நாடுகளில் உள்ள மக்களை மட்டுமே அனைத்துலக நீதிமன்றத்தில் விசாரிக்க முடியும். கையெழுத்துப் போடாத நாடுகளில் உள்ள மக்களை ஒன்றும் செய்ய முடியாது.

சில நாடுகலில் சிலர் வைத்தது சட்டமாக இருக்கலாம். இருந்தாலும் ரொம்பவும் ஓவராகப் போக முடியாது. அதற்கும் செக் பாயிண்ட் வைத்து இருக்கிறார்கள்.

ஐக்கிய நாட்டுச் சபையில் பாதுகாப்புச் சபை எனும் ஒரு சபை இருக்கிறது. (United Nations Security Council) தெரியும் தானே.

அதில் இருக்கும் நாடுகளில் பெரும்பாலானவை சம்மதம் தெரிவித்தால், எந்த ஒரு நாட்டையும் அனைத்துலக நீதிமன்றத்திற்கு இழுத்துக் கொண்டு போகலாம். ஆனால் வல்லரசு நாடுகள் அவற்றின் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

உண்மையிலேயே ஒரு நாட்டில் ஒரு பெரிய அநியாயம் நடக்கிறது; ஒரு பெரிய இனவழிப்பு நடக்கிறது என்றால் ரோம் சாசனம் தன்னிச்சையாகச் செயல் படலாம். யாருடைய அனுமதியும் தேவை இல்லை. அந்த அதிகாரம் அனைத்துலக நீதிமன்றத்திற்கு இருக்கிறது. 

அது எல்லாம் சரி. 2009-ஆம் ஆண்டு தமிழீழத்தில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் அழிக்கப் பட்டார்களே அப்போது இந்த ரோம் சாசனம் எங்கே போனதாம். இந்தியாவில் மாடு மேய்க்கப் போனதா இல்லை இத்தாலியில் இட்லி தோசைக்கு, மாவு அரைக்கப் போனதா? ரோம் சாசனத்திலும் குளறுபடிகள் இருக்கவே செய்கின்றன. மாமியார் உடைத்தால் மண்சட்டி. மருமகள் உடைத்தால் பொன் சட்டியா. நன்றாக வருகிறது.

ரோம் சாசனத்தில் கையொப்பம் போட்ட நாடுகள் மீது தான் வழக்குத் தொடர முடியும் என்பது அந்தச் சாசனத்தின் பொதுவான விதி. சொல்லி இருக்கிறேன். சரி.

அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் இரு வகையான தண்டனைகளை வழங்க முடியும். ரோம் சாசனத்தின் 77-ஆவது விதியின்படி,

(Article 77 of the Rome Statute)

தனிநபர் மீது குற்றம் உறுதிப் படுத்தப் பட்டால் அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க முடியும். அதே சமயத்தில் ஆயுள் தண்டனையையும் வழங்க முடியும்.

அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப் பட்டவர்களை எங்கே கொண்டு போய் அடைத்து வைப்பதாம். அதற்கும் ஒரு சிறைச்சாலையை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள்.

சுங்கை பூலோ சிறைச்சாலை போல அல்ல. அது ஒரு பழங்காலத்து மாளிகை. நெதர்லாந்து நாட்டில் இருக்கிறது. அதன் பெயர் சிவெனிஞ்சன்.

(Scheveningen Prison in Netherlands)

அழகான மாளிகை. உள்ளே எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

கடந்த 2019 மே மாதம் 16-ஆம் தேதி ரோம் சாசனத்தின் பட்டியலில் இருந்து மலேசியாவின் பெயர் அதிகாரப் பூர்வமாக நீக்கப் பட்டது.

மலேசிய அரசாங்கம் 2019 ஏப்ரல் 5-ஆம் தேதி ரோம் சாசனத்தில் இருந்து விலகிக் கொள்வதாக பிரதமர் துன் மகாதீர் அறிவித்தார். அரசியல் அழுத்தம் மற்றும் சில தரப்பினர் ரோம் சாசனம் பற்றி குழப்பத்தை ஏற்படுத்துவதால் அந்த முடிவை அறிவிக்க வேண்டி வந்தது என்று அவர் சொன்னார்.

இருப்பினும் படுகொலைகள், மனிதாபிமானமற்ற குற்றங்கள், போர்க் குற்றங்கள், குற்றவியல் ஆக்கிரமிப்புகள் போன்ற சட்ட விதிகளுக்கு மலேசியா உட்பட்டு இருக்கும் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

ரோம் சாசனத்தில் மலேசியாவின் செயல்பாடுகள்

17.07.1998 - ஐ.நா. பிரதிநிதிகள் மாநாட்டின் ரோம் சாசன அமைப்பில் மலேசியா முதன்முறையாகக் கையெழுத்து போட்டது.

27.05.2010 - அனைத்துலக நீதிமன்றத்தில் அங்கம் வகிக்க சம்மதம் தெரிவித்தது.

11.06.2010 - பிரதமர் நஜீப் மலேசியாவின் கொள்கைப் பாட்டை தெளிவு படுத்தினார்.

18.03.2011 - ரோம் சாசனத்தில் இணைவதற்கு மலேசிய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது.

05.08.2015 - மலேசிய விமானம் எம்.எச். 17 சுட்டு வீழ்த்தப் பட்டதை அனைத்துலக நீதிமன்றத்திற்கு மலேசியா கொண்டு சென்றது. எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

12.12.2018 - புதிய பக்கத்தான் அரசாங்கத்தின் அமைச்சரவை ரோம் சாசனத்தில் இணைவதற்கு ஒப்புதல் தெரிவித்தது.

26.12.2018 - இடைக்கால மாமன்னரிடம் அமைச்சரவையின் முடிவு அறிவிக்கப் பட்டது.

15.02.2019 - ரோம் சாசனத்தில் மலேசியா இணைவதைப் பற்றி மாமன்னரிடம் தெரிவிக்கப் பட்டது.

04.03.2019 - ரோம் சாசனத்தில் மலேசியா கையெழுத்து போட்டது.

05.04.2019 - ரோம் சாசனத்தில் இருந்து பின்வாங்கிக் கொள்வதாக மலேசியா அறிவித்தது.

கடைசியாக ஒரு முக்கியமான செய்தி. 18 வயதிற்கும் மேற்பட்டவர் எவரையும் ரோம் சாசனத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கலாம். எவரும் விதிவிலக்கு அல்ல. ஒரு நாட்டின் பிரதமராக இருந்தாலும் சரி; ஒரு நாட்டின் அரசராக இருந்தாலும் சரி. ரோம் சாசனம் பாதிப்பை ஏற்படுத்தும். புரியும் என்று நினைக்கிறேன்.

தவிர 2002-ஆம் ஆண்டிற்கு முன்னால் நடந்த அனைத்துலகக் குற்றங்களின் மீது வழக்கு தொடர முடியாது. அதனால் எத்தனையோ இடி அமீன்களும் இட்லர்களும் முசோலினிகளும் தப்பிச் சென்று விட்டார்கள்.

2000 டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் ரோம் சாசனத்தில் கையொப்பம் வைக்காத நாடுகள்:

சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஈராக், லெபனான், மலேசியா, நேபாளம், பாகிஸ்தான், துருக்கி. அதனால் இந்த நாடுகள் எப்போது வேண்டும் என்றாலும் ரோம் சாசனத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம்.

ரோம் சாசனத்தில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக அண்மையில் அறிவித்து உள்ள நாடுகள் இஸ்ரேல், சூடான், அமெரிக்கா, ரஷ்யா.

கடைசியாக பிலிப்பைன்ஸ் நாட்டின் மீது பலரின் பார்வை திரும்பியது.  இருந்தாலும் இரு மாதங்களுக்கு முன்னர் பிலிப்பைன்ஸ் நாடும் ரோம் சாசனத்தில் இருந்து விலகிக் கொண்டது.

ஓரு நாட்டின் அரசரையும் விசாரிக்கலாம் என்பது ரோம் சாசனத்தின் ஒரு கோட்பாடு. அதனால் பல நாடுகள் அந்தச் சாசனத்தில் கையொப்பம் போடாமல் இருதலைக் கொள்ளி எறும்புகளைப் போல தடுமாறிக் கொண்டு நிற்கின்றன. உலகளாவிய நிலையில் ஏறக்குறைய 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெரும்பாலானவை ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்கள் தொடர்பானவை.

எது எப்படி இருந்தாலும் தமிழீழ மக்களுக்கு ஒரு நியாயம் கிடைக்கும் வரையில் ரோம் சாசனத்தின் மீது எனக்கும் ஒரு நம்பிக்கை ஏற்படப் போவது இல்லை. 

சான்றுகள்:

1. Rome Statute of the International Criminal Court website
https://www.icc-cpi.int/Pages/Main.aspx

2. Text of the Rome Statute as amended in 2010 and 2015 — Human Rights & International Criminal Law Online Forum

3. United Nations Treaty Database entry regarding the Rome Statute of the International Criminal Court.