கொரோனா வைரஸ்: ஆண்கள் அதிகமாய் இறக்கிறார்கள். ஏன்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொரோனா வைரஸ்: ஆண்கள் அதிகமாய் இறக்கிறார்கள். ஏன்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 ஏப்ரல் 2020

கொரோனா வைரஸ்: ஆண்கள் அதிகமாய் இறக்கிறார்கள். ஏன்?

கொரோனாவினால் ஆண்கள் தான் அதிகமாய் உயிர் இழக்கிறார்கள். பெண்களின் இறப்பு ஆண்களைவிட குறைவு. சராசரியாக ஒரு பெண்ணுக்கு மூன்று ஆண்கள் உயிர் இழக்கிறார்களாம். புதிய மருத்துவ ஆய்வுத் தகவல்கள் பரவலாகி வருகின்றன. 



இது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும். ஆராய்ந்து பார்த்ததில், உடலமைப்பு ரீதியில் பெண்களைவிட ஆண்கள் சற்றே பலவீனமானவர்கள் எனும் உண்மை தெரிய வருகிறது.

உயிர் வாழும் முறை என்று வரும் போது பெண்களைவிட ஆண்கள் சற்றே பலவீனமானவர்கள் (When it comes to survival, men are the weaker sex.). அதற்குச் சில காரணங்கள் சொல்லப் படுகின்றன. என்ன காரணங்கள் என்று பார்ப்போம்.

இப்போது ஏற்பட்டு இருக்கும் இந்தக் கொரோனா தொற்று இருக்கிறதே, இது ஒன்றும் முதன்முறையாக ஏற்பட்ட உலகளாவியத் தொற்று நோய் அல்ல. ஏற்கனவே பற்பல கொடிய நோய்கள் வந்து போய் விட்டன. பல கோடி மக்கள் இறந்து போய் இருக்கிறார்கள்.




கறுப்பு மரணம் என அழைக்கப்படும் பிளேக் நோய்; காலரா; ஸ்பானிஷ் காய்ச்சல் (Spanish flu); சார்ஸ் (Severe Acute Respiratory Syndrome (SARS) போன்ற ’பெண்டமிக்’ தொற்றுகள் வந்து போய் இருக்கின்றன. சரி.

இப்போதைய உலக மக்களில் 100 வயது வரை வாழ்ந்து கொண்டு இருப்பவர்களில் 80 விழுக்காட்டினர் பெண்கள். 110 வயதை எட்டியவர்கள் 95 விழுக்காட்டினர் பெண்கள். ஆண்கள் சிலர் மட்டுமே தட்டுத் தடுமாறி அந்த வயதுகளைத் தொட்டுப் பார்க்கிறார்கள்.

மனித மரபணுக்களில் ஆண்களின் மரபணுக்கள்; பெண்களின் மரபணுக்கள்; இரண்டும் ஒன்று தான். ஒரே மாதிரி தான். ஆனால் அவற்றின் பரிணாம வளர்ச்சி (evolutionary growth) முறையில் தான், இரண்டுமே கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றம் கண்டு இருக்கின்றன. 




பரிணாமம் என்றால் என்ன? வாழ்வியல் சூழலுக்கு ஏற்றவாறு கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நாமே செதுக்கிக் கொள்வதைத் தான் பரிணாமம் என்கிறோம்.

உயிருடன் வாழும் ஓர் உயிர்ப் பொருளை உயிரி என்கிறோம். அந்த உயிரி, பூமியின் காலச் சூழல்; சுற்றுச் சூழல் அமைப்புக்கு ஏற்றவாறு படிப்படியாகத் தன்னை மாற்றிக் கொள்வது தான் பரிணாமம்.

ஆண்களின் மரபணுக்கள் அவர்களுக்குக் கொஞ்சம் கூடுதலான உடல் தசையைக் கொடுக்கிறது. உடலுக்கு உயரத்தையும் கொஞ்சம் கூடுதலாகக் கொடுக்கிறது. இது பல இலட்சம் ஆண்டுகளாக நடந்த பரிணாமம்.

ஆண்களின் உடல் எடையும் உடல் வலிமையும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. ஏன் ஆண்களுக்கு மட்டும் இப்படி தனிப்பட்ட மரபணுச் சலுகைகள் என்று கேட்கலாம். நல்ல கேள்வி.




மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து ஆண்களுக்கு உடல் ரீதியாகவே பற்பல கஷ்டங்கள்; எதிர்நீச்சல்கள்; சண்டைகள்; கலவரங்கள்; திண்டாட்டங்கள்; தத்தளிப்புகள்; போர்கள்; போராட்டங்கள்.

குகைகளில் வாழும் போது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி கொடிய விலங்குகளுடன்  போராட்டம். உணவுத் தேடிப் போகும் போது காட்டு விலங்குகளிடம் இருந்து உயிர்த் தப்பிக்கப் போராட்டம்.

எதிரிக் குழுக்களிடம் இருந்து குடும்ப உறுப்பனர்களைத் தற்காக்க வேண்டிய போராட்டம். பயிர் பச்சைகளைப் பெரிய மிருகங்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டிய போராட்டம்.

இப்படி எக்கச்சக்கமான போராட்டங்கள். பல இலட்சம் ஆண்டுகளாக இந்த மாதிரியான தப்பிப் பிழைக்கும் போராட்டங்களை ஆண்கள் நடத்தி வந்து இருக்கிறார்கள். அங்கே இருந்து தான் ஆணாதிக்கமும் தலை தூக்கி இருக்கிறது. 




அதனால் ஆண்களின் மரபணு பரிணாமத்தில் சற்றே கூடுதலான வலிமை மாற்றங்கள். அதுதான் உண்மை. புரியும் என்று நினைக்கிறேன். சரி.

கொரோனா நோயினால் பெண்களைவிட ஆண்கள் தான் அதிகமாய் உயிர் இழப்பதாகத் தகவல்கள். என்ன காரணங்கள். ஆண்கள் சில கசப்பான உண்மைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முதல் காரணம்: ஆபத்தான நேரங்களில் ஆண்களைவிட பெண்கள் அதிக மனவலிமையுடன் செயல்படும் திறன் கொண்டவர்கள். அதே சமயத்தில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக மன தைரியம் கொண்டவர்கள்.

ஆபத்துகளை எதிர்கொள்வதில் ஆண்களைவிடப் பெண்களே துணிச்சல் மிக்கவர்கள் என்று சொல்லப் படுகிறது. இந்தக் காரணம் மனவலிமை தொடர்பானது.




இரண்டாவது காரணம்: மது அருந்தும் பழக்கம். இந்தப் பழக்கம் ஆண்களுக்கு அதிகம். பெண்களைவிட ஆண்களே மதுப் பழக்கத்திற்கு அதிகமாய் அடிமையானவர்கள். இதுவும் ஒரு பொதுவான கருத்து.

மூன்றாவது காரணம்: புகைபிடிக்கும் பழக்கம் (Higher rates of tobacco consumption). புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குப் பொதுவாக நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது உண்டு.

கொரோனா வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் மூக்கு வழியாக நுழைந்து மூச்சுக் குழாயை முதலில் சேதப் படுத்துகிறது. அடுத்து நுரையீரலைச் சிதைக்கிறது. அதனால் வைரஸ் தொற்று ஏற்பட்டதும் அவர்களின் நுரையீரல் அதிகமாய்ப் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கிறார்கள்.

நான்காவது காரணம்: பெண்களின் ஹார்மோன் (hormone) சுரப்பிகளில் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பது ஒரு காரணம் (more aggressive immune system).

அதனால் கொரோனா உயிரிழப்புகள் தடுக்கப் படுவதாகவும் சொல்லப் படுகிறது. வைரஸ் கிருமிகளை எதிர்த்துப் போராடும் சக்தி பெண்களுக்கு அதிகம். 




ஆனாலும் பெண்களின் ஹார்மோன் (hormone) சுரப்பிகளில் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால் அதுவே சமயங்களில் அவர்களுக்கு ஆபத்தாகவும் முடியலாம்.

முடக்கு வாதம் (rheumatoid arthritis); தண்டுவட மரப்பு நோய் (multiple sclerosis}; கேடயச் சுரப்பியைத் தாக்கி அழிப்பது (autoimmune thyroiditis); ஜோக்ரன் சிண்ட்ரோம் (Sjögren’s syndrome); தோல் அழிநோய் (lupus) போன்ற நோய்கள் பெண்களுக்கு அதிகம். ஆக பெண்களின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு அவர்களின் ஹார்மோன்களே காரணம்.

ஐந்தாவது காரணம்: பெரும்பாலும் பெண்கள் வீட்டிலேயே இருக்கிறார்கள். தங்கள் உடலை எப்போதும் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஆண்கள் அப்படி இல்லையே. அதிகமாய் வெளியே போவது வழக்கம். அதனால் உடல் சுத்தம் கொஞ்சம் குறைவு. பெண்களுக்கு வீடுதான் உலகம். ஆண்களுக்கு உலகமே வீடு.

இந்த மாதிரியான காரணங்களினால் தான் கொரோனா உயிரிழப்பு விகிதத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள். ஆக என்னதான் வேறுபாடுகள் இருந்தாலும், ஆண்களின் உயிரிழப்புகள் என்பது பெண்களையும் மறைமுகமாகப் பாதிக்கும்.

ஏன் என்றால் பெண் இனம்; ஆண் இனத்தைச் சார்ந்து இருக்கிறது. ஆண் இனம்; பெண் இனத்தைச் சார்ந்து இருக்கிறது. இதில் ஓர் இனத்திற்கு இழப்பு என்றால் அது இரண்டு இனத்தையுமே பாதிக்கும். நீ இல்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் நான் இல்லை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
05.04.2020


பேஸ்புக் பதிவுகள்


Parimala Muniyandy அருமையான விளக்கங்களுடன் கூடிய பதிவு. மிக்க நன்றிங்க அண்ணா🙏

Muthukrishnan Ipoh கருத்துகளுக்கு நன்றிங்க...

M R Tanasegaran Rengasamy "மாதராய்ப் பிறப்பது மாதவம்..." ரொம்பச் சரி. வாழ்க பெண்கள்.

Muthukrishnan Ipoh வீட்டை விட்டு யாருமே வெளியே போகக் கூடாது என்பதால்... குடும்பங்களில் ரொம்பவுமே சண்டைச் சச்சரவுகளாம்... Domestic Violence... புருசன் பெஞ்சாதி சண்டைகள்...😆😆

M R Tanasegaran Rengasamy வாழ்க்கையில் இதுவெல்லாம் சகஜம் சார்.

Muthukrishnan Ipoh 😆😆✌️

Balamurugan Balu வணக்கம்! நல்ல செய்தியை பதிவு செய்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்!

Muthukrishnan Ipoh பெண்களுக்கு நல்ல செய்தி... பாவம் ஆண்கள்...

Poovamal Nantheni Devi >>> Muthukrishnan Ipoh இல்லை ஐயா, குடும்ப வாழ்வில் பெண் துணை இல்லாத ஆணும், ஆண் துணை இல்லாத பெண்ணின் வாழ்வும் சிரமமே.

Muthukrishnan Ipoh >>> Poovamal Nantheni Devi ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சார்ந்து உள்ளனர்... 0 என்பது பெண்கள்... 1 என்பது ஆண்கள்... இந்த இரு எண்களால் தான் மனித இனம் நகர்ந்து கொண்டு இருக்கிறது... கணினித் துறையும் 0, 1 எனும் இரு எண்களால் தான் இயங்குகிறது...

Sheila Mohan சிறப்பான விளக்கம் நன்றிங்க சார்...

Muthukrishnan Ipoh நன்றிங்க.... மகிழ்ச்சி...

Tanigajalam Kuppusamy ஆண்கள், பெண்களின் ஒப்புயர்வு அலசல் அருமை. பரிணாம விளக்கமும் மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி புனைந்து உள்ளீகள். 👍🌺

Muthukrishnan Ipoh பெண்களைப் பகைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது... நல்லதோ கெட்டதோ அவர்களைப் பாராட்டி நம் காரியத்தைச் சாதித்துக் கொள்வோமே... பாராட்டுங்கள் பரிசுகளை அள்ளுங்கள்... 😃😃

Muthukrishnan Ipoh மரபணுக்களைப் பற்றியும் அவற்றின் உள்ளடக்கம் பற்றி விளக்கம் கொடுப்பதுவும் கடினம் என்று சொல்ல முடியாது... முதலில் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்... அதன் பின்னர் தமிழ்ப் படுத்துவதில் சிரமம் இருக்காது... நன்றிங்க தணிகா...

Pon Vadivel ஐயா மேதகு முத்து அவர்களே, ஆதி காலத்தில் எல்லா துறைகளிலும் பெண்களே தலைவர்களாகவும் ஆட்சி புரிபவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். பெண்களின் உத்தரவுக்கு ஏற்ப, ஆண்கள் உணவு தேடவும் வீட்டுக்கு காவலாகவும் இருந்திருக்க வேண்டும்.

உலகம் இயற்கையாக பயணித்துள்ளது. இறுமாப்பும் ஆணவமும் கொண்ட ஆடவன், ஆட்சியை பெண்களிடம் இருந்து பின் வாசல் வழியாக ஆக்கிரமித்து உலகை பலிகடா ஆக்கிவிட்டான். பொறுமை இழந்த ஆண்டவன் ஆறறிவு மிக்க மனிதனை அழிக்க ஓரறிவு வைரஸ்களை அனுப்புகின்றார்.

பண்டைய கால பல மிருகங்கள் இனம் இப்போதில்லை. அது போல இப்போது இருக்கும் அரக்க குணம் படைத்த மனித இனங்களை படைப்பதை நிறுத்தி மனித சாயலில் தெய்வ குணம் பொருந்திய மாற்று இனம் படைக்க முனைந்து விட்டாரோ, என்னவோ. உங்களின் ஆராய்ச்சியில் இப்படி ஒரு சங்கதி எழுந்திருக்கின்றதா, ஐயா.

Muthukrishnan Ipoh வணக்கம். தங்களின் கேள்விக்குப் பின்னர் பதில் அளிக்கிறேன்... நன்றி.

Inbachudar Muthuchandran ஆண்கள் பெண்கள் பற்றி சிறப்பான கட்டுரை, வாழ்த்துகள் அய்யா

Muthukrishnan Ipoh கருத்துகளுக்கு நன்றி... மகிழ்ச்சி ஐயா...

Mahdy Hassan Ibrahim ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மைகள்! தெளிவூட்டலுக்கு நன்றிகள்!

Muthukrishnan Ipoh மருத்துவ வல்லுநர்கள் செய்த ஆய்வுகள்... நம்பகமான ஆய்வுகள்... ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் நல்லாய்வுகள்.. நன்றிங்க...

Maana Mackeen ஆய்வும் எழுத்தும் அருமை. அருமை. அந்தக் கிருமி உங்களிடம் வாலாட்டாது இருப்பதாக... அத்தோட, கள்ளுக் கடைப் பக்கம் போவாதீக அப்புறானே... சத்தியமா...

Muthukrishnan Ipoh கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க இலங்கைப் புகழ் எழுத்துச் செம்மலே... இலங்கைத் தமிழேடுகளில் தங்களின் எழுத்துகளைக் கண்டு பரவசம் அடைந்தவர்களில் அடியேன் ஒருவன்... வாழ்த்துகள் ஐயா...

Maana Mackeen மகிழ்ச்சியும் நன்றியும். வசதிப் பட்டால், நீங்கள் தொடர்புடைய 'தமிழ் மல'ரில் உங்கள் நாட்டுத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரையைப் பார்த்து விடுங்கள்.

Don Samsa அப்படியே தலைவரே.. நல்லது

Muthukrishnan Ipoh
மகிழ்ச்சி

KR Batumalai Robert சிறப்பு அண்ணா.

Muthukrishnan Ipoh நன்றி.... மகிழ்ச்சி...

Krishna Ram Superb sir....

Muthukrishnan Ipoh நன்றி... நன்றி...

Melur Manoharan "அருமையான" பதிவு"...! நன்றி ஐயா...!

Muthukrishnan Ipoh நன்றிங்க தம்பி...

Sathya Raman மேலே உள்ள ஆய்வு கட்டுரையில் நீங்கள் பதிவு செய்த அனைத்தும் உண்மை தான் சார். அதில் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் ஊர் சுற்றுபவர்கள் என்கிறீர்கள். மெத்த சரிதான். இக்கட்டான காலக் கட்டத்தில் கூட அடங்கி ஒடுங்கி இருக்க மாட்டேன் என்கிறார்கள்.

நம் நாட்டு காவல்துறை ஆரம்பத்தில் கண்டித்தார்கள். அத்துமீறி போனதும் போலீஸ் லாரிகளில் அள்ளிக் கொண்டு போய் அபராதம் விதிப்பதோடு ஜெயிலில் போடுவதாகச் சொல்கிறார்கள்.

ஆனால் இந்தியாவில் ஆங்காங்கே ஊர் சுற்றும் ஆண்களை அங்குள்ள காவல் அதிகாரிகள் அடி கொடுத்து வெளுத்து வாங்குகிறார்கள். தேவையா இது. உயிருக்குப் பயந்தாவது பத்திரமாக வீட்டிலே இருந்தால் என்ன... குடி முழுகி விடுமா என்ன? மற்றும் ஒரு சிந்தனை மிக்க கட்டுரை. நன்றிங்க சார் 🙏

Muthukrishnan Ipoh மேலும் ஒரு தகவல்... வீட்டிற்குள்ளேயே இருங்கள் என்று அரசாங்கம் கெஞ்சிக் கூத்தாடினாலும் சிலர் கேட்பதாக இல்லை...

கோலாலம்பூரில் ஓர் அரசாங்க அதிகாரியும் (கவுன்சிலர்) அவரின் நண்பர்களும் பொது வளாகத்தில் பேட்மிண்டன் விளையாடி இருக்கிறார்கள். அவர்களைப் பிடித்துக் கொண்டு போய் நீதிமன்றத்தில் நிறுத்தி விட்டார்கள். மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டியவர்களே அரசாங்க விதி முறைகளை மீறினால் எப்படிங்க...

கொரோனா வைரஸ் தாக்கத்தைச் சாதாரணமாக எடை போடுவது ரொம்பவும் தப்பு... இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்து ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு எப்படியும் 18 மாதங்கள் பிடிக்கலாம்... அதற்குள் பல வேதனையான விளைவுகளை மனுக்குலம் எதிர்நோக்க வேண்டி வரலாம்...

மலேசியா மட்டும் அல்ல... உலகமே நிலைகுத்தி நிற்கிறது... இன்றைய நிலவரம்...

பாதிப்பு அடைந்தவர்கள்:
1,217,724

இறப்புகள்:
65,832

நலம் அடைந்தவர்கள்:
253,744

Sathya Raman >>> Muthukrishnan Ipoh சொல் பேச்சு கேட்காதவர்களை கொரோனா தான் தட்டி கேட்கணும் சார்.🤦

Don Samsa என்ன தலைவரே, நாளுக்கு நாள் குண்டுகளை தூக்கிப் போடறீங்க. கட்டுரையை படிப்பதற்கே பயமாய் உள்ளது. எங்க உங்களை புலனத்தில் ஆளையே காணோமே தலைவரே. அழைத்தாலும் பதில் இல்லை...

Muthukrishnan Ipoh உண்மை தான் ஐயா... உலக அளவில் கொரோனாவில் பாதிக்கப் பட்டவர்களில் 71% ஆண்கள்... கொஞ்ச நாட்களுக்கு வாட்ஸ் அப் மௌன விரதம்...

Samugam Veerappan தாங்கள் சொல்லும் கருத்துகள் அனைத்தும் உண்மையானவை

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி ஐயா...

Tanigajalam Kuppusamy #புனைந்துள்ளீர்கள்

Manickam Nadeson என்ன தவம் செய்தோமோ, இப்படி ஒரு கிருமி ஆண்களை அதிகம் தாக்குவதற்கு... நாமெல்லாம் ரொம்ப பாவம் ஐயா சார். சரியா சாமி கும்பிடுறது இல்லையோ???

Muthukrishnan Ipoh ஆண்களுக்குப் பெண்களைவிட நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு என்பது உண்மை... ஆண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்... அதே சமயத்தில் ஆண்களுக்கு ஆபத்து என்றால் அது பெண்களையும் பாதிக்கும்...

Jainthee Karuppayah கடைசியாக சொன்னீர்களே நான் இன்றி நீ இல்லை... நீ இன்றி நான் இல்லை... கட்டுரையின் முத்தாய்ப்பு. I give 100% marks...

Muthukrishnan Ipoh மார்க் கொடுத்து பாராட்டி இருக்கிறீர்கள்.... மிக மகிழ்ச்சி...

பெ.சா. சூரிய மூர்த்தி தங்களின் பதிவுகள் அனைத்தும் சிந்திக்கக்கூடியவை ஐயா.நன்றி.வணக்கம்.வாழ்க.

Muthukrishnan Ipoh கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க...

Balamurugan Bala விளக்கங்களுடன் கூடிய சிறப்பான கட்டுரை சார்...

Muthukrishnan Ipoh நன்றிங்க... வாழ்த்துகள்...

Shanker Muniandy உங்கள் கூற்று முற்றிலும் உண்மை.

Muthukrishnan Ipoh நன்றி... மகிழ்ச்சி...

Vely Loganathan நன்றி அய்யா

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி... வாழ்த்துகள்.