தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 நவம்பர் 2019

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் - 1

தமிழ் மலர் - 19.11.2019
 
மலேசிய நாடாளுமன்ற இடைத்தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஓர் ஆளும் கட்சிக்கு வேதனைமிக்கத் தோல்வி. மன்னிக்கவும். ஒரு பரிதாபமான தோல்வி. தஞ்சாங் பியாய் இடைத்தேர்தல் மலேசிய வரலாறு காணாத தோல்விப் பட்டியலில் முதலிடம் பெறுகிறது. சொல்லும் போதும் வேதனை. சொல்லிய பிறகும் வேதனை. 



ஏன் எதனால் என்பதைப் பின்னர் பார்ப்போம். அவசரம் இல்லாமல் உள்ளங்கைப் புண்ணுக்குக் கொஞ்சம் மெதுவாகவே மருந்து போடுவோம்.

1959-ஆம் ஆண்டில் இருந்து இன்றைய வரையில் மலேசியாவில் 72 நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெற்று உள்ளன.

அதில் தஞ்சாங் பியாய் இடைத்தேர்தலைத் தவிர்த்து மற்ற 70 இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சிக்குச் சராசரியாக 56 விழுக்காட்டு வாக்குகள் கிடைத்து உள்ளன. அதாவது பாரிசான் கூட்டணி; பக்காத்தான் கூட்டணி. இரண்டு கூட்டணிகளையும் சேர்த்துத் தான் மேலே சொன்ன அந்தக் கணக்கு.

ஆனால் தஞ்சாங் பியாய் இடைத்தேர்தலில் மட்டும் தான் பக்காத்தான் கூட்டணிக்கு மிகவும் குறைவாக 26 விழுக்காடு கிடைத்து உள்ளது. மிக மிக மோசமான சரிவு.



பாரிசான் கூட்டணியை எடுத்துக் கொண்டால், 1988-ஆம் ஆண்டு ஜொகூர் பாரு இடைத் தேர்தலில் தான் அந்தக் கூட்டணிக்கு மிக மோசமான வாக்குப் பதிவு. 29 விழுக்காடு வாக்குகள். அதுதான் அந்தக் கட்சிக்கு கிடைத்த மிக மோசமான வாக்குப் பதிவு.

அதற்கும் காரணம் இருக்கிறது. 1988-ஆம் ஆண்டில் பாரிசான் கூட்டணிக்குள் பனிப்போர். அம்னோ கலைக்கப்பட்ட நேரம். அடுத்து ஓப்பராசி லாலாங் (Operasi Lalang). அதனால் பாரிசான் கூட்டணிக்குப் பெரும் அரசியல் பின்னடைவுகள். இருந்தாலும் போட்டிப் போட்டு வெற்றிப் பெற்று விட்டதே. பெரிய விசயம்.

ஆனால் இந்தத் தஞ்சாங் பியாய் இடைத்தேர்தலில், பக்காத்தான் கூட்டணி எல்லாப் பதிவுகளையும் தாண்டி 3 விழுக்காடு அதரப் பாதாளத்திற்குள் விழுந்து இருக்கிறது. வேதனைக்குரிய செய்தி.



இன்னும் ஒரு தகவல். மலேசியாவில் நடந்த 72 இடைத் தேர்தல்களில் ஒரே ஓர் இடைதேர்தலில் மட்டும் தான் வாக்குப் பதிவுகள் எதுவும் நடக்கவில்லை.

1997-ஆம் ஆண்டு லிப்பிஸ் (பகாங்) இடைத் தேர்தல். அதாவது போட்டி இல்லாமல் பாரிசான் வெற்றி பெற்றது. சரி. முக்கியமான விசயத்திற்கு வருகிறோம்.

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் என்பது பக்காத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெற்ற ஒன்பதாவது தேர்தல்.

அதே சமயத்தில் கேமரன் மலை, செமிஞ்சே, ரந்தாவ் இடைத் தேர்தல் தோல்விகளுக்குப் பின்னர் இதுவே பக்காத்தான் பார்த்த நான்காவது இடைத்தேர்தல் தோல்வி.

தஞ்சாங் பியாய் இடைத்தேர்தலில் பக்காத்தான் கூட்டணி ஏன் இவ்வளவு மோசமாகத் தோல்வி அடைந்தது. வெளிநாட்டவர்களைக் கேட்டால் ஒன் மில்லியன் டாலர் கேள்வி என்று சொல்வார்கள். 



மலேசியர்களைக் கேட்டால் கிண்டர்கார்டன் கேள்வி என்று சிம்பளாகச் சொல்லி விட்டுப் போய் விடுவார்கள்.

ஒரே வார்த்தையில் சொன்னால், மலேசியர்கள் இந்தத் தேர்தலில் தாங்கள் உண்மையிலேயே அறிவுஜீவிகள் என்பதை சொல்லாமல் சொல்லிக் காட்டி இருக்கிறார்கள். அவ்வளவுதான். மூன்று இனத்தையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.

தஞ்சாங் பியாய் தொகுதியில் 57% மலாய்க்காரர்கள். 42% சீனர்கள். 1% இந்தியர்கள். ஏறக்குறைய 600 பேர். நம் எண்ணிக்கை மிகவும் குறைவு. சரி. விஷயத்திற்கு வருகிறேன்.

அன்றைக்கும் சரி; இன்றைக்கும் சரி. மலேசிய அரசியல்வாதிகளில் பலர் தாங்கள் நடந்து வந்த பாதையை மறந்து விட்டு, பில் கேட்ஸ் நினைப்புகளில் மிதந்து கொண்டு இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள். இதை இங்கே சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம். சொல்ல வேண்டி இருக்கிறது.

எந்த நினைப்பில் எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் மக்கள் குரலே மகேசன் குரல் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆக தட்டிக் கேட்கும் நேரத்தில் தட்டிக் கேட்பார்கள். ஆனாலும் மலேசிய மக்களை முட்டாள்களாக நினைத்தது தான் தப்பு. அப்படி நினைத்து… சுயநல அரசியலைத் திணித்ததும் தப்பு. ரொம்பவும் தப்பு.



வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல தங்களின் சுய அரசியல் ரூபத்தைப் அலங்கார ரூபமாகத் திணிக்கத் துணிந்தார்கள். திணித்தும் வருகிறார்கள். இல்லை என்று சொல்ல முடியுமா. அதனால் தான் வீட்டுக்கு வந்த சீதேவிக்குக் கன்னா பின்னா என்று கோபம். போங்கடா என்று காணாமல் போய் விட்டாள்.

மலேசிய மூத்த அரசியல்வாதிகளில் சிலர் மலேசிய மக்களின் வியூகத் தனமையை ரொம்பவும் தவறாகக் கணக்குப் போட்டு விட்டார்கள். குறிப்பாக மலேசிய இந்தியர்களைக் குறி வைத்துக் காய்களை நகர்த்தியதும் தப்பு. அப்படித் தான் சொல்ல முடிகிறது.

மலேசிய மக்கள் என்ன சொன்னாலும் கேட்பார்கள். பழசை எல்லாம் எளிதில் மறந்து விடுவார்கள். கண்ணை மூடிக் கொண்டு ஆமாம் சாமி போடுவார்கள். இப்படித் தவறாகக் கணக்குப் போட்டதால் தான் மக்களின் எதிர் விளைவுகள். மக்கள் ஆத்திரத்தைத் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் ’கொட்டி’ இருக்கிறார்கள்.

இதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்வார்களா. இல்லை பில் கேட்ஸ் நினைப்பிலேயே இன்னும் போய்க் கொண்டு இருப்பார்களா. தெரியவில்லை.



பொறுமைக்கும் ஓர் அளவு உண்டு. இப்படியே விட்டால் சரிபட்டு வராது. ஆக ஒரு பாடத்தைக் கற்றுத் தர வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப் பட்டார்கள். ஒரு ‘செக்’ வைப்போம் என்று மக்கள் முடிவு எடுத்து இருக்கிறார்கள்.

அதே சமயத்தில் இன்னும் ஒன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். அண்மைய காலங்களில் நடப்பு அரசாங்கத்தின் கொள்கைகள் சற்றே மாறுபட்ட கோணத்தில் பயணித்துக் கொண்டு இருந்தன.

அதுவும் இந்தத் தேர்தலை முன்னிட்டு, கடந்த ஒரு மாத காலமாகக் காய்கள் நகர்த்தப்பட்ட விதம் நன்றாகவே இல்லை. இனவாத அரசியல்; மதவாத அரசியல். இவற்றை மலேசிய மக்கள் பொதுவாகவே விரும்பவில்லை.

அந்த வகையில் தங்களின் வாக்கு வலிமையை, இந்த இடைத் தேர்தலில் மிகச் சாமர்த்தியமாகக் காட்டி இருக்கிறார்கள்.

ஓர் இனவாத அரசியலையும்; ஒரு மதவாத அரசியலையும் மலேசியர்கள் விரும்பவில்லை என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

’உங்களுக்குத் தான் காய்களை நகர்த்தத் தெரியுமா... நாங்களும் நகர்த்துவோம்ல...’ என்று அழகாகவே நகர்த்தி இருக்கிறார்கள். என்றைக்கும் மக்களை மக்களாக நினைக்க வேண்டும். அவர்களை முட்டாள்களாக நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் தப்பு.



இன்னும் ஒரு விதத்திலும் நாம் பார்க்க வேண்டி உள்ளது. ஒரு தேர்தல் வந்தால் போதும். மக்களுக்கு இனிக்க இனிக்க வாக்குறுதிகள். அதுவும் மலேசிய இந்தியர்களுக்குச் சொல்லவே வேண்டாம். திருநெல்வேலி அல்வாக்கள் தோற்றுப் போகும்.

தேர்தலில் சிந்தாமல் சிதறாமல் எங்களுக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள். நாங்களும் உங்களை நனையாமல் நகராமல் நன்றாகவே குளிப்பாட்டி விடுகிறோம். பாலையும் தேனையும் கிண்டி பசும்பால் உப்புமா செய்து கொடுக்கிறோம்  என்பார்கள்.

பாவம் மலேசிய இந்தியர்கள். நம்பி நம்பி மோசம் போனது தான் மிச்சம். 60 வருசமாக இப்படித்தான் நடந்து கொண்டு இருக்கிறது. மலேசிய இந்தியர்கள் ஏமாந்து ஏமாந்து இலவு காத்த கிளிகளாய்ச் செத்துப் போனது தான் மிச்சம்.

தேர்தல் முடிந்து வெற்றி பெற்றதும் அரசியல்வாதிகள் வருவார்கள். வர மாட்டார்கள் என்று சொல்லவில்லை. வீடு தேடி வர மாட்டார்கள். வந்தாலும் வந்த மாதிரியே போய் விடுவார்கள். எல்லா அரசியல்வாதிகளையும் சொல்லவில்லை. 



தேர்தல் நேரத்தில் சொன்ன பாலும் கிடைக்காது. பச்சைச் சுண்ணாம்பும் கிடைக்காது. ஓட்டுப் போட்டவர்களின் வீட்டு வாசல் படியில் பிய்ந்து போன சிலிப்பர் தான் சிரித்துக் கொண்டு கிடக்கும். இதுதான் இங்கே னடக்கும் இன்றைய அழகிய அரசியல் நர்த்தனங்கள்.

இதற்கு முன்னர் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் எல்லாம்... இடைத் தேர்தல்களைத் தான் சொல்கிறேன். பாரிசான் தேசிய முன்னணிக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு சன்னம் சன்னமாக அதிகரித்து ஒரு கணிசமான அளவுக்கு உயர்ந்து வந்தது. கவனித்து இருக்கலாம்.

ஆனால் இந்தத் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் ஒரு பெரிய மாற்றம். இவ்வளவு நாளும் பட்டும் படாமல் போய்க் கொண்டு இருந்த சீனர்கள், இந்த முறை பாரிசானுக்கு ஆதரவாகத் திசை திரும்பி உள்ளனர். ஆச்சரியமான விசயம்.

ஆக சீனர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் பக்காத்தான் ஆதரவு பெரிய அளவில் குறைந்து உள்ளது. இதையும் நாம் கவனிக்க வேண்டும்.

தேசிய முன்னணிக்குச் சீனர்கள் அளித்த வாக்குகள் பெரும்பாலும் ஆட்சேப வாக்குகள். சொல்ல வேண்டி வருகிறது. பக்காத்தானுக்கு எதிரான வாக்குகள்.

அண்மைய காலங்களில் பொதுவாகவே பக்காத்தான் மீது மக்களுக்கு ஒரு வகையான அதிருப்தி; ஒரு வகையான வெறுப்பு. இரண்டும் ஒன்றரக் கலந்ததால் மறைமுகமான எதிர்ப்பு. அந்த வெறுப்பைத் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் போட்டு உடைத்து விட்டார்கள். 



அண்மையக் காலங்களில் மூத்த தலைவரின் பேச்சும் செயலும் நம்பிக்கைக் கூட்டணி மீதான நம்பிக்கையை ரொம்பவுமே பாதித்து விட்டது. குறிப்பாக மலேசிய இந்திய, சீன இனத்தவரின் நம்பிகையை நலிவுறச் செய்து விட்டது.

இதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். பாஸ் கட்சியும் அம்னோவும் கைகோர்த்துக் குசலம் விசாரித்துக் கொண்டது ஒன்றும் பெரிய காரணம் அல்ல. இதைவிட பெரிய விசயம் எல்லாம் இருக்கிறது.

முக்கியமான விசயம். சொன்னது ஒன்று. செய்தது ஒன்று. பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் சொஸ்மா சட்டம் அகற்றப் படும் என்று மேடை முழக்கம் செய்தார்கள். அப்படியா நடந்தது. இல்லையே.

விடுதலைப் புலிகள் விவகாரம் என்று சொல்லி அதே சொஸ்மா சட்டத்தை அவிழ்த்துவிட்டு 12 மலேசிய இந்தியர்களைக் கைது செய்து காவலில் வைத்து இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தார் அழுகையின் குரல்கள் இன்னும் ஓயவில்லை. எங்கே சொல்லி எப்படி முட்டிக் கொள்வது.

ஜாகிர் நாயக் விவகாரம். மலேசிய இந்தியர்களையும் சீனர்களையும் வந்தேறிகள் என்று ஜாகிர் நாயக் பகிங்கரமாகச் சொன்னார். இதில் மூத்த தலைவர் எடுத்த நடவடிக்கைகள் மனநிறைவு அளிக்கவில்லை. மலாய்க்காரர் அல்லாதவர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்புகள்.

அடுத்து மலாய் தன்மானக் காங்கிரஸ் மாநாட்டு. இதில் மூத்த தலைவர் கலந்து கொண்டது. ஆதரவு வழங்கியது. இந்தியர்களை மறைமுகமாக இழிவுபடுத்திப் பேசியது. தமிழ், சீனப் பள்ளிகளை மூட வேண்டும் என்கிற பரிந்துரையை ஏற்றுக் கொண்டது.

அன்வார் இப்ராஹிம் அவர்களுக்குச் சொன்னபடி, தலைமைத்துவத்தை விட்டுக் கொடுப்பதில் உறுதியாக இல்லாமல் தவிர்த்து தவிர்த்துச் செல்வது. இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். தொடர்ந்து நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் முடிவினால் தேசிய முன்னணியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலருக்கு மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆனந்த பைரவிகள். இசை வெள்ளத்தில் தூக்கம்கூட வந்து இருக்காது.

நம்பிக்கைக் கூட்டணியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலருக்குத் துக்கத்தின் சாரல்களில் தூக்கமே வந்து இருக்காது. பந்துவராளி ராகங்கள் இல்லாமல் பக்காத்தான் தலைவர்கள் நல்லா தூங்குவதற்கு ரொம்ப நாள் பிடிக்கும்.

(தொடரும்)