பத்துமலை பால்மரக் காட்டினிலே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்துமலை பால்மரக் காட்டினிலே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 மே 2020

பத்துமலை பால்மரக் காட்டினிலே

தமிழ் மலர் - 10.05.2020
 
கோடானு கோடி ஜீவராசிகளின் உல்லாசத் தலம். கோடானு கோடி உயிர்வாழ் ஊர்வனங்களின் சொர்க்கத் தலம். சுண்ணாம்புக் காடுகளில் இயற்கையின் சீதனமாய் அழகிய மோகனத் தலம். உலகப் புகழ் பெற்ற புண்ணியத் தலம். ஆன்றோர்கள் கால் பதித்த அதிசயத் தலம். நம் பத்துமலைத் தலம்.

 

பத்துமலைத் தோட்டத்தைச் சுற்றிலும் பசுமையான குகைக் குன்றுகள். பனி மேகங்கள் நிறைந்து வழிந்த மலைத் தொடர். அங்கே வானுயர்ந்த வனங்கள். வற்றாத மூலிகைப் புதர்கள். அலைமோதும் அரிய வகைப் பறவைகள். அத்தனையும் நிறைந்த அழகிய அற்புதமான பூமி. பத்துமலை புண்ணிய பூமி. கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது.

பத்துமலையின் அடிவாரத்தில் 1893-ஆம் ஆண்டில் ஒரு ரப்பர் தோட்டம் இருந்தது. இது பலருக்கும் தெரியாத தகவல். அந்தத் தோட்டத்தின் பெயர் பத்துமலைத் தோட்டம் (Batu Caves Estate). ஆண்டைக் கவனியுங்கள். 130 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.

மலேசிய வரலாற்று நூல்களில் பத்துமலைத் தோட்டத்தைப் பற்றி பதிவுகள் எதுவும் இல்லை. பள்ளியில் மாணவர்கள் படிக்கும் போது கூட அதைப் பற்றி சொல்லித் தந்து இருக்க மாட்டார்கள். சந்தேகமே. ஏன் என்றால் ஆசிரியர்கள் பலருக்கும் தெரியாத விசயம்.




பொதுவாக அப்போதைக்கும் இப்போதைக்கும் ஒரு சொல் வழக்கம். கித்தா மரம் என்றால் தமிழன். கித்தா தோப்பு என்றால் தமிழன். செம்மண் சாலை என்றால் தமிழன். கம்பிச் சடக்கு என்றால் தமிழன். விமானச் சடக்கு என்றால் தமிழன். மலாயாவில் கால் படுகிற இடம் எல்லாம் தமிழன். தமிழன்.ஆக பத்துமலையிலும் அவன் கால் படாமல் இருக்குமா?

பத்துமலைத் தோட்டத்தில் காபியும் பயிர் செய்து இருக்கிறார்கள். அந்தத் தோட்டம் பத்துமலை ரப்பர் கம்பெனி (Batu Caves Rubber Company) எனும் நிறுவனத்தால் உருவாக்கப் பட்டது. 1920-ஆம் ஆண்டுகளில் அந்தத் தோட்டத்திற்கு பிரேசர் (WD Fraser) என்பவர் நிர்வாகியாகப் பணிபுரிந்து இருக்கிறார்.

ஏறக்குறைய 600 ஏக்கர் பரப்பளவு. இந்தத் தோட்டத்தில் 90 தமிழர்கள் 25 ஜாவானியர்கள்; 10 மலாய்க்காரர்கள் வேலை செய்து இருக்கிறார்கள். தோட்டத் தொழிலாளர்களுக்கு 11 லயன் வீடுகள். தவிர ஒரு ரப்பர் சேமிப்புக் கிடங்கு; ஒரு காபி சேமிப்புக் கிடங்கு; நிர்வாகிகளுக்கு இரு பங்களாக்கள் இருந்து உள்ளன.

அந்தத் தோட்டத்தின் நடுவில் பத்து ஆறு (Sungai Batu) ஓடி இருக்கிறது. இந்தத் தோட்டத்தை 30,000 பவுண்டு (30,000 pounds) செலவு செய்து உருவாக்கி இருக்கிறார்கள். பவுண்டு என்பது இங்கிலாந்து நாட்டின் நாணயம்.




1860-ஆம் ஆண்டுகளில் பத்துமலைப் பகுதிகளில் வாழ்ந்த சீனர்கள் அந்தப் பகுதியில் காய்கறிகள் பயிரிட்டு வந்தார்கள். பத்துமலைக் குகைகளில் இருந்து வௌவால் சாணத்தைத் தோண்டி எடுத்து வந்து விவசாயத்திற்கு உரமாய்ப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அப்போது பத்துமலை அடிவாரத்தில் நிறையவே காபித் தோட்டங்கள் இருந்து இருக்கின்றன.

தெமுவான் பூர்வீகக் குடிமக்கள் டுரியான் தோப்புகளைப் பராமரித்து வந்து இருக்கிறார்கள். பின்னர் மலை அடிவாரத்தில் இருந்த காபித் தோட்டங்களை அப்புறப்படுத்தி விட்டு பத்துமலை ரப்பர் தோட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

அப்போதைய காலத்தில் ஒரு ரப்பர் மரத்தில் மேலும் கீழுமாய்ப் பல கோடுகளைப் போட்டுச் சீவுவது வழக்கம். பத்துமலைத் தோட்டத்தில் 20 கோடுகள் வரை போட்டு இருக்கிறார்கள். 




மலாயாவுக்கு முதன்முதலில் வந்த தமிழர்கள், அதாவது 1890-களில் வந்த தமிழர்கள், எப்படி பால் மரம் சீவி இருப்பார்கள். அதைப் பற்றி முறையான தகவல்கள் நம்மிடம் இல்லை.

சிலர் கற்பனையில் பலவாறாக நினைத்துக் கொள்ளலாம். ஒய்யாரமாய் சிங்காரமாய் சந்தோஷமாய் வேலை செய்து இருக்கலாம் என்று நினைத்துக் கொள்ளலாம். அப்படி எல்லாம் இல்லீங்க.

கம்புக் கட்டைத் தூண்களை ஏற்றி வைத்து சர்க்கஸ்காரர்களைப் போல அந்தர் பல்டி அடித்து சாகசம் செய்து இருக்கிறார்கள். அதுதாங்க உண்மை.

கொஞ்சம் வழுக்கினால் அம்புட்டுத்தான். கீழே நின்று கொண்டு இருக்கும் பெண்சாதி மேலேயே மல்லாக்காய் விழ வேண்டி வரும். அப்புறம் இரண்டு பேரும் குட்டிக்கரணம் அடிக்க வேண்டி வரும். அப்படியே பாசா காட்டுக்குள் கட்டிப் புரண்டு ஐலசா பாட வேண்டி வரும். மற்றதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும். மரம் சீவும் விசயத்தைத் தான் சொல்கிறேன். இன்னும் நீங்கள் பாசா காட்டுக்குள் இருந்தால் தயவு செய்து வெளியே வாருங்கள். 




ஆக அந்த மாதிரி நம்ப மலாயா பால்மரத்துக் காடுகளில் நிறையவே நடந்து இருக்கின்றன. என்ன செய்வது. எல்லாமே கித்தா காட்டு விசும்பல் கதைகள் தான்.

1880-ஆம் ஆண்டுகளிலேயே இரப்பர் கன்றுகளை மலாயாவுக்கு கொண்டு வந்து விட்டார்கள். ஓரளவுக்குப் பயிரும் செய்து விட்டார்கள். 1910-ஆம் ஆண்டுகளில் மரம் சீவத் தொடங்கியது போது தான் சிக்கல்.

இப்போது போல விடியல் காலையிலேயே தீம்பாருக்குப் போய் நெற்றி லாம்பு கட்டி 300 - 400 மரங்களைச் சீவி முடித்து ஒன்பது மணிக்கு பசியாறுகிற வேலை எல்லாம் இல்லை.

ஓர் இரப்பர் மரத்தை ஒட்டினால் போல ஒன்பது காண்டா கம்புகளை ஊன்றி அவற்றில் மேல் ஏறி பால் மரம் சீவி இருக்கிறார்கள்.




ஒரே மரத்தில் எட்டு - பத்து (8 - 10) அடுக்குப் பரண் படிகள். இரு பக்கத்திலும் 40 கோடுகளைப் போட்டு பட்டைகளைப் பதம் பார்த்து இருக்கிறார்கள். அப்போது அவர்களுக்குத் தெரிந்த ஒரே குத்திக் குதறும் வேலை. அதுவும் அப்போதைக்கு அது ஒரு கித்தா காட்டு ‘ஸ்டைல்’.

1880-களில் பிரேசில் காடுகளில் இப்படித்தான் இரப்பர் மரங்களைக் குத்திக் குதறி இருக்கிறார்கள். அதே முறையைத் தான் இங்கே மலாயாவிலும் முதலில் பயன்படுத்திப் பார்த்து இருக்கிறார்கள். சரிபட்டு வரவில்லை.

பற்பல மாற்றங்களைச் செய்து காயம் படாமல் மரங்களைச் சீவிக் கொண்டு இருக்கிறார்கள். மன்னிக்கவும். அந்தத் தொழிலையும் வங்காள தேசிகளும் இந்தோனேசியர்களும் இப்போது நம்மிடம் இருந்து கைமாற்றாய் வாங்கிக் கொண்டு விட்டார்கள். அந்த்த தொழிலையும் மறந்துவிட வேண்டியது தான்.

அப்போதைய காலத்தில் காக்கிச் சட்டை; ஜீன்ஸ் ஸ்கர்ட்கள்; குட்டைப் பாவாடை நெட்டைச் சிலுவார்கள் எல்லாம் இல்லை. வெறும் வெள்ளை வேட்டிகள் தான். அதை வாரிச் சுற்றிக் கோவணமாக இடுப்பில் கட்டிக் கொண்டு, ஏணி மேல் ஏணி வைத்து வேலை பார்த்து இருக்கிறார்கள். பெண்கள் பத்து முழச் சேலையை முழங்காலுக்கு மேலே சுற்றி சதிராட்டம் ஆடி இருக்கிறார்கள்.




புருசன்காரன் மேலே ஏறி மரத்தைச் சீவ வேண்டும். பெண்சாதி கீழே மங்கு மங்காய்ப் பாலைப் பிடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ரெண்டு பேரும் இருபது மரங்களை ரவுண்டு கட்டி சீவ வேண்டும். குறைந்தால் சம்பள்ம் ’கட்’.

1910-ஆம் ஆண்டு கார்ல் கிளிங்ரூத் (Kleingrothe, Carl Josef, 1864 -1 925) எனும் டச்சுக்காரர் இந்தோனேசியா மேடானில் இருந்து கிள்ளான் வந்து அப்படியே பினாங்கு போய் இருக்கிறார். அப்போது பல தோட்டங்களைப் படம் எடுத்து இருக்கிறார். வருடத்தைக் கவனியுங்கள்.

இரப்பர் உற்பத்தி மலாயாவில் துளிர்விடும் காலக் கட்டம். கார்ல் கிளிங்ரூத் எடுத்த படத்தில் உள்ள இரப்பர் மரத்தின் வயது 23. அப்படி என்றால் அந்த மரம் நடப்பட்டது 1887-ஆம் ஆண்டு.

ஆனால் எந்த இடத்தில் படம் எடுத்தார் எனும் குறிப்புகள் இல்லை. இந்தப் படம் இப்போது நெதர்லாந்து லெய்டன் பல்கலைக்கழகத்தில் (Leiden University Library Netherlands); தென்கிழக்காசியக் கழகத் துறையின் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளது. அங்கே போனால் அந்தப் படம் மலாயாவில் எங்கே எந்த இடத்தில் எடுக்கப் பட்டது என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.

பிரச்சினை இல்லை. மலாயாவில் எங்கோ ஓர் இடத்தில் எடுத்து இருக்கிறார். அது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. அந்த மனநிறைவு போதும்.

கோலாலம்பூரில் 1890-ஆம் ஆண்டுகளில் உருவான சில ரப்பர் தோட்டங்கள்.

1. வார்டிபன் தோட்டம் - Wardieburn Estate (Wardieburn Military Camp)

2, ஹாவ்தோர்ன்டன் தோட்டம் - Hawthornden Estate (Wangsa Maju)

2. கென்ட் தோட்டம் - Kent Estate (Datuk Keramat)

3. டேவன் தோட்டம் - Devon Estate (Gombak)

4. ஆம்ஹெர்ஸ்ட் தோட்டம் - Amherst Estate (Gombak KL-Karak Highway)

5. மவுண்ட் தோட்டம் - Mount Estate (Mont Kiara)

6. செகாம்பட் தோட்டம் - Segambut Estate

7. சுங்கை துவா தோட்டம் - Sungai Tua Estate

8. சியோன் தோட்டம் - Sione Estate

9. கொங்காங் தோட்டம் - Gonggang Estate

10. ஜிஞ்சாங் தோட்டம் - Jinjang Estate

11. புக்கிட் கெப்போங் தோட்டம் - Bukit Kepong Estate

12. கிளேங் கேட்ஸ் தோட்டம் -  Klang Gates Estate

13. ஆ கிம் கீ தோட்டம் - Ah Kim Kee Estate

14. ஆவ் கிம் மான் தோட்டம் - Law Kim Man Estate,

1912-ஆம் ஆண்டு மேலும் ஓர் ஆய்வாளர் மலாயாவுக்கு வந்தார். bஎயர் ஜெக்குவஸ் ஹூபர் (Jacques Huber) எனும் சுவிஸ் நாட்டுக்காரர். மலாயாவில் பல தோட்டங்களுக்குச் சென்றார். ரப்பரைப் பற்றி ஆய்வுகள் செய்தார். அந்த வகையில் பத்துமலைத் தோட்டத்திற்கும் போய் இருக்கிறார்.

அப்போது அவர் பத்துமலைத் தோட்டத்தையும் படம் எடுத்து இருக்கிறார். அவர் எடுத்த அந்தப் படங்கள் இப்போது பிரேசில் பாரானெஸ் அருங்காட்சியகத்தில் (Museu Paraense) உள்ளன.

இந்தக் கட்டுரையில் உள்ள சில படங்கள் அந்த காட்சியகத்தில் இப்போது காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. 

அண்மையில் ஒரு வரலாற்று நூல் கிடைத்தது. அதன் பெயர் Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources. 1908-ஆம் ஆண்டில் அர்னால்ட் விரைட் (Wright, Arnold) என்பவர் எழுதிய நூல். 496 பக்கங்கள்.

அதில் மலேசியாவில் பெரும்பாலான தோட்டங்களின் வரலாறுகள் உள்ளன. பத்துமலை தோட்டத்தின் தகவல்களும் உள்ளன.

நண்பர் முருகன் தேவர் சொல்கிறார்: காடுகளை அழித்து; பால்மரம், கொக்கோ, கரும்பு, செம்பனை நட்டு; தார் சாலைகள், இரயில் பாதைகள் போட்டு; மின்சாரம், கட்டிடங்கள் போன்ற மேம்பாடுகளைச் செய்து; இரண்டு மூன்று தலைமுறைகளைத் தொலைத்து; நான்காம் ஐந்தாம் தலைமுறைகளில் பொருளாதார வலுவை இழந்து; செயல் இழந்து வாழும் நிலை.

உலகிற்கு தர்மத்தையும், மனிதத் தர்மத்தையும், வாழ்வியலையும் கற்றுக் கொடுத்த இனம். இன்று வாழ முடியாத அவலம். தமிழர்கள் நம்பிய மனிதர்களும் கைகழுவினார்கள். இறைவனும் கண்டு கொள்ளவில்லை,

சுயமாகவே வாழ்வைத் தேட வேண்டும். தற்சார்பு வாழ்வியலை மீட்டு எடுக்க வேண்டும். நம்மை நாமே காபாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.

கிரேக்க நாட்டு கிளேடியேட்டர்கள் போல ஒரு காலத்தில் யானைகளும் புலிகளும்; சிறுத்தைகளும் கரடிகளும் முட்டி மோதிக் கொண்ட ஒரு போர்க் களமாகக் கோலாலம்பூர் பத்துமலை; கெப்போங்; கோம்பாக் காடுகள் விளங்கி இருக்கின்றன.

அந்தப் போர்க்கள மேடைகளில் தான் நம்மவர்கள் உயிர்களைப் பணயம் வைத்து இரப்பர் தோட்டங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

அவர்கள் சிந்திய வியர்வையில் இப்போது சொகுசு சொகுசாய் அடுக்குமாடி ஆடம்பர மாளிகைகள். அந்த மாளிகைகளுக்கு அடியில் எத்தனை எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கலாம் என்பது அந்த மண்ணுக்கு மட்டுமே தெரிந்த மர்மங்கள்.

கரை கடந்து வந்த தமிழர்கள் காட்டை அழித்து மேட்டைத் திருத்தி, கம்பி சடக்குகளைப் போட்டு மலாயாவைச் சொர்க்க பூமியாக மாற்றினார்கள். இரப்பர் மரங்களை நட்டு செல்வம் கொழிக்கும் சொர்க்கபுரியாக மாற்றினார்கள். இவை எல்லாம் இப்போது உள்ள குழந்தைகளுக்குத் தெரியாத விசயம்.

பேரப் பிள்ளைகளிடம் இந்தப் படங்களைக் காட்டுங்கள். ’இப்படித்தான் உங்க பாட்டன் பாட்டிகள் எல்லாம் மரத்தின் மேல் ஏறி வேலை செஞ்சு இருக்காங்க’ என்று சொல்லுங்கள். நம் வரலாற்றை அவர்கள் ஓரளவிற்குத் தெரிந்து கொள்ளட்டும்.

சான்றுகள்:

1. Drabble, J. H. 1973. Rubber in Malaya, 1876–1922: The Genesis of the Industry. Kuala Lumpur: Oxford University Press.

2. The Museu Paraense Emílio Goeldi - Brazilian research institution and museum 1866.