நோக்கியா கைப்பேசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோக்கியா கைப்பேசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 ஜூன் 2014

நோக்கியா கைப்பேசி

மலேசியா - தினக்குரல் நாளிதழ் - 16.02.2014 - ஞாயிற்றுக்கிழமை

எம்.அன்பரசன், ஈப்போ (குறும் செய்தி 18.12.2013)

கே: சார், நான் ஒரு நோக்கியா கைப்பேசியை நண்பரிடம் இருந்து RM450-க்கு அண்மையில் வாங்கினேன். அந்தக் கைப்பேசி நவம்பர் 2013-இல் வெளி வந்ததாக நண்பர் சொன்னார். கடைக்காரரிடம் கேட்டுப் பார்த்ததில் அக்டோபர் 2013-இல் வெளி வந்தது என்று கடைக்காரர் சொல்கிறார். என் நண்பர் என்னை ஏமாற்றி விட்டதாக நினைக்கிறேன்? இரண்டாம் தாரமாக வாங்கியது தப்பாகி விட்டது.


ப: தரம் என்பது வேறு. தாரம் என்பது வேறு. தாரம் என்றால் மனைவி. கைப்பேசியில் இரண்டாம் தாரம் இருப்பது நீங்கள் சொல்லித்தான் எனக்கும் தெரிகிறது. பரவாயில்லை. அந்தக் கைப்பேசி எந்த மாடலைச் சேர்ந்தது என்று சொல்லவில்லை. அதனால் அதன் விலை விவரம் எனக்கும் தெரியவில்லை.

இருந்தாலும் உங்கள் நண்பரை நம்பித் தானே கொடுக்கல் வாங்கலில் இறங்கினீர்கள். நம்பிக்கைதானே அடிப்படை காரணம். அக்டோபர் பத்தாவது மாதத்திற்கும், நவம்பர் பதினோராவது மாதத்திற்கும் முப்பது நாட்கள் தானே ஐயா வித்தியாசம். ஆக, அப்படி என்னங்க இதில் தலை போகிற விஷயத்தைப் பார்த்தீர்கள்.

கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போங்களேன். இனிமேல் யாரிடம் இருந்தும் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் சரி, அது எப்போது தயாரிக்கப் பட்டது, என்ன மாடல், என்ன விலை போன்ற விவரங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அப்புறம் வாங்குங்கள். இல்லை என்றால் இந்த மாதிரிதான் மின்னல் மின்னும். இடியும் இடிக்கும்.

நோக்கியா கைப்பேசிகள் தயாரிக்கப்பட்ட தேதியைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது. *#92702689# என்று தட்டிப் பாருங்கள். முன்னுக்கு நட்சத்திர புள்ளி வருகிறது. அதை மறந்துவிட வேண்டாம். நீங்கள் வாங்கிய அந்தக் கைப்பேசி எப்போது தயாரிக்கப் பட்டது, எப்போது விற்பனை செய்யப் பட்டது போன்ற விவரங்கள் கிடைக்கும்.

உங்கள் நண்பர் ஏதோ அவசரத்தில் சொல்லி இருக்கலாம். உண்மையாகவும் இருக்கலாம். பெரிது படுத்த வேண்டாம். அமைதியாக, சமாதானமாகப் போங்கள். கைப்பேசி நன்றாக வேலை செய்கிறது இல்லையா. அதுவரை மகிழ்ச்சி அடையுங்கள்.