ஜாகிர் நாயக் நிந்தனைகள் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாகிர் நாயக் நிந்தனைகள் - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 ஆகஸ்ட் 2019

ஜாகிர் நாயக் நிந்தனைகள் - 1

மலேசிய இந்தியர்களின் நாட்டுப் பற்று - 1

மலேசிய வரலாற்றில் மலேசிய இந்தியர்கள் மாபெரும் சாதனைகளைச் செய்தவர்கள். அந்தச் சாதனைகள் அனைத்தும் காலத்தால் மறக்க முடியாத காலச் சுவடுகள். வரலாற்று வேதங்கள் வார்த்து எடுக்க முடியாத வரலாற்றுப் படிமங்கள்.
1900-ஆம் ஆண்டுகளில் விசாகப் பட்டினத்தில்
கப்பலேறிய மலேசிய இந்தியர்கள்
ஒரே வார்த்தையில் சொன்னால் இன்றைக்கும் சரி; இனி என்றைக்கும் சரி; மலேசிய இந்தியர்களின் வரலாறு சாகாவரம் பெற்ற மலேசியக் காவியங்கள். சோதனைகள் கடந்த மலேசிய இந்தியர்களின் சாதனைகளை உலக வரலாறு என்றைக்குமே மறக்காது. மறப்பதற்கு மனசும் வராது.

பச்சைக் காடாய்க் கிடந்த ஒரு நாட்டைப் பசும் பொன் பூமியாக மாற்றிச் சாதனை செய்தவர்கள் மலேசிய இந்தியர்கள். காடுகளை அழித்து மேடுகளைத் திருத்தி, பாதைகளைப் போட்டு பால் வடியும் ரப்பர் மரங்களை நட்டு; அந்த மரங்களில் காசு பணங்களைப் பார்த்தவர்கள் மலேசிய இந்தியர்கள். இல்லை என்று எவராலும் சொல்ல முடியுமா. 

தமிழ் மலர் 19.08.2019
அப்படிப்பட்ட மலேசிய இந்தியர்களின் விசுவாசம் பற்றி கேள்வி எழுப்புவதற்கு ஜாகிர் நாயக் அவர்களுக்கும் சரி; மற்ற எவருக்குக்கும் சரி; துளியும் அருகதை இல்லை என்பதே எம் கருத்து.

பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழும் இந்த மண்ணில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரின் நிந்தனையான பேச்சுகள் ஒரு கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தி வருகின்றது.

யார் இந்த ஜாகிர் நாயக். உண்மையிலேயே இவர் நல்ல ஓர் அறிஞர். உலக அளவில் பிரபலமான இஸ்லாமிய மதபோதகர். அனைத்துலகச் சொற்பொழிவாளர். சிறந்த எழுத்தாளர். 
 
மலேசிய இந்தியர்களின் நாட்டுப்பற்றுக்கு
களங்கம் விளைவித்த ஸக்கீர் நாயக்
2010-ஆம் ஆண்டுகளில் என்னைக் கவர்ந்த பேச்சாளர். யூடியூப் வழியாக இவரின் சொற்பொழிவுகளைக் கேட்டு ஈர்க்கப் பட்டேன். என் நண்பர்களிடமும் இவரின் பேச்சுகளை அறிமுகம் செய்தேன். இவரின் அறிவாற்றலைக் கண்டு வியந்து போய் இருக்கிறேன். இவரின் ஆங்கிலப் புலமையில் மயங்கிப் போய் இருக்கிறேன். இவரை ஓர் அறிவு ஜீவியாக உச்சம் பார்த்தேன்.

ஆனால் எல்லாமே தலைகீழாகிப் போனது. ஜாகிர் நாயக் இந்தியாவில் பிறந்த ஓர் இந்தியர். மதத்தால் வேறுபட்டு இருக்கலாம். ஆனால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய இந்தியர்களின் மனம் வேதனைப் பட்டு குமுறும் அளவிற்கு நிந்தனைச் சொற்களைப் பயன்படுத்தி இருக்கக் கூடாது.

மலேசிய இந்தியர்களின் பூர்வீகம் இந்தியாவாக இருக்கலாம். ஆனால் அந்தப் பூர்வீகத்தை மறந்து போன மலேசியர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மலேசிய இந்தியர்களின் வேர்களும் விழுதுகளும் கடல் தாண்டிய மண்ணில் வாழ்ந்தது. உண்மை.

1900-ஆம் ஆண்டுகளில் ரப்பர் தோட்டத்தில்
ரப்பர் விதைகளைப் பரவல் செய்யும் மலேசிய இந்தியர்கள்

ஆனால் அந்த வேர்களையும் விழுதுகளையும்... பாய்மரக் கப்பல்களிலும்; நீராவிக் கப்பல்களிலும்; டீசல் இஞ்சின் கப்பல்களிலும் எப்போதோ இந்த மண்ணிற்குக் கொண்டு வந்து கரை சேர்த்து விட்டோம்.

ஆறாவது ஏழாவது எட்டாவது தலைமுறைகளில் இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மலேசியாவில் இப்போது வாழும் இந்தியர்களில் முக்கால்வாசி பேர் தங்களின் பூர்வீக மண்ணைத் தொட்டுப் பார்த்தது இல்லை. தொட்டுப் பார்த்து இருக்க மாட்டார்கள்.

மலேசிய இந்தியர்களுக்குத் தெரிந்த ஒரே உலகம் மலேசியா. மலேசிய இந்தியர்களுக்குத் தெரிந்த ஒரே நாடு மலேசியா.

இந்த நாட்டிற்காக அவர்களின் உயிர் உடல் பொருள் ஆவி இரத்தம் அனைத்தையும் அர்ப்பணித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட மலேசிய இந்தியர்களின் நாட்டுப் பற்றையும்; அவர்களின் பிரதமர் மீதான விசுவாசத்தையும் நிந்திப்பது பெரும் வேதனை அளிக்கும் செயலாகும்.

யார் இந்த ஜாகிர் நாயக். மறுபடியும் கேட்கிறேன்.
1900-ஆம் ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள்

இப்போது இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப் பட்டவர். பண பரிமாற்றம் தொடர்பாக இந்தியாவில் பண மோசடிக் குற்றச் சாட்டுகள் இவர் மீது நிலுவையில் உள்ளன. இந்தியாவிலும் வங்காள தேசத்திலும் பிரச்சினைகள்.

ஜாகிர் நாயக் அறக்கட்டளை மூலம் பலரைப் பயங்கரவாதத்தில் ஈடுபட தூண்டியதாகவும்; பேச்சு மற்றும் போதனைகள் மூலம் வெவ்வேறு சமயத்தினர் இடையே பகைமை உணர்வைத் தூண்ட முயற்சி செய்ததாகவும்; இந்தியப் தேசியப் புலனாய்வுத் துறை மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது.

(சான்று: https://www.indiatoday.in/india/story/nia-islamic-preacher-zakir-naik-islamic-research-foundation-1070616-2017-10-25)

இந்த நிலையில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய ஜாகிர் நாயக்கைக் கைது செய்து இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்கு இந்திய அரசாங்கம் இண்டர் போல் அனைத்துலகப் போலீசாரின் உதவியை நாடியது.

(சான்று: https://www.dailythanthi.com/amp/News/India/2019/04/25155050/Interpol-takes-up-Indias-red-notice-on-fugitive-Zakir.vpf)

ஜாகிர் நாயக்கை இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகள் தடை செய்தன. இவரின் பேச்சுகள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக அமைந்து உள்ளதால் இங்கிலாந்து அரசு 2010-ஆம் ஆண்டில் இவரைத் தடை செய்தது.

(சான்று: https://www.bbc.com/news/10349564 - Indian preacher Zakir Naik is banned from UK)

அதனால் இந்தியாவில் இருந்து இங்கே வந்தார். வந்தவருக்கு மலேசிய நிரந்தவாசி எனும் தகுதி 2015-ஆம் ஆண்டில் வழங்கப் பட்டது. வழங்கியது முன்னாள் அரசாங்கம்.
தமிழ் மலர் 19.08.2019

அதை வைத்துக் கொண்டு அமைதியாகத் தன்னுடைய மதப் பிரசாரத்தைத் தொடர்ந்து இருக்கலாம். மத நல்லிணக்கச் சேவைகளைச் செய்து இருக்கலாம். மக்களிடையே புரிந்துணர்வுகளை ஏற்படுத்தி இருக்கலாம். பல்லினங்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்த்து இருக்கலாம்.

பிரச்சினை வந்து இருக்காது. மற்ற இனங்களையும் மதங்களையும் சீண்டிப் பார்க்காமல் நன்றாகப் பயணித்து இருக்கலாம். ஆனால் நடந்ததே வேறு.

இந்த வீட்டுக்கு விருந்தாளியாக வந்து அடுத்த வீட்டுச் சுவரில் ஆணி அடித்தால் அவன் சும்மா இருப்பானா. எதிர்வீட்டுச் சன்னலில் கல்லை விட்டு எறிந்தால் அவன் சும்மா இருப்பானா?

அண்மையில் கிளந்தான் மாநிலத்தில் பிரசாரம் செய்த போது தேவையற்ற பேச்சு. அதுவே ஒரு சர்ச்சையாகிப் போனது.

மலேசியாவில் உள்ள இந்துக்களும் இந்தியர்களும் மலேசிய நாட்டுப் பிரதமர் துன் மகாதீரை ஆதரிக்காமல் இந்தியப் பிரதமர் மோடியை ஆதரிக்கின்றனர் எனும் பேச்சு. எதை வைத்து அவர் அப்படி சொன்னார். பெரிய தப்புங்க. அப்படி சொல்லி இருக்கவே கூடாது.
இந்தியாவில் இருந்து
மலேசியாவிற்கு வந்த மாமனிதர்

அவர் என்ன பேசினார் என்பதை அப்படியே பிரசுரிக்கிறோம்.

The Hindus here in Malaysia 6.4%. The Hindus in Malaysia get 100 times more rights ... They are half the percentage even though the number is less ... Yet the rights they get here are 100 times more than what India gives rights to the minority. So much so that they support the Prime Minister of India but not the Prime Minister of Malaysia.

(சான்று: https://www.thestartv.com/v/what-did-dr-zakir-naik-say-in-kelantan)

சென்ற ஆண்டு இந்த நாட்டில் ஓர் ஆட்சி மாற்றம் நடைபெற்றது. அந்த மாற்றத்தில் மலேசிய இந்தியர்கள் முக்கியமான பங்கு வகித்தார்கள். துன் மகாதீர் அவர்களை மீண்டும் பிரதமர் ஆக்குவதில் மலேசிய இந்தியர்கள் பெரும் பங்கு வகித்து உள்ளார்கள். மலேசிய அரசியலில் அனைவருக்கும் தெரிந்த விசயம்.

சென்ற ஆண்டு தேர்தல் நடக்கும் போது ஜாகிர் நாயக் மலேசியாவில் தான் இருந்தார். இவ்வளவு விசயம் தெரிந்தவருக்கு அது தெரியாமலா இருக்கும்.

கடந்த 08.08.2019 வியாழக்கிழமை கிளந்தானில் பேசும் போது தான் (ஜாகிர் நாயக்) இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால் இந்த நாட்டிற்குச் சொந்தம் இல்லாத சீனர்களும் வெளியேற வேண்டும் என்று கருத்து கூறி இருக்கிறார்.

தொடர்ந்து அவர் பேசியது... மலேசியா முழு முஸ்லீம் நாடாக மாறியது. பிறகு சீனர்கள் வந்தார்கள். இந்தியர்கள் வந்தார்கள். பிரிட்டிஷார் வந்தார்கள். அவர்கள் புதிய விருந்தினர்கள். 

காடாய்க் கிடந்த மலாயாவைப் பொன் விளையும்
பூமியாக மாற்றிய மலேசிய இந்தியர்கள்
யாரோ ஒருவர் என்னை விருந்தினர் என்று அழைத்ததை நீங்கள் அறிவீர்கள். எனவே எனக்கு முன் சீனர்கள் விருந்தினர்களாக வந்தவர்கள். ஆகவே புதிய விருந்தினர் முதலில் செல்ல விரும்பினால் பழைய விருந்தினரைத் திரும்பிப் போகச் சொல்லுங்கள் என்று அவர் சொல்லி இருக்கிறார்.

அதாவது பழைய விருந்தினர்களான சீனர்கள், இந்தியர்கள் திரும்பிப் போக வேண்டுமாம். அதன் பிறகு புதிய விருந்தினரான இவர் (ஜாகிர் நாயக்) திரும்பிப் போகிறாராம்.

இவரின் இந்த மாதிரியான பேச்சு இந்த நாட்டின் மத, இன நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்குமா விளைவிக்காதா? சொல்லுங்கள்.

சீன மற்றும் இந்தியச் சகோதரர்கள் மீதான தாக்குதல்கள் என்பது அனைத்து மலேசியர்கள் மீதான தாக்குதல் என்பதை மலேசியர்கள் உணரத் தொடங்கி உள்ளனர்.

இந்த நாட்டிற்காக உழைத்து உருக்குலைந்து அனாதையாகிப் போன மலேசிய இந்திய இனத்தின் நாட்டுப் பற்றை நிந்திக்கலாமா?

மலேசியாவும் இந்தியாவும் நல்ல நட்பு நாடுகள். அப்படி இருக்கும் போது இந்தியா தேடும் ஒரு நபரை இந்த மாதிரி இங்கே சுதந்திரமாகப் பேச அனுமதிப்பது சரிதானா. சர்ச்சைக்குரிய ஜாகிர் நாயக் தம் கருத்துகளை வெளியிட அனுமதிப்பதும் சரி தானா? நியாயமா?

(தொடரும்)