பாலி இந்துக்களின் பாரிஜாதங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாலி இந்துக்களின் பாரிஜாதங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 மே 2020

பாலி இந்துக்களின் பாரிஜாதங்கள்

தமிழ் மலர் - 11.05.2020

பச்சைப் பசேல் வயல் காடுகள். பரந்த பரவெளி காட்டில் பசுமையின் சுமைகள். பார்ப்பவர்களை எல்லாம் பரவசத்தில் ஆழ்த்தும் பாமரத்தின் மக்கள் செல்வங்கள். பார்த்த பின்னும் பார்க்கச் சொல்லும் பச்சை பாலித் தீவின் பெண்மைச் செல்வங்கள்.

அவர்களின் நடையழகில் ஓராயிரம் ஒய்யாரங்கள். ஒடிந்து விழும் ஒவ்வோர் இடையிலும் ஓராயிரம் கவிதைகள். ஆடை ஆபரணங்களில் ஓராயிரம் வண்ணக் கலவைகள். அதில் ஓராயிரம் வானவில் ஜாலங்கள். அத்தனையும் சொர்க்க வாசலின் சொப்பனச் சீதனங்கள். 




கீதாஞ்சலி பாடிய இரபீந்தரநாத் தாகூர் ஒருமுறை சொல்லி இருக்கிறார். பாலித் தீவின் பெண்களுக்குத் தனித்துவம் வாய்ந்த பெண்மை. அந்தப் பெண்மையில் மென்மையாய் ஜாலம் காட்டும் பிரம்மனின் படைப்புகளைக் காணலாம்.

உண்மையிலேயே பாலித் தீவில் பெண்மையின் மென்மைகள் மாயஜாலங்கள் காட்டுகின்றன. உண்மை. பாலித் தீவில் நான் பார்த்த அழகிய உண்மைகள்.

உலகின் அதி அற்புதமான அழகிய தீவுகளில் தனித்துவம் பெற்றது பாலித் தீவு. உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடு இந்தோனேசியா. சுந்தா (Sunda) தீவுகளுக்கு மேற்கிலும் ஜாவா லொம்பொக் (Lombok) தீவுகளுக்கு இடையிலும் அமைந்து உள்ளது. இந்தோனேசியா நாட்டின் 33 மாநிலங்கள் உள்ளன. 




அதில் பாலித் தீவு ஒரு சின்ன மாநிலம். அங்கே 92.29% விழுக்காட்டினர் இந்துக்கள். 42 இலட்சம் பேர். ஒவ்வொரு மார்ச் மாதத்தில் ஒருநாள் மௌன விரதம். அதனை மௌனதினம் (Nyepi Day) எனச் சொல்கிறார்கள்.

அந்த நாளில் பாலித் தீவு முழுமைக்கும் விடுமுறை. யாரும் பேசிக் கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள்.

பாலித் தீவில் இந்துக்களின் நடனம், சிற்பம், இசை அனைத்துமே மிகவும் உயர்ந்த உன்னதமான நிலையில் உள்ளன. இன்று வரையிலும் பாதுகாத்து வருகின்றனர். பார்க்கும் இடம் எல்லாம் இந்துக்களின் கோயில்கள். சிற்பங்கள். கலைப்பொருட்கள். 




இடங்களைப் பார்ப்பதற்கும் கலைப் பொருட்களை வாங்குவதற்கும் சுற்றுலாப் பயணிகள் இலட்சக் கணக்கில் வருகின்றனர். போகின்றனர். அந்த வகையில் இந்தோனேசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகப் பாலித்தீவு விளங்குகின்றது. சரி.

பாலி தீவு வரலாற்றின் இந்தியப் பின்னணியைக் கொஞ்சம் மீள்பார்வை செய்து பார்க்கலாமே.

இந்தோனேசியாவை ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். ஓராண்டு அல்ல. ஈராண்டு அல்ல. ஓராயிரம் ஆண்டுகள். இந்தியர்கள் ஆட்சி செய்த இந்தோனேசிய நிலப் பகுதிகளில் பாலித் தீவும் வரலாறு படைக்கின்றது. 




ஒட்டு மொத்த இந்தோனேசியாவையே இந்தியர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். மற்ற மதங்கள் வருவதற்கு முன்னர் இந்தோனேசியாவில் இந்து மதம் தான் தனித்துவமான மதமாக விளங்கி இருக்கிறது.

1-ஆம் நூற்றாண்டில் வர்த்தகர்கள், கடலோடிகள், அறிஞர்கள், அர்ச்சகர்கள் மூலமாக இந்து மதம் இந்தோனேசியாவுக்குள் வந்தது. ஏற்கனவே இருந்த ஜாவானிய கலாச்சாரத்துடன் இந்து மதக் கருத்துக்களின் ஒத்திசைவினால் இந்தோனேசியாவுக்குள் தனி ஓர் இந்து மதம் உருவானது. அதாவது இந்து மதத்தின் மறுபதிப்பாக இந்தோனேசிய இந்து மதம் உருவானது.




ஸ்ரீவிஜய, மஜபாகித் பேரரசுகளின் ஆட்சிக் காலத்தில் இந்தப் புதிய இந்துமதக் கருத்துகள் தொடர்ந்து மேலும் சிறப்புப் பெற்றன.

அதற்கு முன் இந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியப் பேரரசுகளின் பெயர்களைத் தெரிந்து கொள்வோம். அடிக்கடி அந்தப் பெயர்களைச் சொல்லி வந்தால் மனதில் நன்கு பதிந்துவிடும். மறக்க முடியாத மறக்கக் கூடாத பெயர்கள். தலைமுறை தலைமுறையாக நினைத்துப் பார்க்க வேண்டிய பெயர்கள்.

அந்தப் பேரரசுகளை யார் யார் தோற்றுவித்தார்கள்? எந்த ஆண்டில் தோற்றுவித்தார்கள்? எங்கே  தோற்றுவித்தார்கள் எனும் சுருக்கமான விவரங்களைத் தருகிறேன்.




1. ஜலநகரப் பேரரசு - மேற்கு ஜாவா (Salakanagara Kingdom) கி.பி. 130 – 362

2. கூத்தாய் பேரரசு - களிமந்தான் போர்னியோ (Kutai Kingdom) கி.பி. 350 – 1605

3. தர்மநகரப் பேரரசு - ஜகார்த்தா (Tarumanagara Kingdom) கி.பி. 358 - 669

4. கலிங்கப் பேரரசு - மத்திய ஜாவா (Kalingga Kingdom) கி.பி. 500 – 600

5. மெலாயு பேரரசு - ஜாம்பி சுமத்திரா (Melayu Kingdom) கி.பி. 600

6. ஸ்ரீ விஜய பேரரசு - சுமத்திரா (Srivijaya Kingdom) கி.பி. 650 - 1377




7. சைலேந்திரப் பேரரசு - மத்திய ஜாவா (Shailendra Kingdom) கி.பி. 650 - 1025

8. காலோ பேரரசு - மேற்கு ஜாவா (Galuh Kingdom) கி.பி. 669–1482

9. சுந்தா பேரரசு - மத்திய ஜாவா (Sunda Kingdom) கி.பி. 669–1579

10. மத்தாரம் பேரரசு - கிழக்கு ஜாவா (Medang Kingdom) கி.பி. 752–1006

11. பாலி பேரரசு - பாலி (Bali Kingdom) கி.பி. 914–1908

12. கௌரிபான் பேரரசு - கிழக்கு ஜாவா (Kahuripan Kingdom) கி.பி. 1006–1045




13. கெடிரி பேரரசு - கிழக்கு ஜாவா (Kediri Kingdom) கி.பி. 1045–1221

14. தர்மாசிரியா பேரரசு - மேற்கு சுமத்திரா (Dharmasraya) கி.பி. 1183–1347

15. சிங்காசாரி பேரரசு - கிழக்கு ஜாவா (Singhasari Kingdom) கி.பி. 1222–

16. மஜபாகித் பேரரசு - ஜாவா - (Majapahit Kingdom) கி.பி. 1293–1500

மேலே காணும் பேரரசுகளில் சில முக்கியமான பேரரசுகளை யார் யார் தோற்றுவித்தார்கள் எனும் சுருக்கமான விவரங்களையும் வழங்குகிறேன்.




•    கி.பி. 358 - பூரணவர்மன் - தர்மநகரப் பேரரசு.
•    கி.பி. 650 - ஸ்ரீ ஜெயாசேனா - ஸ்ரீ விஜய பேரரசு.
•    கி.பி. 650 - கலிங்கர்கள் - சைலேந்திரப் பேரரசு.
•    கி.பி. 914 - ஸ்ரீ கேசரி வர்மதேவா - பாலி பேரரசு.
•    கி.பி. 915 - ஸ்ரீ கேசரி வர்மதேவா - வர்மதேவா பேரரசு.
•    கி.பி. 732 - சஞ்சாயா - மத்தாராம் பேரரசு.
•    கி.பி. 1293 - ராடன் விஜயா - மஜபாகித் பேரரசு.
•    கி.பி. 1222 - ராஜாசா - சிங்காசாரி பேரரசு.

மேலே காணும் பட்டியலில் ஸ்ரீ கேசரி வர்மதேவா என்று பெயர் வருகிறதே  அதைக் கவனியுங்கள். அந்த  ஸ்ரீ கேசரி வர்மதேவா (Sri Kesari Warmadewa) தான் பாலியில் ஓர் இந்தியப் பேரரசை உருவாக்கியவர். இவர் தான் இந்தோனேசியாவில் வர்மதேவா அரச மரபையும் தோற்றுவித்தவர்.




இந்தோனேசியா பாலித் தீவில் சானூர் (Sanur) எனும் ஓர் இடம் இருக்கிறது. அங்கே 1932-ஆம் ஆண்டு ஒரு கல் தூணைக் கண்டு எடுத்தார்கள். அதன் பெயர் பெலாஞ்சோங் கல் தூண் (Belanjong pillar). சமஸ்கிருத மொழியிலும் பழைய பாலித் தீவு மொழியிலும் எழுதப்பட்டது.

பழைய பாலித் தீவு மொழி பல்லவ எழுத்து வடிவங்களைக் கொண்டது. பெலாஞ்சோங் கல் தூணில் உள்ள எழுத்துக்கள் கி.பி. 914-ஆம் ஆண்டில் பொறிக்கப் பட்டவை.

மாமன்னர் ஸ்ரீ கேசரி வர்மதேவா தன் ஆட்சிக் காலத்தில் மேற்கொண்ட படையெடுப்புகளை அந்தக் கல் தூண் விவரிக்கின்றது. இப்போது பெலாஞ்சோங் ஆலயத்தில் (Blanjong Temple) பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சந்தன மஞ்சள் பட்டுத் துணிகளைப் போர்த்தி ஒரு தெய்வப் பொருளாக அர்ச்சனை செய்து வருகின்றார்கள்.




அந்தக் காலக் கட்டதில் அதாவது கி.பி. 920-ஆம் ஆண்டுகளில் மத்திய ஜாவாவை ஆட்சி செய்த சஞ்சாயா வம்சாவளியினருக்கும் (Sanjaya Dynasty) பாலித் தீவின் ஆட்சிக்கும் இடையே நிலவிய தொடர்புகளை அந்தக் கல் தூண் விவரிக்கின்றது. இன்னும் ஒரு விசயம்.

(சான்று: A Short History of Bali: Indonesia's Hindu Realm - பக்கம்: 46).

பேரரசு என்பது வேறு. அரச மரபு அல்லது வம்சாவளி என்பது வேறு. ஒரு பேரரசைப் பற்பல வம்சாவளியினர் ஆட்சி செய்து இருக்கலாம். ஆனால் அது ஒரே பேரரசு தான்.

அந்த வகையில் வர்மதேவா பேரரசையும் சஞ்சாயா பேரரசையும் பற்பல வம்சாவளியினர் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

 


பாலியில் வர்மதேவா பேரரசை உருவாக்கியவர் ஸ்ரீ கேசரி வர்மதேவா. கல் தூண் குறிப்புகளின் படி ஸ்ரீ கேசரி வர்மதேவா என்பவர் சைலேந்திரா பேரரசைச் சேர்ந்தவர். புத்த மதத்தைச் சார்ந்த மன்னர்.

சைலேந்திரா பேரரசு மத்திய ஜாவாவைச் சேர்ந்த ஒரு பேரரசு. மறந்துவிட வேண்டாம். ஸ்ரீ கேசரி வர்மதேவா புத்த மதத்தைப் பரப்புவதற்காகப் பாலித் தீவிற்குப் படையெடுத்துச் சென்றார். அப்படி படையெடுத்துச் சென்ற போது தொலை தூரத்தில் இருந்த மொலுக்கஸ் தீவுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.

இந்து மத அரசக் குடும்பங்களுக்கும்; புத்த மத அரசக் குடும்பங்களுக்கும் இடையே கலப்புத் திருமணங்கள் நடைபெற்று உள்ளன. 




அதனால் யார் எங்கே எந்த இடத்தில் ஆட்சி செய்கிறாரோ அந்த இடத்தில் எந்த மதம் பிரதான மதமோ இருக்கிறதோ; அந்த மதத்தையே பின்பற்றி வந்து இருக்கிறார்கள். மதப் பிரச்சினைகளைத் த்விர்த்து வந்து இருக்கிறார்கள்.

ஆக அந்தப் பெலாஞ்சோங் கல் தூண் தான் இப்போதைக்குப் பாலித் தீவின் வரலாற்றைச் சொல்லும் முதல் வரலாற்றுப் படிவம் ஆகும்.

பாலியில் வர்மதேவா வம்சாவளியைச் சேர்ந்த மன்னர்கள்:




•    ஸ்ரீ கேசரி வர்மதேவா (Sri Kesari Warmadewa - கி.பி. 914)
•    ரத்து உக்ரசேனா (Ratu Ugrasena)
•    சந்திரபாயா சிங்க வர்மதேவா (Candra-bhaya-singha-Warmadewa - கி.பி. 962)
•    ஜனசாது வர்மதேவா (Janasadu Warmadewa - கி.பி. 975)
•    உதயனா வர்மதேவா (Udayana Warmadewa)
•    தர்மவங்சா வர்மதேவா (Dharmawangsa Warmadewa)
•    ஆயிர்லங்கா (Airlangga - கி.பி. 991-1049)
•    அனாக் உங்சு (Anak Wungsu - கி.பி. 1049)

பாலியில் ஜெயா வம்சாவளியைச் சேர்ந்த மன்னர்கள்:

•    ஜெயாசக்தி (Jayasakti - கி.பி. 1146-1151)
•    ஜெயா பாங்குஸ் (Jayapangus - கி.பி. 1178-81)




பெலாஞ்சோங் கல் தூணைப் போல மேலும் ஒரு கண்டுபிடிப்பு. கற்களால் கட்டப்பட்ட ஆலயம். பாலித் தீவில் உபுட் எனும் இடத்தில் இந்தக் குகை கண்டுபிடிக்கப் பட்டது.

அதன் பெயர் யானைக் குகை (Goa Gajah / Elephant Cave). குகைவாயிலில் யானையின் உருவம். புத்த மதமும் இந்து சமயமும் கலந்த சிற்ப வடிவங்களின் அலங்காரங்கள். தீய ஆவியைத் தவிர்ப்பதற்காக அந்தக் கோயில் கட்டப்பட்டது.

1365-ஆம் ஆண்டு ஜாவாவில் ஒரு கவிதை எழுதப்பட்டது. கவிதையின் பெயர் தேசவர்ணனா (Desawarnana). அந்தக் கவிதையிலும் இந்தக் குகை ஆலயத்தைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள்.




1950-ஆம் ஆண்டில் இந்தக் குகைக் கோயிலை இந்தோனேசிய அரசாங்கம் மறுசீரமைப்புச் செய்தது. அதன் பின்னர் 1995 அக்டோபர் 19-ஆம் தேதி அந்தக் கோயிலை யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்தது.

ஜாவாவைச் சேர்ந்த அரச பரம்பரைக்கும் பாலியைச் சேர்ந்த அரச பரம்பரைக்கும் இடையே கலப்புத் திருமணங்கள் நடந்து உள்ளன. பாலியின் வர்மதேவா பரம்பரையைச் சேர்ந்த உதயானா வர்மதேவாவிற்கும் ஜாவாவைச் சேர்ந்த தர்மவங்சா பரம்பரையைச் சேர்ந்த ஓர் இளவரசிக்கும் கலப்புத் திருமணம்.




இவர்களுக்குப் பிறந்த மகன் ஆயிர்லங்கா. இந்த ஆயிர்லங்காதான் ஒரு காலத்தில் பாலியையும் ஜாவாவையும் ஒரு சேர ஆட்சி செய்தவர். பாலி வரலாற்றில் உச்சம் கண்டவர்.

இவரின் வழித்தோன்றல் தான் அதாவது ஆயிர்லங்காவின் வழித்தோன்றல் தான் பாலியின் ஜெயா வம்சாவளியினர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் ஜெயாசக்தி, ஜெயா பாங்குஸ் எனும் அரசர்கள்.

ஜெயாசக்தி, ஜெயா பாங்குஸ் அரசர்களின் அரசாட்சிக்குப் பின்னர் பாலியில் வர்மதேவா பேரரசு ஒரு முடிவிற்கு வந்தது.




1284ஆம் ஆண்டு ஜாவாவில் இருந்த சிங்காசாரி பேரரசின் கர்த்தாநகரா (Kertanegara) எனும் அரசர் பாலியின் மீது படை எடுத்தார். வர்மதேவா அரசிற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தார்.

அப்புறம் சில காலம் கழித்து கர்த்தாநகராவும் மஜபாகித் பேரரசினால் தோற்கடிக்கப் பட்டார். இப்படித் தான் ஒருவரை ஒருவர் அடித்து நொறுக்கி இந்திய ஆளுமைகளுக்கு அஸ்திவாரமே இல்லாமல் செய்து விட்டார்கள்.

14-ஆம் நூற்றாண்டில் சுமத்திராவில் மஜபாகித் பேரரசு தன்னிகரில்லாத அரசாக விளங்கியது. கடைசியில் பாலித் தீவும் மஜபாகித்தின் கரங்களில் வீழ்ந்தது. காஜா மாடா எனும் மஜபாகித் அரசர் பாலியின் மீது படையெடுத்துச் சென்று கர்த்தாநகராவின் சிங்காசாரி அரசை ஒரு முடிவிற்குக் கொண்டு வந்தார்.




பாலியில் சாம்பராங்கான் எனும் இடத்தில் மஜாபாகித்தின் தலைநகரம் உருவாக்கப் பட்டது. ஆக அதன் பின்னர் ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு மஜபாகித் பேரரசு பாலியை ஆட்சி செய்தது.

அதாவது 17-ஆம் நூற்றாண்டு வரை மஜபாகித் அரசர்கள் பாலியை ஆட்சி செய்தார்கள். அது ஒரு நீண்ட கால அரசாட்சியாகும். அந்தக் காலத்து இந்தோனேசிய அரசர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு சச்சரவுகளில் ஈடுபட்டதால் நிர்வாகங்களில் சறுக்கல் ஏற்பட்டன.

அந்தச் சறுக்கல்களினால் இந்தோனேசியாவில் இந்து மதத்தின் வலிமை குறைந்தது. பிற மதங்கள் வலிமை பெறுவதற்குச் சாதகமாகவும் அமைந்தது.

சான்றுகள்:

1. Debbie Guthrie Haer, Juliette Morillot and Irene Toh, Haer (2001). Bali, a traveller's companion. Editions Didier Millet.

2. Bali handbook with Lombok and the Eastern Isles by Liz Capaldi, Joshua Eliot p.98

3. The dark side of paradise: political violence in Bali By Geoffrey Robinson p.21