தேசிங்கு ராஜா கதையைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர் செஞ்சிக் கோட்டையைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். செஞ்சிக் கோட்டை தமிழ் நாடு மாநிலத்தில் தப்பி இருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும்.
இந்தச் செஞ்சிக் கோட்டை தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில் கிருஷ்ணகிரிக்கு அருகில் இருக்கிறது. கிழக்கே ராஜகிரி மலை. வடக்கே கிருஷ்ணகிரி மலை. தெற்கே சந்திரகிரி மலை.
செஞ்சிக் கோட்டையைச் சொரூப் சிங் என்பவர் நிர்வகித்து வரும் போது டில்லியில் மொகலாயப் பேரரசர் ஔவுரங்கசீப் நோய்வாய்ப் பட்டு இறந்து போனார். அவருக்குப் பதிலாக ஷா ஆலம் என்பவர் டில்லி சுல்தான் ஆனார். அதாவது ஔவுரங்கசீப்பிற்குப் பின்னர் ஷா ஆலம் என்பவர் மொகலாயப் பேரரசர் ஆனார்.
அப்போது பேரரசர் ஷா ஆலம் புதிதாக ஒரு முரட்டுக் குதிரையை வாங்கி இருந்தார். அந்தக் குதிரையை யாராலும் அடக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து பேரரசர் ஓர் அறிவிப்பு செய்தார். அந்தக் குதிரையை எந்த ஒரு சிற்றரசர் அடக்கிக் காட்டுகிறாரோ அவருக்கு அப்போது அவர் நிர்வாகம் செய்யும் சிற்றரசு அன்பளிப்பாக வழங்கப்படும் என்று ஓர் அறிவிப்பு செய்தார். அதாவது மொகலாயப் பேரரசின் கீழ் உள்ள சிற்றரசுகள் தான்.
அறிவிப்பைக் கேட்ட சொரூப் சிங் மகிழ்ச்சி அடைந்தார். அவர் அப்போது நிர்வகித்து வந்த செஞ்சிக் கோட்டைக்கு விடுதலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் டில்லிக்குப் பயணமானார்.
இங்கே ஒரு முக்கியமான விசயம். சொரூப் சிங் குதிரை சவாரி செய்வதில் மிக மிகக் கெட்டிக்காரர். எப்பேர்ப்பட்ட குதிரையையும் அடக்கிவிடும் சாமர்த்தியசாலி. குதிரைச் சவாரியில் ஔரங்கசீப்பிடம் இருந்தே பாராட்டுகளைப் பெற்றவர்.
இருந்தாலும் அவரால் குதிரையை அடக்க முடியவில்லை. ஒப்பந்தம் செய்து கொண்டபடி தோல்வி அடைந்தால், தோல்வி அடைந்தவர் சிறையில் அடைக்கப் படுவார். அதே போல சொரூப் சிங் தோல்வி அடைந்தார். டில்லி சிறையில் அடைக்கப் பட்டார். இந்தச் செய்தியை ஓர் அமைச்சர் மூலமாக, ராஜா தேசிங்கு அறிந்ததும் டில்லிக்கு விரைந்து சென்றார். சொரூப் சிங்கின் மகன் தான் ராஜா தேசிங்கு.
ராஜா தேசிங்குவின் மாமா பீம் சிங் அப்போது பேரரசர் ஷா ஆலமிடம் ஒரு படைத் தளபதியாக சேவை செய்தார். அவரைச் சந்தித்து அவருடைய அறிவுரைகளை ராஜா தேசிங்கு கேட்டார்.
தனக்கு ஒரு வாய்ப்பு வழங்கச் சொல்லி பேரரசரிடம் அனுமதி கேட்டார். வாய்ப்பு வழங்கப் பட்டது. அப்புறம் என்ன. அங்கே கூடி இருந்த அனைவரும் வியக்கும்படி, ராஜா தேசிங்கு அந்தக் குதிரையை அடக்கி சவாரி செய்து காட்டினார். அந்தக் குதிரையின் பெயர் பரிகாரி.
ராஜா தேசிங்கின் வீரத்தைச் பேரரசர் ஷா ஆலம் வெகுவாகப் பாராட்டினார். பிறகு அந்தக் குதிரையையே ராஜா தேசிங்கிற்குப் பரிசாகவும் கொடுத்து அனுப்பினார். அது மட்டும் அல்ல. செஞ்சிக் கோட்டையைச் சொரூப் சிங்கிற்கே எழுதியும் கொடுத்தார்.
ஒரு சில நாட்கள் கழித்து தளபதி மாமா பீம் சிங், தனது மகளை ராஜா தேசிங்கிற்குத் திருமணம் செய்து வைத்தார். மனைவியின் பெயர் ராணிபாய். அப்போது ராணிபாய்க்கு வயது 16. ராஜா தேசிங்கிற்கு வயது 18. சின்ன வயதிலேயே திருமணம்.
அதன் பிறகு செஞ்சிக் கோட்டையின் தலைவராகச் சொரூப் சிங் (Swaroop Singh) நியமிக்கப் பட்டார். ஆற்காட்டு நவாப்பிடம் ஒரு தொகையைக் கப்பமாகக் கட்ட வேண்டும் என்றும் பணிக்கப் பட்டார்.
இதற்கு முன்னர் 1707-இல் ஒளரங்கசீப் காலத்திலேயே டில்லியில் பிரச்சினை. ஒளரங்கசீப்பிற்குப் பின்னர் அதிகாரத்தில் யார் அமர்வது என்கிற அரசியல் குழப்பம்.
அந்தச் சமயத்தில் அதுவரை ஆற்காட்டு நவாப்பிற்குச் செலுத்தி வந்த கப்பத் தொகையைச் சொரூப் சிங் நிறுத்திக் கொண்டார். அங்கேதான் பிரச்சினை ஆரம்பமானது.
வணிகம் செய்வதாகச் சொல்லி நாடு பிடிக்க வந்த ஆங்கிலேயர்களையும் சொரூப் சிங் பகைத்துக் கொண்டார். அதுவே அவருடைய ஆட்சிக்கு நெருக்கடிகளை உண்டாக்கியது.
1714-ஆம் ஆண்டு சொரூப் சிங் இறந்து போனார். அதன்பின் அவருடைய மகன் ராஜா தேசிங்கு, செஞ்சிக் கோட்டையின் மன்னராக முடி சூட்டிக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 22.
தன் தந்தையாரின் காலத்தில் அவர் வாங்கிய கடனுக்கு ஆற்காட்டு நவாப் அநியாய வட்டி போட்டுக் கேட்டார். மொத்தத் தொகையையும் ஒரே நேரத்தில் திருப்பித் தர வேண்டும் என்றும் ஆள் அனுப்பினார்.
ராஜா தேசிங்கு அதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். அத்துடன் செலுத்தி வந்த கப்பத் தொகையையும் இனிமேல் கட்ட முடியாது என்றும் மறுத்து விட்டார்.
இதனால் ஆற்காட்டு நவாப் சாதத் உல்லா-கான் ஆத்திரம் அடைந்தார். செஞ்சிக் கோட்டையைத் தாக்கத் தன் படையை அனுப்பினார். 1714-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி தேவனூர் என்ற இடத்தில் போர் தொடங்கியது.
தேசிங்கு ராஜாவின் கை ஓங்கி இருந்த நேரம். சுபாங்கித் துரை என்பவன் மறைந்து இருந்து துப்பாக்கியால் தேசிங்கு ராஜாவைச் சுட்டான். அதே இடத்தில் ராஜா தேசிங்கு மரணம் அடைந்தார்.
தேசிங்கு ராஜா இறந்தவுடன் அவருடைய மனைவியும் உடன்கட்டை ஏறினார். ராணிபாயை எவ்வளவோ தடுத்துப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அவருடைய நினைவாக இராணிப்பேட்டை என்ற ஓர் ஊர் உருவாக்கப் பட்டது. ராணிபாய்க்கு கோயில்களும் கட்டப் பட்டன. இன்றும் வழிபாடுகள் நடக்கின்றன.
தேசிங்கு ராஜாவின் சமாதியும் அவருடைய படைத் தளபதி முகம்மது கானின் சமாதியும் நீலாம்பூண்டி கிராமத்தில் இன்றும் இருக்கின்றன. தேசிங்கு ராஜா உயிருக்கும் மேலாய் நேசித்து வந்த நீலவேணி எனும் குதிரையின் சமாதியும் அங்கேதான் இருக்கிறது.
தேசிங்கு ராஜா தமிழ்நாட்டில் இன்றும் வீர நாயகனாகப் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தனைக்கும் அவர் பத்தே பத்து மாதங்கள் தான் செஞ்சியை ஆட்சி செய்து இருக்கிறார்.
செஞ்சிக் கோட்டைக்கு அருகில் மூன்று கி.மீ. தொலைவில் சிங்கவரம் எனும் ஒரு கிராமம் இருக்கிறது. அங்கே இருக்கும் அரங்கநாதர் ஆலயம் மிகப் பழமை வாய்ந்தது.
செஞ்சி அருகில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது இந்தச் சிங்கவரம் கிராமம். பல்லவர் காலத்தில் சிங்கபுர நாட்டின் தலைநகராக இருந்தது. முதலாம் மகேந்திர வர்மனின் தந்தை சிம்ம விஷ்ணுவின் காலத்தில் இந்த நகரம் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
அரங்கநாதர் ஆலயம் மலையின் மேல் இருப்பதால் 125 படிகளைக் கடக்க வேண்டும். எல்லோரா பாறையைப் போல ஒரே பாறையைக் குடைந்து செய்யப் பட்டக் கோயில். இந்த அரங்கநாதர் தான் தேசிங்கு ராஜாவின் குலதெய்வம்.
எந்த ஒரு வேலையைத் தொடங்கினாலும் தேசிங்கு ராஜா இங்கே வந்து அர்ச்சனை செய்து விட்டுத்தான் போவாராம். செஞ்சிக் கோட்டை அரண்மனையில் இருந்து அரங்கநாதர் கோயிலுக்குச் செல்ல அவர் காலத்திலேயே ஒரு சுரங்கப் பாதையையும் அமைத்து இருக்கிறார்.
ஆற்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த அரங்கநாதரிடம் தேசிங்கு ராஜா அனுமதி கேட்ட போது அரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம்.
"எதிரியின் படைகள் எல்லையை அடைந்து விட்டதே; முன் வைத்த காலைப் பின் வைக்க மாட்டேன். இன்றே செல்ல முடியுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம்.
வலிமை வாய்ந்தது செஞ்சிக் கோட்டை. பற்பல வரலாற்று நினைவுகளைத் தனக்குள் இறுக்கிப் பிடித்துக் கொண்டு கம்பீரத் தொனியில் மிடுக்குடன் இன்றும் காட்சி அளிக்கின்றது.
செஞ்சிக் கோட்டையில் உள்ள கோயில்கள், மண்டபங்கள், குளங்கள், ஆறுகள், படைவீரர்கள் தங்கும் பகுதிகள், நெற் களஞ்சியங்கள்; எதிரிகள் எளிதில் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப் படுத்துகின்றன.
செஞ்சிக்கு புகழ் வரக் காரணமாக இருந்தவர் தேசிங்கு ராஜா. இவரைப் பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்கள் உள்ளன. கதைகளும் உள்ளன.
பண்டைய கால மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நாம் வரலாற்றில் படித்து தெரிந்து கொள்கிறோம். அதே சமயத்தில் கடந்த கால மன்னர்களின் வாழ்க்கை முறையைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் வாழ்ந்த இடங்களை நேரில் போய்த் தொட்டுப் பார்க்க வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதையும் உணர்ந்து பார்க்க வேண்டும். அதற்கு நீங்கள் செல்ல வேண்டிய ஒரே இடம் செஞ்சிக் கோட்டை தான்.
தேசிங்கு ராஜா வாழ்ந்த இடம்; அவர் போரிட்ட இடம்; அவர் மரணம் தழுவிய இடம்; அவருடைய மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறிய இடம் என ஏராளமான வரலாற்று நினைவிடங்களைத் தன்வசம் வைத்து உள்ளது.
செஞ்சிக் கோட்டை ஆனந்தக் கோனார் என்பவரால் கி.பி. 600-ஆம் ஆண்டில் அமைக்கப் பட்டது. பற்பல அரசர்களின் கீழ் இருந்தது. பின்னர் காலத்தில் பிரெஞ்சுக்காரர்கள்; ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது. தற்போது இந்தக் கோட்டை மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பில் உள்ளது.
வியப்பில் ஆழ்த்தும் கட்டடக் கலைக்கு எடுத்தக்காட்டாகக் கலை நயத்துடன் கல்லில் கட்டப்பட்ட கம்பீரமான கட்டுமானத்தைக் கண்டு வியப்பபு அடையாதவர்களே இருக்க முடியாது. அதில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நேரில் பார்த்துப் பிரமித்துப் போய் இருக்கிறேன்.
செஞ்சிக் கோட்டையை ஆட்சி புரிந்த தேசிங்கு ராஜா போலவே விண்ணை முட்டி கம்பீரமாக நிற்கிறது இந்தச் செஞ்சிக் கோட்டை. கால மாற்றங்களைக் கடந்து வந்தது இந்தச் செஞ்சிக் கோட்டை. பற்பல படையெடுப்புகளையும் தாண்டி நிற்கிறது இந்தச் செஞ்சிக்கோட்டை. அதே சமயத்தில் நம் மனங்களைக் கசியவும் வைக்கிறது.
தமிழ்நாட்டிற்குப் போனால் கிருஷ்ணகிரிக்குப் போங்கள். அங்கு இருந்து கொஞ்ச தொலைவில்தான் செஞ்சிக் கோட்டையும் இருக்கிறது. போய்ப் பாருங்கள். தேசிங்கு ராஜாவை நினைத்துப் பிரார்த்தனை செய்யுங்கள். அதுவே அவருக்கு நாம் செய்யும் உள்ளார்ந்த மரியாதையாகும்.
(முற்றும்)