தமிழ்ப் பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்ப் பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 3 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 அக்டோபர் 2018

தமிழ்ப் பள்ளிகளில் இருமொழித் திட்டம் - 3

தமிழ் மலர் - 09.10.2018 - செவ்வாய்க் கிழமை

மலாயாவில் தமிழர்கள் குடியேறிய காலத்தில் இருந்தே தமிழ் மொழியும் அவர்களுடன் இணைந்து வந்து இங்கே குடியேறியது. மெல்ல மெல்ல வேர்விட்டுப் பரவத் தொடங்கியது. ஆலவிருச்சகமாய் விழுதுகள் பார்த்து வீர வசனங்கள் பேசியது.
 

கால வெள்ளத்தில் பற்பல ஒதுக்கல்கள்; பற்பல பதுக்கல்கள்; பற்பல புறம்போக்குத் திட்டங்கள். அவற்றில் இருந்து தப்பித்துப் பிழைத்துக் கரையேறி மூச்சு விடுகிறது. அதற்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளுக்காக அனுதினமும் போராட்டங்களைச் செய்தும் வருகிறது.

அந்த மொழியைச் சார்ந்த இனத்தவரும் அதன் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். இன்றுவரை போராடி வருகிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழர்கள் மலாயாவில் தடம் பதித்து விட்டார்கள். வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் நன்றாகவே தெரிய வரும். பெரும்பாலும் வணிகம் செய்யவே மலாயாவிற்கு வந்தார்கள். திரைகடல் ஓடி திரவியம் தேடு எனும் வாசகமே அந்தக் காலத்துத் தமிழர்களுக்குப் பொன் வாசகமாக விளங்கி இருக்கிறது.

அப்படி மலையூர் மலாயாவிற்கு வந்தவர்கள் பலர் பினாங்கு, மலாக்கா போன்ற துறைமுக நகரங்களில் நிரந்தரமாகத் தங்கி இருக்கிறார்கள். அங்கு வாழ்ந்த உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்குத் தமிழ் மொழியைக் கற்றுத் தந்து இருக்கிறார்கள்.

மலாக்காவை எடுத்துக் கொண்டால் முன்ஷி அப்துல்லா. இவர் நல்ல ஓர் எடுத்துக் காட்டு. முன்ஷி அப்துல்லா 1796-ஆம் ஆண்டு மலாக்காவில் பிறந்தவர்.
 

1843-ஆம் ஆண்டு அவர் தன் சுயசரிதையை எழுதினார். அதன் பெயர் ஹிக்காயாட் அப்துல்லா. தன்னுடைய ஆறாவது வயதில் விரல்களால் மணலில் எழுதித் தமிழ்மொழியைப் படித்ததாக அவரே எழுதி இருக்கிறார்.

தன்னுடைய பால்ய வயதில் அவருடன் பலர் தமிழ் படித்ததாகவும் சொல்கிறார். முன்ஷி அப்துல்லாவின் தாயார் ஒரு தமிழ்ப் பெண். இதையும் அவர் தன் சரிதையில் குறிப்பிட்டு இருக்கிறார். இவரைப் போல நிறைய பேர் அந்தக் காலத்திலேயே தமிழ் படித்து இருக்கிறார்கள்.

200 ஆண்டுகளுக்கு முன்னர் மலாயா நாடு பிரிட்டிஷ் காலனியாக மாறியது. அப்போது மலாயாவில் நிறைய காபி, தேயிலை, கரும்புத் தோட்டங்கள். மலாயாவில் முதலில் தோன்றியவை காபித் தோட்டங்கள். அதன் பின்னர் அந்தி மந்தாரைக் காளான்களாக நூற்றுக் கணக்கான ரப்பர் தோட்டங்கள் பூக்கத் தொடங்கின. நன்றாகப் பூத்துக் குலுங்கின.

அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்குத் தென்னிந்தியாவில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் இங்கே கொண்டு வரப் பட்டார்கள். அப்படி வந்தவர்கள் தங்களுடன் கூடவே தங்களின் தாய் மொழியான தமிழ் மொழியையும் கொண்டு வந்தார்கள்.
 

மலாயாவில் முதன்முதலாகப் பினாங்கில் 1816-ஆம் ஆண்டில் ஒரு பள்ளி தொடங்கப் பட்டது. ஆது ஓர் ஆங்கிலப் பள்ளி. அதன் பெயர் பினாங்கு பிரீ ஸ்கூல். அதே பள்ளியில் ஐந்து ஆண்டுகள் கழித்து 1821-ஆம் ஆண்டில் ஒரு தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது.

அந்தக் கட்டத்தில் பினாங்குத் துறைமுகத்தில் நிறைய தமிழர்கள் வேலை செய்து வந்தார்கள். அவர்களின் பிள்ளைகளுக்காக அந்தத் தமிழ் வகுப்பு தொடங்கப் பட்டது. இருப்பினும் ஆதரவு குறைந்து குன்றிப் போனதால் அந்தத் தமிழ் வகுப்பு மூடப் பட்டது.

1850-ஆம் ஆண்டில் பினாங்கிலும் மலாக்காவிலும் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. 1870-ஆம் ஆண்டுகளில் ஜொகூர், சிங்கப்பூர் போன்ற இடங்களில் தமிழ்ப் பள்ளிகள் தோன்றின. அதன் பின்னர் 1895-ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் ஆங்கிலோ தமிழ்ப்பள்ளி உருவானது. பின்னர் அந்தப் பள்ளி மெதடிஸ்ட் ஆங்கிலப்பள்ளி என்று உருமாற்றம் கண்டது.

1912-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். தோட்டத் தொழிலாளர்களின் நலத்தைப் பாதுகாக்கும் சட்டம். ஒரு தோட்டத்தில் பத்துக் குழந்தைகள் இருந்தால் போதும்; ஒரு தமிழ்ப் பள்ளியை உருவாக்க வேண்டும் எனும் சட்டம். மறுபடியும் சொல்கிறேன்.
 

ஒரு தோட்டத்தில் 7 முதல் 14 வயது வரை பத்து குழந்தைகள் இருந்தால் போதும்; ஒரு தமிழ்ப்பள்ளியை உருவாக்க வேண்டும் என்கிற சட்டம்.

இந்தச் சட்டம் அப்போது அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டம். இன்னும் அமலில் உள்ளது. காலனித்துவ ஆட்சியில் இருந்து மலாயா சுதந்திரம் அடைந்த போது பற்பல சட்டத் திருத்தங்கள் செய்தார்கள். ஆனால் மேலே சொன்ன அந்தச் சட்டத்தை மட்டும் மாற்றம் செய்யவில்லை. அதை அப்படியே விட்டு விட்டார்கள்.

பத்துக் குழந்தைகள் இருந்தால் ஒரு தமிழ்ப் பள்ளி எனும் அந்தச் சட்டம் 1912-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போது பள்ளிகளை எந்த இடத்தில் தொடங்குவது; எப்படி நடத்துவது என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது.

தோட்டத்தில் இருந்த ஆயாக் கொட்டகைகள்; நாடக மண்டபங்கள்; பலசரக்குக் கடைகள்; கோயில்கள்; தொழிலாளர் வீடுகள் போன்றவற்றில் வகுப்புகளை நடத்தினார்கள். படித்துக் கொடுக்க ஆசிரியர்கள் வேண்டுமே.
 

என்ன செய்வது. பார்த்தார்கள். வேறுவழி இல்லாமல் கோயில் பூசாரிகளைக் கொண்டு வந்து அவர்கள வாத்தியார்களாக மாற்றி விட்டார்கள்.

கோயில் பூசாரிகள் இல்லாத தோட்டங்களில் கங்காணிகளே வாத்தியார் வேலையைச் செய்தார்கள். கங்காணிகளுக்குப் பதிலாக சில இடங்களில் தோட்டத்துக் கிராணிமார்களும் வாத்தியார் வேலையைச் செய்து இருக்கிறார்கள். வாழ்த்த வேண்டிய விசயம்.

இப்படி கோயில் பூசாரிகளும் கங்காணிகளும் ஆசிரியர் வேலை செய்ததால் மாணவர்களின் கல்வித்தரம் எப்படி இருக்கும். தரம் குறைவாக இருந்தது. ஒரு தேக்க நிலை. இங்கே ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது.

தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களுக்குக் கல்வி அறிவைக் கொடுக்க வேண்டும்; அவர்களை அறிவாளிகளாகவும் அறிவு ஜீவிகளாகவும் மாற்ற வேண்டும் என்பது எல்லாம் ஆங்கிலேயர்களின் நோக்கம் அல்ல. நிச்சயமாக அப்படி இருக்காது.

வெள்ளைக்காரர்களுக்கு அவர்கள் போட்டு இருக்கும் சட்டைதான் வெள்ளை. மனசு எல்லாம் சொக்கத் தங்கமாய் கறுப்பு. அப்போது அவர்களுக்கு பிடித்தமான பாடல் என்ன தெரியுங்களா. கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு.

படித்தவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களைக் கட்டி மேய்க்க முடியாது. அது ரொம்பவும் சிரமமான காரியம். கைநாட்டுப் போடுபவர்களுக்குக் கொஞ்சம் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். அப்படித்தான் வெள்ளைக்காரர்கள் நினைத்தார்கள்.
 

ஆக தமிழ்த் தொழிலாளர்கள் தோட்டத்திற்குள் அடங்கி வாழ வேண்டும். வெளியே போகக் கூடாது. அவர்களின் பிள்ளைகளும் தோட்டத்தை விட்டு வெளியே போகக் கூடாது. வெளியே போனால் அவர்களின் பட்டறிவும் பகுத்தறிவும் வளர்ச்சி பெறும்.

அப்புறம் பின்நாட்களில் தங்களுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்குவார்கள். இவை எல்லாம் காலனித்துவக் கரிகாலன்களுக்குத் தெரியாமலா இருக்கும்.

ஆக தோட்டத்திலேயே பள்ளிக்கூடங்களைக் கட்டிப் போட்டால் வெளியே போக மாட்டார்கள். அவர்களுக்கு ஆறாம் வகுப்பு அறிவு போதும். அதற்கு மேல் படிப்பு அவசியம் இல்லை. இருந்தால் எசமானர்களுக்கு ஆபத்து. அதுதான் வெள்ளைக்காரர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. நரியை நனையாமல் குளிப்பாட்டும் கலையைக் கரைத்துக் குடித்தவர்களுக்குச் சொல்லியா தர வேண்டும்.
 

வெள்ளைக்காரர்களின் நோக்கம் எல்லாம் மலாயாவில் ரப்பர் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். நாலு காசை நாற்பது காசாகப் பெருக்க வேண்டும். கல்லாவை நிரப்ப வேண்டும். நல்லபடியாக வீடு போய்ச் சேர வேண்டும். கிடைக்கிற கமிசனில் சுகமான வாழ்க்கை வாழ வேண்டும்.

பொதுவாகவே அப்போது இருந்த பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள், தமிழ் ஆசிரியர்களை உருவாக்கும் தொழிற்சாலைகளாகவே இயங்கி வந்தன. பெரும்பாலான தமிழாசிரியர்கள் வெள்ளைக்காரர்களின் எடுபிடிகளாகவே இருந்தார்கள். மன்னிக்கவும். உண்மையைத் தான் எழுதுகிறோம்.

தமிழ் ஆசிரியர்களுக்கும் ஆங்கிலம் சரியாகத் தெரியாது. அதனால் மாணவர்களுக்கும் ஆங்கிலம் சொல்லித்தர முடியாமல் போய் விட்டது. தமிழ் மாணவர்களுக்கும் ஆங்கில அறிவு இல்லாமலே போனது.

தோட்டப் புறங்களில் தமிழ்ப்பள்ளிகள் தொடங்கப்பட்ட காலக் கட்டத்தில் நகர்ப் புறங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் தொடங்கப் பட்டன. பெரும்பாலானவை தனியார் தமிழ்ப் பள்ளிகளாகும். 1905-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் செந்தூல் பகுதியில் தம்புசாமிப் பிள்ளை தமிழ்ப்பள்ளி தொடங்கப் பட்டது. இந்தப் பள்ளியைத் ராஜசூரியா என்பவர் தோற்றுவித்தார்.
 

1905-ஆம் ஆண்டில் மலாயாவில் 13 அரசாங்கத் தமிழ்ப்பள்ளிகளும் ஒரு கிறிஸ்த்துவத் தமிழ்ப்பள்ளியும் இயங்கி வந்தன. 1908-ஆம் ஆண்டு நிபோங் திபாலில் ஒரு தமிழ்ப்பள்ளி தொடங்கப் பட்டது. பினாங்கு மாநிலத்தைப் பொருத்த வரையில் அதுதான் முதல் தமிழ்ப்பள்ளி.

1914-ஆம் ஆண்டு கோலாலம்பூர் துன் சம்பந்தன் (பிரிக்பீல்ட்ஸ்) சாலையில் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. 1930-ஆம் ஆண்டு செந்தூல் இந்திய வாலிபர் சங்கத்தின் சார்பில் சரோஜினி தேவி தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது. இருந்தாலும் இந்தப் பள்ளி 1958-ஆம் ஆண்டு மூடப்பட்டது. 

1937-ஆம் ஆண்டு  கோலாலம்பூர் பத்து சாலையில் சுவாமி ஆத்மராம் அவர்களின் முயற்சியில் அப்பர் தமிழ்ப்பள்ளி தோற்றுவிக்கப் பட்டது.

அதே காலக் கட்டத்தில் அரசாங்கமும் சில பள்ளிகளைக் கட்டிக் கொடுத்து இருக்கிறது. 1913-ஆம் ஆண்டில் கிள்ளான சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி; 1919-ஆம் ஆண்டில் செந்தூல் தமிழ்ப்பள்ளி; 1924-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் சான் பெங் தமிழ்ப்பள்ளி; 1937-ஆம் ஆண்டில் பங்சார் தமிழ்ப்பள்ளி போன்றவை குறிப்பிடத் தக்கவை.
 

மலாயாவில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை

1920-ஆம் ஆண்டில் 122.

1925-ஆம் ஆண்டில் 235.

1930-ஆம் ஆண்டில் 333

1938-ஆம் ஆண்டில் 524.

1942-ஆம் ஆண்டில் 644

1943-ஆம் ஆண்டில் 292

1950-ஆம் ஆண்டில் 888

1960-ஆம் ஆண்டில் 662

2018-ஆம் ஆண்டில் 525

2018-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி மலேசியாவில் 525 தமிழ்ப்பள்ளிகள்; 10,000 தமிழாசிரியர்கள். 108,000 மாணவர்கள். 4500 வகுப்பு அறைகள்.

(தொடரும்)

சான்றுகள்:

1. R. Kurinjivendhan. Malaya Thamizhar Sarithiram. p. 126. ISBN 978-81-234-2354-8.

2. Global Research Forum on Diaspora and Transnationalism (GRFDT) http://www.grfdt.com/PublicationDetails.aspx?Type=Articles&TabId=7051

3. List of All Primary Schools in Each States in Malaysia, as at 31 Dec 2017. http://myschoolchildren.com/list-of-all-primary-schools-in-malaysia/#.W7mWmCQzbIU

4. Malaya Labour Ordinance in 1912 - https://lib.iium.edu.my/mom/services/mom/document/getFile/U0IAjWSBy5KgLs0Z0pwyhERuNbbFdcBr20070109162203671

5. The first Tamil class was conducted in Penang Free School on Oct 21, 1816. https://www.pressreader.com/malaysia/the-star-malaysia/20161013/282071981418159