மகாதீர் பதவியேற்பு - புத்ராஜெயாவில் அமைதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகாதீர் பதவியேற்பு - புத்ராஜெயாவில் அமைதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 மே 2018

மகாதீர் பதவியேற்பு - புத்ராஜெயாவில் அமைதி

மலேசியத் தமிழர்கள் சாதித்து விட்டார்கள். மாற்றம் வேண்டும் என்று நினைத்தார்கள். மாற்றிக் காட்டி விட்டார்கள். அந்த மாற்றத்தைக் இறுக்கிப் பிடிக்கும் ஓர் இரும்புக் கவசமாகவும் மாறி விட்டார்கள்.

Image may contain: 9 people, people smiling

ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்களின் அகம்பாவங்களையும் எகத்தாளங்களையும் அசை போட்டுப் பாருங்கள். எத்தனை எத்தனை எடக்கு முடக்குகள். எத்தனை எத்தனை நக்கல் நையாண்டிகள். எத்தனை எத்தனை கூத்துக் கொம்மாளங்கள். நினைத்துப் பார்த்தால் பற்றிக் கொண்டு வருகிறது.

குட்டிக் குட்டித் தலைவர்களில் இருந்து மேட்டுக்குடி மோடி மஸ்தான்கள் வரை ஆடாத ஆட்டமா. போடாத வேசமா. நடிக்காத நாடகமா. செய்யாத அசிங்கமா.

ரம்பா சம்பா சம்பாதான் என்று சொல்லிச் சொல்லியே மலேசியத் தமிழர்களின் எதிர்காலத்தையே ’சம்பா சாராப்’ என்று குப்பைக் கூளமாக்கி விட்டார்கள்.

Image may contain: 2 people, people smiling

ஆதிதாளம், அடதாளம், திரிபுரதாளம், ஜம்பதாளம், ரூபகதாளம் ஆகியவை பஞ்ச தாளங்கள் என்று சொல்வார்கள். ஒத்து வராமல் நொந்து நூலாகும் போது ஏக தாளம் என்று சொல்வார்கள். அப்படித்தான் இங்கேயும் நடந்தது. விடுங்கள். அடுத்து நம் இந்தியச் சமுதாயம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்வோம்.

அதற்கு முன்னர் நடந்து முடிந்த தேர்தலில் துன் மகாதீரின் சாணக்கியம் பற்றி கண்டிப்பாக கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். மகாதீர் எனும் மகா சாணக்கியர் இல்லாமல் மலேசியாவில் ஆட்சி மாற்றம் நடந்து இருக்கவே முடியாது.



Image may contain: cloud, sky, tree, skyscraper and outdoor

துன் மகாதீர் எப்படி சாணக்கியமாகக் காய்களை நகர்த்தி இருக்கலாம் என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம். நான் ரெடி. நீங்கள் ரெடியா.

வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். மலேசியாவிலும் சரி சிங்கப்பூரிலும் சரி. ஆட்சி மாற்றம் என்பது நடந்து இருக்கவே முடியாது. அது கனவில் தான் நடந்து இருக்கும். உங்களுக்கு ஒரு படக்காட்சியை முன் வைக்கிறேன். ஒரு கற்பனை. இப்போது மகாதீரே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்தக் காட்சியில் அன்வார் இருக்கிறார். மொகைதீன் இருக்கிறார். லிம் கிட் சியாங் இருக்கிறார். குலசேகரன் இருக்கிறார். வேறு எந்தப் பெரும்புள்ளி வேண்டும் என்றாலும் இருக்கட்டும். 

இருப்பினும் நடந்து முடிந்த தேர்தலில் 222 நாடாளுமன்ற இடங்களில் எதிர்க்கட்சியினர் 200 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் இந்த அரசியல் மாற்றம்; இந்த ஆட்சி மாற்றம் நடந்து இருக்கவே இருக்காது.

மலேசியா என்றால் பாரிசான். பாரிசான் என்றால் மலேசியா. கீழே சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி போல.

அடுத்து மகாதீர் மட்டும் இல்லாமல் எதிர்க்கட்சியினர் 200 இடங்களில் வெற்றி பெற்று இருந்தால் எங்கேயாவது இரண்டு மூன்று இடங்களில் சிறிய பெரிய அசம்பாவிதங்கள் நடந்து இருக்கலாம். இது என் கணிப்பு.

அதன் பின்னர் மாஜ்லீஸ் கெசெலாமாத்தான் நெகாரா எனும் தேசிய பாதுகாப்பு மன்றத்தை முடுக்கிவிட்டு இருப்பார்கள். அதாவது செயல்படுத்தி இருப்பார்கள்.

1969-இல் இனக்கலவரம் வந்த பொழுது துன் ரசாக் அவர்கள் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். துங்கு வெளியே போக முடியாதபடி வீட்டிலேயே முடக்கப் பட்டார். தெரியும் தானே. அது வரலாறு. ஆகவே துணிந்து எழுதலாம்.

அதே மாதிரி தான் இங்கேயும் நடந்து இருக்கும். தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைமைப் பொறுப்பை நஜீப் ஏற்று இருக்க மாட்டார். நிச்சயமாக. மற்ற தலைவர்களில் ஒருவர் தான் பொறுப்பை ஏற்று இருப்பார். பின்புலத்தில் நஜீப் இயக்குச் சக்தியாக விளங்கி இருப்பார்.

தேசிய பாதுகாப்பு மன்றத்தைக் கொஞ்ச காலம் செயல் படுத்திய பின்னர் மறு பொதுத் தேர்தலைக் கொண்டு வந்து இருப்பார்கள். சரி.

இப்படி எல்லாம் குழப்பங்கள் பிரச்சினைகள் கசப்புகள் வந்த பின்னர் மறுபடியும் நடத்தப்படும் பொதுத் தேர்தலில் பொது மக்கள் எதிர்க்கட்சிகளுக்குத் துணிந்து ஓட்டு போடுவார்களா. சொல்லுங்கள். முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

துன் மகாதீர் அவர்களின் சாணக்கியத் திறமைக்கு வருகிறேன். நடந்த முடிந்த தேர்தலில் ஒரு சுள்ளி அசம்பாவிதமும் நடக்கவில்லை. பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஜெயித்து துன் மகாதீர் பிரதமர் பதவியை ஏற்கும் வரையில் ஒரு சின்னக் கீறல்கூட விழவில்லை.

பொதுமக்கள் யாருக்கும் எவருக்கும் எந்தவித ஒரு சின்ன பாதிப்பும் ஏற்படவில்லை. எங்கேயாவது ஓர் இடத்தில் ஒரு கசப்பான நிகழ்வு நடந்ததா. இல்லை. எங்கேயாவது ஒரு பதற்றமான நிலை ஏற்பட்டதா. இல்லை.

பொதுமக்கள் அப்படியே அப்படியே பாதுகாப்பாக இருந்தார்கள். அவர்கள் மீது ஒரு துளி கீறல்கூட விழவில்லை. பத்திரமாக இருந்தார்கள். அப்படியே ஆட்சியையும் மாற்றிக் காட்டி இருக்கிறார்கள். சரி.

நஜீப்பிற்கு நன்றாகத் தெரியும். அவர் தோற்றுப் போனால் நிச்சயமாக அவரைப் பிடிப்பார்கள். பிடித்துக் கொண்டு போய் சிறையில் போடுவார்கள். சிறையிலேயே கிடக்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அவருக்குத் தெரியாமல் இருக்குமா. என்னங்க.

அவர் என்ன கிண்டர்கார்டன் மாணவரா இல்லை பால் குடிக்கும் பச்சை சிசுவா. பத்துப் பதினைந்து வருடங்களாக ஒரு நாட்டை ஆட்சி செய்த ஒரு பெரிய ஜாம்பவான்ங்க. அவரைக் குறைத்து மதிப்பிட முடியுமா. சொல்லுங்கள்.

இங்கே ஒன்றை நன்றாகக் கவனியுங்கள்.

தேர்தல் நடந்த தினத்தில் ஏறக்குறைய 9 மணிக்கு எல்லாம் முக்கால்வாசி முடிவுகள் வந்து விட்டன. நஜீப்பின் பாரிசான் கட்சி தோற்று வருகிறது என்பது அவருக்குத் தெரியும். எல்லாருக்கும் தெரியும். ரொம்ப வேண்டாம். அன்றிரவு 12 மணிக்கு எல்லாம் முடிவு தெரிந்து விட்டது. நஜீப் தோற்று விட்டார் எனும் முடிவு தெரிந்து விட்டது. சரி.

அப்படி இருக்கும் போது நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை நஜீப் ஏன் எடுக்கவில்லை. இன்னும் ஒரு விசயம். குறைந்த பட்சம் அவருடைய குடும்பத்தையாவது எங்கேயாவது கொண்டு போய் மறைத்து வைத்து இருக்கலாமே. ஏன் செய்யவில்லை.

உங்களிடம் ஒரு கேள்வி. நஜீப் என்ன நம்ப விடுதலைப் புலித்தலைவர் மாதிரி உயிரையும் உடலையும் மண்ணுக்கு தாரை வார்க்கும் தியாகச் சீலரா.

தமிழ்த் தலைவர் பிரபாகரன் எல்லாம் சுத்தமான தியாகிகள். கடைசி வரையில் தன் குடும்பத்தினரைப் பக்கத்திலேயே வைத்து இருந்தார். தன் மனைவி மக்கள் அனைவரையும் தமிழீழ மண்ணுக்காகத் தியாகம் செய்தவர். தன் குடும்பத்தைவிட தமிழீழமே தன்னுயிர் என்று நினைத்தவர்.

கழுத்திற்குக் கத்தி வந்த பின்னரும் ஏன் நஜீப் பேசாமல் இருந்தார். சொல்லுங்கள். தன் குடும்பத்தை ஒரு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு போக வேண்டும் என்று ஏன் நஜீப் நினைக்கவில்லை.

இங்கே தான் அவருடைய மாஸ்டர் பிளேன் வருகிறது. எதிர்க்கட்சியினர் வெற்றி பெற்று வந்தாலும் எப்படியாவது ஆட்சியை மாற்றிவிட முடியும். ஆட்சியைத் தன் வசம் தக்க வைத்துக் கொள்ள முடியும் எனும் நம்பிக்கையில் அவர் இருந்து இருக்கலாம்.

அதாவது ஆட்சி மாறுகிறதோ இல்லையோ அதிகாரம் தன் கையில் தான் இருக்கும் எனும் அசைக்க முடியாத ஒரு நம்பிக்கையில் தான் அவர் பயணித்து இருக்கலாம். அந்த வகையில் அவர் எல்லா காய்களையும் அழகாக நகர்த்தி வந்து இருக்கலாம். அதாவது முன்கூட்டியே திட்டம் வகுத்து வைத்து இருக்கலாம்.

நஜீப் ஆட்சிக் காலத்தில் அவரின் செயல்பாடுகள் எல்லாம் சாதனைகள் அல்ல. அவற்றைச் சாதனைப் பட்டியலில் சேர்க்க முடியாது. பதவி அதிகாரத்தில் உள்ளவர்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். எதை வேண்டும் என்றாலும் செய்யலாம். இது உலகம் அறிந்த வரலாற்று உண்மை.

யார் ஒருவர் பிரதமராக வந்தாலும் சரி: அவர் பதவியில் இருக்கும் போது அவர் அந்த நாட்டின் மன்னருக்கு நெருக்குதல் கொடுக்க முடியும். கொடுக்கலாம். இராணுவத் தளபதிகளுக்கு நெருக்குதல் கொடுக்கலாம். அட்டர்னி ஜெனரலுக்கு நெருக்குதல் கொடுக்கலாம். அரசு இயந்திரங்களுக்கு நெருக்குதல் கொடுக்கலாம். அரசுசார் நிறுவனங்களுக்கு நெருக்குதல் கொடுக்கலாம்.

தனியார் நிறுவனங்களைச் சொல்லவே வேண்டாம். எண்ணெய் என்றதும் எள் நெய்யாய் வடிவார்கள். டோனி பெர்னாண்டஸைச் சொல்லவில்லை. அப்புறம் ஏர் ஏசியாவில் ஏற முடியாது. சிணுங்கும் சிவப்புச் சட்டை அணங்குகள் சீறிக் கொண்டு போவார்கள். நமக்கு ஏன் வீண் பொல்லாப்பு.

ஆக அந்த வகையில் ஒரு பிரதமர் தன் விரல் அசைவில் எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும்.

ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். துன் மகாதீர் அவர்களிடம் எந்த ஓர் அதிகாரமும் இல்லை. அதாவது தேர்தல் நடக்கும் போதும் சரி; தேர்தல் முடிவுகள் வந்த பிறகும் சரி; அவரிடம் ஒரு துளி அதிகாரமும் இல்லை. அவர் அப்போது ஒரு பேசாமடந்தை.

ஆக எதுவுமே இல்லாமல் துன் மகாதீர் சாத்தியப் படுத்தி சரித்திரம் படைத்து இருக்கிறாரே. மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் அழகாக அமைதியாக ஆட்சியை மாற்றி இருக்கிறாரே. அங்கேதான் பிரதமர் மகாதீர் நிற்கிறார்.

நாட்டில் ஒரு கலவரம் இல்லை. ஒரு சண்டை இல்லை. ஒரு சச்சரவு இல்லை. ஒரு பதற்றம் இல்லை. ஆங்காங்கே சின்னச் சின்ன அரசல் புரசல்கள் இருந்தன. அவை எல்லாம் எரிகிற வீட்டில் பிடுங்கிக் கொண்டு ஓடிய சில்லறைகளின் சில்மிசங்கள். என்ன செய்வது. தெருநாய்களுடன் சேர்ந்து கொண்ட சில வேட்டை நாய்களுக்கு மட்டுமே கெட்ட பெயர்.

சரி. மகாதீர் எப்படி இந்த மாதிரி இத்தனை லாவகமாக இத்தனை அற்புதமாக ஆட்சியை மாற்ற முடிந்தது. இங்கே தான் கிளைமக்ஸ் வருகிறது. அந்த உச்சம் என்ன தெரியுங்களா. அவர் நாட்டு மக்களுக்கு விடுமுறை கொடுத்தாரே அங்கேதான் எல்லா ரகசியங்களும் தொக்கி நிற்கின்றன.

இன்னும் ஒரு விசயம். மகாதீர் மிக மிக கண்டிப்பானவர். அவர் ஆட்சி செய்யும் போது லீவு என்பதே ஒரு குதிரைக் கொம்பு. அவரிடம் அப்படி ஒன்றும் சுலபமாக விடுமுறை வாங்கிவிட முடியாது.

இதைப் பற்றி கோலாலம்பூர் அரசியல் பார்வையாளர் ஊடக விமர்சகர் மதியழகன் என்ன சொல்கிறார் என்பதை நீங்களும் கேளுங்கள்.

‘எனக்கு தெரிஞ்சி அவர் கடைசியா கொடுத்த லீவு வந்து…. 1989 ‘சீ’ கேம்ஸ்ல நம்ப நாடு ஜெயிச்சு முதலாவதா வந்தப்ப லீவு கொடுத்தாரு. காமன்வெல்த் கேம்ஸ்லகூட அவரு லீவு கொடுக்கல. 2002இல் புகைமூட்டம் வந்தபோதுகூட அவரு லீவு கொடுக்கல. எதுக்கு உங்களுக்கு லீவு. போய் படிங்கனு சொன்னாரு.

அந்த மாதிரி அந்த மனுசன் லீவே கொடுக்க மாட்டாரு. தேர்தல் முடிஞ்ச மறுநாள் லீவு லீவுனு பக்காத்தான்காரங்க சொல்லிகிட்டு இருந்தாங்க. மகாதீர் வாயை திறக்கவே இல்லை. தேர்தல் வேட்பு மனுதாக்கல் செய்த பிறகு தான் நான் ரெண்டு நாள் லீவு கொடுக்கிறேனு சொன்னாரு. எனக்கு லீவு கொடுக்கப் பிடிக்காது என்றும் சொன்னாரு. இருந்தாலும் பரவாயில்ல எல்லாரும் லீவுல போயிட்டு வாங்க. ஏன் அப்படி சொன்னார்’ என்று மதியழகன் தொடர்கிறார்.

தேர்தல் முடிந்த மறுநாள் வியாழக் கிழமை. அதற்கும் மறுநாள் வெள்ளிக் கிழமை. இந்த வெள்ளிக் கிழமையில் கிளந்தான், திரங்கானு, கெடா, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் வார விடுமுறை. அரசாங்க அலுவலகங்கள் இயங்கா. ஞாயிற்றுக் கிழமை வந்ததும் வேலைக்குச் சென்று விடுவார்கள். ஞாயிற்றுக் கிழமை அவர்களுக்கு வேலை நாள்.

ஆனால் இதர மாநிலங்களில் வியாழக் கிழமை; வெள்ளிக் கிழமைகளில் அரசாங்க நிறுவனங்கள், அரசாங்க அலுவலகங்கள் இயங்கும். அதாவது புத்ராஜெயாவில் உள்ள அனைத்து அமைச்சரகங்களும் இயங்கும். 

அந்த வகையில் அட்டர்னி ஜெனரல் அலுவலகமும் இயங்கும். எல்லா அரசாங்க அலுவலகங்களும் வெள்ளிக்கிழமை இயங்க வேண்டும். எல்லா அரசாங்க அதிகாரிகளும் புத்ராஜெயாவில் இருப்பார்கள்.

ஆக மகாதீர் இப்படி நினைத்தார். அதாவது தேர்தல் முடிந்த மறுநாள் வியாழக் கிழமை. அதற்கும் மறுநாள் வெள்ளிக் கிழமை. அந்த நாட்களில் விடுமுறை கொடுத்தால் எல்லா அரசாங்க அதிகாரிகளும் சொந்த ஊர்களுக்குப் போய் விடுவார்கள். 

இன்னும் விளக்கமாகச் சொல்லலாம். புத்ரா ஜெயாவில் பணிபுரிபவர்களில் பெரும்பாலோர் ஏறக்குறைய 80% பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

ஆக அந்த விடுமுறை நாட்களில் எவரும் புத்ரஜெயாவில் இருக்கப் போவது இல்லை. ஆக புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய ஐந்து நாட்களும் விடுமுறை நாட்களாகி விடும்.

அந்த நாட்களில் அரசாங்க வேலைகள் எதுவும் நடக்காது. அதாவது மத்திய அரசாங்கத்தில் எந்த வேலையும் நடக்காது. அந்த வகையில் எந்த அரசாங்க அதிகாரியும் எந்த கட்டளையையும் போட முடியாது.

கம்பத்துக்குப் போனவர்கள் ஐந்து நாட்களுக்குத் திரும்பி வரப்போவதும் இல்லை. ஆக புதராஜெயாவில் பிரச்சினை பண்ண எவரும் இருக்கப் போவதும் இல்லை. சரி. அப்படித் தான் மகா மகாதீர் காய்களை நகர்த்தி இருக்கிறார்.

வியாழக்கிழமை 10-ஆம் தேதி இரவு 9.30க்கு பிரதமர் பதவியை மகாதீர் ஏற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்ற அடுத்த நிமிடமே புத்ராஜெயாவில் இருந்த எல்லா சாலைகளும் மூடப்பட்டன. அது தெரியுமா உங்களுக்கு. அங்கே இருந்த எந்த ஓர் அரசாங்க அலுவலகத்திற்குள் யாரும் போக முடியாது; ஒரு காக்கா குஞ்சு போக முடியாத அளவிற்குத் தடுப்புகள் போடப் பட்டன.

புத்ராஜெயாவிற்குப் போகும் சாலைகளை மூடச் சொல்லும் போது மகாதீர் புத்ராஜெயாவில் இல்லை. அப்போது அவர் யாயாசான் பெர்தானா மந்திரி அலுவலகத்தில் இருந்தார்.

இன்னும் ஒரு விசயம். இந்தக் கட்டுரையை எழுதும் போது புதன்கிழமை 16.05.2018 பிற்பகல் மணி நான்கு. இந்த நேரம் வரையிலும் பிரதமர் மகாதீர் புத்ராஜெயாவில் இருக்கும் தன் பிரதமர் அமைச்சகத்திற்குப் போகவில்லை.

புருணை சுல்தான் மலேசியாவுக்கு வந்த போதுகூட மகாதீர் அவரை யாயாசான் பெர்தானா மந்திரி அலுவலகத்தில் தான் சந்தித்துப் பேசினார். பிரதமர் அமைச்சகத்தில் அல்ல. இந்த விசயம் எத்தனைப் பேருக்குத் தெரியும்.

இந்தக் கட்டுரையை இன்றைய தமிழ் மலர் நாளிதழில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

(கட்டுரை எழுதுவதற்குத் தகவல்களை வழங்கி உதவிகள் செய்த கோலாலம்பூர் மதியழகன் அவர்களுக்கு நன்றிகள்.)


 பின்னூட்டங்கள்

Magendran Rajendran அருமை ஐயா. அரசியலை ஆய்வு செய்து எழுதுவது மிகவும் கடினமான ஒன்று. நடுநிலையான மன நிலையில் அலச வேண்டும். என் காலம் முடிந்து தான் புதிய ஆட்சி மலரும் என்று நான் நினைத்து இருக்கிறேன். 

ஆனால் என் காலத்திலேயே அது நடந்து விட்டது.மகாதீர் எனும் அரசியல் வித்தகர் தான் இதற்கு சூத்திரதாரி.10 வயதில் Pantai Dalam Kuala Lumpur இல் தான் அவரின் முதல் அரசியல் உரையை கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது. புரிந்தும் புரியாமல் அவர் எனக்குள் ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தி விட்டார்.

Mu Ta Neelavaanan Muthuvelu 1969 ல் வாழ்ந்த மக்களின் மன நிலையும், இன்றைய மலேசியர்களின் மன நிலையும் மாறியிருப்பதை அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்று. 1969 இன அடிப்படையிலான எதிர் கட்சி அரசியல் மேலோங்கி இருந்தது !

2018 மலேசியர் என்ற உணர்வு மேலோங்கி இருப்பதால் ,,, மே 13. மீண்டும் தலை தூக்க வாய்ப்பு மிக குறைவே !


அதைவிடுங்கள் ஐயா !


" ரம்பா, சம்பா,சம்பா சாராப் " சொல்லாடல் என்னை வெகுவாக கவர்ந்தது.


Gunasegar Manickam வாழ்த்துக்கள் நண்பரே.....தங்கள் பதிவு சிறப்பு, அருமை மற்றும் இளைய சமுதாயத்திற்கு தகவல் பெரும் நன்மையாக இருக்கும்.....மீண்டும் வாழ்த்துக்கள் ஐயா.....

Thanga Raju அரசியல் ஆய்வு பகிர்வு நல்ல முதிர்ச்சியடைந்த ஆசிரியர் என்று நினைக்க தோன்றுகிறது சபாஸ் வாழ்த்துகள்
 
Sathya Raman துன் அவர்கள் பழுத்த அரசியல் சாணக்கியர் என்றாலும்கூட கடந்தகால தவறுகளை திருத்திக்கொள்வதற்கு மீண்டும் கிடைத்த இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி மலேசிய மக்களிடையே பிரித்தாளும் போக்கை நீக்கி இனம் ,சமயம் காத்திட துணைபுரிய வேண்டும். 

மீண்டும் பிரதமர் பணி மேற்கொண்டததிலிருந்து ஓய்வு ,சரியான தூக்கமின்றி இந்த வயதிலும் ஒரு இளைஞனைப்போன்று பம்பரமாய் இறங்கி வேலை செய்யும் துன் மகாதீர் அவர்களின் வருகை காலத்தின் கட்டாயம் என்றால் இவற்றை எல்லாம் நிர்ணயிப்பது மேலே இருந்து ஒருத்தர் என்பது மட்டும் புரிகிறது.

Sathya Raman சிறந்த நல்ல ஆய்வு தகவல் சார். வழக்கம்போல தங்களின் எழுத்துநடைக்கு மனம் மயங்கவேச்செய்கிறது.நன்றி சார்.

Sama Sivam Sama Sivam கட்டுரையை முழுமையாக
வாசிக்க தங்களின்
மின்னஞ்சல் முகவரியை
தரும்படி தாழ்மையுடன்
வேண்டுகிறேன நன்றி!
ஆ.சா.சிவம்
ஈப்போ
 


Parimala Muniyandy உங்களின் அரசியல் கண்ணோட்டம் அருமை ஐயா.வாழ்த்துகள்.👍👏

 நீல மேகன் · Friends with Dato' Muneandy 
அபாரம் ....... அருமையான விளக்கம் . எனக்கு மகாதீருக்கு ஆதரவு தர முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் கடைசி 5 நாட்களில் அவருடைய பிரசாரம் நல்ல பலன் அளித்தது.வெற்றியும் பெற்றார் . வாழ்த்துக்கள் .



Edward Gana ·
சுப்ரா தூங்கி விட்டார். இவர்கள் சாதித்து விட்டார்கள்.