பினாங்கு தமிழர்கள் - 1867 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பினாங்கு தமிழர்கள் - 1867 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 மே 2020

பினாங்கு தமிழர்கள் - 1867

1786-ஆம் ஆண்டில் பினாங்குத் தீவில் பிரான்சிஸ் லைட் (Francis Light), ஜார்ஜ் டவுன் நகரை உருவாக்கினார். அந்த நகரை விரிவாக்கம் செய்வதற்கும் மேம்பாட்டுக் கட்டுமானங்களை உருவாக்குவதற்கும் வேலையாட்கள் தேவைப் பட்டார்கள்.

அந்த வகையில் உள்ளூர் பூர்வீக குடிமக்கள்; சீனர்கள்; ஜாவானியர்கள் போன்றவர்களுடன் தமிழர்களும் மேம்பாட்டுத் திட்டங்களில் ஈடுபடுத்தப் பட்டார்கள். பினாங்குத் தீவு குறுகிய காலத்திலேயே வளர்ச்சி கண்டது. 



The Rev. Habb preaching to the South Indians in Penang

1780-ஆம் ஆண்டுகளிலேயே தமிழர்கள் பினாங்குத் தீவிற்கு வந்து விட்டார்கள். ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 1000 தமிழர்கள் வந்து இருக்கலாம். அதற்கான சான்றுகள் உள்ளன.

இந்தக் கட்டத்தில் தான் சின்ன மருதுவின் கடைசி மகன் துரைச்சாமி பினாங்கிற்கு நாடு கடத்தப் பட்டார். அப்போது துரைச்சாமிக்கு வயது 15. நாடு கடத்தப் பட்ட ஆண்டு 1818.

இவருடன் தமிழ் நாடு கண்ட முஸ்லீம் மாவீரர் ஷெயிக் உசேன் என்பவரும் நாடு கடத்தப் பட்டார். இச்சப்பட்டி அமில்தார் ஷெயிக் உசேன் என்றும் அழைக்கப் பட்டவர். மருது பாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் முதன்மைத் தளபதி.

பாஞ்சாலங் குறிச்சியில் கட்டபொம்மனைத் தூக்கில் போட்டவர் மேஜர் பேனர்மேன் (John Alexander Bannerman). அவர் பினாங்குத் தீவில் ஒரு மாதாகோயிலைக் கட்டிக் கொண்டு இருந்தார் (St George's Church). 



Kristen Feilberg

1814-ஆம் ஆண்டு நடந்தது. அந்த மாதா கோயிலில் தான் துரைச்சாமியும் ஷெயிக் உசேனும் சிறைக்கைதிகளாக வேலை செய்தார்கள்.

(K Rajayyan, South Indian Rebellion: The First War of Independence 1800-1801)

இந்தக் கட்டத்தில் பினாங்கில் தமிழர்கள் பற்பல மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அதே சமயத்தில் கரை தாண்டி வந்த தமிழர்களிடம் கிறிஸ்தவ மதப் போதனைகளும் நடைபெற்றன. அவர்கள் மதமாற்றம் செய்யப் பட்டார்களா எனும் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

1869-ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் அல்பிரட் (Prince Alfred Duke of Edinburgh) பினாங்கிற்கு வருகை புரிந்தார். அவர் வருகை புரிந்த கப்பலின் பெயர் கெலாத்தியா (HMS Galatea). 



Tomb of John Alexander Bannerman in Penang's Protestant Cemetery
 
அப்போது திறந்த வெளியில் பினாங்குத் தமிழர்களுக்குச் மதப் பிரசாரம் செய்யப் படுவதை இளவரசர் கண்டு களித்தார். அந்த மதப் பிரசாரத்தை மத போதகர் ஹப் (Rev. Habb) என்பவர் நடத்தினார்.

அப்போது 1867-ஆண்டில் ஒரு படம் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தை எடுத்தவர் கிரிஸ்டன் பெயில்பர்க் (Kristen Feilberg). டென்மார்க்கைச் சேர்ந்தவர். மலாயா, சுமத்திரா, போர்னியோ, இலங்கை போன்ற இடங்களுக்குச் சென்று நிறையவே படங்களை எடுத்து இருக்கிறார். அவர் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் காலத்தால் கதைகள் சொல்லும் அரிய ஓவியங்கள்.

(This Photograph is part of the Archaeological Survey of India Collection and was exhibited in the 1867 Paris Exhibition.)

அதே ஆண்டில் பிரான்ஸ், பாரிஸ் நகரில் நடைபெற்ற கண்காட்சியிலும் இந்தப் படம் காட்சிப் படுத்தப் பட்டது.



1867 Paris Exhibition
 
தமிழர்கள் 1800-ஆம் ஆண்டுகளிலேயே பினாங்கிற்கு வந்து பினாங்கின் உள்ளமைப்பு (infra-structure); கட்டுமான நிர்மாணிப்புகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதற்கான சான்றுகள் நிறையவே உள்ளன. ஒவ்வொன்றாக அடையாளப் படுத்தி அறிமுகம் செய்வோம்.

இந்தியர்கள் 1930-ஆம் ஆண்டு தான் மலாயாவுக்கு வந்தார்கள் என்று எவராவது சொல்லலாம். சொல்லிவிட்டுப் போகட்டும். அப்படிச் சொன்னவர் உண்மையிலேயே வரலாற்றை வாசிக்காத வறட்சிப் பாலைவனமாக இருக்கலாம்.

மலேசிய இந்தியர்களின் வரலாற்றை மீட்டு எடுப்போம். கிணற்றுத் தவளைகளாக வாழும் மண்ணின் மாந்தர்களுக்குச் சொல்லித் தருவோம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
25.05.2020

Sources and References:

1. Photograph: Danish photographer Kristen Feilberg (1867)

2. Exhibited in the 1867 Paris Exhibition

3. History of Churches in Malaysia and Singapore (1511-2000). Penang: Fr. P. Decroix MEP, 2005.

4. Khoo Salma Nasution, More than merchants: a history of the German-speaking community in Penang, 1800s-1940s, Areca Books, 2006

5. British Library - http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocoll/t/019pho001000s42u04336000.html