பத்து காஜா மர்ம மாளிகை - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்து காஜா மர்ம மாளிகை - 1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 ஏப்ரல் 2020

பத்து காஜா மர்ம மாளிகை - 1

கொரோனா அச்சுறுத்தல்கள்... லாக் டவுன் பரபரப்புகள்... ஊடகத் திணறல்கள்... சொந்த பந்தங்களின் விஷமங்கள்... குடும்பத்தின் அலப்பறைகள்... கொஞ்ச நஞ்சமாய் இருந்தால் பரவாயில்லை... வாழ்க்கையின் எல்லைக்கே ஓட வேண்டிய காலக் கட்டம்... ஆக இத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் திரிலிங் வேண்டுமே...
 
கெல்லிஸ் மாளிகையின் கம்பீரத் தோற்றம்

மற்றும் ஒரு மர்ம மாளிகையின் பயமுறுத்தல் வருகிறது. பத்து காஜா மர்ம மாளிகையின் மாய ஜாலங்கள். படியுங்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த மர்ம மாளிகை. பின்னர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மறுபடியும் பார்த்த நினைவுகள்.

 

சுற்றிலும் சின்ன பெரிய செம்பனைத் தோட்டங்கள். பக்கத்தில் இன்றைக்கோ நாளைக்கோ என்று ஒரு பழைய பாலம். அங்கே ஒரு நூறு ஆண்டுகாலம் மாயஜாலம் காட்டி வரும் மர்ம மாளிகை. விசாலமான ஆனால் விசித்திரமான மாளிகை. வர்ண ஜாலங்கள் காட்டும் ஓர் இரகசிய மாளிகை.

சுற்றிலும் தடுமாறி நிற்கும் சில உயரமான காட்டு மரங்கள். அந்த மரங்களில் தாவிச் செல்லும் குறும்புக்காரக் குரங்குகள்... மழைக்கு ஏங்கி நிற்கும் இரட்டைவால் கரிச்சான் குருவிகள்...

தூங்கி வழியாத தூக்கணாங் குருவிகள்... மின்னிப் போகும் மீன் கொத்திகள்... வெள்ளைக் கருப்பு பச்சைப் புறாக்கள்... உசிலம்பட்டி ஊர்க்குருவிகள்... மிரண்டு பார்க்கும் உருண்டைக் கண் ஆந்தைகள். 

கிந்தா கிளாஸ் பகுதியில் தமிழர்களின் சில இல்லங்களில்
வில்லியம் கெல்லிஸுக்கு மாலை மரியாதை செய்கிறார்கள்

அப்படியே இரண்டு மூன்று பழம்தின்னி வௌவால்கள்; சுவர்த் தூண்களில் ஓடி ஒளியும் ஒல்லிப்பிச்சான் பல்லிகள்; பாம்பு மாதிரியும் இல்லாமல் பல்லி மாதிரியும் இல்லாமல் இரண்டும் கலந்த பாம்பு அரணைகள்... சிவப்புக் கலரில் மஞ்சள் ஓணான்கள்.

கூடவே நாலு கால் பாய்ச்சலில் எட்டுகால் பூச்சிகள். ஊர்ந்து போகும் கருங்கால் அட்டைகள். யாரையும் எதுவும் செய்யாத அப்பாவிச் சிலந்திப் பூச்சிகள்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த பறப்பன ஊர்வன. இப்போது அவற்றின் பேரன் பேத்திகளைத் தேடிப் பார்க்கிறேன்.

அந்தக் காலத்து விஜயாலயச் சோழ மன்னரின் தஞ்சை அரண்மனைகள் நினைவில் வந்து போகின்றன. மாளிகைக்குப் பக்கத்திலேயே அழகிய அம்சமான மாரியம்மன் கோயில். அந்த மர்ம மாளிகைக்கும் அந்தக் கோயிலுக்கும் அடியிலே ஒரு பாதாளச் சுரங்கப் பாதை.


இருந்தாலும் மாளிகையைப் பார்க்க வருபவர்கள் மாளிகையைக் கண்டு கொஞ்சம் லேசாகவே பயப் படுகிறார்கள். அந்த மாளிகைதான் பத்து காஜா கெல்லிஸ் காசல் மர்ம மாளிகை. பக்கத்தில் ஓர் ஆறு சலசலத்து ஓடுகிறது. மிக அமைதியானச் சூழல்.

இப்போதைய நாளில் மாளிகையின் உள்ளேயும் வெளியேயும் பெரிய பரபரப்பு எதுவும் அதிகமாக இல்லை. பறப்பன ஊர்வன தான் கொஞ்சம் லேசாய் கதகளி, பிரேக் டான்ஸ்கள் ஆடுகின்றன.

மற்றபடி மக்கள் கூட்டம் அதிகமாகவும் இல்லை. காக்காய்க் குஞ்சுகளுக்கே பஞ்சம் வந்துவிட்டது போல ஒரு மாயைச் சூழல்.

பல்லவ மன்னர்கள் கட்டிய அரண்மனையைப் போன்ற கட்டமைப்பு. அந்த அமைப்பில் தானே சோழக் கட்டிட அமைப்புகளும் வருகின்றன.


இதை ஒரு மர்ம மாளிகை என்று சொன்னால் தப்பு இல்லை. ஒரு பெரிய மர்ம வரலாற்றையே பின்னணியாய்த் தாங்கி நிற்கின்றது. அதைப் பற்றித் தான் சொல்லப் போகிறேன்.

அதிர்ச்சியான உண்மைகள் தெரிய வரும். பிறகு அந்தக் கோட்டையைக் கட்டியவரைப் பற்றி தெரிந்து கொள்வோம். பின்னர் அன்னாரின் ஆத்மா அமைதி பெற மரியாதை செய்வோம். இது நான்கு பகுதிகளைக் கொண்ட கட்டுரைத் தொடர்.

இந்த நேரத்தில் நிபோங் திபால் மர்ம மாளிகை ஞாபகம் வருகிறது. அந்த மாளிகையிலும் ஆவிகள் உலவுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஆசைகள் நிறைவேறாத ஆன்மாக்கள் நிம்மதி அடைவது இல்லையாம்.

அப்படி ஒரு நம்பிக்கை. பாழடைந்த மாளிகைகளில் பாழடைந்த ஜீவன்கள் சிறு சிறுச் சேட்டைகளைச் செய்து கொண்டு காலம் தள்ளிக் கொண்டு இருக்கலாம். அப்படி ஒரு காலா காலத்து ஐதீகம். மனித நம்பிக்கைகளில் அப்படிப்பட்ட ஐதீகங்கள் இன்றும் சலனங்களை ஏற்படுத்தி வருகின்றன. எனக்கும் அப்படித்தான்.

 
வில்லியம் கெல்லிஸ் கட்டிக் கொடுத்த மாரியம்மன் கோயில்

கெல்லிஸ் காசல் மர்ம மாளிகையைப் போல பல மாளிகைகள் மலேசியாவில் இருக்கின்றன.

கோலாபிலா மர்ம மாளிகை,

திரங்கானு இஸ்தானா மாசியா,

பங்கோர் தீவு மர்மக் கோட்டை,

சரவாக் சார்ல்ஸ் புரூக் அஸ்தானா மாளிகை,

ஜொகூர் பாசிர் பெலாங்கி மர்ம மாளிகை,

ஜொகூர் நபாலியா பேய் மாளிகை,

மலாக்கா டச்சுக் கோட்டை.


இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பத்துகாஜா மர்ம மாளிகையை பார்த்தவர்கள் அப்பாடா… இப்படியும் ஒரு மாளிகையா என்று ஆச்சரியப் படுவார்கள். நிச்சயமாக... போய்ப் பாருங்கள்.

உயிருக்கு உயிராய் நேசித்த ஒருவருக்காக நினைவு சின்னங்கள் எழுப்பப் படுவது வரலாறு பார்த்த நிஜங்கள். வழக்கத்தில் வந்து போகும் கடந்த காலத்தின் சொப்பனங்கள். 

 
வில்லியம் கெல்லிஸ்... அவருடைய மனைவி

நினைவுச் சின்னங்கள் யாருக்காகவும் கட்டப் படலாம். பாசமான அம்மாவுக்காக இருக்கலாம். அன்பான அப்பாவுக்காக இருக்கலாம்.  காணாமல் போன காதலனுக்காக இருக்கலாம்.
அல்லது  கடன் கேட்கும்  காதலிக்காகவும் இருக்கலாம். வேண்டாமே... அந்தப் பட்டியல். நீண்டு கொண்டே போகும்.

உலகில் ஓர் அற்புதமான நினைவுச் சின்னம் என்றால் அது தாஜ்மகால் தான். முதல் இடத்தில் அசைக்க முடியாத ஓர் அழகு ஓவியம். அதற்கு இணையாக வேறு ஒரு மாளிகை இருப்பதாகத் தெரியவில்லை.

அந்த வரிசையில் ஆசை மனைவிக்காகக் கட்டப் பட்டதுதான் பத்துகாஜா கெல்லிஸ் மாளிகை. இன்றைக்கும் இந்த மாளிகை சுற்றுலா பயணிகளைத் திகைக்க வைக்கும் ஒரு மாளிகையாகத் திகழ்கின்றது.

கெல்லிஸ் காசல் என்று மறுபடியும் சொல்லிப் பாருங்கள். அப்படியே அசை போட்டுக் கொள்ளுங்கள்.
கோயிலில் வில்லியம் கெல்லிஸ் சிலை வடிவம்

கெல்லிஸ் மாளிகையின் மர்மங்கள் தான் என்றைக்கும் நினைவுக்கு வருகின்றன. யாருக்காக அந்த மாளிகை கட்டப் பட்டதோ அவர்களின் ஆவிகள் இன்னும் உலவி வருவதாக பலர் நம்புகின்றனர்.

மாளிகையின் இரண்டாவது மாடியில் அருவங்களையும் உருவங்களையும் பார்த்து இருப்பதாகச் சொல்கிறார்கள். இரண்டாவது மாடியில் இருந்து முதல் மாடிக்கு வெள்ளை உருவங்கள் வந்து போவதையும் பலர் பார்த்து இருக்கிறார்கள்.

அதே இரண்டாவது மாடியில் இருந்து வெள்ளை நிறக் கொசுவலைகள் பறந்து போவதையும் பலர் பலமுறை பார்த்து இருக்கிறார்கள். அது பேயா பிசாசா அல்லது வெள்ளைச் சாத்தானா தெரியவில்லை. அதைப் பற்றி பிறகு பார்ப்போம்.

இங்கிலாந்தை விக்டோரியா மகாராணியார் ஆட்சி செய்த போது (1837-1901), மலாயாவில் இந்தக் கோட்டை கட்டப் பட்டது. கெல்லிஸ் காசல் கோட்டை என்று அழைக்கிறார்கள்.

(சான்று: Tak Ming, Ho (2005). Generations - The story of Batu Gajah. MPH)

கெல்லிஸ் மாளிகை கட்டி முடிக்கப்பட்டு இருந்தால்...

பத்துகாஜா நகரில் இருந்து கோப்பேங் நகருக்குப் போகும் பாதையில் அந்த மாளிகை மிகக் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. ஈப்போவில் இருந்து 20 நிமிட நேர ஓட்டத்தில் பிடித்து விடலாம்.

இந்தக் கெல்லிஸ் கோட்டை முற்றாக முற்றுப் பெறாத கோட்டையாகும். அதாவது முற்றாக முழுமைப் பெறவில்லை. பாதிலேயே கைவிடப் பட்டது. வெகு காலமாகப் பாழடைந்து போய் கிடந்தது.

அண்மையில் தான் புதுப்பிக்கப் பட்டது. ஒரு சுற்றுலா மையமாகவும் மாற்றம் கண்டுள்ளது. ஆனால் என்ன... மையத்தில் இப்போது சில பல கடைகள். வணிகத் தளமாக மாறி வருகிறது. சாலை ஓரங்களிலும் நிறையவே கடைகள். வில்லியம் கெல்லிஸுக்குச் செய்தி போய் இருந்தால் வேதனை படுவார். 

வில்லியம் கெல்லிஸ் ஸ்மித் (William Kellie Smith)
கெல்லிஸ் காசலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற போதே வில்லியம் கெல்லிஸ் இறந்து விட்டார். அந்தக் கோட்டையைப் பிழிய பிழிய ரசித்துக் கட்டிய அந்த மனிதர் இறந்ததும் கோட்டை கட்டும் பணிகளும் அப்படி அப்படியே நின்று விட்டன.

வில்லியம் கெல்லிஸ் ஸ்மித் (William Kellie Smith) அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

மலேசியாவில் முதன்முதலாக தன் சொந்தப் பணத்தைப் போட்டு ஓர் இந்து ஆலயத்தை மலேசியாவில் உருவாக்கிய ஓர் ஆங்கிலேயர் இருகிறார் என்றால் அவர்தான் இந்த வில்லியம் கெல்லிஸ் ஸ்மித். இந்த விசயம் மலேசிய இந்தியர்கள் பலருக்கும் தெரியாது.


வில்லியம் கெல்லிஸ் ஸ்மித், ஒரு தமிழ்ப் பள்ளியையும் உருவாக்கி இருக்கிறார். பத்து காஜா கிந்தா கெலாஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி. அந்த வகையில் மலேசியத் தமிழர்களின் வரலாற்றிலும் தடம் பதிக்கின்றார். அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது நம் கடமையாகும்.

பத்து காஜா மர்ம மாளிகையை உருவாக்கிய வில்லியம் கெல்லிஸ் ஸ்மித் 1870 மார்ச் மாதம் முதல் தேதி ஸ்காட்லாந்து மோரே பிர்த் டாலாஸில் (Kellas, Scotland) பிறந்தவர். ஐந்து பேர் அடங்கிய குடும்பத்தில் மூன்றாவதாகப் பிறந்தவர்.

அவருக்கு இருபது வயதாக இருக்கும் போது ஒரு சிவில் பொறியியலாளராக மலாயாவுக்கு வந்தார். அப்போது மலாயா ஆங்கிலேயர்களின் காலனி ஆட்சியில் இருந்தது. ரப்பர் தோட்டங்கள் உருவாகிக் கொண்டு இருந்த காலக் கட்டம். 


வில்லியம் கெல்லிஸ் ஸ்மித் மலாயாவுக்கு வந்த போது கிந்தா பள்ளத்தாக்கில் பெரும் அளவில் ஈயம் தோண்டி எடுக்கப்பட்டு வந்தது. உலகத்திலேயே அதிகமான அளவுக்கு ஈயத்தையும் உற்பத்தி செய்தது. வரலாறும் சொல்கிறது.

அந்தச் சமயத்தில் பத்து காஜா நகரம் செல்வச் செழிப்புடன் சிறப்புப் பெற்று விளங்கியது என்று தாராளமாகச் சொல்லலாம்.

அப்போது இங்கிலாந்தில் இருந்து வெள்ளைக்காரர்கள் அதிகமானோர் கிந்தா பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கு வந்தார்கள். அவர்களிடம் காலனி அரசாங்கம் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொண்டது.

ஈப்போவில் சார்ல்ஸ் அல்மா பேக்கர் (Charles Alma Baker) எனும் ஒரு செல்வந்தர் இருந்தார். இவர் 1857-ஆம் ஆண்டு நியூஸிலாந்து ஒத்தாகோ எனும் இடத்தில் பிறந்தவர். 


நியூஸிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த சர் பிரடெரிக் வொயிட்வாக்கர் (Sir Frederick Whittaker) என்பவரின் கடைசி மகள் புலோரன்ஸ் இசபல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டவர். 1890-இல் வேலை தேடி இந்தியாவிற்குப் பயணம் செய்தார்.

ஆஸ்திரேலியாவில் கப்பல் ஏறினார். சிங்கப்பூரில் தரை இறங்கும் போது, இந்தியாவிற்குப் போகும் கப்பல் அவரை விட்டுச் சென்று விட்டது.

வேறு வழி இல்லாமல் சிங்கப்பூரில் அடைக்கலம் ஆனார். பின்னர் பத்து காஜாவிற்கு வந்தார்.

(சான்று: https://thriftytraveller.wordpress.com/2012/04/19/charles-alma-bakers-mansion/ - They missed their next ship from Singapore)


1890-ஆம் ஆண்டுகளில் பேராக் மாநிலத்தின் பிரிட்டிஷ் ஆளுநராக பிராங்க் சுவெட்டன்ஹாம் (Sir Frank Athelstane Swettenham) இருந்தார். அவருடைய நட்பைப் பெற்று சாலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

சார்ல்ஸ் அல்மா பேக்கர்தான் பத்து காஜா – ஈப்போ சாலையைச் செப்பனிட்டுக் கொடுத்த முதல் மனிதர் ஆகும்.

ஒரு கட்டத்தில் அல்மா பேக்கருக்குப் பேராக் அரசாங்கத்திடம் இருந்து ஒரு பெரிய குத்தகை கிடைத்தது. பத்து காஜாவுக்கு அருகில் 9000 ஹெக்டர் காடுகளை அழிக்கும் குத்தகை.

இந்தக் குத்தகையின் மூலமாக அல்மா பேக்கர் விரைவில் ஒரு பெரிய பணக்காரர் ஆனார்.

இவருக்குத் துணையாக வந்தவர்தான் வில்லியம் கெல்லிஸ் ஸ்மித். அவருடன் கட்டுமானத் துறையில் ஈடுபட்டு வில்லியம் கெல்லிஸ் ஸ்மித்தும் ஒரு குட்டிப் பணக்காரர் ஆனார். 


இருவருக்கும் ஒரு சின்ன மனத் தாங்கல். அதனால் பின்னர் காலத்தில் வில்லியம் கெல்லிஸ் ஸ்மித் தனியாகவே பயணிக்கத் தொடங்கினார்.

ஒரு சில ஆண்டுகளில்
கெல்லிஸ் ஸ்மித்திற்கு ஏ.ஜி. மெக்கி என்பவரின் நட்பு கிடைத்தது. 1894-ஆம் ஆண்டு பத்து காஜா - கோப்பேங் சாலையை வில்லியம் கெல்லிஸ் ஸ்மித் உருவாக்கிக் கொடுத்தார்.

ஆக ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். கெல்லிஸ் மாளிகையைக் கட்டிய அதே வில்லியம் கெல்லிஸ் ஸ்மித் தான் பத்து காஜா - கோப்பேங் சாலையையும் நிர்மாணித்துக் கொடுத்து இருக்கிறார்.

அப்போது எல்லாம் தார் சாலைகள் எதுவும் கிடையாது. சாதாரண மாட்டு வண்டிகள் போகும் மண்சடக்குப் பாதைகள் தான்.

1993-ஆம் ஆண்டு வரை அந்தப் பழைய பத்து காஜா - கோப்பேங் செம்மண் சாலை பயன்பாட்டில் இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


கோப்பேங்கில் இருந்து சில கி.மீ. தொலைவில் கோத்தாபாரு சிற்றூர் இருக்கிறது. அந்தச் சிற்றூருக்குப் போகும் பாதையை அமைத்துக் கொடுத்தவரும் இந்த வில்லியம் கெல்லிஸ் ஸ்மித் தான். அந்த மாட்டு வண்டிப் பாதை இப்போது தார் சடக்காக இருக்கிறது.

வில்லியம் கெல்லிஸ் ஸ்மித்,
அடுத்து 1896-ஆம் ஆண்டு மெங்லெம்புவில் (Menglembu) ஒரு சுண்ணாம்புக் கல்பாறைச் சுரங்கத்தைத் தோற்றுவித்தார். மலாயா இரயில்வே சேவைக்கு வெடிப்பு கல் தேவைப் பட்டது. அந்தக் கற்களை இவருடைய சுரங்கத்தில் இருந்து தான் அனுப்பி வைத்தார்கள்.

கெல்லிஸ் ஸ்மித் சிறு சிறு ஈயச் சுரங்கத் தொழில்களிலும் ஈடுபட்டு வந்தார். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு காலனி அரசாங்கத்திடம் இருந்து 1500 ஏக்கர் காடுகளை வாங்கினார்.

அந்தக் காடுகள் ஈப்போ கிந்தா மாவட்டத்தின் பத்துகாஜா பகுதியில் இருந்தன. அவற்றை அழித்து ஒரு ரப்பர்த் தோட்டத்தை உருவாக்கினார். அந்தத் தோட்டத்தில் காபி பயிர் செய்தார். மலாயாவில் காபி, கொக்கோ தான் முதன்முதலில் பயிர் செய்யப் பட்டன. 


1900-ஆண்டுகளில் தான் ரப்பர்த் தொழில் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அவருடைய தோட்டம் கிந்தா மாவட்டத்தில் இருந்ததால் அதற்கு கிந்தா கெலாஸ் ரப்பர்த் தோட்டம் (Kinta Kellas Estate) என்று பெயர் வைத்தார்.

ஸ்காட்லாந்தில் ஈஸ்டர் கெலாஸ் எனும் பெயரில் அவருடைய குடும்பத்திற்குச் சொந்தமாக ஒரு பண்ணை இருந்தது. அந்தப் பண்ணையின் பெயரையே இங்கேயும் கிந்தா கெலாஸ் ரப்பர்த் தோட்டத்திற்கு வைத்து விட்டார்.

அதன் பின்னர் கிந்தா கெலாஸ் ஈயச் சுரங்க நிறுவனத்தைத் தோற்றுவித்தார் (Kinta Kellas Tin Dredging Company). ஓரளவுக்குப் பணம் சம்பாதித்துக் கொண்டார்.

அரசாங்கத்திடம் இருந்து அவருக்கு கிடைத்த நிலங்களின் விவரங்கள்.

1896-இல் 538 ஏக்கர்கள்.
1897-இல் 454 ஏக்கர்கள்.
1897-இல் 527 ஏக்கர்கள்.
1898-இல் 1,500 ஏக்கர்கள்.

இதை ஏன் சொல்ல வருகிறேன். காரணங்கள் இருக்கின்றன.

எல்லாமே காடுகள். ஈயம் விளையாடிய குளம் குட்டைகள். இதில் கிந்தா கெலாஸ் தோட்டம் உருவாக்குவதற்கான 1500 ஏக்கர் நிலம் வாடகைக்கு கிடைத்தது. 


முன்பணம் எதுவும் இல்லை. மறுபடியும் சொல்கிறேன். முன்பணம் இல்லை. ஆங்கிலேயர்களுக்கு ஆங்கிலேயர்கள் செய்த உதவி. புரியும் என்று நினைக்கிறேன்.

ஓர் ஆண்டுக்கு ஓர் ஏக்கருக்கு பத்து காசு வாடகை. பத்து ஆண்டுகளுக்கு கட்ட வேண்டும். அதன் பிறகு அந்த நிலத்தின் வாடகை ஆண்டுக்கு ஐம்பது காசு என்று நிர்ணயிக்கப் பட்ட்து.

முதன்முதலில் 1898-ஆம் ஆண்டு 1500 ஏக்கரில் கிந்தா கெலாஸ் தோட்டம் உருவானது. பின்னர் 3000 ஏக்கராகப் பெரிதாக்கப் பட்டது. கிந்தா கெலாஸ் தோட்டம் இன்னும் பத்து காஜாவில் இருக்கிறது.

அடுத்த கட்டுரையில் அந்த மர்ம மாளிகையைக் கட்டிய தமிழகத் தொழிலாளர்களுக்கு எப்படி ஒரு விநோதமான மர்ம நோய் (
Spanish Flu) வந்தது. எப்படி சிலர் இறந்து போனார்கள். ஏன் ஒரு மாரியம்மன் கோயில் கட்டப் பட்டது போன்ற விவரங்கள் வருகின்றன. 

(கட்டுரையைப் படித்துவிட்டு கருத்துகளையும் சொல்ல மறக்க வேண்டாமே... இரண்டாம் பகுதியில் சந்திப்போம்.)

(தொடரும்)

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
17.04.2020

Copyright of KSMuthukrishnan
posted at https://ksmuthukrishnan.blogspot.com/


பேஸ்புக் பதிவுகள்

(பேஸ்புக் அன்பர்கள் பதிவு செய்யும் அனைத்துக் கருத்துகளும், பின்னூட்டப் பதிவுகளும் ‘புளோகர்’ வலைத் தலத்தில் பதிவு செய்யப் படுகின்றன. அந்தப் பதிவுகள் இணையத்தில் நிரந்தரமான பதிவுகளாக இடம் பெற்று இருக்கும். நன்றி.)

Prem Rani: Excellent story. Waiting eagerly for d ending sir. Keep it up

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... பயணங்களைத் தொடர்வோம்... வாழ்த்துகள்...

Balamurugan Balu: வணக்கம் ஐயா! நல்ல பதிவு செய்தமைக்கு நன்றி !

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி ஐயா... தொடர்ந்து பயணிப்போம்...

Anbarasan Shanmugam: பள்ளி படிக்கும் காலத்தில் பல முறை இங்கு வந்து விளையாடி இருக்கிறோம். எந்த வித பயமும் மர்மமும் தெரியாது. ஆனால் சற்று தொலைவில் உள்ளவர்கள் தான் ஏதோ நடமாடுவதாகப் பேசிக் கொள்வார்கள்...

நான் மலாக்கா வந்து பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை போய் பார்த்த போது அதை ஒரு சுற்றுலா தளமாக அரசு செய்துள்ளது..

Muthukrishnan Ipoh: வணக்கம்... வாழ்த்துகள்... இப்போது வணிகத் தளமாக மாறி விட்டது ஐயா...

Anbarasan Shanmugam >>> Muthukrishnan Ipoh:
உண்மைதான்..

Inbachudar Muthuchandran: நல்ல ஓர் உண்மைக் கட்டுரை... படிக்க ஆர்வமாக இருக்கிறது... தொடர்ந்து எழுதுங்கள்

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... நன்றிங்க...
Sheila Mohan








Muthukrishnan Ipoh: வணக்கம்... வாழ்த்துகள்...

Periasamy Ramasamy: மாளிகையின் மர்ம முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்த்துக் விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை இனி கூடினாலும் வியப்பில்லை. மாநில சுற்றுலா துறை நிர்வாகம் வேலியிட்டு கட்டணம் வசூலிக்காமல் இருந்தால் சரி

Maha Lingam >>> Muthukrishnan Ipoh: ஆமாம் ஐயா..

Periasamy Ramasamy >>> Muthukrishnan Ipoh: மளிகைச் சாமான் வாங்கக் கூட பிள்ளைகளைக் கூட்டிப் போறதுன்னா யோசிக்க வேண்டி உள்ளது. அதுவும் மர்ம மாளிகையை சுற்றிப் பார்க்கவா ... வேண்டவே வேண்டாம் சாமீ ....

Muthukrishnan Ipoh:
வணக்கம்... கருத்துகளுக்கு நன்றி ஐயா... பத்து காஜா கெல்லிஸ் காசலில் கட்டணம் வசூலிக்கிறார்கள். பெரியவர்களுக்கு 5 ரிங்கிட். பிள்ளைகளுக்கு 3 ரிங்கிட்.

Parimala Muniyandy: அருமை அண்ணா. மிகவும் அமைதியான நேரத்தில் அற்புதமான பதிவை படித்ததில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.

Muthukrishnan Ipoh: வணக்கம்... மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

RKumutha Rajagopal: Arumayana katturai aiya... adutha pathivukkaga... waiting.

KR Batumalai Robert அருமை. வணக்கம் வாழ்த்துக்கள் அண்ணா.

Muthukrishnan Ipoh வணக்கம்... வாழ்த்துகள்...

Krishna Ram Superb and nice sir...

Melur Manoharan "அருமையான" பதிவு ஐயா...!

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி... வாழ்த்துகள் ஐயா....

Ponni Veerappan தொடரட்டும் தங்களின் மர்மமான பயணத்தின் கட்டுரைகள்.

Don Samsa: வணக்கம் தலைவரே.. மாளிகையின் உச்சியில் 2002-ஆம் ஆண்டில் என் காதலியின் பெயரை எழுதினேன். இன்னும் இருக்கா அல்லது அழிந்து விட்டதா எனத் தெரியவில்லை. கோவிட்-19 ஒழிந்த பிறகு நிச்சயம் சென்று பார்ப்பேன். கெல்லி காசல் இரவு நேரத்தில் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.

Muthukrishnan Ipoh: உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்... பௌர்ணமி நிலவில் கெல்லிஸ் மாளிகை மிக அழகாக இருக்கும்... ஒரு நாள் இரவு அந்த வழியாகப் பத்து காஜா செல்லும் போது பார்த்து மெய் மறந்து போனேன்...

Don Samsa: அப்படியா தலைவரே..நன்றி

Arjunan Arjunankannaya காலை வணக்கம் அண்ணா.

Muthukrishnan Ipoh: வணக்கம்... வாழ்த்துகள்...

Nagamah Muruta: அருமையான பதிவு அண்ணா. அடுத்த தொடருக்காகக் காத்து இருக்கிறேன் 👌😊

Manickam Nadeson: இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் அந்த மர்ம மாளிகைக்கு சென்று வந்தேன். சிறு வயதில் கின்டா கிளாஸ் தோட்டத்தில் வசித்த ஞாபகம் வருகிறது. பதிவுக்கு மிக்க நன்றி ஐயா சார்.

Muthukrishnan Ipoh தெரிந்து இருந்தால் நானும் வந்து இருப்பேன் சார்... அப்படியே பத்து காஜா போய் இருக்கலாம்... சைவ பிரியாணி எனக்கு மிகவும் பிடிக்கும்...

Viji Nijtha அருமையான பதிவு ஐயா. அடுத்த தொடருக்காகக் காத்து இருக்கிறேன்....

Tanigajalam Kuppusamy கடந்த ஆண்டு நண்பர்களுடன் கெல்லிஸ் கோட்டையைப் போய்ப் பார்த்து வந்தேன். அந்த சுரங்கப் பாதை பற்றி கோவிலில் இருந்த ஒருவரும் கூறினார். ஆனால் நுழைவாயில் பற்றி விசாரித்த போது மழுப்பி விட்டார். உங்களுக்கு அதுபற்றி ஏதும் தகவல் கிடைத்ததா?

Muthukrishnan Ipoh கெல்லிஸ் மாளிகையில் மூன்று சுரங்கப் பாதைகள் இருந்து இருக்கின்றன. அவற்றில் ஒரு பாதை கெல்லிஸ் மாளிகையில் இருந்து மாரியம்மன் கோயிலுக்குப் போடப்பட்டு இருக்கிறது.

அந்தப் பாதையை வில்லியம் கெல்லிஸின் மனைவி பயன்படுத்தியதாகச் சொல்லப் படுகிறது. ஆனால் அந்தச் சுரங்கப் பாதையை ஜப்பானியர்கள் காலத்திலேயே மூடி விட்டதாகவும் சொல்கிறார்கள்.



2003-ஆம் ஆண்டில் கெல்லிஸ் மாளிகைக்கு முன்புறம் சாலையைச் செப்பனிடும் போது அந்தச் சுரங்கப் பாதையைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். மரத்தூண்களால் சுரங்கப் பாதை உருவாக்கப்பட்டு இருந்தது. அதைப் பற்றிய மேல் தகவல்கள் கிடைக்கவில்லை.
Maha Lingam: அற்புதம்... ஐயா. 1980-ஆண்டு நான் என் அண்ணன் (பலராமன் படவெட்டான்) அவர்கள் ஈப்போ, லகாட், பிஞ்சி தோட்டத்தில் இரப்பர் ஆலையில் துணை மானேஜராக இருந்த காலக் கட்டத்தில் கிந்தா கிலாஸ் தோட்டத்தில் எங்கள் நண்பர் குடும்பத்தைச் சந்திக்கச் சென்ற போது... மாலை மணி 6 இருக்கும்.

அந்த நண்பரின் அப்பா ’இங்கு ஒரு பழைய 100 ஆண்டுகளுக்கு மேலான ஒரு மாளிகை இருக்கு... அவரது மகனோடு போய் பார்த்து விட்டு வாங்க... ஆனால் விரைவாக திரும்பி விட வேண்டும்.. இடம் சரியில்லாத இடம்... கவனம்..’ என்றார்.

நானும் எனது தம்பி இராமக்கிருஷ்ணனுடன் மூவருமாக இரு சக்கரத்தில் தோட்டத்துச் செம்மண் சாலையில் புறப்பட்டோம்.

ஒரு 10 நிமிடப் பயணத்துக்குப் பிறகு மாளிகையின் பின் புறமாக அடர்ந்த செடிக் கொடிகளை அகற்றி ஒரு வழியாக மாளிகையின் வளாகத்தை அடைந்தோம். அந்த மாளிகை என்னை வியப்பில் ஆழ்த்தியது.

சரித்திர இடம் என்றால் எனக்கு விருப்பம்... ஆர்வம். அந்தக் காலக் கட்டத்தில் அந்த மாளிகை வெளி உலகுக்குத் தெரியாமல் அந்தத் தோட்டக் கட்டுப்பாட்டில் இருந்ததால்... எனக்கு தெரிந்து அங்கு செல்ல அந்த தோட்டப் பாதைத் தான்... பத்து காஜாவுக்கும் சிம்பாங் புலாய் ஒட்டிய படித்தான் அந்த மாளிகை...

ஆனால், இந்த தார்சாலை பக்கமாக ஏதும் வழி அப்போது (1980 களில்) இருந்ததாக நான் அறியவில்லை... அந்த முதல் பயணத்திலேயே கொண்ட காதலால்...

எனக்கு குடும்பம் அமைந்த பிறகும்... பிள்ளைகள் இருந்த போதும்... பல முறை சென்று பார்த்து மகிழ்ந்து இருக்கிறேன்.

ஆக, உச்சி மேல் மாடி வரை சென்று வந்து உள்ளோம். இப்படியான சரித்திர தலங்களுக்குச் சென்று நம் முன்னோர்களின் பங்கு என்ன என்பதை நமது சந்ததியினருக்குச் சொல்லி விளக்க வேண்டும்.

அவர்களும் நாம் யார் என்பதை உணர்ந்து தெளிந்து மற்ற இனத்தவர்களோடு பீடு நடை போடுவார்கள். நன்றி ஐயா. எனது அனுபவத்தைப் பகிர வாய்ப் பளித்தமைக்கு...

அன்புடன்

மகாலிங்கம் படவெட்டான்
.

நாம் தமிழர் பினாங்கு.

Thanirmalai Muthusamy தமிழ் மலரில் இத்தொடர் முன்பு வந்த போது பலர், படித்து பாராட்டு வழங்கினர். நானும் கொஞ்சம் மேலே போய் கவிதையும் படித்தேன். ஆக இத்தொடர் மீண்டும் இடம் பெறுவது மகிழ்ச்சி நண்பரே.

Jaya Brakash ஆம் உண்மை தான்... sir. பெளர்னமி இரவு நிலவின் ஒளியில்.. தனி அழகு

Poovamal Nantheni Devi தொடருக்காக காத்திருக்கிறேன்