கணினியும் சுட்டிகளும் அக்டோபர் 2014 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணினியும் சுட்டிகளும் அக்டோபர் 2014 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 அக்டோபர் 2014

கணினியும் சுட்டிகளும்

கடந்த ஒரு வருடமாக ’சுட்டி மயில்’ மாத இதழில் சுட்டிகளின் கணினி கேள்விகளுக்கு பதில் அளிக்கப் படுகிறது. அக்டோபர்  2014 மாத இதழில் வெளியான கேள்வி பதில்கள். 

Preview

சுட்டி மயில்

மரியா சேமந்தா, ஆண்டு 6, தாப்பா தமிழ்ப்பள்ளி, பேராக்
கே: கணினியின் கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?
ப: கணினியில் தேவை இல்லாத கோப்புகளை Delete என்பதைத் தட்டி அழித்து விடுகிறோம். அப்படி அழிக்கப் பட்ட கோப்புகள் Recycle Bin எனும் மீள்சுழல் தொட்டியில் சேர்ந்து விடுகின்றன. பின்னர் அங்கேயும் சென்று Empty Recycle Bin என்பதைச் சொடுக்கிச் சுத்தமாகக் காலி செய்து விடுகிறோம். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். பிரச்சினை அதோடு முடிந்தது. அப்படித் தான் எல்லோரும் நினைக்கிறோம்.
ஆனால், திறமை வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் அழிக்கப் பட்ட அந்த  கோப்புகளை மீட்டு எடுத்து விடுவார்கள். அது தெரியுமா உங்களுக்கு. அப்படி மீட்டு எடுப்பதற்கு சில சிறப்பு நிரலிகள் இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னால் ஒருவர் என்னிடம் வந்தார். இந்தியாவில் பிடித்த படங்களை தன் மகள் தெரியாமல் அழித்து விட்டதாகச் சொல்லிக் கண் கலங்கினார். அந்தப் படங்கள் ஒரு வருடத்திற்கு முன் கணினியில் இருந்து சுத்தமாக அழிக்கப்பட்டு விட்டன.
மறுபடியும் சொல்கிறேன். அந்தப் படங்கள் ஒரு வருடத்திற்கு முன்னால் அழிக்கப்பட்டு விட்டன. இருந்தாலும் அழித்த அந்தப் படங்களை மீட்டு எடுத்துக் கொடுத்தேன். ஒரு பத்து நிமிட வேலை. அவ்வளவுதான். அதனால், ஓர் ஆவணத்தை அழித்து விட்டால், அதைக் கணினியில் இருந்து சுத்தமாக அழித்து விட்டதாக மட்டும் நினைத்து விட வேண்டாம். 
அழிக்கப் பட்ட தகவலின் தடயங்களைக் கணினியின் Hard Disk எனும் வன் தட்டகம் மறக்கவே மறக்காது. பத்திரமாக வைத்து இருக்கும். கணினித் திரையில் வெளியே இருந்து பார்த்தாலும் தெரியாது. மறைந்தே இருக்கும். ஏற்கனவே அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் புதிய தகவல்கள் வந்து அமரும் வரையில் அந்தப் பழைய தடயங்கள் அப்படியே இருக்கும்.
ஆக, கணினியின் கோப்புகளை நிரந்தரமாக அழிப்பதற்கு ஒரு நிரலி இருக்கிறது. அதன் பெயர் SDelete (Secure Delete). இந்த நிரலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் இலவசமாக வழங்குகிறது. கீழ்காணும் இணைய முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கணினியின் தகவல்களை முற்றாக அழிப்பதற்கு இந்த நிரலியைப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிரலியைப் பன்படுத்தித் தகவல்களை அழித்தால், பின்னர் அவற்றை மீட்டு எடுக்கவே முடியாது.

சு. யோகீஷ், ஆண்டு 6, லாடாங் ஜெண்டராட்டா 1 தமிழ்ப்பள்ளி, பேராக் (சுட்டி உறுப்பினர்: 1242)
கே: கணினியின் மூலமாகக் கொசுக்களை விரட்டி அடிக்க முடியும் என்று என் நண்பர் சொல்கிறார். முடியுமா சார்? நம்ப முடியவில்லை.
ப: உண்மைதான். கொசுக்களை விரட்டி அடிக்கும் ஆற்றல் கணினிக்கு உள்ளது. ரொம்ப பேருக்கு இந்த விஷயம் தெரியாது. சத்தத்தை Hertz எனும் அளவைக் கொண்டு அளக்கிறார்கள். ஒரு சத்தத்தின் அளவு 20,000 Hertz-க்கும் மேலே இருந்தால்தான் மனிதர்களின் காதுகளால் கேட்க முடியும்.
கொசுக்களின் காதுகள் 16,000 இருந்து 20,000 ஹெர்ட்ஸ் ஒலி அலைகளைக் கேட்கும் ஆற்றலைப் பெற்றவை. கணினியின் ஒலிபரப்பிகள் 17,000 இருந்து 40,000 வரையிலான ஹெர்ட்ஸ் ஒலி அலைகளை ஒலிபரப்புச் செய்யக் கூடியவை
ஓர் ஒலி 20,000 ஹெர்ட்ஸ் ஒலி அலை வரிசைக்கும் கீழே போனால், மனிதர்களுக்கு அந்த ஒலி கேட்காது. ஆனால் , எறும்பு, கொசு, வண்ணத்துப் பூச்சி, கரப்பான் போன்ற சின்னச் சின்ன ஜீவராசிகளுக்கு மட்டும் கேட்கும். அந்தச் சத்தம் அவற்றின் செவிப் புலன்களுக்கு ஒரு வகையான வலியை உண்டாக்கும். அதனால் அவை அந்த மாதிரியான  சத்தம் வரும் இடங்களுக்குப் போவதைத் தவிர்க்கும். ஆக, அப்படிப் பட்ட ஓர் ஒலியை நம்ப வீட்டுக் கணினியால் உருவாக்க முடியும். அதைக் கேட்டதும் கொசுக்கள் ஓடி ஒளிந்து கொள்ளும்.
கொசுக்கள் இல்லையே என்பது அந்த நேரத்தில் மட்டும் நிம்மதியைக் கொடுக்கும். கணினியை நிறுத்தியதும் மறுபடி கொசுக்கள் வந்து விடும். சரியா. சாருன்யூ புன்யாராத்தாபுண்டுகு (Sarunyou Punyaratabundhu) எனும் ஒரு தாய்லாந்துகாரர் அந்தக் கொசு விரட்டியைக் கண்டுபிடித்து இருக்கிறார். பதிவிறக்கம் செய்து சோதனை செய்து பாருங்கள். நான் பயன் படுத்திப் பார்த்தேன். ஒரே ஒரு கொசு மட்டும் பதுங்கிப் பறந்து வந்து என்னைக் கடிக்காமல் போனது. தைரியம் இல்லாத கொசு. இணைய முகவரி: www.allmosquitos.com/soft/anti-mosquito.rar  
ர. திவ்யா ஸ்ரீ, ஆண்டு 6, செயிண்ட் பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி, பேராக் (சுட்டி உறுப்பினர்: 1787)
கே: சிலர் கணினியை அடிக்கடி திறப்பதும் அடைப்பதுமாக இருப்பார்கள். அது நல்லதா?
ப: கணினியை அடிக்கடி அடைத்து திறப்பது, அதாவது On and Off செய்து  கொண்டு இருப்பது தவறு. அந்த மாதிரி செய்தால் கணினி நீண்ட நாட்களுக்கு  நீடிக்காது. சீக்கிரமாகக் கெட்டுப் போக வாய்ப்புகள் உள்ளனகணினியை முடுக்கி விடும் போது, கணினிக்குள் ஒரு வகையான மின் அதிர்வு  ஏற்படும். ஒவ்வொரு முறையும் நீங்கள் கணினியை முடுக்கிவிடும் போது இந்த மின் அதிர்ச்சி உண்டாகும்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திறக்கிறீர்கள் - அடைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் அத்தகைய மின் அதிர்வுகள் ஏற்படும். கணினியின் உள்ளே இருக்கும் சாதனங்கள் அந்த அதிர்வுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை. இப்படியே அடைத்துத் திறந்து விளையாடிக் கொண்டு இருந்தால் ஒரு நாளைக்கு கணினி நிரந்தரமாகக் கண்களை மூடிக் கொள்ளும். அதனால், கணினியில் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே தடவையில் செய்து முடித்துவிட வேண்டும்.
பின்னர் அதற்கு ஒரு மணி நேரமாவது ஓய்வு கொடுக்க வேண்டும். சும்மா சும்மா திறப்பதும் சும்மா சும்மா அடைப்பதுமாக இருந்தால், பாவம் அந்தக் கணினிதான் என்ன செய்யும். நீங்களே சொல்லுங்கள். கணினியை நீண்ட நேரம் பல மணி நேரத்திற்கு அடைக்காமல் இருந்தாலும் அதிகமாகச் சூடு ஏறும். அதனால் கணினிக்கு சேதம் ஏற்படலாம். குளிர்சாதன அறையில் கணினி இருந்தாலும் தொடர்ந்து பல மணி நேரம் பயன்படுத்தக் கூடாது. மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை அதற்கு சில நிமிடங்கள் ஓய்வு கொடுக்க வேண்டும்.
ப. விக்னேஸ், ஆண்டு: 6, உலு திராம் தமிழ்ப்பள்ளி, ஜொகூர், 
(சுட்டி உறுப்பினர்: 1803) 
கே: Yahoo எனும் பெயர் எப்படி வந்தது?
: ஜோனாதான் ஸ்விப்ட் என்பவர் ஒரு பிரபலமான ஆங்கிலேய எழுத்தாளர். அவர் 1726 -ஆம் ஆண்டில்குலிவர் டிரெவல்ஸ்’ எனும் நாவலை எழுதினார். அதில் ஒரு சொல் தொடர் வருகிறது. Yet Another Hierarchical Officious Oracle எனும் சொல் தொடர். இந்தச் சொல் தொடரில் வரும் சொற்களின் முதல் எழுத்துகளைப் பாருங்கள். Yahoo என்று வரும். ஆக, அந்தச் சொற்களின் முதல் எழுத்துகளைப் பிடித்துக் கொண்டு, அப்படியே இதற்கும் பெயர் வைத்து விட்டார்கள்.
யாஹூ எனும் பெயர் வந்த விதமே கொஞ்சம் வேடிக்கை ஆனது. யாஹூவின் பழைய பெயர் Jerry and David's Guide to the World Wide Web. மிக நீளமான பெயராகத் தானே தெரிகிறது.  யாஹூ உருவாகிய சில மாதங்களுக்கு அப்படித் தான் தொடர் வண்டி வாலைப் போல நீண்டு நெடிய பெயராக இருந்தது. யாஹூவை உருவாக்கியவர்கள் இரு மாணவர்கள். ஜெரி யாங் (Jerry Yang) இன்னொருவர் டேவிட் பிலோ (David Filo).  1994-இல் தோற்றுவிக்கப் பட்டது. யாஹூ இலவசமாக மின்னஞ்சல் சேவையை வழங்கி வருகிறது. தவிர, உலகத் தேடல் இயந்திரங்களில், இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.
கி. விஷ்வலிங்கம், ஆண்டு 6, அம்பாங் தமிழ்ப்பள்ளி, சிலாங்கூர்
(சுட்டி உறுப்பினர்: 1820)
கே: ஒவ்வொரு கணினியிலும் Anti Virus போட்டிருக்க வேண்டுமா?
ப: வைரஸ் என்றால் கிருமி. கணினி வைரஸ் என்றால் கணினிக் கிருமி என்று பொருள். மனிதர்களைத் தாக்கும் கிருமி என்பது மனிதக் கிருமி. அதைப் போல கணினியைத் தாக்கும் கிருமிக்குப் பெயர் கணினிக் கிருமி. இருந்தாலும், கணினிக் கிருமி என்பது மனிதனைத் தாக்கும் மனிதக் கிருமி மாதிரி அல்ல. அப்படித்தான் பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. கணினிக் கிருமி என்பது வேறு. மனிதக் கிருமி என்பது வேறு.

மனிதர்களைத் தாக்கும் கிருமிக்கு உயிர் இருக்கிறது. ஆனால், கணினியைத் தாக்கும் கிருமிக்கு உயிர் இல்லை. கணினிக் கிருமி அல்லது கணினி வைரஸ் என்பது ஒரு வகையான சின்ன மென்பொருள். அதாவது சின்ன ஒரு நிரலி. (Program)

கணினி வைரஸ் கணினிக்குள் நுழைந்ததும் நாம் சேகரித்து வைத்து இருக்கும் செய்திகள், படங்கள், ஆவணங்கள், செயலிகள் போன்றவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக நாசம் செய்துவிடும். அதனால் கணினிக் கிருமிக்கு தமிழில் கணினி அழிவி அல்லது நச்சுநிரல் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

இந்தக் கணினி அழிவியைக் கணினிக்குள் வரவிடாமல் தடை செய்யும் ஒரு நிரலிக்குப் பெயர்தான் Anti Virus. தமிழில் நச்சுநிரல் தடுப்பி என்று அழைக்கலாம். அல்லது கணினிக் கிருமித் தடுப்பி என்றும் அழைக்கலாம்.

இந்த அழிவிகள் எப்படி உருவாக்கப் படுகின்றன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு கணினியைச் செயல் படுத்துவதற்கு செயலிகள் தேவை. அதாவது Programs.  இந்தச் செயலிகளை எழுதித் தயாரிக்கும் கணினி நிபுணர்களே, இந்தக் கணினி அழிவிகளையும் எழுதுகிறார்கள். தங்களுடைய திறமைகளைக் காட்ட வேண்டும் என்பதற்காக அப்படி செய்கிறார்கள். சிலர் விளையாட்டுக்காகவும் எழுதுவார்கள்.

எந்த நேரத்தில் அழிவிகள் உங்கள் கணினியைத் தாக்கும் என்று உங்களுக்கே தெரியாது. அதனால் உடனடியாக Anti Virus எனும் தடுப்பு நிரலியைக் கணினியில் பதித்துக் கொள்ளுங்கள். வெள்ளம் வருவதற்கு முன்பாக அணை போடுங்கள். AVG, Avast, Avira, Comodo, Kaspersky, Trend Micro, Panda, Eset, Ashampoo, Zone Alarm, BitDefender, McAfee போன்ற தடுப்பு நிரலிகள் இலவசமாகக் கிடைக்கின்றன.


இந்தத் தடுப்பு நிரலிகளின் இணைய முகவரிகள் நீளமானவை. இங்கே எழுத முடியாது. அதனால், கூகிள்’ தேடல் இயந்திரத்தில் ksmuthu என்று தட்டச்சு செய்தால் போதும். நிறைய இணையத் தொடர்புகள் கிடைக்கும். ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து, என்னுடைய வலைப் பதிவிற்குச் செல்லுங்கள். அங்கே நேரடியான தொடர்புகள் உள்ளன. நிறைய கணினித் தகவல்களும் உள்ளன.