மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் வலிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் வலிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 மே 2020

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் வலிமை

மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளை மூடி விடுங்கள் என்று ஒரு பக்கத்தில் மேடை முழக்கம். மூடி விட முடியுமா என்று மறு பக்கத்தில் வீர முழக்கம். அந்தப் பக்கம் சோதனைகள். இந்தப் பக்கம் சாதனைகள். அந்தப் பக்கம் இனவாதம். இந்தப் பக்கம் மொழி வாதம். 



ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை இறைவன் திறந்து விடுவார் என்பது பொன்மொழி. இனம் சமயம் மொழி எல்லாவற்றையும் கடந்து போன முது மொழி. மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களைப் பொறுத்த வரையில் அந்த மொழி மிகவும் சரி.

கதவைத் திற காற்று வரும் என்று சொல்வார்கள். ஆனால் கதவைத் திறக்க வேண்டாம். காற்றைத் தேடி நாங்கள் போகிறோம் என்று சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார்கள். சபாஷ் செல்லங்களே சபாஷ்!

தமிழ்ப் பள்ளிகளை இல்லாமல் செய்வதற்கு என்ன என்னவோ திருகுதாளங்கள். என்ன என்னவோ தெருக்கூத்துகள். என்ன என்னவோ செப்படி வித்தைகள்.

இருந்தாலும் சலிக்காமல் சளைக்காமல் தொடர்ந்து போராடுகிறோம். போராடிக் கொண்டு வருகிறோம்.

அரசியலமைப்பில் தமிழ் மொழிக்கு முறையான அங்கீகாரம் உள்ளது. அந்த அங்கீகார உரிமையை நாளிதழ்கள் வழியாகவும்; ஊடகங்கள் வழியாகவும் உலகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்கிறோம். உலக அரங்கில் அந்த உரிமைகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

அனைத்து இந்திய மாணவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். இப்போதைக்கு உங்களின் பங்கு ஒன்றே ஒன்று தான். படிப்பது மட்டுமே உங்களின் பங்கு. அதை மட்டும் சரியாகச் செய்யுங்கள்.

கஷ்டமோ நஷ்டமோ... எப்பேர்ப்பட்ட துன்பங்கள் வந்தாலும் படிப்பதை மட்டும் தயவு செய்து நிறுத்தி விடாதீர்கள். உதவி செய்ய பலர் இருக்கிறார்கள். நினைவில் கொள்ளுங்கள்.

மலேசியாவின் மூன்று தலையாய இனங்கள். அவற்றில் அரசியல் செல்வாக்கு ஒரு புறம்; பொருளாதாரச் செல்வாக்கு இன்னொரு புறம்.

அந்த வகையில் எதிர்காலத்தில் நாம் பற்பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அப்போது கல்வியின் வலிமையைக் கண்ணியமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மலேசிய இந்தியர்களுக்கு அரசியல் வலிமையும் இல்லை. பொருளாதார வலிமையும் இல்லை. ஒரே ஒரு வலிமை தான் இருக்கிறது. அதுதான் கல்வி எனும் வலிமை. அதுவே மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் எதிர்கால வலிமைக் கேடயம்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
22.11.2019