ஜாகிர் நாயக் நிந்தனைகள் - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜாகிர் நாயக் நிந்தனைகள் - 2 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 ஆகஸ்ட் 2019

ஜாகிர் நாயக் நிந்தனைகள் - 2

மலேசிய இந்தியர்களின் நாட்டுப் பற்று - 2

மலைக்காட்டு மலையகத்தைப் பொன் விளையும் பூமியாக மாற்றிக் காட்டிய மலேசிய இந்தியர்களுக்கு முதல் மரியாதை. 

1870-ஆம் ஆண்டுகளில் கொல்கத்தாவில் இருந்து
ஆப்பிரிக்க நாடுகளுக்கு கப்பலேறிய இந்தியர்கள்

18 - 19-ஆம் நூற்றாண்டுகளில் மலாயாவில் குடியேறிய இந்தியத் தொழிலாளர்கள் தான் மலேசியாவில் நிரந்தரமாக ஓர் இந்தியர் சமூகம் தோன்றுவதற்கு அடித்தளம் அமைத்தவர்கள். மலேசிய இந்தியர்கள் எனும் வித்துகளை விட்டுச் சென்றவர்கள்.

காட்டுப் பாதைகளில் இரத்தம் கொட்டி உயிர்களைச் சிந்தியவர்கள். காட்டு மரங்களைக் கட்டி அணைத்து காசு மழை பொழியச் செய்தவர்கள். காட்டு மிருகங்களுடன் மனித வாசம் பேசி மரித்துப் போனவர்கள். பாசா காடுகளில் பவித்திரம் பேசி பார் புகழச் செய்தவர்கள்.

அந்த வாயில்லா பூச்சிகளை விசுவாசம் இல்லாதவர்கள் என்று சொல்லலாமா. சொல்ல ஒரு மனசு வேண்டாமா. சொல்ல ஒரு விவஸ்தை வேண்டாமா. சொல்லும் போது ஒரு வெட்கம் வர வேண்டாமா. வேதனையின் கொப்பளிப்புகள். 

தமிழ் மலர் 20.08.2019
மலேசியாவில் இப்போது வாழும் இந்தியர்களில் 82 விழுக்காட்டினரின் மூதாதையர் இந்த நாட்டை வளம் செய்வதற்காகக் கப்பல் ஏறி வந்தவர்கள். முதலில் பாய்மரக் கப்பல்கள். அடுத்து நீராவிக் கப்பல்கள். அடுத்து டீசல் இஞ்சின் கப்பல்கள். இவை மறைக்க முடியாத வரலாற்று உண்மைகள்.

மலாயாவில காசும் பணமும் கித்தா மரத்தில் காய்ச்சுத் தொங்குது. காற்று அடித்தால் ஒரு பக்கம் ஒத்த ஒத்த வெள்ளியா கொட்டும். ஒரு பக்கம் அஞ்சு அஞ்சு வெள்ளியா கொட்டும். இன்னொரு பக்கம் பத்து பத்து வெள்ளியா கொட்டும். எப்ப கொட்டும்னு தெரியாது. என்ன... பொறுக்கி எடுக்கிறது தான் பெரிய இலச்சை பிடிச்ச வேலை.

இப்படித் தான் மலாயாவில் இருந்து ஆள் பிடிக்கப் போன கங்காணிகள் ஆசை ஆசையாய் அவிழ்த்து விட்ட ஆனந்த பைரவிகள். வேறு எப்படித்தான் சொல்வதாம். 

மலேசியாவின் மனிதவள அமைச்சர் குலசேகரன்
கிராமத்துப் பாமர மக்களின் பச்சை மனங்களைப் பாசம் நேசமாய் நன்றாகவே மசாஜ் செய்து இருக்கிறார்கள். அது மட்டுமா. அப்போது அங்கே கிடைத்த லைவ் பாய் சவர்க்காரத்தைப் போட்டு நன்றாகவே குளிப்பாட்டியும் விட்டு இருக்கிறார்கள்.

உதறல் எடுத்த அந்தச் சாமானிய மக்களை நன்றாகவே துவைத்துக் காயப் போட்டு இருக்கிறார்கள். அப்படியே மூட்டை கட்டி இங்கே இந்தப் பக்கம் இழுத்து வந்து விட்டார்கள். அப்போது பிடித்த குளிர் நடுக்கம் இன்னும் ஓயவில்லை.

இனப் போராட்டம்; மொழிப் போராட்டம்; சமயப் போராட்டம்; தனிமனித உரிமைப் போராட்டம். இப்படி எக்கச்சக்கமான போராட்டங்கள். அந்தப் போராட்டங்களின் குளிர்க் காய்ச்சல் நடுக்கத்தைத் தான் சொல்ல வருகிறேன்.

இன்னும் எத்தனைத் தலைமுறைகளுக்குத் தொடருமோ. தெரியவில்லை. இதில் இடை இடையே ஸக்கீர் நாயக் போன்றவர்களின் ஐஸ்கட்டி ஆலாபனைகள் வேறு. 

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி
எதிர்காலச் சந்ததியினரை நினைத்துப் பார்க்கின்றேன். சமாளிப்பார்களா. இன்றைய வயதான தலைமுறையினர் நாங்களே தடுமாறிக் கொண்டு நிற்கிறோம். அவர்கள் சமாளிக்க வேண்டுமே.

பினாங்கு – பட்டர்வொர்த் கடற்கரைப் பகுதியில் புலாவ் ஜெராஜாக் (Pulau Jerajak) எனும் ஒரு தீவு இருக்கிறது. முன்பு புறமலை என்று அழைத்தார்கள். அப்போது அந்தத் தீவு ஒரு தொற்றுநோய் ஒதுக்கிடம். இப்போது அது ஒரு சுற்றுலாத் தளம்.

அந்த இடத்தில் தான் சென்னை நாகப்பட்டனத்தில் இருந்து கப்பல் ஏறி வந்த இந்தியத் தொழிலாளர்கள் தனிமைப் படுத்தப் பட்டார்கள். அதாவது quarantine செய்யப் பட்டார்கள்.

1870-ஆம் ஆண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகள். அந்தப் புறமலையில் 1911-ஆம் ஆண்டு வரையில் 134,957 பேர் தனிமைப் படுத்தப் பட்டு இருக்கிறார்கள்.

இந்த விசயம் ஸக்கீர் நாயக்கிற்குத் தெரியுமா. தெரியாவிட்டால் பரவாயில்லை. தெரிய வைப்போம்.

(சான்று: https://www.malaymail.com/news/malaysia/2019/06/26/penangs-pulau-jerejak-a-storied-history-beyond-a-high-security-detention-ce/1765526 - The island was also used as a quarantine station in 1877 for newly arrived immigrants.)

மலேசிய இந்தியர்களையும் சீனர்களையும் தற்காத்துப் பேசிய
மலேசிய இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் Syed Saddiq
இருந்தாலும் அன்றைய மலேசிய இந்தியர்கள், இன்றைய ஸக்கீர் நாயக் மாதிரி தப்பி ஓடி வரவில்லை. பணச் சலவை, பண மோசடிக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து கொண்டு ஓடி வரவில்லை. மலாயா அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலமாகத் தான் நல்லபடியாகக் கப்பலேறி வந்தார்கள்.

மலாயா கித்தா மரங்களில் காய்த்துத் தொங்கிய அஞ்சு வெள்ளி பத்து வெள்ளிகளைப் பறித்து எடுத்து; சாக்குப் பைகளில் மூட்டை மூட்டையாய்க் கட்டி இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கவே அழைத்து வரப் பட்டார்கள்.

அவர்கள் வந்து 250 ஆண்டுகள் ஆகின்றன. வெள்ளைக்காரர்களும் கப்பல் கப்பலாய் பணத்தை ஏற்றிக் கொண்டு போனார்கள். ஜிங்கு ஜிக்கான் பாடி பழைய ஆளாகி விட்டார்கள்.

கடைசியில் மலேசிய இந்தியர்களுக்குப் ’பை பை’ காட்டி அவர்களை அனாதைகளாகப் பரிதவிக்க விட்டுச் சென்றது தான் வரலாற்றுக் கொடுமை. 

மலேசிய இந்தியர்களுக்காகக் குரல் கொடுத்து வரும்
மலேசிய இந்திய அமைச்சர்கள் கோபிந்த் சிங்; குலசேகரன்

மலேசிய இந்தியர்களின் உரிமைகளை மீட்டு எடுக்கிறோம் என்று காலம் காலமாக நானா நீயா போட்டிகள். அந்தச் சறுக்கில் ஆயிரம் ஆயிரம் கட்சிகள். தடுக்கி விழுகிற இடம் எல்லாம் கட்சிகள். கட்சிகள். விடுங்கள். இது மலேசிய இந்தியர்களின் போன ஜென்மத்து கர்ம வினைகள்.

சரி. புறமலை கதைக்கு வருவோம். அப்புறம் புறமலையில் இருந்து காட்டுப் பாதை கம்பிச் சடக்குகளில் அடிமைகளைப் போல நடக்க வைக்கப் பட்டார்கள். பலர் லாரிகளில் ஏற்றிக் கொண்டு வரப் பட்டார்கள்.

சிலர் குதிரை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வரப் பட்டார்கள். இன்னும் சிலர் எருமை மாட்டு வண்டிகளில் மூட்டை முடிச்சுகளோடு இழுத்து வரப் பட்டார்கள்.

அவர்களில் சிலர் ஆடு மாடுகளைப் போல நசுக்கி நார் நாராய்க் கிழிந்து போய் வந்தார்கள். அவர்கள் பட்ட வேதனை அவர்களுக்குத் தான் தெரியும்.

அந்தக் காலத்து ரப்பர் தோட்டங்களில் அழகு அழகாய்த் தகரக் கொட்டகைகள். மன்னிக்கவும். தகர டப்பாக்கள். அவற்றை லயன்கள் என்று அழைத்தார்கள். அவற்றில் தான் கப்பலேறி வந்த வெள்ளந்திகள் தங்கிப் பேர் போட்டார்கள். 

தமிழ் மலர் 20.08.2019
அப்புறம் என்ன. சாகும் வரையில் அந்த வாயில்லாப் பூச்சிகள் அங்கேயே கிடந்து சாகட்டும் என்று சொல்லாமல் சொல்லி ’செக்ரோல்’ எழுதி வைத்து விட்டார்கள்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லயன் வீடு. இடித்துப் பிடித்துக் கொண்டு தான் படுக்க வேண்டும். இப்போது மாதிரி ஆளுக்கு ஓர் அறை எல்லாம் இல்லை. ஒரு குடும்பமே ஓர் அறையில் தான் படுத்துத் தூங்க வேண்டும். இதில் வயிற்றில் ஒன்று; இடுப்பில் ஒன்று; கைலித் தொட்டியில் ஒன்று என அரை டஜன் ஒரு டஜன் பிள்ளைகள்.

இரவு பகலாய் ஓய்வு ஒழிச்சலின்றி ஆடு மாடுகளைப் போல வேலைகள் செய்தார்கள். மிருகங்களை விட மோசமாக வேலை வாங்கப் பட்டார்கள். கொத்தடிமைகள் என்று சொல்வார்களே... அந்த மாதிரி ஆப்பிரிக்க நாட்டு அடிமைகளின் வாரிசுகள் என்று புகழ் பெற்றார்கள். ஆக வரலாற்று ஆவணங்கள் என்றைக்கும் பொய் சொல்வது இல்லை. அதை நினைவில் கொள்வோம்.

(சான்று: http://www.wami.com.my/2018/02/07/ancient-times-modern-days-brief-history-indian-migration-malaysia/)

ஐயா ஸக்கீர் நாயக் அவர்களின் கவனத்திற்கு... இந்தக் கட்டுரைகளைப் படியுங்கள். முடிந்தால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அனுப்பி வைக்கிறேன். மறக்காமல் எழுதி வைத்துப் படியுங்கள். 

மலேசியாவின் மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங்
இனி எங்கே பிரசாரம் செய்யப் போனாலும் மலேசிய இந்தியர்களின் உண்மைகளை மறைக்காமல் சொல்லி வாருங்கள். அதுவே மலேசிய இந்தியர்களுக்கு நீங்கள் செய்யப் போகிற புண்ணியம்.

ஒன்று மட்டும் உண்மை. மலேசிய இந்தியர்கள் நேற்று முந்தா நாள் மலாயாவுக்கு விருந்தாளிகளாய் வந்தவர்கள் அல்ல. சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே மலேசிய மண்ணில் தடம் பதித்து விட்ட உழைப்பாளிகள். இந்த நாட்டை பொன் விளையும் பூமியாக மாற்றிக் காட்டிய படைப்பாளிகள். அதை மறக்காமல் இருந்தால் சரி.

தகர டப்பா லயன்களில் நீர் விநியோகம் நிரந்தரம் இல்லை. நினைத்தால் வரும். நினைத்தால் வராது. குளிப்பதற்கும் குடிப்பதற்கும் பக்கத்து ஆற்று நீர் அட்ச பாத்திரம். மழை பெய்தால் எது தேநீர் எது கறுப்புக் கோப்பி என்று ஆராய்ச்சி பண்ண வேண்டி இருக்கும். நோபல் பரிசு வாங்கி விடலாம்.

பொதுவாக பத்து லயன் வீடுகளுக்கு ஒரு கழிவறை. ஒரு பொது குளியலறை. ஆண்களும் சரி பெண்களும் சரி. ஒரே குளியலறையில் தான் குளிக்க வேண்டும்.

ஒருவர் குளித்து வரும் வரையில் மற்றவர் வெளியே தலையைச் சொறிந்து கொண்டு நிற்க வேண்டும். எவர் பார்த்தாலும்; பார்க்கா விட்டாலும் நாலு தகர மறைப்புக்குள் குளியல்கள் தொடரும்.

கங்காணிகளும் தோட்டத் தொழிலாளர்களை அடிமைகளாகவே நினைத்தார்கள். அடிமைகளாக நினைத்து வேலையும் வாங்கினார்கள். சொல்லப் போனால் தோட்டத் தொழிலாளர்கள் மிருகங்களைவிட கேவலமாக நடத்தப் பட்டார்கள்.

அந்தச் சஞ்சிக் கூலிகளின் வாரிசுகள் இன்று வரையில் உரிமைப் போராட்டங்கள் செய்து வருகின்றார்கள். அது மட்டும் அல்ல.

நாடு விட்டு நாடு ஓடி வந்த நேற்று முளைத்த பூஞ்சைக் காளான்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.

வேதனை! மலாயாவில் நடந்த கொடுமை அப்போதைக்கு ஒரு கதையாக இருந்தது. அதுவே இப்போதைக்கு ஒரு வரலாறாகவும் மாறிப் போகின்றது.

மலேசிய இந்தியர்கள் விசுவாசம் இல்லாதவர்கள் என்று ஸக்கீர் நாயக் சொல்லி இருக்கிறாரே... அதனால் தான் மலேசிய இந்தியர்கள் மலாயாவுக்கு வந்த கதை ஒரு வரலாறு என்று சொல்ல வருகிறேன்.
ஸக்கீர் நாயக்
தவளை தன் வாயால் கெடும் என்பார்கள். உண்மை தான். நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பார்கள். உண்மை தான். யானைக்கு மதம் பிடித்தால் மண்ணை அள்ளி மண்டையில் போட்டுக் கொள்ளும் என்று சொல்வார்கள். உண்மை தான். அந்த மாதிரி தான் ஸக்கீர் நாயக்கின் அடாவடித் தனமான பேச்சும் அமைகிறது.

மலேசிய இந்தியர்களின் மனங்களை ஸக்கீர் நாயக் புண்படுத்தி இருக்கக் கூடாது. நாம் எங்கே ஐயா பிரதமர் மோடியை ஆதரிக்கிறோம். இங்கே நம்ப நாட்டிலேயே நமக்கு ஆயிரத்து எட்டு பிரச்சினைகள். இதைச் சமாளிக்கவே தலையைப் பிய்த்துக் கொண்டு இருக்கிறோம். இதில் மோடிஜியை நினைக்கவே நேரம் இல்லை. இதில் எப்படிங்க அவருக்கு சப்போர்ட் செய்வது.

இந்தியப் பிரதமரை இந்த விசயத்தில் இழுத்து வந்து, இந்த நாட்டு இந்தியர்களின் விசுவாசத்தின் மேல் வியாக்கியானம் பண்ணுவது எல்லாம் ஒரு பஞ்சோந்தியின் கைங்கரியம். தன் வயிற்றுப் பிழைப்புக்காக வால் பிடிக்க இந்த நாட்டு இந்தியர்கள் தான் பழிசுமக்கும் இளிச்சவாயர்கள் ஆனார்கள் என்று பகாங் பெந்தோங் சத்தியா ராமன் ஆதங்கப் படுகிறார்.

மலேசிய இந்தியர்கள் விசுவாசம் இல்லாதவர்கள் என்று கூறி, ஒட்டு மொத்த மலேசிய இந்தியர்களை அவமதித்தவர் ஸக்கீர் நாயக். அவருக்கு எதிராக மலேசிய இந்தியர்கள் கொந்தளித்து கொதித்துப் போய் இருக்கிறார்கள்.

மலேசிய இந்தியர்களை மாசு படுத்திய ஸக்கீர் நாயக்கை மலேசிய இந்தியர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

(தொடரும்)